• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

19. திருக்கோவில் இழிவு

#518. பிற கேடுகள்

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னரு நந்தி யெடுத்துரைத் தானே.

சிவபெருமான் திருக் கோவில்களில் பூசைகள் தடைப்பட்டால் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். நாட்டின் வளம் குன்றும். கன்னக் கோல் இடும் கள்ளர்கள் அதிகரிப்பர். களவு பெருகும். இங்கனம் உரைத்தது என் சிவபெருமான்.

---------------------------------------------------------------------------------------------------

#519. சிவ தீட்சையின் இன்றியமையாமை

பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பூஜை செய்யும் தகுதியைப் பெறாத அந்தணன் சிவன் கோவிலில் பூசை செய்யலாகாது. அங்கனம் பூசை செய்தால் போருக்குச் செல்லும் மன்னனுக்குக் கொடிய வியாதிகள் தோன்றும். பார் எங்கும் பரவிய நாட்டில் பஞ்சம் உண்டாகும். இவ்வாறு கூறியவன் சிறப்புடைய சிவபெருமானே ஆவான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

20. அதோ முக தரிசனம்

கீழ் நோக்கிய சிவனின் முகம் அதோமுகம்.
அதைத் தரிசிப்பது அதோ முக தரிசனம்.

#520. ஆறுமுகனுக்கு ஆணையிட்டான்

‘எம்பெருமான் இறைவா முறையோ’ என்று

வம்புஅவிழ் வானவர் அசுரன் வலிசொல்ல,
அம்பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம்பகை கொல் என்ற தற்பரன் தானே.

சிவபெருமானிடம் சென்று ‘எம் தலைவா! எம் இறைவா! இதுவும் முறையோ?’ என்று துயருற்ற வானவர்கள் அசுரனின் வலிமையைப் புகன்று வருந்தினர். சிவன் ஆறுமுகனை அழைத்து, “அழகிய பவள வண்ணம் கொண்ட பாலகனே! நான் தரும் படையுடன் செல்வாய். அசுரனைக் கொல்வாய். தேவர்கள் துயர் தீர்ப்பாய் ” என்று ஆணையிட்டான். அந்த அருள் மிகுந்த இறைவனே தற்பரன் ஆகிய நம் சிவபிரான்.

------------------------------------------------------------------------------------------------------

#521. கறுத்த கண்டம் கொண்டவன்

அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்

கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்;
வெண் தலை மாலை விரிசடையோற்கே.

வெண்ணிறக் கபால மாலையை அணிந்தவன் சிவன். அண்டங்களையும், எட்டு திசைகளையும் தன் அதோ முகத்தால் தாங்குகின்றான். அந்த அதோ முகத்தின் கண்டம் கறுத்து இருப்பது ஏன்? சிவன் நஞ்சை உண்டதால் கண்டம் கறுத்தது என்று கூறுபவர் அறிவற்றவர்கள். கருமை என்பது இருட்டு அல்லது அறியாமை. மேலே இருக்கும் ஒளியை நோக்கிச் செல்லாமல் கீழ் இருளை நோக்கிச் செல்வது அறியாமை என்று உணர்த்துகின்றது அந்தக் கருமை.

---------------------------------------------------------------------------------------------------------

#522. பொய்யும் மெய்யும்

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைத்திடில் விண்ணோர் தொழச் செய்வான்
மை தாழ்ந்து இலங்கும் மணி மிடறுடையோனே.

கரிய நிறம் கொண்ட கழுத்தை உடையவன் சிவபெருமான். உலகங்களைப் படைத்த அவன் பொய்யையும் அறிவான்; மெய்யையும் நன்கு அறிவான். கடல் சூழ்ந்த உலகில் பலர் பொய்க் கதைகளைப் பேசித் திரிகின்றார்கள். அவர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்கள் என்றால் சிவன் அவர்களுக்குத் தேவர்களும் வந்து தொழும்படியான மேன்மையை அருள்வான்.

-------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

20. அதோ முக தரிசனம்

#523. அதோ முகமே சிவனாக மாறும்.

நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய

செந்தீ கலந்து உள்சிவன் என நிற்கும்
உந்திக் கலந்து அங்கு உலகம் வலம் வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.

முடிவினைச் செய்பவன் உருத்திரன். அவன் இருப்பிடம் மூலாதாரம். அவனே இறைவனின் அதோ முகம் ஆவான். அவனே சுழுமுனை வழியே மேலே சென்று தலையில் உள்ள செவ்வொளியுடன் கலந்து சிவன் ஆகி விடுவான். உலகங்களின் இயல்பை மாற்றி விட்டு மேல் எழுந்து நிற்பான்.

---------------------------------------------------------------------------------------------------

#524. ஊழித் தலைவனும் சிவனே ஆவான்

அதோமுகம் கீழ்அண்டம் ஆன புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப்பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

அதோமுகம் பிரணவம் என்னும் அண்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முகம். அது நுண்ணுடல் முழுவதும் பரவும் ஆற்றல் படைத்தது. ஒளியை உடைய, பிரணவ வடிவம் கொண்ட, சக்தியுடன் கூடிய அதே சதாசிவன் தான் அதோமுகனாகவும், ஊழித் தலைவனாகவும் இருக்கின்றான்.

