• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2284 to #2287

#2284. நால் ஏழ் விடுத்தது நின்றான்

சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து
ஓவும் பாரா நந்தி, உண்மைக்குள் வைகியே
மேவிய நால்ஏழ் விடுத்துநின் றானே.

சீவனுக்குத் துரியம் முதல் சிவதுரியம் வரையில் உள்ள அவத்தை நிலைகள் பத்து ஆகும். இந்தப் பத்து நிலைகளையும் கடந்த சீவன், நிறைவான சிவத்தில் அடங்குவான். அந்தக் கரணங்கள் நான்கினையும், வித்தியா தத்துவங்கள் ஏழினையும் அவன் விடுத்து நிற்பான்.

#2285. அவத்தைகளுக்கு அப்பாற்பட்டவன்

பரஞ் சிவன் மேலாம் பரமம் பதத்தில்
பரம்பரன் மேலாம் பர நனவாக
விரிந்த கனா விடர் வீட்டுஞ் சுழுமுனை
உரந்தகு மாநந்தி யாமுண்மை தானே.

பரசிவனைக் காட்டிலும் உயர்ந்தது பரமம் என்னும் பிரம்மம். பரமத்திலும் உயர்ந்தது பரம்பரமம் என்னும் பரப்பிரம்மம்.
நனவுப் பரசிவம், கனவுப் பரசிவம், சுழுத்திப் பரசிவம் என்னும் நிலைகளின் வழியாக பரநந்தி நிலையை அடையும் சீவன்.

#2286. பற்றுக்கோடுகள் பதின்மர்

சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவ மிக்கோங்கி
பாலாய்ப் பிரம னரியம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாங் காணிலே.

சீவர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பார்கள் பதின்மர் ஆவர். அருவ நிலையில் உள்ளவர்கள் பரம், சிவம், சக்தி, பரானந்தம், பரவிந்து, சதாசிவன் என்னும் அறுவர். உருவ நிலையில் உள்ள நால்வர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் ஆவார்.

#2287. உடலோடு உயிர் கலப்பு

கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்னை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே.

இந்தப் பத்து தெய்வங்கள் உயிருடன் கலந்து இயங்குகின்றன என்ற உண்மையை உலகத்தார் அறிவதில்லை. கடல் சூழ் உலகம் அழிந்துபடும் என்னும் உண்மையையும் இவர்கள் அறிவதில்லை. உடலுடன் உயிர் பொருந்தும் தன்மையை அறியாதவர்கள் இந்தத் தெய்வங்களை தியானிப்பது என்ன பயன் அளிக்கும்?
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2288 to #2291

#2288. என்னை அறிந்து இன்புற்றேன்

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில், தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

மெய்த் தவம் செய்மின். உம்மை உண்மையாக உணர்மின். நேசம் மிகுந்த ஈசன் உமக்கு அருள் புரிவான். உம்மை உண்மையாக நீர் உணர்ந்தவுடன் முன்பு இருந்த அறிவும் ஆணவமும் நீங்கி விடும். அளவில்லாத ஆனந்தம் விளையும்.

#2289. தன்னை மறைத்தது தன் கரணங்கள்

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

பொன்னால் உருவான அணிகலனைக் காணும் போது பொன் காட்சி தராது. பொன்னின் தன்மை காட்சி தரும் போது அணிகலன் காட்சி தராது. அது போன்றே அந்தக்கரணங்கள் வெளி உலகை நாடும் போது ஆன்மா புலப்படாது. ஆன்மா புலப்படும் போது அந்தக்கரணங்கள் வெளியுலகை விடுத்து ஆன்மாவில் ஒடுங்கி மறைந்து விடும்.

#2290. பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

மரத்தல் செய்யப் பட்ட யானையைப் பார்க்கும் போது மரத்தின் தன்மை புலப்பட்டால் யானையின் உருவம் தெரியாது. யானையின் உருவம் தெரிந்தால் மரத்தின் தன்மை புலப்படாது. அது போன்றே பார் முதலான பூதங்களை நோக்கும் போது பரம்பொருள் நமக்குப் புலப்படுவதில்லை. பரம்பொருள் புலப்படும்போது பார் முதலான பூதங்கள் நமக்குப் புலப்படா.

#2291. சீவன் சிவத்தில் அடங்குவதே முத்தி

ஆறாறு ஆகன்று, நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த பின்பு ஆன்மா திரு ஐந்தெழுத்தில் உள்ள ‘நம’ வை விட்டு விடும். பேரறிவு பெறும். தத்துவங்களில் இருந்து மாறுபட்டு விளங்கும். ஆன்மா ‘ய’காரமாகி ‘வ’காரம் ஆகிய சக்தியுடன் முதலில் இணையும். பின்பு ‘சி’காரமாகிய சிவனுடன் இணையும். சீவன் இங்கனம் ‘சிவாய’ ஆகும் நிலையே சீவனின் முத்தி நிலை.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2292 to #2295

#2292. பரமம் துரியம் தெரியும்

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகுநாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.

பராவத்தையில் சாக்கிரம், சுழுத்தி, கனவு, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து நிலைகள் இவ்வாறு அமையும். பரையில் நாதம் தோன்றும். நாதம் கனவில் ஒடுங்குப் பரையில் நின்மல சுழுத்தி என்னும் உறக்கம் அமையும். ஆன்மா நின்மல சுழுத்தியில் அழுந்தாது விளங்கும் போது உயரிய சிவதுரியம் அமையும்.

#2293. ஐம்மலங்கள் மாறுமே

ஐந்தும் சகலத்து, அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்,
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.

சகல நிலையில் உள்ள சீவனுக்கு பராவத்தைகள் ஐந்தும் அருள் புரிந்து அதன் பந்தங்களை நீக்கி விடும். ஆன்மாவைச் சுத்த அவத்தையில் பொருந்தச் செய்யும். இந்த நிலையில் ஆன்மாவிடம் சிவத்தை அடைவதற்கான விருப்பம் மேலிடும். மாலை நேரத்தில் நிலவொளியில் இருள் அகல்வது போன்றே, சீவனின் சிரத்தின் முன்பு விளங்கும் வெண்மையான ஒளியில் அதன் அனைத்து மலங்களும் அகன்று விடும்.

#2294. பராவத்தையுள் உறல் சுத்தம்

ஐஐந்தும், மட்டுப் பகுதியும், மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய், எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

ஆன்ம தத்துவங்கள் இருபத்து ஐந்தும் அசுத்த மாயை என்னும் தூவா மாயையைச் சார்ந்தவை. அவற்றைக் கடந்து முன்னேறும் சீவன் மாமாயை நிலையை அடையும். அந்த நிலையையும் கடந்து செல்லும் சீவன் பராவத்தை என்ற சுத்த நிலையை அடையும். இப்போது சீவன் எல்லாப் பொருட்களையும் அறிந்து கொண்டு அவைகளாகவும் இருக்கும். அதே நேரத்தில் அவற்றிலிருந்து விலகியும் இருக்கும். இதுவே ஆன்மாவின் உயரிய சுத்த நிலையாகும்.

#2295. நன்றான ஞானத்து நாதப்பிரான்

நின்றான் அருளும், பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும், உபாதியும்
சென்றான்; எனைவிடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்து நாதப் பிரானே.

சிவன் அருளாகி நின்றான்; சிவன் பரமாகி நின்றான்; சிவன் அன்பாகி நின்றான்; சிவன் என்னுடன் ஒன்றாக மருவி நின்றான்; சிவன் ஆன்மாவுடன் பிரிவின்றிக் கலந்து இருந்த போதிலும் ஆன்மாவின் உபாதைகளால் வருந்தாமல் இருந்தான். என்னை விட்டு என்றும் அகலாதவன் என் நன்றாகிய ஞானத்து நாதப்பிரான் ஆன சிவபிரான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

9. முக்குண நிர்குணம்
9. முக்குண நிர்குணம்

முக்குணங்கள்:

இராசதம் = மன எழுச்சி
தாமசம் = மயக்கம்
சாத்துவிகம் = அமைதி

#2296. அவத்தைகளுக்கு உரிய குணங்கள்

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

நனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது சாத்துவிக குணம்.
கனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது இராசத குணம்.
சுழுத்தி நிலையில் உயிரிடம் பொருந்துவது தாமச குணம்.
ஐம்பொறிகள், அந்தக்கரணங்கள் செயற்படாமல் இருக்கும் நிலையே துரியம் என்னும் பேருறக்கம்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

10. அண்டாதி பேதம் ( அண்டத்தின் வகைகள்)

சீவனின் உடல் தொம்பைக் கூடு போன்ற ஒளி மண்டலங்களால் சூழப்பட்டுள்ளது.
முட்டைக்குள் முழு வளர்ச்சி அடைந்தபின் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்

இது போன்றே அண்டகோசம் என்ற பிரணவத்தில் வளர்ந்து பக்குவம் அடைந்த ஆன்மா பிரணவத்தைக் கடந்து செல்கிறது.

#2297 & #2298

#2297. தேவர் பிரான்

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே.

அண்டத்தைத் தன் இருக்கையாக்கி அதன் மேல் அமர்பவன் தேவர் பிரான் ஆகிய சிவன். பேரண்டத்தில் உள்ளன பல அண்ட கோசங்கள். அவை எண்ணிக்கையில் ஏழு கடற்கரையில் உள்ள மணல் துகள்கள் போன்றவை. பொன்னொளி வீசும் இவற்றின் மீது தன் பொன்வண்ண மேனி ஒளிரச் சிவன் அமர்வான்.

#2298. தான் அந்தம் இல்லாத தத்துவம்

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

அண்டாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தத்துவங்களைக் கடந்து சிவன் விளங்குகின்றான். அவன் திரு மேனிகள் ஐந்து. அவை சத்தியோசாதம், வாமதேவம், தத்புருடம், ஈசானம், அகோரம். அவன் கடந்து நிற்கும் தத்துவங்களின் எண்ணிக்கை அண்டங்களின் எண்ணிக்கையைப் போல எண் மடங்கு ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

11. பதினோராம் தானம்

பதினோராம் தானமும் ஓர் அவத்தையே

துவாதச கலை அராகம் முதலாக உன்மனி ஈறாக பன்னிரண்டு ஆகும்.
ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு.

பதினோராவது கலையாகிய சமனையின் இடம் இருப்பது தலைக்கு மேலே.
அவத்தை என்பது ஆன்மா அந்த இடத்தில் பொருந்தி இருப்பது.

#2299 to #2301

#2299. உலக நோக்கு இருந்தால் நாதம் விளங்காது

அஞ்சில் அமுதும், ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம், ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில், காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

ஐந்தாவது கலையாகிய அர்த்த சந்திரனின் இடம் புருவமத்தி. இது விழிப்பு அடைந்து விட்டால் அமுத மயமான ஒளி பெருகும். ஏழாவது கலையாகிய நிரோதினி ஆன்மாவுக்கு ஆனந்தத்தை அளிக்கும். விந்து ஜெயம் பெறுவதே பிரணவம் ஆகும். ஒன்பதாவது கலைக்கு மேல் பிரணவம் விளங்கும். பதினோராவது நிலையாகிய சிவதுரியம் ஓர் அவத்தையே. இந்த நிலைகளே ஆன்மாவின் பராவத்தை.

2300. புரியட்டகம் ஒளிமயமாகும்

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

ஆன்மாவின் துரியாதீத நிலையில் புருடன் மற்றும் ஐந்து சிவத்துவங்கள் என்னும் ஆறும் விளங்கும். உறக்க நிலையில் புரியட்டகம் என்னும் நுண்ணுடல் விளங்கும். நனவு, கனவு நிலைகளில் வித்தியா தத்துவம் விளங்கும். இந்நிலைகளில் உட்கரணங்கள் நான்கும் பொருந்தி அமையும்.
புரியட்டகம் : மனம், புத்தி, அஹங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் பொருந்திய நுண்ணுடல்

#2301. சிவத்தின் வழியே நிற்பது நன்மை

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

வித்தியாததுவங்கள் ஏழும், அந்தக் கரணங்கள் நான்கும் ஆகிய பதினோரு தத்துவங்களும் ஒன்று கூடினால் உடல் அமையும். இவை செயல் படாது நின்றால் அப்போது சிவன் அமைவான். அந்தக் கரணங்களின் வழி சென்று அலைந்து திரியாமல் சிவத்தின் வழியே நிற்பதுவே நன்மை பயக்கும் என்று நீ அறிந்து கொள்வாய்!
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

12. கலவு செலவு

கலவு = ஒன்று சேர்த்தல்
செலவு = பிரிதல்
கருவிகளுடன் கலத்தலும் பிரிதலும் இதில் கூறப்படும்.

#2302 & #2303

#2302. ஆன்மாவின் தூயநிலை

கேவலம் தன்னின் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

கேவல அவத்தையில் உள்ள ஆன்மா கருவிகள் கரணங்களுடன் கலந்து சகல அவத்தையை அடையும். ஆன்மா கருவிகள், கரணங்கள் இவற்றை விட்டு விட்டதும் சகல நிலையில் இருந்து பிரிந்து விடும். கேவலம், சகலம் என்ற இந்த இரண்டு நிலைகளையும் துறந்து விட்ட ஆன்மா தன்னைத் தானே அறிந்து கொள்ளும். இது மூன்றாவது நிலை. ஆன்மா இம்மூன்று நிலைகளையும் கடந்து சென்று சாக்கிராதீத நிலயை அடைந்து அங்கு பொருந்தி இருப்பதே ஆன்மாவின் தூய நிலை எனப்படும்.

#2303. சினத்தைத் துறந்தால் விளையும் பயன்

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

சினத்தை உங்களால் முடிந்த அளவுகுத் துறந்து விடுங்கள். உள்ளத்தை உங்களால் முடிந்த அளவுக்கு சிவன் மேல் செலுத்துங்கள். இரவும் பகலும் சிவன் நினைவுடன் துரியத்தில் சமாதியில் பொருந்தி இருங்கள். அப்போது கற்பாறை போன்ற கனத்த பாச இருள் அகன்று விடும். நீங்கள் பரம ஆகாயமண்டலத்தின் ஒளியை உணர்வீர்கள்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

13. நின்மலாவத்தை

நின்மலம் + அவத்தை = நின்மலாவத்தை

மலம் இன்றி ஆன்மா சிவத்தில் ஒடுங்கி இருக்கும் நிலை

#2304 to #2308

2304. பிரணவ உடல் மரணமில்லா வாழ்வு

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.

மௌனம் என்னும் கிணற்றுக்குள் ஓர் ஆமையைப் போல உறைவார் பிரணவ வழிபாட்டாளர். அவரிடம் நின்மல சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள் உண்டு. அவர் ஆன்ம ஒளியில் நழுவாத வண்ணம் தன் அறிவை ஒடுக்கினால் அவர் பிரணவ உடல் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வார்.

#2305. எம பயம் இல்லை!

காலங்கி நீர்,பூக் கலந்தஆ காயம்
மாலங்கி, ஈசன், பிரமன், சதாசிவன்
மேலஞ்சும் ஓடி, விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை, கருத்தில்லை தானே.

காற்று, தீ, நீர், நிலம், வானம் என்னும் ஐந்தினையும் இயக்குபவர்கள் உருத்திரன், திருமால், நான்முகன் , மகேசன், உருவம் உடைய சதாசிவம் ஆவர். இவர்களுக்கு மேலே அமைந்துள்ள அருவச் சதாசிவம், விந்து,நாதம், சக்தி, சிவன் என்னும் ஐவரை பொருந்தும் ஆற்றல் கொண்டவருக்கு காலனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. அவருக்கு இந்த உலகத்தைப் பற்றிய கருத்தும் இராது.

#2306. சிவத்தை சேரின் சிவகுமாரன்!

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.

ஆன்மா சிவனின் தன்மையைப் பெறும்போது சிவகுமாரன் ஆகிவிடும். மறைகள் “ஆன்மாவே சிவகுமாரன் ஆனான்” என்று கூறுவதன் பொருள் இதுவே. நின்மல அவத்தையில் ஆன்மா சிவனுக்கு மகன் ஆகும். அந்நிலையில் இருபத்து ஐந்து தத்துவங்களும் இரா. ஆன்மாவின் தன்மையுடன் வாழ்பவர் சிவப் பேற்றினை அடைய முடியாது. சிவகுமாரன் ஆக முடியாது.

#2307. ஆன்மா அதி சுபன் ஆகும்

உதயம், அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்,அனந் தான் அந்தி யாகுமே.

நின்மல சாக்கிரத்தில் ஆன்ம ஒளி உதயமாகும். நின்மலக் கனவில் உலக சிந்தைகள் அழிந்து ஆன்மா தன்ஒளியில் அழுந்தும். நின்மல உறக்கத்தில் ஐம்பொறிகள் ஓய்ந்து அடங்கி விடும். சித்துப் பொருளை ஆன்மா தன் பற்றுக் கோடாகக் கொண்டு இருந்தால், பேருறக்க நிலையில் அது அதிசுபன் ஆகி மங்கள வடிவுடன் அழியாத பேறு அடையும்.

#2308. எய்துவதற்கரிய சிவகதி எய்தும்

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

சீவ ஒளி உடலைச் சூழும் போது ஆன்ம தத்துவம் அடங்கி விடும். தத்துவங்களின் உள்ளும், புறமும் சீவ ஒளி நிறையும் போது ஆன்மா துரிய நிலையை மேற்கொண்டால் அது சுத்த ஆன்மா ஆகிவிடும். அந்த நிலையில் ஆன்மாவுக்குத் தீமைகளை அளிக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அகன்று விடும். ஆன்மா ஞான வடிவாகச் சென்று அடைவதற்கு அரியதாகிய சிவசக்தியை அடையும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2309 to #2313

#2309. கர்மத் துரிசு அகலாது

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

தீயில் நன்கு காய்ச்சப்பட்ட இரும்பு தீயை விட்டு அகன்றாலும் அதனிடம் தீயின் நிறமும் வெப்பமும் அமைந்திருக்கும். அது போன்றே கரணங்களை விடுத்து நிற்கும் நின்மலத் துரியத்தில் முன்பு நிகழ்ந்த கிரியா வாசனைகள் ஆன்மாவிடம் அமைந்திருக்கும்.

