• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

1. குருமட தரிசனம்

1. குருமட தரிசனம்
ஒளியை உடைய இடத்தைத் தரிசிப்பது

#2649 to #2652

#2649. தளிரும் மலரடி சார்ந்து நின்றாரே.

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

வேள்வித் தீயில் இடப்படும் அவிசு, ஆஹூதி, அன்னம், அதிலிருந்து எழுகின்ற ஹோமத் தீ, ஹோமப் புகை, வேத ஒலி, இவை அனைத்தும் சிவ பெருமானைக் கருதி செய்கின்றேன் என்று மனதில் எண்ணிக் கொண்டு; குருவடிவாக உள்ள ஒளியை தரிசனம் செய்தவர்; இறைவனை குளிர்ந்த மலர் அடிகளைச் சார்ந்து நிற்பர்.

#2650. அவனுக்கு இவனே இல்லம்!

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியில்?
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

சிவனுக்கு உறைவிடம் அன்பர் உள்ளதைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் சிவனுக்கு வேறு உறைவிடம் உள்ளதா? அன்பர் உள்ளமே சிவபெருமானின் உறைவிடம் என்று அறிந்திருந்தும், சிவன் தன்னிலும் வேறாக இருக்கின்றான் என்று மக்கள் கூறுவது என்ன அறியாமை!
 
ஒன்பதாம் தந்திரம்

1. குருமட தரிசனம்
ஒளியை உடைய இடத்தைத் தரிசிப்பது

#2651 & #2652

#2651. தேட அரியன் சிவன்!

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.

சிவனை நாடும் வழியினை நான் கண்டு கொண்டேன். எனக்குள்ளேயே அவன் மலரடிகளைத் தேடித் சென்று அவனுடன் கூடினேன். தேடிக் காண்பதற்கு அரியவன் சிவன். அவன் இருக்கும் இடமே சிறப்பு வாய்ந்தது! உருண்டோடும் உலகுக்கு அவனே உயிராக நிற்கின்றான்!

#2652. இயம்புவன் ஈராறு இருநிலத்தோருக்கே!

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.

பதினான்கு உலகத்தவருக்கும் நான் கூறுவேன் இவற்றை! இறைவனின் ஆசனம் எது; அவன் அமரும் மலை எது; இறைவன் ஒளியும் குகை எது; அவன் விளங்கும் மடம் எது; ஆறு ஆதாரங்களுடன் உள்ள காடு எது; என்ற எல்லாவற்றையும் நான் அறிந்தபடிக் கூறுவேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

#2653 to #2654

#2653. ஞானியின் முகம் ஈசனின் பீடம்

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.

ஞானியின் முகமே ஈசனின் பீடம்; குருவின் மடமே ஈசனின் முன்னிய தேசம்; தூய நோக்குடைய அடியவர் கூட்டமே அவன் இருப்பிடம்; உள்ளத்தில் கள்ளமின்றி பதினாறு வகையான உபசாரங்கள் செய்பவனே ஈசன் அமரும் சிம்மாசனம்; உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் ஈசன் மறைந்து கொள்ளும் குகைகள்.

#2654. சகத்தின் தெய்வம் சிவமே ஆகும்!

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

சீவனின் உடலின் ஆறு ஆதாரங்கள் சிவனது அகமுகமாகும் பீடம்; சிருஷ்டியின் ஆதாரமான சக்தியே அவன் அமரும் ஆதனமாகும்; உலகம் முழுவதற்கும் சிவமே ஒப்பற்ற தெய்வமாகும். உள்முகமாகச் சென்று ஆராய்ந்தவர் அறிந்து கொண்ட உண்மைகள் இவை.
 
ஒன்பதாம் தந்திரம்

1. குருமட தரிசனம்

#2655. தூய பரஞ்சுடர் தோன்றும்

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.

