எங்கள் அப்பா போல எங்கள் அப்பா மட்டுமே!
பெயர் ராமன்! ராமச்சந்திரனின் சுருக்கமோ?
பெயருக்கு ஏற்றபடியே நான்கு சகோதரர்கள்!
"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று,
தந்தையைப் பார்த்தே கற்றுக் கொண்டு விட்டோம்!
அகன்ற, ஆன்ற, கருணை பொழியும் விழிகள்!
அறிவை
ப் பறைசாற்றும் அகன்றதோர் நெற்றி!
கண்களில் மட்டும் ராமன் அல்ல அவர்!
கலரிலும் அந்த ராமபிரானே தான் இவர்!
பால் போன்ற என் அன்னையாருக்கும், நல்ல
"பேஷ் பேஷ் காபி" டிகாக்க்ஷன் அப்பாவுக்கும்,
காபிக் கலரில் பிறந்துள்ளோம் நாங்கள்!
கலரைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை!
அம்மாவின் அழகைக் கோட்டைவிட்ட நாங்கள்,
அப்பாவின் I.Q வைக் கோட்டை விடவில்லை!
முதல் வகுப்பிலிருந்து மருத்துவப்பட்டம்வரை
முதல் மாணவன்! மாதச் சம்பளம் வாங்கியவர்!
ஆசிரியர்களுக்கு அளிப்பது போலவே அன்று
அரிய மாணவர்களுக்கும் அளித்து வந்தனர்!
அப்பாவுக்கும், அடுத்த தம்பிக்குமே இடைவெளி
பத்து வருடங்களுக்கு மேலேயே இருக்கும்!
தம்பிகளைத் தன் குழந்தைகளாகவே எண்ணி,
அம்பிகளுக்கு வேண்டியவை எல்லாமே செய்தார்.
பிறகு நாங்கள் ஐவர், அதில் நால்வர் பெண்கள்!
கிறங்காமல் உறுதியாக நின்று கரை ஏற்றினார்.
பொன்னுக்கும், பொருளுக்கும், மயங்கியதே இல்லை!
"பொன்னையும், பொருளையும், உண்ண முடியுமா?"
தனக்கென்று நேரமும் இல்லை, காலமும் இல்லை,
எந்நேரமும் எவருக்கும் சிகித்சை செய்யத் தயார்!
பல்லை பிடுங்க வேண்டுமா? கடின பிரசவ கேசா?
சில்லறை ஆபரேஷன்களா? குட்டி விபத்துக்களா?
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருந்த
செவ்விய திறனைக் கண்டு அதிலேயே நன்கு
அவரை ஊக்குவித்து உற்சாகமும் கொடுப்பார்!
அவர் அவசரப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை.
பொறுமையாகவும் , கனிவாகவும், நேரத்தைப்
பொன்போலப் போற்றியும் வாழ்ந்து வந்தவர்.
அவர் குலுங்கி அழுதது எப்போது தெரியுமா?
அவரது 85 வயது தந்தை இறந்த போது தான்!
தன் ரத்தத்தையே தந்தைக்குச் செலுத்தியும்,
தன்னால் அவரைக் காப்பாற்ற முடியாததால்!
பொன்னையும், பொருளையும் மதிக்காதவர்;
அன்பையும், ஆசியையும் வாரிக் குவித்தார்!
இன்று நாங்கள் இருக்கும் நிலைமைக்கு அவர்
அன்று வாரிக் குவித்த ஆசிகளே முழுக்காரணம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதரை :angel:
தெய்வத் தந்தையாகப் பெற்ற பாக்கியசாலிகள்!
ray2: