• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

8(4). பொற்பதிக் கூத்து

#2747. இவை இரண்டும் சிவபூமி

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே.

உடலில் உள்ள சகசிரதளம் ஆகும் உடலில் உள்ள மேருமலை. இடைகலை, பிங்கலை, நடு நாடியாகிய சுழுமுனை, இவை மூன்றும் உடலின் தொடர்பு இல்லாமல் இங்கு விளங்கும். இடைநாடியும், பிங்கலையும் இதயம் என்னும் தில்லை வனத்தை வளைத்து மேலே சென்று சகசிரதளம் என்னும் மேருமலை உச்சியை அடைந்து அங்கு சுழுமுனையுடன் விளங்கும். எனவே இதயம், சகசிரதளம் இவை இரண்டும் சிவன் நடனம் புரியும் சிவபூமியாகின்றன.

#2748. பாதி மதியோன் பயிலும் அம்பலம்

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.

இடைக்கலை பூதலம் ஆகும். சுழுமுனை மேருமலை ஆகும். பிங்கலை தெக்கணம் ஆகும். இந்தச் சுழுமுனை நாடியைத் தன் அம்பலமாகக் கொண்டு பாதிமதி அணிந்த பரன் நடனம் புரிகின்றான். பூத அண்டத்தின் எல்லையும் இதுவே ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

8(5). பொற்றில்லைக் கூத்து
ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஒளிகள் ஒன்றாக இணைந்து நெற்றிக்கு நேரே விளங்கும் பொன் ஒளியில் சிவன் ஆடும் கூத்து.

#2749. பரஞ்சோதியின் கூத்து

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

மூலாதாரம் முதலாக சகசிரதளம் வரையில் உள்ள ஏழு அண்டங்களும் (ஆதாரச் சக்கரங்களும்) சிவன் ஆடும் அழகிய பொன்னம்பலம் ஆகும். ஐவகை வானங்கள்
மண்ணில் ஆகாயம், நீரில் ஆகாயம், நெருப்பில் ஆகாயம், காற்றில் ஆகாயம், வெளியில் ஆகாயம் ) என்பவை சிவபிரான் நடிக்கும் இடம் ஆகும். அக்கினியில் விளங்கும் குண்டலினி சக்தியே சிவன் நடம் புரியும் திருவம்பலம் ஆகும். இங்கனம் சோதி வடிவாகிய சிவபிரான் மிகுந்த விருப்பத்துடன் தன் கூத்தைப் புரிகின்றான்

#2750. நிரானந்த நிருத்தியம் புரிவான் பரன்

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே.

குரு உணர்த்திய இன்பயமான திங்கள் மண்டல ஒளி ஆவான் சிவன். நன்மை தரும் ஆனந்தத்தைப் பெருக்குவான் சிவன். திங்கள் கலையில் திகழ்கின்ற சிவன் கதிரவக் கலையை அடைந்து அங்கு சக்தியுடன் இணைந்து இருந்து நித்திய இன்பத்தைத் தரும் அற்புதக் கூத்தை ஆடி அருளுகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2751. நாதமோடு ஆடினான் நந்திப் பிரான்

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.

சிவன் தன் அற்புத நடனம் புரிகையில் சுழுமுனையில் திங்கள் மண்டல ஒளி அசைந்தது! புகழ்ந்து பேசப்படும் ஒளிக்கற்றைகள் ஆகிய சடைகள் ஆடின! உன்மத்தர்கள் ஆகிய சீவர்கள் தம் செயல் இழந்து தாமும் ஆடினர். பாதிமதி சக்தி தேவியின் நீல ஒளியுடன் ஆடியது! உடல் தத்துவத்துக்கு அப்படிப்பட்ட வான அணுக்கள் தாமும் ஆடின. நாதாந்தத்தை அடைவிக்கும் கூத்தைத் தன் நாத சக்தியால் ஆடினான் நந்தி எம்பிரான்.

#2752. மோன ஞான அந்தம்

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோன ஞானந்தத்தில் உண்மையே.

அடியவர் தன்னை வணங்கி உய்யுமாறு அரன் அவரவர் சிதாகாசத்தில் தனிநடம் புரிகின்றான். இது சிவபிரான் அண்டங்களில் ஆடும் நடனம் ஆகும். இதுவே செம்பொருள் ஆகிய சிவனை அறிந்து கொள்ளும் உண்மை நிலை ஆகும். சீவன் இந்த நிலையில் பொருந்திவிட்டால் உயரிய மோனம் கைக்கூடும். அதனால் தூய ஞானம் கைக்கூடும். இதுவே சீவன் அடைய வேண்டிய உண்மைப்பேறு ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2753. பரனின் இரு பாதங்கள்

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே.