தூய மாயை, தூவா மாயை என்னும் இரண்டும் ஆன்மாவை மறைக்கும். அதனால் ஆன்மாவின் அறிவு விளங்காமல் இருக்கும். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து திரைகளும் நீங்கினால் அங்கு பரஞ்சுடர் ஆகிய ஆன்மஒளி தோன்றும். அந்த ஒளியில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்ற மூன்றும் ஒன்றாகிவிடும். இத்தகைய ஞானி பிரணவ யோகத்தை அறிவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்
2. ஞான குரு தரிசனம்
ஞானத்தைத் தரும் குருவை தரிசித்தல்

#2656 to #2660

#2656. சிவபதம் அளித்திடும்

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

சீவனின் முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கிவிட்டால் அப்போது சிவன் வெளிப்பட்டு அந்த ஆன்மாவைத் தனக்குள் அடக்கிக் கொள்வான். அந்த நிலையில் அந்தச் சீவனுக்குச் சிவப்பேறு கிடைக்கும். சீவன் உலக விஷயங்களைத் துறந்து விட்டு சிவபோகத்தை அடையும். சீவன் சிவானந்தத்தில் திளைத்து இருக்கும்.

#2657. குருபதம் பேச ஒண்ணாதே

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர்சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

ஞான குருவானவர் மாணவனுக்கு அருளும் இயல்பு இதுவே. இவர் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்து விளங்குவார். அறிவுச் சுடராக அரிய பரசிவமாக இருப்பார். போக்கும் வரவும் இல்லாத நிலையில் இருப்பார். இவர் பெருமையைப் பேசவும் இயலாது.

#2658. பிறவிப்பயன் இறை வழிபாடே

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.

தாயைப் போன்ற கருணை மிகுந்த நந்தியின் அடியை என் தலை மீது பெற்றேன். வாய் போன்ற கோபுர வாயிலில் விளங்கும் நந்தியை வாழ்த்த என் வாயைப் பெற்றேன். உலகத்தின் விதை ஆன நந்தியைக் காண்பதற்கு என் கண்களைப் பெற்றேன். புலன்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ள நந்தியை அறிவதற்கு என் சிந்தையைப் பெற்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

2659. சிவன்அவன் ஆமே.

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

கருடனின் வடிவத்தை நினைத்தவுடனேயே நாகத்தல் கடிபட்டவனின் கொடிய விடம் நீங்கிவிடும். மரண பயம் நீங்கி அவன் பிழைத்து எழுவான். அது போன்றே ஞானம் தேடும் முயற்சி செய்யும் மாணவன் தன் ஞான குருவின் வடிவத்தை நினைவு கூரும் போதே, தன் மும்மலங்களும் அகன்றுவிடச் சிவனாகவே ஆகிவிடுவான்.

#2660. அவன் இவன் ஆமே

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.

சிவபெருமானின் உறைவிடம் எது என்பதை யாரும் அறிகிலர். ஞான விசாரணையால் சிவனது உறைவிடம் சீவன் தான் என்று அறிந்து கொண்டவர்களின் உள்ளத்தில் சிவனின் நிலையாகக் குடியிருப்பான். தனக்குள்ளேயே உள்ள சிவகுருநாதனைக் காண்பவர் தாமும் சிவமாக ஆகிவிடுவார்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2661 to #2663

#2661. துரியங்கள் மூன்றும் நீங்கும்

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

முகத்தின் முன் தோன்றிய ஒளியை அறிவதும், அறியாமல் இருப்பது, அறிந்தும் அறியாமல் இருப்பதும் மயக்க அறிவு ஆகும். இது சீவனிடம் நனவு, கனவு, சுழுத்தி என்ற மூன்று நிலைகள் மாறி மாறி வருவதால் உண்டாகும் நிலைமை. சீவன் சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்ற மூன்று துரியங்களையும் கடந்துசெல்லும் பொழுது நனவு, கனவு, சுழுத்தி என்ற மூன்று நிலைகளும் நீங்கிச் செல்லும். அப்போது சிவகுருநாதன் அந்தச் சாதகனை பிரணவ உடலில் விளங்கச் செய்வான்.

#2662. இரண்டிதழ்த் தாமரையின் கன்னி

சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.

இரண்டு புருவங்களுக்கு நடுவில், சந்திர மண்டலத்தில், கந்தம் நுகரும் நாசியின் உச்சியில், உள்ளது ஒரு தாமரை. இரண்டு இதழ்கள் கொண்ட இந்தத் தாமரையாகிய ஆக்ஞா சக்கரத்தில் உள்ள சக்தி பந்தம் அற்றவள். பளிங்கு போன்றவள். பந்தங்கள் அகற்றும் குருவின் வடிவானவள் இவள். பந்தங்கள் அறுக்க இவளை பற்றிக் கொண்டு உங்கள் தியானத்தைத் தொடங்குங்கள்.

#2663. அவன் ஊர் வடக்கே உள்ளது

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.