-------------------------------------------------------------------------------------------------------------

#525. நூறு நாடிகள் இணைக்கின்றன

அதோமுகம் மாமலர் ஆயது கேளும்

அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்திருந்தானே.

அதோமுகம் ஓர் ஆயிரம் இதழ்த் தாமரையாக ஆனது என்ன விந்தை? தலையில் கவிழ்ந்துள்ள சஹஸ்ரதளத்தில் இருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து செல்கின்றன. கவிழ்ந்துள்ள நாடிகளில் அழிவற்ற சக்திகளோடு அதோமுகன் ஆன இறைவனும் திகழ்கின்றான்.

----------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

21. சிவ நிந்தை

#526. கிளியும், பூனையும்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அழிவு உறுவார் அமராபதிநாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே.

தெளிந்த ஞானம் பெற்ற மேலோர் ஈசனைச் சிந்தையினுள்ளே தேடி அவன் அருளைப் பெறுவர். தெளிந்த அறிவற்ற கீழோர் சிவபிரான் எளியவன் என்று எண்ணி அவனை இகழ்ந்து பேசினால், அவர்கள் கதி பூனையின் கையில் அகப்பட்ட ஒரு கிளியின் கதி போல ஆகிவிடும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

#527. வானவர் தானவர் சிவனை அறியார்

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே

நெஞ்சில் அன்பின் ஈரம் இல்லாத வானவர்களும், தானவர்களும் காமத்தால் கெட்டுப் போனவர்கள் ஆவர். அவர்களால் அதோமுகத்தில் விளங்கும் இறைவன் பெருமையை உணர இயலாது. அன்பால் கசிந்து அமுதம் சுரக்கும் ஈசனைத் தம் உடலில் தேக்கித் தாங்குபவர்களால் மட்டுமே அவனை உணர முடியும்.

--------------------------------------------------------------------------------------------------------------

#528. பகை ஈசனை மறைக்கும்

அப்பகையாலே அசுரரும், தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை ஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.

தீராத பகைமை பூண்ட அசுரர்களும் அமரர்களும் உய்வு பெறாமலேயே அழிந்து போயினர். எந்த விதமான பகைமை பூண்டாலும் இறைவனை அடைய முடியாது. விளையாட்டாகப் பகைமை பூண்டாலும் அது வினையாக மாறி ஒன்றுக்குப் பத்துத் தீமைகள் செய்து விடும்.

-----------------------------------------------------------------------------------------------------------------

#529. நானே விகிர்தன்!

போகமும் மாதர் புலவி அது நினைந்த
ஆகமும் உள்கலந்து அங்கு உளர் ஆதலில்
வேதியர் ஆயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.

அந்தணராகப் பிறந்திருந்த போதிலும் பெண்ணின் கூடலையும், ஊடலையும் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாலும், “நானே பிரம்மம்” என்று எண்ணுவதாலும், ஈசனைப் பற்றிய நினைப்புகளை அறவே ஒழித்து விடுவர்.

------------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

22. குரு நிந்தை

குருவைப் பழித்தல் குரு நிந்தை ஆகும்.
அது விளைவிக்கும் துன்பங்களைப் பற்றி அறிவீர்.

#530. ஞானம் வேண்டுமெனில்…

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

உற்றிருந் தாரை யுளைவன சொல்லுவர்
சுற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார் பெரும் பேறே.

ஞானம் பெற்ற மேலோரையும் கீழ்மக்கள் பேண மாட்டார்கள். தம்முடைய உற்றார்களையும் மனம் வருந்தும்படிச் செய்வார்கள. கற்று அறிந்த குருவிடம் பொருந்தியவரே ஞானம் அடைய முடியும். அவரை அல்லாது வேறு எவரால் ஞானம் அடைய முடியும்?

----------------------------------------------------------------------------------------------------------

#531. நாத ஒலியை எழுப்பி விடுவார்

ஓரெழுத்து ஒருபொரு ளுணரக் கூறிய

சீரெழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்திங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

ஓரெழுத்து மந்திரம் ஆகிய பிரணவத்தின் பொருளை மாணவருக்கு உணர்த்தியவர் குருநாதர். அதன் நாதத்தை அவனுள் எழுப்பியவர் குருநாதர். அத்தகைய குருவின் மனத்தை நோகடிக்கும் மாணவன் ஊர் முழுவது வீணே அலைந்து திரியும் நாயாகப் பிறப்பான். ஒரு யுகம் வரையில் வெறும் ஓரறிவுள்ள ஒரு புழுவாகப் பிறந்து உலகில் உழல்வான்.

----------------------------------------------------------------------------------------------------

#532. ஆவியும் பொருளும் கெடும்!

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமு மாவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

இல்லற ஞானிகளும், தத்துவ ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி நடந்து கொண்டவர்கள் தம் இனிய ஆவியையும் செல்வதையும் ஓர் ஆண்டுக்குள் இழந்து விடுவர். இது சத்தியம். சதாசிவத்தின் மீது ஆணை.

---------------------------------------------------------------------------------------------------------

#533. தீச் செயலின் பரிசு!

மந்திரமோ ரெழுத்து துரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூருறு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

ஓரேழு மந்திரமாகிய பிரணவத்தை உபதேசித்த தவ சீலரான குருவின் உள்ளத்தை வருத்தம் அடையச் செய்தவன் இழிந்த நாயாக நூறு பிறவிகள் எடுப்பான் . தாழ்ந்த பிறவிகள் பல எடுத்து வீணே மடிந்து போவான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

22. குரு நிந்தை

#534. பதவி பறி போகும் !

