5. சக்தி பேதம்
சக்தி என்னும் திவருட்செல்வி கலைமகள், மலைமகள் என்னும் பேதங்களை உடையவள். இவளே பரமேச்வரனுடன் வேறுபடாமல், பிரியாமல் இருந்து ஐந்தொழில்களையும் ஆற்றுகின்றாள்.
#1045. எல்லாம் சக்தி மயம்
மாமாயை, மாயை, வயிந்தம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள்
ஆம் ஆய் அலவாம் திரிபுரை ஆங்கே.
சுத்த மாயை, அசுத்த மாயை, விந்து, வைகரி வாக்கு , ஓம் என்னும் பிரணவம், உள்ளொளி, ஆறு தொகுதிகளில் மந்திரம், சக்தியின் மூர்த்தி இவை அனைத்தும் சக்தியின் பல வடிவங்களே!
#1046. சக்தியின் பல வடிவங்கள்
திரிபுரை, சுந்தரி, அந்தரி, சிந்தூரப்
பரிபுரை, நாரணி, ஆம் பால வன்னத்தி
இருள்புரை, ஈசி, மனோன்மணி, என்ன
வருபல வாய் நிற்கும் மாமாது தானே.
அக்கினி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று கண்டங்களாக விளங்குவாள் திரிபுரை. அவள் பேரழகு வாய்ந்தவள்; வானத்தைத் தன் வடிவாகக் கொண்டவள்; செவ்வொளியுடன் திகழ்ந்து உலகினைத் தாங்குபவள்; நாராயணி என்ற பெயர் கொண்டவள்; பல வேறு வர்ணங்களில் மிளிர்பவள்; கரிய நிறத்தில் இருப்பவள், ஈசனின் சக்தியானவள்; நினைப்பவர் மனத்தில் ஒளிர்பவள்; மாறுபட்ட இவை அனைத்துமே அந்தத் திரிபுரையின் பல வேறு வடிவங்கள் ஆகும்.
#1047. கல்வி, செல்வம், முக்தி தருவாள்!
தானா அமைந்தவ முப்புரம் தன்இடைத்
தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண்ணிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.
இயற்கையாகவே அமைந்துள்ள முப்புரங்களில் தானே மூவுருவெடுத்து மலைமகள், அலைமகள், கலைமகள் என்று திகழ்வாள். அந்த மூன்று உருவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒரே உருவில் சதாசிவனின் நயகியாவாள். தானே பொன்னிறம், செந்நிறம், வெண்ணிறம் கொண்டு விளங்குவாள். தானே கல்வி, செல்வம், முத்தி
என்னும் மூன்றையும் தருவாள்.
#1048. அன்புடன் அறிவைத் தருவாள்
நல்கும் திரிபுரை; நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை, அபிராமி, அகோசரி
புல்கும் அருளும் அப்போதந்தம் தாளுமே.
திரிபுரை அன்னை நாதத்தையும், நாதத்தைக் கடந்து விளங்கும் நாதாந்தம் என்னும் நிலையையும் தன் அன்பனுக்கு அருள்வாள்.அவளே பரவிந்துவாக இருந்து கொண்டு உலகம் முதலிய அண்டங்களை தருவாள். அவள் பரை, அவள் அபிராமி, அவள் வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குவாள்.
#1049. இராசேசுவரியின் வடிவம்
தாள் அணி நூபுரம், செம்பட்டுத் தான் உடை
வார் அணி கொங்கை, மலர்க் கன்னல்வாளி வில்
ஏர் அணி அங்குசபாசம் எழில் முடி
காரணி, மாமணிக் குண்டலக் காதிக்கே.
காலணிகளானஅழகிய சிலம்புகள்; சிவந்த பட்டாடைகள்; கச்சை அணிந்த கொங்கைகள்; மலர் அம்புகள்; கரும்பு வில்; அங்குச பாசம், அழகிய தலை முடி, கருநீல நிறக் குண்டலங்கள் இவை இராசேசுவரி தேவியின் வடிவத்தில் அமைந்திருக்கும்.