• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#2349 to #2354

#2349. சார்வதற்கு அரியவன்

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே


“தனக்குள் உறையும் தலைவன் சிவன்” என்று அறிந்து கொண்டு, தனக்குள்ளே சிவனைத் தேடுபவன் சிவனைத் தனக்குள் காண்பான். தனக்குள் உள்ள தலைவனைத் தேடாதவன் தன் தலைவன் சிவனை ஒரு நாளும் அடைய மாட்டான்.


#2350. உள்ளததுள் உறைவான் இறைவன்


அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே


“எனக்குச் சிவனருள் கிடைக்கவில்லை!” என்று நீ அரற்றாதே! நெறி வழியே நீ நடந்து சென்றால் உறுதியாக அவன் நேர்படுவான். சிவன், சக்தி என்ற இருசுட
ர்களாக இருந்து அவன் அனைத்தையும் படைக்கின்றான். அவனே ஒரு சுடராகி வந்து உன் உள்ளத்தில் உறைவான்.

#2351. நம்மை அறிபவன்; நம்மால் அறிய முடியாதவன்


மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.


மண் என்னும் ஒரு பொருளில் இருந்து சட்டி, பானை, குடம், கலயம் போன்ற பல பொருட்கள் உருவாகின்றன. இது போலவே இறைவன் என்னும் ஒரு மெய்ப் பொருள் பல உயிர்களாக உருவாகின்றது. கண் என்னும் பொறி உலகம் முழுவதையும் காணும்.ஆனால் கண் தன்னையே தானே காண முடியாது. இறைவனும் அது போன்றே எல்லாவற்றையும் கண்டாலும் அவனை எவராலும் காண முடிவதில்லை.


#2352. கூப்புகில்லார் கொள்ளலும் ஆமே?


ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.


உயிர்களின் உயிராக இருந்து இறைவன் ஏழு உலகங்களையும் ஓம்புகின்றான். மனம் குவிந்து ஒருமுகப்பட்ட ஞானியர் இதை அறிந்து கொண்டு சிவனோடு கூடுவர். சிவனைத் தம் சிந்தையில் கொள்ளாதவர் அழுது புலம்பித் தேம்புகின்றார்கள். மனம் குவிந்து ஒருமுகப்படாத போது சிவனை அறிய முடியுமா?

#2353. அறிவறியா இருந்து அன்னமும் ஆமே.

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே


தனக்குள் உறைகின்ற சிவனை அறிய முடியாதவர்கள் அவனை தனக்கு வெளியில் இருக்கு சிவத்தை எங்கனம் அறிந்து கொள்ள முடியும்? தனக்குள் சிவம் உறையும் உண்மையை அறியாதவர் பல பிறவிகள் எடுத்து உலகில் இன்ப துன்பங்களில் உழல்வர். “நான் வேறு சிவன் வேறு” என்று எண்ணாமல் அவனுடன் பிரிவின்றிக் கூடுங்கள். சிவனுடன் கூடி உங்கள் சுட்டறிவை இழக்கும்போது நீங்கள் ‘ஹம்சம்’ (நானே அவன்) என்னும் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.


ஹம்சம் = அஹம் + ஸ: = "நானே அவன்!"

#2354. பிறப்போடு இறப்பறியாரே!


ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.


சிவானந்தத்தை அனுபவிப்பது சீவனின் உடலா அல்லது சீவனின் உயிரா? இந்த இரண்டில் உண்மையில் ஆனந்தம் துய்ப்பது எது என்று வானோர் தலைவியே மயங்கி நிற்கின்றாள். “நான் எல்லாம் அறிவேன்!” என்று அறைகூவிக் கொண்டு திரியும் மனிதர்கள் பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் சிக்கிக் கொன்டு அதிலிருந்து மீளும் வழியை
யும் அறியார்.



 
14. அறிவு உதயம்

14. அறிவு உதயம்
சுட்டறிவு = புலன்களால் அறிந்து கொள்ளும் அறிவு.
ஆன்மாவிடம் சுட்டறிவு மட்டுமின்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நிறைவான அறிவும் உள்ளது.


#2355 to #2359

#2355. தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே


தான் தூய அறிவின் உருவம் என்று ஆன்மா தன்னைத் தானே அறிந்து கொண்டால் அது துன்புற வேண்டிய அவசியம் இல்லை. அறிவு வடிவான தன் உண்மை உருவினை அறியாததால் ஆன்மா வருந்துகின்றது. ஞான உதயம் பெற்ற ஆன்மா தான் அறிவு மயமான ஒளி வடிவம் கொண்ட உண்மையை அறிந்து கொண்ட பின்பு உலகத்தோர் அர்ச்சிக்கும் உயர்வான தன்மை பெற்றுச் சிவ வடிவம் எய்தும்.

#2356. பொங்கார் குழலி “போற்றி!” என்பாள்

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.

சிவவடிவம் பெற்ற ஆன்மா சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது வலிமையையும் பெருமையும் நிறைந்த தேவர்கள் வந்து அவனைத் தொழுவார்கள்.அதைக் கண்ணுற்ற பொங்கார் குழலி சக்தி தேவி அரியணையில் அமர்ந்திருப்பவர் சிவபெருமான் என்று கருதித் தன் சங்குவளையும், காற்சிலம்பும் ஒலிக்கும்படி வந்து “போற்றி!” என்பாள்.

#2357. அறிவு வடிவென்று அறிந்திருந்தேனே.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.

“நான் அறிவு வடிவானவன். நான் கருவிகள் கரணங்களின் உதவியின்றியே அறியும் ஆற்றல் பெற்றவன்” என்ற உண்மையை நான் அறியாமல் இருந்தேன். நான் அறிவு வடிவானவன் என்ற உண்மையை எனக்குத் தன் அருளால் சிவபெருமான் உணர்த்தினான். நான் அறிவு வடிவானவன் என்ற உண்மையைச் சிவன் அருளால் அறிந்து கொண்ட பின்பு நான் கருவிகள் கரணங்களை விட்டு விட்டு அறிவு வடிவினன் ஆக நின்றேன்.

#2358. அறிவே அறிவை அறிகின்றது

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.


அறிவுக்கு ஆக்கமும் இல்லை, அழிவும் இல்லை. அறிவுக்கு அறிவற்ற பொருள் ஓர் ஆதாரம் ஆக முடியாது. எனேவ அறிவு மயமான ஆன்மாவுக்கு ஆதாரம் பேரறிவாகிய சிவன் மட்டுமே ஆவான். அறிவுருவாகிய ஆன்மா பேரறிவாகிய சிவனை அறிகின்றது. இந்த உண்மையை உலகுக்குப் பறை சாற்றுகின்றன மறைகளின் ஈறாகிய உபநிடதங்கள்.

#2359. தூய அறிவு சிவானந்தம் ஆகும்

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே


ஆதாரத் தாமரைகளில் சிறந்தது இதயத்தில் உள்ள அநாகதம். அதற்கும் மேலே பரவியுள்ளது பதினாறு இதழ்த் தமரையாகிய விசுத்தம். தூய ஆன்ம அறிவு சிவானந்தத்துடன் கலந்து மேலே செல்லும். அது விசுத்திச் சக்கரத்தைக் கடந்து சென்று அதற்கும் மேலே உள்ள பேரறிவு ஆகிய சிவனுடன் புணர்ந்து விளங்கும்.

விளக்கம்: விசுத்திச் சக்கரம் விழிப்படைந்தால் நாதம் தலையில் பாயும். அந்த நாதத்தில் சிவன் விளங்குவான்.





 
#2360 to #2364

#2360. “நீ பெரியை!” என்றான்

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.


இடையறாது சிவனைச் சிந்திப்பவர்களுக்குச் சுத்த மாயையின் காரியம் ஆகிய நாதத் தத்துவத்தில் சிவன் வெளிப்படுவான். அந்த முதல்வனையே நான் நினைவில் கொண்டேன். அந்த முதல்வனும் தன் பொன்னொளியில் சிறப்பாகத் திகழ்ந்தான். நிகரில்லாத பெருமையுடைய அவன் திரு மேனியுடன் நான் பின்னிப் பிணைந்து நின்றேன். அவனும் அருள் கூர்ந்து என்னிடம் “நீ பெரியவன்!” என்று கூறினான்.


#2361. அறிவு அறிவாக அறிந்தனன் நந்தி


அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே


ஆன்ம அறிவு பேரறிவின் வயப்பட்டது என்ற உண்மையை உணர்ந்து அதனிடம் அன்பு காட்டுங்கள். அப்போது அகண்ட பேரறிவாகிய சிவன் உங்கள் ஆன்ம அறிவில் வந்து பொருந்துவான். அவன் அறிவு உங்கள் அறிவாக மாறிய பின்பு அணிமா சித்திகள் கைக் கூடும். அதன் மூலம் தெளிவாகும் சிவன் அறிவும் உங்களறிவும் ஒன்றாகப் பொருந்தியுள்ள உண்மை.


