• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

13. ஊழ்


சீவனின் கருமங்களின் இருவினைப் பயன்கள் சீவனை வந்து அடைவது.

#2847. தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்!

#2848. நான்முன்னம் செய்ததே நன்னில மானதே

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே

சீவன்கள் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் அவரவர் செய்த வினைகளினால் மட்டுமே அமைகின்றன. இறைவன் சிவன் இவற்றைச் சீவன்களுக்காக முன்பே அமைத்து விடவில்லை. அந்தத் தலைவனை நான் நோக்கிய போது, நான் முன்னம் செய்த தவம் என்னைச் சென்னியின் வழியே செலுத்தி, எனக்கு உன்னதமான இடத்தைத் தந்தது.
 
ஒன்பதாம் தந்திரம்

13. ஊழ்


#2849. நந்தியை என் உள்ளம் பிரியகில்லாவே.

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.

ஆற்றில் வந்து சேரும் நுண்மையான மணல் அந்த ஆற்றால் சுமக்கப்படுவதில்லை. பொங்கி வரும் ஆற்று வெள்ளம் மேடுகளைப் பள்ளங்கள் ஆக்கலாம். பள்ளங்களை மேடுகள் ஆக்கலாம். அது போன்றே ஒருவன் செய்த நல்வினைகள், தீவினைகள் இவற்றின் பயன்கள் அவனையே வந்து சேரும். நீறு அணிந்த இறைவன் சிவனையே நான் பெறும் பேறாகக் கருதி நான் அவனை விட்டு விலகாமல் இருப்பேன்.

#2850. நாதனை நாடுவன் நானே.

வான்நின்று இடிக்கில்என்? மாகடல் பொங்கில்என்?
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்?
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்?
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.

வானம் இடிந்து விழுந்தால் தான் என்ன? அலைகடல் பொங்கினால் தான் என்ன? காட்டுத்தீயினால் உடல் வெந்து அழிந்து போனால் தான் என்ன? சண்டமாருதம் பெரும் அழிவைப் ஏற்படுத்தினால் தான் என்ன? நான் அவற்றைச் சற்றும் பொருட்படுத்த மாட்டேன். நான் என் நாதனையே எப்போதும் வழுவாமல் நாடுவேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

13. ஊழ்


#2851. ஞானத்து உழவினை நான் உழுவேனே

ஆனை துரக்கிலென்? அம்பூடு அறுக்கிலென்?
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்?
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே.

மதயானை என்னைத் துரத்தினால் தான் என்ன? கூரிய அம்பு என்னைத் துளைத்தால் தான் என்ன? காட்டுப் புலி என்னை சுற்றி வளைத்தால் தான் என்ன? ஞான பூமியில் ஞானத்தை தலைவன் ஆகிய எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதிலிருந்து நான் வழுவ மாட்டேன்.

#2852. பாடது நந்தி பரிசறி வார்க்கே

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே.

சீவனுக்கு கிடைத்த உடல் கெட்டுவிட்டால் மற்றொரு நல்ல உடலை வழங்குவதற்கு இறைவன் இருக்கின்றான். அதிக மழை அதிக வறட்சி நிலவும் நாட்டை விட்டு விட்டு வேறு நாடு சென்று பிழைப்பர் மனிதர்கள். குடியேறிய வீடு பழுது பட்டால் வேறு வீட்டுக்கு குடியேறுவது போல சீவன் ஓர் உடலை விட்டுவிட்டு வேறு ஓர் உடலை எடுத்துக் கொள்ளும். சிவஞானம் பெற்றவர்கள் இதனை நன்கு அறிந்து கொள்வார்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

14. சிவ தரிசனம்
சிவன் சீவனுக்குக் காட்சி தருவது!

#2853. சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

சிவனையே எண்ணிக் கொண்டு இருப்பவருக்குச் சிந்தை வேறு, சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரின் உள்ளத்தின் உள்ளே சிவன் வெளிப்பட்டு அருள்வான். சிந்தையைத் தெளிவிக்கும் சிவ ஞானத்தால் சிந்தை தெளிந்தவர்களின் சிந்தையின் உள்ளே சிவன் இருப்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

14. சிவ தரிசனம்


#2854. வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

சொற்களைக் கடந்தவன் சிவன்; மனத்தினைக் கடந்தவன் சிவன்; என்றும் மறைகள் உரைக்கும் மறை நாயகன் சிவன். அவன் அருளை நாடி அவனையே நோக்குங்கள். நீங்கள் நோக்கும் அந்தப் பொருள் மிகவும் நுண்மையானது. அதற்குப் போக்கும், வரவும் இல்லை; அழிவும், கேடும் இல்லை. இங்கனம் சிவனை ஆராய்ந்து தேடுபவர்களுக்கு அவனே தேடும் பொருளாவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

14. சிவ தரிசனம்


#2855. அரனாய் அருள் புரிந்தான்!

