• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#1165 to #1169

#1165. ஐம்பெரும் பூதங்கள் அவளே

தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.


மண்ணுலகத்தைத் தாங்குபவள் மனோன்மணி.
விண்ணாய் நிற்பவளும் மனோன்மணி ஆவாள்.
அக்கினி, கதிரவன், திங்கள் இவைகளும் அவளே.
அருள் மழை பொழியும் சக்தி தேவியும் அவளே.
சிரசின் வடக்கில் இருக்கும் வடவரையும் அவளே.
குளிர்ந்த கடலில் உள்ள வடவாக்கினியும் அவளே.

#1166. தேவர்களைக் காணலாம்


கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரில் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்றி ருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.


நெற்றிக் கண்ணை உடைய சக்தியுடன் கூடி மதி மண்டலத்தில் இருந்தவர்கள் ஞானியர். அவர்கள் மண்ணுலகத்தோர் ஆயினும் தெய்வத் தன்மை பெற்றவர் ஆவர். அவர்களால் விண்ணுலகவாசிகளாகிய தேவர்களைக் காண இயலும்.

#1167. பலரும் தொழுது எழுவர்


கண்டெண் திசையும் கலந்து வரும்கன்னி
பண்டெண் திசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையுந் தொழ நின்ற கன்னியே.


குண்டலினி சக்தி வாலையாக எல்லா திசைகளிலும் பரந்து நிற்பாள். சீவனின் உடல் உருவாகும் முன்னர் இவளே பராசக்தியாக எல்லாத் திசைகளிலும் நிறைந்து இருந்தவள். கீழே இருந்த குண்டலினி சக்தி மேலே எழும்பிச் சென்று சகசிரதளத்தை அடையும் போது, அந்த சீவனை எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது எழும் வண்ணம் மாற்றி அமைத்து விடுவாள்.

#1168. பதினாறு கலைகள் பராசக்தியின் நிலையம்


கன்னி யொளியென நின்றவிச் சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

செந்நிறம் வாய்ந்த சுவாதிஷ்டானத்தில் பிறைத் திங்கள் போலப் பொருந்தி இருக்கும் ஒளியே, சிரசை அடையும் போது பதினாறு கலைகளுடன் பூரணம் ஆகிவிடும். இதுவே பராசக்தி இருக்கும் நிலையம் ஆகும்.

#1169. சக்தியின் பலச் சிறப்புகள்


பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள வாகமத்த ளாகுங்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.


பராசக்தி பலவகையாலும் எல்லாவற்றையும் எப்போதும் தாங்கி நிற்பவள்; முதன்மையான பிரமாணியாகத் திகழ்பவள் சக்தி தேவி; இராசக்தியாக உருத்திர யாமளம் என்னும் ஆகமத்தால் விளக்கப்படுபவள்; குரு வடிவானவள். இங்ஙனம் பல சிறப்புகள் பொருந்தியவள் சக்தி தேவி.
 
#1170 to #1174

#1170. பன்னிரு யோகினி சக்திகள்

உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சக்தி
உணர்ந்து, உயிராய் நிற்கும், உள்ளத்தின் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அது ஆதி,
இணைந்து, பரம் என்று இசைந்திது தானே
.

உடலின் ஏழு ஆதாரங்களையும் உணர்ந்து கொண்டு, அவற்றை உயிர்களுக்கு உணர்த்துபவர் பன்னிரு யோகினி சக்தியர் .உள்ளத்தில் உள்ள ஈசன் இவர்களைப் புணர்ந்து பரம் என்னும் தன்மை அடைந்தான். இந்த சக்தியரின் தொகுப்பு பராசக்தியானது.

பன்னிரு யோகினியர் :
(1). வித்தியா, (2). ரேசிகா, (3). மோசிகா, (4). அமிர்தா, (5). தீபிகா, (6). ஞானா, (7). ஆபியாயதி, (8). வியாபினீ, (9). மேதா, (10). வியோமா, (11). சித்திரூபா, (12). லக்ஷ்மி


#1171. யோகமும், போகமும் தருபவள் சக்தி


இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கலவியும் போகமும் ஆகி,
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அது அக் கலவியுள் ஆயுழி யோகமே.


சக்தியும், சிவனும் வான் கலப்பில் ஒன்று சேருகின்றனர். அதனால் அவர்கள் கலவியும், அதில் விளையும் இன்பமும் போல ஒன்றாக விளங்குகின்றனர். இன்பம் பொருந்தியுள்ள சுழுமுனையில் விளங்கும் தேவியே அந்த யோகமும் ஆவாள்; அதில் விளையும் போகமும் ஆவாள்.

#1172. ஒளியே அவளது பீடம் ஆகும்


யோகநற் சத்தி யொளிபீடத் தானாகும்
யோகநற் சத்தி யொளிமுகம் தெற்காகும்
யோகநற் சக்தி யுதர நடுவாகும்
யோகநற் சக்திதாள் உத்தரந் தேரே.

புருவ மத்தியில் உள்ள ஒளியைத் தன் பீடமாகக் கொள்வாள் யோகத்தை விளக்கும் சக்தி தேவி.
யோக நற்சக்தியின் ஒளிவீசும் முகம் வலக்கண் என்னும் நம் முகத்தின் தென் பகுதியாகும்.
நாபிப் பிரதேசத்தில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் யோக நற்சக்தி கதிரவனாக விளங்குவாள்.
யோக நற்சக்தி திங்களாக விளங்குவது முகத்தின் வடக்குப் பகுதியாகிய இடக் கண் ஆகும்.

#1173. சிவாக்கினியும், குண்டலினி சக்தியும்


தேர்ந்துஎழும் மேலாம் சிவன் அங்கி யோடுஉற,
வார்ந்துஎழும் மாயையும் அந்தம் அது ஆய் நிற்கும்,
ஓர்ந்துஎழு விந்துவும் நாதமும் ஓங்கிட,
கூர்ந்துஎழு கின்றாள் கோல்வளை தானே.

சிவாக்கினியைத் தூண்டி, அதை மேல் நோக்கிச் செலுத்தி, ஒளி பீடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது ஒழுகும் தன்மையுடைய விந்துவை வென்றதால் காமஜயம் ஏற்படும். ஆராய்ந்து அறியவேண்டிய விந்துவும் நாதமும் பெருகும். சுழுமுனை நாடியில் வளைந்து உயரே செல்லும் இயல்புடைய குண்டலினி சக்தியும் முளைத்து எழுவாள்.

#1174. பரவாதனை


தான் ஆனவாறு எட்டதாம் பறைக்குள்; மிசை
தான் ஆனவாறும் ஈர்ஏழும் சமகலை;
தான் ஆன விந்து சகமே, பரம் எனும்
தான் ஆம்; பரவாதனை எனத் தக்கதே.

ஆறு ஆதாரங்களிலும் விளங்குபவள் பராசக்தி. பதினாறு கலைகள் பொருந்தி விளங்குபவள் பராசக்தி. பதினாறு கலைகளில் ஒன்பதாம் கலை வரை அதிகம் விரிவு பெறாதவை. அவை சிரசுக்குள் தொழிற்படும் கலைகள்.
கலை வடிவமாக அமைந்த சக்தி உலகத்திலும் கலந்து இருப்பாள். அவளே பரத்திலும் கலந்து இருப்பாள்.
இந்த விதமாக அவள் இரண்டுடனும் கலந்து இருக்கும் நிலையே பரவாதனை எனப்படும்.
 
#1175 to #1179

#1175. வான மண்டலம் விளங்கும்

தக்க பராவித்தை தான் இருபானேழில்
தக்கு எழும் ஓர் வுத்திரம் சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண் சக்தி, வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

தலையைச் சுற்றிப் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. அவற்றில் பராசக்தியே இருபத்தேழு விண்மீன்களாக விளங்குவதை அறிந்து கொள்ள வேண்டும். தக்க மந்திரங்களைச் சொல்லி வந்தால் முதலில் எட்டு சக்தியரும் வெளிப்படுவர். பின்னர் அவர்களோடு பராசக்தியும் வெளிப்பட்டு அருள்வாள். தலைச் சுற்றியுள்ள ராசி வட்டம் பூர்த்தியானால் வான மண்டலம் நன்கு விளங்கும்.

#1176. சிற்றின்பமும் பேரின்பமும்


முத்திரை மூன்றில் முடிந்த மெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய் அல்ல ஆய சகலத்தள்
வைத்த பராபரன் ஆய பராபரை
சாதியம் ஆனந்த சத்தியும் கொங்கே.


கதிரவன் மண்டலம், திங்கள் மண்டலம், அக்கினி மண்டலம் என்னும் மூன்றிலும் நிறைந்து இருப்பவள் பராசக்தி. அவள் அனைத்துத் தத்துவங்களாக விளங்குகின்றாள். அவள் தத்துவம் அல்லாத பொருட்களிலும் நிறைந்து விளங்குகின்றாள். பராபரனைத் தன்னுள் கொண்டவள் பராபரையாகிய பராசக்தி. அவள் சிற்றின்பமும் தரவல்லவள்; பேரின்பமும் தர வல்லவள்.

#1177. தகுதிக்கேற்பத் தயை புரிவாள்


கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்தோளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான்; அறிவாயே.


தேனைத் தருவது போல நாம் விரும்பும் பொருளைத் தரும் சக்தி வீணாத் தண்டில் பல வேறு சக்திகளுடன் கூட்டாகப் பொருந்தியுள்ளாள். அவள் குங்குமம் போன்ற செவ்வண்ணம் கொண்டவள். அங்குசமாக யோகியரின் ஐம்பொறிகளை அடக்கவும்; பாசமாக அஞ்ஞானிகளைப் பிணிக்கவும்; உதவுகின்ற அகிலம் அவள் விரும்பித் தங்கும் இடம் ஆகும்.

#1178. தாய், மகள், தாரம் அவளே.


வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே.

சீவர்களின் மூச்சையும், மனதையும் கடந்து விளங்குபவள் மனோன்மணி. பல பேய்களையும், பூத கணங்களையும் தான் ஏவுகின்ற படைகளாகக் கொண்டவள். ஆராய்கின்ற அறிவைக் கடந்த சிவனுக்கு அவளே தாய், அவளே மகள்! அவளே தாரம்!

சக்தி தத்துவத்திலிருந்து சாதாக்கிய தத்துவ வாசியாகிய சதாசிவன் தோன்றுவதால் சக்தி சிவனின் தாய் ஆகின்றாள்.

சிவத் தத்துவத்தில் இருந்து சக்தி தத்துவம் தோன்றுகின்றது. எனவே சக்தி சிவனின் மகள் ஆகின்றாள்.

சிவசக்தியர் ஒன்றாக உலகையும், உயிர்களையும் படைக்கின்றனர். எனவே சக்தி சிவனின் தாரம் ஆகின்றாள்.