#2362. அறிவு அறியாமை யாரும் அறியார்


அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே.


அறிவு அறிவு என்று உலகம் முழுவதும் அரற்றுகின்றது. ஆனால் அது குறிப்பிடுவது பாசவயப்பட்ட அறியாமை என்று உலகம் உணர்வதில்லை. அறிவு பாச அறிவைக் கடந்து சிவஞானம் ஆகிவிட்டால் அப்போது பாச அறிவின் இலக்கணம் என்ன என்பது உலகுக்குப் புரியும்.


#2363. அறிவின் செறிவாகி நின்றவன் சிவன்


அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.


அறிவையும், அறியாமையையும் நீக்கிய ஒருவன், தன் ஞான இந்திரியங்களைக் கடந்து சென்று, அகண்ட அண்டத்தில் தானும் ஒன்றி விடும் போது, அந்த அறிவாகவும், அந்த அறிவினுள் அடங்குபவனாகவும், அந்த அறிவின் செறிவாகவும் நிற்பவன் சிவபெருமானே ஆவான்.


#2364. ஞானியின் நெஞ்சமே சிவன் ஆலயம்


அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.


மெய்ஞானியின் உள்ளமே இந்தப் பரந்து விரிந்த உலகம். ஞானியின் உள்ளமே அருந்தவம் நிறைந்தது. ஞானியின் உள்ளதையே தன் ஆலயமாகக் கொண்டு அங்கே சிவன் எழுந்தருள்வான்.




 
#2365 to #2369

#2365. தித்திக்கும் தீங்கரும்பும் திகட்டாத அமுதும் சிவனே.

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

மாயன் ஆகிய திருமாலாகவும், மலரோன் ஆகிய நான்முகனாகவும், இறைவன் உருத்திரனாகவும் மூன்று வடிவங்களில் உடல்களின் உற்பத்திக்குக் காரணம் ஆனவன் சிவன். அவன் நமக்கு மிகத் தொலைவில் எட்டாமல் இருப்பவன்; அதே சமயம் அவன் நமக்கு மிக மிக அருகில் இருப்பவன். தீங்கரும்பு போலத் தித்திக்கும் சிவன் திகட்டாத அமுதம் போன்றவன்.

#2366. என் நலத்தை உசாவுகின்றான்

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.


அறியாமை இருளிலும், பாசத்தளையிலும் நான் இருந்த போது என் உண்மை வடிவத்தை நான் அறியவில்லை. என்னை நான் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்ட பின்பு வேறு எதையுமே நான் அறியவில்லை. நான் என் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பும் என்னை விட்டு அகலவில்லை என் பிரான். என்னுடனேயே இருந்து கொண்டு அவன் என் நலத்தை உசாவுகின்றான்.

#2367. சேய விளக்கைத் தேடுகின்றேன்.

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.


பத்த நிலையில் உள்ளவர்களின் ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தி இருக்கும். அதனால் அது தெளிவாக விளங்காமல் மறைந்திருக்கும். ஞானம் அடைந்தவர்களின் ஆன்ம வடிவம் ஒளி பெற்றுச் சுடர் விடும். அது உடலில் கனன்று வெப்பத்தை அளிக்கும். அத்தகைய செம்மையான விளக்கையே நான் தேடுகின்றேன்.

#2368. பாடுகின்றேன் பரமே துணை என

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே.


சிவம் என்னும் ஒளிவிளக்கை நான் எடுத்து திசைகளில் மட்டுமின்றி மேலும் கீழும் கூடத் தேடிகின்கின்றேன். இன்ப வடிவாகி அன்பர்களுக்கு நலம் பயக்கும் அவன் திருவடிகளை நான் நாடுகிறேன். பரம்பொருளே உற்ற துணையாகும் என்று அவனைப் பாடுகின்றேன். குறைவற்ற நிறைவான மனத்துடன் அவனைக் கூடுகின்றேன்.

#2369. சிவமாக வாரா பிறப்பே!

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

நான்முகனின் படைப்பில் முதலில் தோன்றிய சீவர்கள் ஆணவ மலத்துடன் விளங்கினார். பின்பு அவர்கள் சிவன் அருளால் ஆணவ மலத்தை ஒழித்தனர். தம் உண்மையான ஆன்ம வடிவத்தை அறிந்து கொண்டனர். பழமைக்கும் பழமையான சிவன் திருவடிகளைப் பொருந்தினர், சிவம் என்ற உயர்ந்த நிலையை அடைந்தால் பிறப்பு அதன் பின்பு வாராது.



 
15. ஆறாந்தம்

15. ஆறாந்தம்
ஆறு + அந்தம் = ஆறாந்தம்
அந்தம் = முடிவு.

ஆறு முடிவுகள் இவை: காலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம்.

1. கலாந்தம் = நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளை அறிந்து கொண்டு சாந்தியாதீத கலையை அடைவது.

2. நாதாந்தம் = நாதத்தின் முடிவால் அடைவது

3. யோகாந்தம் = எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் மூலம் அடைவது

4. போதாந்தம் = ஆத்ம விசாரணையின் மூலம் அடைவது

5. வேதாந்தம் = உபநிடதங்கள், ஆகமங்கள் இவற்றின் உதவியால் அடைவது

6. சித்தாந்தம் = சைவ ஆகமங்களின் முடிவு.

#2370 to #2374

#2370. ஆறு அந்தங்கள் இவை

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.

வேதங்களின் அந்தமான வேதாந்தமும், சிவ ஆகமங்களின் முடிவாகிய சித்தாந்தமும், நாதத்தின் முடிவாகிய நாதாந்தமும், ஆன்ம விசாரணையில் விளையும் போதாந்தமும், எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் முடிவில் அடையும் யோகாந்தமும், ஆதிக் கலாந்தமும் என அந்தங்கள் ஆறு வகைப்படும்.

#2371. அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே.

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.


ஆறு அந்தங்களையும் அறிபவர் அதி சுத்தத் தத்துவத்தை அறிந்தவர். மலங்கள் அற்றவர் மட்டுமே ஆறு அந்தங்களையும் அறிய இயலும். இத்தகைய ஆறு அந்தங்களை அறியாதவர்களால் உலகத்தின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் அறிய இயலாது.

#2372. மலமற்று யாரும் சித்தியாதல் பயன்

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.


“நான் முழு முதற் கடவுள்” என்று கூறுவது வேதாந்தம். “நான் முழு முதற் கடவுள் ஆவேன்!” என்று கூறுவது சித்தாந்தம். துரீய நிலையில் ஆன்மா தன் இயல்பான ஒளிவடிவைக் காணும். பரபரமாகிய சிவத்துடன் ஒன்றாகச் சேரும். இவ்வாறு ஆன்மா தன் மலங்களை அகற்றிப் பெரும் சித்திகளைப் பெறும்.

#2373. அத்தன் பால் அடைவது சித்தாந்தம்

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே


சிவனைச் சிந்தையில் இருத்த வேண்டும். சத்தம் முதலிய ஐந்து புலன்களில் இருந்து விடுபட வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இங்கனம் அனைத்தையும் கடந்து தலைவனான முழு முதற் பொருளை அடைவதே சித்தாந்தம்.

#2374. அணு ஒன்றுளது

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே

பிரமன், திருமால், உருத்திரன் இவர்களைக் கடந்து; மகேசுரன், சதாசிவன் இவர்களையும் கடந்து, பரவிந்து, பர நாதம் இவற்றையும் கடந்து, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து செல்லும் ஆன்மா தனியனும் இனியனும் ஆன சிவனுடன் ஒன்றாகப் பொருந்துகிறது




 
#2375 to #2379

#2375. நாதாந்தத்து எய்திடும் போதமே

உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர் உணர் வாகுமேல்
எள்ளலில் நாதாந்தத்து எய்திடும் போதமே


ஆன்மாவைப் பிணிக்கும் முப்பத்தாறு தத்துவங்களாகிய உபாதிகளை அழித்து வீட்டுக் கடந்து சென்று, மேலே நாதாந்தத்தையும் கடந்து சென்று, ஆணவம் என்னும் இருள் நீக்கப் பெற்று சிவத்துடன் ஆன்மா ஓருணர்வாகப் பொருந்தி நின்றால், நாதாந்தத்தில் ஞானம் உதிக்கும்.


