• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#2161 to #2165

#2461. உயிர்த்து, உண்டு, உறங்கும் உயிர்!

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்

ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.


பரையின் ஒளி வேறு வேறு இயல்புகளை உடையது. அது உடலின் ஆறு ஆதாரங்களில் பொருந்துகின்றது ஆறு விதமான வேறுபாடுகளை அளிக்கின்றது. மாறு பட்ட தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகின்றது. சீவனை உயிர்த்து, உண்டு, உறங்கச் செய்கின்றது. எனினும் இத்தகைய மாயையின் செய்லகளைக் கடந்து சென்று பரஒளியில் பொருந்தி இருப்பதே ஆன்மா அடையத் தகுந்த பெரும் பேறாகும்.


#2462. மற்றது இங்கு ஒப்பில்லை

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே
.


தற்பரம் என்ற உயர்ந்த நிலை, நிலை பெற்று இருப்பது ஒப்பில்லாத ஓர் பேரொளியில் ஆகும். அதுவே அனைத்திலும் உயரிய ஞானம் ஆகும். அதுவே தத்துவங்களை அழித்துவிடும் அறிவும் ஆகும். ஆன்மா தன்னுடைய ஆன்ம அறிவு நீங்கி, தன் ஒளி வடிவத்தை உணர்ந்து கொண்டு, தன் சுட்டறிவைத் துறந்து சிவப் பேரொளியில் கலந்து நிற்பதற்கு ஒப்பாக இங்கு வேறு எதுவும் இல்லை அல்லவா?


#2463. அவன் சுத்தன் ஆகான்


பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தன் ஆகான் வினவிலே.


பண்டைய மறைகள் பகரும் உண்மை இதுவே. முடிவில்லாத வானமே சிவபெருமானின் உடல் ஆகும். பிஞ்சு மதியைச் சூடிய சிவனைத் துரியாதீதத்தில் கண்டு அவனுடன் ஒன்றியவன் பரநிலை அடைவான் . தூய மாயையில் பொருந்திப் பிறவியின் காரணத்தை அழிக்காதவன் தூய்மை அடைய மாட்டான்.


#2464. வெளியாய சத்தி அவன் வடிவாமே.


வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தளியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.


வெளி, வளி, கனல், அப்பு, மண் என்ற பஞ்ச பூதங்கள் இலயமாகும் ஆலயமே துரிய நிலையில் விளங்கும் தற்பரன் ஆகிய சிவபெருமான். வெளி, வளி, கனல், அப்பு, மண் என்ற பஞ்ச பூதங்களில் நிறைந்து நின்று, வெளியாகும் சக்தியே அவனது வடிவமாகும்.


#2465. சீரார் தவம் செய்யில் சிவனருள் தானாகும்


மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.


உடலின் மேருவாகிய துவாதசாந்தத்தில் விரிகதிர் மண்டலம் உடைய சிவத்துடன் பொருந்துவதை எண்ணித் தவம் செய்யம் சிவயோகிக்கு சிவன் அருள் தானாகவே வந்து பொருந்திவிடும். இந்தச் சீரிய நிலையில் இருந்து அந்தச் சிவயோகி நழுவாமல் இருந்தாலே போதுமானது. சிவன் அருளை நாடுகின்ற சீவர்களுக்கு இதை விடச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை அல்லவா?


 
22. முத்துரியம்

மூன்று விதத் துரியங்கள் இவை ஆகும்.

சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம்.


#2466 to #2469

#2466. தொந்தத்தசி (த்வம் தத் அசி)

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.

சீவன், சாக்கிர நிலையின் நனவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே சீவ துரியம் ஆகும்.
பரம், சீவ துரியத்தில் நனைவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே பர துரியம் ஆகும்.
சிவன், பர துரியத்தில் நனைவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே சிவ துரியம் ஆகும்.
இந்த மூன்று நிலைகளிலும் ‘த்வம்’, ‘தத்’, ‘அசி’ என்ற மூன்று நிலைகளையும் ஆன்மா முறையே அடையும்.

#2467. நனவில் துரியம்தன் தொம்பதம்

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.

‘த்வம் ‘ பதம் என்பது சீவனின் நனவில் பொருந்துகின்ற துரிய நிலை ஆகும். சீவ துரியம் முடிவடையும் இடத்தில் பரதுரியம் தொடங்கும். இது சகல சாக்கிரத்தில் உள்ள துரியத்தில் நிகழும். அந்தப் பரதுரியம் நீங்கிச் சிவதுரியம் நின்மல நனவில் நிகழும். சீவதுரியம், பர துரியம், சிவதுரியங்கள் இங்கனம் ஏற்படும்.

#2468. முந்நான்கு ஈரைந்தாகிவிடும்!

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுத் துரியக்
கணுவில் இந் நான்கும் கலந்த ஈரைந்தே.

சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்று மூன்று துரிய நிலைகள் ஒவ்வொன்றிலும் நனவு, கனவு, சுழுத்தி, துரியம் என்று நான்கு வேறு வேறு நிலைகள் அமைந்திருக்கும். எனினும் ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று தொடங்கிவிடும். அதனால் பன்னிரண்டு நிலைகள் சுருங்கிப் பத்து நிலைகள் ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.

#2469. நேர் அந்தமாக நெறிவழியே செல்!

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து ஐக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றிலும் இந்தப் பத்து அவத்தைகள் அடங்கி உள்ளன. பராபரனைச் சேர்வதையே சீவனின் குறிக்கோளாகக் கொண்டு, குருவின் உபதேசத்தின்படி முன்னேறு. சீவ துரியத்தையும், பரதுரிய சாக்கிரத்தையும் ஒன்றாகக் கருது. பரதுரிய துரியத்தையும், சிவதுரிய சாக்கிரத்தையும் ஒன்றாகக் கருது. இங்கனம் உன் சாதனையில் தடை இன்றி முன்னேறு! முன்னேறு!





 
#2470. தொட்டே இருமின் துரிய நிலத்தினை

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.


துரிய நிலையை அடைந்து அங்கு நீங்காமல் பொருந்தி இருங்கள். துரிய நிலையை உங்களால் அடைய இயலாது போனால், இறைவனைப் பற்றிப் பேசும் ஞான நூல்கள் கூறும் இறைவனைச் சிந்தித்திருங்கள். அது உங்களை வாக்குக்கு அப்பாற்பட்ட உண்மைப் பொருளிடம் தானே கொண்டு சேர்க்கும்.


#2471. நெறியான அன்பர் நிலையறிந் தாரே.


அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.


அசத்து (பொய்யானவை) ஆகிய ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு விடுங்கள். சித்து (அறிவு) வடிவமாக மாறி விடுங்கள். சுத்த மாயை, அசுத்த மாயை என்ற இரண்டியும் ஈசன் அருளால் சிதைத்து எறிந்து விடுங்கள். பிரிவில்லாத சிவ சக்தியரைப் பொருந்திடும் இயல்பைச் சிவநெறியையில் செல்லும் அன்பர்கள் நன்கு அறிந்திருந்தனர்.


#2472. தத் பதம்


நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

நனவின் நான்காம் நிலை ஆகும் சீவ துரியம். இங்கு சீவன் ‘த்வம்’ பதத்தை அடைகின்றது. இங்கு சீவனின் கன்மங்கள் முடிவடைகின்றன. சாக்கிரதத்தில் உள்ள சீவதுரிய நிலையில் இருந்து முன்னேறி சீவன் பரதுரியத்தை அடைகின்றது. பரதுரியத்தில் உள்ள துரியமே நின்மல சாக்கிரம் என்ற நிலை. இதை முதலாகக் கொண்ட நான்கு நிலைகளில் உள்ள நின்மல துரியத்தை அடைந்து அதையும் கடந்த துரியாதீதத்தில் சீவன் ‘தத்’ பதத்தை அடையும்.

#2473. அம்புலி உன்னா அதி சூக்கம்


தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.