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற்ற ஒண்சுடர் தானாய்த்
தரனாய் தனதென ஆறுஅறிய வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பரனாகியவன் சிவன்; பராபரன் ஆகியவன் சிவன்; யாண்டும் பரவிய தன்மையைக் கடந்து சென்று பேரறிவும் பேராற்றலும் பொருந்தியவன் சிவன். மறைக்கப்படாத ஒளியுடன் சுடர் விடும் பரஞ்சோதி அவன். அரனே அனைத்துக்கும் ஆதாரம் ஆகநின்றாலும், அரன் னைத்து சீவர்களாலும் அறியப்படாதவனாகவும் இருக்கின்றான். அறிய ஒண்ணாத அரனாக இருந்தாலும், அரன் உயிர்களுக்கு அரணாக நின்று அருள் புரிகின்றான்
 
ஒன்பதாம் தந்திரம்

15. சிவசொரூப தரிசனம்

சிவனின் இயல்புநிலை ஆகிய சத்து, சித்து, ஆனந்தம் என்னும் மூன்றையும் சீவன் தானும் உணருவது.

#2856. வேதமும் ஓதும் சொரூபி

ஓதும் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.

ஓதுகின்ற மயிர்க்கால்கள் தோறும் அமுது ஊறிடும்; இன்பம் பொங்கும்; உள்ளும் புறமும் இடையறாத ஆனந்தம் தோன்றும்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சொரூபங்களையும் கடந்த, மறைகள் ஓதும் சிவனின் சொரூபத்தின் மேன்மை இவை ஆகும்!

#2857. மலர் கந்தம் துன்னி நின்றான்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணரும் அவனே புலவி அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

சீவர்களின் உணர்வும் சிவனே. அந்த உணர்வை வெளிப்படுத்தும் உயிரும் அவனே! உயிர்கள் புணரும்படிக் கலவி செய்விப்பவனும் சிவனே. அவைகள் மாறுபடுமாறு புலவி செய்விப்பவனும் அவனே! அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் சிவனை இத்தன்மையன் என்று வரையத்துக் கூற முடியாது. அவன் உடலில் ஆறு ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களின் நறுமணத்தால் பொருந்தி உள்ளான்.
 
ஒன்பதாம் தந்திரம்

15. சிவசொரூப தரிசனம்


#2858. மறையவன் மாதவன் சிவன்

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே.

ஆதாரத் தாமரைகளில் பொருந்தி இருக்கும் சிவனின் சன்னதியில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது சிவனே உங்கள் உள்ளக் கிடக்கைகளை அறிந்து கொண்டு நிறைவேற்றுவான். அவன் தேவ வடிவானவன். அரிய தவத்தினால் அறியப்படுபவன்; சீவனின் சென்னியில் நின்று கொண்டு அதன் சிந்தயைத் தெளிவிப்பவனும் சிவனே!

#2859. பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தி

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தேனே.

ஈசன் திருவருளால் விளங்கப் பெற்ற என் அகக்கண்களை நான் விழித்து நோக்கினேன். நோக்கியபோது என்னுள் நிலைபெற்ற சோதியும், ஒப்பற்ற தலைவனும் ஆகிய பொன்னார் மேனியன், புரிசடை உடைய சிவன் என்னிடம் வந்து பொருந்தினான். நான் அறிவு மயமானவன் என்று எனக்கு உணர்த்தினான்.
 
ஒன்பதாம் தந்திரம்

15. சிவசொரூப தரிசனம்


#2860. உய்த்த துரியத்து உறுபே ரொளியே.

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே.

சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று வடிவங்களுடன் இருப்பவன் சிவன். தனிப்பொருளாகவும் இருப்பவன் சிவன். முக்குணங்களின் வசப்பட்ட சீவனிடம், சிவானந்தத்தைத் தரும் அவன் பேரொளி சென்று பொருந்தாது. சீவன் நிர்குணன் ஆகும் பொழுது தூய்மை அடையும். பிரம்ம துரியத்தில் விளங்கும். சீவனின் அந்த பிரம்ம துரியத்தில் சிவன் பேரொளியாகச் சுடர் விடுவான்.

#2861. ஆனந்தத்து அப்புறத்தானே.

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.

சிவன் வெறும் பரன் மட்டும் அல்லன்; சிவன் உயர்ந்த பராபரன் மட்டும் அல்லன்; சிவன் சீவனின் அறிவாற்றலால் அடையப்படுபவன் அல்லன்; சிவன் சீவனின் சென்னி மேல் விளங்கும் ஒளிமண்டலம் மட்டும் அல்லன்; சிவன் அனைத்தையும் தரிப்பவன் மட்டும் அல்லன்; இவைகளாக இருப்பவனும் சிவன் தான்! இவைகள் மட்டுமே அல்ல என்று இருப்பவனும் சிவன் தான்! இன்பத்தைத் தரும் அரன் மட்டும் அல்லன் சிவன். அவன் ஆனந்தத்துக்கு அப்பாற்பட்டவன்!
 
ஒன்பதாம் தந்திரம்

15. சிவசொரூப தரிசனம்


#2862. சுகானந்த போதரே.

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே.

முத்தியும், சித்தியும் தரவல்ல சிவஞானம் கைக் கூடியவர்கள் எல்லையில்லாத பக்தியில் பொருந்துவர்; அவர்கள் பரமாகும் தன்மை அடைவர்; அவர்கள் சக்தியில் நிலை பெற்றவுடன் அவர்களுடன் சிவன் பொருந்துவான். இத்தகையவர்கள் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து இருப்பர்.

#2863. உரைப்பது எவ்வாறே?

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.

சீவனின் துரியாதீதம் என்னும் நிலை சொற்களுக்கு அப்பாற்பட்ட பாழ்நிலை ஆகும். இந்த அரிய துரியாதீதத்தை சீவன் அடைந்தவுடன்; விரித்தலும் குவித்தலும் இல்லாத சீவனின் மனம் சிந்திக்கும் திறனை இழந்துவிடும். அப்போது அங்கு நினைப்போ மாறப்போ இராது. மனம் தத்துவங்களுடன் கொண்ட தொடர்பை இழந்து, தன் உருவம் அழிந்துவிட்ட அந்த நிலையைச் சொற்களால் கூறவும் இயலுமோ?
 
ஒன்பதாம் தந்திரம்

16. முத்திபேதம், கர்மநிர்வாணம்

முத்தி பேதம் = முத்தி நிலைகளின் வகைகள்
கர்ம நிர்வாணம் = சீவன் தன் செயல் அறுதல்

#2864. நிர்வாண நிலை பிறக்கும்

ஓதிய முத்தியடைவே உயிர்பரம்
பேதமில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.

மறைகள் கூறும் வீடுபேறு என்பது என்ன? சீவன் பரம் ஆகிச் சிவவடிவத்தில் இலயம் அடையும். அப்போது துரிய நிலையில் முறையே சீவன், பரம், சிவன் என்ற மூன்றும் நன்கு பொருந்தி விளங்கும். சீவ வடிவமாகிய பரம் சிவ வடிவத்துடன் பொருந்தும். அந்த நிலையில் குற்றமற்ற நிர்வாண நிலை பிறக்கும்.

#2865. பிதற்று ஒழிவர்!

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

உலகப் பற்றுக்களைத் துறந்தவர்கள் பற்றி நிற்பது பரம்பொருளாகிய நம் சிவபெருமானை. கல்வி கற்றுத் தேர்ந்து அதன் முடிவாக சிவஞானத்தை அடைந்தவர் கருதுவது கண்ணுதலோன் ஆகிய சிவபெருமானை. உற்றம் சுற்றம் அற்றவர்கள் சுற்றி நிற்பது சோதியாகிய என் சிவபெருமானையே. அத்தகைய சிவ பெருமானை அடைந்து அவனுடன் பொருந்தியவர்கள் வீண் பிதற்றல் ஒழிந்து மோன நிலையை அடைவர்!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


ஞான மொழிகளை மறைவாக உரைத்தல்.