ஏழு உலகங்களும் மகிழும்படி சிவன் சீவர்களின் உள்ளத்தில் புகுந்தான். வானுலகைத் தாங்க அவன் நிலத்தில் புகுந்தான். எட்டு திசைகளும் நடுக்கும் வண்ணம் அவன் சினத்தில் புகுந்தான். வனம் புகுந்த அவன் ஊர் இருப்பது வடக்கு திசையில்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2664. சீவப் பறவையின் வனம் எனத் தக்கன!

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே.

அன்னமய கோசம் முதலான ஐந்து கோசங்களைச் சீவன் தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு இருந்தது. ஆனால் உண்மையில் அவை சீவன் அல்ல! அவற்றைச் சீவன் என்னும் பறவை தங்குகின்ற காடு என்று நாம் கூறலாம். சீவன் தன் உண்மை நிலையை உணர்வதற்கு உதவுவது சோடச கலை மார்க்கம். இதைத் தவிர தச காரியங்களும் சீவன் தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவும்.

#2665. அருவினை கண் சோரும்!

மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.

சீவனின் பக்குவத்தை அறிந்து கொண்டு வந்து அதனுடன் கலந்து விட்ட நந்தி பிறகு அதனை விட்டுப் பிரியவே மாட்டான். அவன் பெருமையை நினைக்கும் போதே சீவனின் சீவபோதம் கெடும். அவன் பேரொளியில் கலந்து அவனை உள்ளத்தகால் உணர முடிந்தால் அப்போது அந்த சீவனின் வினைகள் அழித்து படும்! அந்த வினைகளுக்குக் காரணம் ஆகிய மாயையும் மறைந்து போகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2666 to #2668

#2666. தத்துவனைத் தலைப் படலாம்!

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே.

சிவஞானம் தருகின்ற சிவபெருமானைச் சீவன் தன் முயற்சியினால் அடைய முடியும். சீவனைப் பலமாகப் பந்தப்படுத்தியுள்ள பாசத்தை அறுத்து எறிய முடியும். சீவன் இடையறாது சிவனைச் சிந்தித்துத் தன் சிந்தையை அவன் மேல் நிலைப் பெறச் செய்தால் தருமத்தைச் சென்று அடையலாம்.

#2667. சோதியை உள்ளுபவர் உயர்ந்தவர்!

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.

குருநாதர் காட்டிய வழியில் சிவனைச் சிந்தித்திருப்பவர்களைச் சிவனும் தன் சிந்தையில் கொள்வேன். சிரசில் உள்ள அற்புதச் சுனையில் மலரும் சோதியினை இடையறாது உன்னுபவர் தினையைப் பிளந்ததை போன்ற சிறியவர் ஆனபோதும் சிவனை இடையறாது நினைக்கும் தன்மையினால் பெருமை உடைய பெரியவர் ஆவர்.

#2668. அனைத்துலகாய் நின்ற ஆதிப்பிரான்

தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே.

சிவனைக் குறித்து சாதனை செய்கையில் ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டால் அது உம் தீவினைகளால் ஏற்படுவது என்று அறிந்து கொள்வீர். எந்தத் விதத் தடைவந்தாலும் எத்தனை தடைகள் அதை எதிர்கொண்டு, இடையறாது சாதனை செய்பவர்கள் சிவனின் அருளை உறுதியாகப் பெறுவார்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2669. புகழ் வழிகாட்டிப் புகுந்து நிற்பான்

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

சிவனை இடையறாது உள்குபவர் அவனை விட்டுப் பிரிதல் ஒழிவர். அவனுடன் பிரியாமல் இருக்கும் அரிய பரிச யோகம் பெறுவார். சிவனுடன் பொருந்திய சிந்தையினால் உலக விஷயங்களில் அக்கறை காட்ட மாட்டார். உலகச் சிறப்பை விரும்ப மாட்டார். இத்தகைய அன்பர்களுக்குச் சிவன் புகழத் தக்க மெய்யுணர்வைத் தருவான். என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் இருப்பான்

#2670. சுந்தரச் சோதியுள் சோதியாகும்!

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.

