• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#123 to #127

# 123. பேரின்பம்

அளித்தான் உலகுஎங்கும் தான்ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

உலகம் முழுவதும் சிவமயமாக இருக்கும் உண்மையை என் ஈசன் சிவபெருமான் எனக்கு நன்கு உணர்த்தினான். தேவர்களும் அறிந்திடாத ஓர் உலகை எனக்குக் காட்டினான். பரமாகாயத்தில் ஆனந்த நடனம் செய்யும் திருப் பாதங்களை என் தலை மேல் அன்புடன் சூட்டினான் அந்த இறைவன். பேரின்பமாகிய அருள் வெளியையும் எனக்குத் தந்தான்.

# 124. சிவசித்தர்


வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியு மவரே சிவசித்தர் தாமே.


சிவசித்தர்கள் அறிவர் இந்த உண்மைகளை. சிவன் விளங்கும் சிதாகாசப் பெருவெளியில் ஆகாய மயமான ஆன்மா கலக்கும் விதத்தையும்; சிவ பிரானது இச்சையில் ஆன்மாவின் இச்சை சென்று அடங்குகின்ற விதத்தையும்; சிவ ஒளியில் ஆன்ம ஒளி ஒடுங்கும் விதத்தையும்; அறிவால் தெளிந்து கண்டவர்களே சிவ சித்தர்கள்.

#125. தத்துவங்கள் முப்பத்தாறு


சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர்,
நித்தர், நிமலர், நிராமயர், நீள்பர
முத்தர் தம்முத்தி முதல் முப்பத்தாறே.


சிவலோகத்தில் அடையக் கூடிய பேரின்பத்தை சித்தர்கள் தம் சமாதி நிலையிலேயே பெறுவர். நாதத்தையும், நாதத்தின் முடிவாகிய நாதாந்தத்தையும் அவர்கள் தமக்குள்ளேயே காண்பர். அவர்கள் அறிவு அற்றவர், நிர்மலமானவர்,குற்றமற்றவர், தூய இன்பத்தில் திளைத்திருப்பவர்.

இத்தகைய சித்தர்களுக்கு முக்திக்கு வழியாகும் கீழ்கண்ட முப்பத்தாறு
தத்துவங்கள்.

ஆன்ம தத்துவம் ….. 24

வித்தியா தத்துவம்….7

சிவ தத்துவம்…….. ….5


#126. சிவமாகத் திகழ்வர்


முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்கு
செப்ப அரிய சிவம்கண்டு, தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந்தாரே.


முப்பத்தாறு தத்துவங்களையே முக்தியை அடைவிக்கும் சிறந்த ஏணியின் பல படிகளாக அமைத்துக் கொண்டு,ஒப்பில்லாத சிவானந்தத்தைத் தரும் ஒளியில் புகுந்து, சொல்வதற்கு அரிய சிவபெருமானைத் தரிசித்தவர்கள் அந்த சிவத் தன்மையை அடைந்து சிவமாகத் திகழ்வார்கள்.

# 127. ஆன்ம சுத்தி


இருந்தார் சிவமாகி எங்கும் தாம்ஆகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழிவு வந்து, எய்திய சோம்பே.


சித்தர்கள் சிவத் தன்மையை அடைந்து விட்டதால் தாமும் சிவன் போல எங்கும் நீக்கமற நிறைந்திருப்பர். சிவன் செயல்களை நோக்கிய வண்ணம் இருப்பர். முக்காலங்களின் இயல்பையும் அறிந்து இருப்பர். தமக்கென்று தனியாகச் செயல் இன்றி இருப்பர்.
 
#128 to #132

#128. நாதாந்தம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்த இடம்
சோம்பர் கண்டார் அச் சுருதிக்கண் தூக்கமே.


தன் செயல் இல்லாமல் சிவன் செயலாக இருப்பவர் சோம்பர். அவர்கள் தங்கி இருப்பது தூய வெளியாகிய சிவ வெளியிலே. அவர்கள் பேரின்பத்தில் திளைப்பதும் தூய சிவ வெளியிலே. முப்பத்தாறு தத்துவங்களின் இறுதியில் உள்ளது நாதம் எனில் அதன் முடிவே ஆகும் நாதாந்தம் என்னும் உயர்ந்த நிலை.


#129. கூற இயலுமோ?


தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே.


தூங்கிக் கண்டவர் நாதாந்த நிலையை அடைந்து விட்ட சிவசித்தர்கள். அவர்கள் யோகநிலையில் தம்முள் சிவலோகத்தைக் காண்பவர்கள். அவர்கள் தமக்குள்ளேயே சிவனுடன் இணைந்து இருப்பவர்கள். அவர்கள் தமக்குள்ளேயே சிவபோகமான பேரின்பத்தைத் தூய்ப்பவர்கள்.அவர்கள் நிலையை அந்த அனுபவம் இல்லாதவர்கள் கூற இயலுமோ?


#130. பக்குவமும் பரிசும்


எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.


அறிவுக்கு எல்லையானவன் சிவபெருமான். நாம் அவனை எந்த முறையில் அணுகுகின்றோமோ, நம்மை அவனும் அதே முறையில் அணுகி அருளுவான். ஆதியான சிவன் ஒப்பற்ற மன்றத்துள் திருநடனம் செய்வான், உமை அன்னை கண்டு மனம் மகிழும் வண்ணம். செவ்வானத்தை விடவும் சிறந்த, சிவந்த, ஒளி வீசுகின்ற ஓர் அற்புதமான மாணிக்கம் ஆவான் நம் சிவபெருமான்.


#131. சித்தர்கள் மகிழ்வர்


மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்
மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினு ஆடுந் திருக் கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே.


சிரசின் மீது மாணிக்கம் போன்ற சிவந்த ஒளியுள் (சிவத்தினுள்) கொடி போன்று பின்னிக் கிடக்கும் பச்சை நிற ஒளி (சக்தி தேவி). அந்தப் பச்சை நிற ஒளியே சிவன் நிருத்தியம் செய்யும் மாடம். அந்த மண்டபத்தில், பசும் பொன் போன்ற பரமகாயத்தில், சிவன் ஆடும் திருக் கூத்தைக் கண்ட சிவயோகியர் மகிழ்வர்.


#132. மௌனமே மொழி


பெற்றா ருலகில் பிரியாப் பெருநெறி
பெற்றா ருலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றாரம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றா ருலகுடன் பேசப் பெருமையே.


பொன் போன்று ஒளிரும் வெளியில் விளங்கினாலும், சிவசித்தர்கள் உலகை விட்டுப் பிரிந்து நிற்பதில்லை.உலகத்தினருக்கு உதவுவதையே தம் கொள்கையாக கொள்வர். உலகில் இருந்து கொண்டு உலகத்தினருக்கு உதவினாலும் அவர்கள் மீண்டும் உலகில் பிறவாத பெரும் பேறு பெறுவார். தம் சேவையை பந்தமின்றிச் செய்வதுவே காரணம் ஆகும்.



 
133 to #137

#133. சாதகர்

பெருமை, சிறுமை அறிந்துஎம் பிரான் போல்
அருமை, எளிமை அறிந்து, அறிவார் ஆர்?
ஒருமையுள் ஆமை போல், உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு, இருந்தார் புரை அற்றே.


அண்டதிலும், அணுவிலும் நிறைந்திருப்பவன் சிவபெருமான். அவற்றின் அருமை பெருமைகளை அவனைப் போல் யார் அறிவார்? ஆமை போல் ஐம்பொறிகளையும் ஐம் புலன்களின் மேல் செல்லாது அடக்கி, மனத்தை ஒருமைப் படுத்திய சாதகர்கள், சிவ பெருமானைப் போலவே பெருமை சிறுமை இவை இரண்டையும் முழுமையாக உணர்ந்திருப்பார்.


#134. கரை அற்ற சோதி


புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்
திரை அற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்தசத்து ஆமே.


புரை இடாத பாலில் நெய் எங்கும் விரவி இருக்கும். எண்ண அலைகள் ஓய்ந்த மனத்துடன், ஆசிரியன் கூறும் உபதேச மொழிகளைக் கேட்டு, அதனை உணர்ந்து கொண்டு, உடல் என்ற உணர்வை ஒருவன் முற்றிலுமாக ஒழித்தால், எல்லை இல்லாத சோதியாகிய சிவத்துடன் இணையலாம்.


#135. சுடரில் சுடர் சேரும்


சத்தம் முதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்து அன்றிச் சேர்விடம் வேறு உண்டோ?
சுத்த வெளியில், சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டுகொள் அப்பிலே.


சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து தன்மத்திரைகள் அறிவற்றதாகிய அஹங்காரத்தில் ஒடுங்கி விடும் என்றால்,அறிவு மயமாகிய ஆன்மா சென்று ஒடுங்குவதற்கான இடம் அறிவு மயமான சிவனை அன்றி வேறு இருக்க முடியுமா? பரமாகாயமான சுத்த வெளியில் சிவ ஒளியுடன் ஆன்ம ஒளி இணையும். என்னையும் ஒரு பொருளாகக் கருதி, அருள் நீராட்டி, என்னை ஆட்கொள்ளுவாய்.