நடனம் ஆடும் இறைவனது இரு திருப் பாதங்கள் அனைத்தையும் இயக்குகின்றன. வெளியே புறவுலகில் அமைந்துள்ள மூவேழு இருபத்தொன்று அண்டங்களையும், அவற்றிலும் உயரிய உடலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்களையும், இவற்றைக்குச் சாதகமாக அமைந்துள்ள நூற்றெட்டு சமயங்களையும், இவற்றின் நான்கு பகுதிகள் ஆகிய நாதம், நாதாந்தம், நடனம், நடனாந்தம் என்பவற்றையும் ஆட்டுவிப்பது சிவசக்தியர் புரியும் திருநடனமே!

#2754. பரமாம் பரமே பரன்!

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே

சீவனின் தலையின் இடதுபுறம் பனிப் படலம் போன்று விளங்கும் இமயம் இடைகலை ஆகும். பிங்கலை தலையின் வலப்பக்கம் ஒரு தீவு போல விளங்குவது. நடுவே உள்ள சுழுமுனை பரவெளி ஆகிய மேருமலை ஆகும். இவற்றின் வேர் தில்லைவனம் என்னும் சீவனின் இதயப்பகுதி ஆகும். இவற்றில் ஊடே பரவி மேலே செல்பவன் பரன் என்னும் சிவபெருமான் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2755. தென்திசை வையகம் தூயது!

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே.

பாரத நாட்டில் தெற்கு கோடியில் உள்ள கன்னியாகுமாரி, தென் பகுதியில் பாயும் காவேரி நதி, மேலும் இவற்றிலும் வேறான ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள், புகழ் வாய்ந்த ஏழு மலைகள் போன்ற இடங்களில் தோன்றுவன வேதங்களும், ஆகமங்களும். இதனால் பூமியின் தென் பகுதி மிகவும் தூய்மை வாய்ந்தது எனலாம்.

#2756. தேவாதி தேவர் பிரான் சிவன்

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

தீமையில்லாத தூய சிவபிரான் நாதத் தொனியில் ஆடுவான்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பதங்களிலும் நின்று ஆடுவான்; சிவன் வேதத்தில் நின்று ஆடுவான்; அக்கினிக் கலையின் மீது நின்று ஆடுவான்; சிவன் சீவனின் அறிவில் நின்று ஆடுவான்; புவனங்கள் அனைத்திலும் பொருந்தி ஆடுவான் சிவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2757. கூத்தப் பிரான் ஆவான் சிவபிரான்

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.

கூத்தப் பிரான் ஆகிய சிவபிரான் தேவர்களின் அறிவில் நின்று ஆடுவான்; திரு அம்பலத்தில் நின்று ஆடுவான்; மும்மூர்த்திகள் ஆகிய நான்முகன், திருமால், உருத்திரன் என்பவர்களிடன் நின்று ஆடுவான் ; தவ முனிவர்களிடம் நின்று ஆடுவான்; பாவினுள் நின்று ஆடுவான்; பராசக்தியிடம் நின்று ஆடுவான்; ஆன்மாக்களின் அறிவில் நின்று நடனம் ஆடுவான்.

#2758. அரன் ஆறு முகத்தில் அதிபதி

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

“இறைவனிடம் ஆற்றுப் படுத்தும் ஆறு வழிகளும் நானே! சமயங்கள் புகழும் குருபரனும் நானே!” என்று கூறும் சிவனைத் தன் ஆன்ம வடிவாகத் தன் தலையின் தென்புறத்தில் உள்ள வானவெளியில் சாதகன் அறிந்து கொண்டான். இந்த உண்மையை அறிந்து கொண்டவர்களிடம் இருந்து என்றும் வேறுபடாமல் ஒன்றாகக் கலந்து விளங்குகின்றான் சிவபெருமான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2757. கூத்தப் பிரான் ஆவான் சிவபிரான்

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.

கூத்தப் பிரான் ஆகிய சிவபிரான் தேவர்களின் அறிவில் நின்று ஆடுவான்; திரு அம்பலத்தில் நின்று ஆடுவான்; மும்மூர்த்திகள் ஆகிய நான்முகன், திருமால், உருத்திரன் என்பவர்களிடன் நின்று ஆடுவான் ; தவ முனிவர்களிடம் நின்று ஆடுவான்; பாவினுள் நின்று ஆடுவான்; பராசக்தியிடம் நின்று ஆடுவான்; ஆன்மாக்களின் அறிவில் நின்று நடனம் ஆடுவான்.