‘த்வம்’ பதம், ‘தத்’ பதம் இவற்றைக் கடந்து விட்ட சீவன் சிவதுரியத்தை அடையும். அதில் அமைந்துள்ளது ‘அசி’ பதம். அது அம்புவி எண்ண இயலாத அதி சூக்குமமான பதம். அதற்கும் அப்பால் உள்ளான் அன்பர்களைத் தன்பால் சேர்க்கும் ஈசன் நந்தி எம்பெருமான்.


 
23. மும் முத்தி

23. மும் முத்தி
மூன்று வித முக்தி நிலைகள்.
அவை சீவ முக்தி, பரம முக்தி, சிவமுக்தி என்பவை.


#2474 to #2477

#2474. சிவமுத்தி ஆனந்தம்

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓயுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

சீவன் முத்தி துரியாதீதத்தில் நிகழும். உலகம் பொய் என்று அறிந்து கொண்ட சீவன் பிறப்பதற்கான காரணத்தை ஒழித்து விட்டு உலகைத் துறந்து விட்டுத் தனியாக நிற்பது சீவன் முத்தி. பரமுக்தி என்பது தன் செயல் இன்றி ஈசனின் அருள் வழியே நிற்பது. பிறவி எடுக்கும் அவசியமும் இல்லாமல் சிவனின் பொருந்தும் எண்ணமுமில்லாமல் அரிதாகிய உபசாந்தம் என்ற அமைதியான நிலையை அடைவது. சிவ முத்தி என்பது உடலுடன் உள்ள போதே சிவானந்தத்தில் திளைப்பது. உடல் நினைவு மறந்து சிவனுடன் ஒன்றுதல். இந்த மூன்று நிலைகளும் பிரணவத்தின் வழியே விளையும் நாதாந்தத்தின் பயன்கள்.

#2475. சிவனுடன் ஒன்றாதல் முத்தி

ஆவது அறியா உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

பிறவிப் பயனை அறியாதவர்கள் உலகில் மீண்டும் பிறவி எடுப்பர். இறைவனை நாடுதல் பிறவிப் பயனென்று அறிந்து கொண்டவர்கள் ஈசன் திருவருளை நாடுவர். உலகையும், தன் கருவிகளையும், கரணங்களையும் துறந்துவிட்டு சிவனுடன் ஒன்றாகப் பொருந்துவதே முத்தி ஆகும்.

#2476. அமலன் தானே வெளிப்படுவான்

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

சிவனையே நினைவில் கொண்டு; சிவமாகவே ஆகி; ஆணவம், கன்மம் , மாயை என்ற மூன்று மலங்களையும் அழித்து; தாமச குணம், ராஜச குணம், சத்துவ குணம் என்ற மூன்றையும் துறந்து; “நீ அது ஆகின்றாய்!” என்று மும் முத்தியைப் பெற அறநெறியில் நிற்பவருக்கு; அமலன் ஆகிய சிவன் தானே வெளிப்படுவான்.

#2477. பெத்தம் அறுத்த பெருமானே.

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.


சீவனின் பிறவித் தளைகளைக் களையும் தயாபர! அணிமா முதலிய எண்சித்திகளும், வீடுபேறும் மேலான சிவம் ஆகும். நின்மல துரியாதீதமும், சீவனுக்கு வருகின்ற ( தன்னைப் பற்றிய துன்பம், பிற உயிர்களால் வரும் துன்பம், தெய்வத்தால் வரும் துன்பம்) என்ற மூன்று பெருந் துன்பங்களையும் நீக்கும் சிவானந்தமே சீவனுக்கு மேலான சமாதி நிலை ஆகும்.






 
24. முச் சொரூபம்

24. முச் சொரூபம்
மூன்று சொரூபங்கள்:
அவை சீவ சொரூபம், பர சொரூபம், சிவ சொரூபம் என்பவை

#2478 to #2480

#2478. பரன் உண்மை செய்யுமே

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.


சாதகன் சாதனையில் முன்னேறும் போது ஆன்மாவைப் பிணித்துள்ள ஐந்து மலங்களைக் களைய வேண்டும்; ஞானத்தால் நிரம்பிய சோஹம் என்ற பாவணையைப் பெற வேண்டும்;மூன்று வித ஸ்வரூப முத்தியை அடையவேண்டும்; இறுதியில் பரசிவன் பரம் பொருளின் உண்மையில் அந்த சீவனையும் நிலை பெறச் செய்வான்.

#2479. காயக் கணக்கு அறும்!

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பிரகிருதி மாயை, தூ மாயை, தூவா மாயை என்று மூன்று மாய மாளிகைகள் உள்ளன. இவற்றில் சகலர், பிரளயாகலர், விஞ்சஞானகலர் என்ற மூவகை மனிதர்கள் வாழ்கின்றார்கள். இந்த மூன்று மாயைகளில் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றும். இந்த மூன்று மண்டலங்களில் தோன்றி எழுகின்ற ஆன்மப் பேரொளியைக் காணும்போதே இனிப் பிறவி எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும்.

#2480. ஈசன் பெருமையை யாரறிவார்?

உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே.

உலகம் தோன்றுவதும் பின்பு உலகம் ஊழியில் அழிவதும் பல முறை நிகழ்ந்து விட்டன. ஊழியின் முடிவில் சீவன் பரனுடனும், பரன் சிவனுடனும் ஒன்றி விடும் ! இந்த மூன்றுக்கும் ஆராய்ந்து அறியும் தன்மையைத் தரும் சிவனின் பெருமையையும் அளவையும் யாரோ கூற வல்லவர்?





 
#2481 to #2484

#2481. உருவாய், அருவாய், குருவாய், வருவான்!

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.


பெருமை உடைய சிவன், பேதங்களை பேதித்துத் தானே, அருவமாகவும், அருவுருவமாகவும் , உருவமாகவும், குருவாகவும், சக்தியின் தலைவனாகவும் பலவாறு தோன்றுகிறான், சீவர்களுள் இவன் இருந்த போதிலும் அவைகளால் அறியப் படாதவனாகவும் இருக்கின்றான்.


#2482. நந்தி பாதம் பற்றாமே


மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.


ஒளியற்ற வெண்பளிங்கு மாணிக்கமணியின் சிவந்த ஒளியைப் பெற்றுத் தானே ஒரு மாணிக்கம் என்பது போல ஒளிரும். அதே போலத் தணிந்த இயல்பு உடைய ஆன்மா சீவ சொரூபம், பரசொரூபம, சிவ சொரூபம் பொருந்திய போ து அவைகளாகவே மாறிவிடும். இப்படி ஓர் அறிய செயலைச் செய்த சிவன் சேவடிகளை பற்றி நிற்போம்.


#2483. அல் அறு அனுபூதி பெறுவீர்


கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.


வெண்பளிங்கைப்போன்ற ஆன்மா, மாணிக்கம் போன்ற சிவனின் சிவந்த ஒளிபெற்றுத் தானும் ஒளிரும். சிவனை நாடி அவன் முத்தியின் முப்பதங்களை அடையுங்கள். சொல்லால் கூற முடியாத வெளியில், பிரணவத்தை மெளனமாகச் சிந்தித்து, ஞான முத்திரையின் முடிவில் பெறுகின்ற அனுபூதியில், அறியாமை இருள் நீங்கப் பெற்றுப் பிறவிப் பிணியை ஒழியுங்கள்.


#2484. அடைத்திருக்கும் வாசலைத் திறவீர்!


உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்திற வீரே.


ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்கும் தூய பேரொளி சிவன். மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்லுகின்ற குண்டலினி சக்திக்கு, தலை உச்சியில் தோன்றும் நாதம் வசப்பட்டால், அங்கு பொருந்தி இருக்கும் அமுதேஸ்வரி வெளிப்படுவதற்கு, அங்கு முன்பு அடைந்திருந்த வாசலைத் திறந்து விடுவீரே.



 
25. முக்கரணம்

முக்கரணங்கள் = மூன்று கரணங்கள்

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்கள்.

#2485. சிவன், பரன், சீவன் மூவரும் ஒருவரே!

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.