#136. சீவனும், சிவனும்


அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்புஎனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடி அது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.

கடல் நீரில் கலந்துள்ள உப்பு கண்ணுக்குத் தெரியாது. ஆனால் சூரியனின் வெப்பம் அதைக் கண்ணால் காணமுடிகின்ற உப்பாக மாற்றுகின்றது. அந்த உப்பை மீண்டும் கடல் நீரில் இட்டால் முழுவதுமாகக் கரைந்து கலந்து விடுகின்றது.
சிவத்திலிருந்து சீவன் வெளிப்படுகின்றது.சிவத்திலேயே சீவன் மீண்டும் அடங்க வேண்டும்.


#137. திருவடிகளே!


அடங்கு பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடங்கொண்டதில்லை இதுவன்றி வேறு உண்டோ ?
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே.


எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவன் சிவன். உயிரின் எல்லையான அண்ட கோசம், இறைவனின் எல்லையற்ற பரப்பினுள் சென்ற பொருந்துகின்றது. பேரண்டத்தில் சீவனின் அண்ட கோசம் அடங்குவது பொருத்தமே.அதைத் தவிர அடங்கும் இடம் என்று வேறு ஏதாவது உண்டோ? உடல் தோறும் உள்ள உயிர், தான் சேரும் இடத்தை ஆராய்ந்தால்
அது எல்லாவற்றுக்கும் ஆதாரமான இறைவன் திருவடிகளே ஆகும்



 
#138 to # 142

#138. திருவடியே தஞ்சம்

திருவடியே சிவமாவது நேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.


ஆராய்ந்து நோக்கிடில் திருவடிகளே சிவம் ஆகும். சிந்தித்தால் திருவடிகளே சிவலோகம் ஆகும். சொல்லப் போனால் திருவடிகளே முக்திக்கு நெறியாகும். உள்ளம் தெளிந்தவர்களுக்குத் திருவடிகளே தஞ்சம் ஆகும்.

#139. தெளிவு


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே.


தெளிவைத் தருபவை இவையே! சிவகுருவைப் பேரொளியாகச் சிரசின் மேல் காணுதல்; சிவகுருவின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல்; சிவகுருவின் உபதேச மொழிகளைக் கேட்டல்; சிவகுருவின் திருமேனியைச் சிந்தித்தல்.

#140. புலன்கள் செலுத்தும்


தானே புலனைந்தும் தன் வசமாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடை மாறும்
தானே தனித்தெம்பி ரான்தனைச் சந்தித்தே.


உயிர் உலகில் இருந்து விலகி குருவை அடையும் பேறு பெற்றால், மனம் ஐம்புலன்கள் வழியே செல்லாது உயிர் வழியே செல்லத் துவங்கும். ஐம்புலங்கள் தரும் இன்பங்களில் அது கொண்ட ஆர்வம் அழிந்து விடும். அப்போது ஐம்புலன்களே ஆன்மாவை இறைவனை நோக்கிச் செலுத்தும்.

#141. பொற்போதம்


சந்திப்பது நந்திதன் திருத்தாளிணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமமென் வாய்மையாற்
புந்திக்குள் நிற்பது நந்தி பொற் போதமே.


இடைவிடாது நான் சந்திப்பது சிரசின் மேல் சிவன் திருவடிகளை. இடைவிடாது நான் சிந்திப்பது சிவனின் சிவந்த திருமேனியினை. இடைவிடாது நான் வணங்குவது சிவனின் திருப்பெயரினை. இடைவிடாது என் அறிவில் விளங்குவது சிவன் திருவடி ஞானம்.

#142. வான் மண்டலம்


போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.


புண்ணிய வடிவான சிவபெருமான் மேன்மையான தன் திருவடி ஞானத்தை நமக்கு அளிப்பான். அப்பெருமானை அறிவில் பொருத்தியவர் புண்ணியர் ஆவர். அவர்கள் நாதனின் ஆனந்த நடனத்தைக் கண்டு களி கூர்வர். அவர்கள் வேதங்கள் புகழ வான்வெளியை அடைவார்கள்.

ஆசான் கூறும் உபதேசம் முற்றியது. தொடர்வது யாக்கை நிலையாமை
 
#143 to #147

#143. பச்சை மண்கலம்

மண்ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர் விழின் மீண்டும் மண் ஆவபோல்
எண்ணிறந்த மந்தர் இறக்கின்றவரே.


மண் ஒன்றே என்ற போதிலும் அதில் உருவாகும் கலங்கள் இருவகைப்படும். தீயினைச் சார்ந்த மண்கலம் நல்ல வலிமை பெறும். எளிதில் உடையாது. தீயினைச் சாராத மண்கலம் மென்மையாக இருக்கும். எளிதில் அழிந்துவிடும். மழை நீர் விண்ணிலிருந்து பொழிந்தால் பச்சை மண்கலம் முற்றிலும் அழிந்து மீண்டும் மண்ணாகவே மாறிவிடும். சுட்ட மண்கலம் மழை நீரில் கரையாது. அழியாது. தீயாகிய சிவன் அருள் வயப்பட்ட உடல் அழிவதில்லை. திருவருள் வயப்படாத பச்சை மண்கலம் போன்ற உடல் அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் உலகில் பிறக்கின்றது.


#144. உடன் வழி நடவாது!


பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.


கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும். உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும், நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.


#145. நினைப்பு ஒழிப்பர்


ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடை கொண்டு போய்க் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.


உடல் விழுந்த பின் ஊரெல்லாம் கூடி ஓலம் இடும், அழும். அவன் பேரை மாற்றி விட்டுப் பிணம் என்று அழைப்பர். முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் கொண்டு உடலை எரித்து விட்டு பிறகு நீராடி எழுந்ததும் அந்த மனிதனைப் பற்றி மறந்தே போவார்கள்.


#146. போன உயிர் மீளாது.


காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்றுஉள,
பாலுள் பருங்கழி முப்பத்திரண்டு உள,
மேல்உள கூரை பிரியும் , பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புகஅறி யாதே.


இரண்டு கால்கள் உள்ளன வீடாகிய உடலுக்கு. உச்சி உத்தரமாக உள்ளது ஒரு முதுகுத்தண்டு. இரு பக்கங்களிலும் உள்ளன முப்பது இரண்டு விலா எலும்புகள் ஆகிய பருத்த சாற்றுக்கழிகள். இவை அனைத்தையும் மூடியுள்ளது தசை என்னும் கூரை. ஒரு நாள் கூரை பிரிந்துவிடும். அப்போது உயிர் நீங்கிவிடும். மீண்டும் உயிர் அந்த வீட்டுக்குள் புகுவதை அறியாது.


#147. ஆக்கை பிரிந்தது


சீக்கை விளைந்தது, செய்வினை மூட்டிற்று;
ஆக்கை பிரிந்தது; அலகு பழுத்தது;
மூக்கினில் கைவைத்து மூடிக்கொண்டு போய்
காக்கைக்குப் பலி வைக்கின்றவாறே.


உயிர் பிரியும் வேளையில் கபம் மிகவும் அதிகரித்தது. வினைகளுடன் உடல் கொண்ட தொடர்பு நீங்கியது. உடல் நீங்கியது. எலும்புகளின் வன்மை கெட்டது. மூக்கில் கை வைத்துப் பார்த்து விட்டு, ஒரு துணியால் உடலை மூடி, எடுத்துக் கொண்டு செல்கின்றனர். வாயில் அரிசி இட்டு இறுதிக் கடன்களைச் செய்கின்றனர்.



 
#148 to #152

#147. ஆக்கை பிரிந்தது

சீக்கை விளைந்தது, செய்வினை மூட்டிற்று;
ஆக்கை பிரிந்தது; அலகு பழுத்தது;
மூக்கினில் கைவைத்து மூடிக்கொண்டு போய்
காக்கைக்குப் பலி வைக்கின்றவாறே.


உயிர் பிரியும் வேளையில் கபம் மிகவும் அதிகரித்தது. வினைகளுடன் உடல் கொண்ட தொடர்பு நீங்கியது. உடல் நீங்கியது. எலும்புகளின் வன்மை கெட்டது. மூக்கில் கை வைத்துப் பார்த்து விட்டு, ஒரு துணியால் உடலை மூடி, எடுத்துக் கொண்டு செல்கின்றனர். வாயில் அரிசி இட்டு இறுதிக் கடன்களைச் செய்கின்றனர்.


#148. இடப்பக்கம் நொந்தது.


அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.


நல்ல உணவைச் சமைத்தார். அதை உண்டார். இளம் பெண்களுடன் இன்பம் அனுபவித்தார். இடப்பக்கம் கொஞ்சம் வலிக்கின்றது என்றார். கீழே படுத்தவர் அதன் பின்னர் எழவே இல்லை.


#149. திரிந்திலன்


மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது;
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்;
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்;
சென்று, ‘அத்தா’ என்ன, திரிந்திலன் தானே.


மாடி வீடு கட்டினான். மகிழ்வுடன் அதில் வாழ்ந்தான். பலர் காணும்படி பல்லக்கில் பவனி வந்தான். பலருக்கு புத்தாடைகளை வாரி வழங்கினான். அவன் உயிர் நீங்கிய பிறகு, அவன் மக்கள் அவனை “அப்பா!” என்று அழைத்தபோது அவன் எழவில்லை.


