• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

கடவுள் வாழ்த்து

ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.


ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை ( அறம், பொருள், இன்பம், வீடு ) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.


தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.
 
முதல் தந்திரம்
1. உபதேசம்


#001 to #005

#1. ஒன்று அவன்தானே!

ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான்; உணர்ந்து எட்டே.


ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம், பொருள், இன்பம், வீடு ) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை (மெய், கண், மூக்கு, வாய், செவி) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

#2. கூற்றுதைத்தான் போற்றி!


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.


தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.

#3. இறைவனின் திறன்


ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
நக்கன் என்று எத்திடும் நாதனை நாள்தோறும்
பக்கம் நிற்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் பொற்றிசெய்வேனே.


உயிர்களுடன் கலந்து நிற்பவன்!
அமரர்களான தேவர்கள் திகம்பரன் எனத் தொழுதிடும் நாதன்!
அருகில் உள்ள பிற தேவர்களும் அறிய இயலாத மேன்மைகள்
உடையவன்! அவனை நான் நாள் தோறும் சென்று வழிபடுவேன்.

#4. அறியாமை நீங்கினேன்

அகல்இடத்தார் மெய்யை, அண்டத்து வித்தைப்,
புகல் இடத்து என்றனைப் போதவிட்டானைப்
பகல்இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.


அண்டத்தின் ஜீவர்களுக்கு மெய்ப் பொருள் ஆனவன்,
அண்டங்களுக்கு இவன் ஒருவனே வித்தானவன்,
புகுந்த இடத்தலேயே என்னை வாழ வைத்தவன்’
இவனைப் பகலிலும், இரவிலும் பணிந்து புகழ்ந்து
நான் இந்த உலகின் அறியாமை நீங்கப் பெற்றேனே.

#5. ஒப்பில்லாதவன் சிவன்


சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை ;
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை;
புவனங் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
தவனச் சடை முடி தாமரை யானே!

சிவனை விடச் சிறந்த தெய்வம் ஒன்று உலகில் இல்லை.
அவனுக்கு ஒப்பானவர் என்றும் இங்கு எவருமில்லை.
சிவன் அண்டத்தைக் கடந்து நின்று பொன் போல் ஒளிர்பவன்.
ஸஹஸ்ரதளத்தில் மேல் நோக்கிய செந்தாமரையில் உறைபவன்.
 
#006 to #010

#6. முக்தி தருபவன் சிவன்

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறறி யேனே.


சிவனை விட உயரிய தெய்வம் ஒன்றும் இல்லை.
அவனையன்றிச் செய்யும் அருந்தவம் ஒன்றும் இல்லை.
அவனின்றி மும் மூர்த்திகள் செய்வது ஒன்றும் இல்லை.
அவனின்றி முக்தி அடையும் வழி ஒன்றும் இல்லை.

#7. அவனியோருக்குத் தந்தை சிவனே!


முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை,” அப்பா” எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.


தனக்குச் சமமான மும் மூர்த்திகளுக்கும் மூத்தவன்;
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன் சிவன்;
தன்னை “அப்பா!” என்பவருக்குத் தந்தையாவான்;
பொன்னை ஒத்த ஸஹஸ்ர தளத்தில் விளங்குவான்.

#8. வெய்யன், தண்ணியன்


தீயனும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்; அணியன் நல்அன்பர்க்கு;
தாயினும் நல்லன்; தாழ் சடையோனே.


தாழ்ந்த சடையினை உடைய சிவ பெருமான்
தீயவருக்குத் தீயை விட வெம்மையானவன்;
தன் அடியவருக்கு நீரை விடக் குளிர்ந்தவன்;
சின்னக் குழந்தையை விட நல்லவன் ;
தன் அன்பர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவன்;
பெற்ற தாயைவிட அருள் மிகுந்தவன்;
ஆயினும் அவன் அருளை எவரும் அறிவதில்லை

# 9. தொழப்படுவர் இல்லாதவன்

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்

பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
என்னால் தொழப்படும் எம் இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படுப வார்இல்லை தானே.


பொன்னை முறுக்கி அமைத்தது போன்ற
செஞ்சடை பின்புறம் விளங்குகின்ற சிவன்;
அவன் பெயர் நந்தி என்பதாகும்;
என்னால் வணங்கத் தகுந்தவன் அவன்;
உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவன்;
ஆனால் அவனால் வணங்கத் தகுந்தவர்
என்று எவரும் இல்லாதவன் என் இறைவன்.

# 10. யாதுமாகி நிற்பவன்


தானே இருநிலம் தங்கி விண்ணாய் நிற்கும்;
தானே சுடும் அங்கி, ஞாயிரும், திங்களும்;
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
தானே தடவரை, தண்கடல் ஆமே.


தானே இரு நிலத்தையும் தாங்குவான்;
தானே விண்ணாக வடிவெடுத்து நிற்பான்;
தீயாகவும், சூரிய, சந்திரர்களாகவும் உள்ளான்;
தானே அருள் மழை பொழியும் சக்திதேவி ஆகின்றான்;
அகன்று உயர்ந்த மலையும் அவனே!
பரந்து குளிர்ந்த கடலும் அவனே!
 
#011 to #015

# 11. அவன் பெயர் நந்தி

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை;
முயலும் முயலில் முடிவும் மற்று அங்கே
பெயலும் மழை முகில்; பேர் நந்தி தானே.


தொலைவிலும், அருகிலும் எங்கு நோக்கினும் என் பெருமானுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. முயற்சியும் அதன் பலனும் அந்தப் பெருமானே. மழை பொழிகின்ற மேகமும் அந்தப் பெருமானே. அந்தப் பெருமானின் பெயர் நந்தி என்பதாகும்.

# 12. தலைவன் அவனே


கண்ணுத லான் ஒரு காதலின் நிற்கவும்
எண்இலி தேவர் இறந்தார் எனப் பலர்;
மனஉறு வார்களும் வான்உறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகிலார்களே.


நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் நிகரில்லாத அன்புடன் அழியாது இருக்கையில், எண்ணில்லாத தேவர்கள் அழிந்து பட்டனர். மண்ணவர்களும், விண்ணவர்களும் தாங்கள் அழியாது வாழ அருள் செய்பவன் சிவனே என்று அறியாமல் இருக்கின்றனர்! என்னே இவர் பேதைமை!

# 13. கடந்து நின்றான்


மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை;
விண்அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை;
கண்அளந்து எங்கும் கடந்து நின்றானே.


மண் அளந்த மாலவனும், தாமரை மலரில் உதித்த பிரமனும் பிற தேவர்களும் ஈசனை எண்ணத்தில் நிறுத்துவதில்லை; அவனைப் பற்றி அவர்கள் சிறிதும் எண்ணுவதில்லை. விண்ணில் விரிந்துள்ள சிவனை மண்ணவர் அறிய முடிவதில்லை. சிவன் மண்ணில் கலந்தும், அனைத்தையும் கடந்தும் விளங்குகின்றான்.

# 14. கண்காணிக்கின்றான் சிவன்


கடந்துநின்றான் கமல மலர் ஆதி;
கடந்துநின்றான் கடல்வண்ணன் எம் மாயன் ;
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.


சிவன், சுவாதிஷ்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகின்றான். சிவன் மணிபூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்து விளங்குகின்றான். இவ்விருவரையும் கடந்து அனாஹதத்தில் விளங்கும் ருத்திரனையும் கடந்து சிவன் சிரசின் மேல் சஹஸ்ரதளத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் கண்காணிக்கின்றான்.

# 15. ஆதியாகிய சோதி


ஆதியுமாய், அரனாய், உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே.


உலகினைப் படைப்பபவன் சிவ பெருமான்; உலகினை அழிப்பவனும் சிவபெருமான்; உடலில் மாற்றங்களைச் செய்பவன் அவன்; அவற்றைக் கடந்து விளங்குபவனும் அவன்; குவியாத அருட் சோதியாக விளங்குபவன் சிவன்; ஊழினை இயக்குபவன் அவன்; நீதியாகி, நித்தியமாகி என்றும் அழியாமல் இருப்பவன் சிவபெருமானே.
 
#016 to #020

#16. வணங்குவது எதற்காக?

கோது குலாவிய கொன்றைக் குழல்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில் வாரே.


நரம்புகள் உள்ள கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையுடையவன் சிவ பெருமான். ஒளிரும் நெற்றியுடைய உமையொரு பாகத்தினன். மூவர்களும், தேவர்களும் குற்றங்கள் பொருந்தியுள்ளதால் சிவனை எந்த குணத்தைப் பாராட்டி நாடுவர்? நாட மாட்டார்!

# 17. ஒப்பில்லாத உறவு!


காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரிஅது மிகும்; அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.


பருவுடல், நுண்ணுடல் இரண்டும் ஒன்றாகக் கலந்திருந்த போதிலும், மாயையுடன் தொடர்புடைய நுண்ணுடலில் தான் கானம் மிகுந்திருக்கும். அந்த கானம் வழியே மனம் பொருந்தி ஆன்மா தன்னையே ஒளிவடிவாக் காண இயலும். அதுவும் உடலை விட்டு வான் வடிவான சிவனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பாகாது.

#18. வரமருளும் வள்ளல்


அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித் தாக்கம் அது ஆக்கின்
“இதுபதி கொள்” என்றஎம் பெருமானே.


அளகாபுரி மன்னன் குபேரனை வடதிசைக்குத் தலைவனாக ஆக்கியது அவன் அருந்தவம். செல்வத்தின் அதிபதியாக்கியது அவன் அருந்தவம். “அந்த வடதிசையைப் போற்றி சேமிப்பைப் பெருக்கினால் இந்த வடதிசைக்கு நீ தலைவன் ஆகலாம்!” என்று சொல்பவன் என் இறைவன் சிவபெருமான்.