#2758. அரன் ஆறு முகத்தில் அதிபதி

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

“இறைவனிடம் ஆற்றுப் படுத்தும் ஆறு வழிகளும் நானே! சமயங்கள் புகழும் குருபரனும் நானே!” என்று கூறும் சிவனைத் தன் ஆன்ம வடிவாகத் தன் தலையின் தென்புறத்தில் உள்ள வானவெளியில் சாதகன் அறிந்து கொண்டான். இந்த உண்மையை அறிந்து கொண்டவர்களிடம் இருந்து என்றும் வேறுபடாமல் ஒன்றாகக் கலந்து விளங்குகின்றான் சிவபெருமான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(5). பொற்றில்லைக் கூத்து

#2759. தானே வந்து அருள்வான் தயாபரன்!

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

அம்பலம் அரனின் ஆடல் அரங்கு ஆகும். அதன் மேல் எம் பரன் சிவபிரான் திரு நடனம் புரிவான். அவன் இரு திருவடிகளின் ஒளி அணுக்களின் கூட்டமே வானம் ஆகும். அந்த வானத்தில் அகர, உகர, மகர, விந்து, நாதங்கள் பொருத்தியுள்ள திங்கள் கலை பொருந்தி விளங்கும். அந்தத் திங்கள் கலையில் சிவபிரான் நிலையாகப் பொருந்திச் சீவனுக்கு ஒளியாக அருள் புரிவான்.

#2760. ஐயன் கூத்து ஐயங்களைப் போக்கும்!

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

தூக்கிய இடது திருவடியும், அதில் பிறக்கும் காற்சிலம்பின் ஒலியும், அங்கு இசைக்கப்படும் பாட்டும், பலவகையான அழகிய நடன அசைவுகளும், இவை அனைத்தும் கூடி ஒன்றாகத் தோன்றிய அழகிய கோலத்தைக் கண்ட நான் என் உள்ளத்தில் மண்டியிருந்த இருந்த ஐயங்கள் அகலக் கண்டேன்.

#2761. எங்கணும் கூத்து உகந்தான்

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே.

இதயத்தில் இருந்து மேலே எழுந்த பிராணன், உடல் முழுவதும் நன்றாகக் கலந்து விளங்கும்படி, மூலாதாரத்தில் செவ்வொளி வீசும் அக்கினியாக விளங்கும் பிரான், விரிந்து பரந்த தன் ஒளி வடிவால் சீவனின் உடலிலும் விளங்கினான். சீவனின் உடலைக் கடந்தும் விளங்கினான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

சொற்களுக்கு அப்பாற்பட்ட இன்பத்தை அளிப்பது ஈசனின் அற்புதக் கூத்து.

#2762. திரிபுரை உமையவள்

குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே

குருவுருவில் இருக்கும் ஒருவுருவம் அருவுருவான சிவத்தின் உருவம். சிவத்தின் அருவுருவம் ஆவாள் அன்னை பராசக்தியும். எனவே திரிபுரையாகத் திகழும் உமை அன்னையே உருவாகவும், அருவாகவும் விளங்குவாள்!

#2763. அருள்வழி ஆகும்!

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே
உருவரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

ஞானத்தை அடைவிக்கும் திருவழி எது?

தலையின் முன் உள்ள வான் மண்டலத்தின் ஒளியின் உள்ளே ஒருவர் தியானிக்கும் வடிவமே அந்தத் திருவழியும் நன்னெறியுமாகும். தியானிக்கும் அந்த உருவம் மறைந்து அருவம் ஆகும். வான் மண்டலத்தின் ஒளியில் பொருந்தி ஞான நெறியில் நடப்பவருக்கு அதுவே அருள் வழியும் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2764. அரன் ஆடும் அம்பலம் அதுவே!

நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே.

தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல உயரத்தில் இருப்பது துவாதசாந்தப் பெருவெளி. தியானம் செய்து, கீழ்நோக்கிச் செல்லும் ஆன்மாவை மேல் நோக்கிச் செல்ல விடுங்கள். நாதம் ஒடுங்கிய நாதாந்தத்தில் விளங்குபவன் நம் நந்திப் பிரான். அவன் விருப்பத்துடன் நடனம் புரியும் திருவம்பலம் இந்த துவாதசந்தாப் பெருவெளியே ஆகும்.

