• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#2948 to #2953

#2948. கற்பனை உதறிய பாழ்

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே


ஞான சாதனைகளால் நான் தளர்ச்சி அடையவில்லை; நான் தத்துவங்களில் இருந்து வேறாக இருந்து ஆராய்ந்தேன். நடுக்கமும், தயக்கமும் இன்றி நாத சம்மியம் செய்தேன். கதறியபடி விலகி ஓடுகின்ற மாயையை விட்டு நீங்கினேன். கற்பனையைக் கடந்து நிற்கும் சிவச்சோதியில் நான் ஒடுங்கினேன்.

#2949. வாடா மலர் புனை சேவடி

வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே.


வானவர்கள் வாடாத மலராகிய சகசிரதளத் தாமரையில் இருக்கின்ற சிவனுடைய செம்மையான திருவடிகளைச் சென்று பொருந்த மாட்டார்கள். அறநெறிகள் நாள்தோறும் தழைத்து வளரும் வண்ணம் மேன்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளைவிப்பதையும் நாடார். விளைந்த அமுதத்தை அடையவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

#2950. மதுக்கொன்றைத் தாரான் வளம் தரும்.

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.


காம இனம் சுவைப்பதற்குத் தயாராக உள்ள இருவரில் ஒருவர் சொற்களைக் கேட்டதும் மற்றவருக்கு விரைவாகக் காம உணர்வு பொங்கி எழும். அது போலவே தன் அந்தக்கரணங்கள் நான்கும் நன்கு விருத்தி அடைந்து இருப்பவரைக் கண்டவுடன், சிவன் தேன் சிந்தும் மஞ்சள் நிறக் கொன்றை மாலையினைப் போன்ற மஞ்சள் நிற ஒளியில் தோன்றி அந்தச் சீவனுக்கு இன்பம் அளிப்பான்.

#2951. நான் அறியேனே!

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.


சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்த என்னிடம் உடல் பற்று அகன்றது; எனக்குப் பொருட்களின் மீதிருந்த பற்று அகன்றது; ஊனால் சமைக்கப்பட்ட என் உடல் வேட்கைகள் கெட்டன; என் உயிர் பற்றும் அகன்று விட்டது; புறவுலகினை நாடும் என் மனமும் அழிந்தது; என் இச்சை என்பதும் அழிந்து விட்டது. இவை அனைத்தும் எங்கனம் நிகழ்ந்தன என்பதை நான் சற்றும் அறிகிலேன்!

#2952. உருளாத கல்மனம் உற்று நின்றேன்

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே
.

நான் இருள்மயமான தத்துவங்களையும் நோக்கவில்லை; ஒளிமயமான சிவனைச் சுட்டி அறியவும் இல்லை; வேறுபாடுகள் இன்றிச் சிவத்துடன் என் சீவன் பொருந்தியது. அந்த அருளால் என் தன்னிலை கெட்டு விட்டது. பிறழாத உறுதியான கல்லைப் போல என் மனம் அத்தன் சிவனை திருவடிகளில் பொருந்தும் வண்ணம் நான் நின்றேன்.

#2953. பல ஊழி கண்டேனே!

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.


என் உள்ளத்தில் பொருந்திப் பரமாகவும், அபரமாகவும் விளங்கும் என் ஈசனை நான் அறிந்து கொண்டேன்! என் உள்ளத்தில் நிலை பெற்றுச் சிவகதியை நான் அறிந்தேன்; சிவனும் சீவனும் ஒன்றாகிப் பொருந்தும் முறையினை நான் அறிந்து கொண்டேன். என்னுள்ளே விளங்கும் என் தலைவனுடன் நான் பொருந்திப் பல ஊழிகளைக் கடந்து நின்றேன்.

 
19. வரையுரை மாட்சி

19. வரையுரை மாட்சி
வரை = எல்லை
உரை = தேய்வு
மாட்சி = பெருமை
வரை உரை மாட்சி = சீவன் தன்னை உணர்ந்து கொண்டு சிவனுடன் பொருந்தி இருக்கும் அளவற்ற பெருமை


#2954 to #2956

#2954. தூமொழி வாசகம் சொல்லுமின்

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது?
தான்அவ னானபின் ஆரை நினைவது?
காமனை வென்றகண் ஆரை உகப்பது?
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே!


சீவ எல்லையைக் கடந்து சிவத்துடன் இணைந்த பின்பு ஆன்மா வேறு எவருடன் சென்று பொருந்த வேண்டும்? தானே அவனாக ஆகிவிட்ட பிறகு சீவன் வேறு யாரைப் பற்றி எண்ணமிட வேண்டும்? கவர்ச்சியான உலக இச்சைகளை வென்று விட்டவருக்கு வேறு என்ன கவர்ச்சி இருக்க முடியும்? நீங்களே ஆராய்ந்து நல்ல மொழியை விடையாகக் கூறுங்கள்!

#2955. திரையற்ற நீர் போன்ற சிந்தை

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே.


மொழிகளைக் கடந்த மேன்மை படைத்த சிவனை மொழிகளால் கூற முயல்கின்ற அறிவிலிகளே! எல்லை அற்ற சிவத்தை வெறும் வாய் வார்த்தைகளால் வரையறுத்துக் கூறவும் இயலுமோ? அலைகள் ஓய்ந்த ஆழ் கடலைப் போன்ற தெளிந்த சிந்தை உடையவர்களுக்குப் புரிசடையோன் சிவன் மறைவின்றித் தானே வெளிப்படுவான்.

#2956. தன்னை ஆய்ந்து இருப்பது தத்துவம்

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே


மனதின் நினைவு அலைகளே மனிதனைத் தளைப் படுத்துகின்ற மாயை ஆகும். இவையே மனமயக்கத்தைத் தருகின்றன. மனம் படைக்கும் கற்பனைகளை அழிக்க, மன நினைவுகளை முதலில் அழிக்க வேண்டும். வேறு உபாயம் ஒன்றும் இல்லை. அழிக்கப்பட வேண்டிய பொருள் என்று வேறு எதுவும் இல்லை. வீண் பிதற்றலில் காலத்தைக் கழிக்காமல் செயல்படுங்கள்! ஆன்மா தன் உண்மை வடிவத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு அடங்கி இருப்பதே அதற்கு மேன்மை தரும்.
 
20. அணைந்தோர் தன்மை

20. அணைந்தோர் தன்மை
சிவனை அடைந்து மோனத்தில் இருப்பவர்களின் இயல்பு.


#2957 to #2960

#2957. மலமில்லை மாசில்லை

மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.


சிவகுருவாகிய நந்திப் பிரானைத் தன் ஞானத்தினால் உறுதியாகப் பொருந்திச் சிவனைத் தன் அன்பிலே கட்டி வைத்துள்ளவர்களிடத்தில் சீவன்களைப் பற்றியிருக்கும் மலங்கள் இரா! அதனால் அவற்றால் விளையும் மாசுக்கள் இரா! மானம், அபிமானம், குலம், கொள்ளுங்குணம் என்ற எதுவுமே இரா! உயிர்களின் மீதோ, இனத்தின் மீதோ அல்லது பொருட்களின் மீதோ எந்தப் பற்றும் இராது. தாமச, ராஜஸ, சத்துவ குணங்கள் இரா! அதனால் அந்த சீவனிடன் எந்தச் சுயநலமும் இராது!

#2958. சிவனைக் கண்டேனே!

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.