#150. பாசம் மறைந்துவிடும்


வாசந்தி பேசி மணம் புணர்ந்து, அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவர் பின்னை
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீச்சுட்டுப் பலிஅட்டி னார்களே.


நிச்சய தாம்பூலம் செய்து, மணம் புரிந்து கொண்ட கணவன் அன்பு மனைவிக்குத் திகட்டி விடும். அவன் நினைவையும் அவள் மறந்து விடுவாள். அவன் இறந்த பின்னர் அவனைப் பாடையில் வைத்துப் பொருத்தமாக அழுது புலம்பி, அவன் மீது வைத்த பாசத்தையும் அவனுடன் தீயினில் சுட்டுவிட்டு அவனுக்குப் பிண்டம் இடுவாள்.


#151. மெய் விட்டுப் போவர்.


கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சுஅற
நெய்அட்டுச் சோறு உண்ணும் ஐவரும் போயினர்;
மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடை கொள்ளு மாறே.


நாடி பார்க்கும் வைத்தியர் அவனைக் கைவிட்டு விடுவார். எண்ணும் திறன் அழிந்து விடும். உயிர் இயக்கம் நீங்கும். நெய் கலந்து உண்ட நாக்கு முதலிய ஐம்பொறிகள் செயலறும். மையிட்ட கண் மனைவியும், ஈட்டிய செல்வமும் இருக்கும். அவன் உடலை விட்டு உயிர் நீங்கும் வகை இதுவே ஆகும்.


#152. அழுதுவிட்டு அகலுவார்.


பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.


உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது. உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது. உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன. துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது. அன்பு கொண்ட உறவினர்கள் அழுவிட்டு அகன்று சென்றார்கள்.



 
#153 to #157

#153. நம்பி நடக்கும் முறை

நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.


நாட்டின் தலைவன், ஊருக்குத் தலைவன் ஏறுவான் காட்டுக்குச் செல்லும் சிவிகையில் கடைசி முறையாக. நாட்டு மக்கள் அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அவன் முன்னே செல்பவர்கள் பறை ஒலிப்பார்கள். நாட்டின் தலைவன் காடு செல்லும் முறை இதுவே ஆகும்.

#154. தத்துவங்கள் தொண்ணூற்றாறு


முப்பதும் முப்பதும் முப்பதறுவரும்
செப்பம் மதிள் உடைக் கோவிலுள் வாழ்பவர்.
செப்பம் மதிள் உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.


தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்வர். நல்ல மதிள் அமைந்த கோவில் ஒன்றில். மதிள் சிதைந்தவுடன் அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கோவிலை விட்டு ஓடி விடுவார்கள்!

தொண்ணூதராறு தத்துவங்கள் :-

1. சிவ தத்துவம் …………………5

2. வித்தியா தத்துவம்……………..7

3. ஆன்ம தத்துவம்……………….24

4.பஞ்ச பூதக் காரியங்கள்……………25

5. வாசனாதிகள்…………………..5

6. வாயுக்கள்…………………….10

7. நாடிகள்………………………10

8. வாக்கு………………………..4

9. ஏடணை ……………………..3

10. குணம்………………………3


1, 2, 3 சேர்ந்தவை முப்பத்தாறு தத்துவங்கள்

4 முதல் 10 வரை உள்ள அறுவது
ம் தாத்துவிகம்

#155. வைத்து அகலுவார்கள்


மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ் சுடுகாடுஅது நோக்கி
மதுஊர வாங்கியே வைத்து அகன் றார்களே.


தேன் சிந்தும் மலர் சூடும் மனைவியும், ஈட்டிய செல்வமும், கட்டிய வீடும் இந்த உலகிலேயே தங்கிவிடும். உயிர் பிரிந்த உடலை ஊருக்குப் பொதுவாக புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிப் பாடையில் எடுத்துச் செல்வர். மன மயக்கத்துடன் உடலைச் சிதையில் வைத்துவிட்டு அகலுவர்.

#156. பொருளைத் தேடுகின்றனர்!


வைச்சு அகல்வு உற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாது என நாடும் அரும் பொருள்
பிச்சு அதுவாய்ப் பின் தொடர்வுறும், மற்று அவர்
எச்சு அகலா நின்று, இளைக்கின்றவாறே.


உடலை வைத்து விட்டு நீங்கும் மனிதர்கள் சிறிதும் உணர்வதில்லை உயிர் பிரிந்துவிடும் என்ற உண்மையை. தம் உயிர் தம் உடலை விட்டுப் பிரியாது என்று எண்ணிப் பித்துப் பிடித்தவர் போல பொருட்களை நாடித் தேடி, அலைந்து, குலைந்து, தம் மேன்மை அழிந்து வருந்துகின்றார்களே!

#157. பந்தம் இலார்


ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.


ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர். வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள். நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.




 
#158 to #162

#158. உடலைக் காப்பாற்ற மாட்டார்.

வளத்து இடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்;
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பார்.
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே.


வளமையான இடைப் பகுதியின் முன்னால் கருப்பை என்னும் ஒரு குளம் உள்ளது. நான்முகன் என்னும் குயவன் அதில் உடல் என்ற ஒரு மண் குடத்தை உருவாக்கினான். வெறும் மண்ணால் ஆன குடம் உடைந்தால் அதன் ஓட்டைப் பாதுகாக்கும் மனிதர்கள் நான்முகன் செய்த மனித உடல் என்னும் குடம் உடைந்தால் அதைப் பாதுகாக்க மாட்டார்.


#159. உடல் பயன் அற்றதாகும்


ஐந்து தலைப்பறி, ஆறு; சடை உள
சந்து அவை முப்பது; சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே.


உடலில் பொறிகள் ஐந்து உள்ளன. உடலில் ஆதாரங்கள் ஆறு உள்ளன. வாயுக்கள் பத்து; நாடிகள் பத்து; மன மலங்கள் ஆறு; வாக்குகள் நான்கு என மொத்தம் முப்பது உள்ளன.

சிவதத்துவங்கள் ஐந்து, வித்திய தத்துவங்கள் ஏழு, ஞானேந்திரங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, பிரகிருதி ஒன்று என மொத்தம் பதினெட்டு உள்ளன.
யோனிகளின் வேறுபாட்டினால் உடம்பு ஒன்பது வகைப்படும் அங்கே அனுபவிக்கும் பதினைந்து அம்சங்கள் இவைகள்.
சத்து ஆதி ஐந்தும் , வாசனைஆதி ஐந்தும் மற்றும் குணங்கள் மூன்று இன்பம் துன்பம் எனப் பயன்கள் இரண்டு.

எரியூட்டிய உடல் வெந்து கிடப்பதையே நாம் காண்கின்றோம் மற்ற இவைகள் என்ன ஆயின என்பதை எவரும் அறியோம்.

#160. அத்திப் பழமும் அறைக் கீரையும்


அத்திப் பழமும் அறைக்கீரை நல் வித்தும்
கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர்;
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்து உண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே.


சுக்கிலம், சுரோணிதம் இவற்றால் ஜீவனின் உடலை உண்டாக்கினான். இருவினைகளின் பயன்களைக் கலந்து உயிருக்கு உணவாகச் சமைத்தான். ஊழ்வினைப் பயன்களை அந்த உயிர் உண்டு அழித்தும், கழித்தும் விட்டது. உயிர் நீங்கிய பிறகு உடம்பை எரிக்கத் துணிந்து அதை கத்திக் கதறி அழும் அழுகை ஒலியுடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர் உற்றார் உறவினர்கள்.


#161. உடல் அழிந்துவிடும்.


மேலும் முகடு இல்லை , கீழும் வடின்பு இல்லை,
காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்று உண்டு;
ஓலையால் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையாள் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.


உடல் என்ற வீட்டுக்குக் கூரையும் ( தலையும்) இல்லை. கீழே அதற்குத் தேவையான அடிநிலையும் இல்லை. இரண்டு கால்கள் ( இடகலை, பிங்கலை) மட்டும் உள்ளன. நடுக்கால் (சுழு முனை நாடி என்ற ) ஒன்றும் உள்ளது. வேலையாள் வரிச் சுழி இட்டுக் கூரையை வேயாததால் (அவன் சுழு முனை வழியே பிராணனைச் செலுத்தாததால்) அழகிய கோவில் ஆகவேண்டிய உடல் அழிந்து விட்டது.


#162. தீயினில் தீய வைத்தனர்


கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை,
ஆடும் இலயமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடியே தீயினில் தீய வைத்தார்களே.


உயிர் பிரிந்த உடல் உலகில் கிடந்தது என்றாலும் அதன் அழகும், பொலிவும் அகன்று சென்று விட்டன. ஆடி ஓடும், உண்டு உழைக்கும் தொழில்கள் நின்று விட்டன. சிலர் அருட்பாடல்களைப் பாடினர்; சிலர் இசையுடன் ஒப்பாரி வைத்தனர்; சிலர் தீயினில் வைத்து தீய வைத்தனர்.