ஆன்மாவுக்குப் பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உள்ளன. இந்த மூன்றுடன் ஆன்மா பொருந்திய போதும் ஆன்மா ஒன்றே!
அது போன்றே சீவன், பரன், சிவன் என்ற வேறுபட்டுத் தோன்றும் மூன்று நிலைகளும் ஒரே சீவனுக்கு உரியவை என்று அறிவீர்!


#2486. தெளியத் தெளியும் சிவபதம் தானே.


ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.


ஒளியுடைய உங்கள் கண் பார்வையை வெளியுலக ஒளியுடன் பொருத்தி அதை மேலும் ஒளி பெறச் செய்யுங்கள்! பிரணவ தியானத்தால் மூலாதாரத்தில் உள்ள கனலை எழுப்புங்கள். அது திங்கட் கலை, கதிரவக் கலையுடன் சுழுமுனையில் பொருந்துமாறு செய்யுங்கள். தலைக்கு மேலே உள்ள வெளியில் பொருந்தித் தியானம் செய்தால் சிவபதம் வந்து பொருந்தும்.


#2487. மனோன்மணியும், உன்மனியும்

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே.


மனம், வாக்கு, காயம் என்ற முக்கருவிகளின் மூர்ச்சையைத் தீர்ப்பவன் சிவன். அவை சோர்வடையாமல் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் திறமையைத் தந்தவன் சிவன். சதாசிவ சக்தியாகிய மனோன்மணி கவிழ்ந்த சகசிர தளத்தில் நெற்றி, தலை இவற்றின் இடையே இருக்கும், மேலே நிமிர்ந்து விரிந்த சகசிர தளத்தில் உன்மனிக் கலையில் சமாதி நிலை பொருந்தும்.



 
26. முச் சூனிய தொந்தத் தசி

26. முச் சூனிய தொந்தத் தசி
சூனியம் = இல்லாமை = பாழ்மை
முச் சூன்ய தொந்தத் தசி = முப்பதங்களும் இல்லாமை
முப்பதம் = தத் பதம், தொம் பதம், அசி பதம்.
முப்பதங்களும் நீங்கிய நிலையே பெருநிலை ஆகும்.


#2488 to #2490

#2488. சொற்பதம் ஆகும் ‘தொந்தத் தசி’

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.


‘நீ’ என்பது ‘த்வம் பதம்’ ஆகிய சீவன். ‘அது’ என்பது ‘தற்பதம்’ ஆகிய பரன். ‘ஆக ஆகின்றாய்’ என்பது அசிபதம் ஆகிய சிவன். இம்மூன்றும் நின்மலத் துரியத்தில் விளங்கும். அவற்றில் நிற்பவர் முறையே சீவன், பரன், சிவன் ஆவர். இம்மூன்றையும் இணைத்துக் கூறும் மகாவாக்கியம் ‘தொந்தத் அசி’ ஆகும்.


#2489. இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.


தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.


தொந்தத்தசி என்று மூன்று நிலைகளில் தொன்மையான ஆணவம், கன்மம், மாயை என்ற மலங்கள் மூன்றும் அழிய வேண்டும். தொந்தத்தசியில் பழமையான காமம், குரோதம், மோகம் மறைய வேண்டும். தொந்தத்தசியில் ராஜசம், தாமசம், சத்துவம் என்ற மூன்று குணங்கள் மறைய வேண்டும். இவை அழிந்து சிவன் அங்கு தோன்றினால் முழுமதியின் முன்பு இருள் ஓடி மறைவது போல அறியாமை மறைந்து ஆன்மப் பேரொளி துலங்கும்.


2490. சிவன் முன்வைத்து ஓதிடே


தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.


‘தத் த்வம் அசி’ என்ற ஆன்மாவின் நிலை பத்தாவது துரிய நிலை ஆகும். இதை அடைவதற்குப் பிராணப் பயிற்சி மூலம் சாதனையில் முன்னேறு. அந்தம் இல்லாத அவத்தைகளைக் கொண்டது இந்நிலை. இதை அடைவதற்கு ‘தொந்தத்தசி’ என்பதில் சிவனை முன்னிறுத்தித் ‘தத்துவமசி’ என்று கொள்வாய். இதனைத் தியானித்துச் சாதனையில் முன்னேறுவாயாகுக!







 
#2491 to #2494

#2491. அத்தற்கு அடிமை அடைந்து நின்றான்

வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.

‘தத்துவமசி’ என்று கூறிச் சிவனை முன் நிறுந்து! அவன் சொரூப ஆனந்தத்தில் உன் சிந்தையைச் செலுத்து. அவன் பிரணவத்தை உன் நெஞ்சில் நிறுத்து. இங்கனம் தொடர்ந்து பயிற்சி செய்தால் உண்மையை உணரலாம். சிவனுக்கு அடிமை ஆகிய அந்த ஆன்மா இன்ப மயமாக விளங்கும்.

#2492. தொந்தத்தசி வாசியாமே

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

சீவன் ஆகிய ‘தொம்பதம்’ மாயையில் தோன்றும். ‘தத்’ என்னும் மேலான பதம் பரையில் தோன்றும். ‘ஆகின்றாய்’ என்னும் அசி பதம் சாந்தியில் தோன்றும். இந்த மகா வாக்கியம் மேலான தொடர் ஆகும். இதன் உரைக்கையில் வாசியான உணர்வு வந்து பொருந்தும்.

#2493. சீவன் பரசிவன் ஆமே

ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.


இடம், காலம் இவற்றால் மாறுபடுகின்ற தேவதத்தன் என்பவன் வேறு வேறு மனிதர்கள் போலத் தோன்றலாம். இடம், காலம் இவற்றை நீக்கி விட்டால் தேவதத்தன் என்ற மனிதன் ஒருவனே என்று புரியும். அது போன்றே மாயையில் மூழ்கிய சீவன் சிவனில் இருந்து மாறுபட்டது தோன்றும். மாயையிலிருந்து நீங்கி மெய்யறிவு பெற்று விட்டால் சீவன் பரசிவனாகி விடும்.

#2494. துரியமும் தொந்தத்தசியால் ஆகும்

தாமதம் காமியம் ஆதித் தகுகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.


தாமசம், ராஜஸம், சத்துவம், என்ற மூன்று குணங்களும்; ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலமங்களும்; அகர, உகர, மகரங்களால் ஆகிய பிரணவத்தால் நீந்திவிடும். சீவன் பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்றையும் கடந்து விளங்கும் துரியமும், தொந்தத்தசியால் நிகழும்.

 
#2498 to #2500

#2498. பரம்பரம் என்னும் அருநிலம்

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

துரியம் கடந்த , சொல்வதற்கு அரிய, பாழினை அடைவது முடியாத செயல் என்று அறிவிலிகள் உரைப்பர். ஆனால் அறிவுடையோர் மேலான நிலை என்று கூறும் பரம்பரம் முப்பாழையும் கடந்த உயரிய நிலை என்பதை யார் அறிவார்?

#2499. சிவாய நம!

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய பின்னர், நகாரம்
( ஆணவம் ), மகாரம் (மாயை ) இவை இரண்டும் அகன்று விட, யகாரமாகிய சீவனுக்குப் பரை என்னும் சக்தி அன்னை தன் அருளைத் தருவாள். அந்த யகாரம் ஆகிய ஆன்மா ‘சி’ என்னும் சிவனுடனும் ‘வ’ என்னும் சக்தியுடனும் சென்று இணைந்து ‘சிவாய’ என்று ஆகிவிடும். இதுவே ‘சிவாய நம’ என்னும் திரு ஐந்தெழுத்தின் தாத்பரியம்.

#2500. உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

உள்ளமே உருவம் என்றும், உருவமே உள்ளம் என்றும் கூறுவதன் உண்மையை அறிந்து கொண்டு, உள்ளத்துக்கும் உருவத்துக்கு உள்ள உண்மைத் தொடர்பை உணர்ந்து கொண்டவர் ஞானியர். இவர்களுக்கு துன்பம் தரும் நரகமும் இல்லை; இன்பம் தரும் சுவர்க்கமும் இல்லை. இவர்களுக்கு முப்பாழ்கள் இல்லை. உள்ளம் இல்லாததால், உலகியலில் நாட்டமும் இல்லை. இவர்கள் உடலைக் கடந்து விளங்குவர்.
 