#2310. மலமற்ற ஆன்மா பரம் ஆகும்

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மாலதீதம் அப்பரந் தானே.

நனவு நிலையில் ஆன்மாவின் அனுபவங்கள் அநேகம். அவற்றை முற்றிலுமாகத் துறந்து விட்ட நிலையில் வேத விழுப்பொருளான சிவன் அருள் கிடைக்கும் என்றால், அந்த ஆன்மா அனைத்தையும் கடந்து அதீத நிலையை அடையும். அந்த ஆன்மா மலங்கள் நீங்கப் பெற்று இருக்கும். இத்தகைய மலமற்ற ஆன்மாவே பரம் ஆகும்.

#2311. அத்தனோடு ஒன்றலாம்

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து.
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

சுத்த அதீத நிலையை அடைந்தவர்கள் மீண்டும் சகல நிலைக்குத் திரும்பி விட்டாலும் அவர்கள் மீது அத்தன் கொண்ட அருள் மாறாது. நீங்காது. அவர்கள் உலக இன்பங்களை நாடாமல் சிவன் நினைவிலேயே நாதாந்தத்தில் சமாதி அடைந்து சிவத்துடன் பொருந்துவார்கள்.

#2312. உமையொரு பாகன் அருள் செய்தான்

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

உமையொரு பாகன் ஆன சிவன் உலகத்து உயிர்களை எல்லாம் ஆண், பெண் என்ற இரு வேறு பாலர்களாகப் படைத்தான். உமையொரு பாகன் ஆன அவனே என்னை உலகத்துச் சுகங்களின் கவர்ச்சியில் இருந்து மீட்டான். எனக்கு அகண்ட வடிவம் தந்து, எங்கும் சென்று வரும் ஆற்றலையும் தந்தான். என் தந்தை போல என்னுடன் இருந்து என்னைக் காத்தான்.

#2213. சுவர்க்கமும் நரகமும் நீங்கும்!

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

காற்றாடியின் ஓலையும், கொள்ளிக் கட்டையின் வட்டமும், கடலில் எழுகின்ற அலைகளும், தயிரில் சுழலும் மத்தும் தாமாகவே இயங்குவதில்லை. அது போன்றே உயிர்களும் தாமாக இயங்குவதில்லை. அவைகள் தங்கள் மலங்களால் இயக்கப்பட்டு பல்வேறு வினைகளை புரிகின்றன. தத்தம் வினைகளுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றன. மீண்டும் உலகத்தின் வந்து பிறக்கின்றன. சீவன்கள் இறைவனின் அருளை பெற்றால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2314 to #2318

#2314. கதிரவன் முன்பு மதியொளி

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்படராவே.

சீவன் சிவனாகும் தன்மையை அடைந்துவிட்டால் அதனைப் பற்றி இருக்கும் பழமையான மலங்களும், அவற்றால் உண்டாகும் பாசத் தளைகளும், அதனால் அமைகின்ற மூன்று குணங்களும் அகன்று விடும். ஆன்மா தன் மேன்மையையும், உண்மையையும் அறிய விடாமல் தடுத்த தடைகள் அனைத்தும் கதிரவன் முன்பு மதியொளி போல ஒளிராமல் அகன்று சென்று விடும்.

#2315.தொழில் அற்று இருப்பர்

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

நின்மலத் துரியத்தில் சீவனின் ஆன்ம ஒளியில் நுண்ணிய நிலயில் பஞ்ச பூதங்கள் அடங்கி இருக்கும்.
கதிரவனும் திங்களும் தங்கள் கலைகள் அடங்கி இருப்பர். படைப்புத் தொழில் ஆற்றும் நான்முகன், காக்கும் கடவுள் திருமால், அழிக்கும் செயல் புரியும் உருத்திரன் என்ற மூன்று தெய்வங்களும் தங்கள் தொழில் அற்று விளங்குவர்.

#2316. சிவலோகம் எளிதாகும்

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

ஐம்பொறிகள் என்னும் ஐந்து யானைகளை அடக்கி விட்டு, அறிவு என்னும் ஞானத் திரியை நன்கு தூண்டி விட்டு, அதில் காணும் ஒளியில் புகுந்து கொண்டு, தன் ஊன உடலைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவலோகம் செல்வது மிகவும் எளிதாகும்.

#2317. நாடியின் உள்ளே நாதம் கண்டேன்

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.

ஆடிய திருவடி அசைக்கின்ற காற்றையும், தாடித்து எழுகின்ற டமருக ஓசையும், வேதங்கள் ஆகமங்கள் இசைகின்ற ஒலியையும் நான் என் நாடியின் உள்ளேயே கண்டு கொண்டேன்.

#2318. பேரறிவும், பேயறிவும்

முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே

முற்பிறவியில் பெற்ற நல்லறிவுடன் பயிற்சி செய்த நல்வினைகளின் பயன் இந்தப் பிறவியில் பெற்றுள்ள தூய பேரறிவு ஆகும். சீவனின் அறிவு ஒளி பெற்று விளங்கும் போது தான் சீவன் தன்னைப் பற்றிய உண்மைகளை அறிய முடியும். தன்னை உள்ளபடி தான் அறிந்து கொள்வதே உண்மையான அறிவு ஆகும். மற்றவை எல்லாம் பேயறிவு ஆகும். ஏனென்றால் அவை சீவனின் பிறவிப் பிணியை அகற்றுவதில்லை.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2319 to #2323

#2319. செயலற்று இருப்பார்க்குச் சிவனருள் சித்திக்கும்

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

உட்கருவிகள் என்னும் அந்தக்கரணங்கள் செயலற்று இருக்கும் போது ஆன்மாவுக்குச் சிவானந்தம் ஏற்படும். இந்த ஆனந்த நிலையை அடைந்தவர் சிவ யோகத்தையம் கூட நாடார். இங்கனம் செயலற்று இருப்பவர் இந்த உலகத்தோடும் ஒட்ட மாட்டார். இவ்வாறு செயலற்று ‘சிவனே!’ என்று இருப்பவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும்.

#2320. ஒளியுடல் கிடைக்கும்

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

சீவன் “தானே சிவன்!” என்று அறிந்து கொண்டு சிவனுடன் சமாதியில் இருந்தால், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்கள் நீங்கும். ஆன்மாவை கட்டியிருக்கும் தளைகள் நீங்கும். பிறவியை உண்டாக்கும் நுண்ணுடலை ஒழித்துச் சிவனுடன் பொருந்துவோருக்கு மேலுலகில் ஓர் அழியாத ஒளியுடல் கிடைக்கும்.

#2321. நாதசக்தி நன்மை நல்கும்

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

ஆன்மாவை விட்டு நீங்காத சிவன் அருளால் ஒரு நாதம் பிறக்கும். ஆன்மாவை விட்டு நீங்காத இருளும் ஒளியும் மாறி மாறி விளங்கும் போது ஆன்மா முறையே கிரியையிலும், ஞானத்திலும் மாறி மாறி தங்கும். இங்கனம் ஆன்மாவின் பத்த நிலையிலும் முத்தி நிலையிலும் அருட் சக்தி மாறாமல் விளங்கும்.

#2322. உள்ளொளிக்கு ஒளியாமே.

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.

பத்தத்திலும், முக்தியிலும் ஆன்மாவுக்கு தொடர்ந்து உதவுபவள் சக்தி. பத்த ஆன்மா அவளை மயங்கியும், முக்த ஆத்மா அவளைத் தெளிந்தும் உணர்ந்து கொள்ளும். ஆன்மாவுக்குச் சக்தி அளிக்கும் நல்லறிவே ஆன்மாவுக்கு நல்ல துணையாக அமையும். அதுவே சீவனின் ஒளிக்கு ஒளியினைத் தரும்.