 
#163 to #167

#163. எழுபது ஆண்டுகள்

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்,
இட்டது தான்இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மாணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில், கேடுஅறியீரே.


கருமுட்டையில் உருவான உடல் பிறந்தது அதற்குப் பத்து மாதங்கள் கழிந்த பின்னர். அந்த உடல் அதன் விருப்பப்படி உருவானது அல்ல என்ற உண்மையை அறிவீர் அறிவற்றவர்களே! பன்னிரண்டு வயதில் அதன் உலக வாசனை வெளிப்பட்டது. எழுபது வயதில் அந்த உடல் கெட்டு அழிந்தது போனது.


#164. நிலையற்றது உடல்


இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருள் ஆவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.


உடல் என்ற அகல் விளக்கை இங்கேயே விட்டு விட்டு உயிர் என்ற தீபஒளியைக் காலன் எடுத்துச் சென்றான்.அறிவிலிகள் உடல் அழியும் தன்மை வாய்ந்தது என்று அறியாமல் வீணே அழுது புலம்பி வருந்துகின்றனர். பிறப்பும், இறப்பும், விடியலும், இரவும் போல மாறி மாறி வருபவை. நிலையற்ற உடலை நிலையென்று நம்பிப் பதைபதைக்கின்றனரே!


#165. ஏழு நரகங்கள்


மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழாம் நரகில் கிடப்பர்
குடர் பட வெந்தமர் கூப்பிடுமாறே.


இதழ்கள் மலர்ந்த கொன்றையை அணிபவன் சிவபெருமான். மாயையாகிய சக்தி தேவிக்கும் அவனே ஆதாரம் ஆவான்.
அவன் படைத்த உடலிலும் உயிரிலும் சிவன் கலந்து விளங்குகின்றான். அவனை வணங்காமல் வாழ்நாளைக் கழித்துவிட்டுப் பிறகு குடல் வருந்தி உறவினர்கள் கதறும்படி ஏழு நரகங்களில் சென்று வருந்துவான் மனிதன்.


#166. இடம் வலமாகும்


குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அக்காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம் வளம் ஆருயிராமே.


வெண்கொற்றக் குடையின் கீழ், குதிரை மீது அமர்ந்து,செங்கோலும், வாளும் ஏந்திக்கொண்டு, நான்கு பக்கங்களிலும் மக்கள் சூழ்ந்து வரச் செல்லும் தலைவனுக்கும் கண நேரத்தில் அழிவு வரலாம். அவன் உயிர் இடம் வலமாகச் சுழன்று நின்று விடலாம்.


#167. உணர்வும் அழிந்துவிடும்


காக்கை கவரில் என்? கண்டார் பழிக்கில் என்?
பால்துளி பெய்யில் என்? பல்லோர் பழிச்சில் என்?
தோல் பையுள்நின்று தொழில் அறச் செய்து, ஊட்டும்
கூத்தன் புறப்பட்டுப்போன இக் கூட்டையே.


உடல் என்னும் தோல் பையில் இருந்து கொண்டு வினைகளை முடிவு பெறச் செய்பவன் சிவன். வினைகளின் பயன்களை ஊட்டுபவன் சிவன். உயிராக விளங்கிய அவன் வெளியேறிய பிறகு இந்த உயிரும் உணர்வும் அற்ற வெறும் உடலைக் காக்கை கொத்தினால் என்ன? கண்டவர் பழித்தால் என்ன? பாலைத் தெளித்தால் என்ன? பலர் பழித்தால் என்ன?



 
3. செல்வம் நிலையாமை

#168 to #172

#168. மருளும் தெருளும்

அருளும் அரசனும் ஆணையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரோடும் செல்வனைச் சேரில்
மருளும் பினை அவன் மாதவம் அன்றே.


அரச பதவியையும், யானைப் படையையும், தேர்ப் படையையும், பொருட் குவியலையும், பிறர் கவர்ந்து செல்லும் முன்னமே ஒருவன் தெளிந்த அறிவுடன் நிலையான செல்வமாகிய சிவபெருமானின் அடிகளைச் சேர வேண்டும். அதன் பின் அவன் பெருந் தவத்தையும் விரும்பான்.

#169. பெருஞ்செல்வம்


இயக்குஉறு திங்கள் இருட் பிழம்பு ஒக்கும்
துயக்குஉறு செல்வதைச் சொல்லவும் வேண்டா;
மயக்குஅற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப் பெருஞ் செல்வம் ஆகுமே.


விண்ணில் இயங்கும் நிலவு ஒளி குன்றிப் போகும். மண்ணில் செல்வம் அதுபோன்றே தளர்ச்சி அடைந்துவிடும். பொருள் மயக்கத்தைத் தொலைத்து விட்டு அடைவீர் விண்ணவர் கோன் ஆகிய சிவபெருமானையே. அப்போது மழை மேகம் போன்ற பெருஞ் செல்வம் உண்டாகும்.

#170. அகஒளி


தன்னது சாயை தனக்கு உதவாதது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன்னுயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காண் ஒளி கண்டு கொள்ளீரே.


ஒருவனது நிழல் அவனுக்கு உதவாது. தனக்கு அயலாக உள்ள செல்வம் உதவும் என்று எண்ணுபவர்கள் அறிவற்ற மூடர்கள். உடலுடன் ஒன்றாகப் பிறந்தது உயிர் என்றாலும் உடல் அழிந்துவிடும் அதன் உயிர் பிரிந்துவிட்டால்! அகக் கண்ணில் உள்ள நிலையான ஒளியை நீங்கள் உடல் உயிருடன் இருக்கும்போதே கண்டு கொள்வீர்.

#171. வலியார் கொள்வார்


ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திவிட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கை விட்டவாறே.


மலர்களின் மணத்தால் ஈர்க்கப்பட்ட தேனீ அதன் தேனைச் சேகரித்து மரக்கிளையில் தேன்கூட்டில் கொண்டு சேர்க்கும்.
வலிய வேடன் அந்தத் தேனீக்களைத் துரத்திவிட்டு விட்டு அந்தத் தேனை எடுத்துச் சென்று விடுவான். அது போன்றே
செல்வம் சேகரிப்பவர்களுக்குத் துன்பம் தரும்.

#172. செல்வம் நிலையற்றது


தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்று பெருக்கில் கலக்கி மலக்கதே
மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வதைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.


அறிந்து கொள்ளுங்கள் செல்வம் நிலையற்றது என்று. அறிந்தபின்பு நன்கு அறிவில் தெளிவடையுங்கள். தெளிவடைந்த பின்னர் அஞ்சி மலைக்கதீர். ஆற்றில் பெருகும் வெள்ளம் போல பெருகும் செல்வதைக் கண்டு மனம் மயங்காதீர்கள். பெருகும் வெள்ளம் பின்பு வடிந்து குறைவது போன்றே பெருகும் செல்வமும் பின்பு குறைந்து விடும். மேன்மையான செல்வமான சிவன் அருள் மீது நீங்கள் பற்றுக் கொண்டீர்கள் என்றால் யமனையும் வெல்ல முடியும்.





 
#173 to #176

#173. கவிழ்கின்ற படகு செல்வம்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.


முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.

#174. ஒண்பொருளை மேவுங்கள்


வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்த
தாரும் “அளவு ஏது எமக்கு” என்பர் ஒண்பொருள்
மேவும் தனை விரிவு செய்வார்கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.


மனைவியும், மக்களும், உடன் பிறந்தோரும், உலகப்பொருட்களும் என்னிடம் அளவில்லாமல் உள்ளனர் என்று எண்ண வேண்டாம். உயிருக்கு உதவாத இவற்றை விடுத்து ஓருவன் உற்ற இடத்தில உதவக் கூடிய சிவத்தை நாடினால் அது அவனைக் கூவி அழைத்து மேலான தன்னிடத்தே இணைத்துக் கொள்ளும்.

#175. போம் வழி ஒன்பது


வேட்கை மிகுந்தது மெய் கொள்வார் இங்கு இல்லை,
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்து, அவர் கைவிட்ட வாறே.


உலக வாழ்வில் ஆர்வம் பெருகியது. ஆனால் உண்மைப் பொருளை அறியும் ஆர்வம் இல்லை. உடலை நிலையாக நிறுத்துவதற்கு உள்ளது சுழுமுனை என்னும் ஒரே ஒரு தறி மட்டும். ஆனால் அழிக்கும் வழிகள் உள்ளன ஒன்பது.

உறவுகளை நிலை நாட்டியவர்கள் உடலை வணங்கிப் பிறகு சுடுகாட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள்.

#176. இல்லை மரண வேதனை


உடம்போ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலையெண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும் பரிசத்தையுஞ் சூழகிலரே.


உயிர் உடலைப் பிரிவதை வெல்லும் வகை ஒன்றும் இல்லை. இறைவனை நினைந்திருப்பதே ஒரே வழி ஆகும் யம தூதர்கள் நமக்கு மரண வேதனையைத் தராமல் காத்துக் கொள்வதற்கு.

செல்வம் நிலையாமை முடிவு பெற்றது.
அடுத்து வருவது இளமை நிலையாமை.