27. முப்பாழ்

ஆன்மாவைப் பற்றியுள்ள மூன்றும் பாழாவது.

மாயைப் பாழ் = மாயை நீங்குதல்


போதப்பாழ் = சீவப்பாழ் = ஆன்ம அறிவு நீங்குதல்


உபசாந்தப் பாழ் = வியோமாப்பாழ் = உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது


#2495 to #2497

2495. முப்பாழ் முடிவுறும்!

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே


ஞான விசாரணையால் மாயையின் செயல்களாகிய வித்தியா தத்துவங்கள் ஏழையும் பொய் என்று அறிந்து கொண்டதும் மாயைப் பாழாகும். தத்துவத் தூய்மை உண்டாகும்.
உடல் பிரக்ஞையும் அதற்குக் காரணமாகிய சிவநிலைகள் ஏழையும் கண்டு கொண்டு அவற்றில் இருந்து நீங்க, ஆன்மத் தூய்மை அடையும். காரிய காரண வேதனை நீங்கினால் உபசாந்தமும் பாழ் ஆகிவிடும். முப்பாழும் நிகழப் பிறவி நீங்கும்


#2496. தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே.


மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.


மாயப்பாழ், போதப் பாழ், வியோமாப் பாழ் என்ற மூன்று பாழ்களும் சிவசக்தியரின் அருளில் சீவன் அடங்கி இருக்கும் மூன்று நிலைகள் ஆகும். அந்தத் தூய்மையான சிவசொரூபத்தில் சீவன் அடங்கி இருப்பது தான் ‘தத்துவமசி’ என்ற சொல்லின் உண்மைப் பொருளாகும்.


#2497. கற்பனை உதறிய பாழ்


எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.


நாளும் உவந்து எருதின் மீது ஏறுகின்ற, தனக்கு ஒப்பார் இல்லாத, பெருமானின் திருவடிகளை அடைய விரும்பிய நான் மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்ற முப்பாழையும் கடந்து, கற்பனைக்கு எட்டாத ஒரு நிலையில் ஒடுங்குகின்றேன்.


#2498 to #2500

#2498. பரம்பரம் என்னும் அருநிலம்

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.


துரியம் கடந்த , சொல்வதற்கு அரிய, பாழினை அடைவது முடியாத செயல் என்று அறிவிலிகள் உரைப்பர். ஆனால் அறிவுடையோர் மேலான நிலை என்று கூறும் பரம்பரம் முப்பாழையும் கடந்த உயரிய நிலை என்பதை யார் அறிவார்?


#2499. சிவாய நம!


ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.


ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய பின்னர், நகாரம் ( ஆணவம் ), மகாரம் (மாயை ) இவை இரண்டும் அகன்று விட, யகாரமாகிய சீவனுக்குப் பரை என்னும் சக்தி அன்னை தன் அருளைத் தருவாள். அந்த யகாரம் ஆகிய ஆன்மா ‘சி’ என்னும் சிவனுடனும் ‘வ’ என்னும் சக்தியுடனும் சென்று இணைந்து ‘சிவாய’ என்று ஆகிவிடும். இதுவே ‘சிவாய நம’ என்னும் திரு ஐந்தெழுத்தின் தாத்பரியம்.


#2500. உள்ளமும் இல்லை உருவில்லை தானே.


உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.


உள்ளமே உருவம் என்றும், உருவமே உள்ளம் என்றும் கூறுவதன் உண்மையை அறிந்து கொண்டு, உள்ளத்துக்கும் உருவத்துக்கு உள்ள உண்மைத் தொடர்பை உணர்ந்து கொண்டவர் ஞானியர். இவர்களுக்கு துன்பம் தரும் நரகமும் இல்லை; இன்பம் தரும் சுவர்க்கமும் இல்லை. இவர்களுக்கு முப்பாழ்கள் இல்லை. உள்ளம் இல்லாததால், உலகியலில் நாட்டமும் இல்லை. இவர்கள் உடலைக் கடந்து விளங்குவர்.


REPOSTED IN THE RIGHT SEQUENCE UNDER THE RIGHT SUBHEADING!
 
28. காரிய காரண உபாதி

28. காரிய காரண உபாதி:
காரிய உபாதி = சீவ உபாதி
காரண உபாதி = பர உபாதி
உபாதி = கட்டு = தளை = பந்தம்


#2501 to #2505

#2501. சிவமாகும் அணுவனே.

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோட
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.


மாயையின் காரியம் ஆகிய வித்தியா தத்துவங்கள் ஏழு. இவை சீவனுக்குத் துன்பத்தைத் தருவன.
சுத்த வித்தை, ஈசுவரன், சதாசிவன், விந்து, நத்தம், சக்தி, சிவன் என்ற எழும் காரணமாகி நிற்பவை.
இந்தக் காரியங்களும், காரணங்களும் நீங்கினால், திரு ஐந்தெழுத்து அமையும். சீவன் சிவன் ஆகும்.


#2502. தொம்பதம்


ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.


ஆறாறு முப்பத்தாறு தத்துவங்கள் ஆகிய காரிய உபாதிகள் அகல வேண்டும்! தத்துவங்களில் இருந்து மாறுபட்ட நின்மல நனவில் பொருந்தும்.
கனவு நிலையிலும், நனவோடு இருந்து கொண்டு, முப்பத்தாறு தத்துவங்கள் நீங்கிய நிலையிலும் உறக்கத்தை அடையாமல், அரிய துரியத்தில் சீவன் தங்கி இருப்பதே தொம்பதம் ஆகும்.


#2503. சிகாரம் சிவமே!


அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.


மூன்று எழுத்துக்கள் கொண்ட ‘ஓம்’ என்னும் பிரணவத்தில்
அகாரம் = உயிர், உகாரம் = பரம், மகாரம் = சிவம் என்று அறிவாய்.

சிவாய என்ற தெய்வீக மூன்று எழுத்துக்களில்
சிகாரம் = சிவம், வகாரம் = பரம், உகாரம் = உயிர் என்று அறிவாய்!


#2504. ஈசன் அருள் அன்றி இயலாது!


உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.


உயிருடன் ஒன்றிக் கலந்து நீக்கம் இல்லாமல் நிறைந்து இருப்பவை காரண உபாதிகள். இவை ஆன்மாவுக்கு அழிவையும், சோர்வையும் அளிப்பவை. நடுங்கச் செய்யும் இவற்றில் இருந்து ஆன்ம விடுபடுவதற்கு என்ன வழி? உயிர் பக்குவம் அடைந்தவுடன் அதனை விட்டுப் பிரியாமல் நிற்கும் ஈசன் கருணையினால் மட்டுமே இந்த உபாதிகளையும் ஆணவத்தையும் அழிக்க முடியும்.


#2505. காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்


காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.


ஆணவ மலக் குற்றங்களால் சீவன் பசுத் தன்மை கொண்டு விளங்குகின்றது. இத்தகைய சீவன் காரிய உபாதிகள் ஏழில் மயங்கி நிற்கும். காரண உபாதிகள் ஏழில் சிவம் கலந்து நிற்கும். காரிய கரணங்கள் ஆன இவை அனைத்தும் கற்பனையே. அசி பதம் காட்டும் பொருளை உணர்ந்து கொண்டு, அதை அனுபவித்தால், அது நீங்கும் போது உண்டாகும் பாழில் மேலான பரன் வெளிப்படுவான்.






 
29. உபசாந்தம்

29. உபசாந்தம்
செயல்கள் ஒழிந்த, விருப்பு வெறுப்புக்கள் இல்லாத,
ஓர் அடைவதற்கு அரிய, அமைதியான, மனோநிலை.

#2506 to #2508


#2506. முத்திக்கு வித்து முதல்வன் ஞானமே

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.