#2323. அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேன்

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

உண்மையில் முப்பத்தாறு தத்துவங்களும் அறிவற்றவை ஆகும். ஒரு சமயத்தில் நான் அவற்றுடன் நன்கு பொருந்தி அவைகளாகவே இருந்தேன். ‘எல்லாவற்றையும் அறியும் அறிவின் வடிவம் நான்!” என்ற உண்மையை நான் அறியாமல் இருந்தேன். சிவனை நாடிய போது நாதசக்தியின் வழியே நந்தி உண்மையை எனக்குப் புரிய வைத்தான். ‘நான் வெறும் சடம் அல்ல. நான் அறிவின் வடிவம்’ என்று அறிந்து கொண்டேன். பின்னர் நான் என்னையும் அறிந்து கொண்டேன். ஆன்மத் தத்துவங்களையும் அறிந்து கொண்டேன்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2324 to #2328

#2324. ஊனமிலாள் தனை ஊனிடைக் கண்டேன்

தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

என்னை அவனாக (சீவனைச் சிவனாக) ஆக்கிவிட்ட ஞானப் பிரான் சிவன். வானவர்களின் முதன்மைத் தலைவன் அவன். மாமணிச் சோதியானவன் அவன். இத்தகைய சிவபெருமானையும், குற்றமற்ற மெய்ஞ்ஞானத்து இன்னருள் தரும், உடல் வடிவம் அற்ற சக்தியையும், என் உடலில் நான் கண்டு கொண்டேன்.

#2325. தெளியச் சிவானந்தம் விளையும்

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.

ஆன்மாவின் மீது சக்தியின் அருள் உள்ள போது ஒளியும். சக்தியின் அருள் இல்லாத போது இருளும் நிலவும். ஆன்ம போதம் அகலும் போது சக்தி தெளிவான அறிவைத் தருவாள். அதனால் நாத சக்தி உண்டாகும். அதனால் உயரிய சிவானந்தம் விளையும்.

#2326. “தத் தவம் அசி!”

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே.

தன்வயம் இழந்து ஆன்மா சிவனின் அருளில் அழுத்தி விட்டால் உயரிய ஆனந்தம் விளையும். சீவன் உடலைக் கடந்து சமாதி செய்யும் போது அது உணர்வாகி, உள்ளுணர்வாகி, அகண்ட அறிவைப் பெறும். உடலைச் செலுத்தி வந்த சுட்டறிவு என்னும் ஆன்ம அறிவு மறைந்து விடும். அந்த நிலையில் “நீ அவன் ஆகின்றாய்!” என்ற மகா வாக்கியப்படிச் சீவன் சிவன் ஆகிவிடும்.

#2327. அறிவிக்க அறிவார் அறிவார்

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.

தாமச குணம் பொருந்திய, ஆன்மா ஞானம் சிறிதும் இல்லாதவர்களுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டாம். அது வீண்! முற்பிறவிகளில் செய்த பயிற்சிகளால் இயல்பாகவே ஞானம் பெற்று விளங்குபவர்களுக்கும் ஞான உபதேசம் செய்ய வேண்டாம். அது தேவை இல்லை! கல்வியின் மூலம் ஆன்ம ஞானத்தைக் கற்று அறிந்த பின்னும், அதன் அனுபவத்தைப் பெறமுடியால் அறியாமையில் இருப்பவர்களுக்கே ஞான உபதேசம் செய்து அவர்கள் ஆன்ம அனுபவம் பெறுவதற்கு உதவ வேண்டும். அவர்கள் ஆன்ம அனுபவம் பெற்றால் தம் உண்மை வடிவை அடைவார்கள்.

#2328. சொல் அற்றவர்கள்!

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

சத்து, அசத்து, சதசத்து என்னும் மூன்று பொருட்களுடன் கூடி ஆன்மா முறையே சித்து (அறிவுள்ள பொருள்), அசித்து (அறிவற்ற பொருள்), சிவசித்து (பேரறிவுப் பொருள்) என்ற மூன்று நிலைகளை அடைகின்றது. துரிய நிலையில் சுத்த மாயை அசுத்த மாயை இரண்டுமே இரா. அங்கு ஆன்மா நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்று அவத்தைகளையும் கடந்து பிரணவத்தையும் கடந்து மலங்கள் நீங்கப் பெற்றுத் தூய்மை அடையும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2329 to#2333

#2329. சிவத்துடன் தங்கும்

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

ஆன்மா தன் உண்மை வடிவைத் தானே அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஆன்மா அறிவு அற்றவனுன் அல்லன். ஆன்மா தன் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பு தான் அறிவும் அறியாமையும் கலந்தவன் எடன்றுஅறிந்து கொள்வான். அருள் சக்தியால் இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த பின்பு சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடைவான்.

#2330. தத்துவ ஞானம்

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.

தத்துவ ஞானம் வாழ்வில் நம் அமைவதற்குத் தத்துவ ஞானங்கள் முப்பத்து ஆறையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கனம் தத்துவ ஞானம்
அடைந்த ஆன்மா சிவத்துடன் பொருந்தினால் அதன் தத்துவ ஞானத்தால் அதற்குச் சிவானந்தம் விளையும்.

#2331. ஞான முத்திரை நண்ணுமே

தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

ஆன்மா தன்னை உள்ளபடி அறிந்து கொண்டுவிட்டுச் சிவனோடு பொருந்திச் சிவனாக மாறினால், அதனிடம் இருந்த மலங்கள், அதனால் விளைந்த குணங்கள் அழித்து விடும். பிறவிப் பிணியின் தளைகள் நீங்கும். அந்த ஆன்மாவிடம் முத்தி நிலையும், சன்மார்க்க ஒளியும், ஞான முத்திரையும் தாமே வந்து அமையும்.

#2332. ஞான முத்திரை பெறுவார்

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.

சீவனின் ஞானம் என்பது சிவபிரான் திருமேனி . சீவனின் கிரியை என்பது அவன் நம் இதயத்தில் உறையும் செயல். இச்சை என்பது சிவன் தன் இச்சையை நம் இச்சை மேல் கொண்டு வந்து பொருத்துவது. படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் காரணம் ஆனவன் சிவன். பிரணவ யோகம் செய்தவர் சிவனுடன் ஒன்றாகப் பொருந்துவார். அவர் தன் இச்சை, கிரியைகளைத் துறந்துவிடுவார். ஞான முத்திரையைப் பெறுவார்.

#2333. உயிர்க்கு ஊட்டுவான் சிவன்

உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே.

உயிரின் அறிவில் மெய்ப்பொருள் உள்ளது. உயிரின் அபிமானம் அதன் இச்சை. உயிரின் கிரியை உயிருடன் கலந்த மாயையின் அளவு ஆகும். உயிரின் ஞானம், இச்சை, கிரியை என்று மூன்றும் நுண்ணிய வடிவில் பரவிந்துவில் அமைத்திருக்கும். உயிருடன் இவற்றைச் சேர்பவன் சிவபெருமான். எனவே உயிரின் செயல்கள் எல்லாம் அதன் செயல்கள் அல்ல. அவை உயிரில் கலந்துள்ள சிவத்தின் செயல்கள் ஆகும்
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2334 to #2338

#2334. அழிவற்ற சாந்தாதீதன் சிவன்

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

சிவமாகிய தன்மையை முன்னமே அடைந்த சீவர்களின் கிரியை, இச்சை, ஞானம் இவைகள் அனைத்தும் மாமாயை, மாயையின் செயல்கள் ஆகும். காரண காரியங்களைக் கடந்த சாந்தியாதீத நிலையில் விளங்குபவன் அழிவற்ற சிவபெருமான் ஆவான்.

#2335. உயிர்க்கு உயிராவான்

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராதி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

நிலையற்ற மாயா காரியப் பொருட்களில் நிறைந்தவன் சிவன். நிலையான பரவிந்துவில் பொருந்திவனும் அவன். பொருட்களில் இருந்தும், இல்லாமலும், அவற்றிலிருந்து வேறாக இருப்பவன் அவன். அவன் சொற்பதம் கடந்த அற்புதமானவன் என்பத்தைச் சிவஞானத்தால் உணர்ந்து கொண்டவரின் உயிரின் உயிராகத் திகழ்வான் சிவன்.

#2336. உயிர் உயர் பதம் சேரும்

உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே

உயிர்களுக்கு இச்சைகளை உண்டாக்கித் துன்பம் தருவது இச்சா சக்தி. ஞான சக்தி ஓங்கும் போது உயிர்களின் இச்சைகள் அழிந்து விடும்.அப்போது உயிர்களுக்கு ஈசன் மேல் நேசம் ஏற்படும். அந்நிலையில் உயிர்கள் உலக இச்சைகளைத் துறந்துவிட்டு மேன்மை வாய்ந்த சிவகதியை அடையும்.

#2337. அவையும் அருளின் வெளிப்பாடே

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.

உலக இச்சைகளை அழித்துவிட்டுச் சிவம் ஆனவர் உயிரின் ஐந்து மலங்களையும் நீக்கி விட்டவர். சிவத்துடன் இவ்வாறு பொருந்தாதவர் ஐந்து மலங்களை உடையவர். இவர்கள் உலகத்தில் வாழ்ந்து விட்டுச் சுவர்க்கம் அல்லது நரகம் சென்று விட்டு மீண்டும் உலகில் வந்து பிறவி எடுப்பர். இவர்கள் இப்படிப் பிறந்து உழல்வதும் அந்த சிவசக்தியரின் செயலால் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

#2338. எய்தினர் இறையருள் தானே

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

உயிர்கள் தூமாயை (சுத்த மாயை), தூவா மாயை ( அசுத்த மாயை) என்னும் இரண்டிலும் பொருந்தி அவற்றின் இயல்புக்கு ஏற்ற அனுபவங்களைப் பெற்றன.. ஞான சக்தியால் ஞானத்தை அடைந்தன. உலகப் பொருட்களால் கவரப் பட்டு பல நன்மைகளை அடைந்தன. இவை அனைத்தும் நிகழ்வது சிவன் அருளால்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2339 to #2343

#2339. சிவமாய் ஆயினர்

திருந்தனர் விட்டார் திருவில் நரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே.