#2866. மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

மனிதனின் உடல் ஒரு சூதாடும் பலகையைப் போன்றது. ஐம்பொறிகள் சூதாடும் கருவிகள் ஆகும். இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றும் அதன் கண்கள் ஆகும். விஷய சுகத்தை நாடும் சீவன் ஐம்பத்தொன்று எழுத்துக்களை உடைய ஆறு ஆதாரச் சக்கரங்களின் இருந்து கொண்டு செயல்படும். சூதாடும் கருவியாகிய உடலில் சூதாடுவதற்கு ஒரு சீவன் வேண்டும். உலகைப் பற்றிக் கொண்டு இருக்கின்ற சீவன் சிவத்தை உணராது. சிவனைப் பற்றிக் கொண்டு இருக்கின்ற சீவன் உலகை அறியாது.

#2867. ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

பரம்பொருளாகிய சிவத்தை அடைவிக்கும் தூய நெறி என்னும் பயிர் முளைக்காதபடி அங்கு ஆணவம், கன்மம், மாயை என்னும் களைச்செடிகள் மண்டிக் கிடந்தன. இந்தக் களைகளை அழித்துச் சிவம் என்ற பயிரை வளர்க்கும் வகை அறிந்தவர் எவரும் இல்லை. ஆணவம் முதலிய களைகளை அழித்துச் சிவம் என்னும் பயிரை வளர்ப்பவர்களிடம் என் உள்ளம் ஊறி அன்பைப் பெருக்குகின்றது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2868. கடல் ஏழுங் கண்டேனே.

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏறலு றேன்கடல் ஏழுங்கண் டேனே.

ஆறு ஆதாரங்களுக்கு கீழே அமைந்துள்ள மூலாதாரத்தில் நான்கு இதழ்கள் கொண்ட ஒரு நீண்ட பனைமரம் உள்ளது. பக்குவம் அடையாத சீவனில் இது அறியாமை என்ற இருள் முகமாக இருந்து தொழிற்படும். ஏறுவதற்கு அரிய சுழுமுனை என்ற ஏணியில் ஏறி நான் அந்தப் பனையின் உச்சியை அடைந்தேன். அங்கு உடலின் ஆதாரங்களாகிய ஏழு கமலங்கள் கூடி ஒன்றாக ஒளிவீசுவதைக் கண்டேன்.

#2869. பழுத்தது வாழைக் கனியே.

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

ஞான சாதனை என்னும் கத்தரிச் செடியின் விதையை நான் விதைத்தேன். அதிலிருந்து வைராக்கியம் என்ற பாகற்கொடி முளைத்தது. தத்துவ ஆராய்ச்சி என்ற புழுதியைக் கிளறினேன். அதனால் சகசிரதளத்தில் ஓர் ஒளி மண்டலம் தோன்றியது. மனித உடலின் ஆதாரத் சக்கரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஐம்பத்தோரு எழுத்துக்களும் விடை பெற்றுச் சென்றன. கிடைப்பதற்கு அரிய உயர்ந்த சிவக் கனி எனக்கு கிடைத்தது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2870. மையணி கண்டன் மனம் பெறுமின்!

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.

ஐம் பெரும் பூதங்களின் கூட்டுறவின் பயனாக உண்டாகும் விதையில், சீவனின் ஆன்மாவை விளங்கச் செய்கின்ற விந்து மண்டலம் உள்ளது. ஆயினும் இந்த விந்து மண்டலம் செயல்படுகின்ற முறையை அறிந்தவர் எவரும் இல்லை. மையணி கண்டனிடன் சீவன் மனம் பதித்தால், தன் ஆன்மாவை விளக்கும் ஒளி மண்டலத்தை அது உறுதியாகச் சென்று அடைய முடியும்.

#2871. வெள்ளச் செய்யாகி விளைந்தது

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

சுழுத்தி என்ற பயன் இல்லாத பள்ளமான நிலம் ஒன்று உள்ளது. கனவு, நனவு என்று சிவப்பயிர் விளையாத பாழ் நிலங்கள் இரண்டு உள்ளன. கள்ளனைப் போல மறைந்து இருக்கும் ஆன்மா தன்னைக் குறித்த உண்மைகளை அறியாமல் இந்த மூன்று பாழ் நிலங்களாகிய மூன்று அவத்தைகளில் உழன்றது. தன் உண்மை நிலையை அறிந்து கொண்டு, உள்ளம் என்ற நிலத்தைச் சீர்படுத்தி, சிவத் தொண்டு என்ற உழவினைச் செய்தால், வெள்ளமாகப் பாய்ந்து வருகின்ற சிவானந்தம் சீவனுக்கு முத்தி என்ற விளைச்சளைத் தரும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2872. களர் உழுவாரே!