பச்சை மரகதக் கல்லின் மேல் சிவப்பு மாணிக்க கல்லை வைத்தால் இரண்டு ஒளிகளும் கலந்து ஒரு புதிய ஒளி தோன்றும். அது போன்றே சற்குருவின் உபதேசம் சன்மார்க்கத்தில் உள்ள மாணவனிடம் ஓர் ஒளியை உண்டாக்கும். இது புருவ மத்தியில் விளங்கும் சீவ ஒளியினுள் சென்று கலக்கும் மற்றும் ஓர் ஒளியாகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2671 & #2672

#2671. பஞ்ச பூதங்களைக் கடந்தவர்

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

மாணவனிடம் அவன் உண்கின்ற வாயாகவும், அவன் உடலாகவும், அவன் உயிராகவும், காணும் அவன் கண்களாகவும் அனைத்துமாக விளங்குபவர் அவனுடைய யோககுரு. அவர் மேனியோவெனில் மண், நீர், கனல், காற்று, வானம் என்னும் பஞ்ச பூதங்களைக் கடந்து விளங்கும்.

#2672. பரசிவன் ஆணை நடக்கும்

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே.

பார் முழுவதும் பதியாகிய சிவபெருமானின் ஆணைப்படி நடக்கும். அவன் தன் பாதி உடலைக் கருணைக் கடலாகிய சக்திக்கு அளித்தான். மீதிப் பாதி உடலைத் தன் அடியவர்கள் வந்து தன்னை அடைவதற்குக் கொடுத்தான். அந்தத் தலைவன் உலகைப் படைத்தது இதற்காகவே.
 
ஒன்பதாம் தந்திரம்

2. ஞானகுரு தரிசனம்

#2673. அருள் பெற்றவர் அவனை அறிவார்!

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

விரிந்தும், உயர்ந்தும், விரவியும், பரவியும் நிற்கும் சிவபெருமானின் அருளால் உலகு நடக்கின்றது. இதைத் தவிர நான் ஒன்றும் அறியேன் என்று அறிஞர் கூறுவர். வானத்தில் வாழும் வானவர்களும், மற்றும் தானவர்களும் கூடச் சிவனைக் கண்டறியார். சிவன் அருளை பெற்றவரே அவனைக் கண்டறிவார்.

#2674. போய் வணங்கும் பொருள் ஆனோம்

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே

பசுத் தன்மை மிகுந்த ஆன்மாக்களைச் சிவன் பிறர் வந்து வணங்கும் படித் தலைமைத் தன்மை பெறச் செய்தான். பிறர் நாவால் வணங்கும்படி அருள் செய்தான். ஆதலால் நாங்கள் இனிப் பிற தெய்வங்களைச் சென்று வணங்கோம். பிற தெய்வங்கள் சிவனிடமிருந்தே தம் ஆற்றலைப் பெறுகின்றனர் என்ற உண்மையயை அறிந்து கொண்டோம். இதை அறிந்து கொண்டதால் நாமே பிற மக்கள் வந்து வணங்குகின்ற தெய்வத் தன்மையை அடைந்தோம்.
 
ஒன்பதாம் தந்திரம்

3. பிரணவ சமாதி
3. பிரணவ சமாதி
பிரணவம் = ஓங்காரம்
சமாதி = ஒடுக்கம்
பிரணவம் இரு வகைப்படும்.
அ + உ + ம் = பருமைப் பிரணவம்
விந்து + நாதம் = நுண்மைப் பிரணவம்

#2675 & #2680

#2675. வேதாந்த வீதி

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

ஓம் என்று ஒலிக்கும் பிரணவம் ‘அ’, ‘உ’ , ‘ம்’ என்னும் இவற்றால் ஆனது. இதுவே தூலப் பிரணவம். இது தூல உடலுக்கு இன்பத்தைத் தரும். நுண்மைப் பிரணவம் மறைகளால் காக்கப்படும் விந்து நாதம் ஆகும். இதுவே மேலான பராசக்தியின் வடிவம். இது உள்ளக் களிப்பைத் தரும். சூக்குமப் பிரணவத்தை அறிந்து கொள்வது மேலான வேதாந்த வீதியாகும்.

#2676. ஓம் எனும் ஓங்காரம்

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

ஓம் எனும் பிராணவத்தின் உள்ளே ஒளிந்துள்ளது ஓர் உபதேச மொழி. ஓம் என்ற பிரணவத்தின் உள்ளே ஒளிந்துள்ளன உருவும் அருவும். ஓம் எனும் பிரணவத்தின் உள்ளே உள்ளன பல பேதங்கள். ஓம் எனும் பிரணவத்தை அறிந்து கொள்வதே ஒளிரும் முத்தியும், சித்தியும் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

3. பிரணவ சமாதி

#2677 & 2678


#2677. சீவ, பர, சிவ ரூபம் ஓங்காரம்

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே.