#1179. பாரளவாகிய புராதனி


தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரணி, காரியம் ஆகும் கலப்பினள்,
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே.


மனோன்மணி சிவனுக்கு மனைவி ஆவாள். சக்தி தத்துவமாக இருந்து கொண்டு நாத விந்துக்களைத் தோற்றுவிப்பாள். சிவனுடன் சேர்ந்து அனைத்தையும் படைக்கும் போது காரணி ஆவாள். படைப்பின் போது பிரிந்து அவளே காரியம் ஆவாள். இங்ஙனம் காரண காரியம் என்னும் இரண்டும் கலந்தவள் அவள். விந்து சக்தி பொருந்தியுள்ள புராதனி அவள். பத்து திசைகளையும் தன் உடைமையாகக் கொண்டு பாரெங்கும் நிறைந்து நிற்பாள் அவள்.
 
#1180 to #1184

#1180. சகசிர தளத்தில் சக்தி தேவி

பத்து முகம் உடையாள் நம் பராசக்தி
வைத்தனள் ஆறு அங்கம், னாலுட தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழைக் கூறே.


சக்தி பத்து முகங்களை உடையவள். நான்கு இதழ்த் தாமரை மூலாதாரத்தை நான்கு வேதங்களாகவும், ஆறு இதழ்த் தாமரை சுவாதிட்டானத்தை ஆறு அங்கங்களாகவும் அமைத்துள்ளாள். சகசிரதளத்தில் சிவனுடன் பொருந்துகையில் அவனுக்குச் சமமாக நிற்பாள். அவளே நிலையான பொருள். அவளே எம் தலைவி.

#1181. புருவ மத்தியில் திரிபுரை


கூறிய கன்னி, குலாய புருவத்தள்,
சீரியள் ஆய்உலகு ஏழும் திகழ்ந்தவள்,
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.


குண்டலினி சக்தி தன் சக்திக் கூட்டத்துடன் புருவ மத்தியில் விளங்குவாள். அவள் சீர்மை நிறைந்தவள். உலகு ஏழினும் நிறைந்தவள். மகிமை பொருந்திய மங்கை. அமுதம் ஊறும் முலைகளை உடையவள்; எண்ணற்ற உயிர்களின் மீது ஆளுமை கொண்டவள்; பிரிவே இல்லாமல் நமக்கு அருள் செய்த வண்ணம் இருப்பாள்.

#1182. சக்தி அறிவுக்கு அறிவானவள்


பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை,
குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு,
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து, ஆங்கே
அறிவி ஒன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.


பிரிவு இன்றிச் சிவனுடன் எப்போதும் விளங்கும் பெருமாட்டி. இவள் புருவ நடுவில் அழகிய கொம்பினைப் போலக் காட்சி தருவாள் மனம் ஒன்றித் தியானம் செய்பவர்களுக்கு. உயிர்களின் அறிவுக்குள் அறிவாய் பொருந்துவாள். உயிர்களின் அறிவுக்குள் அறிவாகக் கலந்து நிற்பாள்.

#1183. ஆசைகளை அழித்துவிடுவாள்


உள்ளத்தின் உள்ளே உடன் இருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக், கலந்து உடனே புல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலிவி மருட்டிப் புரிந்தே.


வள்ளல் தன்மை நிறைந்தவள் அன்னை பராசக்தி. அவள் நம் உள்ளத்தில் தங்குவாள். அங்கு கள்ளத்தனம் செய்யும் ஐம்புலன்களை அடக்குவாள். உயிருடன் ஒன்றிவிடுவாள். தவ நெறியில் உள்ள இன்பத்தை நமக்குக் காட்டுவாள். அதில் மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்துவாள். அதன் மூலம் உலக ஆசைகளை அறவே ஒழித்து விடுவாள்.

#1184. மலரும் மணமும் போலச் சிவசக்தியர்


புரிந்து அருள் செய்கின்ற போக மாசத்தி
இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார்,
பொருந்தி இருந்த புதல்வி பூவண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.

சீவனின் மனத்துள் இருந்து கொண்டு, விருப்பத்துடன் அந்த உயிருக்கு இன்பத்தைத் தருபவள் போகத்தைத் தருபவளாகிய பராசக்தி. இந்த உண்மையைப் பலரும் அறியார். இந்த அழகிய பெண், மலரில் மணம் போலச் சிவத்தில் பொருந்தி இனிதாக விளங்குகின்றாள்.
 
#1185 to #1189

#1185. தடுக்கும் எண்ணங்களை அகற்றுவாள்

இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித்,
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து, உன்னி,
நிரந்தரம் ஆகிய நிரதி சயமொடு
பொருந்த, இலக்கில் புணர்ச்சி அதுவே.

விருப்பத்துடன் என் உள்ளத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள் சக்தி அன்னை. அவளை எண்ணி, ஆராய்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்து அவளுடன் நிரந்தரமாக நிரதிசயத்துடன் பொருந்தி இருப்பதே சக்தி கலப்பு என்னும் உயர்ந்த நிலையாகும்.

#1186. ஊழையும் உப்பக்கம் காணலாம்


அதுவிது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள் சொன்ன மண்டல மூன்றே.


“அது வேண்டும், இது வேண்டும்” என்று உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள அவாவினை அகற்ற வேண்டும். அவளைப் புகழ்ந்து போற்ற வேண்டும். தலை உச்சியில் உள்ள தொளையாகிய பிரமரந்திரத்தின் மீது தியானம் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்பவர் விதியையும், வினைகளையும் வென்று விடலாம். மதி மண்டலத்தில் உறையும் அன்னை சொன்ன மண்டலங்கள் மூன்று என்று அறிவீர்.

#1187. மோகினியின் மூன்று மண்டலங்கள்


மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்
தோன்று மிலக்குற வாகுதன் மாமாயை
ஏன்றன ளேழிரண் டிந்துவொ டீறே.

மோகினி உறையும் மண்டலங்கள் அக்கினி, கதிரவன் திங்கள் என்ற மூன்றாகும். பன்னிரண்டு கலைகள் கொண்ட கதிரவ மண்டலத்தின் உச்சியில் பொருந்துதல் சுத்த மாயையாகும். நன்மைகளை நல்குகின்ற நாயகி அப்போது திங்கள் மண்டலத்தில் விளங்குவாள்.

அக்கினி மண்டலம் தாமச குணம் நிறைந்தது.

கதிரவன் மண்டலம் ராஜச குணம் நிறைந்தது.

திங்கள் மண்டலம் சத்துவ குணம் நிறைந்தது.

சந்திர மண்டலம் முழுமை அடையும் போது

நாதத்தைக் கடந்த நாதாந்தம் விளங்கும்.


#1188. சிந்தனயில் நாதம் தோன்றும்


இந்துவினின்று எழு நாதம், இரவி போல்
வந்தபின் நாக்கில், மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின்மேல் உற்ற ஈறு அது தானே.


ஒளி மயமான அநாகதத்தில் எழும் இதயத் துடிப்பின் ஒலி மேல் நோக்கிச் செல்லும், கழுத்தினின்று மேல் நோக்கி எழும்பும். பிடரியில் உள்ள சிறு மூளைப் பகுதியில் பரவிப் படரும். அது இறுதியாகச் சந்திர கலையைச் சென்று அடையும். திங்கள் மண்டலத்தில் எழும் நாதம் மலை போல ஓங்கி விளங்கும்.

#1189. ஆதியும் அவளே! அந்தமும் அவளே!


ஈறுஅது தான் முதல் எண் இரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி, மனோவச மாய் எழில்
தூறுஅது செய்யும் சுகந்தச் சுழி அது;
பேறுஅது செய்து பிறந்து இருந் தாளே.


படைப்புக்கு முதன்மையாக அமைவது திங்கள் கலைகளின் பதினாறின் முடிவு ஆகும். அந்த நிலையில் ஆயிரம் மாற்றங்களை அடையாமல் மனம் சம நிலையில் இருக்கும். மனம் முழுதுமாகக் சீவனின் கட்டுக்குள் அடங்கி வசப்படும். எழிலும், மணமும் நிறைந்த இடம் போலாகிவிடும். சக்தி அதையே ஒரு பேறாகக் கருதி அதில் இனிதாக விளங்குவாள்.
 
#1190 to #1194

#1190. சந்திர கலையில் சக்தி தேவி

இருந்தனள் ஏந்திழை, ஈறு அது இல் ஆகத்
திருந்திய ஆனந்தம், செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி,
வருந்த, இருந்தனள் மங்கை நல்லாளே.


சக்தி தேவி சந்திர கலையின் இறுதியில் விளங்குகின்றாள். சிறந்த இன்பம் பெறுவதற்காக நன்னெறியில் நடந்தும், அவள் புகழைப் போற்றியும், மக்கள் ஏங்கி இருக்கும் போது அவள் நன்மைகள் செய்யும் சக்தியாக அங்கே அமைந்து இருக்கின்றாள்.

#1191. ஐந்தொழில் புரிபவள் சக்தி


மங்கையும், மாரனும் தம்மோடு கூடி நின்று
அங்குலி கூட்டி, அகம் புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே.

சக்தியும், சிவனும் பொருந்தி நின்றனர். பிரணவத்தின் உச்சியிலிருந்து கொண்டு சீவர்களைப் படைக்க விரும்பினர். அவர்கள் சீவர்களின் உடம்புக்குத் தேவையானவை எவை என்றும், உயிருக்குத் தேவையானவை எவை என்றும் முதலில் கணக்கிட்டனர். அழகிய தனங்களை உடைய அன்னையும், அவளது ஐந்து குமாரர்களும் அதன் பின்னர் படைத்தல் என்னும் தொழிலைச் செய்தனர்.

#1192. அகவழிபாடும், புறவழிபாடும்


சடங்குஅது செய்து தவம் புரிவார்கள்
கடம்தனில் உள்ளே கருதுவா ராகில்
தொடர்ந்து எழுசொதி துளை வழி ஏறி,
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.


உடலால் செய்யும் சடங்குகளால் புற வழிபாடு செய்வதைக் காட்டிலும், அகவழிபாடாகிய தியானதத்தைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். அப்போது மூலாதாரத்தில் மூண்டு எழும் மூல அக்கினி, உடலில் உள்ள ஆறு ஆதரங்களையும் கடந்து மேலே சென்று சக்தி தேவியுடன் பொருந்தி நிற்கும்.

#1193. ஆறு ஆதாரங்களிலும் ஒளி


பாலித்து இருக்கும் பனி மலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்கித் திகழ்ந்து எழும் மந்திரம்
மூலத்து மேலது முத்துஅது ஆமே.