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே.

இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்றும் உழுகின்ற ஏர்கள் ஆகும். இவை உழுகின்ற நிலம் முக்கோண வடிவில் உள்ள மூலாதாரம் என்ற நிலம். உழுது முடித்த பின்பு அவைகள் சுழுமுனையில் முதுகுத் தண்டு என்ற கயிற்றால் கட்டப் படும். ஞான சாதனை செய்கின்றவர்கள் நாக்குக்கு மேலே உள்ள பிரம்மப் புழையின் வழியே சிரசை அடைந்து அங்குள்ள சகசிரதளம் என்னும் வயலை உழ மாட்டார்கள். மூச்சுக்கு காற்றை அடக்கி ஹடயோகம் செய்து அவர்கள் விளைச்சலே இல்லாத நிலத்தில் வீணே பயிர் செய்கிறார்களே! இதனால் என்ன பயன் ?

#2873. கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள்

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையோன் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.

உடலில் ஆதாரங்கள் என்ற ஏழு கிணறுகள் உள்ளன. அவற்றில் நீர் இறைப்பதற்கு இடைகலை, பிங்கலை என்ற இரண்டு ஏற்றங்கள் உள்ளன. மூத்தவன் (சந்திரகலை) கிணற்றில் இருந்து நீர் இறைக்கின்றான். இளையவன் (கதிரவக்கலை) அந்த நீரைப் பாய்ச்சுகின்றான். அந்த நீர் பாத்தி (அக்கினிக் கலை) வழியாக வயலுக்கு (சகசிரதளத்துக்குப்) பாயாமல் (காம வேட்கைகளைத் தணிப்பதில்) வீணாகிறது. இது விலைமகள் வளர்த்த கோழி அவன் ஆசைநாயகனுக்கு உணவாக மாறி அழிந்து விடுவதைப் போன்றது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2874. பட்டிப் பசுவே வாய்த்ததே.

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

ஆன்ம தத்துவங்கள் என்ற இருபத்து நான்கு பசுக்கள் தம்மை நன்கு மேய்ப்பவர்கள் இல்லாமல் திரிகின்றன. இவை பால் தராத பட்டிப் பசுக்கள் ஆகும். வித்தியா தத்துவங்கள் என்னும் குட்டிப் பசுக்கள் ஏழும், சிவதத்துவங்கள் என்ற குட்டிப் பசுக்கள் ஐந்தும் நிரம்பப் பாலைத் தரக் கூடியவை. என்றாலும் ஆன்மாவாகிய பனவனுக்குப் பால் தராத பட்டிப் பசுக்கள் தாம் வந்து வாய்த்தன!

#2875. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.

பால் கறக்காத பசுக்கள் என்று இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள் உள்ளன. பால் ஊறும் சிவத்துவங்கள் என்ற ஐந்து பசுக்களும் உள்ளன. இவை தரும் பாலில் ஒரே ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. ஆனால் சீவன் இடைகலை, பிங்கலை என்ற காற்றுப் பசுக்களைக் கறந்து உண்ணும் போது, அவற்றிலிருந்து மாறுபட்ட பிற சுத்த தத்துவங்களாகிய பசுக்களை ஆன்மாவால் உணர்ந்து கொள்ள முடியாது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2876. மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

உயிரின் மனமண்டலத்தில், சென்னியில் உள்ள நிமிர்ந்த சகசிர தளத்தில், அரும்பு போலத் தோன்றிப் பின் செம்மையாக படர்ந்தது செம்மையான நாதம். மெய்ப்பொருள் ஆன சிவனைத் தனக்குள் நிலைபெறச் செய்த சீவன், சிவனைத் தனக்கு உரிமை ஆக்கிக் கொண்டது.