#19. தவத்தில் விளங்குகின்றவன்


இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன்; மூதறிவாளன்;
விதுபதி செய்தவன்; மெய்த்தவம் நோக்கி,
அதுபதி யாக அமர்கின் றானே.


வடக்கு திசைக்கு அதிபதியானவன் சிவபெருமான். விஷய வாசனைகள் விளங்கும் ஏழு ஆதாரங்களையும்
அழித்துப் பாழ் நிலமாக ஆக்கியவன் சிவன். அனைத்தையும் அறிய வல்ல மூதறிவாளன். நம் பாவங்களைப் போக்க வல்லவன் சிவன். அடியவர்களின் உண்மையான தவத்தைக் கண்டவுடன் அதையே தன் இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருள்வான்.

# 20. ஈசன் உருவம்


முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்,
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.


சிவன், கருவில் உருவாகும் முன்னரே நம்முடைய பிறப்பையும், இறப்பையும் வரையறை செய்பவன். அவன் உறையும் நியதியை அறிந்து கொண்டால் அதுவே விளக்கம் பொருந்திய கண் மலர்களுக்கு மேலுள்ள சிரசாகும்.
அந்த இறைவனின் வடிவம் ஒளியும், இடியின் ஒலியும் ஆகும்.
(பஞ்ச பூதங்களின் தலைவர் சிவபெருமான். தியானப் பயிற்சியில ஈடுபடுபவர்களுக்கு ஒளி வட்டம் தோன்றும்! இடி முழக்கம் கேட்கும்!)
 
#021 to #025


# 21. கோனைப் புகழ்மின்!


வானப் பெருங்கொண்டல் மால்அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை,
காணக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின், கூடலும் ஆமே.


வானத்தில் உள்ள மேக நிறம் கொண்ட கரிய திருமால், பிரமன், பிற தேவர்களின் இழிந்த பிறவியை நீக்குபவன் சிவபெருமான். ஒப்பற்ற ஒருவன் ஆவான் அவன். ஆணவமாகிய காட்டு யானை கதறும்படி அதைப் பிளந்து அழித்தவன் சிவபெருமான்; இத்தகைய எம் கோனைப் போற்றிப் புகழுங்கள்! அவனையே அடைந்து முக்தி பெற அதுவே உதவும்.


# 22. பேணி நிற்பான்


மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்தது அறிவனென்னில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்புஇலன் என்பர்; இறைவன்
பிழைக்கநின் றார் பக்கம் பேணிநின் றானே.


தியானப் பொருளாக மனத்தில் தோன்றுவான் மாயநாடனாகிய சிவன். தன்னை ஜீவர்கள் நினைப்பதை நன்கு அறிவான் சிவபெருமான் எனினும் அவனைச் சிறிதும் நினையாது வாழ்கின்றனர் பற்பல ஜீவர்கள்.”சிவனுக்கு என் மீது அருள் இல்லை!” என்றும் கூறுவார்கள் பலர்! தன் கருணையை நாடாதவர்களுக்கும் கருணை வழங்கும் வள்ளல். அவன் தன் கருணையின் சிறப்புத் தான் என்னே!

#23. அல்லும் பகலும் அருள்வான்


வல்லவன் வன்னிக்கு இறைஇடை வாரணம்
நில்என் நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா; இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே.


இறைவன் எல்லாம் செய்ய வல்ல ஆற்றல் பெற்றவன். கடலின் நடுவே அக்னி தேவனை நிலைக்கச் செய்பவன். இத்தகைய இறைவனை இல்லை என்று கூற வேண்டாம். பிற தெய்வங்களுக்கும் முதல்வனாக இருந்துகொண்டு அல்லும் பகலும் நமக்கு அருள் செய்கின்றான் சிவபெருமான்.


# 24. சிவன் அடி


போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனிதன்அடி
தேற்றுமின் என்றும்; சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று, மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார்வழி மன்னி நின்றானே.


சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது போற்றிப் புகழ்ந்து எப்போதும் சிந்தனை செய்யுங்கள். நம் செல்வம் அனைத்தும் அவன் திருவடிகளுக்கே உரியது என்று புறப் பொருட்களில் மயங்கிய மனத்தை மாற்றினால்
சிவன் நம் சிந்தையில் நீங்காமல் நிலையாக நிற்பான்.


#25. அஞ்ஞானம் விலகும்

பிறப்பிஇலி, பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்புஇலி, யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்புஇலி தன்னைத் தொழுமின்; தொழுதால்
மறுப்பு இலி, மாயா விருத்தமும் ஆமே.


அவன் பிறவி அற்றவன்; கனத்த சடை முடியை உடையவன்; பேரருள் மிக்கவன்; அழிவு என்பது அற்றவன்; எல்லோருக்கும் இடையறாத இன்பத்தைத் தரும் இறைவன்; அவனை வணங்குங்கள். அதனால் அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்; மெய்ஞானம் அடையலாம்


 
#025 to #030


#26.இதயம் ஆலயம்.


தொடர்ந்து நின்றானைத் தொழுமின்; தொழுதால்
படர்ந்து நின்றான்பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான்; கமலம் மலர் மேலே
உடந்திருந்தான் அடிப்புண்ணியம் ஆமே.


ஆன்மாக்களைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை எப்போதும் இடைவிடாது வணங்குவீர். அங்ஙனம் வணங்கினால் நமக்குக் கிடைக்கும். எங்கும் பரவி விரவி இருப்பவனும்; உலகம் முழுவதையும் கடந்தவனும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் உறைபவனும ஆகிய சிவபெருமானின் சீரியத் திருவடிப் பேறு.

#27. இதயமே ஆலயமாகும்


“சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம்இல் ஈசன் அருள் நமக்கே” என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.


சேர்க்கையின் இடம் எனப்படும் சுவாதிஷ்டானத்தின் கீழே,”முடிவு இல்லாத இறைவனின் அருள் எனக்கு உரியது!” என அந்தப் பெருமானை வணங்குபவரின் அறிவினுள் புகுந்து, அவர் இதயமே ஆலயமாக நிலைத்து நிற்பான் சிவபெருமான்.

#28. வழித்துணை


இணங்கிநின் றான், எங்குமாகி நின் றானும்,
பிணங்கிநின் றான்,பின் முன் ஆகிநின்றானும்,
உணங்கிநின் றான், அமரா பதி நாதன்;
வணங்கிநின் றார்க்கே வழித்துணை ஆமே.


ஆன்மாக்களுடன் பொருந்தி விளங்குபவன் சிவன்; இங்கு அங்கு என்னாதபடி எங்கும் நிறைந்தவன் அவன்; எக்காலத்திலும் இருக்கும் அவன் மாறுபட்ட தன்மை உடையவன்; தேவர்களின் உலகை ஆளும் அந்த நாதன் தனக்கு என்று ஒரு செயல் இல்லாதவன்; தன்னை அணுகி வணங்குபவர்களுக்கு நல்ல வழித்துணையும் ஆவான் அவன்.

#29. உறவு ஆர் உளர் ?


காண நில்லாய் , அடியேற்கு உறவு ஆர் உளர்?
நாண கில்லேன் உன்னை நான் தழுவில் கொளக்
கோணி நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.


நான் உன்னைக் காணும்படி வெளிப்பட்டு அருள்வாய்! எனக்கு உனையன்றி உறவு வேறு யார் உளார் கூறு !
வெளிப்படும் உன்னைத் தழுவிக் கொள்ள நான் நாணுகில்லேன்! மனத் தூய்மை வாய்ந்த, குணம் மிகுந்த, அடியவர்கள் உள்ளங்களில் ஆணி வேரெனே உறுதியாக எழுந்தருளி இருக்கும் என் தலைவா வா!

#30. ஞானம் கருதியே!


‘வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல்’ என்று தயங்குவார்;
ஆன்நின்று அழைக்கும் அதுபோல், என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.


வானம் தானே உவந்து முன்வந்து மழை பொழிவதைப் போலவே தானே வந்து அருள் மழை பொழிவார் ஈசன் எனத் தயங்கி நிற்பார் சிலர். கன்று ஒன்று தன் தாய்ப் பசுவை அன்புடன் அழைப்பது போல இன்று நான் ஈசனை அழைப்பது ஞானம் பெற விரும்புவதால்!

 
#031 to #035

#31. இசைந்த வடிவினன்

மண்ணகத் தான்ஒக்கும், வானகத் தான்ஒக்கும்,
விண்ணகத் தான்ஒக்கும், வேதகத் தான்ஒக்கும்
பண்அகத்து இன்னிசை பாடல் உற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.


இறைவன் மண்ணுலகில் வசிப்பவர்களுக்கு மனித உருவில் வந்து வெளிப்படுவான். வானுகத்தில் வசிப்பவர்களுக்கு இறைவன் வானவடிவில் ஒளிமயமாக வெளிப்படுவான். விண்ணுலகில் வசிப்பவர்களுக்கு இறைவன் தேவ வடிவில் வந்து வெளிப்படுவான். சித்திகளை விரும்புபவர்களுக்கு இறைவன் சித்தர் வடிவில் வந்து வெளிப்படுவான். நிறைவு பெற்ற மனதில் நின்று கொண்டு நாதத்தை வெளிப்படுத்தும் பெருமானிடம் அறிவின் இடத்தில நின்று நான் அன்பு பூண்டிருந்தேன்.