#2376. உபசாந்தமே யோகாந்தக் கொள்கை


தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே


இயமம், நியமம் முதலிய எட்டு அங்கங்களை உடைய யோக நெறியில் சென்ற ஆன்மா சமாதியில் பரசிவத்துடன் பொருந்தி நிற்கும். அந்நிலையில் சீவனின் பற்றுக்கள் முற்றுமாக அகன்றுவிடும். ஆன்மா ‘உபசாந்தம்’ என்னும் விவரிக்க முடியாத மனஅமைதியை அடையும். இதுவே யோகாந்தத்தின் கொள்கையாகும்.


#2377. விந்துவின் உள்ளே ஒளிதலும் தெளிதலும்

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.


கலாந்தம் என்ற கொள்கையை ஆராய்ந்தால் நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்று ஐந்து கலைகளையும் கடந்து சென்று, மேலே மேதை, அர்க்கீசம், விடம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி, வியாபினி, வியோம ரூபிணி, ஆனந்தை, அநாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்று அந்தப் பதினாறு கலைகளையும் கடந்து சென்று ஆன்மா விந்துவில் ஒடுங்குவதும் அதை நன்கு ஆராய்ந்து தெளிவு பெறுதலும் ஆகும்.


#2378. உள்ளன மேலும் ஐந்து வழிகள்


தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே


இந்த ஐந்து வழிகளைத் தவிரச் சிவானந்தம் பெறுவதற்கு வேறு ஐந்து வழிகளும் உள்ளன. சிவானந்தத்தை நாடிச் செல்பவர்களுக்கு உள்ள அந்த வழிகள் மந்திரம், தந்திரம், சமாதி, உபதேசம், ஞானம் என்பவை ஆகும்.


#2379. சிவபோதகம் உபதேசமே

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.


ஆகம வேதங்கள் மிகப் பழமையானவை. அவற்றில் கூறப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வது தந்திரம். மந்திரங்கள் உடலைக் கடந்தவை; அவை மனத்துடன் தொடர்பு உடையவை. சிவஞானத்தை விளக்குகின்ற அறிவு உபதேசம் ஆகும்.



 
#2380 to #2384

#2380. வாசா மகோசர நந்தி

தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே

ஆன்ம ஞானம் அடைவது என்பது சிவனுடன் ஒன்றுவது. காலாந்தத்தில் பக்தியுணர்வு மறைந்து விடும். வாக்கு, உணர்வு, இவற்றைத் துறந்துவிட்ட ஒரு ஞானி, சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாத பரசிவம் ஆவார்.

#2381. ஞேயம் ஞாதுரு ஆகுமே.

தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே.


பயிற்சியினால் சீவன் சிவன் ஆகும் தன்மையை அடைத்து விட்டால் அப்போது கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் இவற்றின் மூலம் பெற்ற ஞானத்தால், அறியப்படும் பொருளாகிய சிவனும் அறியும் பொருளாகிய சீவனும் ஒன்றி ஒருவரே ஆகி விடுவார்.

#2382. தேறிய மோனம் சிவானந்தம்

ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த மாமே


ஞானத்தில் ஆறு அங்கங்களும் சென்று ஒன்று சேரும். ஞானம் உதித்தபின்
ஞாதுரு (அறிபவன் = சீவன்) ஞேயத்தில்( அறியும் பொருளில் = சிவத்தில்)
அடங்கி விடுவான். ஞானமும், ஞானியும் ஒன்றாகி விடும் போது அங்கு சீரிய மோனம் விளையும். அதுவே உயரிய சிவானந்தம் ஆகும்.

#2383. உண்மைக் கலை ஓர் அந்தம் ஆமே

உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

உண்மையான அந்த ஆறு கலைகளும் பிரணவத்தின் ஐந்து உறுப்புகளான ( அ, உ, ம, விந்து, நாதம்) இவற்றுள் அடங்கும்.
சிவத்துவங்கள் ஐந்தும், வித்தியாததுவங்கள் எழும் உண்மையான இரண்டு காலாந்தத்தில் முடியும்.

காலாந்தம் இரண்டு:
நிவிருத்தி , பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்ற ஐந்து.
மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என்ற ஐந்து.

#2384. கோனைக் கருதுமே

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைக் கருதுமே.

ஆன்மாக்களை இயக்கி நடத்துகின்ற குண்டலினி சக்தியை சகசிரா தளத்தில் விளங்கும் நாதத்தின் தலைவன் சிவன் ஏற்றுக் கொண்டான். வானவர்களை வழி நடத்தும் சிவன் தன் திருவடிகளை என் தலை மேல் சூட்டினான் அழிவற்ற வேதாந்த சித்தாந்தங்களின் மேன்மையை அவன் நாதாந்ததால் உணர்த்தினான். அந்தச் சிவகுரு நாதனைக் கருத்தில் நிறுத்துங்கள்!



 
#2385 to #2389

#2385. வேதாந்த சித்தாந்த உண்மை

கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.


சிவபெருமான் அருளிய சிவாகமங்களின் மெய்ப்பொருள் சிவனை வணங்குபவரின் வழிபாட்டின் சிறப்புக்கு எற்பப் புலப்பட்டும். உண்மை அல்லாத மாயை, மாமாயை என்பவற்றைக் கடந்து நிற்பது வேதாந்த சித்தாந்தங்களால் உணர்த்தப்படும் உண்மைப் பொருள் ஆகும்.


#2386. மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே


வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே


வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் ஒரே தன்மை வாய்ந்தவை. தமக்குள் வேறுபாடுகள் இல்லதாவை. ஞான உதயம் என்பது தூய
ஆன்ம அறிவைப் பெறுவது. யோகாந்தம் ஆன்மா அறியவேண்டிய மெய்ப் பொருளைக் காட்டிக் கொடுக்கும். நாதாந்தத்தில் இன்பம் தருகின்ற ஒலி உண்டாகும். மோனத்தில் மூழ்கிப் பிரணவ சமாதியில் இருப்பது ஆன்மாவின் பழமையான முத்திரை ஆகும்.


#2387. அசி பதம் அடையும் ஆன்மா


வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே


வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகள் ஏழின் பிணைப்பு நீங்கிவிடும். நாதாந்தத்தில் சீவனின் பசுத்தன்மை நீங்கித் தொம்பதம் பொருந்தும். அப்போது காரண உபாதைகள் ஏழும் பொருந்தியுள்ள சிவன் தற்பதம் ஆகும். இந்த இரண்டு பதங்களும் பொருந்திவிடும் போது அசிபதம் பொருந்தும்.


சீவனுக்கு உரிய காரிய உபாதைகள் ஏழு:
அஞ்ஞானம், ஆவரணம், விட்சேபம், பரோட்ச ஞானம், நித்தியாரோப ஞானம், துக்க விருத்தி, தடையற்ற ஆனந்தம்.


சிவனுக்கு உ
ரிய காரண உபாதைகள் ஏழு:
சர்வஞ்சத்துவம், சர்வ காரணத்துவம், சர்வாந்திரிகயாமித்வம், சர்வேசுரத்துவம், சர்வ சிருஷ்டி, சர்வ திதி, சர்வ சங்காரம்


தொம்பதம் = சீவன். தற்பதம் = சிவன். அசி பதம் = சீவனும் சிவனும் ஒன்றாகும் பதம்.


#2388. நின்றான் எங்கள் கோவே.


அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்எங்கள் கோவே


அண்டங்கள் ஏழினையும் கடந்து நிற்பவன் ஈசன். அவன் அண்டங்களுக்கு அப்பால் விளங்கும் ஒளியின் ஒளியாவான். பண்டு அவன் அங்கு பராசக்தியோடு நின்றான். அங்கே என் தலைவன் ஆகியசிவன் நிற்கின்றான்.


#2389. உண்டு ஒழியாத ஒருவனை அறியலாம்


கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே


மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியைக் குருவின் உபதேசப்படி வசப்படுத்து. சிவனை உணர்ந்து கொள்வதையே உன் வாழ்வின் லட்சியம் ஆகக் கொள். தெய்வத்தை உணர்த்தும் நற்கருமங்களையே செய். துதிப் பாடல்களையே அர்ச்சனையாகி அவனை அன்போடு வழிபடு. அப்போது பிரணவத்தின் உறுப்புக்கள் ஆகிய அகார, உகார, மகார, விந்து, நாதத்தைக் கடந்த சிவனை நீ உணரலாம்.





 
#2390 to #2394

#2390. அருவனுமாகிய ஆதாரம் அவனே.

ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.