ஈச னடியா ரிதயங் கலங்கிட

தேசமு நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமு மாமன்னர் பீடமும்
நாச மதாகுமே நந்நந்தி யாணையே.

சிவனடியார் தம் உள்ளம் கலங்கினால் அப்படிக் கலங்கச் செய்தவனின் தேசம், நாடு, போன்ற எல்லாச் சிறப்புகளும் அழிந்து போய் விடும். இந்திரனின் ஆட்சியாயினும், மன்னவன் ஆட்சியாயினும் அது நஷ்டமாகி விடும். இது எம் சிவபெருமான் இட்ட ஆணை.

--------------------------------------------------------------------------------------------------------

#535. பொய் புகன்றால் துன்பம்!

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க முங்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமுமாமே.

நன்னெறியைப் புகட்டிய நல்ல குருவிடம் பொய் சொல்லல் ஆகாது. ஒருவன் குருவிடம் அவ்வாறு பொய் பேசினால், அவன் பெற்றிருந்த தவம் அழியும். குருவிடம் பெற்ற உபதேசமும் நிலைத்து நிற்காது. பழைய உபதேசங்களும், கற்று அறிந்திருந்த நன்னெறிகளும் மொத்தமாக மறந்து போகும். அவன் ஆன்ம வளர்ச்சியின் அத்தனை வழிகளும் அடைபட்டு விடும். கொடிய வறுமை வந்து சேரும்.

---------------------------------------------------------------------------------------------------------

#536. ஞான நெறியே சிறந்தது

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர் நிற்கத் தானறக்
கைப்பிட்டுண்பான் போன்றுங் கன்மி ஞானிக்கொப்பே.

கையில் அகப்பட்ட மாணிக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் காலில் அகப்பட்ட கல்லைச் சுமப்பது அறிவின்மையாகும். கைவசம் உள்ள நெய், பால், தயிர் போன்றவற்றை உண்ணாமல் வெறும் பிட்டை எடுத்து உண்பதும் அறிவின்மையாகும். ஞான நெறியைத் துறந்து விட்டு கன்ம நெறியைத் தேர்ந்தெடுப்பதும் இது போன்ற அறிவின்மையே ஆகும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

23. மயேசுர நிந்தை

மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர்.
அவரை நிந்தனை செய்வோர் அடையும்
தீமைகளை இப்பகுதி எடுத்துரைக்கின்றது.

#537. நரகக் குழி

ஆண்டா னடியார்க்கும் விரோதிகள்

ஆண்டான் அடியவ ரையமேற் றுண்பவர்
ஆண்டானடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்ந்த நரகாகுமே.

சிவன் அடியவர்கள் உலக இயல்பிலிருந்து மாறுபட்டவர்கள். அவர்கள் வயிறு பசிக்கும் போது மட்டும் ஐயம் ஏற்று உண்பவர்கள். அத்தகைய உயர்ந்த சிவனடியார்களை நிந்திப்பவர்கள் தாழ்ந்த நரகக் குழியை அடைவார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

#538. சிவ போகம்

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே

ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன் வயம்
போன பொழுதே புகுஞ் சிவ போகமே.

சிவஞானியைத் தூற்றுபவன் நல்வினைகளில் இருந்து நீங்கித் துன்பம் அடைவான். சிவஞானியயரை வணங்குபவன் தீவினைகள் நீங்கி இன்பம் அடைவான். அடியாரிடம் செல்லும் போதே அவர்களுக்குச் சிவபோகம் கைக் கூடி விடும்.

--------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

24. பொறையுடைமை

பொறுத்துக் கொள்ளும் தன்மை.
உடலில் உள்ள அமுதம் வற்றிடாமல்
பொறுத்தல் பொறை நிலை ஆகும்.

539. அமுதம் சுரக்கும்

பற்றிநின்றார் நெஞ்சில் பல்லி தான் ஒன்றுஉ ண்டு

முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே.

யோகியர் மெய் நெறியைப் பற்றிக் கொண்டு அதனின்றும் வழுவாமல் நிற்பார். அவர்கள் உள்ளத்தை ‘மெய்ப்பொருளுடன் கூட வேண்டும்’ என்ற எண்ணம் உடும்பு போலப் பற்றிக் கொண்டு இருக்கும். அது மூக்கு நாக்கு இவற்றின் செயல்களை அழித்து விடும். பிராண வாயு கீழ் நோக்கிச் செல்லாது தடுக்கும். மன ஓட்டதை ஒடுக்கும். அப்போது அமைதியான மன மண்டலத்தில் அமுதம் சுரக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------

#540. ஞானி மேலானவன்

ஓலக்கம் சூழ்ந்த உலப்பு இலி தேவர்கள்

பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
“மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன் மிக நல்லவன்” என்றாரே.

பால் ஒத்த மேனி கொண்ட ஈசனின் பதம் பணிவதற்காக அவன் கொலு மண்டபத்தைச் சூழ்ந்து நின்றனர் அழிவில்லாத அமர்கள். அப்போது ஈசன் அவர்களிடம்,” பொறுமையில் சிறந்த இந்த ஞானி மாலுக்கும் அயனுக்கும் தலைவன் ஆவான். இவன் உலகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தவன் ” என்று சொன்னான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

24. பொறையுடைமை

#541. இறைவனை அடையலாம்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

சேனை வளைந்து திசைதொறுங் கை தொழ
ஊனை விளைத்திடு மும்பர் தம் மாதியை
யேனை விளைந்தருள் எடடலுமாமே.