 
4. இளமை நிலையாமை

#177 to #181


#177. இளமை நிலையாது

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில்
விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே.


கிழக்கில் உதிக்கும் இளம் சூரியன் மேற்கில் விழுந்து மறைவதைக் கண்ட பிறகும் இளமையின் நிலையாமையை உணரமாட்டர்கள் அறிவில்லாதவர்கள். இளம் கன்று முதிர்ந்து எருதாகி மூப்படைந்து மறைவதைக் கண்ட பிறகும் வாழ்க்கை நிலையாமையை உணரமாட்டார்கள்.

#178. சிவ ஒளி


ஆண்டுகள் பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை;
நீண்ட காலங்கள், நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.


அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

#179. இளமையே நல்ல சமயம்


தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.


சிறிது சிறிதாக இளமை தேய்ந்து மறைந்து விடும். அரிய கருமங்களை முதுமையில் செய்ய இயலாது. எனவே உயிரும் உடலும் நன்றாக இருக்கும் போதே கங்கை நதி அணிந்த சிவனை நன்றாக ஆராய்ந்து அடைந்து அவனிடம் ஒன்றாகப் பொருந்தி விடுங்கள்.

#180. முதுமை கொடுமை

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.


இளமையில் மெல்லியல் கொண்ட மங்கையர் ஒரு ஆணை அடிக் கரும்பின் சாற்றைப் போல மிகவும் விரும்புவர். தாமரை மொக்குப் போன்ற நகில்களும் அழகிய நகைகளும் அணிந்த மாதர் வயது முதிர்ந்த பிறகு அதே ஆணை எட்டிக் காயைப் போல வெறுப்பார்கள்.

#181. பல பருவங்கள்


பாலன், இளையன், விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்;
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்தது விரும்புவன் நானே.


பாலன் என்றும் இளையவன் என்றும், முதியவன் என்றும் பல பருவங்கள் உண்டு ஒரு மனிதனின் உலக வாழ்வில். இந்த உலகத்தைக் கடந்து அண்டங்களை ஊடறுத்து நிற்கும் இறைவன் திருவடிகளிடம் மேலும் மேலும் அன்பு செய்வேன்
 
#182 to #186

#182. வாழ்நாள் வீணாகலாகாது

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்; அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.


காலையில் எழுவதும், மாலையில் உறங்குவதும் வாழ் நாளைக் குறைக்கின்ற செயல் மட்டுமே ஆகும். வாழ் நாளை இங்ஙனம் வீணாக்கும் மனிதர்கள் மீது ருத்திரன் சினம் கொள்வான் என்ற போதிலும் தன்னை ஏற்ற முறையில் நினைப்பவருக்கு இன்பமே அளிப்பான்.


#183. பரு ஊசி


பருஊசி ஐந்தும் ஓர் பையினில் வாழும்
பருஊசி ஐந்தும் பறக்கும் விருகம்;
பருஊசி ஐந்தும் பனித் தலைப்பட்டால்
பருஊசிப் பையும் பறக்கின்றவாறே.


பருத்த, கூர்மையான ஊசிகளைப் போன்றவை நம் ஐம்பொறிகள். தோல் பையைப் போன்ற நமது உடலில் இவை அமைந்துள்ளன.பறந்து சென்று, இழிந்த பொருட்களை உண்ணும் காகத்தைப் போலவே உடலின் ஐம்பொறிகளும் இழிந்த பொருட்களையே நாடுபவை. சிரசில் உள்ள பனிப் படலம் போன்ற ஒளியில் அந்த ஐம்பொறிகள் சென்று அமைந்து விட்டால், ஐம்பொறிகள் கொண்ட உடலின் உணர்வு அகன்று விடும்.

[நின்மல சாக்கிரத நிலை ஏற்பட்டு உடல் உணர்வுகள் ஒழிந்துவிடும்.]

#184. முப்பது ஆண்டுகள்


கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்உறு வாரையும் வினை உறு வாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்தொழிந்தாரே.


குளிர்ந்த நிலவும், காயும் கதிரவனும், உலகத்தவர் உடலில் இருந்து கொண்டு அவர்கள் வாழ்நாட்களை அளந்து கொண்டு இருக்கின்றார்கள். இதைப் பலர் அறிவது கூட இல்லை. விண்ணுலகப் பேறு அடையப் போகின்றவர்களையும் வினைப் பயனாக மீண்டும் மண்ணுலகத்தையே அடையப் போகின்றவர்களையும், சூரிய சந்திரர் முப்பது ஆண்டுகளில் இனம் கண்டு கொண்டு விடுவர்.


{இடகலை பிங்கலை நாடிகள் நன்கு அறியும் ஆன்மீகத் தேடலில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு. முப்பது வயதுக்குள் ஆன்மக் கலையை அறிந்து கொண்டவர்கள் விண்ணுலக வாழ்வடைவர். மற்றவர் மண்ணுலக வாழ்வடைவர்}


#185. திகைப்பு ஒழியாதவர்


ஒன்றிய ஈரெண் களையும் உடன் உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்று அதில் வீழ்வார் திகைப்பு ஒழியாரே
.


பதினாறு கலைகளும் பொருந்தி உடன் நிற்கும் போது அவற்றின் வழியே சென்று மேலே விளங்கும் ஈசனைச் சிறிதும் நினைப்பதில்லை நீசர்கள். ருத்திரன் சினம் அடைந்து மீண்டும் கருக்குழியில் வைத்த பின்னர் மீண்டும் பிறவிக்கடலில் வீழ்வார் மனமயக்கம் ஒழியாதவர்கள்.


#186. உண்மையை உணர்ந்தேன்


எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே.


பிரசாத நெறியில் மேலே சென்று, சந்திர மண்டலம் விளங்கும் போது, இளமை நீங்காது இருக்கின்றபோதே ஈசனைத் துதித்துப் புகழ்ந்து பாடுங்கள். இவ்வாறு அறிந்து கொள்ளவில்லை நான் பிராண இயக்கத்தை. தியானத்தில் பொருந்தி இருந்து உண்மையை உணர்ந்து கொண்டேன்.



 
5. உயிர் நிலையாமை

#187 to #191


#187. தொழ அறியாதவர்

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.


பூங்கொம்பில் தழைக்கும் செந்தளிர்கள், மற்றும் அழகிய மலர்கள் போன்றவை. இவை அனைத்துமே சருகுகளாக மாறி விடும். இதைக் கண்ட பிறகும் கூட உயிர் உள்ளபோதே மக்கள் இறைவன் திருவடிகளைத் தொழுவதில்லை. எங்கனம் வணங்குவர்யமனிடமிருந்து அழைப்பு வந்த பிறகு?

#188. உடலை ஓம்ப வேண்டும்


ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது,
ஐவருமச் செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகனோலை வருதலால்
ஐவருமச் செய்யைக் காவல்விட்டாரே.


பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற ஐவர் தத்தம் தொழில்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விளை நிலமாக ஓர் உடல் கிடைத்தது. அந்த ஐவரும் அந்த உடலை நன்கு ஓம்புவார்கள் அதன் வினைப் பயன்களை அதற்கு ஊட்டி விடுவார்கள். இவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அந்த உடலின் வினை நுகர்வு முடிந்தவுடன் இறுதிச் சீட்டு அனுப்புவான்.அதன் பிறகு இந்த ஐவரும் அந்த உடலை ஓம்ப மாட்டார்கள்.

#189. கோவில் மண்ணாகி விடும்


மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அதுள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
அதுள்ளே வாழும் அரசம் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.


மாயை என்ற மண்ணால் உருவாகிய உடல் ஒன்று உண்டு. அதில் உயிர்ப்பை நிறுத்தவும் விடுக்கவும் இரண்டு இடங்கள் உள்ளன. அந்த உடலில் பற்றுக் கொண்டு வாழும் ஜீவன் ஆகிய அரசன் அங்கு உள்ளான். ஆனால் அந்த அரசன் அந்த உடலை விட்டு நீங்கிய உடனேயே கோவில் போன்ற அந்த உடல் மீண்டும் மண்ணாக மாறி விடும்.

#190. வேதாந்தக் கூத்தன்


வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்கவல்லார் உயிர் தாம் அறியாரே.


சிரசின் மேல் ஈசான திசையில் விளங்குபவன் சிவன். வேதம் கூறும் வாக்கின் வடிவான பிரமமும் சிவன். வெந்து அழியும் இடலில் தீயாக இருப்பவனும் சிவன். தம் உடம்பாக சிவன் இருக்கும் உண்மையை அறியாதவர் உடலைத் தாங்கும் உயிரைப் பற்றியும் அறியாதவர் ஆவர்.

#191. அகங்காரத்தை வென்றவர்


சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந்நிலத்தில் மனிதர்கள்
பொன்று உணர்வாரின் புணர்க்கின்ற மாயமே.


சிவன் என்னும் சூரியன் பத்து திசைகளிலும் சென்று அங்குள்ள அனைத்தையும் உணர்வான். சிவன் உணர்வு மயமாக விளங்குவான். உடலில் பரவியும் விரவியும் அனைத்தையும் உணர்கின்றான். இந்த உண்மையை உலகத்தவர் சற்றும் அறிவதில்லை. ‘நான்’ என்னும் அஹங்காரத்தை வென்று விட்ட ஞானியரிடம் சிவன் கலந்து விளங்கும் உண்மையையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
 
#192 to # 196

#192. அழிந்துவிடும் தன்மை

மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.


நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே.

#193. வீணாள் ஆக்காதீர்கள்


துடுப்புஇடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்புஇடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்துஎரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.


சுழுமுனை என்னும் அகப்பை உள்ளது நம் உடலில். உடலாகிய பானைக்கு தகுந்த அரிசி ஆகும் விந்து. சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் சேர்ந்த அடுப்புக்குத் தகுந்த விறகுகள். உடலின் பஞ்சப் பிராணன்கள். இவற்றை வீணாக்காதீர்கள். விந்து சக்தியைத் தந்து விட்டு அமுதத்தைப் பெறுங்கள். நாட்களை வீணாக்காதீர்கள்!

துடுப்பு = அகப்பை => சுழுமுனை
பானை = > உடல்
அரிசி => விந்து
அடுப்பு => நாபி ஸ்த்தானம்
மூன்று => சூரியன் , சந்திரன், அக்னி
கொள்ளி => ஞானம் என்னும் தீ
அஞ்சு => பஞ்சப் பிராணன்கள்.


#194. புறம் நின்ற கருத்து


இன்புஉறு வண்டு அங்கு இனமலர் மேல்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே.


இன்பத்தைத் தேடும் வண்டுகளின் கூட்டம். பூக்களில் உள்ள சுவை மிக்க தேனை உண்ணும். அது போன்ற உயிர்களும் இன்பத்தையே நாடும். சோம சூர்யாக்னிகளின் ஒளியில் விளங்கும் நம் ஈசன் புறப் பொருட்களை நாடும் மனத்துள் விளங்க மாட்டான்.

#195. விதிகள் ஒன்றும் இல்லை


ஆம்விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதுஎன் சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே.


இந்தப் பிறவியில் அறவழியில் நில்லுங்கள். இன்பம் தரும் நெறியில் ஒழுக்கத்துடன் இருங்கள். ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனைப் போற்றுங்கள். மனிதப் பிறவியை பெற்ற நற்பேறு உடையவர்களுக்குக் கூறுவதற்கு என்று வேறு என்ன விதிகள் உள்ளன?

#196. பகிர்ந்து உண்ணுங்கள்


அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது
தவ்விக் கொடு உண்ம்மின் தலைப்பட போதே.


வஞ்சனை, பொய், துன்பம் தரும் தீய சொற்களைப் பேசாதீர். அறநெறி கெடுமாறு தீய செயல்களைச் செய்யாதீர். பேராசை கொண்டு பிறர் பொருட்களைக் கவராதீர். சிறந்தவர்களாக நற்பண்புகளுடன் விளங்குங்கள். உண்ணும் பொழுது எவரேனும் வந்தால் அவர்களுக்கு ஓர் அகப்பை உணவு கொடுத்துவிட்டுப் பிறகு உண்ணுங்கள்.

(உயிர் நிலையாமை முற்றியது, அடுத்து வருவது கொல்லாமை)

 
6. கொல்லாமை
#197 and #198

#197. சிவபூசை

பற்றுஆய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்று ஆரும் ஆவி அமர்ந்த இடம் உச்சியே.


பற்றுக் கோடாக விளங்குபவன் நம் ஈசன். அவன் பூசைக்கு உகந்த மலர் ஆவது கொல்லாமை. நல்ல மாலை ஆவது கண் மலர்களின் நல்ல ஒளியே. சலனமற்ற மனமே பூசைக்கேற்ற நல்ல தீபம் ஆகும். பூசைக்கு உகந்த இடம் ஆகும் தலையின் உச்சி.

#198. தீவாய் நரகம்


கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர் வலிக் கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.


“கொல்! குத்து!” என்ற கூறி வந்த மனித மிருகங்களை வலிமை வாய்ந்த கயிற்றால் பிணிப்பர் யம தூதர்கள். “செல்! நில்!” என்று அவர்களை அதட்டியும், அச்சுறுத்தியும், தீ வாய் நரகத்தில் நெடுங்காலம் நிற்கும்படி ஆணையிடுவர்.

 
7. புலால் மறுத்தல்

#199 and #200

#199. மறித்து வைப்பர்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.


பிற உயிர்களைக் கொன்று தின்னும் கயவர்களை, யமதூதர்கள் எல்லோரும் காணும்படி எடுத்துச் செல்வர். கரையானைப் போல பறித்துச் சென்று அவர்களை நரகத் தீயில் மல்லாக்கக் கிடத்தித் தண்டனை தருவர்.


#200. பேரின்பம்


கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலையான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே.


கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் இவை ஐம் பெரும் பாவங்கள் எனப்படும். இவற்றை விலக்கி விட்டுத் தம் தலையால் சிவன் திருவடியைச் சார்ந்தவர்கள் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து இருக்கலாம். இப்பாவங்களும் அவற்றால் விளையும் துன்பங்களும் அவர்களைப் பற்றா.



 
8. பிறர் மனை நயவாமை

#201 to #203


#201. பலாக்கனி

ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே
காத்த மனையாளைக் காமுறு காளையர்
காய்ச்ச பாலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.


அன்பு கொண்ட தன் மனைவி வீட்டில் இருக்கும் போது, அவளை விடுத்து பிறன் ஒருவனால் காக்கப்படும் அவன் மனைவியை ஒருவன் விரும்புவது வீட்டில் உள்ள பழுத்த பலாக் கனியை உண்டு இன்புறாமல் காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பம் அடைவது போன்றது.

#202. தேமாங்கனி


திருத்தி வளர்த்தது ஓர் தேமாங்கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங்கொம்பு ஏறிக்
கருத்து அறியாதவர் கால்அற்ற வாறே.


நன்றாக வளர்க்கப் பட்ட தேமாங்கனி போன்றவள் தன் மனைவி. அவளை ஒரு சேமிக்கும் பொருளாக கருதி, வீட்டில் புதைத்து விட்டு, பொருத்தம் இல்லாத புளியம்பழத்தை உண்பதற்கு மரம் ஏறிவிட்டு, கருத்துத் தெளிவு இன்றி மனிதர்கள் வருத்தம் அடைகின்றாகளே.

#203. மாதர் ஆசை


பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்ட மாதர் மயல் உறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே.


பொருள் மீது பற்றுக் கொண்டவர்களும், அறிவை மறைக்கும் அறியாமை என்ற இருளில் தோன்றிய சிறு ஒளியைப் போன்ற அறிவினைப் பெரிதாக மதிப்பவர்களும், மருண்ட பார்வை உடைய மங்கையரிடம் மயங்குவர். அவர்கள் அந்த மயக்கத்தை மாற்ற முடியாது.


 
9. (பொது) மகளிர் இழிவு

#204 to #208

#204. எட்டிப் பழம்

இலைநல ஆயினும் எட்டி பழுத்தால்
குலைநல ஆம் கனி கொண்டு உணல் ஆகா
முலைநலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறும் நெஞ்சினை வெய்து கொள்ளீரே.


எட்டியின் இலை அழகானதாக இருக்கலாம். எட்டி குலை குலையாகப் பழுக்கலாம். ஆயினும் கவர்ச்சியில் மயங்கி அந்த எட்டிக் கனியை உண்ணல் ஆகாது. அது போன்றே தம் அங்கங்களின் அழகைக் காட்டியும், புன்முறுவல் பூத்து வசீகரிக்கும் பொது மகளிரிடம் மயங்காமல் விலகிச் செல்ல வேண்டும். அந்தப் பெண்களை நாடுகின்ற மனத்தையும் முயன்று அடக்க வேண்டும்.

#205. மங்கையர் அன்பு


மனைபுகுவார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவதுபோலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாட வொண்ணாதே.


அயலார் மனையில் புகுந்து அவர் மனைவியை நாடுவது ஒருவனை நீரில் மூழ்குபவனை மலைச்சுனையில் புகுந்த நீர் போலச் சிக்க வைக்கும். கனவு போன்ற தோற்றம் தந்து, அவர்கள் மீது தோன்றுகின்ற சிறு அன்பை, நனவு போல உண்மையானதாக எண்ணி அவர்களை நாடக் கூடாது.

#206. அகன்று ஒழிவர்


இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயல்உறும் புல்லின் புணர்ந்தவரேயினும்
மயல்உறும் வானவர் சார இரும் என்பர்
அயல்உறப் பேசி அகன்று ஒழிந்தாரே.


இளம் பெண்யானைய நிகர்த்த பொதுமகளிர், ஒருவனால் மழைநீர் கொண்ட புல்லைப் போலத் தழைத்திருந்தாலும், மையல் கொண்டு தேவன் போன்ற புதிய ஒருவன் வந்துவிட்டால், முன்பே தன்னைப் புணர்ந்தவனை வெளியே இருக்கச் சொல்வார்கள்.

#207. கரும்புச் சாறா? வேம்பா?