ஒருவனாக இருக்கும் சிவனைக் குறித்து எண்ணார். உயிரைக் குறித்து எண்ணார். இன்ப துன்பங்களுக்குக் காரணம் ஆகிய இரு வினைகளைக் குறித்து எண்ணார். சீவனைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரண்டையும் குறித்து எண்ணார். ஒப்பற்ற ஒருவனாக உள்ள சிவபெருமானே ஆன்மாவினுள் உள்ளே இருப்பதையும் எண்ணார். அவனே ஆன்மாவுக்கு இவற்றை உணர்த்தி ஊட்டுவதையும் அறியார். கருமங்கள் ஆகிய இருவினைகள் கழியும்படிச் செய்து அருவமாக இருந்து ஆன்மாவுக்கு ஆதாரம் ஆனவன் அவனே என்பதையும் எண்ணார்.


#2391. சீவன் சிவானந்தி ஆகும்


அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.


சிவபெருமான் அன்பர்களின் நெஞ்சத்தியே ஆலயமாகக் கொண்டு எழுந்தருள்கின்றான். அன்பர்களின் ஆன்மா பக்குவம் அடைவதற்கான அவற்றுள் தன் சக்திகள் பலவற்றைப் பொருந்துகின்றான். வலிமை வாய்ந்த சிவசங்கற்பத்துக்கு ஏற்ப அந்தச் சக்திகள் ஆன்மாவினுள் தொழிற்படும். ஆன்ம சங்கற்பம் ஆன்மாவைப் பற்றாத போது சிவ சங்கற்பத்தில் நிலைத்திருக்கும் ஆன்மா சிவானந்தத்தில் திளைக்கும்.


#2392. சிவ சாயுச்சியம்


வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவ சாயுச் சியமாமே


வேதாந்தத்தில் கூறப்படும் தொம்பதம் (‘த்வம்’ என்னும் பதம்) பசுவாகிய ஆன்மாவைக் குறிக்கும். நாதாந்தத்தில் ஆன்மாவின் மலங்கள் நீங்கி அதன் பசுத்தன்மை அழிந்து விடும். போதாந்தத்தில் தற்பதம் என்னும் நிலையை அடைந்து, அதன் பின்னர் சீவன் சிவனுடன் இரண்டறக் கலப்பதே சிவ சாயுச்சியம் என்னும் அசி பதம் ஆகும்.


#2393. வேதாந்தம் சித்தாந்தம் ஞானம் தரும்


சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் சேர்ந்துஒன்றானானால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.


வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் சீவன் சிவன் ஆகும் வழியினை உரைக்கும். மற்ற நான்கு அந்தங்களும் வியர்த்தமானவை. சதாசிவன் ஆனைப் படித்த தத்தம் தொழில்களை இயற்றுகின்றனர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ஆகிய தெய்வங்கள். இவர்கள் தொழில்கள் முடிவுற்றுச் சதாசிவனும், சிவமும் ஒன்றானால் அப்போது வேதாந்தமும், சித்தாந்தமும் ஞானம் தரும்.


#2394. சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே


சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே


சைவ சித்தாந்தத்தில் சீவனுக்கு முக்தி நிலை சித்திக்கும். அதனால் சைவ சித்தாந்தத்தில் நிற்பவர் முத்தி நிலை என்னும் சிவகதியைச் சென்று அடைவர். சித்தாந்தமும், வேதாந்தமும் சிவனையேக் காட்டுவதால் சித்தாந்தமும், வேதாந்தமும் உயரிய செம்பொருட்கள் ஆகும்.



 
#2395 to #2399

#2395. தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே

சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே


குற்றமற்ற வேதாந்தமும், சித்தாந்தமும் செப்புவது இது:

தத்துவங்களைப் பற்றாமல் பரமாக விளங்கும் ஆன்மாவின் உள்ளேயும் வெளியிலும் உறைகின்றது சிவன். ஆன்மாவின் துரியாதீத நிலையில் உதிக்கும் ஞானமே சிவம் ஆம். இந்தச் சிவஞானத்தை உணர்ந்து கொண்டவர் சிறந்த தத்துவ அறிவு கொண்டவர் ஆவர்.


#2396. சிவ சாயுச்சியம்


தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே


உருவம் உடையனவாகவும், உருவம் அற்றவைகளாகவும் உள்ளன ஆன்மாவின் முப்பத்தாறு தத்துவங்கள். விந்து, நாதம், சதாசிவம் இவைகளும் தத்துவங்களே. ஆன்மாவின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்னும் மெய்ப்பொருள். இதனை அடைவதே சிவசாயுச்சியம் என்னும் உயர்ந்த முக்தி நிலை ஆகும்.


#2397. பெரியோருக்கு இரண்டும் அபேதமே


வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே


வேதங்களும், ஆகமங்களும் இறைவன் அருளியவை என்பது முற்றிலும் உண்மை. வேதம் பொதுவானதாக உள்ளது. ஆகமம் சிறப்பானதாக உள்ளது. அவற்றின் முடிவுகள் வேறு வேறு என்று சிலர் மொழிவர். ஆனால் தத்துவத்தை உணர்ந்த பெரியோருக்கு அவற்றில் எந்த வித பேதமும் காணப்படாது


#2398. உள்ளம் பூரிக்கும் ஆனந்தம்


பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே


பரம் என்னும் நிலையை அடைந்துவிட்ட ஆன்மா அனுபவிக்கும் உயரிய ஆனந்தம் எல்லாம் சிவானந்தம் ஆகும். பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மா பெறும் ஆனந்தம்; பொருத்தமான சாம்பவி, கேசரி முதலிய முத்திரைகளால் விளையும் ஆனந்தம்; சிவ நடனத்தைத் தனக்குள்ளே கண்டு களிப்பதால் உண்டாகும் ஆனந்தம்; இவை அனைத்துமே ஆன்மாவை இன்பக் களிப்பில் ஆழ்த்துகின்ற சிவானந்தமே.

#2399. சிவன் என்னும் பஞ்சாந்தகன்

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே?


கலாந்தம், நாதாந்தம் என்னும் இரண்டும் மாறுபட்ட அந்தங்கள். கலாந்தம் என்பது மேதை முதலிய சோடச கலைகளையும், நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றியது. நாதாந்தம் பிரணவத்தின் ஐந்து உறுப்புகளைப் பற்றியது. சிவனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை ஒன்றாக்குகி விடுகின்றான். ஐந்து வேறுபட்ட உறுப்புக்களை ( அ + உ + ம் + விந்து + நாதம்) முடிவுக்கு கொணர்ந்து, பிராணவமாக ஒன்றாக்குவதால் சிவன் ‘பஞ்சாந்தகன்’ என்று வேதங்களிலும், ஆகமங்களிலும் பேசப்படுகின்றான்.




 
#2400 to #2404

#2400. மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் தன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றா
ல் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே
.


கலாந்தத்தை எதிர்நோக்கி விருதே காலத்தைக் கழிக்க வேண்டா. வேதாந்த, சித்தாந்தங்கள் நெறியில் நிற்க. அவை உம்மை யோகாந்தத்துக்குக் கொண்டு செல்லும். அங்கே யோகத்தின் முடிவாகிய சமாதி நிலையில் மன்றில் ஆடும் மதியணி நாதனின் திருவடிகளை அடையலாம்.


#2401. சீவன் சிவம் ஆகிவிடும்

அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தனாதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதா
ந்த உண்மையே.


அநாதியாகிய சீவன் அரன் திருவடிகளை பொருந்தும் போது அதன் ஐந்து மலங்களும் அழிந்து போகும்; ஆன்மாவின் அனாதியாகிய சுட்டறிவு
மறைந்து விடும், தன் உண்மைநிலை ஆன்மா அறிந்து கொள்ளும், சிவவடிவம் பெறும். ஆன்மாவின் ஆதிமலம் ஆகிய ஆணவம் அழிந்தவுடன், அனைத்துத் தத்துவங்களையும் கடந்த ஆன்மா பாலுடன் சேர்ந்த நீரும் பாலாவது போலச் சிவத்துடன் சேர்ந்த சீவனும் சிவன் ஆகிவிடும்.


#2402. வேதாந்த சித்தாந்தம் ஆகும்


உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே


உம் உயிரை அறிமின்; நம் பரனை அறிமின்; நம் சிவனை அறிமின்; ‘நான் அதுவாக ஆனேன்’ என்ற வாக்கியத்தின் பொருளை அறிமின்; சுட்டறிவு அழிந்து பேரறிவுடன் ஒன்றி அடங்கி இருப்பதே அயர்வு இல்லாத வேதாந்த சித்தாந்தம் என்று அறிமின்.


#2403. மறை ஆய் பொருள் ஆகமம் ஆம்


மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.


ஸோஹம் (ஸ: + அஹம் )” அவன் நான்!” என்ற பாவனை மறையாளர்கள் பின்பற்றும் சீரிய சிவயோகம். சித்தாந்தம் சாதகனைப் பாவனை செய்யும்படிச் சொல்வதும் இதுவே ஆகும். வேதங்கள் ஆராய்ந்த விழுப் பொருளைக் கூறுவது ஆகமம் என்பது இதனால் நன்கு விளங்கும்.