மெய்ஞானம் கை கூடப் பெற்ற ஒரு ஞானிக்கு அவர் உடலின் கருவிகள் கரணங்கள் என்னும் படை ஏவல் செய்யும். அவரை அனைவரும் கைதொழுவர். உடலை மாற்றி அளிக்கும் தேவாதிதேவனை அவர் ஞானத்தாலே அடைய முடியும்.

---------------------------------------------------------------------------------------------------

#542. இலயம் உண்டாகும்

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகையாலும் பற்றிப் பதம் செயும்
கொல்லையின் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இலாத இலயம் உண்டாமே.

பல வகையான இன்ப துன்பங்களை உயிர்களுக்குத் தருவான் சிவன். அந்த உயிரின் பக்குவத்துக்கு ஏற்றபடி அதன் உடலிலும் உள்ளத்திலும் பல விதமான அனுபவங்களைத் தந்து மேலும் பக்குவம் அடையச் செய்வான். மூலாதாரத்தில் நின்று கூத்தாடும் பெருமான் ஐந்தொழில்களை நிகழ்த்துவது அந்தக் கூத்தின் ஒருமைப்பாடு ஆகும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

25. பெரியாரைத் துணைக் கோடல்

ஞானம் மிகுந்தவரைத் தனக்குத் துணையாக ஏற்றுக் கொள்ளல்.

#543. பெரியவர் துணை

ஓடவல் லார் தமரோடு நடாவுவன்

பாடவல் லார் ஒலி பார்மிசை வழங்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லார் அடி கூடுவன் யானே.

தலப்பயணம் செய்பவர்களோடு சேர்ந்து கொண்டு நானும் தலப்பயணங்கள் செய்வேன். இன்னிசை பாடுபவர்களின் இசையைக் கேட்டு நான் இன்பம் அடைவேன். உள்ளத்தில் தன்னைத் தேடுபவர்களுக்கு அருளும் சிவனோடு பொருந்தும் திறன் பெற்றவர்களின் திருவடிகளில் நானும் பொருந்துவேன்.

-----------------------------------------------------------------------------------------------------------

#544. நெஞ்சே நீயும் வா!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்

மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப் பட்டிருந்தென் செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னோடும் போது கண்டாயே.

படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தளிரைப் போல வாட்டம் அடைந்தாலும், மன உறுதி கொண்டவர் தன் மனத்தின் மீது அன்பு வைத்து அதன் வழிப்படி எல்லாம் செல்வதில்லை!
நீ மட்டும் தனியாயாக இருந்து கொண்டு என்ன செய்வாய் என் நெஞ்சமே? பெரியாரைக் காண நான் போகும் போது நீயும் என்னுடன் வருவாய்!

--------------------------------------------------------------------------------------------------------------

#545. சான்றோர் சகவாசம்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவார் சிவதத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்றருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே.

உண்மை அறிவு பெற்ற சான்றோர் தேவதேவனை விரும்பி அவனோடு பொருந்தி இருப்பார். அவர்கள் தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்த சிவ தத்துவத்தைப் பெறுவார். நல்ல நெறியில் நிற்பவர்களுக்கும் உபதேசிக்க வல்ல பெரியாருடன் சேர்ந்து இருப்பது பெரும் இன்பத்தைத் தரும்

----------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

#546. சிவநெறி

தார்சடை யான் தன் தாமராய் உலகினில்

போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்.
வாய் அடையா, உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

உலக வாழ்வில் உழல்பவர்கள் சிவனைத் துதிக்காமல் இருக்கலாம். பெரியவர்களுடன் கூடி இருப்பவர்கள் சிவபெருமானுக்கு உறவினராகி அவன் திருவடிகளையே சென்று அடைவர். மெளனமாகச் சிவனை ஆன்மாவில் துதிப்பவர்களுக்குச் சிவன் அருள் செய்வான். அந்தச் சிவ நெறியில் இணைவது என்பது சான்றோர் சகவாசத்தாலேயே நிகழும்.

-----------------------------------------------------------------------------------------------------

#547. சிவபுரம்

உடையான் னடியார் அடியார் உடன்போய்ப்
படையா ரழல்மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
வுடையான் வருகென ஓலைமென்றாரே.

எல்லாம் உடையவன் சிவபெருமான். அவன் அடியாருக்கு அடியாராகிச் சிவபுரத்தில், சிவ சோதியில் பொருந்தி நின்றார் ஒருவர். அவர் என்னைக் கண்டதும் சிவபெருமானிடம் விண்ணப்பித்தார். என்னை அழைத்து வருமாறு சிவன் பணித்தான். கடை வாயிலில் நின்றவர் எனக்கு அடைக்கல முத்திரையைக் காட்டினார். என்னை உள்ளே வருமாறு அழைத்தார்.

----------------------------------------------------------------------------------------------------------

#548. பெரியார் துணை

அருமைவல் லோன் கலை ஞானத்துள் தோன்றும்;
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந்து ஊழி இருக்கும்;
திருமைவல் லாரோடு சேர்ந்தனன் யானே.