# 32. பாடிப் பணிவோம்


தேவர் பிரான், நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான், விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான், தன்மைதான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.


சிவ பெருமான் தேவர்களுக்குத் தலைவன்; சிவ பெருமான் நம் போன்றவருக்கும் தலைவன்; ஜீவராசிகளைப் பத்து திசைகளிலும் சூழ்ந்திருப்பான்; விரிந்த,நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களைக் கடந்தவன்; அவனது தன்மையை அறிந்தவர் யாரும் இல்லை. அந்தப் பெருமானைப் பாடிப் பணிவோமாகுக.

# 33. நெஞ்சம் வாடுகின்றார்


பதிபல வாயது பண்டு இவ்வுலகம்
விதிபல செய்துஒன்றும் மெய்ம்மை உணரார்,
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.


தொன்று தொட்டே இந்த உலகினில் பல வேறு தெய்வங்கள் இருந்துள்ளனர். அவர்களைத் தொழும் விதிகள் பலவற்றை ஏற்படுத்தியும் உண்மையை உணரவில்லை. துதித்து பாட வல்லவர்களும் சிவத்துடன் கலந்து பெறுகின்ற உண்மை அறிவைப் பெறவில்லை! அவர்கள் அமைதியின்றி நெஞ்சம் வாடுகின்றனரே.

# 34. புகழ்ந்து நின்றேன்


சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.


சிவபிரான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி கலவைச் சாந்தில் வீசும் கஸ்தூரியைப் போலச் சிவமணம் வீசிக் கமழும். உலகில் திகழும். அந்த உண்மை நெறியில் செல்வதற்குத தேவை அரிய சுடர் போன்று வழிகாட்ட ஒரு பெரிய ஒளி. அதனை அளிப்பது அந்தப் பெருமானின் ஆயிரம் நாமங்கள். அவற்றை நான் இருக்கும் போதும் நடக்கும் போதும் ஓதுகின்றேன்.

# 35. திருமந்திரம்


ஆற்றுகில் லாவழி யாகு மிறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை யெட்டொடு
மாற்றுவ னப்படி ஆட்டவுமாமே.


பிறர் படைக்காத செந்நெறியில் திகழ்பவன் சிவபெருமான். அவனைப் போற்றுங்கள்; அவனைப் புகழுங்கள். அப்போது அவன் நம் சிரசில் கவிழ்ந்த நிலையில் இருக்கும் அஷ்ட தளக் கமலத்தை நிமிரச் செய்து விட்டு சன்மார்க்க நெறியில் நம்மைச் செலுத்துவான். அப்போது ஊர்த்துவ முகமான ஈசான முகம் ஒளிமயமாக விளங்கும்.
 
#036 to #040

#36. அருள் பெறலாம்

அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.


உயிர்கள் அனைத்துக்கும் தந்தை அவன்; நம் அனைவரின் இறைவனும் அவன்; திகட்டாத அமுதம் போன்றவன் அவன்; தனக்கு ஒரு ஒப்பில்லாதவன் அவன்; வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியபடியே அருளும் ஓர் வள்ளல் அவன்; ஊழியின் உயர்ந்த தலைவன் அவன்; அவனை எவ்வழியிலாகினும் தொழுது வழிபடுங்கள்; இவ்வழியில் அவன் அருளைப் பெற இயலுமே.


#37. வான்மதி போல் ஊனில் நிற்பான்


நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;
வானில் நின்று ஆர் மதிபோல் உடல் உள்ளுவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.


நாள் தோறும் நிலையாக இருந்து நான் ஈசனை வழிபடுவேன். அதனால் தழல் போன்ற மேனி இறைவன் வெளிப்பட்டு நிற்பான். வானத்தில் கலைகளுடன் திகழும் திங்களைப் போல அவன் ஊன் பொருந்திய உடலில் மகிழ்வுடன் வந்து தோன்றுவான். சஹஸ்ர தளக் கமலத்தில் பிராண வடிவமாக ஒளிவீசுவான்.


#38. பிதற்று ஒழியேன்


பிதற்று ஒழியேன்பெரி யான்அரி யானை;
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள்பேர் நந்தி தன்னை;
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் தானே.


பெரியவன், அரியவன் ஆகிய பெருமானை வழியாடுவதை நான் கைவிடவே மாட்டேன்! ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும், உருவம் உடையவும் ஆகிய பெருமானை வழிபடுவதை நான் கைவிடவே மாட்டேன்! என் பெருமானான இறைவனைச் சிவனை வழிபடுவதை நான் கைவிடவே மாட்டேன்! எப்போதும் அவனை வழிபடுவதாலேயே பெரிய தவம் செய்தவன் ஆவேன் நான்!


#39. ஈசன் அருள்


வாழ்த்தவல் லார்மனத்துள் உறு சோதியை,
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.


திரு ஐந்தெழுத்தால் வணங்குபவர்களின் உள்ளத்தில் இறைவன் அறிவின் பேரொளியாகத் தோன்றுவான். பாசங்களில் இருந்து நீங்கியவன் அந்தப் பெருமான். உயிர்களிடத்தில் மகிழ்ந்து திளைக்கும் ஈசன் அவன். அவனை ஏத்திப் புகழுங்கள்; அவனிடம் இறைஞ்சுங்கள்; தன்னையே அவனுக்குத் தந்தால் அவன் நல்ல நண்பன் ஆவான். அப்போது அவன் அருளைப் பெறுவது நமக்கு மிகவும் எளிதாகும்.


#40. சடம் செய்யான்!


குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம்பொன்னின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம் செய்து வாழ்த்தவல் லார்க்குப்
புறம் சடம் செய்யான், புகுந்து நின்றானே.


தாழ்ந்தும், பணிந்தும், மிகுந்த விருப்பத்துடன் ஒலிக்கும் கழல் அணிந்த ஈசனின் திருவடிகளை அடைவதற்கு ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். நிறைந்த செம் பொன்னின் ஒளியை உடையவன் சிவன்.வஞ்சனையால்மறையாமல், குறும்புகள் செய்யாமல், வாழ்த்தும் மெய் அன்பர்களின் உடலைப் புறக்கணியாது அன்புடன் அவன் அதில் புகுந்து நிற்பான் சிவபெருமான்.



 
#041 to #045

#41. இணங்கி நிற்பான்

சினம்செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்கு,
கனம் செய்த வாள்-நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான் போல் இணங்கி நின்றானே
.

பாற்கடலில் சீறிச் சினத்துடன் எழுந்த கொடிய நெஞ்சை தான் உண்டு அருளியவன் தேவர்களின் தலைவன் ஆகிய நம் சிவபெருமான். கடின மனத்தைத் திருத்தி விளைநிலம் போல் ஆக்கி அவனை வணங்கினால், நாதஒலி காட்டும் அந்த மாதொரு பாகன், அந்தப் பண்பட்ட உள்ளத்தில் பெண் மானைக் கண்ட ஆண் மான் போல இணங்கி நிற்பான்.

#42. இல்லறவாசிகளுக்கும் அருளுவான்


போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான்முடி செய்து அதுவே நல்கும்;
மாயகம் சூழ்ந்து வரவல்லார் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்து ஒன்றுந்தானே.


சிவபிரானை அடைந்து தோத்திரம் செய்பவர் அடையும் பயன் இது. நான்கு சிரங்கள் கொண்ட பிரம்மன் படைத்த பல பிறவிகள் எடுத்து மாயையுடன் கூடிய இல்லற பந்தத்தில் உழல்பவர்களே ஆயினும் அழகிய மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையின் நாதன் அவர்களிடமும் அன்புடன் வந்து பொருந்துவான்.

#43. நிறைந்து நிற்பான்


அரன்அடி சொல்லி, அரற்றி, அழுது
பரன்அடி நாடியே, பாவிப்ப நாளும்
உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.


திரு ஐந்தெழுத்தை தூய உள்ளத்துடன் இடைவிடாது ஓதி, அவன் பிரிவை ஆற்றாமல் அரற்றியும் அழுதும் திரிந்து, அவன் அடிகளையே எப்போதும் நாடுபவர்களுக்கு,அந்தத் திருவடிகளிலேயே அடங்கி நிற்க வல்லவர்களுக்கு, அவன் தன் திருவடிகளை உறுதியாகத் தருவான். மேலும் அவர்களிடம் ஒன்றி நிறைந்து நிற்பான்.

#44. அன்புள் விளங்குவான்


போற்றி என்பார் அமரர் புனிதன் அடி;
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி;
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி;
போற்றி என் அன்புள் விளங்க வைத்தேனே.


அமரர்கள் சிவபெருமானைப் போற்றுவர். அசுரர்கள் சிவபெருமானைப் போற்றுவர்; மனிதர்கள் சிவபெருமானை போற்றுவர். நானும் அந்தப் பெருமானைப் போற்றி வணங்கி என் அன்பினுள் அவன் விளங்குமாறு செய்தேன்.
(தேவர்கள் தம் சுய நலத்துக்காகப் போற்றுவர். ஞானிகள் எப்பயனும் கருதாமல் போற்றுவர். தேவர்கள் ஈசனை அன்பு இன்றிப் போற்றுவர். ஞானிகள் ஈசனை அன்புடன் போற்றுவர்.)

#45. வழிகாட்டி


விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்;
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.