முக்தி என்ற வீடுபேற்றை அடைவதற்கு உரிய வாயில் சீவன் சிவஞானம் பெறுவதே ஆகும்.
பக்தி செய்வதற்கு உரிய வாயில் சீவன் தன் முனைப்பினை விட்டு விட்டுப் பணிந்து சிவன் பாதங்களைப் பற்றுவதே ஆகும்.
அட்டமா சித்திகள் அடைவதற்கு உரிய வாயில் சீவன் சிவத்துடன் சிவனாகப் பொருந்துவதே ஆகும்.
சக்தியை அடைவதற்கு உரிய வாயில் சீவன் விருப்பு வெறுப்புக்கள் இன்றி அடங்கி இருத்தல் ஆகும்.


#2507. உபசாந்தம் அமையும்


காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும் உப சாந்தப் பரிசிதே.


சீவனின் காரிய உபாதைகள் ஏழும் முறைப்படித் தூவா மாயையில் ஒடுங்கி இலயம் அடைந்து விடும். சீவனின் காரண உபாதிகள் ஏழும் முறைப்படிச் சிவத்திடம் சென்று இலயம் அடையும். காரிய காரண உபாதிகளின் வாசனை அறவே நீங்கிய பின்னர், உபசாந்தம் என்ற விருப்பு வெறுப்பு அற்ற உயரிய அமைதியான மனோநிலை தோன்றும்.


#2508. சிவ வியாபகம் தரும் உபசாந்தம்


அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.


சாக்கிர துரியத்தில் ஆன்மா சுத்தி அடையும். பர துரியத்தில் ( சாக்கிரதாதீத துரியத்தில்) பரம் வெளிப்படும். சீவன் சிவதுரியத்தில் சென்று சேர்வது சீவனுக்கு உபசாந்தம் அளிக்கும்.







 
Last edited:
#2509. உயரிய உபசாந்த நிலை

ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.


சீவன் ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களுடன் தொடர்பு உடைய ஆணவ மலத்தினை அகற்ற வேண்டும். தன்னைத் தானே உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும். இவை சாக்கிர துரியத்தில் சீவன் தானே தன்னைத் தூய்மைப் படுத்திக்க கொள்ளச் செய்யும் செயல்கள். பர துரியம் என்னும் சாக்கிராதீத துரியத்தில் கூற இயலாத பரனின் கருணை விளங்கும். இந்த நிலையைக் கடந்த பின்பு சிவ துரியத்தில் உயரிய உபசாந்தம் நிலவும்.


#2510. உபசாந்தத்தின் பத்துப் படிகள்


வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே


உபசாந்த நிலையில் சீவன் தானே சிவம் ஆதல்; சீவன் சிவானந்தத்தில் அமிழ்தல்; பின்பு சீவன் அந்த நினைவையும் விட்டு விடுதல்; சீவன் அளப்பரிய ஆனந்த அனுபவம் பெறுதல், பின்பு சீவன் அதனையும் நீங்குதல் என்பன உபசாந்தம் அடையும் இரண்டாவது ஐந்து படிகள்.

ஆணவம் அழித்தல், தன்னை உணர்தல்; அதையும் ஒழித்தல்; நனவில் அதீதம், வியாத்தம் என்பவை முதல் ஐந்து படிகள். இவை இரண்டும் சேரப் பெற்று உபசாந்தம் அடைய அமைந்துள்ளன பத்துப் படிகள்.

#2511. ஆரமுது உணர்ந்தோன் கரை காண்பான்


பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.


சீவன் சிவசக்தியருடன் பிரிவு எதுவும் இன்றித் திரைகடலில் கலந்த குளிர்ந்த நீர் போல ஒன்றாகக் கலந்து விடும். அங்கு இருந்து கொண்டு குரு உபதேசத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து உயரிய சிவானந்தத்தை அனுபவிக்கும். வாக்குக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அனுபவிக்கும் அந்தச் சீவன் பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரை சேர்ந்து விடும்.




 
30. புறங்கூறாமை

30. புறங்கூறாமை
புறம் = வெளியே
கூறாமை = சொல்லாமல் இருப்பது
உபசாந்த நிலையை அடைந்த பின்பு அதை வெளியே சொல்லக் கூடாது.
புறத்தில் தன் பெருமையைப் பறை சாற்றாமல், அகத்தில் அதன் அருமையை உணர வேண்டும்.

#2512 to #2516


#2512. நிறையறிவோம் என்பர் நெஞ்சிலர்!

பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.

நிலவில் உள்ள முயல் வடிவக் களங்கத்தை அழிப்பதற்கு மணிகள் பதித்த வாளை ஏந்திச் செல்பவனைப் போன்றவனே “கறை மணிக் கண்டனைக் நான் கண்டுள்ளேன்! உனக்கும் அவனைக் காண்பிப்பேன்!” என்று பொய் கூறுபவன்.

#2513. பெருமை பேசுவது நீஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தான் அலைகடல் ஆறசென் றாலே.

கரிய கால்களை உடைய கருடன் வானில் பறந்து செல்லும் போது, கரிய நிறம் கொண்ட பாம்பு புற்றிலோ குளத்திலோ அஞ்சி ஒளிந்து கொள்ளும். அது போன்றே உன் பெருமையை எண்ணாமல், நீயும் அடங்கி இரு மனமே! அருந்த முடியாத உவர் நீர்க்க கடலில் ஆறு என்று கலப்பதை போல நீயும் அடங்குவாய் மனமே!

#2514. தனி உம்பர் ஆமே

கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே.

சீவன் தன் மலங்களைப் போக்குவதற்குக் பிறவிக் கடலின் கருவாயில் நின்று போர் செய்வதில் என்ன பயன்? அது அறிவிலிகள் செய்யும் செயல் ஆகும். உயர்ந்த உபசாந்த நிலையில் செய்கின்ற தவம் கைக்கூடினால், ஒருவன் மக்கள் விரும்பும் அனைத்தையும் அளிக்க வல்ல, ஒப்பற்ற, ஓர் தேவனாகவே ஆகி விடலாம்.

#2515. “எம் ஈசனே ஈசன்” என்று எண்ணுங்கள்!

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.

சிவனிடம் பிணங்கிப் பிற தெய்வங்களை வீணாக நாடாதீர்கள்! பெருநிலம் ஆகிய அனைத்து உலகிற்கும் அவனே ஒப்பில்லாத ஒரு தனித் தலைவன் என்று உணருங்கள். அவனை அன்புடன் வழிபட்டால் தேவகணங்கள் பதினெண்மரும் வந்து உம் தாளைப் பணிந்து ஏத்துவர். அத்தகைய பெருமை வாய்ந்த சிவனையே எப்போதும் நாடி இன்பம் அடையுங்கள்.

#2516. உன்னுவீர் உன்னும் உறுவகையாலே!

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுய ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.


என்னை விட எனக்கு உயிர் ஆனவன் என் இறைவன். அவன் பொன்னிலும் அதிக ஒளி படைத்த புனிதன். எவ்வுயிர்க்கும் உயிராக மின்னும் விகிர்தன் அவன். உன்னும் வகையை அறிந்து கொண்டு உன்னுவீர் அவன் நீர் உய்வடைவதற்கு!





 
#2517 to #2521

#2517. ஒன்றாய் உணரும் ஒருவன் ஆவான்

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.


நிற்கும் போதும், அமரும் போதும், கிடக்கும்போதும், நின்மலனாகிய சிவனையே இடையறாது எண்ணுங்கள். நீங்கள் அவனுடன் ஒன்றும் வழிகளை உறைப்பவர் ஆயினும், ஐம் புலன்களையும் வென்று விடுங்கள். பாசத் தளைகளை விரைந்து துணித்து விடுங்கள். அப்போது நீங்கள் அறிவின் செறிவாகிய சிவனுடன் பிரிவின்றி ஒன்றாவதை உணருவீர்.


#2518. விண்அறிவாளர் விரும்புகின்றாரே.


நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.