#2765. ஒளி உருவாகி ஒளிந்து நிற்பான்

வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.

காற்று, மேகம், மின்னல், வானவில், இடியோசை போன்ற மாறுபாட்டவற்றுக்கு அகண்ட வானம் தன்னில் இடம் அளிக்கின்றது. தான் அவற்றுடன் கலந்து விடாமல் தெளிந்த வானம் ஆகவும் திகழ்கின்றது. இறைவனும் வானத்தைப் போன்றே ஆனந்தத்தைத் தருகின்ற ஆறுஆதாரங்களில் ஒளிரும் ஆறு வகை ஒளியுடன் கலந்து விளங்குவான். அவற்றிலிருந்து வேறுபட்டுத் தனித்தும் விளங்குவான். ஒளி வடிவாகிய அவன் சீவனின் கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து நிற்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2766. நடம் செய்யும் நாயகன் நந்தி

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே

எந்தை நந்திப் பிரான் நடனம் செய்யும் முறை இதுவே! ஐம்பெரும் பூதங்களின் ஒளி அணுக்களிலும், எட்டு திசைகளிலும், கீழும் மேலும் ஆகிய மேலும் இரு திசைகளிலும், அறிவைக் கடந்த சிவானந்த நிலை நிலவுகின்றது. தூமாயை, தூவா மாயை என்ற இரண்டையும் கடந்து நிற்பவர்கள் கண்டு களிக்கும்படி நாயகன் நந்தி நடனம் செய்கின்றான்!

#2767. ஞானக் கூத்தனும் கூத்தியும்.

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

சகசிரதளத்தில் ஞானக் கூத்தன் கோல்வளையாளோடு கலந்து நிற்பான். சீவர்களுக்கு கோதில்லாத ஆனந்தம் தருவான். சாதகர்களின் குற்றமற்ற தூயஞானத்தில் கலந்து நிற்பான். பலவண்ணங்கள் கொண்ட சக்தியும், வெண்ணிற ஒளிகொண்ட கூத்தனும், மேல் நோக்கி நிமிர்ந்த சகசிரதளத்தின் மீது விளங்குவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2768. சிவசக்தியர் ஆடுவது ஏன்?

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே.

உயிர்களை இடமாகக் கொண்ட சிவபெருமானின் இடப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டவள் சக்தி தேவி. அவளிடம் இருந்து இணை பிரியமால் இருப்பவன் எந்தை சிவன். சிவசக்தியர் என் உயிரின் ஒளியில் கலந்து இருப்பதை நான் கண்டு கொண்டேன். மலங்கள் வந்து திரைபோலச் சீவனின் தூயஅறிவை மறைக்கின்றன. சீவர்களின் மலங்கள் மாறுவதற்காகவே சிவசக்தியர் சீவனுள் ஓர் அற்புத நடனம் புரிகின்றனர்.

#2769. சீவன் சிவனை அடைவதும் ஒரு நடனம்

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.

சீவனின் அறிவில் சத்து ஆகவும், சித்து ஆகவும், ஆனந்தம் ஆகவும், இருப்பது சக்தியின் திருமேனியே! சீவர்களின் சகள வடிவமும் சக்திதேவியின் வடிவமே ஆகும். சக்தியின் வடிவம் உயிர்களிடத்தில் விளங்கித் தூய்மை அடைந்த சீவன், சிவனுடன் கலந்து ஆனந்தம் அடைவதும் ஒரு நடனம் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2770. சிவனின் இருப்பிடம் சிற்றம்பலம்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

நெற்றிக்கு முன்னால், புருவத்துக்கு நடுவில் பொருந்தி, சாதனை செய்தால் உள்ளத்தில் உரைக்கும் மந்திரம் ஒளிவடிவாகும். அந்த அறிவாகாயமே சீவனின் பற்றுக்கோடு ஆகிய பரமனின் இருப்பிடம் என்று அறிந்து கொண்டு நான் அங்கு சென்று சிவனுடன் சேர்ந்து கொண்டேன்!

#2771. பரஞ்சோதி கூத்து உகந்தான்

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

எண்ணற்ற அண்டங்கள், அளவற்ற தத்துவங்கள், சதாசிவம், சுழுமுனை, சக்தி தேவி, சாம்பவி தேவி, குண்டலினி சக்தி என்ற இந்த ஏழு இடங்களையும் தன் நடனத்துக்கு உரிய இடமாகக் கொண்டு பரஞ்சோதி ஆகிய பரமன் தன் கூத்தினை உகந்து நிகழ்த்துகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2772. நெடு மண்டலம்

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே.