#2404. வேதமே வேதாந்த, சித்தாந்தமானது


முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே


காலத்தால் முற்பட்டவை வேதங்கள். முழுமையானவை ஆகமங்கள். இவை இரண்டுமே ஆன்மாக்களின் தலைவன் ஆகிய அரன் அருளியவை. வேதமே மெல்ல மெல்ல உருமாறி வேதாந்தமாகவும், சித்தாந்தமாகவும் இரு வேறு அந்தங்களாக ஆனது.



 
16. பசு, பதி, பாசம்

பதி, பசு, பாசம் இவற்றின் தொடர்பு.
பதி = இறைவன் = சிவன்
பசு = உயிர் = சீவன்
பாசம் = தளை = பந்தம்


#2405 to #2409

#2405. பதி பசுவில் பதியில் பிறப்பறும்

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே


அறிவு என்று கூறப்படும் ஆன்மா (பசு) மிகவும் பழமையானது.
ஆன்மாவின் தலைவன் ஆன சிவன் (பதி) மிகவும் பழமை ஆனவன்.
ஆன்மவைப் பிணித்துள்ள பாசம் (தளைகள்) மிகவும் பழமையானவை.
பதி பசுவிடம் விளங்குமானால் பாசம் அகன்று விடும். பிறவிப் பிணி தொலைந்து விடும்.

#2406. பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பிரம்மன் முதலான பசுக்கள் பல கோடி உண்டு. அந்தப் பசுக்களைக் கட்டியுள்ள பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று. பாசத்தை அறுத்து விட்டுப் பசுத் தன்மையை நீக்கினால் அந்தப் பசுக்கள் பதியாகிய தலைவனைப் விடாமல் பற்றி நிற்கும்.

தெய்வங்களும் அவர்களின் மலங்களும்
சதாசிவன் ………..ஆணவம் மட்டும்
மகேசுரன்………….ஆணவம் + திரோதாயீ
உருத்திரன்………..ஆணவம் + திரோதாயீ + கன்மம்
திருமால்………….ஆணவம் + திரோதாயீ + கன்மம் + மாயை
நான்முகன் ……….ஆணவம் + திரோதாயீ + கன்மம்+ மாயை + மாயேயம்.

#2407. குன்றில் இட்ட விளக்கது வாமே.

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.


பாசத்தால் கட்டுண்டபோதும் பசுக்கள் காமியத்தோடு செய்யும் சரியை, கிரியை யோகம் என்பவற்றால் அவைகள் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று விதப் பயன்களை அடைய முடியும். இவற்றின் முடிவாகிய ஞானம் பெறுவதற்கு நாள் தோறும் பற்று இல்லாமல் தியானம் செய்யுங்கள். அப்போது குடத்தில் உள்ள விளக்கை எடுத்துக் குன்றின் மேல் வைத்தது போன்ற சிறந்த ஞானத்தை அடைவீர்கள்.

#2408. வாசம் செய் பாசத்துள் சிக்குண்ட சீவன்

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே


விரிசடையுடைய சிவன் என்னும் தலைவனே சீவனுடன் பாசத்தைப் பொருந்தி உள்ளவன். ஞானியர் அவனிடம் நேசம் கொண்டு அவனையே எப்போதும் சிந்தையில் எண்ணுவர். அங்ஙனம் நினைத்துத் தியானத்தில் மூழ்குபவர் மீண்டும் எங்கனம் பாசத்தை எண்ணிப் பார்க்க முடியும்?பண்டு தொட்டு சீவனை வாசனையாகத் தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் சீவனை மீண்டும் விடுவது எங்கனம்?

#2409. நனவில் அதீதத்துள் தோன்றுமே.

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.


மந்திரத்தால் நீக்கப் பட்ட விடம் கடிபட்டவனின் உடலில் மீண்டும் ஏறாது. அது போன்றே மெய்யறிவு பெற்றுப் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நீக்கிவிட்ட ஒருவன் மீண்டும் அவற்றோடு பொருந்த மாட்டான். கேவல அவத்தையிலும், சகல அவத்தையிலும் தன்னைப் பிணித்திருந்த பாசத் தளைகளை அவன் சுட்டெரிடத்து விட்டு விழிப்பு நிலையின் துரியாதீதத்தை அடைவான்.



 
#2410 to #2414

#2410. நந்தி அளித்த பசுபாச நீக்கம்

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.


நாம் நாடுகின்ற பதியாகிய சிவன் நித்தியன். அது போன்றே சீவனின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் நித்தியமானவை. நித்தியமான சிவனின் உண்மையான மேன்மையை அறிந்தவரெவருமில்லை. தன்னை நாடும் அன்பர்களின் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நேசத்துடன் நீக்குவது ஈசனின் அருட்பார்வையே ஆகும்.


#2411. ஆய பதி அருட் சிவலிங்கம்


ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.


அருட்சிவ லிங்கம் என்பது ஆலயத்தின் மூலத் தானத்தில் இருக்கும் சிவ லிங்கம் ஆம். அங்கு நிற்கும் வலிய இடபம் பசு என்னும் சீவன் ஆகும். அங்குள்ள பலி பீடமே பாசம் ஆகும். இந்த உண்மை சிவாலயத்தை ஆராய்ந்து நோக்கினால் நன்கு தெளிவாகும்.


#2412. பதி, பசு, பாசம் பயில நில்லாவே.


பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.


பதியாகிய சிவன் நமக்கு நித்தமும் பசு, பாசம் பற்றிப் பயில்விக்கின்றான்.
பதியாகிய சிவன் பசு, பாசம் பற்றி ஆராய்பவர்களுக்கு வழி காட்டுகின்றான்.
பதியாகிய சிவன் பாசத் தன்மையையும், பசுத் தன்மையையும் கெடுப்பான்.
பதியாகிய சிவனைத் தியானித்தால் பசுத் தன்மையும், பாசத் தன்மையும் நில்லாவே.


#2413. வைத்தனன் சுத்த சைவத்திலே.


பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.


பதியாகிய சிவனையும், பசுவாகிய சீவனையும், பாசமாகிய சீவனின் மலங்களையும், சீவன் அடைய வேண்டிய மேலான முக்தி நிலையினையும், பசுத்தன்மை பாசத் தன்மைகளை நீக்கும் வழியினையும், நாம் அறியும் வண்ணம் சுத்த சைவ நூல்களிலே அமைத்துத் தந்தான் மதியணியும் ஆனந்த மாநந்திப் பெருமான்.


#2414. பதி படைப்பான் அங்கு அவற்றையே


அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.


அறிவு செறிந்த சீவர்கள் மூவகைப் படுவர். அவர்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலார், சகலர் எனப்படுவர். இத்தகைய சீவன்கள் உலகம் முழுவதும் நிறைந்துள்ளனர். அவர்களில் ஈசன் நிறைந்துள்ளான். சீவன்களின் பக்குவத்தை அறிந்த சிவன் அவற்றின் தகுதிக்கு ஏற்ப அவற்றைப் படைக்கின்றான்.



 
#2415 to #2419

#2415. படைப்பின் ஆதி இதுவே

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்யப்
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.


படைப்பின் ஆதியில், பரம்பொருள் சிவசக்தியரைச் சீவனுடன் பொருத்தி விடும். அதைக் க் கேவல உறக்கத்தில் ஆழ்த்தும். சீவனின் சூக்குமதில் மாயை கலந்து அதனை எழுப்பி விடும். அதன் பின்பு சுத்த மாயை சீவனுடன் மலங்களைக் கலந்து விடும்.


#2416. ஐங்கருமம் செய்வோன் ஈசானன்


ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.


இந்த நுண்மையான உடலில் ஈசானன்; அருவத்தில் உள்ள விந்து, நாதம், சக்தி, சிவம், பரம் என்பவற்றின் மூலம் சூக்குமமாகிய ஐந்து தொழில்களை செய்கின்றான்.

ஐந்து தொழில்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், துடைத்தல்.


#2417. படைப்போன் அரனே!


மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.


மேவும் பரசிவம், சக்தி, நாதம், பரவிந்து, ஐந்து முகங்களை உடைய சதாசிவன், மகேசன், உருத்திரன், திருமால், பிரம்மன் என்று ஒன்பது நிலைகள் விளங்கும்படிப் படைப்பவன் அரன் ஆகிய சிவனே!


#2418. அரன் ஆற்றும் ஐந்தொழில்கள்


படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.