சீவன்கள் அனைத்திலும் நுண்ணறிவாய் விளங்குபவன் எந்தை சிவன். ஏழு உலகங்களிலும் எண்ணறிவாக நிறைந்து நிற்பவன் எந்தை சிவன். தன்னை தியானத்தில் பாவிக்கும் மாந்தரின் உண்மையான தகுதியை அறிபவன் எந்தை சிவன். உய்ந்து விண்ணுலக வாழ்வைப் பெற விரும்பும் ஞானியர் எந்தை சிவன் மேல் சிந்தையைப் பொருத்தித் தவம் செய்கின்றனர்.


#2519. பராபரன் ஆகலாம்


விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.


விண்ணவரும் அறியாத வேத விழுப்பொருள் எந்தை சிவன். காலைப் பொழுதில் கண்களை புறவுலகிலிருந்து விலக்கி அகத்தில் செலுத்தி அவனைக் காண வேண்டும். மூன்று பொழுதிலும் எந்தை சிவன் மீது எண்ணத்தைச் செலுத்தி வந்தால், மேலான பரன் ஆகும் தன்மை தானே வந்து சேரும்.


#2520. பொன்றாத போது புனைக் கழலோன்


ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்

பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனை கழலோனே.


ஒப்பார் இல்லாத ஓர் தனித்தலைவனாக உலகு எழும் பரந்து நிறைந்தவன் சிவன். தன் கஞ்சம் நிகர் திருவகளைத் தஞ்சம் அடைந்தவர்களுக்குத் தன் திருவருளை நிறைவாகத் தருபவன் சிவன். தன்னிடம் பிணங்காத நல்ல மனம் உடையவர்களின் அறிவில் பொருந்தி ஒளிவீசுபவன். வாடாத சகசிரதளத் தாமரையையில் தாள் பதித்த கழலோன் ஆவான் சிவன்.


2521. மன்று கண்டேன் அன்று நான்!


போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
ஆற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.


“எந்தை தன் பொன்னடிகள் போற்றி!” என்றேன்! நான் அவன் திருவடிகளைப் போற்றுகையில், காற்றினால் அமைந்த என் உயிர் விளக்குச் சுடர் விட்டு ஒளி வீசியது. உடலுக்கு இன்பம் தரும் ஓர் இனிய நாதம் கேட்டது. அப்போது நான் என் ஈசன் ஆனந்த நடனம் செய்யும் மன்றிலைக் கண்டேன்!



 
#2522 to #2526

2522. கண் மூடிக் கண்டேன் ஏழுலகு!

தே
டிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.


எனக்குள் உறையும் என் நந்தி பெருமானைத் தேடினேன். தேடி அவனை நான் கண்டு கொண்டேன். உள்ளத்தில் உறையும் சிவனைத் தேடாதவர்கள் அவனை என்றுமே காண முடியாது. யோக சாதனை மூலம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையம் கடந்து மேலே சென்றேன். உச்சித் தொளையை அடைந்தேன். மூடிய கண்களுக்குள் அவன் திருக் கோலத்தைக் கண்டேன். அங்கு நான் ஏழு உலகங்களையும் கண்டேன்.


#2523. வானத்தை உடலாகும் வீரன்


ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே.


எந்தை சிவனைப் புகழுவதால் உண்டாகும் ஞானமும், சிவானந்தம் என்னும் இனிய தேனும் இருக்கின்ற சகசிர தளத்தை அறிந்து கொண்டு, தன் உடலைக் கடந்து சென்று , அங்கு தன் நினைவைப் பதித்தவருக்கு வானத்தை உடலாகக் கொண்ட வீரன் விளங்குவான்.


#2524. சாந்தி புக்கு அமைவர்


மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாம்மதி யாகச் சகமுணச் சாந்திபுக்கு
ஆம்மல மற்றார் அமைவுபெற் றாரே.


மாதவம் செய்த முனிவர், மாமதி பெற்று, முழுமதி போல ஒளிர்வர். தூயமதி படைத்த அவர்கள் பரமானந்தத்தில் விளங்குவர். சிவ அறிவில் தம் சீவ அறிவினைப் பொருத்திப் பெறுவதற்கு அரிய உபசாந்தம் என்னும் விருப்பு வெறுப்பு அற்ற சாந்த நிலையை அடைவார்கள். சீவனைப் பீடித்திருந்த மலங்கள் அனைத்தும் அகல, இறையின் திருவடிகளில் அரிய அமைதி பெறுவார்.


#2525. திதம் உற்றவர் சிவசித்தர்


பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்று எனதுயான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.


சாலோகம், சாமீப்யம், சாரூபம் என்ற மூன்று பதமுக்தியையும் நீக்கிவிட்டு; பாசம் என்னும் இருளைத் துறந்து விட்டு; ஆணவ மலத்தை அழித்து விட்டு; ‘யான்’, ‘எனது’ என்னும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களைத் தொலைத்துவிட்டு; சிவத்துடன் பொருந்தி இருப்பவர்கள் சிவசித்தர் ஆவர்.


#2526. சதாசிவத் தன்மை பெறுவர்


சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.


சித்தர்கள் சிவத்தை கண்டறிந்தவர்கள். சித்தர்கள் சுத்த மாயை, அசுத்த மாயைகளில் தோய்த்து இருந்த போதிலும், தாமரை இலைத் தண்ணீர் போல அவற்றுடன் ஒட்டாதவர்கள். இவர்கள் முக்தர்கள். சாயுச்சிய முக்தியை பெற வல்லவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தியை வசப்படுத்தியர்கள். இவர்கள் சதாசிவன் ஆகும் தன்மை பெற்று, உருவத்தில் பொருந்தி இருந்தாலும் அருவமாக விளங்குபவர்.





 
31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை

31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை

அஷ்ட தளக் கமலம் = எட்டு இதழ்த் தாமரை


முக்குணம் = இராசதம், தாமசம், சத்துவம்


அவத்தை = நிலை


தலையைச் சுற்றியுள்ள எட்டு இதழ்த் தாமரை மலரில்,

சீவன் முக்குணங்களால் அடையும் நிலை

#2527. அகத்திலும் அஷ்ட திக்பாலகர்கள்

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.


வெளியில் உள்ள அட்ட திக்பாலகர்களைப் போலவே உடலின் உள்ளும் எண்மர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
கிழக்கு திசை ………….இந்திரன்
தென்கிழக்கு மூலை ……அக்கினி
தென்திசை…………….இயமன்
தென்மேற்கு திசை………நிருதி
மேற்கு திசை…………..வருணன்
வடமேற்கு திசை ………வாயு
வடக்கு திசை…………..குபேரன்
வட கிழக்கு திசை ………ஈசனார்


#2528. ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழுமின்

ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.


மாயா புரியாகிய உடலில் தலையைச் சுற்றி எட்டு திசைகளைக் காட்டும் எட்டு இதழ்த் தாமரை உள்ளது. தலையின் உள்ளே சுடர் விடும் சோதியாகிய சிவனை நினைந்தபடிச் சிறிய வீணா தண்டின் நடுவே உள்ள சுழுமுனை நாடி வழியே நீங்கள் மேலே எழும்புங்கள். அது உங்களை உய்விக்கும்.

#2529. தூல உடல் ஒரு கனவே!

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.


கவிழ்ந்த சகசிர தளத்தில் கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று கலைகள் உள்ளன. இறைவன் தன் சுடரொளியைப் பாய்ச்சி ஆயிரம் இதழ் தாமரையையும் அந்த மூன்று கலைகளையும் நன்கு விரிவடையச் செய்கின்றான். அந்த நிலையில் தூல உடல் இருந்தும் இல்லாமல் ஒரு கனவு போல ஆகிவிடும்.



 
#2530 to #2532

2530. விழுப்பொருள் விளங்கும்

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுபொருள் தானே.


உடலின் ஆறு ஆதாரங்களின் வழியே நீர் போலப் பாய்ந்து செல்லும் உணர்வு. இது பிரமரந்திரம் என்னும் குளத்தைச் சென்று அடையும். இந்த ஆறு ஆதாரங்களையும் ஒருமுகப் படுத்தும் பயிற்சியே நூறுதல் என்னும் பிழிதல். இந்த நுண்ணிய நிலையில் சிவகதி அமைந்துள்ளது. பிரமரந்திரத்தில் குவிமுலை நுண்கொடி இடையாள் குண்டலினி சக்தியும் அவளில் இருந்து வேறாகிய சிவமும் இருப்பர்.