மூலத்தில் உள்ள முத்தைப் போன்ற வீரியம் வற்றி ஒளியாக மாறவேண்டும். அப்போது உடலின் ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய திங்கள் கலை தன் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தும். இதற்கு பிரணவம் உதவும். இது இன்பத்தைத் தரும்.

#1194. உள்ளக் கோவிலில் குடி கொண்டாள்


முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ள மேவி நின்றாளே.


முத்துப் போன்ற சுக்கில நாடியில் முகம் உடையவள், கதிரவன், திங்கள் , அக்கினி என்னும் முக்கண்களை உடையவள்; ஆற்றல் உடையவள்; திறமை உடையவள்; சகளி; சடாதரி; பத்து நாடிகளிலும் செயல் புரிபவள்; மேலான சிவனின் நாயகி; இத்தகைய வித்தகி என் மனத்தைத் தன் கோவிலாகக் கருதிக் குடி கொண்டாள்.
 
#1195 to #1199

#1195. ஓவினும் மேவுவாள் சக்தி

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி

தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேவிடும் உள்ளொளி ஆமே.

தான் பொருந்தியுள்ள மூன்று மண்டலங்களில் சக்தி தேவி தீ மண்டலத்தில் திருவடிகளை உடையவள். கதிர் மண்டலத்தில் உடலை உடையவள்; திங்கள் மணடலத்தில் முகத்தை உடையவள். அவள் மூன்று மண்டலங்களின் தலைவியாக இருப்பவள். நாம் விலக்கினாலும் விலகிச் செல்லாமல் நம்முடன் மேவி நிற்பாள். உள்ளத்தின் விளங்கும் உள்ளொளியாக நம்மை விட்டு விலகாமல் இருப்பாள்.

#1196. தேவி இன்பம் அருள்வாள்


உள்ளொளி, மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்

வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடி அமுது ஆமே.

குண்டலினி சக்தி உடலின் உள்ளொளியாகும். இது ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து மேலே சென்று அங்கு வெள்ளொளியாகிய சிவத்துடன் பொருந்தி நிற்கும். அங்கே உடலில் அமுது விளையும். விசுத்திச் சக்கரத்தைத் தாண்டிய பிறகு அமுது விளைகின்ற அற்புதமான மண்டலம் தொடங்கும்.

#1197. இன்ப வடிவானவள் சக்தி


கொடியது இரேகை குருவருள் இருப்ப,

படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவு அது; ஆனந்தம் வந்து முறையே
இடும் முதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

நடு நெற்றியிலிருந்து பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை வரையில் உள்ளது சகசிரதளம். அதில் சதாசிவம் பரம குருவாக விளங்குவான். அங்கு தேவியும் தேவனும் கலந்து விளைவிப்பது ஆனந்தம் தரும் அமுதக்கள் ஆகும். பைங்கழல் ஈசனின் வடிவமே ஆனந்தம் ஆகும். மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் தன் உடலாகக் கொண்ட சக்திதேவி ஆனந்தம் தரும் இன்ப வடிவானவள்.

#1198. பராசக்தியைப் பரவுபவர்கள்


எந்திழையாளும் இறைவர்கள் மூவரும்

காந்தாரம் ஆறும், கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திர ராயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

குண்டலினி சக்தியும், மும்மூர்த்திகளும், அஞ்ஞானத்தின் வனங்களாகிய ஆறு ஆதாரங்களும், சந்திரகலை பதினாறும், சதாசிவனின் பத்தினியும், ஈசானவரும் போற்றிப் பரவிடப் பராசக்தி விளங்குவாள்.

#1199. ஆரவார பக்தி வேண்டாம்


சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை

முத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்
பத்தியைப் பாழி லுகுத்தவப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே.

வாலை வடிவில் குண்டலினி சக்தி நம் உடலில் உள்ளாள். அவள் இயல்புகளை நன்கு அறிந்து கொண்டு அவளை உடலில் மேலே மேலே எழச் செய்தால் அவளே வீடு பேற்றினைத் தரும் நாயகி ஆகி விடுவாள். இந்த உண்மையை அறியாதவர்கள் பக்தி என்னும் பெயரில் வீணே ஆரவாரம் செய்து, கத்திக் கொண்டு, காலத்தைக் கழிக்கின்றார்களே!
 
#1200 to #1204

#1200. சேவடி சிந்தை வைத்தாள்

ஆரே திருவின் திருவடி காண்பார்கள்?
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக்
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.

திருவின் திருவடிகளை யார் காண்பார்கள்?
சக்தி தேவியின் நேரே நின்று, ஒளியில் அவளைத் தியானம் செய்பவர்களின் சிந்தையில்,
அவள்தான் சிவந்த தாமரை போன்ற மலரடிகளைப் பதித்து அருள்வாள்.

#1201. சிந்தனையில் பதித்து சமாதி செய்வீர்


சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

சக்தியைக் குறித்து இடைவிடாது சிந்திக்க வேண்டும். புருவ மத்தியில் அவளைத் தியானிக்க வேண்டும். ஒளிமுகமாக அவளை முன்னிலைப் படுத்த வேண்டும். கீழ் முகமாக உள்ள குண்டலினி சக்தியின் திசையை மாற்றி மேல் முகமாக ஆக்க வேண்டும். உலக நிகழ்வுகளில் கவனம் வைக்காமல் அவளையே நினைக்க வேண்டும். ஐம்பொறிகள் கூடும் இடத்தில் அவளை நிறுத்திச் சமாதி மேற்கொள்ள வேண்டும்.

#1202. சந்திரக்கலையில் சக்தி தேவி


சமாதி செய்வார்கட்குத் தான் முதல் ஆகிச்
சிவஆதியில் ஆரும் சிலை நுத லாளை
நவாதியில் ஆக நயந்து ஓதில்
உவாதி அவளுக்கு உரைவிலது ஆமே.


சமாதி செய்பவர்களுக்குச் சக்தி முதன்மையானவள் ஆகி விடுவாள். அவளைச் ‘சிவாயநம’ என்னும் சிவாதி மந்திரத்தால் நன்கு அனுபவிக்கலாம். அவளே ஒன்பது வடிவங்களில் பேதமாகக் காட்சி தருவாள். அவளே தலை உச்சியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு சந்திர கலையில் விளங்குவாள்.

சிவசக்தியர் சம நிலையில் இருக்கும்போது சக்தி ஒன்பது வடிவங்களில் விளங்குவாள்.

அவை : சிவம், சக்தி, நாதம், பிந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், நான்முகன்.


#1203. தினைப் பொழுதில் எய்தலாம்


உறைபதி தோறும் முறைமுறை மேவி,
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி,
மறையுடனே நிற்கும் மற்றஉள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திட லாமே.


சக்தி தேவி உடலில் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் விளங்குகின்றாள். அவளை நாள் தோறும் இடையறாது சிந்திக்க வேண்டும். அப்போது மூலாதாரத்தில் இருந்து மற்ற நான்கு ஆதாரங்களை விரைந்து கடந்து புருவ மத்தியில் உள்ள அவளை எளிதில் அடைந்து விடலாம்.

#1204. எளிதில் எய்திடலாம்


எய்திடலாகும் இருவினைப் பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி,
மைதவழ் கண்ணி நன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்து உறும் வாறே.


அன்னையை வழிபடாதவர்கள் இரு வினைப் பயன்களை அடைந்திடலாம். ஆனால் இருவினைப் பயன்களைக் கொய்ய வல்லவள் இளந் தளிர் மேனியும், மாறத குமரிப் பருவமும், மை வழியும் கருங்குவளைக் கண்களும் கொண்ட அம்மை! ஆதலால் அவளை நெஞ்சில் வஞ்சனை இன்றிப் போற்றிப் புகழ்ந்து வழிபடுவீர்.
 
#1205 to #1209

#1205. எண் குணங்கள் உண்டாகும்!

கருத்து உறும் காலம் கருது மனமும்
திருத்தி இருந்து, அவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு; மண் மேல்
இருத்திடும், எண் குணம் எய்தலும் ஆமே.


இன்பம் பொங்கும் நேரத்திலும் அன்னையை மறவாமல் வழிபடு. மனதைத் திருத்தியமை. அவளை அங்கு அமர்த்தி நன்கு வழிபடு. அது நீண்ட ஆயுளைத் தரும். அதன் பின்னர் இறைவனின் எண்குணங்களும் தாமே வந்து சேரும்.

#1206. திங்கள் மண்டலத்தில் திகழ்வாள்


ஆமை ஒன்று ஏறி, அகம்படி யான்என
ஓம் என்ற ஓதி, எம் உள்ளொளியாய் நிற்கும்
தாம நறுமலர் தையலைக் கண்ட பின்
சோம நறுமலர் சூழ நின்றாளே.


ஆமை தன் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்வது போல ஐம் பொறிகளை அடக்க வேண்டும்.
“நான் செருக்கு இல்லாதவன்!” என்ற பொருள்படும் ஓங்காரத்தில் உள்ள மகாரதைத் தொண்டைப் பகுதிக்கு மேலே நினைக்க வேண்டும்.
அப்போது மூலாதாரத்தில் உள்ள சோதியாகிய சக்தியைத் திங்கள் மண்டலத்தில் காண முடியும்.

#1207. பொன்னம்பலத்தில் பொற்கொடி


சூடிடும் அங்குசத் பாசத் துளைவழி,
கூடும் இருவளைக் கோலக்கை, குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு உருத்திரம்,
ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.


மூலாதாரம் முதல் பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை வரை செல்லும் சித்திரணி என்னும் நாடி. அதில் தேவி அங்குச, பாசத்துடன் விளங்குவாள். அவற்றுடன் இரு கரங்களில் பெரிய சங்கமும், அமுதக் கலசமும் இருக்கும். அன்பர்கள் நாடும் அழகிய இரு பாதங்களுடன், சிவனின் மந்திரமாகிய ஐந்தெழுத்தை விரும்பிப் பொன்னம்பலத்தில் அன்னை நடனம் புரிவாள்.

விளக்கம்

பாசம் = தேவையற்ற தத்துவங்களைக் கட்டுப்படுத்துவது.
அங்குசம் = தேவையான தத்துவங்களைத் தூண்டி விடுவது.


#1208. உடலில் பேரொளி ஆவாள்


ஆமயன், மால், அரன், ஈசன், சதாசிவன்,
தாம் அடி சூழநின்று எய்தினர் தம்பதம்
காமனும், சாமன், இரவி, கனலுடன்
சோமனும் வந்து அடிசூட நின்றாளே.

நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவரும் சக்தி தேவியின் அடிகளைத் தம் முடி மேல் சூடித் தம் பதவிகளைப் பெற்றனர். காமன், அவன் இளையவன் சாமன், சூரியன், சந்திரன், அக்கினி இவர்களும் வந்து தேவியின் திருவடியில் பொருந்திட, அவள் ஒரே பேரொளியாக நின்றாள்.