கடல் சூழ் உலகு இறைவன் விதித்தபடி இயங்கும். வேறு விதமாக அதனால் இயங்க இயலாது. நாம் அடையும் இன்பமும் விதி வழிப்பட்டதே. அதுவும் இறைவனின் விதிக்கு மாறுபட்டதல்ல. துதிவழி நின்றால் பேரொளியாகிய சோதிப்பிரான் முக்தி பெறும் வழியை நமக்கு பகலவன் போலக் காட்டு
 
#046 to #050

#46. மனம் புகுந்தான்

‘அந்திவண்ணா, அரனே, சிவனே’ என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
‘முந்தி வண்ணா, முதல்வா, பரனே’ என்று
புந்தி வண்ணன் எம் மனம் புகுந்தானே.


“அந்தி வண்ணச் செம்மேனி உடையவனே! அரனே! சிவனே ! “என்று ஏத்தித் தொழுவர் தம் சிந்தையைச் செப்பனிட்ட அடியவர்கள். “அனைத்துக்கும் பழமையானவனே! முதல்வனே! அனைத்துக்கும் மேலானவனே!” என் நான் தொழ ஞான வடிவினன் ஆக அவன் என் மனம் புகுந்தான்!
(அந்திவண்ணா! அரனே! சிவனே! – உருவ வழிபாடு முந்திவண்ணா முதல்வா! பரனே! – அருவ வழிபாடு)

#47. நினையாவிடில் நின் இன்பம் இல்லை!


மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்;
நினைவுள் இருந்தவர் நேசத்தில் நிற்பர்;
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின்இன்பம் தானே.


சிவபெருமான் உயிர்களிடத்தில் கோவில் கொண்டுள்ளான். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்பத் தம்
உடலைப் பேணுகின்றவர்கள் மாதவம் செய்பவர்கள் ஆவர். அந்தப் பெருமான் தம் நெஞ்சத்தில் எழுந்தருளி இருக்கும்
தன்மையை அறிந்தவர்கள் அவனிடம் மாறாத அன்பு பூணுவர். பனை மரத்தில் இருக்கும் பருந்து சுவையான பனம் பழங்களை உண்ண எண்ணாமல் இழிந்த உணவை நாடிச் செல்கின்றது. பருந்து பனம் பழத்தின் பெருமை அறியாது அந்த இன்பத்தை இழக்கின்றது. உன் பெருமையை அறியாதவர்கள் அதுபோன்றே உன் இன்பத்தை இழக்கின்றார்கள்.

#48. விடியா விளக்கு


அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.


அடியவர்கள் தொழும் அமரர் பிரானை என் முடியால் தொழுது பணிந்து வணங்கினேன். அவனையே இடைவிடாது எண்ணினேன். உலகத்தார்களுக்கு அனைத்தையும் அருளும் ஈசனை, எந்தையை அனைத்துக்கும் மேலான அணையா விளக்கு என்று நினைத்து இருந்தேன்.

#49. முக்தி பெறலாம்


நரைபசு பாசத்து நாதனை உள்ளி,
உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரைபசு பாவச் செழும்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்து, எய்தலாமே.


பழமையான ஜீவன், பாசத்தளை இவற்றின் தலைவனை எண்ணி; பசு என்றும், பாசம் என்றும் கூறப்படுபவற்றின் தன்மையை அறிந்து; இவற்றின் தலைவனாகிய சிவனோடு ஒன்றாகக் கூட வல்லவர்கள்; அலைகள் போல வரும் பண்டு செய்த ஜீவனின் பாவக் கடலை நீந்தி; பசு, பாசங்களைக் கடந்து முக்தி என்னும் கரையை அடைய முடியும்.

#50. வழிபடும் வகை


சூடுவன்; நெஞ்சிடை வைப்பன்; பிரான் என்று
பாடுவன்; பன்மலர்தூவிப் பணிந்து நின்று
ஆடுவன்; ஆடி, அமரர் பிரான் என்று
நடுவன்; நான் இன்று அறிவது தானே.


இறைவனின் திருவடிகளை என் முடிமேல் சூடுவேன்; அவற்றை என் நெஞ்சத்தில் வைத்துப் போற்றுவேன்; என் தலைவனைப் போற்றிப் பாடுவேன்; பல வண்ண மலர்களைக் கொண்டு பூசிப்பேன்; அவன் பெருமையை எண்ணிக் கூத்தாடுவேன்; தேவர்களின் தேவன் என்று அவனையே நாடுவேன்; அவனை வழிபட நான் செய்வது இவையே ஆகும்.
 
#051 to #055

#51. வேதம் ஓதி வீடு பெறலாம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே
.

வேதம் கூறாமல் விட்டு விட்ட அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

#52. மெய்ப்பொருள் காட்டவே!


வேதம் உரைத்தானும் ஆகிலன்
வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.


வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி செய்யும் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

#53. கருக் குருவானவன்


இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி,
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே.


மந்திர வடிவானது அழகிய வேதம்.அதில் உள்ளதை உருக்கும் உணர்வாக விளங்கி, அச்சத்தை ஏற்படுத்தும் ஒலி அலைகளைக்கொண்ட வேத மந்திரத்தில் நுண்ணிய வடிவில் விளங்குவது முக்கண்ணனாகிய சிவபெருமானே ஆவான்.

#54. வேதாந்தம் ஓதும்


திருநெறி ஆவது செய்து அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமரம் நெறி கூடும்
ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.


திருநெறி எனப்படும் ஒருநெறி இதுவே ஆகும். அறிவு, அறியாமை அற்றதாகிய, வீடுபேறாகிய இறைவனை எண்ணி, குருவினால் உணர்த்தப்பட்டு, சிவத்துடன் இணையும் ஒப்பில்லாத நெறியாகும். வேத முடிவாகிய உபநிடதம் கூறுவதும் இதுவே.

#55. சிவனை அறிந்தவர் எவர்?


ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே.


ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன். அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக் கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. இறைவனைத் தம்மிலும் வேறுபட்டவனாக எண்ணிக்கொண்டு தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!
 
#056 to #060

#56. மாறுபட்டு அழிவர்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.


பாட்டும், அதன் இசையும், அதற்கேற்ற நடனமும் ஆடும் கணிகையரின் ஆட்டம் நிறைந்த உலகம் ஆகும் இது.வேதங்கள் காட்டும் நன்னெறியில் நில்லாதவர்கள், விரதங்கள் எதையும் கைக் கொள்ளாதவர்கள், ஆயினும் வேள்வியைச் செய்யும் விருப்பம் கொண்டவர்கள் தம் மாறுபாட்டினால் பல விதத் துன்பங்களை அனுபவிப்பார்கள்.

#57. ஆகமச் சிறப்பு


அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்;
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.


கருநிறம்கொண்ட உமை அன்னையின் நாதன் அருளினான் நமக்கு இருபத்தெட்டு ஆகமங்கள். அறுபத்தறுவரும் அஞ்சலி செய்து ஆகமங்களை அவன் ஐந்தாம் திருமுகத்தால் கூறக் கேட்டனர்.

#58. அண்ணல் அருள்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் நானே.


ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையினால் அண்ணல் அளித்தான் எண்ண இயலாத இருபத்தெட்டுக் கோடி நூறாயிரம் ஆகமங்கள். தேவர்கள் இவற்றின் வழியே இறைவன் பெருமையைக் கூறினர். நானும் அவ்வழியைப் பின்பற்றி அப் பொருளை வணங்குவேன்.

# 59. அற நெறி உரைக்கும்


பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலா னறஞ் சொன்னவாறே.


பதினெட்டு மொழிகளை நன்கு அறிந்தவர்கள் அறிஞர்கள்.அவர்கள் ஆகமம் கூறும் பொருளை நன்கு உணர்ந்தவர்கள்.
அறிஞர்கள் அறிந்த அந்த பதினெட்டு மொழிகளும் கூறுகின்றன அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவபெருமான் கூறும் அறத்தையே.

#60. நீர் மேல் எழுத்து


அண்ண லருளா லருளுந்திவ் யாகமம்
விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணி லெழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர்மே லெழுத்து வாகுமே.


சிவபெருமான் நமக்கு அருளிய இந்த ஆகமங்கள் விண்ணவர்களுகும் அனுபவத்தில் கிடைக்காது. எழுபது கோடியே நூறாயிரம் என்று நாம் அவற்றைக் கணக்கிட்டாலும், அனுபவம் இல்லாவிடில் அவை நீர் மேல் எழுத்துப்போல வீணாகி விடும்.

 
#061 to #065

#61. ஓங்கி நின்றான்

பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன்ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.


சிவன் மிகவும் மேன்மை வாய்ந்தவன். பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டையும் அவன் உலகத்தினருக்கு உவந்து அளிக்கின்றான். உலகைத் தாங்குபவனும் அந்தப் பெருமானே. சிவதர்மத்தை அவனே அனைவருக்கும் அருள்கின்றான். அமரர்கள் அவனை அரனாக எண்ணி அர்சிக்கின்றனர். சிவனே ஆகமத்தில் அறிவாக ஓங்கி விளங்குகின்றான்.

#62. நவ ஆகமம்


சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.


பரம் பொருளாகி, குருவாகிய பரமசிவத்திடமிருந்து சக்தியும், சதாசிவமும், மகேசரும், உருத்திர தேவரும், திருமாலும், நான்முகனும் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களை குருமுகமாகப் பெற்றனர்.

#63. நவ ஆகமங்கள்


பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்
மற்றவ்வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்ற நற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.


குருமுகமாகப் பெற்ற ஒன்பது ஆகமங்கள் இவை: காரணம், காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், யாமளம்,கலோத்திரம், சுப்பிரம், மகுடம் என்பவை. இந்த ஒன்பது ஆகமங்களின் சரமே திருமந்திரம் ஆகும்.