திருவடியின் ஞானம் பெற்றுத் திருந்திவிட்ட உயிர்கள் இன்பம் தராத நரகத்தையும் விடுத்தன. இன்பம் தரும் சுவர்க்கத்தையும் விடுத்தன. தம்மிடம் பொருந்தி இருந்த மலக்கூட்டத்தையும் விட்டனர். சிவத்துடன் பொருந்திச் சிவம் ஆகிய பின்பு பயனற்ற பிறவிகளை அவை விட்டு விட்டன.

#2340. அவமும் சிவமும் அவன் அருளாமே

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.

பயன் தருவது எது, பயன் அற்றது எது என்பதை அறிவு இல்லாதவர் அறிய மாட்டார். பயன் உள்ளதையும் பயன் அற்றதையும் அறிவுடையவர் பிரித்து அறிவார். இங்கனம் பிரித்து அறியும் நல்ல அறிவு பெற்றவர் தமக்கு வரும் நன்மை, தீமை ஏமாற்ற இரண்டுமே சிவன் அருளாலே விளைவன என்பதையும் அறிவார்.

#2341. சிவ சக்தியர் அனலும் வெப்பமும் போல்வர்.

அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருளாமே.

அனல் சிவன் என்றால் அதன் வெப்பம் சக்தி ஆவாள். சிவனைப் பொருளாகக் கொண்டு சக்தி சீவனை நடத்துவாள். இருளாகவும் ஒளியாகவும், சக்தி விளங்குவாள். மும்மலங்களாக விரிபவளும் அவளே. பின்பு சீவனைச் சிவனாக்கிச் சிவனந்தத்தைத் தருபவளும் அவளே!

#2342. அருட் பேதம் அல்ல காரணம்!

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.

கதிரவன் உதித்ததும் பல பத்மங்கள் மலரும். சில பத்மங்கள் மலரா. கதிரவனின் ஒளி ஒரு போன்றே அவைகளின் மீது இருந்தாலும் மலர்களின் தன்மையின் வேறுபாட்டினால் இங்கனம் நிகழும். சீவர்கள் அடையும் மாறுபட்ட பக்குவமும் அவர்களின் மாறுபட்ட தகுதியினால் நிகழ்வதே அன்றி அவர்களுக்கு நேசத்துடன் ஈசன் புரியும் அருளில் உள்ள பேதத்தினால் அல்ல.

#2343. ஆன்மாவின் இச்சா சக்தி

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.

கண்களால் காணும் உலகில் வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும், வேற்றுமைகளில் ஒற்றுமைகளையும் காணும் ஆற்றல்; ஆன்மாவிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அறிவு; கல்வி, கேள்வியால் பெற்ற ஞானம்; நாதம்; நாதாந்தம் இவை அனைத்துமே ஆன்மாவிடம் அமைந்துள்ள இச்சா சக்தியின் அருளினால் அமைகின்றன.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2344 to #2348

#2344. ஆவியை நாட்டும் அரன் அருள்

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.

பொம்மை யானையின் உருவத்தில் இரு மனிதர்கள் புகுந்து கொண்டு அதனுள் ஆடி அதை ஆட்டுவிப்பார்கள். அது போன்றே ஆன்மாவை ஐம்பூதங்களைக் கொண்டு ஆடச் செய்வதும், படைப்பு முதலிய ஐந்தொழில்களால் சுவர்க்கம், நரகம் இவற்றுடன் கூடச் செய்வதும், இறுதியில் ஞானம் நல்குவதும் இவை அனைத்துமே ஆன்மாவின் உடலில் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனின் அருட் சக்தியால் நிகழ்பவை ஆகும்.

#2345. தெளிவுற்றுத் தீண்டச் சிவம் ஆகும்!

ஆறாது அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

ஆறு ஆறு முப்பத்தாறு தத்துவங்களையும் துறந்து விட்ட ஆன்மா; தன்னைத் தானே உள்ளபடி உண்மையாக அறிந்து கொண்ட ஆன்மா; எல்லா உயிர்களிடத்தில் தான் உறைபவனாகவும், தன்னிடத்தில் எல்லா உயிர்கள் உறைவதை அறிந்தவனாகவும், அவற்றில் இருந்து வேறாகி நிற்பவனும் ஆகிய ஆன்மா; பரவெளியில் பிரவேசித்து வீடு பேற்றினை அடைவான். அத்தகைய ஆன்மா தன் மயக்கம் ஒழித்துத் தெளிவுற்றுச் சிவமாகி விடுவான்.

#2346. சிவனுடன் சாரலும் ஆமே

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

இறைவனின் திருவடி அடைவதற்கு அரியது. எனினும் முற்பிறவிகளில் செய்த சாதனையின் பயனாக ஆன்மா இப்பிறவியில் ஈசனின் அருள் பெறும்.
சீரிய நெறி வழியே சென்று, சிவஞானத்தைத் தேடி, குண்டலினி சக்தியை எழுப்பி, அதனுடன் உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று நிராதாரத்தை அடைந்தால் ஆன்மா சிவனுடன் பொருந்த இயலும்.

#2347. சிவனைச் சார்ந்தவர்கள் எவர்?

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

சிவபெருமானைச் சார்ந்தவர்கள் எவர்?
சாரணர்கள், சித்தர்கள், சமாதி பயின்றவர்கள், சிவஞானம் பெற்றவர்கள்; சிவனிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், சிவானந்தத்தில் திளைப்பவர்கள், நாதத்தில் திளைப்பவர்கள் இவர்கள் அனைவருமே சிவபெருமானைச் சார்ந்தவர்கள் ஆவர்.

#2348. தான் இன்றித் தானாவது தத்துவ சுத்தம்

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

சகல நிலையில் உள்ளவர்கள் “தான்” என்னும் ஆன்மா வேறு, “அவன்” என்னும் சிவன் வேறு என்று நினைப்பார்கள். “தான்” என்றும் ” அவன்” என்றும் உண்மைப் பொருட்கள் இரண்டு உண்டு என்பார்கள். அருள் கேவல நிலையில் உள்ளவர்கள் “தான் வேறு, அவன் வேறு!” என்று எண்ணாமல் உண்மைப் பொருள் ஒன்றே ஒன்று என்பார்கள். “தான்” என்பது அழிந்து சிவனுடன் சேருவது சுத்தத் தத்துவம் ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2349 to #2354

#2349. சார்வதற்கு அரியவன்

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே

“தனக்குள் உறையும் தலைவன் சிவன்” என்று அறிந்து கொண்டு, தனக்குள்ளே சிவனைத் தேடுபவன் சிவனைத் தனக்குள் காண்பான். தனக்குள் உள்ள தலைவனைத் தேடாதவன் தன் தலைவன் சிவனை ஒரு நாளும் அடைய மாட்டான்.

#2350. உள்ளததுள் உறைவான் இறைவன்

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே

“எனக்குச் சிவனருள் கிடைக்கவில்லை!” என்று நீ அரற்றாதே! நெறி வழியே நீ நடந்து சென்றால் உறுதியாக அவன் நேர்படுவான். சிவன், சக்தி என்ற இருசுடராக இருந்து அவன் அனைத்தையும் படைக்கின்றான். அவனே ஒரு சுடராகி வந்து உன் உள்ளத்தில் உறைவான்.

#2351. நம்மை அறிபவன்; நம்மால் அறிய முடியாதவன்

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.

மண் என்னும் ஒரு பொருளில் இருந்து சட்டி, பானை, குடம், கலயம் போன்ற பல பொருட்கள் உருவாகின்றன. இது போலவே இறைவன் என்னும் ஒரு மெய்ப் பொருள் பல உயிர்களாக உருவாகின்றது. கண் என்னும் பொறி உலகம் முழுவதையும் காணும்.ஆனால் கண் தன்னையே தானே காண முடியாது. இறைவனும் அது போன்றே எல்லாவற்றையும் கண்டாலும் அவனை எவராலும் காண முடிவதில்லை.

#2352. கூப்புகில்லார் கொள்ளலும் ஆமே?

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

உயிர்களின் உயிராக இருந்து இறைவன் ஏழு உலகங்களையும் ஓம்புகின்றான். மனம் குவிந்து ஒருமுகப்பட்ட ஞானியர் இதை அறிந்து கொண்டு சிவனோடு கூடுவர். சிவனைத் தம் சிந்தையில் கொள்ளாதவர் அழுது புலம்பித் தேம்புகின்றார்கள். மனம் குவிந்து ஒருமுகப்படாத போது சிவனை அறிய முடியுமா?