அகண்ட பிரணவத்தில் இருந்து தோன்றின ஐம்பெரும் பூதங்கள். பிரணவம் ஆகிய ஓங்காரத்தில் இருந்து தோன்றின அசையும் அசையாய் பொருட்கள் அனைத்தும். பிரணவம் ஆகிய ஓங்காரத்தைக் கடந்த அதீதத்தில் உள்ளனர் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்ற மூன்று வகை சீவர்கள். பிரணவம் சீவன், பரன், சிவன் என்னும் மூவருக்கும் உரிய உயரிய நிலை ஆகும்.

#2678. ஓங்காரமே அனைத்தும் ஆகும்.

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.

ஓம் என்னும் ஓங்காரம் பிரம்மத்தின் இன்ப வடிவு ஆகும். சுருங்கியுள்ள ஓங்காரமே விரிந்து பரந்து சராசரம் என்னும் காணப் படும் உலகம் ஆகும். ஆறு ஆதாரங்கள் அனைத்தும் அதில் அடங்கியுள்ளன. இந்த உண்மையை அறிந்து கொண்டவர்கள் மெய்ஞானிகள் ஆவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

3. பிரணவ சமாதி

#2679. நலம் தரும் நல்ல உபதேசம்

மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.

சீவன் மயக்கம் அடைந்து மலைக்கும் மனோபாவத்தால் அதன் பிராணனின் இயக்கம் நடைபெறும். சீவனின் உள்ளம் அலைபாயும். ஞான குருவின் உபதேசத்தால் சீவனின் மயக்கம் தீர்ந்ததும் பிறக்கும் ஓர் ஒளிநெறி. இதற்குத் தலம், குலம், தவம் என்பவை அனைத்தும் சீவனின் சித்தமே ஆகும். இத்தகைய சன்மார்க்க உபதேசம் சீவனுக்கு நன்மை பயக்கும்.

#2680. ஞான, ஞேய அந்தம்

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.

பதினாறு கலைப் பிரசாதநெறி கூறுவது சன்மார்க்கம். இந்த நெறியில் உள்ளவர்களின் தலையின் மேல் உள்ள துவாதசாந்த வெளியின் முடிவும், பதினாறு கலைகளின் முடிவும், பிரணவ வில்லைக் கடந்து செல்லும். அவை ஞானம், ஞேயம், ஞாதுரு என்ற மூன்றும் ஒன்றாகும் இடத்தில் சென்று முடிவுறும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2681. ஒளியும் உருவமும்

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே.

சீவன் ஆன்மஒளியை அறிந்து கொண்டால், சீவனின் உருவம் ஆகிய உடல் ஒளிந்து கொள்ளும். சீவன் ஒளிந்து நிற்கும் தன் உடலை அறிந்து கொண்டால், சீவனின் பிறவிகள் தொடரும். ஆன்மஒளியின் உருவம் சீவன் அறிந்து கொண்டால், சீவன் உருவம் ஒளிமயம் ஆகிவிடும்.சீவன் ஆன்ம ஒளியில் தோய்ந்து நின்றால், சீவனுக்குச் சிவன் அங்கு விளங்குவான்.

#2682. புவனங்கள் புகல் எளிதாகும்

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.

ஆன்மஒளியை அறிந்து கொண்டு அதில் நிலை பெற்று இருப்பவர்களுக்கு எட்டுத் திசைகளிலும் தங்கு தடையின்றிச் சென்று வரும் ஆற்றல் உண்டாகும். அவர்கள் உள்ளத்தில் கரிய கனஇருளையும் போக்கும் ஒளி வீசும். அன்னாரின் சகசிரதளத் தாமரைப் பகலவன் போல ஒளி வீசும். சீவனின் மலங்களின் இருளைப் போக்கிய ஈசன் அதில் பொருந்தி நிற்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2683. பேரொளியாகக் கலந்து நின்றான்

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே.