நன்மைகளை மட்டுமே அருளுகின்ற நம் சிவபெருமானைக் கண்டேன்! அதனால் என் பிறவிப் பிணியை ஒழித்தேன்! என்னைத் தளைப்படுத்தி இருந்த பாசாங்கைக் கை கழுவினேன். சிவனும், நானும் ஒன்றே என்னும்படி ஆகிவிட்டேன். சிவத்துடன் பொருந்திவிட்ட நான் இறப்பதையும் மீண்டும் வந்து உலகில் பிறப்பதையும் விரும்ப மாட்டேன்.

#2959. குறை ஒன்றும் இல்லையே!

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.


ஆலையில் பிழியப்பட்ட கருப்பஞ்சாறு, இனிய பால், வெல்லம், சோலையின் குளிர்ந்த நீர் இவற்றை போன்ற இனிமை வாய்ந்த சிவானந்தம் என்பது எமது சிவபூமியில் உள்ளது! மயில் பீலியின் கண் போன்று ஒளியை வீசுகின்ற அழகிய சக்தி தேவியால் அந்தச் சிவ பூமியில் உள்ளவர்க்கு எந்தக் குறையும் இல்லையே!

#2960. சீரார் பிரான் என் சிந்தை புகுந்தான்

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே.


எல்லாத் தத்துவங்களையும் கடந்து இருக்கின்ற சிவபெருமான் என்னிடம் வந்து என் சிந்தையில் குடி கொண்டான். அதனால் இனிமேல் என்னை எந்தத் தத்துவமும் கட்டுப்படுத்தாது. இனிச் சிவ பூமியில் சிவனுடன் சீராடித் திரிவேனே அன்றிப் பிற தத்துவங்களுடன் கூடி நான் அறிய வேண்டியது எதுவும் இல்லை!
 
#2961 to #2964

#2961. சிவகதி செல்லும் நிலை

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.


பிரமன் என்னைப் பிறவிப் பிணியில் பிணித்தான். ஆனால் நான் அதைத் துறந்து, அதிலிருந்து பிரிந்து விட்டேன். சிவநெறியை அடையும் வழியை நான் அறிந்து கொண்டேன். மனம் என்ற வாளால் என் பழய வினைகளை அறுத்து விட்டேன். என் திரிபுரமாகிய பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்றையும் கெடுத்து விட்டு நான் என் குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றேன்.


#2962. உலகுக்கு ஒரு தெய்வம்


ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.


உலகுக்கு ஒரே தெய்வமாகப் பேரொளிப் பிழம்பாகிய சிவன் இருப்பதைக் கண்டு கொண்டீர்! சிவனே உலகத்துக்கு உயிராக இருந்து அதை இயக்குவதை அறிந்து கொண்டீர்! நமசிவாய என்னும் சிவக்கனி உயிர்த் தொகைகளுக்கு நன்மைகள் செய்வதைக் கண்டு கொண்டீர். நான் அந்த சிவக்கனியை உண்டதால் அதன் இனிமையை நன்கு அறிந்து கொண்டேன்!


#2963. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருள்


சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்குஅறுத் தானே.


ஒளி வீசும் சந்திரனையும், பாம்பையும் சூடுபவன் சடாதரன் ஆகிய சிவபெருமான். தானே வந்து என்னை ஆட்கொண்ட மணிவிளக்கு அவன். ஆதியும்,அந்தமும் இல்லாத அரும்பொருள் ஆகிய சிவன் என் சிந்தையில் வந்து பொருந்தி, என் அறியாமையால் விளைந்த மயக்கத்தைத் தீர்த்து வைத்தான்!


#2964. வெறுமனம் ஆகவேண்டும்!


பண்டுஎங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.


முன்பே ஈசன் நெடுமாலையும், பிரமனையும் படைத்தான். சிவன்
அவர்களுடனேயே விளங்குகின்றான். இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்து கொள்பவர் எவரும் இல்லை. நான்முகன், திருமால் போன்ற தெய்வங்கள் இயக்குகின்ற உடல் தத்துவத்தைக் கடந்து, எண்ணங்கள் அற்ற நிலையை சீவன் அடைந்துவிட்டால், பிரணவ வடிவினன் ஆகிய சிவன், அந்தச் சீவனைத் தன் ஆதனமாகக் கொண்டு அங்கு அமர்வான்.



 
I thank the readers for the impressive traffic of 560 on this DRY and philosophical thread, during the past 24 hours! :pray2:

In case the credit goes to the new members catching up with the older

posts here are the link to read at leisure without any kind of disturbance!

Thiru Moolar's Thirumanthiram blogs :


1. https://thirumanthiram1.wordpress.com

(திருமந்திரம் - முதலாம் தந்திரம் )


2. https://thirumanthiram2.wordpress.com

(திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்)


3. https://thirumanthiram3.wordpress.com

(திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்)


4. https://thirumanthiram4.wordpress.com

(திருமந்திரம் - நான்காம் தந்திரம்)


5. https://veeveeare.wordpress.com

(திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்)


6. https://araamthanthiram.wordpress.com

(திருமந்திரம் -ஆறாம் தந்திரம்)


7. https://ezhaamthanthiram.wordpress.com

(திருமந்திரம் - ஏழாம் தந்திரம்)


8. https://ettamthanthiram.wordpress.com

(திருமந்திரம் - எட்டாம் தந்திரம்)


9. https://onbathaamthanthiram.wordpress.com

(திருமந்திரம் - ஒன்பதாம்
தந்திரம்)
 
#2965 to #2968

#2965. அன்னையும், அத்தனும்

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரந் தேனே.


அன்னையும் தந்தையும் ஆன சிவபெருமான் என்னிடம் அன்பு கொண்டு என்னைப் பாதுகாக்கின்றான். அவன் அங்ஙனம் செய்யாவிட்டால் என்னைப் பெற்ற தாய் தந்தையர் எவ்வாறு என்னைப் பாதுகாக்க முடியும்? தாய் தந்தையருடன் நானும் சேர்ந்து கொண்டு சிவ சக்தியரிடம் அன்பு கொண்டேன்!

#2966. நான் இனி உய்ந்து ஒழிந்தேனே!

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.


சிவனுடன் பொருந்தி இருக்கும் எனக்கு கிடைத்த மேன்மைகள் என்ன என்று தெரியுமா? உலகினைத் தனக்குள் கொண்ட கடலும், உலகினை விட உயர்ந்து நிற்கும் மலையின் உச்சியும், அண்டர்களும், அண்டங்களின் தலைவரும், ஆதி சக்தியும், எண் திசையோரும் என் சொற்படி நடக்கின்றனர். நான் இனி உய்ந்து ஒழிந்தேனே!

#2967. தானே உலகின் தலைவனும் ஆமே

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.


சிவத்துடன் பொருந்தி விட்ட சீவர்கள் அடையும் மேன்மைகள் இவை: தாமே திசைகளாகி நிற்பர்! தாமே தேவருமாகி நிற்பர்! தாமே மேருமலையாகவும், அதற்கும் மேலே உள்ளதாகவும் விளங்குவர்,தாமே சீவ நிலையில் உடல், உயிர், தத்துவங்கள் என்று விளங்குவர். தாமே உலகின் தலைவரும் ஆவர்.

#2968. ஞான வாள் கொண்டு எறிவன்

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே.


உடல் பற்று நீங்கிய பின்னர் வான் மயமான ஓர் உணர்வு தோன்றும்.அப்போது காலன் என்னிடம் வந்தால், நான் ஞானவாளைக் கொண்டு அவனை வெட்டுவேன். சிவன் என்னிடம் வந்தால், அவனுடன் சேர்ந்து நானும் எங்கும் நிறைந்திருக்கும் பொருளாக மாறிவிடுவேன். பிறவிக்கு காரணமான வல்வினைகளை முன்னமே நான் அறுத்து எறிந்து விட்டேன். தவத்தால் பெற்ற தெளிந்த சிந்தையை எதிர்த்து அஞ்ஞானம் என்னும் இருள் நிற்க முடியுமா?
 