#64. உணராவிடில் வீணாகும்


அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்இலிகோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்இலி கோடியும் நீர் மேல் எழுத்தே.

சிவபெருமான் அருளிய சிவாகமாங்கள் எண்ணற்றவைகள் ஆகும் எனினும் அவற்றில் இறைவன் சொன்ன மெய்ப் பொருளை உணராவிடில் அவை நீர் மேல் எழுதிய எழுத்துப் போல பயனற்றவை.

#65. உணராவிடில் வீணாகும்


அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்இலிகோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்இலி கோடியும் நீர் மேல் எழுத்தே.


சிவபெருமான் அருளிய சிவாகமாங்கள் எண்ணற்றவைகள் ஆகும் எனினும் அவற்றில் இறைவன் சொன்ன மெய்ப்பொருளை உணராவிடில் அவை நீர் மேல் எழுதிய எழுத்துப் போலப் பயனற்றவை.
 
#066 to #070

#66. அறிய இயலாது

அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.


உயிர்களைப் பந்தத்திலிருந்து நீக்கும் முறையையும், உயிர்களை பந்தத்தில் கட்டும் முறையையும், இமைக்கும் தொழில் ஒழித்து உயிர் போகும் முறையையும், தமிழ்ச் சொல், வடசொல் இரண்டிலும் கூறி உணர்த்துகின்ற சிவனை ஆகம அறிவால் மட்டும் அறிந்து கொள்ள முடியுமோ?


IV. குரு பாரம்பரியம்


# 67. நந்தி அருள் பெற்ற எண்மர்


நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி , வியாக்கிரமர்
என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.


நந்தியின் அருள் பெற்ற குருநாதர்கள் எண்மர் ஆவர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் நால்வர் ஆவர்.
இவர்களோடு சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் மூவரையும் என்னையும் சேர்த்தால் எண்மர் ஆவோம்.


#68. நந்தியின் அருள்


நந்தியின் அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்;
நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழி காட்ட நான் இருந்தேனே.


சிவன் அருளால் குருநாதர் ஆகும் தகுதியை அடைந்தோம். சிவன் அருளாலே மூஆதரதில் விளங்கும் மூர்த்தியை நாடினோம். சிவன் அருள் எதையும் சாதிக்க வல்லது இந்த பூவுலகினில். சிவன் வழி காட்ட மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறி தலையின் மேல் சஹஸ்ர தளத்தில் நான் நிலை பெற்றேன்.


#69. மாணவர் எழுவர்


மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமனுத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவருமென் வழியாமே.

திருமந்திர உபதேசத்தை முறையாகப் பெற்ற என் மாணவர்கள் எழுவர். மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி மற்றும் கஞ்ச மலையான் என்னும் எழுவர் என் வழித் தோன்றிய மாணவர்கள் ஆவார்.


#70. நால்வர் உபதேசம்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான் பெற்றதெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரானார்களே.


சனகன் முதலிய நால்வரும் திசைக்கொருவர் என்று நாலு திசைக்கும் நான்கு குரு நாதர்கள் ஆவார்கள். அவர்கள் நால்வரும் தாம் பெற்ற பல்வேறு அனுபவங்களை மற்றவருக்கு எடுத்துரைத்து மேன்மையான குருநாதர் ஆயினர்.


 
#071 to #075

# 71. சிவன் செய்த உபதேசம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.


சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் என்ற மூவர்க்கும், மற்றும் சனகர் முதலிய நால்வருக்கும் உபதேசம் செய்தார். அது பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் ஒழிக்கும் பெருமை பெற்ற நல்ல நெறியாகும்.ஆதவன், சந்திரன், அக்கினி என்ற முச்சுடர் வடிவான ஈசன் நமக்கு குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லவே அல்ல.


#72. கடன்கள் தடை படவேண்டாம்


எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
அழுந்திய நால்வருக் கருள் புரிந்தானே.


“பெரிய மழை பொழிந்து எட்டு திசைகளிலும் நீர் எழுந்தாலும் முன்னேறத் தேவையான கடமைகளை விடாது செய்யுங்கள்!” எனக் கொழுவிய, பவழம் போன்ற, செவ்வொளி வீசும் குளிர்ந்த சடைமேல், அன்பு கொண்டு அதில் அழுந்தி இருந்த சனகர் முதலிய நால்வருக்கும் ஈசன் அருள் புரிந்தானே.


திருமூலர் வரலாறு


# 73. ஆகமம் செப்பலுற்றேன்


நந்தி திருஅடி நான் தலைமேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றி செய்து
அந்தி மதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை எய்து ஆகமம் செப்ப லுற்றேனே.


என் குருவாகிய சிவனின் இரு திருவடிகளை என் சிரமேற்கொண்டேன். அந்தப் பெருமானை என் அறிவில் நிறுத்தி நான் வணங்கி வழிபட்டேன். புருவ மத்தியாகிய முச்சந்தியில் பொருந்தியுள்ள மதியணி நாதனின் சிறந்த திருவடிகளை தியானித்து இந்தத் திருமந்திரம் என்னும் இந்த ஆகம நூலைத் தொடங்குகின்றேன்.


#74. தனிக் கூத்துக் கண்டேன்!


செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்றத்
தப்புஇலா மன்றில் தனி கூத்துக் கண்டபின்
ஒப்பில் ஏழு கோடி யுகம் இருந்தேனே.


சிவாகமம் சொல்ல வல்லவன் என்ற தகுதியைப் பெற்றேன். அந்தத் தகுதியை அளித்த குருவின் திருவடிகளைப் பெற்றேன்.
தலை உச்சியில் உள்ள சிதாகாசத்தில், ஒப்பில்லாத சூரிய சந்திரர்களின் ஒளிக் கதிர்களின் அசைவுகளை நான் கண்டு தரிசித்தேன். ஏழு ஆதாரச் சக்கரங்களும் விளங்குமாறு நெடுங்காலம் அமைந்திருந்தேன்.

உடலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்கள் உள்ளிருந்து வெளிப்படும் கதிரவனின் கலைகளையும், வெளியிருந்து உள்ளே புகும் சந்திரக் கலைகளையும் இயக்குகின்றன. சிவயோகியர் ஒளிக்கதிர்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இணைவதை அறிவர். உடலே ஆன்மா என்று மயங்கி நிற்கும் சராசரி மனிதர்கள் இதனை அறிய முடியாது.

#75. அருந்தவச் செல்வி

இருந்தவக் காரணங் கேளிந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே.


இங்ஙனம் நான் ஆதார சக்கரங்களில் பொருந்தி இருந்த காரணத்தைக் கேள் இந்திரன் என்னும் மாணவனே! புவனங்களின் நாயகியாகிய பராசக்தி அங்கு பொருந்தி உள்ளாலள். அந்த அருந்தவத்துக்கு உரிய செல்வியை பக்தியுடன் அடைந்து வணங்கி விட்டு அவளுடன் நான் மீண்டும் திரும்பினேன்.

சஹஸ்ர தளத்தில் உறையும் சிவனை நோக்கிச் செல்லும் பொழுது மூலதாரத்தில் மண்டலமிட்டு இருக்கும் குண்டலினி சக்தி நிமிரும். ஆதாரச் சக்கரங்கள் வழியே சிவத்தை அடையும். அதனுடன் இணையும். சமாதிக்குப் பின் மீளும் போது குண்டலினி சக்தியும் கீழே இறங்கி விடும்.
 
[h=1]#076 to #080[/h]#76. பாராமுகம் உண்மையை உணர்த்தியது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன் மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந்தோமால்.


தத்துவத்தையும், முத்தமிழையும், வேதத்தையும் பெரிதும் நுகர்ந்து அனுபவித்தேன் நான். அந்த வேளையில் உடலுக்கு இதமான உணவையும் கூட உண்ணாமல் இருந்து வந்தேன் நான். மனம் தெளிந்து விருப்பு வெறுப்பு என்ற இரண்டும் இல்லாமல் நான் உதாசினமாக இருந்ததால் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.


#77. திருக் கூத்தைக் கூற வந்தேன்!


மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளோடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.


மாலாங்கன் என்னும் என்னுடைய மாணவனே! தென் திசைக்கு நான் வந்த காரணம் இதுவே. நீல நிற மேனியையும், சிறந்த அணிகலன்களையும் உடைய சிவகாமி தேவியுடன், மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவன் நடத்தும் ஐந்தொழிக் கூத்தின் சிறப்பை விளக்கும் வேதத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துக் கூறுவதற்காகவே.

உலகைப் படைக்கும் ஆற்றல் நீல ஒளியில் உள்ளது. எனவே பராசக்தி தேவியின் நிறம் நீலம். சிவந்த ஒளி அறிவு மயமானது. அறிவு சிவ மயமானது. இந்த இரண்டு ஒளிகளின் சேர்க்கையால் உலகம் படைக்க படுகின்றது. ஐந் தொழில்கள் நடக்கின்றன. இதுவே யோகத்தின் ரகசியம் ஆகும்.

#78. பதம் சேர்ந்திருந்தேன்


நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்
பேருடையாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;
சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே.


சிறந்த அணிகலன்களை அணிந்தவள் பராசக்தி. சிவானந்தவல்லி என்னும் பெயர் பெற்றவள். என் பிறப்பை நீக்கி என்னை ஆட்கொண்டவள். எல்லையில்லாத சிறப்பை உடையவள் அவள். ஜீவர்களைப் பக்குவம் அடையச் செய்வதற்காகச் சிவன் எழுந்தருளிய தண்டில் சக்தியும் பொருந்தி இருப்பாள். அத்தகைய தேவியின் திருவடியில் நான் சேர்ந்திருந்தேன்.