வையகத்தே மடவாரொடும் கூடி ஏன்
மெய்யகத்தோரும் வைத்த விதி அது
கையகத்தே கரும்பாலையின் சாறு கொள்
மெய் அகத்தே பெரும் வேம்பது ஆமே.


உலகில் மங்கையரோடு உறவாடுவதால் என்ன பயன்? மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் கூறுவது இதுவே. மங்கையர் புணர்ச்சி வெளியே கரும்பின் சாறு போல இனித்தாலும் உண்மையில் அது உடல் உள்ளே வேம்பைப் போல கசப்பது ஆகும்

#208. ஆசையால் அழிவர்


கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில்லாவிடில்
பூழைநுழைந்து அவர் போகின்றவாரே.

ஆடவர்கள் தம் சுக்கிலத்தைப் பெண்களின் அழுக்கான பாசி மூடிய குளம் போன்ற கருக்குழியில் விடுவார்கள். அதனால் இன்பம் அடைவார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாவிடில் சிறு பாதைகளில் ஒளிந்து மறைந்து சென்றாவது அழிவை நடுவார்கள்





 
10. நல்குரவு ( வறுமை )

#209 to #213

#209. வாழ்க்கை போய்விடும்

புடவை கிழிந்தது; போயிற்று வாழ்க்கை;
அடையப் பட்டார்களும் அன்புஇலர் ஆனார்;
கொடை இல்லை; கோள் இல்லை; கொண்டாட்டம் இல்லை;
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே.


உடுத்துக் கிழிந்து போன ஆடை பயனற்றது ஆகும். அதுபோன்றே வறியவர் வாழ்வும் பயனற்றதுஆகும். உறவினர்கள் அன்பு இல்லாமல் விலகிச் சென்று விடுவர். கொடுக்கல் வாங்கல் என்று எதுவும் அவர்களிடையே மிஞ்சாது. கொண்டாட்டமோ, குதூகலமோ, மகிழ்ச்சியோ வாழ்வில் இராது. நாட்டில் வாழ்பவர் ஆயினும் அவர் காட்டில் வாழ்பவரைப் போல் தனிமைப் படுத்தப் படுவர் அவர் வறுமையின் காரணமாக.

#210. இறைவனை ஏத்துமின்


பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்!
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்றபோதே.


பொழுது புலர்ந்ததும் வயிற்ரை நிரப்புவதற்கு உணவைத் தேடி அலையும் மனிதர்களே! எந்தக் குழியை நிரப்பியாவது இறைவனின் புகழைத் தேடுங்கள். பிறவிக்குக் காரணம் ஆன வினைகள் அகன்று போய்விட்டால் அதன் பின்னர் வயிற்றுக் குழி தானே நிரம்பி விடும் அறிவீர்.

#211. அறிவை அறிந்ததும்


கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கு மரியது
அக்குழி தூர்க்கும் அறிவை யறிந்தபின்
அக்குழி தூறும் அழுக்கற்ற வாறே
.

பொன்னையும் பொருளையும் தேடுவர் உலகத்தோர் வயிற்றுக் குழியை உணவால் நிரப்புவதற்காக. குறையாத வண்ணம் அந்தக் குழியை நிரப்ப இயலாது. அந்த குழியை நிரப்பும் ஞானம் அடைந்து விட்டால் அப்போது பிறவிகளுக்குக் காரணமான வினைகள் நீங்கி விடும். நிரப்ப முடியாத வயிற்றுக் குழியும் நிரம்பி விடும்.

#212. பசிப்பிணி


தொடர்ந்து எழும் சுற்றம் வினையினும் தீய,
கடந்தது ஓர்ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.


வினைகளை விடவும் மிகக் கொடியவை நம்மைப் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற உறவுகளே. நம் வாழ் நாள் கழிந்து போவதற்கும் முன்பே, உயிர் உடலினின்றும் நீங்குவதற்கு முன்பே,உலகப் பொருட்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் உண்மைப் பொருளை நாம் நாடவேண்டும்.அப்போது பிறவிப் பிணி, பசிப் பிணி என்ற இரண்டு பிணிகளும் ஒரு சேர அகன்று விடும்.

#213. வாழ்வை வெறுத்தனன்


அறுத்தன ஆயினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும்; எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல; வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே


உயிர்க் கூட்டம் வினைகளை ஈட்டுகின்றன வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம் என்னும் ஆறு அத்துவாக்களின் வழியாக.ஐம் பொறிகள் ஐம் புலன்களை நாடிச் செல்கின்றன. உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைத் தருகின்றன.கொடிய வினைகள் வாழ்வில் வேதனைகள் தருகின்றன. வாழ்வையே வெறுத்த வறியவன் ஈசனை நாடி நிற்கின்றான்.
 
11. அக்னி காரியம்

#214 to #218

#214. வேள்விப் பயன்கள்

வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவு இலா அந்தனன்ர் ஆகுதி வேட்கிலே.


வேதங்கள் கூறுகின்ற அறவழியில் நின்று தளர்ச்சி இல்லாத அந்தணர்கள் செய்யும் வேள்விகளால், வானத்தில் வாழ்பவர்கள், நிலத்தில் வாழ்பவர்கள், எட்டு திசைகளில் வாழ்பவர்கள், திசைகளின் தேவதைகள் என்னும் அனைவருமே மிகுந்த நன்மை அடைவார்கள்.


#215. மெய் நெறியை உணர்வர்


ஆகுதி கேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படும் மெய்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே.


சுவர்க்கத்தை விரும்புகின்ற அந்தணர்கள் அதற்குரிய வேள்விகளைச் செய்து தானங்கள் தந்தபின் தாம் உண்பர்.
(இவர்கள் சுவர்க்க வாழ்வுக்குப் பின் மீண்டும் பிறவி எடுப்பார்.)
தம் விதியைத் தாமே நிர்ணயம் செய்து கொள்ளும் திறன் கொண்டவர், உண்மை நெறியை உணர்ந்தவர்கள் வேள்விகள் புரியார். இவர்கள் தங்கள் சிரசின் மேல் அறிவைச் செலுத்தி வாழ்வார்.
(இவர்கள் பிறவா வரம் பெற்றுப் பிறவிப் பிணியை அகற்றுவார்கள்.)


#216. தூய நெறி


அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொருள் ஆன
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயது ஓர் தூய்நெறி ஆமே.


இல்லற வாழ்வில் உள்ள அந்தணர்கள் தாங்கள் புறத்தே செய்யும் வேள்வியைப் போன்றே தங்கள் அகத்திலும் மனைவியோடு செய்ய வேண்டும். சிவ சக்தியரின் இணைப்பாக நினைத்து அதனை யாமத்தில் செய்வதே மேன்மையான நெறியாகும்.


#217. இறையருளை விழைய வேண்டும்


போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு
மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே.


ஆண் பெண் சேர்க்கை இறையருளை விரும்பிச் செய்ய வேண்டும். அப்போது குண்டலினி மேலேறி விளங்கும். சிற்சக்தி இருள் நீங்கி ஒளியுடன் விளங்கும். இந்த நிலையை அடையாமல் வெறும் உடல் அளவில் சுக்கிலம் சுரோணிதக் கலப்பு மட்டும் ஏற்பட்டால் ஆணும் பெண்ணும் மாற்றம் அடைந்து மன மயக்கம் அடைவார்கள்.


#218. புருவ மத்தியில் சுடர்.


நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகை அறிவார்கட்கு
மைநின்று அவிழ்தரு மத்தினம் ஆம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.


ஆண் பெண் கூடலின் போது ஏற்படும் உணர்வுடனே மேலே சென்று புருவ மத்தியில் உள்ள சுடரின் தன்மையை அறிய முடிந்தவர்களின் அனைத்து மலங்களும் நீங்கி அகன்று விடும். அந்தச் சுடர் என்ன? எப்போது உடலில் நிலை கொண்டுள்ள சிவனே அந்த அக்னியே ஆவான்.



 
#219 to #223

#219. வினைகள் அகலும்

பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழி செய்து அங்கி வினை சுடுமாமே.


யோனி என்பது ஒரு ஓம குண்டம் என்றால் அதில் உள்ள அக்கினியைத் தீப்பந்தம் போல நாம் மேல் நோக்கி எழச் செய்ய வேண்டும். அப்போது வினைகள் அழிந்து போய் விடும். உடலை வருத்தும் நோய்களும் அழிந்து போகும். கீழே இருக்கும் தீ மேலே நிலை பெற்றால் மேலும் மேலும் வினைகள் ஏற்படாதவாறு காப்பாற்றும்.


உபநிடதம் கூறும் கருத்து இது:

பெண்ணின் யோனி ஒரு ஓம குண்டம்.
அதில் உள்ள மயிர்கள் தருப்பைப் புற்கள்.
தோல் சோமக் கொடி.
யோனியின் உதடுகள் அக்கினி.
இதை அறிந்தவன் வாஜபேய யாகம் செய்தவன் ஆகின்றான்.

அவன் எல்லாப் பாவங்களையும் அழித்தவன் ஆகின்றான்.


#220. சிவாக்னி


பெருஞ்செல்வம் கேடு என்று முன்னே படைத்த
அருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.