சிதாகாசத்தில் உள்ள சகசிரதளத் தாமரை, ஈசன் நடனம் ஆடும் மன்றினை ஒளிவெள்ளத்தால் நிரப்பும். விந்தையான மலர் அந்த ஆயிரம் இதழ்த் தாமரை. மூலாதாரத்தில் நான்கு இதழ்களாக உள்ள குண்டலினி சக்தியே சிரசில் ஆயிரம் இதழ் தாமரையாகின்றது. மேலம் இருநூற்றுப் பத்து உலகங்களிலும் அது நிமிர்ந்து உயர்ந்து ஒரு மண்டலம் ஆகின்றது. இதுவே சிவபெருமான் உள்ளம் உகந்து நடனம் ஆடுவதற்கு ஏற்ற இடம்.

#2773. அரன் நடனம் செய்யும் ஆலயங்கள்

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே.

அண்டங்கள் ஏழு; தேவர்கள், மனிதர்கள், நிலம் வாழ் விலங்குகள், நீர் வாழ்பவை, ஊர்வன, பறப்பன, தாவரங்கள் என்ற பிண்டங்கள் நான்கு; உடலில் உள்ள ஆதாரங்கள் ஏழு; எண் திசைகளில் பொருந்தி விளங்கும் லிங்கங்களும் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம் என்ற ஏழு; அண்டங்களுக்கும், பிண்டங்களுக்கும் தலைவன் ஆன சிவபெருமான் இவற்றைத் தான் நடனம் செய்யும் இடங்களாகக் கொண்டுள்ளான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2774. முக்கண்களின் மூன்று ஒளி

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

எம்பெருமான் சிவன் சீவனின் அறிவுப் பெருவெளியில் நடனம் செய்யும் விதம் இது:

அகண்ட ஆகாயமே ஈசனின் உடல் ஆகும். அந்த ஆகாயத்தில் உள்ள கரிய இருள் அறியாமை ஆகிய முயலகன். விரிந்த மேலாடை போலத் தோன்றும் எட்டு திக்குகள் அவன் கைகள். முக்கண்கள் ஆகும் கதிரவன், நிலவு, அக்கினி. இவ்வண்ணம் ஈசன் ஆகாசப் பெருவெளியில் அற்புத நடனம் செய்கின்றான்.

#2775. அம்பலம் ஆவது அகில சராசரம்

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே.

சிவன் கூத்தாடுகின்ற அம்பலங்கள் இவை:

அகில சராசரத்தில் உள்ள இயங்குகின்ற, இயங்காத பொருட்கள் அனைத்தும் அவன் அம்பலம் ஆகும்; ஆதிப் பிரானின் திருவடிகள் அவன் நடனம் ஆடும் அம்பலம் ஆகும்; ஐம்பெரும் பூதங்களும் அவன் ஆடும் அம்பலம் ஆகும். திரு ஐந்தெழுத்து சிவன் ஆடுகின்ற அம்பலம் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2776. பாண்டரங்கக் கூத்து

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.

வண்மையான திண்முழவமும், குழலும் “ஓம்! ஓம்!” என்று ஒலிக்கும்; மெய்ஞானியர் அந்த நாதமே எந்தை ஈசன் என்று உணர்ந்து மகிழ்வர். பெருமானைக் காண விரும்பிக் கூட்டம் கூட்டமாக நிற்கும் பூதப் படைகளும், தேவகணங்களும் போற்றி பாடும்படி அமைந்துள்ள கூத்து திரிபுர சங்காரக் கூத்து எனப்படும் பாண்டரங்கக் கூத்து ஆகும்.

#2777. கண்டு சேவித்துக் நற்கதி அடைவர்

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

அண்டத்தில் உள்ள தேவர்கள்; அண்டத்துக்கு வெளியே உள்ள தேவர்கள்; அலைகடல் சூழ்ந்த உலகில் வாழும் தேவர்கள் என்ற அனைவரும் தம் தலையின் மேல் விளங்குகின்ற பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்ற ஈசனின் தாமரைப் பொற்பாதங்களைக் கண்டு வணங்கி நற்கதி அடைவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2778. உள்ளத்தில் அமுது ஊறும்!

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே.