#2969 to #2972

#2969. சிலுகும், கலகமும் கை காணார்!

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.


சித்தம் சிவமயமாக ஆனவர்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் வென்றவர் ஆவார். அன்னார் தாமும் சிவத்தின் தூய ஆற்றலுடன் விளங்குவார். சீவனைத் தளைப்படுத்தும் மலத்தில் அவர் கட்டுப்பட மாட்டார். நுண்மை வாக்கை அறிந்தவர் ஆதலால் சத்தம் இட்டு வீண் வாதமோ, பூசலோ, பிதற்றலோ செய்ய மாட்டார்.

#2970. நீளியன் ஆவான்

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.


நினைத்தலும் மறத்தலும் இல்லாதபடி எப்போதும் சிவனையே சிந்தித்து இருப்போரின் மனத்தில் வினைப் பயன்களை அழித்து விடும். விமலன் ஆகிய சிவன் நீங்காமல் இருப்பான். அவ்வாறு இன்றி இடைவெளி விட்டு விட்டுச் சிவனை நினைந்து வந்தால் அவன் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடுவான்.

#2971. தவப் பெருமான் தான் வந்து நின்றான்

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.


அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பெருமானை நான் “சிவபெருமானே!” என்று அழைத்தேன். தவத்தால் அறியப்படும் அப்பெருமானும், “இங்கு இருக்கின்றேன்!” என்று கூறி என்னிடம் வந்து நின்றான். பற்றுக்களைக் கொடுத்துச் சீவனை பந்தத்தில் ஆழ்த்துபவனும் சிவனே! பற்றுக்களை நீக்கிச் சீவனை விடுவிப்பவனையும் சிவனே! என்றும் மாறாது நிலைத்திருக்கும் நித்தியமான சத்தியமான சிவனை நான் வணங்கி நின்றேன்.

#2972. சிவன் தன்மை கண்டேனே

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே


பரம அதிபதியாகிய சிவனை நான் பணிந்து நின்றேன். “அவனே பரம் பொருள். அவனுக்கு மிஞ்சிய தெய்வம் வேறு எவருமில்லை!” என்று நான் துணிந்து நின்றேன். அவனையன்றி வேறு எதையும் நான் வேண்டேன்! என் உடலில் நான் கண்டுகொண்ட ஆதியான சிவனுடன் நான் பொருந்தி நின்றேன். என் சீவபோதத்தைத் துறந்து நான் நின்றேன். நான் தணிந்ததும் அவன் அகண்ட தன்மையைக் கண்டு கொண்டேன்.

 
#2973 to #2976

#2973. பிணக்கு அறுத்தானே!

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.


என் நெஞ்சம் ஈசனின் இணையடிகளைச் சேர்ந்தது. அந்தத் திருவடிகளைப் போற்றி புகழ்ந்தால் பிறவியும் அதற்கு உரிய காரணங்களும் கெட்டுவிடும். தனக்கு என்று ஓர் உள்ளம் இல்லாதவன் சிவன். நான்முகன் எழுதிய தலை எழுத்தையே மாற்றிக் கெடுப்பவன் சிவன். தத்துவங்களுடன் போராடிய என் நிலையைக் கெடுத்து என் பிணக்கை மாற்றிவிட்டான்.

#2974. முன் வந்த துன்பம் வணக்கலுற்றேன்

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே.


என் உள்ளத்தில் பொருந்தி என் பிணக்கினை அறுத்தவன் சிவன்; நோயற்ற உடல் தந்து நரை, திரை, முதுமை இல்லாமல் காலஎல்லையைக் கடந்து வாழுமாறு செய்து காலக் கணக்கை அறுத்தவன் சிவன். நான் என்னைத் தொடர்ந்து வந்த வினைகளைக் கெடுத்தேன். அப்போது சிவம் மேலும் பிரகாசித்தான்!

#2975. அவன் வந்து என்னுள் அகப்பட்டான்!

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே


தேவர்கள் குழாத்துடன் வந்து சிவன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். சீவனின் பிறவிக்கு காரணம் ஆகிய பாசத் தளைகளை சிவன் அறுத்துக் களைந்தான். அறியாமை என்னும் இருளை போக்கி என்னை ஆண்டு அருளினான். சிவன் என் சிந்தையில் வந்து புகுந்து என்னை ஆட்கொண்டவிதம் இதுவே ஆகும்.

#2976. கரும்பு கசந்தது! தேன் புளித்து!

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.


சீவனுக்கு கரும்பு போன்றது காமம். தேனைப் போன்றது காமச் சுவை. இவை பொருந்தியுள்ளன சீவனின் உடலில்! அரும்பி மணக்கும் சிவானந்தத்தை நாடிச் சீவன், உடல் இயல்புகளைக் கடந்து தன் உணர்வை மேலே செலுத்திச் சிவானந்தத்தைச் சுவைத்தால், அப்போது சீவனுக்குக் கரும்பு போன்ற காமமும் கசக்கும். தேன் போன்ற காமச் சுவையும் புளிக்கும்!
 
#2977 to #2981

#2977. எல்லாம் அவன் செயல் என்று இருமின்!

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.


முன்னைப் பிறவிகளில் சரியை,கிரியை போன்ற நெறிகளின் நான் நின்றிருந்தேன்.என்னை அந்த நெறிகளில் இருந்து மீட்டான் சிவன். என்பால் வள்ளல் போலக் கருணை காட்டினான் சிவன். அவன் அன்பின் திறத்தைப் பாராட்டினேன். “நான் செய்கின்றேன்!” என்ற எண்ணத்தைத் துறந்து “அவன் என்னைச் செய்விக்கின்றான்!” என்ற எண்ணம் பிறந்ததால் வினைகளையும், வினைப் பயன்களையும் நான் ஓருசேர ஒழித்து விட்டேன்!

#2978. பூண்டாள் புவன சூடாமணி

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.


உலகக் கவர்ச்சியில் இருந்து மீண்டவர், தம் மூலாதாரத்தில் உள்ள தீயை எழுப்பி, அதை மேல் நோக்கிச் செலுத்தி, சகசிரதளம் என்னும் தூண்டா விளக்கில், உணர்வு என்னும் நெய்யைச் சேர்ப்பார்கள். அங்கு ஒளி வீசவும், புவன சூடாமணி ஆகிய சக்தி தேவி அங்கு வந்து பொருந்துவாள். சீவன் தன் சுட்டறிவை இழந்து நிற்கும்! ஆனால் அரிய சிவானுபவம் பெறும்.

#2979. ஆறு அருவி பாயும் அருங்குளம்

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.


சீவனின் சென்னியில் உள்ள சகசிரதளம் என்னும் குளத்தை, உடலின் ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும்.

#2980. என் பொன்மணி இறைவன் ஈசன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.


இறைவன் என் மேல் காட்டிய பெருங் கருணையை எண்ணி எண்ணி நான் அன்பினால் உள்ளம் உருகுவேன்; அரற்றுவேன்; என்பு உருகுவேன்; இரவு பகல் பார்க்காமல் அவனை ஏத்துவேன்; என் பொன்மணி போன்றவன் என் ஈசன், என் இறைவன். அவனை நான் அன்பின் மிகுதியால் தின்பேன்; கடிப்பேன்; அவனை எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன்!

#2981. மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

மாதவம் என்பது என்ன என்று அறிவீரா?