படைத்தல், காத்தல், இளைப்பாறும் பொருட்டு அழித்தல், மறைத்தல், துடைத்தல் என்னும் ஐந்தொழில்கள் செய்வதோடு நின்றுவிடாமல் சிவன் ஆன்மா வாழும் போதும் அருளுகின்றான். ஆன்மா உடலைத் துறந்த பின்பும் அருளுகின்றான். அநாதியாகிய சிவபிரான் சகல நிலையில் இருக்கும் ஆன்மாவுக்கு இவை அனைத்தையும் செய்கின்றான்.


#2419. பதியால் பசு பாசம் விடும்


ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.


சிவபெருமான் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் குண்டலினி சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்தினான். ஆன்மாவிலிருந்து வேறாகிய மாயையில் சிவத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம் என்ற மூன்று பகுதிகளை பொருத்தினான். ஆன்ம தத்துவத்தில் ஆன்மாவுக்குத் தேவையான கருவிகளைப் பொருத்தினான். இந்தப் பதியின் பாதங்களை பற்றிக் கொள்ளும் பசு அதைப் பிணித்திருந்த பாசத்திலிருந்து மீளும்.



 
#2420 to #2424

#2420. ‘நான்’ என்னும் நற்பாசம் நண்ணும்

வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
தாட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.


பதியாகிய சிவன் பசுவாகிய ஆன்மாவைப் பாசத்தில் கொண்டு வீழ்த்தும். ஆன்மாவுக்குப் பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும். ஆன்மாவை இருவினைளைப் புரியத் தூண்டும். அந்த வினைப் பயன்களாக ஆன்மா பெறுகின்ற பாவம் புண்ணியம் இவற்றைக் கழிக்க ஆன்மாவை நரகம் சுவர்க்கம் இவற்றில் செலுத்தும். இறுதியில் ஆன்மாவிடம் ‘நான்’ என்னும் ஆணவம் மட்டுமே மிகுந்து இருக்கும்.


#2421. அண்ணல் அடிசேர் உபாயம்


நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.


ஆன்மாவுடன் பொருந்தியுள்ள பாசத்தால் ஆன்மா தன் கருவிகளுடன் கூடி இருந்து அவற்றையே தான் என்று எண்ணுவது ஆணவம். ஆன்மாவை மாயையுடன் பொருத்தி வைத்துள்ளான் சிவன். ஆன்மா அறிவு பெறும் போது ஆணவத்தின் வலிமை குறையும். சிவன் பேரருள் ஆன்மாவை அவன் அடிகளில் கொண்டு சேர்க்கும்.


#2422. மோகம் அறச் சுத்தன் ஆக்கும்


ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.


அத்தன் அருள் அவன் அடிகளை சென்று அடையும் ஓர் உபாயம் மட்டும் அல்ல. அவன் அருள் ஆன்மாவின் ஆணவத்தையும் ஆசைகளை அறவே அழிக்கின்றது. ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது. அழுக்கு உவர் மண்ணைச் சேர்த்து அழுக்குத் துணிகளைத் துவைத்து வெளுக்கச் செய்வது போன்றே ஆன்மாவுடன் ஈசன் பாசத்தைச் சேர்ப்பது அதனைப் பற்றியுள்ள பாசத்தை அகற்றுவதற்கே ஆகும்.


#2423. பாசம் பயிலப் பதிபசு வாகுமே


பாசம் பயிலுயிர் தானே பரன்முதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே


பதியின் மீது பாசம் கொண்ட ஆன்மா பரம் என்ற நிலையை அடைகின்றது. பசுவின் மீது பாசம் கொண்ட ஆன்மா உலகை இயலில் ஆழ்கின்றது. பதி பாசத்தில் நிலையாக நின்று பரம் ஆகும் பசு (ஆன்மா) இறுதியில் பசுபதியாகவே ஆகி விடுகின்றது.


#2424. தம்மை அடைந்து நின்றாரே.


அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.


சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் என்ற அருந்தவ முனிவர்கள் தட்சிணா மூர்த்தியிடம் வேதத்தின் பொருளை வினவினர். பெருமான் சுட்டு விரலுடன் கட்டைவிரலைச் சேர்த்து ஞான முத்திரையினால் வேதப் பொருளை உணர்த்தினார். அருந்தவ முனிவர்கள் அண்ணலின் காலடிகளை அணையப்பற்றி வேதப் பொருளை உணர்ந்து கொண்டு தம் உண்மை வடிவில் ஒளியுடன் நின்றனர்.


கட்டை விரல் => சிவன்
சுட்டு விரல் => ஆன்மா
மற்ற மூன்று விரல்கள் => ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.

ஆன்மா மும்மலங்களை விலக்கிச் சிவனுடன் இணைந்தால் அப்போது தூய ஞானம் விளையும்.


 
17. அடி தலை அறியும் திறன்

17. அடி தலை அறியும் திறன் கூறல்
திருவடிகளைத் தலையில் உணரும் திறனைக் கூறுவது

#2425 to #2427

#2425. ஞானத்தைக் காட்ட வீடாகுமே

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே


வீணர்கள் “கால் எது? தலை எது?” என்று உண்மையை அறியார். ‘கால்’ என்பது குண்டலினி சக்தி. மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தி அன்னை சக்தியின் அருள் ஆகும். தலை என்பது ஒளி வீசுகின்ற ஞானத்தின் உறைவிடம். மூலாதாரத்தில் உள்ள குண்டனிலி சக்தி சுழுமுனை வழியாகத் தலை உச்சியை அடைந்து அங்கு நாதத்தை உதிக்கச் செய்து ஞானம் ஆகிய சிவனைக் காட்டினால் ஆன்மா வீடுபேறு அடையும்.


#2426. தலை உச்சியில்; மூலம் அடியில்!


தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே.


உடலில் ‘அடி’ எனப்படும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, தலைக்குச் சென்று அங்கு பொருந்துவதை அறிவிலிகள் அறியார். தலை உள்ளது உச்சியில். மூலம் உள்ளது அடியில். மூலத்தில் உள்ள குண்டலினி சக்தி தலையைச் சென்று அடைவதை அறிந்து கொண்டவர் ஞானியர். அவர்கள் பேரறிவு படைத்தவர்கள்.


#2427. நந்தி தாள் இணை என் தலைமிசை ஆனதே


நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.


மண்ணும், விண்ணும், உள்ளும், புறமும், இங்கு அங்கு என்னாதபடி எங்கும் கலந்து நிற்பவன் சிவன். எண்ணில்லாத அண்டங்களில் வாழுகின்ற வானவர், தானவர் உய்யும்படி அவன் உலகங்களைப் படைத்தான். நந்தி என்னும் அந்தப் பெருமான் தன் இரு திருவடிகளை என் தலை மீது பதித்தான்.



 
#2428 to #2430

#2428. சிந்தையின் உள்ளே எந்தைத் திருவடி

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.


என் சிந்தையின் உள்ளே எந்தை சிவனின் திருவடிகள் உள்ளன. என் மனமும் அவன் திருவடிகளைப் பற்றியே நிற்கின்றது. என்னை அறிந்து கொண்டு, எந்தை சிவன் எனக்குத் தன்னை உணர்த்தாவிடில், நானும் எந்தை சிவனை அறியாமல் இருந்திருப்பேன்!


#2429. நாயகன் கழலிணைச் சூட்டி நின்றேன்


பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழலிணை சூட்டிநின் றேனே.


என் தலைவன் ஆகிய சிவன் விரும்பி உறைகின்ற இடம் சொல்வதற்கு அரிய, ஒளி வீசுகின்ற, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால் உள்ள பரமாகாயம் ஆகும். எண்ண இயலாத ஞான ஒளியையும், சொல்ல இயலாத பிரணவ மந்திரத்தையும் அவன் எனக்கு உணர்த்தினான். நான் அவன் இருக்கழல்களை என் தலை மேல் சூட்டி நின்றேன்.


#2430. மலர் பதம் ஓதுமின்


பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே


‘பதி’ என்பதன் பொருள் விளங்கும் இடமாகிய தலை மேல் உங்கள் உள்ளத்தை பதியுங்கள். திங்கள் கலையை விளங்காச் செய்யும் அவன் மலர்ப்பாதங்களை ஓதுங்கள். பொங்கும் கங்கையைத் தன் சடையில் பொதிந்துள்ள மாதொரு பாகன் உங்களுக்கு முத்தியை அளிப்பான். அவனை வழிபடுவதற்கு உகந்த காலத்தைக் கண்டு கொண்டு அவனை வழிபடுங்கள்.



 
#2431 to #2434

#2431. சிந்தை பரித்து நின்றான்.

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.