#2353. அறிவறியா இருந்து அன்னமும் ஆமே.

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே

தனக்குள் உறைகின்ற சிவனை அறிய முடியாதவர்கள் அவனை தனக்கு வெளியில் இருக்கு சிவத்தை எங்கனம் அறிந்து கொள்ள முடியும்? தனக்குள் சிவம் உறையும் உண்மையை அறியாதவர் பல பிறவிகள் எடுத்து உலகில் இன்ப துன்பங்களில் உழல்வர். “நான் வேறு சிவன் வேறு” என்று எண்ணாமல் அவனுடன் பிரிவின்றிக் கூடுங்கள். சிவனுடன் கூடி உங்கள் சுட்டறிவை இழக்கும்போது நீங்கள் ‘ஹம்சம்’ (நானே அவன்) என்னும் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

ஹம்சம் = அஹம் + ஸ: = நானே அவன்

#2354. பிறப்போடு இறப்பறியாரே!

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.

சிவானந்தத்தை அனுபவிப்பது சீவனின் உடலா அல்லது சீவனின் உயிரா? இந்த இரண்டில் உண்மையில் ஆனந்தம் துய்ப்பது எது என்று வானோர் தலைவியே மயங்கி நிற்கின்றாள். “நான் எல்லாம் அறிவேன்!” என்று அறைகூவிக் கொண்டு திரியும் மனிதர்கள் பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் சிக்கிக் கொன்டு அதிலிருந்து மீளும் வழியை அறியார்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

14. அறிவு உதயம்

சுட்டறிவு = புலன்களால் அறிந்து கொள்ளும் அறிவு. ஆன்மாவிடம் சுட்டறிவு மட்டுமின்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நிறைவான அறிவும் உள்ளது.

#2355 to #2359

#2355. தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

தான் தூய அறிவின் உருவம் என்று ஆன்மா தன்னைத் தானே அறிந்து கொண்டால் அது துன்புற வேண்டிய அவசியம் இல்லை. அறிவு வடிவான தன் உண்மை உருவினை அறியாததால் ஆன்மா வருந்துகின்றது. ஞான உதயம் பெற்ற ஆன்மா தான் அறிவு மயமான ஒளி வடிவம் கொண்ட உண்மையை அறிந்து கொண்ட பின்பு உலகத்தோர் அர்ச்சிக்கும் உயர்வான தன்மை பெற்றுச் சிவ வடிவம் எய்தும்.

#2356. பொங்கார் குழலி “போற்றி!” என்பாள்

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.

சிவவடிவம் பெற்ற ஆன்மா சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது வலிமையையும் பெருமையும் நிறைந்த தேவர்கள் வந்து அவனைத் தொழுவார்கள்.அதைக் கண்ணுற்ற பொங்கார் குழலி சக்தி தேவி அரியணையில் அமர்ந்திருப்பவர் சிவபெருமான் என்று கருதித் தன் சங்குவளையும், காற்சிலம்பும் ஒலிக்கும்படி வந்து “போற்றி!” என்பாள்.

#2357. அறிவு வடிவென்று அறிந்திருந்தேனே.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.

“நான் அறிவு வடிவானவன். நான் கருவிகள் கரணங்களின் உதவியின்றியே அறியும் ஆற்றல் பெற்றவன்” என்ற உண்மையை நான் அறியாமல் இருந்தேன். நான் அறிவு வடிவானவன் என்ற உண்மையை எனக்குத் தன் அருளால் சிவபெருமான் உணர்த்தினான். நான் அறிவு வடிவானவன் என்ற உண்மையைச் சிவன் அருளால் அறிந்து கொண்ட பின்பு நான் கருவிகள் கரணங்களை விட்டு விட்டு அறிவு வடிவினன் ஆக நின்றேன்.

#2358. அறிவே அறிவை அறிகின்றது

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.

அறிவுக்கு ஆக்கமும் இல்லை, அழிவும் இல்லை. அறிவுக்கு அறிவற்ற பொருள் ஓர் ஆதாரம் ஆக முடியாது. எனேவ அறிவு மயமான ஆன்மாவுக்கு ஆதாரம் பேரறிவாகிய சிவன் மட்டுமே ஆவான். அறிவுருவாகிய ஆன்மா பேரறிவாகிய சிவனை அறிகின்றது. இந்த உண்மையை உலகுக்குப் பறை சாற்றுகின்றன மறைகளின் ஈறாகிய உபநிடதங்கள்.

#2359. தூய அறிவு சிவானந்தம் ஆகும்

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே

ஆதாரத் தாமரைகளில் சிறந்தது இதயத்தில் உள்ள அநாகதம். அதற்கும் மேலே பரவியுள்ளது பதினாறு இதழ்த் தமரையாகிய விசுத்தம். தூய ஆன்ம அறிவு சிவானந்தத்துடன் கலந்து மேலே செல்லும். அது விசுத்திச் சக்கரத்தைக் கடந்து சென்று அதற்கும் மேலே உள்ள பேரறிவு ஆகிய சிவனுடன் புணர்ந்து விளங்கும்.

விளக்கம்: விசுத்திச் சக்கரம் விழிப்படைந்தால் நாதம் தலையில் பாயும். அந்த நாதத்தில் சிவன் விளங்குவான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2360 to #2364

#2360. “நீ பெரியை!” என்றான்

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.

இடையறாது சிவனைச் சிந்திப்பவர்களுக்குச் சுத்த மாயையின் காரியம் ஆகிய நாதத் தத்துவத்தில் சிவன் வெளிப்படுவான். அந்த முதல்வனையே நான் நினைவில் கொண்டேன். அந்த முதல்வனும் தன் பொன்னொளியில் சிறப்பாகத் திகழ்ந்தான். நிகரில்லாத பெருமையுடைய அவன் திரு மேனியுடன் நான் பின்னிப் பிணைந்து நின்றேன். அவனும் அருள் கூர்ந்து என்னிடம் “நீ பெரியவன்!” என்று கூறினான்.

#2361. அறிவு அறிவாக அறிந்தனன் நந்தி

அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே

ஆன்ம அறிவு பேரறிவின் வயப்பட்டது என்ற உண்மையை உணர்ந்து அதனிடம் அன்பு காட்டுங்கள். அப்போது அகண்ட பேரறிவாகிய சிவன் உங்கள் ஆன்ம அறிவில் வந்து பொருந்துவான். அவன் அறிவு உங்கள் அறிவாக மாறிய பின்பு அணிமா சித்திகள் கைக் கூடும். அதன் மூலம் தெளிவாகும் சிவன் அறிவும் உங்களறிவும் ஒன்றாகப் பொருந்தியுள்ள உண்மை.

#2362. அறிவு அறியாமை யாரும் அறியார்

அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே.

அறிவு அறிவு என்று உலகம் முழுவதும் அரற்றுகின்றது. ஆனால் அது குறிப்பிடுவது பாசவயப்பட்ட அறியாமை என்று உலகம் உணர்வதில்லை. அறிவு பாச அறிவைக் கடந்து சிவஞானம் ஆகிவிட்டால் அப்போது பாச அறிவின் இலக்கணம் என்ன என்பது உலகுக்குப் புரியும்.

#2363. அறிவின் செறிவாகி நின்றவன் சிவன்

அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.

அறிவையும், அறியாமையையும் நீக்கிய ஒருவன், தன் ஞான இந்திரியங்களைக் கடந்து சென்று, அகண்ட அண்டத்தில் தானும் ஒன்றி விடும் போது, அந்த அறிவாகவும், அந்த அறிவினுள் அடங்குபவனாகவும், அந்த அறிவின் செறிவாகவும் நிற்பவன் சிவபெருமானே ஆவான்.

#2364. ஞானியின் நெஞ்சமே சிவன் ஆலயம்

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

மெய்ஞானியின் உள்ளமே இந்தப் பரந்து விரிந்த உலகம். ஞானியின் உள்ளமே அருந்தவம் நிறைந்தது. ஞானியின் உள்ளதையே தன் ஆலயமாகக் கொண்டு அங்கே சிவன் எழுந்தருள்வான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2365 to #2369

#2365. தித்திக்கும் தீங்கரும்பும் திகட்டாத அமுதும் சிவனே.

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

மாயன் ஆகிய திருமாலாகவும், மலரோன் ஆகிய நான்முகனாகவும், இறைவன் உருத்திரனாகவும் மூன்று வடிவங்களில் உடல்களின் உற்பத்திக்குக் காரணம் ஆனவன் சிவன். அவன் நமக்கு மிகத் தொலைவில் எட்டாமல் இருப்பவன்; அதே சமயம் அவன் நமக்கு மிக மிக அருகில் இருப்பவன். தீங்கரும்பு போலத் தித்திக்கும் சிவன் திகட்டாத அமுதம் போன்றவன்.

#2366. என் நலத்தை உசாவுகின்றான்

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.