#79. நாமங்களை ஓதினேன்


சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன்பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை;
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்;
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.


உமையொரு பாகனாகிய சிவபெருமனைச் சேர்ந்து வழிபட்டேன். ஜீவர்களைப் பக்குவம் செய்யும் சிவபெருமான் உறையும்
தண்டின் உச்சியில் உள்ள சஹஸ்ர தளத்தில் சேர்ந்திருந்தேன். சிவம் என்னும் அறிவின் நீழலில் நான் சேர்ந்திருந்தேன்.
அவ்வமயம் நான் சிவன் நாமங்களை ஓதியபடி இருந்தேன்.


#80. இரவு பகல் அங்கு இல்லை!

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே;
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.


எண்ணில்லாத காலம் இந்த உடலில் தங்கி இருந்தேன். இரவு பகல் என்னும் வேறுபாடுகள் இல்லாத சுயம்பிரகாசவெளியில் நான் தங்கி இருந்தேன். தேவர்கள் போற்றும் பதத்தில் நான் இருந்தேன்.என் குருநாதனான சிவபெருமானின் திருவடிகளில் நான் பொருந்தி இருந்தேன்.






#081 to #085


# 81. தமிழ் செய்யப் படைத்தான்

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.


பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்! நான் நல்ல தவம் செய்திருந்தேன். இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான். தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும், அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான்.

#82. திருவடியில் பொருந்தி இருந்தேன்


ஞானத் தலைவி தன் நந்தி நகர் புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப் பாலாட்டி நாதனை அர்ச்சித்து
நானுமிருந்தேன் நற் போதியின் கீழே.


ஞானத் தலைவியான சக்தியுடன் சிவன் விளங்கும் நகரில் புகுந்தேன். ஊனம் இல்லாத ஒன்பது முடிவுகளின் சந்திப்பில் இருந்து கொண்டு, சிவனைத் தோத்திரம் செய்தென். அறிவு மயமாகிய அவன் திருவடிகளின் கீழே நானும் இருந்தேனே.

‘ஒன்பது முடிவுகளின் சந்திப்பு’ என்பது ஏழு ஆதாரச் சக்கரங்கள், நாதம், பிந்து என்ற ஒன்பது இடங்களைக் குறிக்கும்.

#83. வான் வழியே வந்தேன்


செல்கின்ற வாற்றில் சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானது மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவரசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழியூடு வந்தேனே.


கயிலையில் இருந்து வரும் பொழுது, சிவபெருமானை நினைத்து மன்மதனை வெல்லும் ஆற்றல் கொமண்ட முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இவர்களிடம் உள்ள நுட்பமான விண் வழியே நான் வந்தேன்.

#84. அத்தன் அருளினான்


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

சித்தத்தில் விளங்கும் நூல்களில் சிறந்தது வேதம். சொற்களே வேதத்தின் உடல் ஆகும் என்றால் உற்பத்தியாகும் அந்த உடலில் வேதத்தின் பொருள். இறைவன் இவற்றைத் தன் கருணையால் எனக்கு அளித்தான்.

#85. சிவம் வந்து பொருந்தும்


நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வு உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் முழுவதும் பெறட்டும். வானைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான். அறிவே வடிவாக அமைந்தவன் ஆவான் நம் சிவபெருமான். அவனைப் பற்றிச் சிந்தித்தால் சிரசில் ஓர் உணர்வு உண்டாகும். அந்த உணர்வை நாம் முயன்று பற்றிக் கொண்டோம் என்றால் அந்த சிவம் நம்மைத் தேடி வந்து நம்மிடம் பொருந்தி விடும்.




 
Last edited:
#086 to #090

#86. உறைப்பொடு ஓதவேண்டும்

பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.


பிறப்பும் இறப்பும் இல்லாதவன் சிவபெருமான். அவன் திருப் பெயர் நந்தி என்பது ஆகும். விண்ணுலகத்தோர் சென்று வணங்குவர் சிவனை. உள்ளத்தில் அவனை மறவாதவர்கள் மந்திர மாலையால் பக்தியுடன் பாராயணம் செய்து அவன் அருள் பெறலாம்.


#87. மிகாமல் வைத்தான்


அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.


உடலை நமக்கு அளித்தவன் சிவ பெருமான். அந்த உடலில் ஜடராக்னியை மிகாமல் வைத்தான். பூவுலகம் கடல் பொங்கி அழியாமல் இருப்பதற்கு வடவாக்கினியை சிவன் கடலில் மிகாமல் வைத்தான். உள்ளத்தில் குழப்பம் தங்கி மிகாமல் இருப்பதற்காகச் சிவன் தந்தான் தமிழ் ஆகமமான திருமந்திரம். அத்தனை பொருட்களும் பொங்கி மிகாமல் இருக்க
இந்த திருமந்திரத்தில் வைத்தான் சிவபெருமான்.


#88. படி கண்டிலர்!


அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண் டேன் என்றயன் பொய்மொழிந் தானே.


“சிவ பெருமானின் திருவடிகளையும் திருமுடியையும் காண்போம்” என்று எண்ணினர் அரியும் அயனும் ஒருமுறை. எத்தனை முயன்றும் அடி முடியைக் காணவே முடியவில்லை. மீண்டும் பூமியில் சந்தித்தனர் இருவரும். “நான் அடியைக் கண்டிலேன்!” என்று உண்மை உரைத்தார் அரி. “நான் முடியைக் கண்டேன்” என்று பொய் உரைத்தான் அயன்.


#89. என் முடி மீது தன் அடி வைத்தான்!


பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.


காளை, மான், மழு இவற்றைப் பிரியாதவன் அனைத்துக்கும் மேலான நம்
சிவபெருமான். கற்பனையாக அமைந்தது இந்த உலக வாழ்வு. இதிலிருந்து எனக்கு ஒழிவைத் தந்தான் சிவன். என் சிரம் மீது தன் திருவடிகளைச் சூட்டினான்!


# 90. முற்றும் விளக்கினேன்


ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே.


அறியப்படும் பொருளையும் ( ஞேயம்), அறியும் அறிவையும் (ஞானம்),
அறிபவனையும் (ஞாதுரு) மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை முதலிய சக்தியின் கூட்டத்தையும், அச்சக்திகளில் விளங்கும் சிவத்தையும், வித்தாகிய சிவத்தின் பிரபாவத்தையும் இவை அனைத்தையும் நான் திருமந்திரத்தில் விளக்கினேன்.



 
#091 to 095

#91. அவன் ஆணையிட்டான்

விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே.


இவற்றை எனக்கு நன்றாக விளக்கியவன் நம் சிவபெருமான். அகோசர வித்து நிலையில் இருப்பான் அறிவு மயமான ஜோதியாக. அளவில்லாத பெருமைகளை உடையவன் அந்த ஆனந்த நந்தி. அசைவற்று இருக்கும் அந்த ஆனந்த நடராசன் இட்ட ஆணையின் படி சிறந்த கயிலாய மலையிலிருந்து நான் இங்கே வந்தேன்.

#92. மெய்ஞானம் தந்தான்


நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்;
நந்தி அருளால் மெய் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.


சிவகுருவின் அருளால் நான் மூலாதாரத்தில் உள்ள ருத்திரனை நாடினேன். சிவகுருவின் அருளால் நான் சதாசிவன் என்னும் பெயர் பெற்றேன். சிவகுருவின் அருளால் நான் உண்மையான ஞானத்தைப் பெற்றேன். சிவகுருவின் அருளால் நான் நிலை பெற்றிருந்தேன்.

#93. நாதாந்ததில் வீசும் பொன்னொளி


இருக்கில் இருக்கும் எண்இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.


இருக்கு வடிவான வேதத்தில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன. மூலாதாரத்தில் உள்ள சிவசக்தி மேலே சென்று உச்சியை அடையும். மந்திரங்கள் நாத மயமானவை. அவை பிரணவத்தில் முடிவாகும், பிரணவம் முடிந்த நாதாந்த நிலையில், சூரிய சந்திரர்களின் கதிர் ஒளியில், பிரணவ உச்சியில், ஆன்மாவானது பேரொளி மயமாக விளங்கும்.அந்நிலையில் அது பொன்னொளி போன்ற கிரணங்களுடன் ஒளி வீசும்.

#94. எப்போதும் புகழ்வேன்


பிதற்றுகின்றேன் என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளிவண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.


vi . அவையடக்கம்


# 95. வேர் அறியேன்

ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை;
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்;
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று; அதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே.


எம் பிரான் நந்தியின் பெருமையை யார் அறிவார்?
அவன் நீளத்தையும், அகலத்தையும், பரப்பையும் யார் அறிவார்?
அவன் தனக்கென்று ஒரு பெயரோ, உருவமோ இல்லாத பெருஞ்சுடர்.
அவன் வேரைக் கூட அறியாத நான் அவனைப் பற்றிப் பேசுகின்றேன்.
வேர் = பாதங்கள்
அவன் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே உள்ளன. திருமால் அவற்றைத் தேடித் தேடித் தோற்றுப் போனான்.
நந்தி என்னும் பெயர் கொண்ட இறைவனை நான் புகழ்வேன். இரவும், பகலும் அவனையே எண்ணி நான் தியானிப்பேன்.
ஸ்வயம் பிரகாசியாகிய அவனை நான் அடைய முயல்வேன். இயற்கையிலேயே ஒளி வடிவானவன் நம் சிவபெருமான்.