சான்றோரோடு கூட வல்லவன் கலை ஞானத்துடன் விளங்குவான். பெருமை உடைய ஞானம் பெற்றவன் பிறவிச் சுழலிலிருந்து வெளிப்படுவான். உரிமையோடு பழகுபவன் சிவனை உணர்ந்து என்றும் அழிவில்லாமலிருப்பான். அருமை பெருமை வாய்ந்த சான்றோர்களின் சிறந்த துணையை அடைகின்ற பெரும் பேற்றைப் பெற்றேன் நான்.

இரண்டாம் தந்திரம் முற்றுப் பெற்றது.

-----------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

1. அட்டாங்க யோகம்

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடையது அட்டாங்க யோகம் . இவை இறைவனை அடைவதற்கான வழிகள் ஆகும்.

#549. யோகம் செய்தல்

உரைத்தன வற்கரி ஒன்று மூடி
நிரைத்த இராசிநிரைமுறை எண்ணி
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிறைத்த இயம நியமம் செய்தானே.

பலவகையாகப் பேசப்படுகின்றது உயிர் மூச்சு. பிராணாயாமத்தில் அது நன்கு கட்டுப்படுத்தப்பட்டு கழுத்துக்கு மேலும் கீழும் பன்னிரண்டு அங்குலங்கள் இயக்கப்படுகின்றது. இதை எடுத்துக் கூறிய குருநாதர் தீமைகளைப் போக்கும் இயமத்தையும், நன்மைகளைத் தரும் நியமத்தையும் கற்பித்தார்.

-----------------------------------------------------------------------------------------------------

#550. அட்டாங்க யோகம்

செய்த வியாம நியமஞ் சமாதி சென்று
உய்ய பராசத்தி உத்தர பூருவம்
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரை செய்தவன் இந்நிலை தானே.

இயம, நியமங்களில் முறைப்படி நிற்க வேண்டும். சமாதியில் நன்கு பொருந்த வேண்டும். முன்னால் இருந்து வழி காட்டியும் பின்னல் இருந்து தாங்கிக் கொண்டும் இருக்கும் பராசக்தியின் துணையைப் பெற வேண்டும். கவசம், நியாசங்கள், முத்திரைகள் இவற்றை சரிவரச் செய்ய வேண்டும். உய்வதற்கு இதுவே நல்ல வழியாகும்

-----------------------------------------------------------------------------------------------------

#551. பிறவிப் பிணி இல்லை!

அந்நெறி இந்நெறி என்னாது அட்டங்கத்
தந்நெறி சென்று சமாதியில் நின்மின்;
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில்ஏகலாம்;
புல்நெறி ஆகத்தில் போக்கு இல்லை ஆகுமே.

இறைவனை நாடுவதற்கு அது நல்ல வழியா இது நல்ல வழியா என்று மயங்க வேண்டாம். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி நிலையை அடையுங்கள். அந்த நெறியில் சென்று அந்நிலையில் பொருந்தியவர்களுக்குச் சிவப்பேறு கிட்டும். மெய் ஞானமும் கிட்டும். மெய் ஞானம் கிடைக்காமல் போனாலும் மீண்டும் ஓர் உடலில் வந்து பொருந்துகின்ற பிறவிப்பிணி அழிந்து விடும்.

-----------------------------------------------------------------------------------------------------

#552. எட்டு நெறிகள்

இயம நியமமே எண்ணிலா வாதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாராஞ்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறு மட்டாங்கம் ஆவதுமாமே.

இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் ஆகும்.

1. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்.

2. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

3. ஆசனங்கள் = பலவிதமான உடலின் இருக்கை நிலைகள்

4. பிராணாயாமம் = மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்துவது

5. பிரத்தியாகாரம் = மனத்தைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது.

6. தாரணை = கட்டுக்குள் உள்ள மனத்தை நிலை பெறச் செய்வது.

7. தியானம் = இடையறாது ஒரே பொருளைச் சிந்தனை செய்வது.

8. சமாதி = சிவனும், சீவனும் ஒன்றி இருத்தல்.
----------------------------------------------------------------------------------------------------------
 
Last edited:
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

2. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்

#553. நால்வருக்கு உரைத்தான் சிவன்

எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
யழுந்திய நால்வர்க் கருள் புரிந்தானே.

“எட்டுத் திசைகளிலும் மேகங்கள் குழுமிக் கன மழை பொழிந்தாலும் நன்மை தரும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள்!” என்று கொழுவிய, குளிர்ந்த, பவள நிறச் சடையுடைய சிவபெருமான் சனகர் முதலான நால்வருக்கும் உரைத்தான்.

--------------------------------------------------------------------------------------------------------

#554. இயமத்தில் நீக்க வேண்டியவை

கொல்லான், பொய்கூறான், களவுஇலான், எண் குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுசெய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் இமயத்து இடை நின்றானே.

ஒரு உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், களவு செய்யாதவன், ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையவன், நல்லவன், பணிவு கொண்டவன், நீதி நேர்மைகளிலிருந்து பிறழாதவன், தன் உடமைப் பொருட்களைப் பிறருக்குப் பகிர்ந்து அளிப்பவன், குற்றமற்றவன், கள் காமம் இல்லாதவனே இயமத்தை மேற்கொள்ளத் தகுதி உடையவன் ஆவான்.