#1209. அண்ட முதல்வி ஆடுவாள்


சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி, நின்மலி, நேரிழை,
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே.


சக்தி தேவி இளம் பிறையைச் சூடுபவள்; சுழுமுனை நாடியில் பொருந்திச் சூரியன் , சந்திரன் , அக்கினி தோற்றுவிக்கும் சூலத்தைத் தன் வடிவாகக் கொண்டவள்; கபாலினி, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை நீண்டு செல்லும் கொடி போன்ற சித்திரணி நாடியில் செல்பவள்; நிர்மலமனவள்.
அழகிய பெண், இவள் நடுநாடியாகிய சுழுமுனையில் ஞானம் விளங்குமாறு நடனம் புரிவதால் அண்டத்தில் தலைவி ஆனாள்.
 
#1210. எல்லாம் சக்தி மயம்.

அண்டம் முதல் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை,கோளிகை கண்டத னாலே.


விண் முதல் மண் வரை பரவியும், விரவியும், நிலையாக இருப்பது பொற்குழை அணிந்த காதுகளை உடைய பராசக்தியே ஆவாள். அவளைத் தவிர வேறு எவரும் இல்லை, வேறு எதுவும் இல்லை. அவள் சிவனும் சக்தியுமாக இரண்டு உருவங்கள் ஆனதன் காரணம் ஆண் பெண் கூட்டுறவால் உயிர்களைப் படைப்பதற்காகவே.

#1211. நஞ்சை அமுதாக்கும் நாயகி


ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம்பதம்
சால வந்து எய்தும், தவத்து இன்பம் தான் வரும்,
கோலி வந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏல வந்து ஈண்டி, இருந்தனள் மேலே.


பராசக்தி நஞ்சை உண்ட தன் நாயகனுக்கு அமுதம் ஆனவள்; அவன் அடைந்த பதவியும் அவள் தந்தது; கடின தவம் தரும் சீரிய இன்பமும் அவளே ஆவாள்; அவள் எல்லா ஆதாரங்களின் வழியே சென்றடையும் குவிந்த சுழுமுனையில் பொருந்தி, தலை உச்சியில் சிறந்து விளங்குகின்றாள்.

#1212. வழிபடாது இருந்து அழிந்து விடாதீர்


மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்துஎய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம் நின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுதினள் ஆமத்தி னாளே.


தேவியை வழிபட்டால் மேன்மேலும் பெருகும் நம் செய்யும் மேலான அருந்ததவம். காற்றின் இயக்கத்தால் வாழ்ந்து அழிந்து படும் மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லை. அவர்கள் கண நேரத்தில் அழிந்து போய்விடுவார்கள். தூல உடலில் நான்கு இதழ் தாமரையாகிய மூலாதாரத்தில் நாம் வழிபடும் தேவியே பிறகு தலை உச்சியில் பிரணவமாகத் தோன்றுவாள்.

#1213. நேமத் துணைவி நன்மை செய்வாள்


ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்றிருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.


அன்னமய கோசத்துக்குச் சக்தி உணவுப் பொருளாக இருப்பாள்; ஓம குண்டத்தில் சிவார்ப்பணம் செய்பவருக்கு அங்கே சோதியாக விளங்குவாள். “நான் சிவன் அடிமை” என்று இருப்பவரின் மூலாதாரத்தில் தேவி பொருந்தி விளங்குவாள்.

#1214. கலா மயமாகக் கலந்து நிற்பாள்


நிலாமயம் ஆகிய நீள்படி கத்தின்
சிலாமயம் ஆகும் செழுந்த ரளத்தின்
கலாமயம் ஆகும் கரிகுழல் கோதை
கலாமய மாகக் கலந்து நின்றாளே.


நிலவை ஒத்த வெண்பளிங்கின் நிறத்தினள்; செழுமையான முத்துச் சிலை போன்றவள்; சுருண்ட குழல் போன்ற நடு நாடியில் ஒளிர்பவள். அவள் ஐந்து கலைகளாக அனைத்திலும் கலந்து நிற்பாள்.

ஐந்து கலைகள்:

(1). நீக்கல், (2). நிலை பெறுத்தல், (3). நுகரச் செய்தல், (4) அமைதி ஆக்கல், (5) அப்பால் ஆக்கல்.
 
#1215 to #1219

#1215. கற்பனைக்கு எட்டாதவள்

கலந்துநின் றாள் கன்னி காதல னோடும்
கலந்துநின் றாளுயிர் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

மூலாதாரத்தில் உருத்திரனுடன் குண்டலினி சக்தியாகப் பொருந்தி நிற்பாள்.
சீவராசிகளின் கற்பனைகளுக்கு எல்லாம் அவளே காரணமாக நிற்பாள்.
கலைகளிலும், கலை ஞானங்களிலும் அவளே கலந்து நிற்பாள்.
காலத் தத்துவத்துடன் அவள் பிரியாமல் கலந்து நிற்பாள்.

#1216. மாலினி என்னும் பாலினி


காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்,
மாலினி, மாகுலி, மந்திர சண்டிகை,
பாலினி, பாலவன் பாகம்அது ஆமே.

காலத் தத்துவமாக இருப்பவள்; சீவர்களுக்கு அனேக அனுபவங்களைத் தருபவள்; அன்பர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருளைத் தந்து அனுகூலம் செய்பவள்; பிரிவில்லாத கூட்டணி அமைப்பவள். மாலின் தங்கையாகிய மாலினி, மூலாதாரத்தில் இவள் குண்டலினி; சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள்; சீவர்களைக் காக்கும் பாலினி. அவள் பால் வண்ணச் சிவபெருமானின் ஒரு பாகம் ஆவாள்.

#1217. சக்தியின் அழகிய வடிவம்


பாகம் பராசத்தி, பைம் பொன் சடைமுடி,
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோகமுகம் ஐந்து, முக்கண் முகந்தொறும்,
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.

சிவபெருமானின் உடலில் ஒரு பாகம் ஆவாள் பராசக்தி. பொன்னிறக் கதிர்களே இவள் தலை முடி. உடல் ஒன்று எனினும் திண்ணிய புஜங்கள் பத்து, அழகிய முகங்கள் ஐந்து, ஒவ்வொரு முகத்திலும் கண்கள் மூன்று. இருட்டைப் பிளந்து கொண்டு பிரணவத்தில் ஒளிரும் சிவபெருமானுக்கு இவள் இடப்பாகம்.

#1218. ஆதியும் அவளே அந்தமும் அவளே


நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள; அவை
வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின் றாளே.

ஆன்மாவும் முப்பத்தாறு தத்துவங்களும் ஒன்றாகக் கூடி நின்று செயல்படுகின்றன. அந்தக் கூட்டம் ஐந்து ஐந்தாக சேர்ந்து கொண்டு ஐந்து கூட்டங்களாக விளங்கும். வேதனும் பதினெட்டு கணத்தவரும் மேவி நின்றிடத் தேவி ஆதியும் ஆனாள்! அவளே அந்தமும் ஆனாள்!

ஐந்து கூட்டங்கள்
ஐந்து :
1. பஞ்ச பூதங்கள்
2. பஞ்ச கர்மேந்திரியங்கள்
3. பஞ்ச ஞானேந்திரியங்கள்
4. ஐந்து தன்மாத்திரைகள்
5. கலை, காலம், நியதி, மாயை, புருடன் என்னும் ஐந்து.


#1219. ஆயிழையுடன் ஆகி நின்றான்


ஆகின்ற நாள் கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில், ஆருயிராம் அவள்;
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.


ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் பராசக்தியின் சக்தி பொருந்தி உள்ளது. அந்த எழுத்துக்களின் உயிராக உள்ளவள் சக்தி. இங்ஙனம் எழுத்துக்களுடன் கலந்து நிற்பவளுடன் கலந்து பொருந்தி நின்றான் சிவபெருமான்.
 
#1220 to #1224

#1220. வார் குழலி இனிது நிற்பாள்

ஆயிழை யாளொடும் ஆதி பரமிடம்
ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுள
வாய மனந் தோ றறுமுக மவைதனில்
ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

ஆயிழையும், ஆதிப் பிரானும் சேர்ந்து உறைவது எட்டு இதழ்களைக் கொண்ட அண்டவை என்னும் சக்கரத்தில். உடலின் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி நிற்கும் அன்னை, சாதகனின் உள்ளம் எந்த எந்தக் குறிக்கோளைப் பற்றிக் கொண்டு நிற்கின்றதோ அதற்கு ஏற்ப அருள் புரிவாள்.

#1221. ஓதி உணர்ந்து நிற்பாள்

நின்றனள் நேரிழையோடு உடன் நேர்பட,
இன்றுஎன் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும்,
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுஉயர்வு ஓதி, உணர்ந்து நின்றாளே.


சுழுமுனையுடன் நேர்பட்டுச் சக்தி அன்னை என்னுள் மேல் நோக்கியபடி நின்றாள். அதனால் உயிர் மூச்சு ஏழு ஆதாரச் சக்கரங்களின் வழியே உந்தப்பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதனால் சகசிரதளம் நன்கு விளங்கியது. ஒன்பது வாயுக்கள் மேல் நோக்கிச் செல்வது உயர்ந்தது என்று எனக்கு அன்னை அறிவித்தாள். தானும் அவற்றோடு பொருந்தி நின்று மேல் நோக்கிச் சென்றாள்.

#1222. ஊர்த்துவ உயிர்வளி சிவனின் காதலி!


உணர்ந்து எழு மந்திரம் ‘ஓம்’ எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்;
குணர்ந்து ஏழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்து எழும், காணும் அக் காமுகை யாமே.

மேல் நோக்கி எழும் உயிர் மூச்சு, ‘ஓம்’ என்னும் பிரணவத்துடன் சேர்ந்து எழுவது வீடுபேறு அடைகின்ற நெறியாகும். அப்போது சிவத்தை நோக்கிச் செல்லும் சக்தி, சீவனுடன் சேர்ந்து மேலே எழும்பும். இந்த நிலை ஒரு காதலனைத் தேடி ஒரு காதலி செல்வதற்கு சமமாகும்.

#1223. கோதை கோதண்டம் ஆவாள்


ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்,
மாமது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன்; சிகை அங்கு இருண்ட இடம்
கோமலர்க் கோதையும் கோதண்டம் ஆகுமே.


மேல் நோக்கிய சகசிரதளத்தில் ஆதி சக்தி, மகேசுரன், வாயு, கதிரவன், சந்திரன் அக்கினி என்பவை திகழும் இடம். சிகை என்னும் மந்திரம் உடலறிவைக் கடந்து செல்லும் போது இருண்டு போய்விடும். அப்போது பராசக்தியும் இறைவன் உறையும் வீணாத் தண்டினில் விளங்குவாள்.

