வெள்ளியம்பலக்கூத்து.
திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
6. வெள்ளியம்பலக்கூத்து.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்
அருந்தவ முனிவர், பெருநில மன்னர்;
அமுது செய்து அருளுமாறு சிவன் வேண்ட,
தமது நியம நிஷ்டைகளைச் செய்யலாயினர்.
பொற்றாமரைக் குளத்தில் சென்று நீராடித்
தத்தம் நியமங்களை முடித்து வந்தனர்;
விருந்துண்ண அனைவரும் விரைந்தபோது,
வியாக்ரபாதர், பதஞ்சலி தயங்கி நின்றனர்!
“பொன்னம்பலத் திரு நடனம் காணாமல்
அன்னம் புசியோம் நாங்கள் அரசர்க்கரசே!
பொன்னார் மேனியர் நீரே கூறும் எமக்கு,
என்ன செய்வதென்று யாம் அறிகிலோம்!”
“பொன்னம்பலத் திரு நடனத்தை நீவீர்
மன்னுvபுகழ் மதுராபுரியிலேயே காண்பீர்!
முன்னர் தோன்றி விட்டதால் மதுராபுரி,
உன்னர்க்கரிய துவாதசாந்த ஸ்தானம்.
திருவாரூர் அமையும் உலகளாவிய
விராட் புருஷனது மூலாதாரமாக!
திருவானைக்காவே சுவாதிஷ்டானம்,
திருவண்ணாமலை மணிபூரகம் ஆகும்.
தில்லையம்பதி அவனது அனாஹதம்,
திருக்காளஹஸ்தியே அவனது விசுத்தி;
காசியே விராட்புருஷனது ஆக்ஞை;
கயிலையே அவனது பிரமரந்திரம்.”
இரு பெரு முனிவரும் சிவபெருமானும்,
அருகிலிருந்த திருக்கோவிலில் நுழைய,
இறைவனின் இச்சாசக்தியால் தோன்றியது
இந்திர விமானத்தின் கீழ் வெள்ளியம்பலம்!
மாணிக்கப்பீடம் கம்பீரமாக காட்சிதர,
ஆணிப்பொன் மேனியர் பீடத்தின் மேல்
காணர்க்கரிய அழகிய திருநடனம் ஆட,
கண்டு களித்தனர் அருந்தவ முனிவர்கள்.
கணத்தில் தோன்றின சிவகணங்கள்!
கணக்குடன் ஒலித்தது தண்ணுமை.
நந்திகேஸ்வரருடைய மத்தள வாத்யம்,
பின்னிப் பிணைந்தது தண்ணுமையோடு!
திருமால் முழக்கினர் அழகிய இடக்கை,
பிரமன் மனைவி சுருதி கூட்டி ஒலிக்க,
தும்புரு, நாரதர் இசைத்தனர் கீதங்கள்,
என்புருகும் ஓர் அற்புதத் தாண்டவம்!
வலக்கைகள் ஐந்தில் பற்றி இருந்தார்
சூலம், உடுக்கை, அம்பு, வாள், மழு!
இடக்கைகள் ஐந்தில் பற்றி இருந்தார்
விடநாகம், தீ, வில், கேடயம், கதை.
திரு நீலகண்டம், வெண்ணீற்று மேனி;
விரித்த சடைக்கற்றை, சங்குக்குண்டலம்,
கமல நயனங்கள் கருணை மழை பொழிய,
கச்சை ஆனது ஒரு கொடிய விஷ நாகம்.
மந்திரம், வேதம், தீச்சுடர் , சிலம்புகள்,
கங்கையுடன் அங்கு கலந்து ஒலித்திட,
“என்ன வரம் வேண்டும் உமக்கு?” என்று
பொன்னார் மேனியன் முனிவரை வினவ,
“இந்த வரம் ஒன்று தருவாய் இறைவா!
இந்த நடனம் என்றும் நிலைத்து நின்று,
பந்த பாசம் விலக்க வேண்டும் அன்பரின்!”
அந்த வரமே தந்தான் சுந்தரபாண்டியசிவன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
https://kayarevee.wordpress.com/திருவிளையாடல்கள்-முதற்ப/6-வெள்ளியம்பலக்கூத்து/