--------------------------------------------------------------------------------------------------------
 
Since Pujya Swami Dayananda Saraswathi attained Samadhi on Wed 23 Sept 2015 night at Rishikesh ,I am sharing his quote here ( a detailed one ) as a mark of respect for the great Vedanta Teacher and will continue to share many of his quotes in the coming days .

Accomodating Others :
"Anger is due to lack of accommodation. If you expect the world to conform to your liking, then it is your own expectation that brings anger to you. Accommodation is an understanding that the other person behaves as he or she does because the person cannot act contrary to his or her background. You have no right to expect something different from someone just because it suits your needs. If you think you have a right to ask someone to change, then that person equally has the right to ask you to let him or her live as he or she does. In fact, only by accommodating others, allowing them to be what they are, do you gain a relative freedom in your day-to-day life." Swami Dayananda Saraswati
 
The power of accommodation is the secret behind the popular "Live and Let live!"

Animals survive when they have the power to adapt :panda:

and humans when they can accommodate! :thumb:
 
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

3. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

#555. நியமத்தில் செய்ய வேண்டியது

ஆதியை வேதத்தின் அப்பொருளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தி யோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தனாமே.

நியமத்தை மேற்கொள்பவன் பழமையான சிவனை, நாத வடிவானவனை, பேரொளி வீசுபவனை, மூலாதாரத்தில் அக்கினி வடிவமாக இருப்பவனை, பிரிவில்லாமல் சக்தியுடன் கலந்து நிற்பவனின் இயல்பினை அறிந்து உணர்தல் வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------

#556. நியமத்தில் நிற்பதற்குத் தேவையானவை

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமி யீரைந்து நியமத்தானாமே.

நியமத்தில் நிற்பவன் மேற்கொள்ள வேண்டிய பத்து குணங்கள் இவை :
தூய்மை, அருள், சுருங்கிய உண்டி, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை என்ற நல்ல குணங்களை வளர்க்க வேண்டும். காமம், களவு, கொலை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------

#557. நியமத்தில் செய்ய வேண்டியவை

தவம் செபம். சந்தோடம் ஆத்திகாந் தானம்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதி சொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்தனாமே.

நியமத்தில் உள்ளவன் செய்ய வேண்டியவை இவை:
(1). தவம், (2). செபம், (3). மகிழ்ச்சி, (4). தெய்வ நம்பிக்கை, (5). கொடைத்தன்மை,
(6). சிவ விரதம், (7). சிந்தாந்த சிரவணம், (8). வேள்வி செய்தல், (9). சிவபூசை,
(10). பேரொளி தரிசனம் என்னும் பத்து ஆகும்.

----------------------------------------------------------------------------------------------------------
 
One need not sit idle until the competence to study Vedanta has been secured. Chanting at least a single verse of Sri Adi Shankaracharya’s everyday will bring about great results.- Sri Sri Bharati Tirtha Mahaswamigal
 
When we are ready for initiation the sat guru will appear from somewhere on his own.
Just like we are pining for a sat guru , he too will be on the look out
for a sincere, qualified and worthy disciple!
When these two finally meet, things will start happening fast! :hail:
 
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

4. ஆதனம் = இருக்கை

இதில் யோகத்தை மேற்கொள்வதற்குத் தகுந்த இருக்கை நிலைகள்
மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிக் கூறப்படும்.

#558. சுவத்திகாசனம்

பங்கயம் ஆதிப் பரந்தபல் ஆதனம்
இங்குள வாம் இருநாலும் அவற்றினுள்
சொங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.

பத்மாசனம் முதலிய பல ஆசனங்கள் உள்ளன. அவற்றில் எட்டு ஆசனங்கள் மிக முக்கியமானவை. சோர்வு அடையாமல் சுவத்திக ஆசனத்தில் பொருந்தி இருக்கும் திறமை பெற்றவன் ஒரு நல்ல தலைவன் ஆவான்.

--------------------------------------------------------------------------------------------------------

#559. பத்மாசனம்

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆர வலித்ததன் மேலவைத் தழகுறச்
சேர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

ஒரு பக்கம் அணைந்த காலை தொடையின் மேல் ஏற்றி நன்கு இழுத்து வலது தொடையில் இடது காலையும் இடது தொடையில் வலது காலையும் வைக்க வேண்டும். இரு தொடைகளின் நடுவில் இரு கைகளையும் மலர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இதுவே உலகம் போற்றும் பத்மாசனம் ஆகும்.
(மூக்கு முனையில் பார்வையைப் பதித்து, மார்பில் முகவாய்க் கட்டையைப் பதிக்க வேண்டும்)

----------------------------------------------------------------------------------------------------------

#560. பத்திராசனம்

துரிசுஇல் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உருகியிடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெரும் அது பத்திராசனமே.

குற்றம் இல்லாத வலக்காலை இடது பக்கம் தொடையின் மீது வைக்க வேண்டும். கைகளை முழங்கால்களின் மீது நீட்ட வேண்டும். தளரும் உடலைச் செம்மையாக இருத்த வேண்டும். இதுவே பத்திராசனம்.

---------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

#561. குக்குட ஆசனம்

ஒக்க அடி இணை உருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கைதனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.