சிகை எனும் அங்க மந்திரம் கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிரதளத்துக்கு உரியது.

நிமிர்ந்த விட்ட சகசிரதளத்தில் சிகை என்னும் அறிவு இருண்டு போய் விடும்.


#1224. ஐந்தொழில் புரிபவள்


ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிவிடும்;
ஆகும் பராபரை யோடுஅப் பரைஅவள்
ஆகும் அவள் ஐங்கருமத்தன் தானே.


மனோன்மணி நடுநாடியாகிய சுழுமுனையில் விளங்குபவள். ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் அவள் அடங்குபவள்; பெரிய அறிவும், பெரிய ஆற்றலும் கொண்ட சக்தி தேவியே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் புரிகின்றாள்.
 
I AM HAPPY WITH THE INCREASED TRAFFIC IN THIS THREAD. :pray2:

In the past 24 hours the number of visits is 384.

One good deeds deserves another.

The Fifth Thanhiram of Thirumanthiram has been launched yesterday.

Here is the link to the new blog.

https://veeveeare.wordpress.com/

Since I have already written and typed the fifth and sixth thathiram the blogs will take shape fast.

I am working on the Seventh thanthiram now.

The progress has been intermittent due to several unavoidable reason.

However I shall try to keep the tempo as usual.

Thank you for your continued support to Classic poetry and Saivite philosophy! :)
 
#1225 to #1229

#1225. சீவனில் விளங்குவான் சிவன்

தான் நிகழ் மோகினி, சார்வான யோகினி
போன மயம் உடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தான்ஆம் பரசிவ மேலது தானே.


தானாக வந்து விருப்பத்தை ஏற்படுத்துபவள் மோகினி. விருப்பத்தின் பயனை அளிப்பவள் யோகினி. பராசக்தியின் மீது அன்பு கொண்டவர், மோகினியையும் யோகினியையும் கடந்து சென்று விடுவார். அவர் சக்தியின் வயப்பட்டு அவள் மயமாகவே மாறி அவள் திருவடிகளைப் போற்றுவார். அவர் சீவனில் சிவன் விளங்குவான். அவனே பரமசிவன் என்று அறியப்படுபவன்.

#1226. பிரணவ நெறி என்பது எது?


தான்அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி அம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறுஅது
ஆனவை ஓம்எனும் இவ்வுயிர் மார்க்கமே.


மோகினியாகிய பராசக்தி, உடலில் தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில், பொன்னொளியில் விளங்கும் சிவத்துடன் தானும் விளங்குவாள். மோன நிலையில் அவள் நமக்கு கூறுவது சீவன் சென்று அடைய வேண்டிய ‘அ’கர,’ உ’கர, ‘ம’கர, விந்து, நாதங்கள் பொருந்திய பிரணவ வழிபாடு ஆகும்.

#1227. வாக்கும் மனமும் ஒன்றிட வேண்டும்


மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி, மங்கலி,
யார்க்கும் அறிய அரியாள் அவள் ஆகும்;
வாக்கும், மனமும் மருவி ஒன்றாய்விட,
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே


உலகத்தோரை உய்விப்பதற்காகச் சமய நெறிகளை வகுத்துத் தந்தவள் சக்தி தேவி. அவள் தன் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்கும் மங்கலி. அவள் எவராலும் அறிந்து கொள்வதற்கு அரியவள் ஆவாள். வாக்கும், மனமும் மருவி ஒன்றாகி விட்டச் சீரிய மனிதரின் சிறந்த நுண்ணறிவில் அவள் விளங்குவாள்.

#1228. சன்மார்க்கம் சிவகதி தரும்


நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப்
பின்அறிவு ஆகும் பிரான் அரிவத் தடம்
செல்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.


கூர்மையான புலன்களின் உதவியுடன் நாம் பெறும் நுண்ணிய அறிவுக்குக் காரணம் சிவன் அந்தக் கருவிகளுடன் பொருந்தி இருப்பதே ஆகும். இது பின் அறிவு என்று கூறப்படும். கருவிகளைத் துறந்துவிட்டு, அவற்றிம் உதவி இன்றிச் சிவனுடன் பொருந்தி நாம் பெறும் அறிவே செந்நெறி எனப்படும். சிவகதி அடைவதே ஆத்மா பெறவேண்டிய சிறந்த நெறியாகும். அதை அடைவதற்கு உதவுவதே சன்மார்க்க நெறியாகும்.

#1229. சக்தியே சன்மார்க்க தேவி


சன்மார்க்கம் ஆகும் சமைதரும் மார்க்கமும்;
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்;
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி ஆவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.

உயர்ந்த குறிக்கோளில் பொருந்திய நெறி சன்மார்க்கம். இது துர்மார்க்கத்தைத் துரத்திவிடும். நல்ல நெறி வழி நடக்கும் போது நல்ல ஒழுக்கம் வளரும். அத்தகைய நல்ல நெறிகளை நமக்குக் காட்டுபவள் சக்தி தேவியே ஆவாள்.
 
#1230 to #1234

#1230. சிவசக்தியர் நடுவில் இருக்க வழி

சத்தியம் நானும் சயம்புவு மல்லது
முத்தியை யாரு முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடி லத்தி பழுத்தக்கான்
மத்தியி லேற வழியது வாமே.


சிவனும், சக்தியும், ஆன்மாவும் அறியாத வண்ணம் ஒரு சீவன் முத்திடைவது என்பது சாத்தியமே இல்லை. சீவன் பிரணவத்தின் மேல் அரை மாத்திரை ஸ்வரமாகிய ‘ம’கரத்தை இட்டு ஓத வேண்டும். அது கனிந்து பக்குவம் அடைந்தால், அந்த சீவனுக்குச் சிவசக்தியரின் நடுவில் இருக்க வழி கிடைக்கும்.

#1231. விதியை வெல்லலாம்


அது இது என்று அவமே கழியாதே
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளைப்
பதி அது மேவிப் பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே.


“அது சிறந்து, இது சிறந்தது” என்று மயங்கி ஒரே நெறியில் நில்லாமல் காலத்தை வீணே கழியாதீர். இன்பம் தரும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியைச் சிரசில் இருக்கும் சிவத்துடன் பொருத்துங்கள். அங்கு சந்திர மண்டலத்தில் பெருகும் அமுதத்தைப் பருகும் திறனை அடையுங்கள். அப்போது அருள் வழியில் நிற்கும் நீங்கள் விதியையும் வெல்லும் வல்லமை பெறுவீர்கள்.

#1232. வென்று விட முடியும்


வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதான் மெய்யுணர் வோர்க்கே.

வெற்றியின் மங்கையாகிய சக்தி தேவியை மெய்யாக உணர்ந்து கொண்ட ஒருவரால் விதியை வெல்ல முடியும்; இரு வினைகளையும், வினைப் பயன்களையும் வெல்ல முடியும்; சீவனை அல்லற்படுத்தி ஆட்டிப் படைக்கும் ஐம் புலன்களையும் வெல்ல முடியும்.

#1233. பரம் பொருள் இதுவே


ஓர்ஐம் பதின்மருள் தோன்றியே நின்றது
பாரம்பரியத்து வந்த பரம் இது;
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம் இது; சத்தியம் ஆமே.

பாரம்பரியமாக வந்த பரம்பொருள் ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் தோன்றி நின்றது. காமச் சுவையைத் தந்து விந்து நீக்கத்தைச் செய்யும் குண்டலினியும் அவள் பதியகிய சிவனும் சாருமிடம் இது என்பது சத்தியம்.

#1234. வித்து இன்றியே விளையும்


சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்துஅது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்து – அது மேவித் திரிந்திடுவாரே.

சக்தியுடன் சிவன் சேரும் போது மூலப் பொருட்களின் தேவையில்லை. வெறும் சங்கற்பத்தாலேயே எல்லாப் பொருட்களும் தோன்றிவிடும். அத்தகைய ஐம்பத்தொரு எழுத்துக்களும் சீவனின் அறிவில் பொருந்தும் போது அந்த சீவனின் கருத்துக்கு ஏற்ற பிரபஞ்சம் ஒன்று உருவாகும்.
 
#1235 to #1239

#1235. அமுதூற அமைவாள்

திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த,
அருந்திட அவ்இடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே.


சிவனும், சக்தியும் வானவர்கள் வந்து வழிபட்டுப் போற்றிடும் வண்ணம் சந்திர மண்டலத்தில் அமைவர். அவர்கள் இருக்குமிடம் ஓர் அரிய அமுத ஊற்றாகும். இளம் பிறை போல இருப்பாள் தேவி அங்கே.

#1236. சோதி நிற்பாள்


என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு,
மன் தரு கங்கை, மதியொடு, மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே.


மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் எழுச்சியை உடையவர்கள் சக்தி தேவியின் தன்மையைப் பெறுவார்கள். ஒளி குறையாத சந்திர மண்டலத்தில் மாதவம் செய்யும் முனிவர்களின், ஆன்ம ஒளியான சோதியாகவும் சக்தி நிற்பாள்.

1237. ஞானங்கள் தோன்றிடும்


நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும், ஞானங்கள் தோன்றிடும் தானே.

அங்ஙனம் நிற்கின்ற சக்தியுடன் சந்திர மண்டலத்தின் ஒளியில் பொருந்தி இருந்தால், அந்த உயிர்களின் சிந்தையில் அதுவரையில் மறைந்திருந்த, அவர்களுக்குத் தேவையான ஞானங்கள் தாமே வெளிப்படும்.

#1238. ஆன்மா சக்திதேவியை அறியும்


தோன்றிடும் வேண்டு உருஆகிய தூய்நெறி,
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை,
மான்தரு கண்ணியம் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம்அவள் ஆயுமே.

விரும்பிய உருவத்தை அடைவதற்கான ஒரு நல்ல வழி தோன்றும். பல கலைஞானங்கள் பராசக்தியின் அருளால் கிடைக்கும். மான் விழி கொண்ட சக்தி தேவியும், மன்மதனை நிகர்த்த பரமசிவனும் ஆன்மாவுக்கு எதிரில் தோன்றுவர். ஆன்மாவிடம் சிறிதும் பேதம் இன்றித் தாம் இருப்பதை உணர்த்துவர்.

#1239. அடையும் பொருளும்
அவளே, அடையும் வழியும் அவளே.

ஆயும் அறிவும் கடந்தஅணு வாரணி
மாயம் அது ஆகி, மதோமதி ஆயிடும்
சேய அரிவை, சிவானந்த சுந்தரி,
நேயமதா நெறியாகி நின்றாளே.