திருமூலர் வரலாறு இத்துடன் முற்றுப் பெற்றது.

அடுத்துக் காண்போம் திருமூலரின் அவையடக்கம்

 
#096 to #100

#96. நெறி அறிகிலேன்

பாடவல்லார் நெறி பாடவறிகிலேன்
ஆடவல்லார் நெறி யாடவறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட வறிகிலேன்
தேடவல்லார் நெறி தேடகில்லேனே.


சிவ பெருமானின் புகழைப் பாட வல்லவர்கள் நெறியில் சென்று பாட வல்லவன் அல்ல நான்! பக்தி பரவசத்துடன் ஆட வல்லவர்களின் நெறியில் சென்று ஆட வல்லவன் அல்ல நான்! ஞான நெறியில் சென்று அவனை நாடவல்லவர்கள் போல அவனை நாடவும் நான் அறிகிலேன். உடலில் அவனைத் தேடி, அவன் காட்சிக்காக ஏங்கி, யோகநெறியில் நின்று ஆராய்வதையும் அறிகிலேன்!

#97. உணருவது அரிது


மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை யுள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
முன்னும் அவனை உணரலும் ஆமே?


நிலைபெற்ற வேதங்களை முனிவர்கள் ஓதுகின்ற பொழுது அதன் ஸ்வரங்களின் நாதத்தில் வெளிப்படுவான் பெருமான்.
உலகத்தைப் படைத்த நான்முகனும், அவன் தந்தையாகிய திருமாலும் சிவபெருமானின் சிறப்பை அறிய முடியுமா?

#98. பயன் அறியார்


தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முக்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறாய் இருந்து துதி செயும்
பத்திமை ஆல் இப் பயன் அறியாரே.


குருவாக வந்து சிவன் தத்துவ ஞானத்தைப் போதித்து திருக் கயிலை மலையின் அடிவாரத்தில். முக்தியை விரும்பும் முனிவர்களும் தேவர்களும் இந்தத் தத்துவ ஞானத்தை வேறாகி இருந்து ஓதுவதால் அதன் சிறந்த பயனை பெற மாட்டார்கள்.
அஹங்காரம் உள்ளவர்கள் இறைவனை அன்னியமாகக் கருதி வழிபடுவார்கள். அஹங்காரம் அழிந்ததும் அவர்களின்
அந்நிய பாவம் மறைந்து விடும். பயன் கிடைக்கும்.

vii . திருமந்திரத் தொகை சிறப்பு


#99. ஞாலத் தலைவன்


மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலமறியவே நந்தி யருளது
காலை யெழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

மூலன் என்னும் நான் உரைத்துள்ளேன் மூவாயிரம் தமழ் மந்திரங்கள் கொண்ட இந்தத் திருமநதிரம். உலகத்தவர் உணர்ந்து கொண்டு உய்யும் பொருட்டு இறைவனால் அருளப்பட்டது இந்தத் திருமந்திரம். காலை எழுந்தவுடன் கருத்து அறிந்து இதனை ஓதினால் உலகத்தவர், உலகத் தலைவனை அடைந்து இன்புறுவர்.

#100. முக்தி நிலை


வைத்த பரிசே வகை வகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்தி செய் பூர்வத்டு மூவாயிரம் பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.


திருமந்திரம் என்னும் இந்த நூலில் உள்ளன ஒன்பது தந்திரங்கள். மூவாயிரம் பாடல்களும் கூறும் முக்தி நிலையினை.
பொதுவாகவும் சிறப்பாகவும் அமைந்த மூவாயிரம் பாடல்கள் ஓதுபவர்களுக்கு தகுந்த நன்மைகளை அளித்திடும்.




 
#101 to #105

viii. குருமட வரலாறு

# 101. ஏழு மடங்கள்

வந்த மடமேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தி வுதிக்கின்ற மூலன் மடவரை
தந்திர மொன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே.


ஏழு மடங்கள் கயிலாய பரம்பரையில் வந்தவை. அவை ஏழுமே சன்மார்க்கத்தைகே கூறுபவை. அவற்றில் முன்னே தோன்றியது மூலன் மடம். அதன் ஆசிரியர் மூவாயிரம் பாடல்களை ஒன்பது தந்திரங்களில் அழகிய ஆகமமாக அமைத்தார்.


#102. நிராமயத்தோர் எழுவர்


கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர் நாதந்தர்
புலங்கொள் பரமானந்தர் போகதேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத்தோரே.


சிவானந்தத்தில் கலந்திருக்கும் காலாங்கர், அகோரர், நன்மையை அளித்திடும் மாளிகைத் தேவர், நாதாந்தர்,அறிவு மயமாகத் திகழும் பரமானந்தர், போகத் தேவர், உலகில் விளங்கும் திருமூலர் என்னும் இந்த எழுவரும் பிறவிப் பிணி என்பது இல்லாத சித்தர்கள் ஆவர்.


ix. திருமூர்த்திகள்


# 103. சங்கரன் தன்நிகரற்றவன்

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன்; தன்னடியார் சொல்
அளவில் பெருமை அரி அயற்காமே.


அளவில்லாத இளமை, அளவில்லாத அழகு, அளவில்லாத இறுதி, அளவு செய்யும் காலம் என்ற நான்கு வகைகளிலும் ஆராய்ந்தால் குறைவற்றவன் சங்கரன் ஒருவனே ஆவான். அடியார்கள் போற்றும் எல்லை இல்லாத பெருமை பிரம்மனுக்கும், திருமாலுக்கும் உரியது ஆகுமோ?


#104. மூவரும் ஆவர் ஒருவரே.


ஆதி பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே.


மூலாதாரத்தில் உள்ளவன் உருத்திரன்.(இவன் அழித்தல் செயலைச் செய்பவன்.)நீல மணி நிறம் கொண்டவன் திருமால்.(இவன் மணிபூரகத்தில் இருந்து கொண்டு காத்தல் செயலைச் செய்கின்றான்) தாமரை மலரில் உள்ளவன் பிரம்மன்.(இவன் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு படைப்புத் செயலைச் செய்கின்றான்.) ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் தொடர்பினால் ஒருவரே ஆவார். இதை அறியாமல் அவர்கள் வேறு வேறுபட்டவர் என்பது அறியாமை.


# 105. உலகின் பீஜம்


ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்;
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது;
நீசர் ‘அது, இது’ என்பர் நினைப்பு இலார்;
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே.


நல்வினை தீவினை என்னும் இருவினைகளுக்கு ஏற்ப உயிர்களை
படைத்துக் காத்து அழிக்கும் மும்மூர்த்திகளுக்கு அப்பாற்பட்டவன் சிவன். அந்த மும் மூர்த்திகள் உண்டாவதற்கான மூலப்பொருள் சிவனே ஆவான். இதை அறியாதவர்கள் உண்மையான தெய்வம் அது இது என்று கூறுவார்.மாசற்ற மனம் கொண்ட தூய்மையாளர் வேராகிய சிவனை அறிவார்கள்.



 
#106 to # 110

# 106. அவன் பெயர் சங்கரன்

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு, இரண்டு, ஒன்றோடு ஒன்று ஆகும்,
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.


சிவனாகிய முதல்வன் மூவராக ஆவான்.
(பிரம்மன், திருமால் உருத்திரன் என்பவர்)

திருச் சிற்சபையில் ஐவராக விளங்குவான் சிவன்.
மும்மூர்த்திகளுடன் மகேஸ்வரன் சதாசிவன் என ஐவர்)

ஆறு ஆதாரங்கள் + ஒளி மயமான மகேஸ்வர மண்டலம்+ ஒலி மயமான சதாசிவ மண்டலம் + கவிழ்ந்துள்ள சஹஸ்ரதளம்
+ நிமிர்ந்துள்ள சஹஸ்ரதளம் என்று மொத்தம் பத்து ஆகும்.

விந்துவும், நாதமும் விளங்கும் அந்த நிலையில் அவன் பெயர் ஜீவர்களுக்குக் சுகத்தை அளிக்கும் சங்கரன் என்பது ஆகும்.

# 107. அன்னியம் இல்லை


பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை;
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்;
வயனம் பெறுவீர் அவ்வானவராலே.


ஜீவர்கள் அடையும் பயனை எண்ணிச் சிந்தித்தால் பிரம்மனும், திருமாலும் சிவனுக்கு அன்னியர் அல்ல. முக்கண்ணன் ஆகிய சிவன் வழி நிற்பவர்கள் அவர்கள். பயன் அடைவீர் அந்தத் தேவ தேவரின் திருவருளால்.
(முக்கண்கள் ஆகும் சூரியன், சந்திரன், அக்னி.)

#108. “ஞாலத்துக்கு நல்கிடு!”


ஓலக்கம் சூழ்ந்த உலப்புஇலி தேவர்கள்
பால்ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
“மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்துக்கு நம் அடி நல்கிடு” என்றானே.


அழிவு இல்லாத அமரர் தேவர்கள் சிவனைச் சூழ்ந்திருக்க, அச்சபையில் பால் ஒத்த மேனியனை நான் பணிந்தேன். சிவன் என்னிடம் , “திருமாலுக்கும், பிரம்மனுக்கும் சமமானவன் நீ! மண்ணுலகுக்கு என் திருவடி ஞானத்தை நல்குவாய்!” என்றான.