உள்ளம் உலகக் கவர்ச்சியில் வெளியே சென்று, விரிந்து, பரந்து, பல துன்பங்களை அடைந்து, பின்பு அடங்கி ஓடுங்குவதே உண்மையான தவம். மனம் விரிந்து பின் அடங்கியவருக்கு பிராணனும் அடங்கி விடும். கும்பக நிலை வந்து பொருந்தும். விரிந்து பின்னர் குவிந்த மனம் உயிரில் ஒடுங்கும். அப்போது மௌனம் ஓங்கும். பேச்சு இல்லாத பேரானந்தம் ஏற்படும். இதுவே சீவனின் முத்திநிலை ஆகும்.
 
21. தோத்திரம்

21. தோத்திரம்

இறைவனைப் புகழ்ந்து பாடுவது தோத்திரம்

#2982 to #2985


#2982. காய மின்நாட்டில் கண்டு கொண்டேன்!

மாயனை நாடி மனநெடுந் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.


ஊனக் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து உறையும் மாயக் கள்வனைத் தேடி, மனம் என்னும் தேரில் ஏறி, அலைந்து திரிந்த நாடுகளின் கணக்கையோ அல்லது இயல்பையோ கூற முடியாது என்று புலம்பித் திரிவர் அறிவற்றவர்கள். நானும் அவ்வண்ணமே பல நாடுகளில் சென்று தேடித் திரிந்தேன். அவனைக் காணாமல் வருத்தம் அடைந்தேன். பின்னர் மின்னல் போலத் தோன்றி மறைகின்ற மனித உடலில் நான் தேடிக் காணமுடியாத ஈசன் இருப்பதைக் கண்டு கொண்டேன்.

#2983. முன்னியலில் முதல்வனைப் பன்னியவர்

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே.

பிரணவ யோகம் பொருந்திய தலையின் மீது, சத்துவ அகங்காரத்தின்,
சிகரத்தில் இன்னிசை பாட இருப்பவர் யார் அறிவீரா ? முன்னமே பலகாலமாக ஒப்பற்ற முதல்வனின் திரு நாமத்தைப் பன்னிப் புகழ்ந்தவர்களே அவர்கள் என்று அறிந்து கொள்வீர்!

#2984. அத்தனைக் காணாதவன் பித்தன்

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே.


முத்துக்களில் சிறந்த ஆணிமுத்துப் போன்றவனை, உதிக்கின்ற இளம் ஞாயிறு போன்று ஒளிவீசும் இறைவனை, அத்தனை வானோர்களும் ஏத்தும் என் இறைவனை, என் அத்தனைக் காணாமல் புலம்பித் திரிகின்ற என்னை ஒரு பித்தன் என்று உலகத்தோர் பேசுகின்றார்களே!

#2985. புண்ணிய மூர்த்தியைப் போற்றுகின்றேனே!

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.


புண்ணியம் செய்தவர்களால் உணரப்படும் சிவசூரியன் என்னிடம் புகுந்து நின்றான். அவ்வண்ணம் புகுந்து நின்றவன் ஒரு போதறிவாளன். தன் அடியார்களின் உள்ளத்தில் அன்புடன் புகுந்து நின்றான் சிவன். அவ்வாறு என்னிடம் வந்து புகுந்து நின்ற என் புண்ணிய மூர்த்தியை நான் போற்றிப் புகழ்ந்து வழிபடுகிறேன்!




 
#2986 to #2990

#2986. கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேன்!

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.


சகசிரதளத் தாமரையில் இருக்கும் ஈசன், சீவர்களின் ஊனக் கண்களுக்குப் பூதக் கண்ணாடி வழியாகவும் தெரிய மாட்டான். அவன் வேதக் கண்ணாடியில் நோக்கும் அன்பர்களின் ஞானக் கண்களுக்கு வெளிப் படுவான். நீதிக் கண்ணாடியில் நிற்கின்றவர் மனதில் அவன் நிறைந்து உள்ளான். நான் அவனைக் கீதக் கண்ணாடியில் நாதமயமாகக் கண்டு கொண்டேன்.


#2987. நாதன் நாமம் ஓராயிரம் ஓதுமின்!


நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தா
ரே.


சிவபெருமானை அவனது ஆயிரம் நாமங்களைக் கூறி வழிப்படுவீர்!ஓராயிரம் நன்மைகளையும், மேன்மைகளையும் நீர் அடைவீர்! சென்னி மேல் சிந்தையைச் செலுத்தி சிவபெருமானின் ஆயிரம் நாமங்களை ஓதுபவர்கள் ஆயிரம் அற்ப ஆசைகளில் இருந்து விடுபடுவர்!


#2988. தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி


போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.


சிவபெருமான் எனக்கு அளித்த ஞானத்தினால் நான் அவன் புகழைப் போற்றுகின்றேன். சிவன் சேவடிகள் சென்னிமேல் விளங்கும் விந்து நாதங்கள் என்று நான் தெளிவு அடைந்தேன். சிவயோகத்தில் பெருமையை எல்லோரும் அறியும்படி நான் பறை சாற்றுகின்றேன். சிவனை எம்பிரானென்று நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.


#2989. நானாவிதஞ் செய்து நந்தியை நாடுமின்!


நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.


பலவகைப் பட்ட தொண்டுகள் செய்து சிவபிரானை நீங்கள் நாடுவீர்! உடலில் உள்ள ஆறு ஆதாரத் சக்கரங்களில் நடுநாடி வழியே மேலே சென்று, வானோர் உலகம் உம்மை வழிபடுமாறு செய்து, மீண்டு வந்த பின்பு, தூய சிவானந்தத் தேனைத் தெவிட்டும் அளவுக்கு உண்ணலாம்.


#2990. அந்தர வானத்தின் அப்புறம் ஆகுமோ?


வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.


அடியவர் உள்ளத்தில் அரும் பெரும் பொருளான சிவம் வந்து நிலை கொள்வான். இந்திரன் முதலிய இமையவர் வேண்டிக் கொண்டாலும் அவர்களுக்குச் சுந்தர மாதர்களின் இன்னிசை விருந்து கிடைக்குமே அன்றி அந்தர வானத்தின் அப்புறம் ஆகிய முத்தி கிடைக்குமோ?



 
#2991 to #2995

#2991. தெண்ணீர் படுத்த சிவன் உள்ளான்

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே


கலங்கிய சேற்று நீரில் தூயநீரின் தன்மை தெரியாது. அது போன்றே உடல் பற்றினால் கலங்கிய மனத்தினை உடையவர்கள் இறைவனின் தூயதன்மையை அறியார். கலங்கிய குடிநீரை ஒரு குடத்தில் முகந்து வைத்தால் அது சிறிது நேரத்தில் தெளிந்துவிடும். அது போன்றே சீவன் தன் கலங்கிய சிந்தையைத் தெளிவிப்பதற்கு அதைச் சிவன் மீது செலுத்திக் காத்திருக்க வேண்டும். சித்தம் தெளிந்தவுடன் சீவன் சிவன் ஆவான்.

#2992. கைத்தலம் சேர்தரும் நெல்லிக்கனி

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே


மெய்த் தவத்தான் ஆகிய சிவபிரானை விரும்பும் மெய்யன்பருக்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகத் தோன்றுவான். எனவே நானும் தூயவனும், தூய நெறியாய் விளங்குபவனும் ஆகிய நம் தேவதேவனை உளமாற விரும்பினேன். அவனிடம் இரண்டறப் பொருந்தினேன். உலகக் கவர்ச்சியையும், என் இருவினைகளையும் கடந்து நின்றேன்.

#2993. புகைந்து எழும் பூதலம்.

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.