அவள் தன்னை ஆராய்கின்ற அறிவின் திறனைக் கடந்தவள்; அவள் அணுவுக்கு அணுவானவள். அவள் சீவனை மயக்கும் மாயையாக இருந்து மிகுந்த களிப்பினை எய்துபவள்; அவள் சிவந்த ஒளியில் விளங்கும் தேவி; அவள் சிவனுக்கு ஆனந்தம் தரும் அழகிய பெண்மணி. ஆன்மா அடைய வேண்டிய பொருள் அவளாகி, அதை அடைவிக்கும் வழியாகவும் அவளே ஆகி நின்றாள்.
 
#1240 to #1244

#1240. அறிவு செறிந்த சமாதி

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிப் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.


நெறியாக நிற்கும் பராசக்தியைப பிரிவின்றிச் சிவனோடு வழிபடுபவருக்கு அறிவு குன்றாத உயர்ந்த சமாதி நிலை கிடைக்கும்.

#1241. மாமயம் எய்தலாம்


ஆம் அயன் மால் அரன் ஈசன் மாலாங்கதி
‘ஓம்’ மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேம்மயன் நாளும் ‘தெனாதென’ என்றிடும்
மாமய மானது வந்து எய்தலாமே.


நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ஆன்மாவுக்கு மயக்கத்தைத் தரும் நிலையில் உள்ளனர். பிரணவ வடிவான சிவத்தில் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்ற ஒன்பதின்மரையும் ஒடுக்கி விட்டால், அதன் பின்னர் தேனை அருந்திக் களிக்கும் வண்டைப் போல நாமும் சிவசக்தியின் உருவமாகும் மாமயத்தை அடையலாம்.

#1242. வந்தனை செய்யும் வழி


வந்துஅடி போற்றுவர் வானவர் தானவர்,
இந்து முதலாக எண்திசை யோர்களும்
கொந்துஅணி யும்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில் வீரே.


பூங்கொத்தினைக் குழலில் அணியும் சக்தி தேவியையும், அவள் கோனாகிய சிவபெருமானையும் சகசிரதளத்தில் இருத்தி வழிபடும் நெறியை உலகுக்கு உரைப்பீர். அங்ஙனம் உரைத்தால் இந்திரன் முதலான எட்டு திசைக் காவலர்களும் பிற வானவர்களும் தானவர்களும் வந்து உங்களை வணங்கி நிற்பர்.

#1243. சக்தி வழிபாடு சிவத்தையும் சென்று சேரும்


நவிற்றும் நல் மந்திரம், நன் மலர், தூபம்
கவற்றிய கந்தம், கவர்ந்து எரி தீபம்,
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே.

நவில்கின்ற நல்ல மந்திரங்களும், நல்ல மணமலர்களும், மணம் கமழும் தூபமும், பிற நறுமணப் பொருட்களும், இருளை அகற்றும் தீபமும் கொண்டு செய்கின்ற தேவியின் பூசை வேள்வியில் இடும் அவியை ஏற்கும் அண்ணலுக்கும் ஓர் அர்ச்சனையாக அமையும்.

#1244. பராசக்தியைப் போற்றுக


தாங்கி உலகில் தரித்த பராபரன்,
ஓங்கிய காலத்து ஒருவன், உலப்பு இலி,
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.


சக்தியைத் தன் உடலின் ஒரு பக்கத்தில் தாங்குகின்றான் சிவன். அத்துடன் அவன் உலகத்தையும் தாங்குகின்றான். ஆயினும் அவள் தரும் மேன்மையால் அவன் நிகரற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கின்றான். சுருண்ட கூந்தலை உடைய சக்தி அழகிய கிளியை ஏந்தியுள்ளாள். சிவனைத் தன் உடலில் ஒரு பக்கத்தில் கொண்டதால் அவளை நன்கு வழிபடுக.
 
#1245 to #1249

#1245. சக்தியைத் தொழுபவரைப் பிறர் தொழுவர்

பொற்கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்,
நற்கொடி மாதை, நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.


உமை ஒரு கரிய கொடி போன்றவள்; அன்பர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள்; முக்கண்களை உடைய நல்ல மாது, வில் போன்ற புருவங்களின் நடுவில் உள்ள ஆக்ஞை சக்கரத்தில் விளங்கும் அவளை மாறாத அன்புடன் வழிபடுபவர்களை, உலகத்தில் உள்ள பிற அழகிய பெண்கள் வந்து தொழுது நிற்பர்.

#1246. முயன்றால் ஆற்றலை மாற்றலாம்


விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பராசக்தி துங்கு இருள் நீங்கக்
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம், ஒன்று தொடரே.


ஒளி வீசும் மூலாதாரச் சக்கரத்தின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாமல், மாலையைப் போலப் பின்னிப் பிணைந்துள்ள சக்கரங்களின் வழியே மேல் நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு மூலாதாரத்தில் ஏற்படும் அசைவினை வாய் வழியாகப் பேசாமல் கழுத்தில் உள்ள உண்ணாக்கின் வழியாக மூளைக்கு அனுப்ப வேண்டும். அங்கு அது தன் அதிர்வினை ஏற்படுத்தும். இவ்வாறு முயன்று நம் ஆற்றலை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

மூலாதாரத்திலிருந்து மேலே எழும் அசைவு தொண்டையில் வாய்ச் சொற்களாக மாறும். சொற்களைப் பேசாமல் மனதில் நினைத்தால் அவை சிரசுக்குச் சென்று அங்கு சிறு அதிர்வை ஏற்படுத்தும். இதுவே நுண்மையாகச் சிரசைக் கடந்து செல்வது எனப்படும்.


#1247. ஓர் உரு ஆவர்


தொடங்கி உலகினில், சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை ;
விடம் கொள் பெருஞ்சடைமேல் வருகங்கை
ஒடுங்கி, உமையொடும் ஓர் உரு ஆமே.


சோதி மாயமான சக்தியின் மணாளன் ஏன் எனக்குள் அடங்கி இருகின்றான்? அது என் அன்பின் பெருமையால் மட்டுமே. விந்துவைக் காமக் கழிவுகளைச் செய்து வீணாக்காமல் மேலே கொண்டு சென்று சிரசை அடைந்தால், அங்கு பொங்கி வரும் கங்கை போன்ற ஒளி வெள்ளத்தில் சிவசத்தியர் பிரிவின்றி ஓர் உரு ஆவர்.

#1248. புரிவளைக் கைச்சி


உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்
புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.


இறைவன் எல்லா உயிர்களையும் தன் வடிவாகக் கொண்டவன். இவ்வாறு அவன் எல்லா சீவன்களிலும் பொருந்தி வெளிப்படுவது ஏன்? உண்மையை ஆராய்ந்தால், ஒலிக்கின்ற வளையல்களை அணிந்த சக்தி தேவியைச் சிவன் மகிழ்வுடன் பொருந்தி இந்த உலகைப் படைத்தான் என்று கூறுவது வெறும் உபசார வார்த்தைகளே.

#1249. உடலில் உறைபவன் சிவன்


மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடித்
தாயம் புணர்க்கும் சலம் தீ அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.


மாயை ஆகிய சக்தியைப் பொருந்துபவன் சிவன். ஒளிமண்டலத்தில் அவன் திருவடிகளுடன் தொடர்பு கொண்ட சீவன்கள் உள்ளன. அவனே தன் கலப்பினால் அந்த சீவன்களின் மேனியைப் படைப்பான். அவனே அவற்றில் பொருந்தி அவற்றைச் சக்திக் கூட்டத்துடன் இணைத்து வைப்பான்.
 
#1250 to #1254

#1250. அருளைப் பெறலாம்

உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனைப்
புணர்ந்து ஒழிந்தேன் புவனபதியாரை;
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி தன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே.

“நான் சிவனிலிருந்து வேறுபட்டவன் அல்லன்” என்பதை நான் உணர்ந்து அறிந்தேன். என் தனித்துவத்தை விட்டு விட்டுச் சிவனுடன் நான் ஒன்றியபோது நான் பரந்த நிலையை அடைந்தேன். சிவனின் தொடர்பினைப் பெற்ற பின்னர் கீழே உள்ள உலகத் தொடர்புகளை நீக்கினேன். ஆதி சக்தியின் அடிகளைப் பற்றி அவள் அருளைப் பெற்று உலக பந்தம் நீங்கி இறைவனுடன் கூடினேன்.

#1251. கற்றதன் பயன் இறைவனைப் பற்றுவதே


பெற்றாள் பெருமை, பெரிய மனோன்மணி
நற்றாள், இறைவனே நற்பயன் என்பர்,
கற்றான் அறியும் கருத்து அறிவார்கட்குப்
பொற்றாள் உலகம் புகழ் தனி ஆமே.

நவ சக்தியரில் முதன்மையானவள் மனோன்மணி. அவள் அடிகளைப் பற்றியவர் கூறுவர் இறைவனின் அடிகள் அழிவற்ற நல்ல பயனைத் தரும் என்னும் உண்மையை. ஒருவர் கற்ற கல்வியின் பெரும் பயன் சிவன் திருவடியாகிய பொன்னுலகத்தில் சென்று புகுவதே.

#1252. கனியாய் நினைவது எதனால் அம்மையே?


தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியால் மலர்ந்தவை போதுகை ஏந்திக்
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே ?

தனித் தன்மை வாய்ந்த தன் தலைவன் சிவனோடு என் உள்ளாத்தில் விரும்பி உறையும் இனிய சக்தியின் தேவியின் இருப்பிடங்கள் ஏழு உலகங்கள் என்பர். பனி மண்டலத்தைப் போன்ற சகசிர தளத்தில் இருக்கும் என் அம்மையே! நீ என்னைக் கனிவுடன் நினைப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குக் கூறுவாய்!

#1253. மனோன்மணியும், குண்டலினியும்


அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து, திரு மங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே.

ஏழாவது உலகமாகிய சகசிர தளத்தில், நல்ல வீட்டுலகை உருவாக்கி, அங்கு நல்ல ஞானச் செல்வியாக உறைந்து இருப்பாள் மனோன்மணி. இந்த உலகில் நாம் எடுத் உடலைப் பக்குவப் படுத்தி மேலே சகசிரதளத்துக்குக் கொண்டு சென்ற குண்டலினி சக்தியும் அங்கே அவளுடன் இருப்பாள்.

#1254. அம்மையும் அத்தனும்


அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை;
அம்மையோடும் அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மையோடு அத்தனை யான் புரிந் தேனே.


என்னை பெற்ற தாயும் தந்தையும் தாம் கொண்ட காதலால் உறவு கொண்டனர். அவர்கள் என்னைப் பெற்றவர்கள் ஆயினும் அவர்கள் என்னை அறிந்ததில்லை. சிவனும், சக்தியும் எப்போதும் என் ஆன்மாவுடன் ஒன்றி இருந்து என்னை நன்கு அறிந்து கொண்டவர்கள். என்னை விட்டு எப்போதுமே பிரியாத அந்த அம்மையையும் அத்தனையும் வணங்கி நான் உய்வடைந்தேன்.
 