பேரொளியாகிய சிவன் சீவனின் ஆன்மாவில் விளங்கியது. அதனால் ஒளிமயமாக விளங்கும் அக்கினி, விரிந்த கதிர்களை உடைய சூரியன், குளுமையான நிலவு என்ற மூன்றும் சீவனின் ஆன்மாவில் ஒளிர்ந்தன. இதனால் ஆன்மா அடையும் பயன் என்ன என்றால் பேரொளியாகிய சிவனுடன் சேர்ந்து மற்ற மூன்று ஒளிரும் பொருட்களும் அதனுள் ஒளிர்வதே ஆகும்.

#2684. இளங்கு ஒளி ஈசன் பிறப்பிலி!

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.

பிறப்பிலியாகிய ஈசன், விளங்குகின்ற ஒளியையே தன் திருமேனியாகக் கொண்டவன். ஒளி வீசுகின்ற கதிரவனும் நிலவும் அவனது இரு கண்கள்.வளங்கொளி வீசுகின்ற அக்கினி அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண். மெய்ஞானியின் உடலும் இது போன்றே ஒளி பெற்று விளங்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2685. தலை மேல் ஒருங்கொளியாகும்

மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

தலை மேல் உள்ள வானம் ஒளி மயமானது. அதன் கீழேயுள்ள காற்றும் ஒளி மயமானது. காமஉணர்வினைத் தூண்டும் மூலாக்கினியும் ஒளி மயமானது. நீரைத் தன் முகமாகக் கொண்ட அபானனும் ஒளி மயமானது. சுழுமுனை வழியே ஆதாரங்களைக் கடந்து சிரசை அடைந்தால் அங்கு ஐந்து பூதங்களின் ஒளியும் ஒன்றாகி ஒரே பேரொளியாகத் திகழும்.

#2686. உன்னியவாறு ஒளி ஒன்றாகும்

மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே.

மின்னலை நிகர்த்த தூய ஒளிக் கீற்று, மாட்சிமை மிகுந்த செந்நிற ஒளி, மறைகள் புகழும் ஆன்மாவின் ஒளி,உடலின் ஆறு ஆதாரங்களில் பொருந்தியுள்ள ஒளி என்னும் இந்த பல்வேறு ஒளிகளைக் கனிமொழி பேசும் சிற்சக்தி தேவி, சீவனின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒரே பேரொளியாக அமைத்துத் தருவாள்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2687. எங்கும் மருவி நின்றானே.

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

சீவனின் ஆன்மாவினுள் ஒளிந்து கொண்டு, ஒளிரும் மின்னலின் ஒளிக்கீற்றைப் போல விளங்கும் ஈசனை, இடையறாது உம் சிந்தையில் சிந்தியுங்கள். அப்போது உம் உள்ளத்தைத் தன் இருப்பிடம் ஆகக் கொண்ட ஈசன் மிகுந்த நேசத்துடன் உம் பிராணசக்தியை வளப்படுத்தி உம் உடலில் பொருந்தி நிறைந்த அருள் செய்வான்.

#2688. நஞ்சும் அமுதாகும்!

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே.

சீவன் தன் ஆன்மா ஒளிமயமானது என்று அறியாமல் காம வயப்பட்டு அறியாமை என்னும் கொடிய இருளில் ஆழ்ந்துவிடும். ஆனால் ஒளி வடிவாகிய சிவன், தன்னை வணங்குபவரின் ஆன்ம ஒளியைப் பெருக்குவான். உப்பு நீர் பாயும் கடலில் உதித்த கொடிய நஞ்சினைத் தன் கழுத்தில் அமுதமாக மாற்றியவன் ஈசன். அது போன்றே சீவனின் உடலில் அமுதமாகிய பிரணவம் விளையும் இடம் அதன் கழுத்துப் பகுதி ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2689. மூன்று விரிச்சுடர் ஒன்றாகி விடும்.

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே.

இயல்பாகவே பேரொளி வீசுவது சிவத்தின் இயல்பு. சக்தி ஒளிமயமாகச் சிவத்தின் விருப்பப்படி செயல்களை செய்து முடிப்பாள். ஆன்மா, சக்தி தேவியின் வசத்தில் இருக்கும்போது திங்கள், கதிரவன், அக்கினி என்ற மூன்றும் வேறு வேறு ஒளிச் சுடர்களாக விளங்கும். சீவன் சிவத்தை பற்றிக் கொண்டவுடன் அந்த மூன்று ஒளிகளும் ஒன்றாகிவிடும். அந்த ஒளியில் சிவன் தன் அருள் ஒளியையம் சேர்த்துச் சீவனுக்கு அருள் செய்வான்.