அளவில்லாத புகழை உடைய ஞானத்தைப் பெற்று, நான் தத்துவக் கூட்டங்களிலிருந்து விடுபட்டு நின்றேன். என் எண்ணங்களில் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் இருந்ததால் நான் சிவ வடிவம் பெற்று நின்றேன். அதனால் இருளாகிய மலங்களில் நான் இருந்து விடுபட்டேன். மூலாதாரத்தீ புகைந்து எழுந்து சென்னியை அடைந்த போது, ஒளிபொருந்திய புண்ணிய மூர்த்தி என்னிடம் வந்து பொருந்தினான். சீவனின் உடல் வேறு, அந்த உடலின் உடமையாளன் ஆகிய ஆன்மா வேறு என்று வகைப்படுத்தி எனக்கு விளங்கச் செய்த வள்ளல் ஆனான்.

#2994. உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருப்பான்

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே.


வள்ளல் தன்மை உடைய என் தலைவன், வான நன்னாட்டின் அதிபதி; கங்கை புனைந்த சடையான்; வேதங்களின் முதல்வன்; கள்ளத் தன்மை படைத்த கீழோர் தன்னைக் காணக்கூடாது என்று எண்ணி அவர்கள் உள்ளத்தில் ஒளிந்திருந்து அவர்களை ஆளுவான்.

#2995. மலர் பதம் தந்த கடவுள்

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே


தன் மலர்பாதங்களை எனக்குத் தந்து என்னை ஆண்டு கொண்டவன் இறைவன். அவன் தன்னை நாடொறும் வழிபட்டு நன்னெறியில் நின்பவர்களின் தீய குணங்களையும், தீய செயல்களையும் அறுத்துக் களைவான். நானும் ஒளியை விரும்பி என் மனத்தை அவன்மேல் வைத்து உலகப் பற்றினை ஒழித்து விட்டேன்.

 
#2996 to #3000

#2996. அவன் திருவடிகள் தருபவை

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.


சிவன் பிரிவை எண்ணி எண்ணி வருந்தி அவன் அடிகளை வாழ்த்தி வணங்குபவருக்கு அந்தத் திருவடிகள் தருபவை எவை? சிவனை விரும்புபவர்களுக்குச் சிவன் திருவடிகளே வீரசுவர்க்கம்; அவன் திருவடிகளைப் பொருந்துவதே புண்ணிய லோகத்தை அடைவது ஆகும். அவன் திருவடிகளே அவர்களுக்குப் புண்ணிய தீர்த்தமும் ஆகும்.

#2997. வானகம் ஊடறுத்தான்

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.


விண்ணைக் கடந்து விளங்குபவன் சிவன்; இந்த உலகில் தனக்கு என்று ஓர் உடல் இல்லாதவன் சிவன்; அனைவரின் உடலும் அவன் உடலே! அறிவு மயமானவன் சிவன்; சீவனின் குருநாதன் ஆகியவன் சிவகுரு, சீவனிடம் பொருந்தியுள்ள அறியாமை என்ற வாழைக் கனியை அழித்துவிட்டு, ஞானம் என்னும் பானகத்தைத் தருகின்ற பரஞ்சோதியை நான் பற்றி நின்றேன்!

#2998. தொல்வினைப் பற்று அறுவிக்கும்!

விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.


சீவனின் தலையெழுத்து ஆவது அதன் அறிவாகாயத்தின் ஒளியே! இதுவே தேவர்கள் வசிக்கும் இடம். இங்கு வான் கங்கை உள்ளது. துதிப்பதற்குத் தகுதி வாய்ந்தது இது. தொல்வினைகளைப் பற்றறுத்திடும் அருட்சக்தியின் பதி இதுவே. உலகைத் தாண்டிய முடிவு நிலை இதுவே!

#2999. ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே


அறிவாகாசத்தில் மேலே இருப்பவர்கள் வானவர்கள். அதற்கு கீழே மாதவர்கள் இருப்பர். துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மானிடர் அதற்கும் கீழே இருப்பர். அறிவும் ஆனந்தமும் பொருந்திய சக்தி தேவி, வில்வமாலை சூடிய சிவனுடன் அங்கு பொருந்தி இருப்பாள். உயிர்களுக்குச் செய்ய வேண்டியவற்றைச் அவள் செய்வாள்.

#3000. திரு ஐந்தெழுத்தின் மன்னன்

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே


பாற்கடலில் பொங்கித் திரண்ட கரிய நஞ்சினை உண்டு அதைத் தன் கண்டத்தில் அடக்கியவன் சிவன். ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் கருவானவன் ஆயினும் பிறப்பிலி! ஆழ்ந்த சுனைகளும், காடும் நிரம்பிய கயிலை மலையில் அவன் உறைவான். சீவனை வாழ வைக்கும் திரு ஐந்தெழுத்துக்களில் குடி இருப்பவனும் அவனே!

 
#3001 to #3005

#3001. திகைத்தேவர் பிரான்

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.


உலகத்தில் உள்ள உயிர்த்தொகைகளின் உயிராகவும், நிலத்தின் மண்ணாகவும்,வீசும் உயர்ந்த காற்றாகவும், சூரியன், சந்திரன், அக்கினி என்பவைகளாகவும், பெரிய மேகம் பொருந்துகின்ற வானம் ஆகவும், அதன் நீராகவும் அனைத்துமாக விளங்குபவன் சிவன். அவனே அவற்றை அழிப்பவனாகவும், திசைத் தேவர்களின் தலைவனாகவும் இருக்கின்றான்.

#3002. பரிசறிந்து அங்குளான்

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே.


அக்கினி, கதிரவன் இவற்றின் தன்மையை அறிந்த சிவன் அவற்றுள் அதற்கேற்பப் பொருந்தி இருப்பான். காற்றின் தன்மைக்கு ஏற்ப அதில் பொருந்தி இருப்பான். மதி மண்டலத்தின் தன்மை அறிந்து அதில் பொருந்தும் ஈசன் அந்த சந்திர மண்டலத்தைப் பெருக்கிச் சீவனின் அறிவு விளங்கச் செய்வான்.

#3003. தந்த உலகு எங்கும் தானே பராபரன்

அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள்
தந்த வுலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே


ஐம்பெரும் பூதங்கள் சிவனால் அழிக்கப்பட்டாலும் அவை நுட்பமான ஒளி அணுக்களாக மாறிச் சிவசோதியில் திகழும். சீவனைப் பதப்படுத்தும் உலகில் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொருளும் சிவனே. தான் படைத்து அளித்த உலகம் அனைத்துக்கும் தானே பராபரன் ஆவான். பக்குவம் அடைந்துவிட்ட சீவனுக்குத் தானே சிவகுருவாக வந்து அருள் புரிவதே அவன் மாண்பு!

#3004. அத்தன் உருவம் உலகேழு எனப்படும்!

முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே


வீடுபேறு எனப்படும் சிவலோகம் சிவபெருமானின் திருமுடியாகும்ஏழு உலகங்களும் அவன் திருமேனியாகும். அவன் திருவடிகள் பாதாளம் ஏழினுக்கும் கீழே ஊடுருவி நிற்கும். அறிவற்றவர்கள் பெருமானின் இந்த சிறப்பினை உணர்ந்தும், அறிந்தும் அகம் மகிழ இயலாதவர்.

#3005. ஆதிப் பிரான் நடுவாகி நின்றான்!

ஆதிப் பிரான்நம் பிரானவ் வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்புறங் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.


நம் அனைவரையும் நடத்திச் செல்லும் லைவன் சிவன்; முத்தி உலகில் அவன் கதிரவன், திங்கள், அக்கினி என்னும் முச்சுடர்களாகப் பேரொளி வீசுவான். மேலே உள்ள அண்டங்களுக்கு மேலாக இருப்பவன் அவனே. கீழே உள்ள அண்டங்களுக்குக் கீழாக இருப்பவனும் அவனே. இந்த உலகங்களின் நடுவாகி நின்று அவற்றை நடத்துபவனும் அவனே!