#2877. வெள்ளரி வித்து

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

உடல் என்னும் வயலில், துன்பம் அளிக்கின்ற வினைப் பயன்கள் என்னும் பயிர் விளையும். இங்கு கீழ் முகமாகச் செல்லும் உயிர் மூச்சின் வழியை அடைக்க வேண்டும். அதை மேல் முகமாக்க வேண்டும். இதற்குச் சிவ தத்துவம் என்ற கறவை மாட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது சென்னி மேல் விளங்குகின்ற விந்து மண்டலம் சிவப் பயிரை விளைவிக்கின்ற வித்தாக மாறிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2878. செந்நெல் அறுக்கின்ற வாறே.

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

இடைகலை ஆகிய சந்திர கலையைத் தூண்டிவிட வேண்டும்; சிவ சிந்தனை என்ற எருவினைத் தூவி விட வேண்டும்; உணர்வு என்னும் விதையை அங்கு விதைக்க வேண்டும். இடைகலை, பிங்கலை என்ற இரு காளைகளைச் சேர்த்துக் கொண்டு உயிர் மூச்சின் கதியை மாற்ற வேண்டும்; தொண்டைச் சக்கரம் ஆகிய விசுத்தி என்னும் மிடாவில் ஞான சாதனை என்ற சோற்றைப் பதப்படுத்த வேண்டும். அதை மென்மையாக உண்ண வேண்டும். இடைகலை, பிங்கலை என்னும் இரு கிடாக்களைக் கொண்டு, உடல் என்னும் வயலில், சிவபதம் என்னும் செந்நெல்லை விளைவிக்கும் விதம் இதுவே.

#2879. விளைந்து கிடந்தது மேவு முக்காதமே

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.

சிவத்தை அடையும் வழியினை அறிந்து கொண்டவருக்குச் சிவம் நன்கு விளங்கும். அன்னாருக்கு விந்து மண்டலம் ஒரு காதத் தொலைவுக்குப் பெருகிக் கிடைக்கும். சிவத்தின் நினைவாகவே இருந்து, சிவத்தை அடைகின்ற நெறியினை அறிந்து கொண்டு, அதன் வழியே சிவத்தினை அடைபவருக்கு அது மும்மடங்கு ஆனந்தத்தைத் தரும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2880. வளர் இளவஞ்சியின் மாய்தலும் ஆமே.

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருத்திலும் இல்லைக்
களர்உழு வார்கள் களரில் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.

அடயோகம் ஒரு களர் நிலம் போன்றது. அதில் இருந்து கொண்டு சாதனை என்ற உழவினைச் செய்கின்றவர்களின் உள்ளக் கிடக்கையை நாம் அறியவில்லை. “ஏன் களர் நிலத்தில் உழுது பயிர் செய்கின்றோம்?” என்று அவர்களும் சிந்தித்தது இல்லை. செய்யும் செயலைப் பற்றிய ஞானம் சிறிதும் இன்றி, இவ்வாறு வீண் சாதனையில் தன் காலத்தைக் கழிப்பவர்கள் களர் நிலத்தில் தோன்றி வளரும் இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி ஆகிய குண்டலினி சக்தியின் வயப்பட்டு காமத்துக்கு இரையாகி மாய்ந்து போவர்.

#2881. இல்லத்து இனிதிருந்தானே

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.

சீவனுக்குள் உள்ள சிவனின் நாதத்தைச் சீவனுக்கு விளங்கவிடாமல் வஞ்சனை செய்து தடுப்பது காமவாயு என்னும் ஒரு சிறு நரி. அது தங்கும் இடம் விந்துப்பை என்னும் கொட்டில். அந்தக் கொட்டிலில் ஏற்றிய சிவ அக்கினியில் சீவன் தன் ஆசா பாசங்களை இட்டு எரிக்க வேண்டும். நாத உபாசனை செய்ய வேண்டும். அப்போது நன்மை தரும் ஒளி பெருகும். அங்கு சக்தி தேவி வந்து பதிவாள். அவளுடன் சிவனும் வந்து அந்த உள்ளத்தில் குடியேறுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2882. அமிர்தம் பொழிய வைத்தானே.

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

தலை என்னும் மலையின் மீது அங்குள்ள ஒளிக் கதிர்கள் கனமழையைப் போலப் பரவும்.
பிராணன் என்ற மான்கன்று உயரத் தாவித் சீவனின் தலையின் மத்தியில் சென்று மோதும்.
அங்கு ஊர்த்துவ சகசிரதளம் என்ற ஆயிரம் இதழ்த் தாமைர ஒரு குலை போலப் பழுத்து நிற்கும்.
அந்தக் குலையில் இருந்து செழித்த சிவக்கனி கீழே உதிர்ந்து விடும்.
உதிர்ந்த சிவக்கனி கொல்லன் உலையில் உருக்கிய இருப்பு போன்று ஒளிரும்.
அது சீவனின் மார்புப் பிரதேசத்துக்கு மேலே அமுதத்தைப் பொழியும்

#2883. பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே.