அறியாமை இருளிலும், பாசத்தளையிலும் நான் இருந்த போது என் உண்மை வடிவத்தை நான் அறியவில்லை. என்னை நான் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்ட பின்பு வேறு எதையுமே நான் அறியவில்லை. நான் என் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பும் என்னை விட்டு அகலவில்லை என் பிரான். என்னுடனேயே இருந்து கொண்டு அவன் என் நலத்தை உசாவுகின்றான்.

#2367. சேய விளக்கைத் தேடுகின்றேன்.

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

பத்த நிலையில் உள்ளவர்களின் ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தி இருக்கும். அதனால் அது தெளிவாக விளங்காமல் மறைந்திருக்கும். ஞானம் அடைந்தவர்களின் ஆன்ம வடிவம் ஒளி பெற்றுச் சுடர் விடும். அது உடலில் கனன்று வெப்பத்தை அளிக்கும். அத்தகைய செம்மையான விளக்கையே நான் தேடுகின்றேன்.

#2368. பாடுகின்றேன் பரமே துணை என

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே.

சிவம் என்னும் ஒளிவிளக்கை நான் எடுத்து திசைகளில் மட்டுமின்றி மேலும் கீழும் கூடத் தேடிகின்கின்றேன். இன்ப வடிவாகி அன்பர்களுக்கு நலம் பயக்கும் அவன் திருவடிகளை நான் நாடுகிறேன். பரம்பொருளே உற்ற துணையாகும் என்று அவனைப் பாடுகின்றேன். குறைவற்ற நிறைவான மனத்துடன் அவனைக் கூடுகின்றேன்.

#2369. சிவமாக வாரா பிறப்பே!

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

நான்முகனின் படைப்பில் முதலில் தோன்றிய சீவர்கள் ஆணவ மலத்துடன் விளங்கினார். பின்பு அவர்கள் சிவன் அருளால் ஆணவ மலத்தை ஒழித்தனர். தம் உண்மையான ஆன்ம வடிவத்தை அறிந்து கொண்டனர். பழமைக்கும் பழமையான சிவன் திருவடிகளைப் பொருந்தினர், சிவம் என்ற உயர்ந்த நிலையை அடைந்தால் பிறப்பு அதன் பின்பு வாராது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

15. ஆறாந்தம்

ஆறு + அந்தம் = ஆறாந்தம்

அந்தம் = முடிவு.

ஆறு முடிவுகள் இவை:

காலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம்.

1. கலாந்தம் = நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளை அறிந்து கொண்டு சாந்தியாதீத
கலையை அடைவது.

2. நாதாந்தம் = நாதத்தின் முடிவால் அடைவது

3. யோகாந்தம் = எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் மூலம் அடைவது

4. போதாந்தம் = ஆத்ம விசாரணையின் மூலம் அடைவது

5. வேதாந்தம் = உபநிடதங்கள், ஆகமங்கள் இவற்றின் உதவியால் அடைவது

6. சித்தாந்தம் = சைவ ஆகமங்களின் முடிவு.

#2370 to #2374

#2370. ஆறு அந்தங்கள் இவை

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.

வேதங்களின் அந்தமான வேதாந்தமும், சிவ ஆகமங்களின் முடிவாகிய சித்தாந்தமும், நாதத்தின் முடிவாகிய நாதாந்தமும், ஆன்ம விசாரணையில் விளையும் போதாந்தமும், எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் முடிவில் அடையும் யோகாந்தமும், ஆதிக் கலாந்தமும் என அந்தங்கள் ஆறு வகைப்படும்.

#2371. அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.

ஆறு அந்தங்களையும் அறிபவர் அதி சுத்தத் தத்துவத்தை அறிந்தவர். மலங்கள் அற்றவர் மட்டுமே ஆறு அந்தங்களையும் அறிய இயலும். இத்தகைய ஆறு அந்தங்களை அறியாதவர்களால் உலகத்தின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் அறிய இயலாது.

#2372. மலமற்று யாரும் சித்தியாதல் பயன்

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

“நான் முழு முதற் கடவுள்” என்று கூறுவது வேதாந்தம். “நான் முழு முதற் கடவுள் ஆவேன்?” என்று கூறுவது சித்தாந்தம். துரீய நிலையில் ஆன்மா தன் இயல்பான ஒளிவடிவைக் காணும். பரபரமாகிய சிவத்துடன் ஒன்றாகச் சேரும். இவ்வாறு ஆன்மா தன் மலங்களை அகற்றிப் பெரும் சித்திகளைப் பெறும்.

#2373. அத்தன் பால் அடைவது சித்தாந்தம்

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே

சிவனைச் சிந்தையில் இருத்த வேண்டும். சத்தம் முதலிய ஐந்து புலன்களில் இருந்து விடுபட வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இங்கனம் அனைத்தையும் கடந்து தலைவனான முழு முதற் பொருளை அடைவதே சித்தாந்தம்.

#2374. அணு ஒன்றுளது

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே

பிரமன், திருமால், உருத்திரன் இவர்களைக் கடந்து; மகேசுரன், சதாசிவன் இவர்களையும் கடந்து, பரவிந்து, பர நாதம் இவற்றையும் கடந்து, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து செல்லும் ஆன்மா தனியனும் இனியனும் ஆன சிவனுடன் ஒன்றாகப் பொருந்துகிறது
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2375 to #2379

#2375. நாதாந்தத்து எய்திடும் போதமே

உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர் உணர் வாகுமேல்
எள்ளலில் நாதாந்தத்து எய்திடும் போதமே

ஆன்மாவைப் பிணிக்கும் முப்பத்தாறு தத்துவங்களாகிய உபாதிகளை அழித்து வீட்டுக் கடந்து சென்று, மேலே நாதாந்தத்தையும் கடந்து சென்று, ஆணவம் என்னும் இருள் நீக்கப் பெற்று சிவத்துடன் ஆன்மா ஓருணர்வாகப் பொருந்தி நின்றால், நாதாந்தத்தில் ஞானம் உதிக்கும்.

#2376. உபசாந்தமே யோகாந்தக் கொள்கை

தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே

இயமம், நியமம் முதலிய எட்டு அங்கங்களை உடைய யோக நெறியில் சென்ற ஆன்மா சமாதியில் பரசிவத்துடன் பொருந்தி நிற்கும். அந்நிலையில் சீவனின் பற்றுக்கள் முற்றுமாக அகன்றுவிடும். ஆன்மா ‘உபசாந்தம்’ என்னும் விவரிக்க முடியாத மனஅமைதியை அடையும். இதுவே யோகாந்தத்தின் கொள்கையாகும்.

#2377. விந்துவின் உள்ளே ஒளிதலும் தெளிதலும்

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

கலாந்தம் என்ற கொள்கையை ஆராய்ந்தால் நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்று ஐந்து கலைகளையும் கடந்து சென்று, மேலே மேதை, அர்க்கீசம், விடம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி, வியாபினி, வியோம ரூபிணி, ஆனந்தை, அநாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்று அந்தப் பதினாறு கலைகளையும் கடந்து சென்று ஆன்மா விந்துவில் ஒடுங்குவதும் அதை நன்கு ஆராய்ந்து தெளிவு பெறுதலும் ஆகும்.

#2378. உள்ளன மேலும் ஐந்து வழிகள்

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே

இந்த ஐந்து வழிகளைத் தவிரச் சிவானந்தம் பெறுவதற்கு வேறு ஐந்து வழிகளும் உள்ளன. சிவானந்தத்தை நாடிச் செல்பவர்களுக்கு உள்ள அந்த வழிகள் மந்திரம், தந்திரம், சமாதி, உபதேசம், ஞானம் என்பவை ஆகும்.

#2379. சிவபோதகம் உபதேசமே

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

ஆகம வேதங்கள் மிகப் பழமையானவை. அவற்றில் கூறப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வது தந்திரம். மந்திரங்கள் உடலைக் கடந்தவை; அவை மனத்துடன் தொடர்பு உடையவை. சிவஞானத்தை விளக்குகின்ற அறிவு உபதேசம் ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2380 to #2384

#2380. வாசா மகோசர நந்தி

தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே

ஆன்ம ஞானம் அடைவது என்பது சிவனுடன் ஒன்றுவது. காலாந்தத்தில் பக்தியுணர்வு மறைந்து விடும். வாக்கு, உணர்வு, இவற்றைத் துறந்துவிட்ட ஒரு ஞானி, சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாத பரசிவம் ஆவார்.

#2381. ஞேயம் ஞாதுரு ஆகுமே.

தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே.

பயிற்சியினால் சீவன் சிவன் ஆகும் தன்மையை அடைத்து விட்டால் அப்போது கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் இவற்றின் மூலம் பெற்ற ஞானத்தால், அறியப்படும் பொருளாகிய சிவனும் அறியும் பொருளாகிய சீவனும் ஒன்றி ஒருவரே ஆகி விடுவார்.