 
#3006 to #3010

#3006. அண்டம் கடந்த பெருமையன்

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே
.

அண்டங்களைக் கடந்து ஓங்கி இருக்கும் பெருமை வாய்ந்தவன் சிவன்; உருவம் பொருந்தி இருக்கும் தாழ்ந்த பிறவிகளின் நிலைகளைக் கடந்து நிற்பவன் அவன்; ஒலிக்கின்ற தன் திருவடிகளை நாடி நடந்து வரும் தொண்டர்களைத் தூயநெறியில் அழைத்துச் செல்பவனும் அவனே!

#3007. பொன்னிறமாகி நின்றான்!

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே.


பெருங் கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகில் ஈசன் நிறைந்து நிற்பது அதில் உலவும் எண்ணம் கொண்டு இருப்பதனால்! சீவராசிகளுக்குத் தேவையானவற்றை அவன் உலகில் முன்னரே படைத்துவிட்டான். அவன் உலகினரைக் காக்கவேண்டிப் பொன்னிறம் ஆகி நிற்கின்றான்.

#3008. நிராபரனாகி நிறைந்து நின்றான்

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே


தானே பரனாகவும், அபரனாகவும் விளங்குபவன் சிவன். பல ஊழிகளில் தானே நுண்மையாகவும், பருமையாகவும் விளங்குபவன் சிவன். தானே பூமியைத் தங்கி வருவதை உலகத்தோர் உணர்ந்து கொள்ளவில்லை. அவன் ஆன்ம எல்லைகளைக் கடந்து ஆன்மாவிலும் நிறைந்து நிற்கின்றான்.

#3009. போற்றும் தெய்வம் தானே!

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே.


போற்றுதலுக்கு உரிய பெருந்தெய்வம் சிவனன்றி வேறு எவரும் இல்லை. சீவனுக்கு ஆதாரமாகிய உடலும், அந்த ஆதாரத்தைக் கடந்து நிற்கும் நாதமும், அந்த நாதத்தைக் கடந்து நிற்கும் நாதாந்தமும், அகண்ட வடிவமும் ஆகிய சிவனே அனைத்துத் தெய்வங்களிலும் பெரிய தெய்வம் ஆவான். பருமை, நுண்மை என்ற இரண்டையும் ஒன்றாக இணைக்கும் பிராணசக்தியும் நம் சிவனே!

#3010. திகையனைத்தும் சிவனே!

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.


அனைத்துத் திசைகளும் நம் சிவனே! அவனுக்கு மேலான தெய்வம் ஒன்றுண்டு என்று நீங்கள் சொல்ல வேண்டாம் மனிதர்களே! புகை மேலே உயரத்தில் காணப்பட்டாலும் அது தீயிலிருந்து எழும்பியதே. மேலாகக் காட்சி தரும் பொருட்கள் எல்லாம் சிவன் என்னும் ஆதிப்பிரானிடம் இருந்து தோன்றியவை என்று அறிவீர்!
 
#3011 to #3015

#3011. சிவன் தான் பலப்பல சீவன் ஆவான்

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.


மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு என்ற எல்லா உலகங்களும் சிவனே! அவனே அவற்றில் இருந்து வேறாகவும் நிற்பான்! சிவன் அனைத்துருவாக இருந்த போதிலும், இவனை எவராலும் காண இயலாது. பலப்பல சீவராசிகளின் உயிராக இருந்து அவற்றைச் செலுத்துபவன் சிவனே! சீவன் நம்புவதற்கு உரிய ஒரே தெய்வம் சிவனே!


#3012. உள்ளுறும் உள்ளவன் சிவன்


கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன்
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.


தந்திரக்கலை, மந்திரக்கலை, உபதேசக் கலை என்ற மூன்றினையும் கடந்து அவற்றுக்கு அப்பால் நிற்பவன் சிவன். அந்தத் தலைவனை நீங்கள் விரும்பி நாடுங்கள்! அனைத்துத் தத்துவங்களுக்கும் அவனே தலைவன்! அவன் நம்மால் விலை மதிக்க முடியாதவன்! அவனைத் தேவர்களுள் ஒருவனாகப் பிற தேவர்களைப் போல எண்ணுவது தவறு. சிந்தையை அவன் மேல் நிலை நாட்டி இடையறாது அவனைக் குறித்து எண்ண எண்ண உங்களிடம் நன்கு விளங்குவான் சிவன்.


#3013. அன்பு கொண்டானே!


படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.


பல பிறவிகள் தொடரக் காரணம் ஆகிய என் பாசத்தை சிவன் அறுத்துக் களைந்தான். காக்கும் தெய்வம் திருமால் எனக்குள் பெருக்கிய உலகப் பொருட்களின் மேலே உள்ள விருப்பங்களை ஒழித்தான். அட்டாங்க யோகத்தால் விளையும் துன்பங்களைப் போக்கினான். இங்கனம் தானே உவந்து வந்து என்னை உய்வித்த பிரானிடம் நான் அன்பு கொண்டேனே!


#3014. வாசமலர் போல மருவி நின்றானே


ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே.


ஈசன் திருவடிகளே எட்டுத் திசைகளையும் இயங்க வைத்தன. வைகரி வாக்குக்கு நாதம் அடிப்படையாக இருப்பதைப் போல சிவன் எப்போதும் அழியாது இருப்பவன். நிலம், நீர், தீ, காற்று, வானம், கதிரவன், மதி, அக்கினி, ஆன்மா ஆகியவற்றில் மலரில் மணம் போலக் கலந்து விளங்குகின்றான்.


#3015. சொல்லரும் சோதி

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.


எம் பெருமான் நம் புறக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. அகக் கண்களுக்குத் தோற்றம் தருகின்றான். அதனால் அவன் இல்லாதவன் என்று எண்ணிவிடக் கூடாது. ஆனால் அவன் உள்ளவனும் அல்ல. கல் நெஞ்சைக் கரைத்துக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் காட்சி தருபவன்; அவன் பழமையானவன்; அவன் தூய்மை ஆனவன்; அவன் எந்தவிதத் தடுமாற்றம் இல்லாதவன்; அவன் தூய மாணிக்கத்தைப் போன்றவன், சொல்வதற்கு அரிய பேரொளியாகிய சிவன் சீவர்களை ஒளியாகவும், இருளாகவும் தொடர்ந்து அருள் புரிகின்றான்.
 
#3016 to #3020

#3016. கமழ் சடை நந்தி

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே

சீவனின் உள்ளம் என்னும் மன மண்டபத்தில் ஒடுங்குபவன் சிவன். சீவன் உலகக் கவர்ச்சியில் சிக்கி இருக்கும் போதும் அவன் சீவர்களுக்கு உள்ளே நிலை பெற்றவன். அவ்வமயம் கள்ளத் தலைவன் ஆகிய கமழ் சடைநந்தி, அந்த சீவனின் பொறிகளை இயக்குகின்றான். அவன் வள்ளல் தன்மையை உணர்ந்து கொண்டு அவனைச் சிந்திக்கும் அன்பர்களின் பிறவிப் பிணியை அறுத்துத் துன்பங்களில் இருந்து விடுவிக்கின்றான்.

#3017. குரை கழல் நாடுவர்

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.