#109. பிறவிப் பயன்


வானவர் என்றும், மனிதர் இவர் என்றும்’
தேன் அமர் கொன்றைக் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை;
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே


வானவர் இவர் என்றும் மனிதர் இவர் என்றும் பெயர் வேறுபடுவது தேன் நிறைந்த கொன்றை மலர்களை அணிந்த சிவபெருமான் தந்து ஓம்பும் பல வித உடல்களின் வேறுபாட்டினால் மட்டுமே ஆகும். வேறு எந்தச் சிறப்பும் உயிர்வகையால் ஏற்படுவது இல்லை. ஒப்பற்ற தெய்வம் சிவபெருமான் ஒருவரே அன்றி வேறு எவரும் இலர். உடலை விரும்பி அதில் வாழும் நம் கடமை சிவபெருமானை அறிந்து கொள்வதே ஆகும்.

# 110. மூவரும், ஐவரும் சிவனே!


சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்;
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப்பிதற்று கின்றாரே.


பேரொளியாக ஒளிவீசும் சிவபெருமான் ஒருவரே நான்முகன், திருமால், ருத்திரன் என்று மூவராகவும், இம் மூவருடன் மகேஸ்வரன், சதாசிவன் என்று ஐவராவும் விளங்கும் உண்மையை அறியாத பரம மூடர்கள் அவர்களை வெவ்வேறாகக் கருதுவது எத்தனை மடமை!
 
#111 and #112

# 111. பல தன்மையன் சிவன்

பரத்திலே ஒன்றாய், உள்ளாய்ப் புறம் ஆகி,
வரத்தினுள் மாயவனாய், அயனாகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.


ஒப்பற்ற தன்மையில் ஒருவனாவான் சிவன். அனைத்திலும் உள்ளும் புறமுமாக இருந்து கொண்டு விருப்பத்தை உண்டாகுவதில் திருமால் ஆவான். படைக்கும் தொழிலில் இவனே நான்முகன் ஆவான். பல தன்மைகள் கொண்டு பல தெய்வங்களாக விளங்கும் சிவன் மறைந்து நின்று சம்ஹாரத் தொழிலைச் செய்யும் ருத்திரன் ஆவான்.


#112. சிவனே ஆவான் சதாசிவன்


தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை
வான்ஒரு கூறு மருவியும் அங்கு உளான்;
கோன்ஒரு கூறு உடலுள் நின்று உயிர்க்கின்ற
தான்ஒரு கூறு சலமயன் ஆமே.


சிவபரத்தின் ஓர் அம்சமாகிய சதாசிவன் என்ற தலைவன் வான வெளியில் விரிந்து பரந்து பொருந்தியுள்ளான். அனைத்துத் தத்துவங்களிலும் மருவியுள்ளான். ஜீவர்களின் உடலில் பிராண மயமாக உள்ளவன் அவனே. ஜீவர்களின் சலனத்துக்கும், அசைவுகளுக்கும் அவனே காரணம்.



 
முதல் தந்திரம் 1. உபதேசம்

[1]. முதல் தந்திரம் உபதேசம்

#113 to #117


#113. களிம்பு அறுத்தான்

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு
தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன் வைத்து
உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.


விண்ணிலிருந்து இறங்கி வந்தான் நம் சிவபெருமான். ஜீவர்களின் வினைகளுக்கு ஏற்ப மேனியைத் தாங்கினான். தன் குளிர்ந்த திருவடிகளையே உயிர்களுக்குப் பாதுகாவல் ஆக்கினான். உடல் உள் நின்று அதன் ஊனையும் உருகச் செய்தான்.
ஒப்பற்ற ஆனந்தத்தைக் காட்டி அதன் பாசத்தை நீக்கினான்.

#114. பவளம் பதித்தான்


களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்
களிம்பு அணுகாத கதிர்ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே
.

கண்ணுதல் பிரான் ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்புகளை முற்றுலுமாக அகற்றி அருளினான். மீண்டும் பாசம் என்ற இருள் அணுகாத வண்ணம் அங்கே சிவ சூரியனைத் தோற்றுவித்தான் பிரான். பளிங்கு போன்ற ஜீவனில், ஞானம் தரும் அந்தச் சிவந்த சிவஒளி, பவழம் போலப் பதிந்தது.

#115. பசு, பாசம் நிலாவே!


பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி;
பதியினைச் சென்று அணுகா பசு, பாசம்,
பதி அணுகின் பசு பாசம் நிலாவே.


நம் தலைவன் = பதி; ஜீவன் = பசு; தளை = பாசம். இம்மூன்றுமே மிகவும் தொன்மையானவை. பசுத் தன்மையும், பாசத் தன்மையும் பதியை அணுகிட இயலாது. பதியே நம்மை அணுகிடில் பசுத் தன்மையும், பாசத் தன்மையும் நீங்கும்.

#116. எழும் சூரியன்


வேயின் எழும் கனல் போல இம்மெய் எனும்
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும்
தோயமதாய் எழும் சூரியனாமே.


மூங்கிலில் தீ மறைந்து உறைகின்றது போன்றே பிரான் உடல் என்னும் கோவிலில் மறைந்து உறைகின்றான். சேயின் அழுக்கை போக்கும் தாய் போல சிவபிரான் உயிர்களின் மலங்களை மாற்றுகின்றான் சிவன். அருட் கடலில் உதிக்கின்ற உதய சூரியனாவான் அவன்.

#117. மலங்கள் அறும்


சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே,
சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சன்னதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே.


சூரிய காந்தக் கல் போன்றது ஜீவன். அதை சூழ்ந்துள்ள பஞ்சு போன்றது பாசம். சூரிய காந்தக் கல் பஞ்சினை எரித்து விடாது. அதே சூரிய காந்தக் கல் சூரிய ஒளியில் பஞ்சினை எரித்து விடும். அதே போல் சிவகுருவின் தோற்றம் பாசத் தளையை எரித்து விடும்.





 
#118 to #122

#118. மலங்கள் ஐந்து

மலங்களைந்தாம் என மாற்றி, அருளி,
தலங்கள் ஐந்தால் நற் சதாசிவமான
புலன்களைந்தான் அப்பொதுவினுள் நந்தி
நலன்கள் ஐந்தான் உள் நயந்தான் அறிந்தே.


சிவபெருமான் சதாசிவன் போன்ற ஐந்து மூர்த்திகளாக விளங்கி, ஐந்து நிலைகளிலும், ஐம்பொறிகளின் விஷய வாசனைகளை முற்றிலுமாக மாற்றி அருள் புரிந்தான்.


ஐந்து மலங்கள் = ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயீ

ஐந்து தலங்கள் = சிவன் இயக்குகின்ற ஐந்து மண்டலங்கள்

ஐந்து புலன்கள் = ஒலி, ஒளி, வாசனை, சுவை, தொடு உணர்ச்சி

ஐம் பொறிகள் = விழி, செவி, மூக்கு, நாக்கு, த்வக்கு ( தோல்)

ஐந்து விஷய வாசனைகள் = ஐம் பொறிகள் விரும்புபவை


#119. குரு உபதேசம்


அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீராழம் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.


ஜீவனின் அறிவு ஐம் புலன்களுடன் கூடியதால், அது வெள்ளத்தில் அகப்பட்டதைப் போல மயங்கி நிற்கும். சிற்றறிவைப் பேரறிவில் அடங்குவதை போல ஒரு நல்ல குருநாதன் தெளிவை ஏற்படுத்தி நல் வழியைக் காட்டுவான்.


#120. எரி சார்ந்த வித்து


ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனி நித்தம்
தீமேவு பல கரணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே.


பசுவின் பாலில் கலந்த நீரை அன்னப் பறவை பிரித்து விடும். சிதாகசப் பெருவெளியில் நடனம் புரிகின்றான் அம்பல வாணன். அந்த நடனம் உயிரிடமிருந்து அதன் வினைகளைப் பிரித்து விடும். வறுக்கப்பட விதைகள் ஒரு நாளும் முளை விடா. அது போன்றே ஏழு பிறவிகளின் நல் வினைத் தீவினைகள் இனிப் பலன் தாரா.


# 121. சிவயோகியர்


வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிக
சுத்த துரீயம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயி ரொன்றா யுடம்போடு
செத்திட்டிருப்பர் சிவயோகி யார்களே.


பிறவிக்கு வித்தாகிய கன்மத்தை அழித்துவிட்டு, சுத்த துரீய நிலையை அடைவதற்கு சிவயோகியர், விழிப்பு நிலையிலேயே தூய நிலையை எய்துவர். பந்தங்கள் அனைத்தையும் விட்டு விடுவர். பொறிகள் புலன்கள் வழியே செல்லாது அடக்கி, உடலும், அறிவும் செயல் இல்லாது இருப்பார்கள்.


# 122. சிவயோகம்


சிவயோக மாவது சித்து அசித்து என்று
தவயோகத் துள் புக்குத் தன்ஒளி தானாய்
அவயோகம் சாராது, அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே.


சிவயோகம் என்பது அறிவுள்ள பொருளையும் (ஈசனையும்), அறிவற்ற பொருளையும் (உலகையும்) பிரித்து அறியும் திறன்; தன் உணர்வைச் சுழுமுனை (சுஷும்னா நாடி) வழியாக மேலே தலைக்கு கொண்டு செல்லும் தவ யோகத்தை அடையும் திறன்; அங்கே உள்ள சிவ ஒளியில் தானும் புகுந்து கலந்து நிற்கும் திறன்; தீமை தரும் வேறு விதமான யோகங்களைச் சாராதிருத்தல் ஆகும். சிவன் தன் பரமாகாயத்தில் நின்று உய்யுமாறு ஒரு நல்ல நெறியை தானே எனக்கு அன்புடன் உவந்து அளித்தான்.



 

Latest ads

Back
Top