அமராபதிநாதன் தன் திருவடிகளை இடையறாது நெஞ்சில் தரித்து இருப்பவர்களின் உள்ளத்தில் தன் திருவடிகளை நன்கு பதித்து நிற்பான். தன்னை சிந்தையில் கொள்ளாதவர்களை அவன் வெறுத்து அவர்கள் உள்ளத்தில் ஒளிந்து கொண்டு இருப்பான். இங்கனம் ஆன்மாக்களின் பக்குவத்துக்கு ஏற்ப தன் அருளைத் தருபவன் ஆன்மாக்களைப் பரித்து நிற்கும் அந்தப் பரிபாகத்தான்.


#2432. இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.


ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.


உடலில் சகசிரதளத்தில் உள்ள தாமரை மலரில் நம் தந்தையாகிய சிவன் விளங்குவான். அவனை அங்கே வழிபடுவதற்குத் திங்கள், கதிரவன், அக்கினி என்ற மூன்று கண்கள் உள்ளன. அவனை வழிபடுவதனால் விந்து நாதம் என்னும் அவன் இரு திருவடிகள் விளங்கும். தன் உடலை யோகப் பயிற்சியால் காய்ச்சி பதம் செய்து புடம் இட்டவர்கள் எந்தை சிவனை இன்றே காண இயலும்.

#2433. செம்மை விளம்ப ஒண்ணாது


கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே.


என் சென்னி மீது எந்தை தன் அடிகளை பதிக்கப் பதிக்க என் தளைகள் கட்டறுந்து விட்டன. உலக விஷயங்களில் ஆர்வம் கொண்டு மயக்கம் அடைந்திருந்த என் நெஞ்சத்தின் மயக்கமும் தளர்ச்சியும் நீங்கிவிட்டன. வெண்ணிற ஒளியைப் பற்றிக் கொண்ட என்னை ஆட்கொள்ளச் சிவன் மனம் கனிந்தான். அதனால் நான் அடைந்த மேலான பலன்களை என்னால் செப்பவும் இயலாதே !


#2434. செய்கைக்கு எய்தின செய்யுமே

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கொண்டுள்ள தொடர்பை விரும்புவர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்கள் குணங்களைக் கொண்டாடுவர். இறைவனும் அவ்வண்ணமே ஆன்மாக்களின் பான்மைக்கும் தன்மைக்கும் ஏற்பத் தன் அருளை பொழிவான்.


 
18. முக்குற்றம்

காமம் , வெகுளி, மயக்கம் என்ற ஆன்மாவின் மூன்று குற்றங்கள்

#2435 & #2436

#2435. மூன்றினுள் பட்டு முடிவார்!

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

ஆன்மாவிடம் காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் பொருந்தியுள்ள. அவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அவை ஆன்மாவுக்குத் துன்பத்தைத் தருபவை. இம் மூன்று குற்றங்களின் விளைவாக ஆன்மா தன் உண்மை வடிவை உணராமல், மாயையின் காரியமாகிய அறியாமை என்னும் இருளில் அழுந்தியுள்து . காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களில் இருந்து விடுதலை அடைந்தவர்கள்; பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் பிணியிலிருந்து விடுதலை அடைவர். இந்த மூன்று குற்றங்களை நீக்காதவர்கள் மாயையில் சிக்கித் துன்புறுவார்கள்.

#2436. ஓம் என்ற ஓசையின் உள்ளே உள்ள தாமம்

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

என்னைப் பிணித்து இருந்த காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் களைந்துவிட்டு, என்னைப் பாதுகாக்கும் எந்தைத் திருவடிகளை நான் சிக்கெனைப் பிடித்திருந்தேன். மணியோசை போன்ற பிரணவத்தின் உள்ளே உறையும் ஒளியை நான் கண்டு கொண்டேன்.





 
19. முப்பதம்

19. முப்பதம்
மூன்று பதங்கள்:
அவை தத் பதம், தொம் பதம், அசி பதம் என்பவை

#2437 to #2440


#2437. மாளச் சிவமாய் இருக்குமே.

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.


தொம்பதம் ( த்வம் பதம்) “நீ” என்னும் பதம், அதைச் சுற்றியுள்ள தற்பரம் (தத் பதம்) “அது” என்னும் பதம் இவற்றுடன் அசிபதம் (ஆகின்றாய் ) என்ற பதம் இந்த மூன்றுடனும் நன்றாகப் பொருந்தியவன் பிறவியை நீக்கி அகண்ட சிவம் ஆகி விடுவான். இங்கனம் விடுதலை பெற்றவன் என்றென்றும் அழியாத சிவமாகவே ஆகிவிடுவான்.

#2438. வேதம்சொல் தொம்பதம் மெய்ம்மையே.

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

போதத்தை அடைய விரும்புங்கள்! பஞ்ச பூதங்களையும், உடலில் உள்ள தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் துறந்து விடுங்கள். நாதாந்த நிலையையும் கடந்து மேலே செல்லுங்கள். வேதங்கள் கூறும் “த்வம் பதம்” அங்கு இருப்பது மெய் என்று நீங்கள் உணருவீர்கள்.

#2439. கற்பனையின்றிக் கலந்து நின்றானே.

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.


‘தத் பதம்’ என்பதும் ‘த்வம் பதம்’ என்பதும் ஒன்றாகப் பொருந்தும் நிலையே அசி பதம் ஆகும். இதில் இருப்பவள் நேரிழையாள் ஆகிய சக்தி அன்னை. சொற்பதத்தைக் கடந்தவன் சிவபெருமான் என்றாலும் ‘அசி’ பதத்தில் அவன் வெறும் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

#2440. பால், தேன், அமுதின் கலவை

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

உயிரும், பரமும் பிரிவின்றி ஒன்றாக அசி பதத்தில் பொருந்தும்போது, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிவனும் அங்கு வந்து அவற்றுடன் கலந்தால்; அந்த நிலை பாலும் தேனும் அமுதமும் ஒன்றாகக் கலந்து போல உணர்வினைத் தந்து; வாய்ச் சொற்கள் பேசாத உயர்ந்த மௌன நிலையை நிகழ்த்தும்.




 
#2441. நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.


ஆன்மா ‘த்வம்’ பதத்தில் சீவனாகவும், ‘தத் ‘ பதத்தில் பரனாகவும், ‘அசி’ பதத்தில் சிவனாகவும் நிற்கும். இந்த மூன்று பதங்களுக்கு அப்பால் வேத வாக்கியமாகிய ‘தத் த்வம் அசி’ என்பது உள்ளது. செம்பொருளாகிய சிவன் அந்த வாக்கியத்துக்கு ஏற்ப என்னை ஆட்கொண்டு அருளினான்.


#2442. தான்அவன் ஆகுமே


ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.


ஐம்பது எழுத்துக்களும் வாக்கு வடிவமாகிய சக்தி தேவியர் என்ற உண்மையைப் பலர் அறியார். சிலர் தேவதேவனை நாடி; ‘தத் த்வம் அசி ‘ என்ற மூன்று பதங்களால் உணர்த்தப்படும் உண்மைப் பொருளிடம் சிந்தையைச் செலுத்தி; பிராணாயாமம் போன்ற யோகப் பயிற்சியின் மூலம் சிவனை அறிந்து கொண்டு அவனுடன் ஒன்றாக இணைவர்.


#2443. நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.


நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.


நந்தியின் நாத ஒலியை அறியும் ஆன்ம அறிவும் நழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். செவி முதலிய ஐம்பொறிகள் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களை உணரா. மும் மலங்கள், இருவினைகள், ஓர் ஆன்மா , ஐந்து அவத்தைகள் எல்லாம் அகன்று விடும். அப்போது அனாதியான நின்மல சாக்கிர நிலையை நந்தி அருள்வான்.


 
20. முப்பரம்

20. முப்பரம் = மூன்று பரம்.
அக்னி மண்டலம், கதிரவ மண்டலம், சந்திர மண்டலம்
என்பவற்றில் ஆன்மா நிற்கும் நிலை.

#2445 to #2448


#2445. இளங்கொடி நலந் தருமாறே

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே


என் உடலில் இயற்கையாகவே சுற்றி எழுகின்றன கதிரவன், திங்கள், அக்கினி என்பவற்றின் மூன்று மண்டலங்கள். இவற்றில் அனைத்துக்கும் முதல்வனான சிவன் விளங்குகின்றான். அவனை அடைந்து நான் ஆனந்தத்தில் அமிழ்திருந்தேன். இளங் கொடியாகிய குண்டலினி சக்தியையும் அவள் அருளை பெறுவதற்காக நான் விடாமல் பற்றிக் கொண்டு இருந்தேன்.

#2446. குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.


இறைவன் ஆனந்த நடனமாடும் மன்றம் வான மண்டலம் முழுவதும் பரவி நிறைந்துள்ளது. நந்திப் பெருமானும் நின்று அதை நிறைத்தான். கன்று நினைத்தவுடன் வந்து அன்புடன் பால் தரும் பசு போல அன்பன் நினைந்த உடன்வந்து அருள் பொழிவான் சிவன். சீவன் சிவன் அருளை பெற்ற பின்பு குன்றின் மேல் இட்ட விளக்கென ஒளிரும்.