புளியைப் பார்த்தவர்களுக்கு வாயில் உமிழ் நீர் ஊறும். அது போலவே சிவானந்தத்தைத் தரும் திருக் கூத்தைத் தம் தலையின் மீது கண்டவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் துளிக்கும். அன்பால் உருகி நெஞ்சம் சோர்வடையும். அவர் உள்ளத்தில் விளங்கும் ஒளியாகிய சிவன் இன்பத்தைப் பெருக்குவான்.

#2779. உணர்ந்தவர் உன்மத்தர் ஆவர்!

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணர்வுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

சிவானந்தம் அடைந்தவரின் நிலைப்பாடுகள் இவை:

இறைவன் புரியும் திருநடனத்தைக் கண்டு இவர் திண்டாடித் தடுமாறிக் கீழே விழுவார்; அவர் நோக்குப் புற உலகை விடுத்து அகத்தின் ஒளியில் சென்று பதியும். அதனால் அவர் உன்மத்தர் ஆகித் தன் வசம் இழப்பர்; எல்லோரும் கொண்டாடும் அறிவு ஆகாசத்தில் ஈசன் நேசத்துடன் புரியும் நடனத்தைக் கண்டவர் மெய்ப்பாடுகளும், நாதாந்தத்தில் அவன் பிராணவத் தொனியைக் கேட்டவர்களின் நிலைப்பாடுகளும் ஒத்தவைகள் ஆக அமையும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2780. மங்கை ஒரு பாகன் ஆடும் மாநடனம்!

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

அக்கினிச் சட்டி, உடுக்கை, உருத்திராட்ச மாலை, பாசக் கயிறு, தோட்டி, முத்தலை வேல் (சூலம்), மண்டையோடு இவற்றைக் கைகளில் ஏந்தியும்; பர ஞானம், அபர ஞானம் இவற்றைத் தருபவளும், நீல நிற ஒளியுடன் விளங்குபவளும் ஆகிய உமையைத் தன் உடலின் இடப்பாகமாகக் கொண்ட சிவன் நடனம் மாட்சிமை மிகுந்த அற்புத ஆடுவான்.

#2781. நந்தி புறம் அகம் நிறைவான்

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே.

பாண்டரங்கக் கூத்து ஆடுபவர் உடலின் பதினோரு உறுப்புக்களின் அசைவால் நிகழ்வது. முறைப்படி பதினோரு உறுப்புக்களும் ஆடலில் பொருந்தி இருக்க, கால்களில் சிலம்பும், கைகளில் உடுக்கையும் கொண்டு சிவன் நடனம் செய்வான். அந்த நடனத்தின் ஒலி சீவனை பராத்பரனிடத்தில் கொண்டு செலுத்தும். இங்கனம் சிவபிரான் சீவனுக்கு உள்ளும் புறமும் நிறைந்து நிற்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2782. அரன் ஆடும் ஆனந்தக் கூத்து!

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

சிவபிரானின் ஒன்பது பேதங்கள் நடனம் ஆடிடும்; எட்டுத் திசைகள், அவற்றின் உள் திசைகள் எட்டு எனப் பதினாறு திசைகளும் நடனம் ஆடிடும்; பக்தி நெறிகள் ஆறும் நடனம் ஆடிடும்; இன்பத்தை அளிக்கும் உடலின் ஏழு ஆதாரங்களும் நடனம் ஆடிடும்; ஏழு வகைத் தோற்றங்கள் நடனம் ஆடிடும், ஐம்பத்தாறு தேசங்கள் நடனம் ஆடிடும்; ஐம்பது சக்தியர் எழுத்துக்களின் வடிவம் ஆக இருக்க அவர்களிடமும் ஐயன் ஆனந்தக் கூத்து ஆடுவான்.

ஒன்பது பேதங்கள்:
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்,விந்து, நாதம்,சத்தி, சிவன்

பக்தி மார்க்கங்கள் ஆறு:
காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சௌரம், வைணவம், சைவம்.

#2783. ஏழிசையில் இசைந்து அரன் ஆடுவான்!

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.