பத்மாசனத்தில் சொல்லப் பட்டது போல இரண்டு பாதங்களையும் தொடைகளின் மேல் ஏற்றி வைக்க வேண்டும். கணுக் காலுக்கும் தொடைக்கும் இடையே இரு கைகளையும் நுழைத்துத் தரையில் பதிக்க வேண்டும். முக்கி உடலை மேலேற்றி முழங்கை வரையில் தூக்க வேண்டும். சம நிலை அறிந்து கொண்டு உடல் அசையாதபடி இருத்தல் குக்குட ஆசனம் ஆகும்.

---------------------------------------------------------------------------------------------------------

#562. சிம்மாதனம்

பாதம் முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுறக்
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.

அமர்ந்து பாத நுனிகளை நிலத்தில் ஊன்ற வேண்டும். கைகளை முழங் கால்களின் மீது நீட்ட வேண்டும். வாயை அகலத் திறந்து கொண்டு கண் பார்வையை மூக்கின் நுனியில் இருத்த வேண்டும். இதுவே சிங்க ஆசனம் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------------

#563. ஆதனங்கள் பல

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் மோரேழும்
உத்தமு மாமுது வாசன மெட்டெட்டுப்
பத்தோடு நூறு பல்லாசனமே.

பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் என்ற ஏழும் மேலானவை. இவ்வண்ணம் நூற்று இருபத்தாறு வகைப்பட்ட ஆசனங்கள் உள்ளன.

-------------------------------------------------------------------------------------------------------------
 
5. பிராணாயாமம்

பிராண வாயுவைக் கட்டுப் படுத்துவது பிராணாயமம் ஆகும்.

ஏதாவது ஒரு ஆசனத்தில் இருந்தவாறு இதைச் செய்ய வேண்டும்.

#564. பிராண ஜெயம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.

ஆன்மா ஐம் பொறிகளின் தலைவன். உடலுக்கும் ஆன்மா தலைவன். அந்த ஆன்மா உய்வதற்கு உதவிடவும் மனம் என்னும் குதிரையைக் கட்டுப் படுத்தவும் பிராணன் என்ற ஒன்று உள்ளது. உடலைப் பற்றாமல் அகண்டதைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை வயப்படும். உடலைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை வசப்படா.

------------------------------------------------------------------------------------------------------

#565. குருவருள் வேண்டும்

ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள,
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

மனம் என்னும் ஆரியனுக்கு உள்ளன இரண்டு குதிரைகள். அவை பிராணன் அபானன் என்பவை ஆகும். அவற்றைச் வீசிப் பிடிக்கும் உபாயத்தை அறிவது மிகவும் கடினம். பிராண ஜெயம் பெற்றுள்ள குருநாதரின் அருள் கிடைத்தால் அவ்விரு குதிரைகளையும்
சேர்த்துப் பிடித்து பிராண ஜயத்தை அடைய முடியும்.

----------------------------------------------------------------------------------------------------------

#566.சோம்பல் நீங்கும்

புள்ளினு மிக்க புரவியை மேல்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களி தரும்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் முணர்வுடையோர்க்கே.

பறவையை விட வேகமானது பிராணன். அது சிரசை நோக்கிச் செல்லும் பொழுது கள் அருந்தாமலேயே மனிதனுக்கு மகிழ்ச்சி ஏற்படும். சோம்பல் மறைந்துவிடும். சுறுசுறுப்புத் தோன்றும். பிராணனும் மனமும் சிரசை நோக்கிப் பாயும். மனம் உடைய மனிதருக்கு இந்த நன்மையைக் கூறினேன்.

---------------------------------------------------------------------------------------------------------
 
திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

5. பிராணாயாமம்

#567. பிறவி நீங்கும்

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடை மாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் அடைபேறு பெற்று உண்டீர் நீரே.

நாமங்களும் ரூபங்களும் வேறு வேறான உலகத்தை எண்ணாது இறைவனை எண்ணி இருந்தால் மனமும் பிராணனும் கட்டுக்குள் அடங்கும். அப்போது பேச்சு இராது. பிறப்பு இறப்பு என்பவை இல்லாமல் போகும். பிராணன் கீழ் நோக்கிச் செல்லும் பொழுது பேச்சு உண்டாகும். பிராணன் ஒடுங்காதவர் பிறப்பு இறப்பு இவற்றில் சிக்கி உழல்வர்.

-----------------------------------------------------------------------------------------------------------

#568. பிராணாயாமம் செய்யும் விதம்

ஏறுதல், பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபது நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுத லொன்றின்கண் வஞ்சகமாமே.

பூரகம்:
பதினாறு மாத்திரையளவு இடது நாசித் துவாரத்தால் காற்றை உள்ளுக்கு இழுத்தல்.
கும்பகம்:
இழுத்த காற்றை அறுபத்து நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்துதல்
ரேசகம்:
வலது நாசித் துவாரத்தால் நிறுத்திய காற்றை மெல்ல வெளியேற்றுவது.
இதற்கு மாறாக வலது நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து இடது நாசித் துவாரத்தின் வழியே வெளியேற்றுவது வஞ்சனை ஆகும்.

----------------------------------------------------------------------------------------------------------

#569. மாறாத இளமை

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனுமாமே.

காற்றை இழுத்துத் தன் வயப்படுத்திப் பிராணாயாமம் செய்தால் உடல் பளிங்கைப் போலத் தூய்மை அடையும். முதுமை எய்தினாலும் தோற்றத்தில் இளமை நிலவும். குருவின் அருளையும் பெற்று விட்டால் அவன் உடல் காற்றை விட மென்மையானதாகி விடும். அவன் எங்கும் செல்லும் வல்லமை பெற்று விடுவான்.