#2447. பேணும் ஆனந்தம் பெருகவே.

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவது பரம். அது வாய் விட்டுச் சொல்லாமல் மௌன மொழியில் வேதப் பொருளை உபதேசம் செய்தது. சிவபரம் குருவடிவம் தாங்கி வேதப் பொருளை அருளிய அந்த இன்பத்தைப் பெறுங்கள். அதைப் பேணி மேலும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

#2448. பற்றறப் பற்றில் பரம் பரமாமே.

பற்றறப் பற்றின் பரம்பதி யாவது
பற்றறப் பற்றின் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் பதியின் பதத்தை அடைவீர்கள். உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் பதியின் ஞானத்தை அடைவீர்கள். உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் சிவபதவியை அடைவீர்கள்.





 
திருமந்திரம் எட்டாம் தந்திரம்

#2449 to #2451

#2449. பரமாகப் படைப்பது அறிவே.

பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.


மேலான சிவபதவியை அடைந்தவர் பாசம் அணுகாத மிகவும் மேலான நிலையை அடைந்தவர் ஆவர். அங்கணம் அவர் சிவனுடன் பொருந்துகையில் உயரிய சிவானந்தம் விளையும். இவ்வாறு ஆன்மாக்களை மேன்மையுறச் செய்வது அறிவின் வடிவமாகிய சிவபெருமான் ஆவான்.


#2450. தனையுற்றுத் தற்பரமாமே.

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே
.


நின்மல சாக்கிரத்தில் கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்ற ஐந்து தத்துவங்களும் அகன்றுவிடும். கேவல நிலையில் கருவிகளின் அறிவையும் துறந்துவிட்டு ஆன்மா தனித்து நிற்கும். பின்பு ஆன்மா நினைவையும் விட்டு விட்டுத் துரியாதீத நிலையில் நேயப்பொருளான சிவத்தை சார்ந்து நிற்கும். அப்போது ஆன்மா அறிவு வடிவாகித் தற்பரம் என்ற உயர்ந்த நிலையை அடையும்.


#2451. நாடு அகர ஆதியே


தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅகர ஆதியே.


தன்னைத் தூய்மையாகக் காண்மின்; தன்னை எல்லைகள் அற்ற விரிவான அகண்டமாகக் காண்மின்; ஆன்மா கருவி கரணங்களுடன் கலந்து பொருந்திய நிலையை விட்டு நீங்குமின்; தற்பரமும், கால பரமும் கலந்து இருக்கும் பராதீத நிலை நாடுமின்; அகரத்தை முதலாகக் கொண்ட பிரணவ வடிவான சிவனை நாடுமின்.




 
21. பர இலட்சணம்

21. பர இலட்சணம்

பரை ஒளியின் இயல்பு


#2452. அறிவிலோன்

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி பெருமான் பரந்து நிற்கும் அகண்ட தன்மை கொண்டவன் . அறிவு நிறைந்தவன். ஆனால் ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து அறிவில்லாதவனாக இருப்பான். ஆன்மாவின் மதி மண்டலம் முழுமை பெற்றபின்பு, ஆணவமலத்தைத் துறந்துவிட்டு ஆன்மா சிவனுடன் பொருந்தினால், சிவன் அந்த ஆன்மாவில் பதிந்து அதன் அறிவையும் பரப்பையும் பெருக்குவான்.

#2453. பரபோதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

சிவன் ஆதியும் அந்தமும் இல்லாத அருந்தலைவன். அவன் சோதி வடிவாகிப் பரஞ்சுடர் ஆனவன்! அவன் இங்கு அங்கு என்னாதபடி எங்கும் நிறைந்தவன். நல்லவர்கள் அவனைக் காண வல்லவர்கள். பொல்லாதவர்கள் அவனைக் காண இயலாதவர்கள். நீதிவடிவானவன் சிவன். அந்த சிவனைப்பற்றிய சிவஞானம் வாய்ந்தவர் மிகுந்த புண்ணியர்கள் ஆவர்.

#2454. துரிய வல்லார்க்குத் துரிசில்லை

துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.


சீவன் நின்மலத் துரியத்தில் பரையோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆணவம் அற்று விளங்கும். அதைக் கடந்து துரியாதீதத்தை அடைந்த ஆன்மா தூய்மை அடையும். பரவெளியில் ஆனந்த நடனம் செய்பவன் சிவன். ஆன்மாவுக்கு வீடுபேறு அளிக்கவல்ல சிவபெருமானின் அற்புத நடனத்தைப் பிரணவத்தினுள் காண இயன்ற ஆன்மாவுக்கு எந்த விதக் குற்றமும் இருக்காது.

#2455. செம்மைச் சிவம் மேருசேர் கொடி அம்மை

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.


செந்நிறத்துடன் கலந்துவிட்ட வெண்மை நிறம் தன் உண்மைத் தன்மை கெட்டு சிவப்பு நிறம் அடைந்து விடும். அது போன்றே சிவத்துடன் இணையும் சீவன் தன் உண்மைத் தன்மை கெட்டு விடும். தன் முனைப்பை விட்டு விடும். உலகம் ஒரு மாயை என்ற போதம் அடைந்து, அதனுடன் ஒட்டாமல் எட்ட நின்று, எண்ண ஓட்டத்தையும் துறந்துவிட்ட சூனியத்தில், குண்டலினி சக்தி மேருவாகிய துவாதசாந்தத்தில் சிவனுடன் ஒன்றுவாள்.




 
#2456 to #2460

#2456. அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
எச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.


சிவமேருவில் சிவன் சக்தியுடன் பொருந்தும் போது ஆன்மாவின் கலைகள் ஒடுங்கும். சுத்த மாயை, அசுத்த மாயைகளின் பிணைப்பு வேரறுக்கப்படும். துவாதசாந்தம் என்ற தலை உச்சியில் சிவன் விளங்கினான். பிரவிபி பிணி குறித்த என் அச்சத்தைப் போக்கினான். என்னைத் தன் அடிமையாக ஏற்றுக் கொண்டு எனக்கு ஞானத்தை நல்கினான்.

#2457. தன்னை அளித்தான் தற்பர மாகவே.

என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே.


என் உண்மை சொரூபத்தை எனக்குச் சிவபெருமான் உணர்த்தினான். என்னை நான் அறிந்து கொண்ட பின்னர், நான் இதுவரை அறிந்திராத பரவெளியில் என்னை அறிவுடன் செல்லுமாறு செய்தான். பிரணவ ஒளியில் என் ஆன்ம வடிவம் வேறாக விளங்கியது. எனக்கு அவன் தன்னைத் தந்தான். என்னையும் தற்பரம் ஆக்கினான்.

#2458. தரந்த விசும்பு தாங்கி நின்றானே.

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன் நெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே
.

பரந்தும் சுருங்கியும் இருக்கும் மண். விண், தீ, நீர், காற்று, கதிரவன், சந்திரன், அகண்ட வானம் இவை அனைத்தையும் சிவன் தான் தனி ஒருவனாகத் தாங்கி நிற்கின்றான்.

#2159. பரையே பரனின் உடல் ஆவாள்

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

பரன் (சிவன்), பரை (சக்தி) இரன்டும் ஒரே இடத்தில விளங்குபவை. இலயத்தில் பரனாக இருக்கும் சிவன், படைப்பின் போது பரை என்ற நிலையை அடைவான். பரையே பரனுக்கு உடல் ஆவாள். தனு, கரணங்கள், புவனம், போகங்கள், முதலியவற்றைச் சீவர்களுக்கு படைப்பதற்காகச் சக்திதேவி; ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று பல பேதங்களை தன் மேல் பொருத்திக் கொள்வாள். பரனிடம் பிரியாமல் இருந்து கொண்டு ஐந்தொழில்களையும் இயற்றுபவள் உண்மையில் பரை ஆகிய சக்தி தேவியே.

#2460. பரையில் பரையாகிய விந்து சக்தி

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்சகு அவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.

விந்து சக்தி பரையில் பரையாக இருந்து கொண்டு, பரவி சீவனின் உடலின் மேலும், கீழும், உடலைச் சூழ்ந்தும் இருக்கும். மெய், வாய், கண், நாசி, செவி போன்றவற்றைக் காப்பது விந்து சக்தி. ஞானம் இல்லாத ஆன்மாவுக்கு அருவமாகிய சிவம், சக்தி, விந்து, நாதம் இவற்றின் ஞானத்தைத் தந்து ஆணவ மலத்தில் கட்டுண்ட ஆன்மாவை உலகில் நடத்தும்.


 

Latest ads

Back
Top