9. ஏரொளிச் சக்கரம்

9. ஏரொளிச் சக்கரம்
ஏர் ஒளிச் சக்கரம் = எழுச்சி கொண்டு உடலில் மேல் முகமாக நோக்கும் ஒளி வடிவான சக்கரம்.
மூலாதாரத்தில் உள்ள அக்கினி எலாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு பரந்து ஒன்றாகி நிற்பது.


#1255 to #1259

#1255. மையத்தில் தீ மயமான சிவன்

ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்;
ஏர் ஒளி விந்துவினால் எழுநாதமாம்;
ஏர் ஒளி அக்கலையெங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கர அந்நடு வன்னியே.


மூலாதாரத்தில் தோன்றி எழும் ஒரு நான்கு இதழ்த் தாமரை. அது ஒளி மிகுந்தது. தூல விந்து மாற்றம் அடைந்து மேலே எழுந்து சிரசை அடையும் போது அதன் ஒளி சிரசில் நாதமாக மாறிவிடும். அதன் கலை முழுவதுமாக எழுந்த பிறகு அதன் மையத்தில் தீ வடிவாகச் சிவம் விளங்கும்.

#1256. சிரசில் அமையும் சக்கரம்


வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன;
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின;
வன்னி எழுது அவை மாபெருஞ் சக்கரம்,
வன்னி எழுத்து இடுவாறு அது சொல்லுமே.


மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்த் தாமரையில் உள்ள நான்கு எழுத்துகள் ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’. அவை வானளாவி ஓங்கி நிற்பவை. அவை அங்கு வலிமை வாய்ந்த சக்கரமாக அமைகின்றன. அதை நான் இப்போது கூறுவேன்.

#1257. நூற்று நாற்பத்து நான்கு சக்திகள்


சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்;
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத்து ஆவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நால் உரு
சொல்லிடு சக்கரமாய் வரும் மேலதே.


வீரியமாகக் கீழே இருந்த விந்து மாற்றி அமைக்கப்படும் போது பன்னிரண்டு கலைகளைக் கொண்ட கதிரவனாகச் சிரசில் விளங்கும். மூலாதாரத்தில் இருந்த அக்கினியாகிய ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’ என்னும் நான்கும் மூலாதாரத்தில் இருந்து இடைகலை , பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளின் வழியே மேலே செல்லும். அவை அங்கு நூற்று நாற்பத்து நான்கு சக்திகளாக மாறித் தலையின் வட்ட வடிவத்தில் அமையும்.

#1258. பூமித் தத்துவம்


மேல்வரும் விந்துவும் அவ்வெழுத்து ஆய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத்தே வரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.


மேல் நோக்கி வரும் விந்துவும் ‘அம்’ என்ற அந்த எழுத்து ஆகிவிடும். அதை விளக்கச் சந்திர மண்டலம் தலை மேல் அமையும். அதன் ஒளியுடன் அங்கு நாதமும் ஓங்கி நிற்கும். தலயின் மேல் சந்திர மண்டலம் சிறப்பாக அமைந்து விட்டால் அங்கு பூமித் தத்துவம் நுண்மையாக அமையும்.

#1259. நுண்மையே பருமையாக மாறிவிடும்


ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்;
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்;
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை;
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.


மேலே விளங்குகின்ற நூற்று நாற்பத்து நான்கு அறைகளையுடைய மண்டலமே உலகமாக விரிவடையும். அதில் விளங்குகின்ற நாதமே உலகமாக விரிவடையும். அது இறைவனின் சங்கற்பத்தால் உலகமாக விரிவடையும். சூரிய சந்திர மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒலியே இந்தப் பருவுலகமாக விரிவடையும்.
 
#1260 to #1264

#1260. நிலமும், நீரும் தோன்றும்

விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்;
விரிந்த எழுத்து அது சக்கரமாக;
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தில் அப்புறம் அப்பே.


அகரக் கலை முதலில் விரிவடைந்து விந்துவாகவும், நாதமாகவும் விளங்கும். அதில் உள்ள சக்கரம் விரிவடையும் போது நிலத் தத்துவம் தோன்றும். அதன் பின்னர் அது மேலும் விரிவடையும் போது நீர்த் தத்துவம் தோன்றும்.

#1261. தீயும், வளியும், வெளியும் தோன்றும்


அப்புஅது வாக விரிந்தது சக்கரம்,
அப்பினில் அப்புறம் அவ்வனல் ஆயிடும்,
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ,
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.

அந்தச் சக்கரம் நீராக விரிவடைந்தது. அந்த நீர்த் தத்துவத்தில் இருந்து அதன் பிறகு தீயின் தத்துவம் தோன்றியது. தீயின் தத்துவத்தில் இருந்து காற்றுத் தத்துவமும், காற்றுத் தத்துவத்தில் இருந்து வான் தத்துவமும் தோன்றின.

#1262. சிவானந்தம் தரும்


ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்,
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்து அவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச சக்கரம் ஆவது அறிமினே.


வானத் தத்துவத்துக்கு உரிய எழுத்துப் பற்றி சொல்ல வேன்டும்மென்றால், வானத் தத்துவத்தின் பீஜ எழுத்து அகரக் கலையாகும். அது மாறாத சிவானந்தத்தைத் தரும் என்று அறிவீர்!

விளக்கம்


நிலத் தத்துவத்துக்கு உரிய எழுத்து ……..ல

நீர்த் தத்துவத்துக்கு உரிய எழுத்து……….வ

தீத் தத்துவத்துக்கு உரிய எழுத்து………..ர

காற்றுத் தத்துவத்துக்கு உரிய எழுத்து….. ய

வானத் தத்துவத்துக்கு உரிய எழுத்து……..அ



#1263. எப்போது சிவம் விளங்கும்?


அறிந்திடும் சக்கரம் ஐ யஞ்சு விந்து;
அறிந்திடும் சக்கரம் நாதம் முதலா;
அறிந்திடும் அவ்வெழுத்து அப்பதி யோர்க்கும்;
அறிந்திடும் அப்பகலோன் நிலையாமே.


இந்தச் சக்கரத்தில் பத்து ஒளி வட்டங்கள் அமைந்துள்ளன. இதை நாதத்தை முதலகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் அதன் தலைவன் அமைந்திருப்பான். இவை அனைத்தையும் கடந்து சென்றால் அங்கே சிவ சூரியனைக் காணலாம்.

பத்து ஒளி வட்டங்கள் இவை:


(1). மூலாதாரம், (2). சுவாதிஷ்டானம், (3). மணிபூரகம், (4). அநாஹதம், (5). விசுத்தி, (6). ஆக்ஞை, (7) கதிரவன், (8). திங்கள், (9). தீ, (10). நாள்மீன்


#1264. ஆத்ம சோதி மண்டலம்


அம்முத லாறுமவ் வாதி எழுத்தாகும்
அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்
இம்முதல் நாலு மிருந்திடு வன்னியே
இம்முத லாகும் எழுத்தவை யெல்லாம்.


முதல் ஆறு சக்கரங்களில் இருப்பது ஆதி எழுத்தாகிய பிரணவம். இது சக்தி தேவிக்கு உரியது. இவற்றுக்கு மேலே அமைந்துள்ள நான்கு சக்கரங்களில் கதிரவனும், திங்களும், தீயும், நாள்மீனும் சேருவதால் அவை அமைப்பது ஆத்ம சோதி மண்டலம் ஆகும். எழுத்து வடிவானவை அனைத்தும் இந்த ஆத்மசோதி மண்டலத்தில் இருந்து தோன்றுகின்றன.
 
#1265 to #1269

#1265. முதலும் முடிவும் ஆனவை

எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்து அவை ஆறு அது, அந்நடு வன்னி
எழுத்து அவை அந்நடு, அச்சுடர் ஆகி,
எழுத்து அவை தான் முதல், அந்தமும் ஆமே.


மூலாதாரம் முதலான சக்கரங்கள் நூற்று நாற்பது நான்கு கலைகளாக விரிவடையும். ஆறு ஆதாரங்களிலும் தோன்றி எழுவது அக்கினி நாடி. அதனால் அக்கினி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களின் முதலாகவும் விளங்கும். அவையே மேலே சென்று சிரசைக் கடந்து செல்லும் போது முடிவானவையாகவும் அமையும்.

#1266. நாதத்தைக் கடந்தால் சிவத்தை அடையலாம்


அந்தமும் ஈறு முதலா னவை அற,
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்த பின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.


அந்தத்தில் உள்ள எழுத்துக்களும், முதலாகிய தூலமும், முடிவாகிய சூக்குமமும் நீங்கும் இடத்தில் விசுத்திச் சக்கரமும் ஆக்ஞை சக்கரமும் முடிவடைகின்றன. விசுத்தியில் உள்ள பதினாறு எழுத்துக்களையும், ஆக்ஞையில் உள்ள இரண்டு எழுத்துக்களையும் கடந்து செல்ல வேண்டும். பதின்மூன்றவதுஎழுத்தாகிய ‘ஓ’ காரத்தில் அமைந்த பின்னர் அதற்கு மேல் உள்ள மண்டலத்தைக் கடப்பதே முடிவு எனப்படும். எனவே நாதத்தைக் கடந்து மேலே சென்றால் சிவத்தைக் காணலாம்.

#1267. கதிரவன் வருகையால் நாட்கள் உண்டாகும்


ஆ இனம் ஆனவை முந்நூற்றறுபதும்
ஆ இனம் அப்பதினைந்து இன மாய்உறும்;
ஆ இனம் அப்பதினெட்டுடனாய் உறும்;
ஆ இனம் அக்கதி ரோன்வர வந்ததே.


முன்னூற்று அறுபது நாட்கள் ஒரு ஆண்டு ஆகவும்; பதினைந்து நாட்கள் ஒரு பட்சம் ஆகவும்; ருதுக்கள் ஆறு ஆகவும், மாதங்கள் பன்னிரண்டாகவும் அமையும். இவை அனைத்தும் தோன்றுவது சிவக் கதிரவன் உதிப்பதால் தான்.

#1268. ஓரைகள் அமையும் விதம்


வந்திடும் ஆகாசம் ஆறுஅது நாழிகை,
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும்
வந்திடும் நாள் அது முன்னூற் றறுபதும்
வந்திடும் ஆண்டு, வகுத்துரை அவ்வியே.