----------------------------------------------------------------------------------------------------

#570. இடகலை தரும் சிறப்பு

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கிக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

எந்த இடத்தில் பிராணாயாமம் செய்தாலும் இடது நாசி வழியாகவே பூரகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் உடலுக்கு அழிவு என்பதே இல்லை. கும்பகம் செய்து பிராணன் மேலே செல்லும் அளவுக்கு ஏற்பச் சங்க நாதம் ஏற்படும். மேன்மைகள் கிடைக்கும்.

-------------------------------------------------------------------------------------------------------------
 
#571. கும்பகத்தின் பயன்.

ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

இடைக்கலை பிங்கலை வழியாகக் காற்றை உள்ளே இழுத்துப் பூரித்துக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர்கள் இல்லை. அங்ஙனம் கும்பகம் செய்யும் முறையினை அறிந்தவர் யமனின் வருகையை விலக்கும் ஆற்றலைப் பெறுவார்.

--------------------------------------------------------------------------------------------------

#572. அருள் பெறலாம்

மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.

தொண்டை, மூலாதாரம், விலாப் பகுதிகள் ஆகியவை காற்றால் நிரம்பும் வண்ணம் செய்ய வேண்டும். ரேசகத்தால் உறுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பதியும்படிச் செய்ய வேண்டும். வயிற்றில் கும்பகம் செய்து கொண்டு வந்தால் ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------

#573. கும்பகத்தின் அளவு

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏம்உற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

இடக்கலை வழியே பதினாறு மாத்திரை பூரகம் செய்ய வேண்டும். பிங்கலை வழியே முப்பத்திரண்டு மாத்திரை ரேசகம் செய்ய வேண்டும். கும்பகம் அறுபத்து நான்கு மாத்திரைகள் செய்ய வேண்டும். காற்றை வெளியே விட்ட பின்பு காற்றை மீண்டும் உட்கொள்ளாமல் அறுபத்து நான்கு மாத்திரைகள் இருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------

#574. காலனைக் கடக்கலாம்

இட்டத் தவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப்படத் தச நாடியும் பூரித்து,
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே.

இவ்வுடல் தளர்ச்சி அடையாமல் இரேசகம் செய்ய வேண்டும். பத்து நாடிகளும் விம்மும்வண்ணம் காற்றை உள்ளே இழுத்து நிரப்ப வேண்டும். பிராணன் அபானன் இரண்டும் சேர்ந்து நேராய் நிமிர்ந்து இருந்தால் யம பயம் இராது.

தச நாடிகள்:

சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.

பிராணன் அபானன் கும்பித்தல்:

மூலாதாரமும் தொண்டையும் நெருக்குண்ணலால், பிராணனும் அபானனும் நெருக்குண்டு சுழுமுனை திறந்து இருத்தல்

திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்

5. பிராணாயாமம்

#575. உடலில் மாற்றம் தோன்றும்

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்படவுள்ளே நின்மலமாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.

உயிர்ப்பாக வெளியே திரிகின்ற காற்றை முறையாக உடலின் உள்ளே கும்பகம் செய்து தூய்மைப் படுத்தினால், உடலில் ரத்த ஓட்டம் நன்றாகும். உடல் சிவந்த நிறம் அடையும். தலை முடி நன்கு கறுக்கும். ஒளி வடிவான ஆத்மா உடலில் நிலையாக நிற்பான்.

-----------------------------------------------------------------------------------------------------

#576. திருவைந்தெழுத்து

கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின் கோல அஞ்செழுத்து ஆமே.

குழந்தையாக இருக்கும் போது பிராண சக்தி பன்னிரெண்டு விரல் அளவு உடலின் உள்ளே சென்றும் புகுந்தும் இருந்தது. வயது முதிரும் பொழுது பிராண சக்தி வெறும் எட்டு விரல் அளவே செயல்படுகின்றது. தொண்டைக்கு மேலே நான்கு அங்குலம் தலைக்குள் செல்வதில்லை. தடைப்பட்ட அந்த நான்கு விரல் அளவு தலையில் செல்லுமாறு பிராணாயாமப் பயிற்சி செய்தால் அவர் திருவைந்தெழுத்தின் வடிவத்தைப் பெறுவார்.

ஐந்தெழுத்து: அ , உ , ம , நாதம், விந்து.

-------------------------------------------------------------------------------------------------------

#577. துரிய நிலை

பன்னிரண் டானைக்குப் பகலிர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாக னறிகிலன்
பன்னிரண் டானையைப் பாக னறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.

பன்னிரண்டு விரல் அளவுச் செயல்படும் பிராணன் என்னும் கதிரவனுக்குப் பகல், இரவு என்ற கால பேதங்கள் உண்டு. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாயும் பிராணனை ஆன்மா அறிவதில்லை. கீழே பாயாமல் மேலே தலையில் பாயும் பிராணனை ஆன்மா அறிந்து கொள்ளும் அப்போது இரவு பகல் என்னும் பேதம் இன்றிக் கதிரவன் எப்போதும் ஒளி வீசுவான். அப்போது நாம் இரவு பகல் அற்ற துரிய நிலையில் இருக்கலாம்.

------------------------------------------------------------------------------------------------------------
 
Latest ads

Back
Top