#2690. மாமணிச் சோதி

உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

மனமண்டலத்தில் ஒளியாக விளங்குவது சீவனின் நுண்ணுடலில் உள்ள ஆன்மா ஆகும். சீவனை விட்டு விலகாத சிவன் அந்த ஒளிக்குள் ஒளியாக விளங்குவான். மாமணியைப் போல ஒளிரும் அவன் பேரொளி மின்னல் போல விண்ணை அடைந்து அங்கு சீவ ஒளியுடன் இரண்டறக் கலந்து நிற்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

சிவன் ஒளி வடிவானவன்
சீவனும் ஒளி வடிவானவன்.
சீவ ஒளி சிவ ஒளியில் கலந்தால் பிறவி நீங்கும்.

#2691. உள் மனத்து ஒன்றி நின்றான்!

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.

விளங்கும் ஒளியையுடைய விகிர்தன் ஆவான் சிவன். சீவனைப் பாசத்தில் பிணைக்கும் இருள் மிகுந்த மாயையில், இருள் நீங்கும்படி வெண்ணிற ஒளியுடன் நடனம் செய்பவன் சிவன். இந்த அற்புத சிவநடனம் அடியார்களின் மனமண்டலத்தில்நிகழும்.

#2692. சிவன் சீவனின் நள்ளிருள் நீக்கும்

போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.

ஞானப் பயிற்சி செய்பவர் ஆதிப் தேவர்களின் தலைவனை, தலை உச்சியில் உள்ள சகசிர தளத்தில் சென்று சேருவர். அவர் ஆன்மப் பேரொளி அடைவார். அண்டத்தில் உள்ள பேரொளியும் ஆவார். இந்த விதமாகப் பரம்பொருளாகிய சிவன், சீவனை மாயையைக் கடக்கச் செய்யும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

#2693. உள்ளே உள்ள விளக்கொளி

உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

உலகத்தினர், “உலகுக்குக் காரணம் ஆன இறைவன் என்று ஒருவன் உண்டு!” என்றும் “இல்லை!” என்றும் பலவாறாகக் கூறுவர். “ஆன்மாவைப் விடப் பழமையானது ஒன்றும் இல்லை!” என்று கூறுபவர்க்குப் பரகதி கிடைக்குமோ? “இறைவனைக் கண்டதில்லை!” என்று கூறுபவர்களும் கூட சிவனை அறிய விரும்பினால் அவனைத் தில்லை ஆகிய தம் மனமண்டலத்தில் ஒளியாக விளங்கும் ஈசனாகக் காணலாம்.

#2694. சாதகன் ஞாலத் துறவி ஆவான்

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியன் ஆமே

ஒண்சுடர் பொருந்திய, ஓர் உயரிய ஒளி வடிவானவன் ஈசன். அவன் சாதகனின் உள்ளத்தில் கதிரவன் போலப் படர்ந்து விரிந்து காட்சி தருவான். அந்த ஒளியின் உதவியுடன், தன் உள்ளத்தில் அடர்ந்து படர்ந்திருந்த மாயையின் இருளை நீக்கினால், உடலுடன் கூடி இருக்கும் போதே சாதகன் இந்த உலகைத் துறக்க முடியும்.
 
ஒன்பதாம் தந்திரம்

4. ஒளி

#2695. செம்பொன் ஆதிப்பிரான்

ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன்நின் றானே.

ஒளி வீசுகின்ற பவளம் போன்ற மேனியை உடையவன் சிவன். அந்தப் பவளமேனியில் ஒளி வீசும் வெண்ணீறு தரித்தவன் சிவன். முதிர்ந்த பவள மேனியினன் ஆகிய சிவன் மூலாதாரத்தில் இருந்து சீவனுக்குக் களிப்பைத் தருபவன். கரிய பாச இருளை என்னிடம் இருந்து நீக்கி விட்டான் பால்வண்ண நிறம் படைத்த, என்னுடன் எப்போதும் பிரியாது இருக்கும் என் ஈசன்.

#2696. வாசம் வீசும் மலர் போன்றவன்

ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாம்மலர் போன்றது தானே.