எதிரம் புதிருமாக உள்ள வானவர்களும், தானவர்களும் நாள் தோறும் தோத்திரம் செய்து; கழல்கள் ஒலிக்கும் ஈசன் திருவடிகளைத் தொழுவர். ஆனால் அவன் அடியவர்களோ எனில் அகமும் புறமும் ஒருமித்து இருக்கும்படி அவன் உதவுகின்ற தன்மையை எண்ணி உள்ளம் கசிந்து இருப்பர். அந்த மெய்யடியார்களின் ஊனால் ஆகிய உடலை நீக்கி, உணர்வினைப் பெருக்கி, விளக்கொளியாக இருந்து உதவுவான்.

#3018. எண்ணில் ஆனந்தம் எங்கள் பிரானே!

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆனந்தமும் எங்கள் பிரானே.


இந்த விண்ணும் சிவன் மேனியே! அந்த வெளியும் அவன் மேனியே! சிவன் புறக்கண்களுக்குக் காட்சி தர மாட்டான். அகக்கண்களுக்கு அவன் காட்சி தருவான். பண்புடன் கூடாத வெறும் வாய்த் தோத்திரங்களுக்கு அவன் வசப்படமாட்டான். உள்ளன்போடு அவனை நாடினால் அவனும் வெளிப்பட்டு அருள்வான்.எண்ணில்லாத ஆனந்தத்தை சீவனுக்குத் தருபவன் சிவனே அன்றோ!

#3019. நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

எந்தைப் பிரான் ஓர் உத்தமன், அனைவரும் விரும்பும் ஆனந்தக் கடல். நல்ல முத்தைப் போன்று ஒளிர்பவன்; வெண்மை நிற ஒளியிலும், நீலக் கருமை ஒளியிலும் விளங்கும் ஈசனை இடையறாது சிந்திக்கும் ஞானியர் தம் அன்பால் உணர்ந்த கொள்வர். சித்தரும், அமரரும் ஆராய்ச்சி செய்த பின்பும் அவனைத் தேர்ந்து தெளிய மாட்டார்கள்!

#3020. புறம் பல கண்டும் போற்றுகில்லர்

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.


எந்த அளவுக்குச் சாதகனின் முகத்திற்கு முன்பு நிறங்கள் தெரிகின்றனவோ, அந்த அளவுக்கு ஈசன் தன்னை அவனுக்கு வெளிப்படுத்துவான். எந்த அளவுக்கு அறம் கடைப்பிடிக்கப் படுகின்றதோ அந்த அளவுக்கு இன்பம் வந்து அமையும். எந்த அளவுக்கு அதர்மம் கடைப் பிடிக்கப்படுகின்றசிதோ அந்த அளவுக்கு பாவம் வந்து சேரும். இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டிருந்த போதிலும் மக்கள் அதன்படி நடப்பது இல்லையே!

 
I thank the readers of this thread for the terrific traffic of 2550 in the past 24 hours. :pray2:

OnbathAm thantiram of Thiru Moolar's Thiru Manthiram will get completed in five days.

You are welcome to read the posts of the past here!


Thiru Moolar's Thirumanthiram blogs :



1. https://thirumanthiram1.wordpress.com (திருமந்திரம் - முதலாம் தந்திரம் )

2. https://thirumanthiram2.wordpress.com (திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்)

3. https://thirumanthiram3.wordpress.com (திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்)

4. https://thirumanthiram4.wordpress.com (திருமந்திரம் - நான்காம் தந்திரம்)

5. https://veeveeare.wordpress.com (திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்)

6. https://araamthanthiram.wordpress.com (திருமந்திரம் -ஆறாம் தந்திரம்)

7. https://ezhaamthanthiram.wordpress.com (திருமந்திரம் - ஏழாம் தந்திரம்)

8. https://ettamthanthiram.wordpress.com (திருமந்திரம் - எட்டாம் தந்திரம்)

9. https://onbathaamthanthiram.wordpress.com (திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்)

 
#3021 to #3025

#3021. பொங்கி நின்றான் புவனபதி

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே

சிவன் இங்கு இருக்கின்றான்; அங்கு இருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான்; பொங்கி நிறைந்து இருக்கின்றான்; புவனத்தின் அதிபதி புண்ணிய மூர்த்தியாகிய சிவன் சீவனின் அஞ்ஞான இருளிலும் நிற்கின்றான்; ஞான ஒளியில் கதிரவன் போன்றவன்; அவன் அருள் மழை எங்கும் நிறைந்திருக்கும்.

#3022. உணர்வு, உடல், அண்டம் ஆகி நின்றான்

உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

சீவனின் உணர்வும் சிவனே; சீவனின் உடலும் சிவனே; இவற்றிலும் உன்னதமாகிய சீவனின் சூக்கும அறிவும் அவனே; சீவனுடன் புணர்ந்து இருப்பவனும் அவனே; அனைத்திலும் நுட்பமானவனும் அவனே; சீவனின் ஆண்ட ஆகாயத்திலும் அதன் உயிரிலும் நிலை பெற்று ஒளிர்பவன் சிவனே!

#3023. உலகு எழும் தரித்தவன்

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே.

ஈசன் தன் வலிமையால் ஏழு உலகங்களையும் தரிக்கின்றான்; தன் ஆற்றலினால் அணுவைக் காட்டிலும் நுட்பமானதாகவும் இருக்கின்றான்; எட்டுப் புகழ்பெற்ற குல மலைகளும் அவன் வலிமைக்கு நிகர் ஆகா. அவன் அகன்ற கடலிலும் தன் ஆற்றலால் நிறைந்து இருக்கின்றான்.

#3024. தானே அறியும் தவத்தின் அளவே!

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

எம் பெருமான் சிவன் அனைத்துத் தெய்வங்களிலும் மேலானவன். என்றாலும் ஊனால் ஆகிய சிறிய உடலிலும் அதன் உணர்வாகக் கலந்து பரவி இருக்கின்றான். வானோர்களாலும் அவன் பெருமையை அறிந்து கொள்ள முடியாது; அந்த மகாதேவன் சீவன் செய்யும் தவத்துக்கு ஏற்ப சீவனால் அறியப்படுகின்ற சிறப்பினை உடையவன்.

3025. உண்டனர் உண்டார் உணர்வில் மூடர்கள்!

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.

பிண்டம் ஆகிய சீவனின் உடலில் ஆலவிதையைப் போல எழும் அதன் சீவசக்தி. அது ஆலமரம் போன்ற சீவனின் உடலில் மேல் நோக்கிச் சென்று பக்குவம் அடைந்த பின்னர் சிரசில் ஒளியினைக் கண்டது. அந்த சீவன் அந்த ஒளியில் ஆனந்தமாகத் திளைத்து இருந்தது. இவ்வாறு செய்ய அறியாத மூடர்கள் உடலே பெரியது என்று எண்ணி அதன் இச்சைகளைப் பூர்த்தி செய்து விஷய சுகத்தில் திளைத்தனர். உடலைக் கடந்து சென்று சிரசில் உள்ள ஒளியைக் காண இயலாமல், உடலை பெரிதென மயங்கும் இவர்களின் பேதைமை தான் என்னே!
 
#3036 to#3040

#3036. பலமையில் எங்கும் பரந்து நின்றான்

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.


புண்ணியன் ஆகிய எந்தை சிவன், சீவன் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமையினால் அடைய வேண்டியது என்று எதையும் வேண்டாதவன். நாடி வரும் சீவனுக்கு நலம் தரும் ஞானத்தை அவனே நல்கிட வல்லவன். வேதியர்கள் ஓதும் விலை மதிக்க முடியாத வேதங்கள் கூறும் பல பொருட்களிலும் அவன் பரவி நிற்கின்றான்.


#3037. கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே!


விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.