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.

ஆன்மா என்னும் பார்ப்பானின் வீட்டில், ஐம்பொறிகள் என்ற ஐந்து பசுக்கள் உள்ளன.
அவைகளை மேய்ப்பவர் என்று யாரும் இல்லை. அதனால் அவை வெறித்துத் திரிகின்றன. அவைகளை மேய்ப்பதற்கு ஒருவர் இருந்து, அவற்றின் உலக இன்பம் என்ற வெறியும் அடங்கினால் அப்போது அந்த ஐந்து பசுக்களும் அந்தப் பார்ப்பானுக்குப் பேரின்பம் என்ற பாலைச் சொரியும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2884. காமம் அழிய ஞானம் ஒளிரும்

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பஞ்சப் பிராணன் என்ற ஐந்து காட்டுப் பசுக்கள், 24 ஆன்ம தத்துவங்களுடன், புருடன் நீங்கலாக மற்ற 6 வித்தியா தத்துவங்கள் சேர்ந்த முப்பது சிங்கங்கள்; குற்றமற்ற பக்தி மார்க்கங்கள் ஒன்பது; இவை அனைத்தும் சீவனுக்கு உரியனவாக அடங்கி விட்டால் அந்த சீவனின் உள்ளத்தில் காமம் முதலிய குறைகள் வளர்ச்சி அடையா. இந்த முறையில் தம் காமத்தை அழிப்பவர் தம் ஞான ஒளியை வளர்ப்பார்.

விளக்கம்

பஞ்சப் பிராணன்கள் 5 :-
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்

ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு:-
பஞ்ச பூதங்கள் ( நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி)…………………… 5
பஞ்ச தன்மாத்திரைகள் ( ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் )………….5
பஞ்ச ஞானேந்திரியங்கள் (கண், நாசி, நாவு, செவி, தோல்)…………..5
பஞ்ச கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாணி, பாதம், குய்யம், குதம்)….....5
அந்தக் கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் )…………………4

புருடன் நீங்கலாக வித்தியா தத்துவங்கள் ஆறு :-
1. காலம், 2. நியதி, 3. கலை, 4. வித்தை, 5. ராகம், 6 மாயம்

பக்தி மார்க்கங்கள் ஒன்பது :-
சிரவணம், கீர்த்தனை, ஸ்மரணம்,சேவை, அர்ச்சனை, அடிமை, வந்தனம், சாக்கியம், ஆன்ம நிவேதனம்

#2885. மலராத பூவின் மணம்

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே.

எழுதப் படாத மறைநூலில் ஒளிந்திருக்கும் பரம்பொருளைத் தெருளாத கன்னியாகிய குண்டலினி சக்தி சீவனின் சென்னியை அடைந்து எழுப்பினாள். அங்கு மலராத சகசிரதள மலரில் தேன் போன்றை ஆனந்தம் விளைந்தது. உடலுடன் பொருந்தி இருப்பதைத் துறந்து விட்ட ஆன்மா ஆகிய வண்டு அந்தத் தேனைப் பருகி இன்பத்தில் திளைத்தது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2886. வேகின்ற கூரை!

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

உடலில் இருந்து வெளியே செல்லும் அபான வாயுவும், உடலின் உள்ளே புகுகின்ற பிராணவாயுவும் ஒன்றாகக் கூடி இருக்கின்ற உடல் ஒரு நாவல் மரம் போன்றது. அது தருகின்ற நாவற் பழம் உலக இன்பம் என்னும் விஷய போகம். இதைச் சுவைக்கத் துடிப்பவர்கள் ஐம்பொறிகள் என்னும் ஐவர். உயிர் பிரிந்ததும் வெந்துவிடும் கூரை போன்ற மனித உடலில் இந்த ஐவரும் இங்கனம் மகிழ்ச்சியுடன் திளைக்கின்றனரே! என்ன இவற்றின் விந்தைச் செயற்பாடு!

#2887. மூங்கிலும், வேம்பும்!