இறைவன் வான் மண்டலத்தில் இருந்தான். அமரர்களும் வான் மண்டலத்தில் இருந்தனர். என்றாலும் ஒளியற்றவர்களாக அவர்கள் மக்களை பூமியை நோக்கிச் செலுத்துகின்றனர். சீவனின் இருவினைகளும், மேலும் வரும் வினைகளும் ஈசன் அருளால் அடியோடு நீங்கி விட்டதால், மலரும் பொழுது மலர் நறுமணம் வீசுவதைப் போலவே சிவன் சீவனிடம் நன்கு வியாபிப்பான்!

#2697. பானாய் இருக்கப் பரவலும் ஆமே.

தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே.

வானவர்கள் மானவர்களை உலகத்தில் செலுத்துவர். வானவர் கோன் ஆகியவன் சிவன். சீவனுக்கு முக்தியை அளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் அவனைவிடச் சிறந்தவர்கள் எவரும் இல்லை. அளவில்லாத வானமாக பரவி உள்ளவன் சிவன். சீவன் சிவனுடன் இணைந்தால் அவனும் பரவியும் விரவியும் வானத்தைப் போல ஆகிவிடுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்
5. தூல பஞ்சாக்கரம்
தூலம் = பருமை
பஞ்சாக்கரம் = திரு ஐந்தெழுத்து = சிவாயநம
இதை மானசீகமான உச்சரித்தால் அந்த நுண்ணிய அசைவுகள் வானத்தில் பொருந்தும்.
மூலாதாரம் முதலாக இருக்கும் இறைவனை, சீவனின் உடலில் பொருத்திவிடும்.
வேத நெறியில் புற வழிபாட்டுக்கு உகந்தது ‘நம சிவாய’ என்பது.
ஆகம நெறியில் அக வழிபாட்டுக்கு உகந்தது ‘சிவாய நம’ என்பது.

#2698. ஐம்பது எழுத்து அஞ்செழுத்து ஆமே

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.

அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்துக்களால் கூறப்பட்டுள்ளன. அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களில் கூறப்பட்டுள்ளன. இந்த ஐம்பது எழுத்துக்களும் நம் உடலில் உள்ள ஆதாரங்களில் பொருந்தியுள்ளன. அந்த முறையினை அறிந்து கொண்டால் அந்த ஐம்பது எழுத்துக்கள்ளால் பெறும் நன்மையை ‘நமசிவாய’ என்னும் ஐந்து எழுத்துக்களால் பெற்றுவிடலாம்.

#2699. நந்தியின் நாமம்

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

‘அ ‘ முதலாக ‘ஓம்’ உட்பட ஐம்பத்தொன்று எழுத்துக்கள் உள்ளன. இந்த எல்லா எழுத்துக்களும் வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன. இவைகள் உதடுகள் குவிவதால் நிலை பெறுகின்றன. இவைகள் உதடுகள் இணைவதால் இறுதியை அடைகின்றன. ‘ந’காரத்தை அடைந்தவுடன் நந்தியின் நாமம் ‘நமசிவாய’ என்பது தோன்றும்.
 
ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்

#2700. ‘நமசிவாய’ என்னும் மூலமந்திரம்

அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.

அகரம் முதலிய பதினாறு உயிர் எழுத்துக்களில் கலந்து இருப்பவள் பரை என்னும் சக்தி. மெய் எழுத்துக்களை இயக்குபவர்கள் பிராமி, வைணவி, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் எட்டு சக்தியர். இவர்களுடன் கலந்து சிவம் ஒளிமயமாகித் திகழும். அங்குசம் போன்ற மூல மந்திரம் ஆகும்’ நமசிவாய’. இதை அறிந்தவருக்கு இந்த தெய்வீக உணர்வு உடலில் உடனே வந்து பொருந்தும்.

#2701. ஆறு சக்கரங்களில் ஆறு எழுத்துக்கள்

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே

திரு ஐந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ என்பதும் ‘ஓம்’ என்ற பிரணவமும்
உடலில் ஆறு சக்கரங்களில் பொருந்தும் முறை இது:

மூலாதாரத்தில் ‘நகாரம்’ பொருந்தும்.
சுவாதிட்டானத்தில் ‘மகாரம்’ பொருந்தும்.
நாபிப் பிரதேசத்தில் ‘சிகாரம்’ பொருந்தும்.
இதயப் பகுதியில் ‘வகாரம்’ பொருந்தும்.
கண்டப்பகுதியில் ‘யகாரம்’ பொருந்தும்
புருவ மத்தியில் ‘ஓம்’ என்னும் பிரணவம் பொருந்தும்.
 

Latest posts

Latest ads

Back
Top