பகல், இரவு காலங்களில் ஐம்பெரும் பூதங்கள் முறையே ஆறு ஆறு நாழிகைகள் நீளும். ஓரை என்னும் ராசியும் முப்பது கலைகளாக அமையும். முந்நூற்றறுபது கலைகள் ஓராண்டில் அமையும். இதிலிருந்து கதிரவனின் பன்னிரண்டு ராசிகளைக் கணக்கிட முடியும்.

#1269. கதிரவனின் வீதிகள் மூன்று


அவ்இனம் மூன்றும் அவ்ஆடு அதுவாய் வரும்;
எவ்வினம் மூன்றும் கிளர் தரும் ஏரதாம்,
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டுஅது ஆம்;
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.


ஓரைகள் மூன்று வகைப்படும். கதிரவனின் வீதிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1). மேட வீதி (இடபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நான்கும் அமைந்திருக்கும் )

(2). இடப வீதி (கன்னி, துலாம், மீனம், மேடம் என்ற நான்கும் அமைந்திருக்கும்)

(3). மிதுன வீதி(விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் என்ற நான்கும் அமைந்திருக்கும்)
 
#1270 to #1274

#1270. ராசியினுள் இருக்கும் ஒளிமயமான சக்கரம்

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்,
இராசியுள் சக்கரம் என்றுஅறி விந்துவாம்;
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே.


சிரசில் உள்ள சகசிரதளம் கதிரவனின் வீதியாகும். அது ஒளி மயமாகிய விந்துவினால் நிறைந்து விரிவடையும். அதனுடன் நாதத்தின் இயக்கமும் ஒத்தபடி அமைந்திடும் போது, அதுவரையில் கவிழ்ந்து இருந்த சகசிரதளம் நிமிர்ந்து நிற்கத் தொடங்கும்.
விளக்கம்:

சிரசில் உள்ள சகசிரதளம் இராசியாகும் சக்கரம் உடலில் உள்ளது. உடலில் உள்ள ஆறு ஆதாரங்களும் காரியப் பகுதிகள் எனப்படும். விந்துவின் இயக்கத்துக்கும், நாதத்தின் இயக்கத்துக்கும் ஏற்றபடி சகசிரதளம் மெல்ல மெல்ல மென்மை அடையும். அது மென்மை அடைந்த பிறகு அதில் ஏற்படும் அசைவும், ஒளியும் சாதகனின் முயற்சிக்கு ஏற்ப அதிகரிக்கும். இவை சிரசைத் தாண்டிய பிறகு கவிழ்ந்திருந்த சகசிரதளம் மேல் நோக்கி நிமிர்ந்துவிடும்.


#1271. ஆன்மா தாரகை ஆகிவிடும்


நின்றிடும் விந்து என்று, உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்;
நின்றிடும் அப்பதி அவ் எழுத் தேவரின்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே.


அக்கினி, கதிரவன், திங்கள் கண்டங்களுக்கு உரிய எழுத்துக்கள் தத்தம் தன்மைக்கு ஏற்ற அசைவுகளைக் கீழே தூலத்திலும் மேலே சூக்குமத்திலும் ஏற்படுத்தும். இந்த அசைவுகள் அந்த மூன்று மண்டலங்களைச் சீராக வளர்த்து வரும். சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள் வளர்ந்து ஒளிமயமாகி நிறைவடையும் போது ஆன்மா ஒரு தாரகை போல ஒளிரும்.

#1272. ஆன்ம அறிவாக விளங்கும்


தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திர னற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.


ஒளிரும் சகசிரதளம் நாள் மீன்களின் ஒளியாக ஆயிற்று. இந்த நாள் மீன்களின் ஒளிக்கு மேலே சிவம் என்னும் ஒரு பேரொளிப் பிழம்பு இருக்கின்றது. இந்த நாள் மீன்களின் ஒளியே, கதிரவன் தந்த அறிவுடனும், சந்திரனும் தந்த அறிவுடனும் கலந்து ஆன்ம அறிவாக விளங்கும்.

#1273. தீக் கொழுந்தும், காரொளியும்!


கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மே லெழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்தன வொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே.


இங்ஙனம் ஒளி வளர்ந்து சக்கரம் அமைந்திடும். ஒளிக்குப் புற எல்லையில் நாதமும் அமைந்திடும். தீபத்தைப் போன்ற தீக்கொழுந்தை அடுத்து சக்தி தேவியின் காரொளியும் காணப்படும்.

#1274. அண்டகோசமும் ஒளிமயமாதல் வேண்டும்


காரொளி அண்டம் பொதிந்தது உலகு எங்கும்
பார்ஒளி, நீர்ஒளி, சார்ஒளி, கால்ஒளி,
வான்ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர்ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே.

உலகு எங்கும் சூழ்ந்து உள்ள அண்டமே ஒவ்வொரு உயிரையும் சூழ்ந்து உள்ளது. ஐம்பெரும் பூதங்கள் ஊழியின் முடிவு வரையில் மாறாமல் நிலையாக உள்ளன. இதைக் காணும் போது சீவர்களின் மூலம் ஆவதும் இந்த அண்டகோசமே என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒளிமயமாவது அண்டங்களுக்குச் சிறந்த வலிமை தரும்.
 
#1275 to #1278

#1275. உயிரின் அண்டகோசம்

நின்றது அண்டமும் நீளும் புவிஎலாம்
நின்ற இவ் அண்டம் நிலை பெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இவ் அண்டம் பலம் அந்த விந்துவே.

ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கும் அண்டம் தான் இந்த உலகமாகப் பரவி இருகின்றது. இந்த அண்டம் நிலை பெற்று இருப்பதைக் காண்கின்ற போது இந்த அண்டமே அனைத்துப் பொருட்களுக்கும் மூலம் ஆக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றகின்றது. ஒளி மயமாகும் அண்டத்தின் ஒளியே அதற்கு வலிமையைச் சேர்க்கின்றது.

#1276. ஒளியும் ஒலியும் பொருத்தமாக இருக்க வேண்டும்


விந்துவும், நாதமும், ஒக்க எழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அது ஆம்;
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண் மடி கொண்டது வீசுமே.

பொருத்தமாக இருக்கும் விந்துவும் (ஒளியும் ) நாதமும் (ஒலியும் ) வானக் கூற்றான ஆண்ட கோசத்துக்கு விதையாக அமையும்.
விந்து (ஒளி ) குறைவாகவும் நாதம் (ஒலி) அதிகமாகவும் இருந்தால் ஒலி ஒளியைப் போல எட்டு மடங்கு உள்ளது என்று கூறுவர்.

எண்ணமும், செயலும் முரண்படாமல் பொருத்தமாக இருந்தால் அப்போது அண்டகோசம் வளர்ந்து விரிவடையும். ஆன்ம ஒளியில் ஐம் பெரும் பூதங்களும், எட்டு அக்கினிக் கலைகளும் பொருந்த வேண்டும். ஒரு தூல வீரிய அணு தன்னுள் எட்டு வான் கூற்றில் உள்ள அணுக்களைக் கொண்டிருக்கும்.


#1277. ஒளி அணுக்களும், மண்டலங்களும்


வீசும் இரண்டு உள நாதத்து எழுவன;
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற;
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்த பின்,
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

இரண்டு வகை ஒளி அணுக்கள் உள்ளன. ஒரு வகை ஒளி அணுக்கள் அண்டகோசத்துக்குச் சென்று விந்து , நாத மண்டலங்களை அமைக்கும். இந்த ஒளியும், ஒலியும் ஒத்து அமைந்த பின்னர் அண்டகோசம் விந்து மண்டலங்களாக விரிவடையும்.

#1278. விந்து மண்டலம் இன்றியமையாதது.


விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்;
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உட்கட்டம் எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே.

விந்து மண்டலம் விரியும் போது விதைகளாகிய ஒளி அணுக்கள் மறைந்துவிடும். விரியும் விந்துவின் தன்மைக்கு ஏற்றவாறு அங்கு நாதமும் அமையும். விந்து விரிந்தால் சந்திர கலை பதினாறும் பூரணமாக அமையும். ஒளி மண்டலம் விரிவடைந்து ஒளியின் பீஜங்களாக அமையும்.
 
#1279 to #1282

#1279. திருவடியை விந்து விளக்கும்

விரையது விந்து விளைந்தன வெல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே.


தோன்றியுள்ள எல்லாப் பொருட்களுமே விந்துவாகிய ஒளியைத் தமக்குக் காரணமாகக் கொண்டவை. விந்துவால் விளையும் சீவர்களின் உயிர்கள். விந்துவால் விளையும் இந்த உலகம். இந்த விந்துவே சிவன் திருவடிகளை நமக்கு விளக்கும்.

#1280. பிரணவமும், விந்து நாதமும்


விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்;
விளைந்த எழுத்தது சக்கரம் ஆக,
விளைந்த எழுத்து அவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.


எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைந்தது பிரணவம். அந்தப் பிரணவமும் விந்து நாதங்களால் ஆனது. அந்தப் பிரணவமே சீவனின் தலையில் ஒரு சக்கரமாக அமையும். அந்தப் பிரணவமே சீவனின் உடலுக்குள் நிற்கும். அந்தப் பிரணவம் எல்லா எழுத்துக்களின் தொகுப்பாகிய அரிய மந்திரம் ஆகும்.

#1281. பிரணவ தியானம்


மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்துள், எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம்;
கந்தரத்துள்ளும் இரேகையில் ஒன்றில்லை,
பந்தமும் ஆகும் பிரணவம் உன்னிடே.

மந்திரம் , தந்திரம் யந்திரம் இவற்றைப் பற்றிக் கூறப் போனால் சீவனின் உள்ளே காணப்படும் பிரணவம் என்னும் ஒளி வட்டம் நல்லதொரு உபாயம் ஆகும். பிரணவத்தைக் கண்டத்தில் நிறுத்தி எண்ணுவதாலும், அல்லது தகடுகளில் பொறிப்பதனாலும் எந்த நன்மையும் விளையாது. அசைவின் வடிவாக உள்ள பிரணவத்தை முதன்மையாகக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.

#1282. பிரணவச் சக்கரத்தின் பயன்


உன்னிட்ட வட்டத்தில் ஒத்து ஏழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
த்ன்னிட்டு எழுந்து தகைப்பு அறப் பின்நிற்கப்
பண்ணிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.

அக வழிபாடகிய தியானத்தில் பிரணவத்தை முன்னிறுத்தும் போது அது பிரணவ வட்டத்தில் பொருந்தி விளங்கும். பிறகு அது அந்தச் சக்கரக் கோடுகளைத் தாண்டுவதோ தவறுவதோ நிகழாது. சீவனுக்குத் தானாக உண்டாகிய தடைகள் எல்லாம் பிரணவச் சக்கரம் அமைந்தால் தகர்ந்து போய் விடும். அந்தப் பிரணவ மந்திரம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.
 

Latest ads

Back
Top