#2531. முகையெட்டும் உள்நின்று உதிக்கின்றவாறே.


திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.


ஆதி பிரான் சிவன் தானே எட்டுத் திசைகளாகவும், எட்டுத் தேர்களாகவும், எட்டுத் தேவதைகளாகவும், எட்டு மூர்த்திகளாகவும் பிரிந்து நிற்பவன். அவனுடன் ஐந்து கன்மேந்திரியங்களாலும், ஐந்து ஞானேந்திரியங்களாலும், இவற்றுடன் மனம், புத்தி என்ற இரண்டும் சேர்ந்த பன்னிரெண்டாலும் பொருந்தி நில்லுங்கள். அப்போது உலள்ளே இருக்கும் எட்டு இதழ்த் தாமரை வெளி முகமாக மலரும்.


#2532. பரநிலை, பராபர நிலை


ஏழுஞ் சகளம் இயம்பும் கடந்து எட்டில்
வாழும் பரமென்று அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே


எட்டு திசைகளில் கிழக்கு முதலாக வடக்கு வரையில் உள்ள ஏழு திசைகளும் சீவனின் உருவம் பொருந்தும் நிலைகள். எட்டாவது திசையாகிய ஈசான திசையில் பரம் ஆசிய ஈசானன் உள்ளான். நடுவில் ஒன்பதாவது நிலையில் பரம் அப்பறம் ஆகிய சதாசிவம் உள்ளது. மேல் நோக்கி நிமிர்ந்த பத்தாவது நிலையே ஆணவம் அற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருக்கும் சீரிய நிலை ஆகும்.




 
#2533 to #2536

2533. ஊழி உச்சியில் பகவன்

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே


பல ஊழிகளைச் சீவர்களின் நன்மைக்காகச் செய்பவன் சிவன். அவனே சிவசூரியனும் ஆவான். அவனே இறைவனும் ஆவான். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளில் சிவன் செய்யம் சம்ஹாரம் அண்டகோசத்திற்குள் நிகழ்வது. ஊழியிலும் இருந்து கொண்டு ஊழியைக் கடந்து நிற்கும் தன்மை உடையவன் சிவன்.


#2534. பரமாகாசத்தில் பரமனைப் பற்றுங்கள்


புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே.


சிவன் செயல் புரிவது இந்த உலகினில் என்றாலும் அவன் இங்கு இருந்து கொண்டு எட்ட முடியாதவன். அவனைப் பற்றிக் கொள்வதற்கு உகந்த இடம் எது என்று அறிவீரா? திக்கு யானைகள் இருக்கின்ற, தேவர்கள் திரிகின்ற, மழையும், வெய்யிலும், காற்றும் இயங்குகின்ற பரமாகாசம் ஆகும்.


#2535. சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை


ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.


சீவனின் தலை உச்சியில் உள்ள மேருவின் சிகரத்தில், ஆறுகள் இல்லாமலேயே நிறம்புகின்ற பிரம்மரந்திரம் என்ற அரிய குளம் ஒன்று உண்டு. அங்கே சேறு இல்லாமலேயே, உடலின் ஆறு ஆதாரங்கள் என்ற செழுங் கொடியில் மலர்ந்த, சகசிரதளம் என்ற தாமரை உள்ளது. ஒளிக் கற்றைகளை உடைய புரிசடையான் சிவன் அந்தத் தாமரையை அன்றி வேறு மலரைச் சூடிக் கொள்ள மாட்டான்.

#2536. விகிர்தனை நாடும் திருவுடையவர்

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.


மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களும் ஒருங்கி அடங்கிய ஒருவர் நின்றாலும், இருந்தாலும், உலக இயலை அலசினாலும், ஐம்புலன்களை வென்ற காரணத்தால் எப்போதும் விகிர்தன் சிவனையே நாடுவர். அவர்கள் செல்லும் போதும், இருக்கும் போதும், சிவனையே இடையறாது நாடுவதால் திருவுடையவர் ஆவர்.




 
32. நவாவத்தை, நவாபிமானி

அவத்தை = உணர்வுநிலை


சீவனின் ஒன்பது அவத்தைகள்:


சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி,

பர சாக்கிரம், பர சொப்பனம், பர சுழுத்தி,
சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவ சுழுத்தி.

நவாபிமானி = இந்த ஒன்பதிலும் அபிமானம் உடையவன்


#2537 to #2539

#2537. ஒன்பது நிலைகளில் சீவனின் பெயர்கள்

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பன் அவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே
.


துவம்பத நிலையில் உள்ள சீவனின் பெயர்கள்: விசுவன், தைசதன், பிராஞ்ஞன்.
தற்பர நிலையில் உள்ள சீவனின் பெயர்கள்: விராட்டன், இரண்ய கர்ப்பன், அவ்யாகிர்தன்.
அசி பதத்தில் உள்ள சீவனின் பெயர்கள்: இதயன், பிரசாபத்தியன், சாந்தன்.


1. விசுவன்…சாக்கிர நிலையில் பருவுடலைப் பற்றிய சீவன்

2. தைசதன்…கனவு நிலையில் நுண்ணுடலைப் பற்றிய சீவன்

3. பிராஞ்ஞன்…சுழுத்தியில் காரணவுடலைப் பற்றிய சீவன்

4. விராட்டன்…பரு உடலுக்குக் கர்த்தா = உலகின் முதல்வன்.

5. இரண்யகர்ப்பன்…பொன்னிற வண்ணன் = சூக்கும உடலுக்கு கார்த்தாவானவன்

6. அவ்யாகிர்தன் = பிரிக்கப்படாதவன்

7. இதயன் = தாமத குணத்தைப் பற்றி நிற்பவன்

8. பிரசாபத்தியன் = இராசத குணத்தைப் பற்றி நிற்பவன்

9. சாந்தன் = சத்துவ குணத்தைப் பற்றி நிற்பவன்.


#2538. சீவன் சிவனுடன் பொருத்த வேண்டும்.


நவமாம் அவத்தை நன்வாதி பற்றில்
பவமாம் மலம்குணம் பற்றறும் அற்றால்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொருபம் அதுஆமே.


சீவனின் நவாவத்தைகள் ஆகிய ஒன்பது நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். பிறவிக்கு காரணம் ஆன்மாவைப் பற்றியுள்ள மலங்களும் குணங்களும் ஆகும். அவற்றின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அரிய தவத்தினால் அடையக் கூடிய, என்றும் மாறாத, அறிவு மயமாகிய ஞானவெளியில் சீவன் சிவனுடன் துரியத்தில் வேறுபாடுகள் இன்றிப் பொருந்த வேண்டும். இதுவே சீவனின் உண்மைச் சொரூபம் ஆகும்.


#2539. சீவன் சிவமாகித் தான் அல்ல ஆகும்.


சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
தவமான மவையாகித் தானல்ல வாகுமே.


சிந்தையில் சிவனைப் பதித்திருப்பதால் சீவனின் தனித் தன்மை அழிந்துவிடும். பவமான பிறவிக்கு காரணம் ஆகிய மும்மலங்களும் ஒழியும். ஒன்பது அவத்தைகளில் இறுதியாகக் கூறப்பட்டது தவத்தினால் அடையமுடியும். அப்போது சீவன் சிவன் ஆகும் தன்மை கொண்டு விடும்.







 
#2540 to #2542

#2540. சிவன் சீவனைத் தான் ஆகச் செய்வான்

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செய்த வாண்டவன் தான்சிறந் தானே.


முன் சொன்ன நவாவத்தைகளைப் போலவே இன்னும் ஒன்பது அவத்தைகள் உள்ளன. இந்த பதினெட்டு அவத்தைகளையும் சீவன் ஒழித்துவிட வேண்டும். அப்போது சிவன், சீவனையும் சிவன் ஆக்கித் தானாகவே ஆக்கிவிடும்.