#2382. தேறிய மோனம் சிவானந்தம்

ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த மாமே

ஞானத்தில் ஆறு அங்கங்களும் சென்று ஒன்று சேரும். ஞானம் உதித்தபின்
ஞாதுரு (அறிபவன் = சீவன்) ஞேயத்தில்( அறியும் பொருளில் = சிவத்தில்)
அடங்கி விடுவான். ஞானமும், ஞானியும் ஒன்றாகி விடும் போது அங்கு சீரிய மோனம் விளையும். அதுவே உயரிய சிவானந்தம் ஆகும்.

#2383. உண்மைக் கலை ஓர் அந்தம் ஆமே

உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

உண்மையான அந்த ஆறு கலைகளும் பிரணவத்தின் ஐந்து உறுப்புகளான ( அ, உ, ம, விந்து, நாதம்) இவற்றுள் அடங்கும்.
சிவத்துவங்கள் ஐந்தும், வித்தியாததுவங்கள் எழும் உண்மையான இரண்டு காலாந்தத்தில் முடியும்.
காலாந்தம் இரண்டு:
நிவிருத்தி , பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்ற ஐந்து.
மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என்ற ஐந்து.

#2384. கோனைக் கருதுமே

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைக் கருதுமே.

ஆன்மாக்களை இயக்கி நடத்துகின்ற குண்டலினி சக்தியை சகசிரா தளத்தில் விளங்கும் நாதத்தின் தலைவன் சிவன் ஏற்றுக் கொண்டான். வானவர்களை வழி நடத்தும் சிவன் தன் திருவடிகளை என் தலை மேல் சூட்டினான் அழிவற்ற வேதாந்த சித்தாந்தங்களின் மேன்மையை அவன் நாதாந்ததால் உணர்த்தினான். அந்தச் சிவகுரு நாதனைக் கருத்தில் நிறுத்துங்கள்!
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2385 to #2389

#2385. வேதாந்த சித்தாந்த உண்மை

கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

சிவபெருமான் அருளிய சிவாகமங்களின் மெய்ப்பொருள் சிவனை வணங்குபவரின் வழிபாட்டின் சிறப்புக்கு எற்பப் புலப்பட்டும். உண்மை அல்லாத மாயை, மாமாயை என்பவற்றைக் கடந்து நிற்பது வேதாந்த சித்தாந்தங்களால் உணர்த்தப்படும் உண்மைப் பொருள் ஆகும்.

#2386. மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே

வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே

வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் ஒரே தன்மை வாய்ந்தவை. தமக்குள் வேறுபாடுகள் இல்லதாவை. ஞான உதயம் என்பது தூய
ஆன்ம அறிவைப் பெறுவது. யோகாந்தம் ஆன்மா அறியவேண்டிய மெய்ப் பொருளைக் காட்டிக் கொடுக்கும். நாதாந்தத்தில் இன்பம் தருகின்ற ஒலி உண்டாகும். மோனத்தில் மூழ்கிப் பிரணவ சமாதியில் இருப்பது ஆன்மாவின் பழமையான முத்திரை ஆகும்.

#2387. அசி பதம் அடையும் ஆன்மா

வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே

வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகள் ஏழின் பிணைப்பு நீங்கிவிடும். நாதாந்தத்தில் சீவனின் பசுத்தன்மை நீங்கித் தொம்பதம் பொருந்தும். அப்போது காரண உபாதைகள் ஏழும் பொருந்தியுள்ள சிவன் தற்பதம் ஆகும். இந்த இரண்டு பதங்களும் பொருந்திவிடும் போது அசிபதம் பொருந்தும்.

சீவனுக்கு உரிய காரிய உபாதைகள் ஏழு:
அஞ்ஞானம், ஆவரணம், விட்சேபம், பரோட்ச ஞானம், நித்தியாரோப ஞானம், துக்க விருத்தி, தடையற்ற ஆனந்தம்.

சிவனுக்கு உராய காரண உபாதைகள் ஏழு:
சர்வஞ்சத்துவம், சர்வ காரணத்துவம், சர்வாந்திரிகயாமித்வம், சர்வேசுரத்துவம், சர்வ சிருஷ்டி, சர்வ திதி, சர்வ சங்காரம்

தொம்பதம் = சீவன். தற்பதம் = சிவன். அசி பதம் = சீவனும் சிவனும் ஒன்றாகும் பதம்.

#2388. நின்றான் எங்கள் கோவே.

அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்எங்கள் கோவே

அண்டங்கள் ஏழினையும் கடந்து நிற்பவன் ஈசன். அவன் அண்டங்களுக்கு அப்பால் விளங்கும் ஒளியின் ஒளியாவான். பண்டு அவன் அங்கு பராசக்தியோடு நின்றான். அங்கே என் தலைவன் ஆகியசிவன் நிற்கின்றான்.

#2389. உண்டு ஒழியாத ஒருவனை அறியலாம்

கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியைக் குருவின் உபதேசப்படி வசப்படுத்து. சிவனை உணர்ந்து கொள்வதையே உன் வாழ்வின் லட்சியம் ஆகக் கொள். தெய்வத்தை உணர்த்தும் நற்கருமங்களையே செய். துதிப் பாடல்களையே அர்ச்சனையாகி அவனை அன்போடு வழிபடு. அப்போது பிரணவத்தின் உறுப்புக்கள் ஆகிய அகார, உகார, மகார, விந்து, நாதத்தைக் கடந்த சிவனை நீ உணரலாம்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2390 to #2394

#2390. அருவனுமாகிய ஆதாரம் அவனே.

ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.

ஒருவனாக இருக்கும் சிவனைக் குறித்து எண்ணார். உயிரைக் குறித்து எண்ணார். இன்ப துன்பங்களுக்குக் காரணம் ஆகிய இரு வினைகளைக் குறித்து எண்ணார். சீவனைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரண்டையும் குறித்து எண்ணார். ஒப்பற்ற ஒருவனாக உள்ள சிவபெருமானே ஆன்மாவினுள் உள்ளே இருப்பதையும் எண்ணார். அவனே ஆன்மாவுக்கு இவற்றை உணர்த்தி ஊட்டுவதையும் அறியார். கருமங்கள் ஆகிய இருவினைகள் கழியும்படிச் செய்து அருவமாக இருந்து ஆன்மாவுக்கு ஆதாரம் ஆனவன் அவனே என்பதையும் எண்ணார்.

#2391. சீவன் சிவானந்தி ஆகும்

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.

சிவபெருமான் அன்பர்களின் நெஞ்சத்தியே ஆலயமாகக் கொண்டு எழுந்தருள்கின்றான். அன்பர்களின் ஆன்மா பக்குவம் அடைவதற்கான அவற்றுள் தன் சக்திகள் பலவற்றைப் பொருந்துகின்றான். வலிமை வாய்ந்த சிவசங்கற்பத்துக்கு ஏற்ப அந்தச் சக்திகள் ஆன்மாவினுள் தொழிற்படும். ஆன்ம சங்கற்பம் ஆன்மாவைப் பற்றாத போது சிவ சங்கற்பத்தில் நிலைத்திருக்கும் ஆன்மா சிவானந்தத்தில் திளைக்கும்.

#2392. சிவ சாயுச்சியம்

வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவ சாயுச் சியமாமே

வேதாந்தத்தில் கூறப்படும் தொம்பதம் (‘த்வம்’ என்னும் பதம்) பசுவாகிய ஆன்மாவைக் குறிக்கும். நாதாந்தத்தில் ஆன்மாவின் மலங்கள் நீங்கி அதன் பசுத்தன்மை அழிந்து விடும். போதாந்தத்தில் தற்பதம் என்னும் நிலையை அடைந்து, அதன் பின்னர் சீவன் சிவனுடன் இரண்டறக் கலப்பதே சிவ சாயுச்சியம் என்னும் அசி பதம் ஆகும்.

#2393. வேதாந்தம் சித்தாந்தம் ஞானம் தரும்

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் சேர்ந்துஒன்றானானால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.

வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் சீவன் சிவன் ஆகும் வழியினை உரைக்கும். மற்ற நான்கு அந்தங்களும் வியர்த்தமானவை. சதாசிவன் ஆனைப் படித்த தத்தம் தொழில்களை இயற்றுகின்றனர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ஆகிய தெய்வங்கள். இவர்கள் தொழில்கள் முடிவுற்றுச் சதாசிவனும், சிவமும் ஒன்றானால் அப்போது வேதாந்தமும், சித்தாந்தமும் ஞானம் தரும்.

#2394. சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே

சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே

சைவ சித்தாந்தத்தில் சீவனுக்கு முக்தி நிலை சித்திக்கும். அதனால் சைவ சித்தாந்தத்தில் நிற்பவர் முத்தி நிலை என்னும் சிவகதியைச் சென்று அடைவர். சித்தாந்தமும், வேதாந்தமும் சிவனையேக் காட்டுவதால் சித்தாந்தமும், வேதாந்தமும் உயரிய செம்பொருட்கள் ஆகும்.
 

Latest ads

Back
Top