ஏழு சுரங்களில் ஏழாகவும்; அந்த ஏழு சுரங்களும் குறுகி விடும் போது அவற்றைக் குறிக்கும் ஏழு எழுத்துக்களாகவும்; அவை ஏழு சுரங்களும் மேலும் மேலும் குறுகி ஒரே ஒலியாக அமைந்து பிராணவமாக விளங்கும் போதும், அவை அனைத்திலும் அரன் விளங்குகின்றான். சன்மார்க்கம் என்னும் நன் நெறியில் விளங்கும் பரஜோதி சிவன் ஏழு இசைகளிலும் இசைந்து தானும் ஆனந்த நடனம் புரிகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2784. மூன்றெழுத்தால் ஆன பிரணவம்

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

இறைவன் ஆடும் மோகாந்தக் கூத்து:

கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று மண்டலங்களிலும் சிவன் ஆடுவான்; திரு ஐந்தெழுத்தின் வடிவமாக சிவன் ஆடுவான்; முந்நூற்று அறுபது கலைகளாகச் சிவன் ஆடுவான். மூன்று மண்டலங்களிலும் உள்ள ஆறு ஆதாரங்களாகச் சிவன் ஆடுவான். நுண்மை, பருமை என்ற பேதங்களால் அமையும் பன்னிரண்டு ஆதாரங்களிலும் சிவன் ஆடுவான். அகரம், உகரம், மகரம் என்ற மூன்று எழுத்துக்கள் ஒன்றாகி அமைந்த பிரணவத்தில் பிரான் விருப்பத்தை உண்டாக்கும் தன் கூத்தினை நிகழ்த்துவான்!

#2785. ஞாலம் கடந்து நின்றான்!

தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

அழகிய மணிமுடிகளைத் தரித்த வானவர்களின் தலை மேல் தானே ஒரு மாமணியைப் போன்று ஒளிரும் ஈசனின் திருவடிகள் உறைகின்றன. அதே தாமரைத் திருவடிகள் அன்புடையவர்களின் மனதில் அழகுற விளங்குகின்றன. அப்படி விளங்கி வேண்டுபவர்களுக்கு வேண்டுபவற்றை அளிக்கும் ஈசன் வானுலகக் கற்பகத் தருவனை ஒத்தவன். அவன் இந்த ஞாலத்தைக் கடந்து நிற்பவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2786. அரன் ஆடல் கண்டு இன்புறுவர்

புரிந்தஅவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்துஅவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்துஅவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே.

எல்லாம் அறிந்த சிவன் ஆடினான் என்றால் அனைத்து புவனங்களும் அவனுடன் சேர்ந்து ஆடும். சிந்தையின் சீர்மையை அளந்து அதற்கு ஏற்ப சிவன் நடனம் புரிவான். அவன் நடனம் புரிந்தால் என்றால் பூதங்களும் அவனுடன் நடனம் புரியும். பேரொளியாகத் திகழும் சிவன் நடனத்தைக் கண்டவர்கள் அடையும் இன்பம் அளவற்றது.

#2787. அருட்சக்தி துணை புரிவாள்

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே.

“ஆதி சிவன் நடனம் செய்தான்!” என்பர் ஆதர்கள். ஆனால் ஆதி சிவன் நடனத்தைக் கண்டவர்கள் எவரும் இலர். ஆதி சிவன் தம் உள்ளத்தில் நடனம் செய்வதை அறிந்து கொண்ட பின்னர், ஆதி சிவன் நடனத்திற்குத் துணை புரிபவள் ஆதி சக்தியே என்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்வர்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2788. அன்புறு எந்தை ஆடலுற்றான்

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே

வியஷ்டி நிலையில் உள்ள சீவனுக்கும் சமஷ்டி நிலையில் உள்ள சிவனுக்கும் ஒன்பது பேதங்கள் உள்ளன. சீவனுள் ஒன்பது நிலைகள் நனவு முதல் துரியாதீதம் வரை அமைந்துள்ளன. சிவன் தன் வடிவில் ஒன்பது பேதங்களை உருவாக்குபவன். தத் பதம், தொம்பதம் என்ற இருபதங்களிலும் இருந்து கொண்டு சீவனுக்கு இன்பத்தை உண்டாக்குவதற்காகவே சிவன் ஆடுகிறான். காம வேட்கையை எழுப்பிச் சீவனுக்குத் துன்பத்தைத் தருகின்ற காளி ஆடிட, சீவர்களுக்கு இன்பத்தைத் தருவதற்குச் சிவன் ஆடுகிறான்.

#2789. அத்தனின் ஆனந்தக் கூத்து

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

அத்தனின் ஆனந்தக் கூத்துடன் நிகழும் அற்புத நடனங்கள் இவை:

அனைத்துத் தத்துவங்களும் அத்தன் உடன் ஆடும்; சதாசிவன் உடன் ஆடுவான்; சித்த மண்டலம் உடன் ஆடும்; சிவசத்தி உடன் ஆடுவாள். அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என்ற அத்தனையும் உடன் ஆடும்; வேதங்கள் உடன் ஆடிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2790. அருளுருவாகி நின்று ஆடினான்

இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே.

பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் கண்டு மகிழும்படிச் சிவன் ஆடினான். அழகிய அம்பலத்தில் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றும் ஒரு பரரூபமாகப் பொருந்தச் சிவன் ஆடினான். திருவருள் புரியும் சக்திக்கு உள்ளே ஆனந்த மயமாகவும், அறிவு மயமாகவும் உள்ள சிவன் அருளே உருவாகி ஆனந்த நடனம் ஆடினான்.

#2791. வேதாந்தச் சித்தாந்தத்துள் சிவன் ஆடினான்

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே.

சிவன் ஆட, சக்தியும் ஆட, சகத்தில் அவம் ஆட, அசைவில்லாத வானம் ஆட, உருவம் அருவுருவம் அருவம் என்ற ஒன்பது தத்துவங்களும் ஆட, தத்துவங்களைக் கடந்து விளங்கும் நாதாந்தமும் ஆட, சிவன் வேதாந்தச் சித்தாந்தத்தினுள் நின்று ஆனந்த நடனம் ஆடினான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2794. அத்தன் என்னை ஆட்கொண்ட விதம்

கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தாஎன்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே.

சிவன் என்னை ஆட்கொண்ட விதம் இதுவே! அவன் என்னுடன் பிரிவின்றிக் கூடி நின்றான்; வேறு சில பல சிறு தெய்வங்களின் பிடியிலிருந்து அவன் என்னை மீட்டான்.”விகிர்தா!” என்று நான் விளித்தவுடன் அவன் விருப்புடன் வெளிப்பட்டு நின்றான். கதிரவன், திங்கள், அக்கினி என்ற முச்சுடர்களின் ஒளியும் ஆடுமாறு அவன் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டான்.

#2795. பேதம் இன்றிப் பின்னிப் பிணைந்தான்

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

நாதத் தத்துவத்தைக் கடந்து நாதாந்த நிலையில் விளங்குபவன் ஆதிசிவன். இவனே ஆதிமறைகள் போற்றும் நம்பி ஆவான். இவன் சீவனின் சுவாதிட்டான மலரை ஒளிரச் செய்தான். அதனால் சீவன் அங்கே பொருந்தி உலக இன்பங்களை சுவைத்தது. ஆனால் அவனே பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களைப் பிரித்தும் வைத்தான். ‘நேதி’ என்று ‘சத்’தை ‘அசத்’திலிருந்து பிரித்து உணர்ந்த சீவனுடன், சிவன் வேறுபாடு இன்றிப் பின்னிப் பிணைந்து நின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2796. ‘தான்’ அந்தமாவது ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே.

அறிவிலிகள் “ஆனந்தம்! ஆனந்தம்!” என்று எதை எதையோ கூறுவார். மெய்யான ஆனந்தம் தருவது சிவனுடைய பெருமை வாய்ந்த கூத்து என்று இவர் அறிகிலர். ஆனந்தம் தருவது சிவநடனம் என்று அறிந்து கொண்ட பின்னர், சீவனின் ‘தான்’ என்னும் தத்துவங்களின் கூட்டம் அந்தம் அடையும் அந்த இடமே, உண்மையான ஆனந்தம் என்று அவர்கள் அறிந்து கொள்வர்.

#2797. ஐந்தெழுக்கள் பொருந்தும் ஐந்து இடங்கள்

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் ய என்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே.

திருந்திய ‘சி’கரத்தின் நீட்சி ஆகிய ‘சீ’ உடுக்கையை உதறிய கரத்தினை இருப்பிடம் ஆகக் கொண்டது.
அருந்தவத்தினரை “வா” என்று அன்புடன் அழைத்து அணைத்துக் கொள்வது மலர் போன்ற இடக்கையினை இடமாக கொண்டது.
பொருந்திய ‘ய’கரம் அவன் பொற்கரத்தைத் தான் பொருந்தும் இடமாகக் கொள்ளும்.
திருத்துகின்ற ‘ந’கரம் பொருந்தும் இடம் அக்கினியை ஏந்திய இடக் கரம் ஆகும்.
மலத்தை அடக்க முயலகன் மீது பொருந்திய திருவடி ‘ம’கரம் பொருந்து இடம் ஆகும்.
 

Latest posts

Latest ads

Back
Top