பெரும் செல்வம் கேடு தரும் என்று முன்னமே கூறி அருளிவன் சிவன். நமக்கு அரிய ஞானச் செல்வதைத் தந்த தலைவன் நம் சிவபெருமான். அவனையே எப்போது நாடுங்கள். சிவாக்னி தலயில் உள்ளதை உணர்ந்தவர்கள், ஞானச் செல்வதையே விரும்பி, அதற்கேற்ற அக்கினி காரியங்களைச் செய்வார்கள்.


#221. ஓமத் தலைவன்


ஒண்சுடரானை, உலப்பு இலி நாதனை
ஒண்சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண்சுடரோன், உலகு எழும் கடந்த அந்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.


ஒளி வடிவானவன் இறைவன்; அழிவு இல்லாதவன். ஒளி மிக்க சுடராக என் உள்ளத்தில் இருக்கின்றான்.என் கண்களில் ஒளியாக இருப்பவனும் அவனே! ஏழு உலகங்களையும் கடந்து விளங்கும் அவன், வெம்மையே தராத ஒரு குளிர்ந்த சுடர் ஆவான். அவனே ஓமத்துக்கு உரிய தலைவனும் ஆவான்.


#222. அக்கினியில் பொருந்துவான்


ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்;
வேமத்துள் அங்கி விளைவி வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.


மறைந்து இருந்து அக்கினி காரியங்களுக்கு உதவுபவன் சிவன். இறந்தவர்களின் சூக்ஷ்ம உடலிலும் அவன் பொருந்தி இருப்பான். நெய்யப் பெற்ற நூல் ஆடையாக உருவெடுத்து வலிமையடைகிறது. வாசனைகள் வடிவான வினைகள் கடலைப்போல பெருகி விடுகின்றன. ஆன்மாவைச் சிவனை நோக்கிச் செலுத்தினால் நம் சிந்தனை கடையப் பெறும்.
அப்போது ஒரு நாத ஒலி ஏற்பட்டும். அதனால் நம் வினைகள் எல்லாம் அழியும்.


#223. அருந்தவர்


அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
ங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.


தலைக்கு அக்கினியைக் கொண்டு செல்கின்ற ஆற்றல் கொண்ட அருந் தவத்தவர், வைதீகத் தீயை பத்தினியுடன் வளர்த்தவர் ஆவார். இம்மையில் அவர் புகழ் ஓங்கும், நாற்றிசைகளிலும் பரவும். மறுமையில் பிரம்மலோகத்தில் தங்கி இளைப்பாற இடம் கிடைக்கும்.



 
12. அந்தணர்

#224 to #228


#224. அந்தணர்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நற்கருமத்து நின்றுஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.


பிறவிப் பிணியை ஒழிக்கும் தொழில் செய்பவர் அந்தணர். அவர்கள் அக்கினி காரியங்களைத் தவறாமல் செய்பவர்கள்; மூன்று வேளைகளிலும் தமக்கு விதிக்கப்பட்ட வற்றைத் நாள் தவறாமல் செய்து வருபவர்கள் அந்தணர்கள். சந்தி கால நியமங்களையும் தவறாமல் செய்து வருபவர்கள்.


#225. துரிய நிலையை அடைவர்


வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதந்தமான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே.


அந்தணர் வேதாந்தம் ஆகிய உபநிடத்தின் உண்மையை அறியவதற்கு விரும்புவார்கள்.”தத் த்வம் அஸி” என்ற மூன்று சொற்கள் கூறும் மெய்ப் பொருளை உணர்ந்து; பிரணவத்தில் புகுந்து; நாதாந்த, வேதாந்த, போதாந்த நாதனைக் கண்டு; இதுவே முடிவு என்று எண்ணிவிடாமல்; எப்போதும் தூய துரிய நிலையில் விளங்குவார்கள்.


#226. காயத்திரி


காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு வப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்து ஆய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.


ஒளியை வேண்டிக் கதிரவனை வணங்குவதற்காக அந்தணர் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை விருப்பத்துடன் ஜபம் செய்வர். அன்பாகிய தேரில் ஏறி அமர்ந்து கொண்டு அந்தணர்கள் சிவம் என்னும் அறிய வேண்டிய பொருளுடன் பொருந்துவார். உடல், உலகம் என்னும் காரியங்களை வென்று விளங்குவர்.


#227. அந்தணர் இயல்பு


பெருநெறியான பிரணவ மோர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறியான கிரியை இருந்து
சொரூபமதானோர் துகளில் பார்ப் பாரே.


குற்றம் அற்ற அந்தணர்களின் இயல்புகள் இவை. முக்தி தரும் பிரணவத்தைத் தெளிவாக அறிவார்கள். குரு உபதேசத்தால் ‘தத்வமசி’ என்ற வாக்கியம் உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்வார்கள். அத்வைத நெறியில் நிலை பெற்று நிற்பார்கள்.
அகவழிபாட்டால் பிரம்ம ஸ்வரூபம் அடைவார்கள்.


#228. பந்தம் அறுத்தல்


சத்திய மும்தவம் ‘தான் அவன் ஆதலும்’
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வற்றுப்
பெத்தம் ஆறுத்தலும் ஆகும் பிரமமே.


பிரம்மமாகவே மாறும் வழி இதுவே அறிவீர். சத்தியம் தவறாமை, உடலால் தவம் புரிதல், தற்போதத்தை அகற்றி விட்டு நடப்பவை எல்லாம் சிவன் செயல் என்று எண்ணுதல், அலைந்து திரிந்து களைப்படையும் இந்திரியங்களைப் புலன்களின் வழிப்போகாமல் தடுத்து நிறுத்துதல்; இருவினைகள் அற்றவர்களாக ஞானத்தை அடைதல், மற்றும் பந்தங்களை நீக்குதல் என்பவை ஆகும்.



 
#229 to #233

#229. வேதாந்தம்

வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை யொழிந்திலர்
வேதாந்தமாவது வேட்கை யொழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கையை விட்டாரே.


வேதத்தின் முடிவான உள்ளவை உபநிடதங்கள். வேதாந்தம் எனப்படுவவை இவையே ஆகும். வேதாந்தத்தைக் கேட்க விரும்பிய அந்தணர்கள் வேதாந்தத்தைக் கேட்ட பின்னும் ஆசைகளை விடவில்லை. வேதாந்தத்தின் முடிவு என்பது ஆசைகளின் அழிவு ஆகும். வேதந்தந்தின் பொருளை அறிந்தவர் ஆசைகளைத் துறந்தவர்.


#230. நூலும், சிகையும்


நூலுஞ் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்த நுண்சிகை ஞானமாம்
நூலுடை யந்தணர் காணு நுவலிலே.


பூணூலும், குடுமியும் வைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் அந்தணன் ஆகிவிட முடியமா என்ன? பூணூல் என்பது வெறும் பருத்தியின் பஞ்சு ஆகும். குடுமி (சிகை) என்பது வெறும் தலை மயிர் ஆகும். இடகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் உடலின் மூன்று நாடிகளையும் ஒன்றாக ஆக்கி உணரவேண்டும். அதுவே ஆகும் முப்புரி நூலாகிய மெய்யான பூணூல்.


#231. அந்தணன் அன்று


சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி
ஒத்தவிடயம் விட்டோரும் உணர்வின்றிப்
பக்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.


மெய்ப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், தன்னைப் பற்றிய அறிவும் சிறிதும் இல்லாதவர்கள், ஆசைகளைத் துறந்து அதன் மூலம் உண்மையை உணரும் உணர்வு சிறிதும் இல்லாதவர்கள்; உண்மையான பக்தி என்பது இல்லாதவர்கள்; மேலான உண்மைப் பொருள் ஒன்று உண்டு என்ற மனத் தெளிவும் இல்லாதவர்கள்;அறியாமையிலே ஆழ்ந்திருப்பவர்கள் இவர்கள் உண்மையான அந்தணர்கள் ஆக மாட்டார்கள்.


#232. புறக் கிரியைகள்


திரநெறி ஆகிய சித்துஅசித்து இன்றிக்
குரநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய மறை யோர்க்கே.


அறிவு, அறியாமை, இரண்டும் இல்லாதவர்கள்; குருவின் உபதேசத்தால்
திருவடி அடைந்தவர்கள், பிரணவ நெறியில் நின்று அருட்செல்வம் ஈட்டியவர்கள், புறக்கிரியைகளை விட்டு துரிய நிலையில் பொருந்தி நிற்பார்.


#233. வேதம் மட்டுமே ஓத வேண்டும்


மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்றுள்ள கோலாகலமென்று
அறிவோர் மறைய தெரிந்தணராமே.


வேதங்களின் பொருளை உணர்ந்து ஓதுகின்றவரே அந்தணர். தூய்மையானது மறைகளின் முடிவாகிய வேதாந்தமே ஆகும். வேதத்தைத் தவிர்த்து மற்ற நூல்கள் அனைத்தும் குறையுடையவை. அவற்றைக் கற்பதனால் எந்த விதப் பயனும் இல்லை. அந்தணர்கள் வேதத்தை மட்டுமே ஓத வேண்டும். ஆரவாரமான மற்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.



 

Latest posts

Latest ads

Back
Top