சிவன் ஏழு உலகங்களுக்கு அப்பால் வெகு உயரத்தில் உள்ள விண்ணகத்திலும் உள்ளான். அவனே மண்ணவனாய் சீவன்கள் நிலவுலகத்திலும் உள்ளான். உலகைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அவனே குளிர்ச்சியினைத் தருகின்றான். அந்தக் கடலின் தன்மையை உடைய வலது கண்ணிலும் அவனே கலந்து நிற்கின்றான்!


#3038. தானே வளங்கனி ஆகி நின்றான்


நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே.


சிவன் தானே நான்முகன், திருமால் போன்ற தெய்வங்களாகி நின்றான். சிவன் கீழே தாங்கும் நிலமாகவும் மேலே உயர்ந்த வானமாகவும் நின்றான். சிவன் உயர்ந்த மேரு மலை ஆகவும், உலகில் உள்ள ஏழு கடல்களாகவும் உள்ளான். சாதகனுக்கு சிவனே வளமான சிவக்கனியாக இருந்து பயன் தருகின்றான்.


#3039. உலகின் அடர் பெரும் பாகன்


புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே.


புவனங்களின் அதிபதியாகியவன் என் தந்தை புண்ணிய மூர்த்தி சிவன்! அவனே உலகில் உள்ள சீவ ராசிகள் அனைத்தையும் செலுத்தி இயக்குகின்ற பாகன் போன்றவன். அவனே எண்ணற்ற உயிர்த் தொகைகளாகவும் விளங்குகின்றான். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவனே எம் இறைவன் என்று சிவஞானியர் விரும்பிக் கூறுகின்றனர்!

#3040. கண்ணின்று இயங்கும் கருத்தவன்


உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இலங்கும் கருத்தவன் தானே.


சீவனின் உடலினுள்ளே ஒளிருகின்ற பிராணனனும், விண்ணில் நின்று இயங்குகின்ற திங்களும், சீவனின் பூமித் தானத்தில் செயல்படும் அபான வாயுவும் இவை எல்லாமாகி நிற்பவன் சீவனின் கண்ணில் பார்வையாக விளங்கும் சிவனே ஆவான்.


 
#3041 to #3046

#3041. உள் நின்று உருக்குவான்

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே.


தியானத்துக்கு உரிய எழுத்துப் பிரணவம். அதைக் கற்றுக் கொடுத்தவர் குருநாதர். அவர் காட்டிய வழியில் நின்று சாதனை செய்வதையும், அந்த சாதனை சென்று வழியே முன்னேறுவதையும் படைத்தவன் பரமசிவன். சிவனைச் சீவன் தன் அகக்கண் கொண்டு காணும் பொழுது, சிவன் அந்தச் சீவனின் உடலில் பொருந்தி, அதை உருக்கி அதன் இயல்பை உரு மாற்றித் தானே அதன் ஊதியமாகவும் ஆகி விடுவான்.


#3042. திருக் கொன்றை வைத்த செஞ்சடையான்


இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஓங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.


தான் நடுவில் இருந்து கொண்டு, தன்னைச் சுற்றி எண் திசைகளும், அண்டங்களும், பாதாளமும் விளங்கும்படி சிவன் நின்றான். திருக்கொன்றை சூடிய செஞ்சடைச் சிவபிரான், அறிவின் வடிவமாக அவை யாவற்றிலும் கலந்து நின்றான்.


#3043. சேயன் அணியன் சிவன்


பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.


உலகில் உள்ளவர்களுக்குப் பலவேறு தத்துவங்களாகக் காட்சி தரும் பெருமானின் உண்மை இயல்பினை அறிந்தவர் எவரும் இலர். சிவன் சீவனுக்கு வெகு தொலைவில் இருப்பவன். அவனே சீவனுக்கு மிகவும் அருகில் இருப்பவன்; சிவன் மாறுபாடுகள் அற்றவன்; சிவன் உயிர்களுக்கு இன்பம் அளிப்பவன்; சிவன் அநாதியானவன்; பல வேறு தத்துவங்களாக உள்ள சிவனே அவற்றைக் கடந்தும் விளங்குகின்றான்.


#3044. எது அறியாவகை நின்றவன் நந்தி


அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே.


சிவன் எல்லா உயிர்களின் அறிவுக்கும் அறிவானவன். அவன் ஆதி புராணன். அவனை யாவரும் அறிய முடியாத வண்ணம் நிற்பவன் ஈசன். ஆயினும் எட்டு புவனங்களையும், ஒவ்வொரு சீவனையும் நவன் அங்கு அறிவான்.


#3045. ஊரும் சகலன் உலப்பிலி சிவன்!


நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.


நீர், நிலம், விசும்பு, நெருப்பு, காற்று என்னும் ஐம்பெரும் பூதங்களாகவும், அவற்றைத் தாங்கி நிற்கும் ஆதாரமாகவும், சீவ ராசிகளின் உடலில் உள்ள ஒளியாகவும் சிவபெருமான் இருக்கின்றான். அவன் பெயர் பராபரன். பிஞ்சு மதியினை அணியும் அந்தப் பிஞ்சகன் அனைத்துத் தத்துவங்களில் பொருந்தியிருப்பவன். அவன் அழிவே இல்லாதவன் ஆவான்!

#3046. மூலன் உரை செய்த மூன்றுமொன்றாமே!


மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.


திருமூலர் அருளிய மூவாயிரம் திருமந்திரப் பாக்களும், அவர் அருளிய முன்னூறு மந்திரப் பாடல்களும், அவர் அருளிய முப்பது உபதேசப் பாடல்களும் ஒரே உன்னதமான பொருளை விளங்குவன ஆகும்.
 
23. வாழ்த்து

#3047. வாழ்க நம் நந்தியின் திருவடிகள்!

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.


என் நந்திப் பிரானின் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
என் மலக்கட்டினை அறுத்த ஈசன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
எனக்கு மெய்ஞ்ஞானம் அருளிய இறைவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
நின்மலன், அமலன், விமலன் ஆகிய சிவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.

திருமூலர் அருளிய திருமந்திரம் முற்றிற்று.

வையகத்துள்ளோர் வாழ்வாங்கு வாழ்க! வாழ்கவே!


அன்பே சிவம்! அன்பே சிவம்! அன்பே சிவம்!

காரணம் இல்லாத, சுயநலம் இல்லாத, தூய அன்பை நாம் வளர்ப்போம்!

அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் முக்தி தாயகன் சிவபிரானை அடைவோம்!

முடிவுரை


எந்தத் துணிச்சலுடன் இந்தப் பணியை மேற்கொண்டேனோ
அந்த சிவபெருமானும் சக்திதேவியும் அறிவர்! யான் அறியேன்!

எத்தனையோ தடங்கலுக்கு நடுவில் இந்தப் பணியை
மெத்தனம் இன்றி செய்ய அருளியவள் சக்தி அன்னை!

அனைத்து உலகினருக்கும் மற்றும் அனைத்து சீவராசிகளுக்கும்
அன்னை தந்தை ஆகிய உமை, சிவன் பாதங்களில் சமர்ப்பணம்!

ஓம் தத் ஸத்! ஸர்வம் சிவார்ப்பணம் அஸ்து!
 
நல்ல விஷயங்களை நாம் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
நல்ல முறையில் அவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.

எனவே மீண்டும் திருமூலரின் திருமந்திரம் இங்கு தொடரும்!
மனதில் பதித்துக் கொண்டு அனைவரும் பயன் பெறுவோம்!
 
[h=1]திருமூலரின் திருமந்திரம்[/h] திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
 
[h=1]விநாயகர் காப்பு[/h] ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே


ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்!
 

Latest ads

Back
Top