#2541. என் வல்வினை அறுப்பான்

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்து எம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினையோடு அறுத் தானே
.

தவத்தில் உயர்ந்தவர்கள் பொருட்டுச் சிவன் விரும்பத் தகுந்த பதினான்கு வித்தைகளை ஏற்படுத்தினான். நான் என்றும் அவன் உன்னத நிலையை நாடுவேன். அல்லும் பகலும் அவனை என் பிரான் என்று தேடுவேன்.
அவன் என் வலியை வினைகளை அவற்றின் மூலத்தோடு அழித்து விடுவான்.

#2542. நிலம் பல ஆறினன் நீர்மையன்

நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல ஆறினன் நீர்மையன் தானே.


காலத்தின் நீண்ட வீதியில் அவனை அடையப் பல வேறு வழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அல்லும் பகலும் இடைவிடாது அவனையே உன்னுங்கள்! பல நிலங்களில் பல வடிவங்களில் நிலைத்திருக்கும் தன்மையான் ஆவான் நம் ஒப்பற்ற தலைவன்.


 
#2543 to #2545

#2543. ஒன்பது பேதங்களாக நிற்பான்

ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநல் தத்துவம்
ஓதுங் கலை மாயை ஓரிரண்டு ஓர் முத்தி
நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே


ஆதியாகிய பராபரம், பராபரை, சோதி வடிவான பரம், சீவன், தத்துவங்கள், கலைகள், சுத்த மாயை, அசுத்த மாயை, வீடு பேறு என்ற ஒன்பது பேதங்களாக ஆகி நிற்பான் ஆதி பிரான் ஆகிய சிவபெருமான்.


#2544. தெளியார் பிறவி ஒழியார்!


தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.


தேறாத என் சிந்தையைத் தெள்ளத் தெளிவித்தவன் சிவன். சுவர்க்கமும் நரகமும் வேறு வேறாக இருக்கும்படி அமைத்தவன் அவனே. ஆறாத பிறவியை உயிர்களுக்கு அருளியவனும் அவனே. இந்த உண்மைகளைத் தெளிவாக அறியாதவர்கள் தொடரும் பிறவிகளை ஒழிக்க மாட்டார்கள்.


#2545. சிவமாதல் சித்தாந்த சித்தியே.


ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.


இந்த ஒன்பது அவத்தைகளையும் சீவன் விரும்பும். இந்த ஒன்பது அவத்தைகளிலும் சீவன் அபிமானத்துடன் பொருந்தும். இந்த ஒன்பது நிலைகளையும் கடந்து சென்று சீவதுரியம், பர துரியம், சிவதுரியம் இவற்றில் சிவத்துடன் பொருந்திச் சிவமாக ஆவதே, சித்தாந்தத்தினால் சீவன் அடையும் பயன் ஆகும்.



 
33. சுத்தா சுத்தம்

33. சுத்தா சுத்தம்

சுத்தா சுத்தம் = சுத்தம் + அசுத்தம்

சுத்தம் = அகத் தூய்மை இருப்பது
அசுத்தம் = அகத் தூய்மை இன்மை

#2546 to #2549


#2546. ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்

நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே.


சீவனின் நாசி நுனியில் இருந்து ஈசன் பன்னிரண்டு விரற் கடை உயரத்தில் உள்ளான். எனினும் உலகினர் பலர் இதை அறிவதில்லை. சிவத்தை பற்றி விரிவாகப் பேசுகின்ற பெரிய வேதமும், ஈசனின் வடிவத்தை பற்றி விரிவாகக் கூறுவதற்குக் கூசி இருக்கின்றது. அதன் குணம் அதுவே ஆகும்.

#2547. கன்மக் கயத்துள் புகுமே.

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிக்கு
அருவினை யாவது கண்டு அகன்று அன்பிற்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.


சீவன் புரியும் வினைகளின் பயன்கள், அவற்றைச் செய்பவன் மனக்கருத்தையும், அவன் விரும்பும் கர்ம பலனையும் பொறுத்து அமைகின்றன. இந்த வினைகளும், வினைப் பயன்களும் சீவனின் பிறவி தொடருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த உண்மையை அறிந்து கொண்ட சீவன், எந்தப் பயனையும் விரும்பாமல், எந்த உரிமையும் கொண்டாடாமல், அன்பால் மட்டும் செய்யும் நல்ல வினைகள் அந்த சீவனின் கர்மத்தை அழித்து விடும்; பந்தத்தை நீக்கிவிடும்; பிறவியை ஒழித்து விடும்.

#2548. காயமும் இல்லை கருத்தில்லை தானே.

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே.


மாயை ஒரு கனத்த திரையாகி சீவனின் உண்மை சொரூபமாகிய சிவத்தை அதனிடமிருந்து மறைக்கும். மாயை என்னும் திரை விலகியவுடன் சீவனின் உண்மை சொரூபம் ஆகிய சிவம் வெளிப்படும். மாயையை மறையச் செய்ய வல்லவர்களுக்கு உடலும் இல்லை, மனமும் இல்லை, பிறவி எடுக்கும் எண்ணமும் இல்லை.

#2549. வலிய சாதனையின் பயன்

மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்றது அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்து அங்கு அனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.


யோகப் பயிற்சியால் பிராணனைப் புருவ மத்தியை அடையச் செய்ய வேண்டும்.
உடலில் கோழை வந்து அடைக்கின்ற உண்ணாக்கு வழியை மேல் நோக்கித் திறக்க வேண்டும். கபாலத்துக்குச் செல்லும் வழியை அடைந்து அங்கு பிராணனைக் கீழே இறங்கி விடாமல் சிறைப் படுத்த வேண்டும். குண்டனிலி சக்தியின் அக்கினிக் கலையை நன்கு வளர்த்த வேண்டும். குண்டலினி தாழ்வான உலக விஷயங்களை
ப் பற்றிக் கொண்டு கீழே செல்லாதவாறு தடுத்து நிறுத்துவதே வலிய சாதனையின் பயன் ஆகும்.





 
#2550 to #2553

#2550. காயத்தினுள்ளே கமழ்கின்றான் நந்தி!

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிபவர்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.


சீவனின் உடலில் ஒன்றாகக் கலந்து உறைபவனை, சீவனின் உடலை உலகில் நடத்துபவனை, சீவனின் உடலில் உயிரின் உயிராக இருந்து கமழ்கின்ற சிவபெருமானை, புற உலகு எங்கும் வீணாகத் தேடித் திரிகின்றார்களே! அவர்கள் அந்த ஈசன் நேசத்துடன் தம் காயத்தில் உறையும் மாயத்தைச் சற்றும் அறியாதவர்கள்.


#2551. மானிடமே ஆசூசம் ஆகும்!


ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே.


“பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.


#2552. ஆசூசம் இல்லாத தூயவர்கள்!


ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.


தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது.
சிவனைச் சிந்தையில் நிலைபெறச் செய்த மெய்யன்பர்களுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது.
மூலத்தீயை வளர்த்து அக்கினிக்கலையை வளர்ப்பவர்களுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது.
அருமறைகளை அறிந்து உணர்ந்து தெளிந்த ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது.


#2553. கழி பட்டவர் மட்டுமே காண்பர்!


வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.


யோகத்தின் வழியில் நின்று சிவனை வணங்குபவர்களுக்கு, உச்சிக்கு குழியில் உள்ள சகசிர தளம் சிறப்பாக அமையும். அங்கு ஒளி பெருகி, அவர்கள் தூய்மை அடைவார்கள். உலக இன்பம் என்ற பாழும் குழியில் விழுந்துவிட்ட மனிதர்கள் யோகங்கள் உணர்த்துகின்ற குறிகளில் சென்று பொருந்தார். வீணா தண்டின் நுனியில் பொருந்தியுள்ள கீழ் நோக்கிய ஆயிரம் இதழ்த் தாமரையை மேல்முகமாகச் செய்பருக்கே சிவன் விளங்கும்.



 

Latest posts

Latest ads

Back
Top