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

சீவனின் உள்ளம் என்ற மூங்கில் முளையில் இருந்து வைராக்கியம் என்ற வேப்பமரம் வளர்ந்தது. அது முதுகுத்த தண்டு என்ற பனை மரத்தைச் சார்ந்து உள்ளது. அந்தப் பனை மரத்தின் கீழே குண்டலினி என்னும் பாம்பு சுருண்டு கிடக்கின்றது. சுருண்ட குண்டலினிப் பாம்பை எழுப்பிப் பனை மரத்தின் மேலே செலுத்தினால் சீவன் அமுதம் உண்டு மகிழலாம். அது நிகழாவிட்டால் வைராக்கியம் என்ற வேம்பு வெடித்து முற்றிலுமாக வீணாகிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2888. ஐவர் அமர்ந்து நின்றாரே

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈ ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே

தச நாடிகள் என்ற பத்துப் பருத்த புலிகளும்; ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், பஞ்சதன்மாத்திரைகள் என்ற பதினைந்து யானைகளும்; ஞானேந்திரியங்கள் என்று ஐந்து வித்தகர்களும், பத்து வாயுக்கள் என்னும் வினோதகர்ளும், முக்குணங்கள் என்ற மூவரும், மருத்துவர்கள் அறுவரும், பொருந்தி இருக்கும் மனித உடல் ஐந்து மாறுபட்ட நிலைகளில் அமையும்.

விளக்கம் :

1). பத்து நாடிகள்:
இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு

2). ஐம் பூதங்கள்:-
விண், மண், தீ, நீர், காற்று.

3). ஐந்து தன்மாத்திரைகள்:-
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

4). ஐந்து ஞானேந்திரியங்கள்:-
மெய், வாய், கண், மூக்கு, செவி,

5). பத்து வாயுக்கள் :-
பிராணன், அபானன், உதானன், சாமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்சயன்.

6). மருத்துவர் அறுவர்:-
கற்றல், பிதற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு.

7). ஆன்மாவின் ஐந்து நிலைகள்:-
நனவு, கனவு, சுழுத்தி, துரியம், துரியாதீதம்,

#2889. இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே.

மனித உடல் என்ற ஊர். அதில் உழவைச் செய்வது உசுவாசம், நிசுவாசம் என்ற இரண்டு எருதுகள். இந்த இரண்டு எருதுகளையும் செலுத்துபவன் சீவன் என்னும் ஒரே தொழும்பன். அந்தத் தொழும்பன் தன் நிலையை அறிந்து கொண்டு, இந்த இரண்டு கடாக்களையும் செயல்படாமல் நிறுத்தி விட்டால், அப்போது போக்கும் இன்றி, வரவும் இன்றி அந்த இரண்டு எருதுகளும் ஒரே எருதாக மாறிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2890. நித்தம் பொருது நிரம்பநின் றாரே.

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே.

விருப்பு, வெறுப்புக்களை அகற்றி மனம் என்ற நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். பக்தி என்ற வலையில் மனத்தைப் பொருத்த வேண்டும். பருத்தி போன்ற தூய வெண்ணிற ஒளியைத் தலையின் மேலே விளங்கச் செய்ய வேண்டும். அதுவே சீவனை முக்திக்கு அழைத்துச் செல்லும் ஏணியாகிவிடும். படைத்துக் காத்து அழிக்கும் மும் மூர்த்திகளின் பிடியில் உள்ள உடலையே தன் இடமாகக் கொண்டு சீவன் சாதனை செய்ய வேண்டும். அத்தகைய சீவர்கள் முழுமை பெற்று விளங்குவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2891. கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

உருவங்களும் அவற்றின் பொருட்களும்:-

கூகை = கோட்டான் = அறியாமை
பாம்பு = காமம்
கிளி = தர்மம்
பூஞை = பூனை = அதர்மம்
நாகணவாய்ப் பறவை = சிற்றறிவு
எலி = சீவன்

கோட்டான், பாம்பு, கிளி, பூனை, நாகணவாய்ப் பறவை இவை அனைத்தும் மனமண்டலத்தில் விரோதத்துடன் வாழ்ந்து வருகின்றன. நாகணவாய்ப் பறவையைக் கோட்டான் அணுகும்போது அதைக் கண்ட எலி சத்தம் எழுப்பி நாகணவாய்ப் பறவையை எச்சரிக்கை செய்யும்
 

Latest ads

Back
Top