• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

நாடும், வீடும்...

நாட்டை ஆண்டு, மக்களை மேலோங்கச் செய்பவன் நல்ல அரசன். வீட்டைப் பராமரிக்கவும், சுற்றத்தை

மேம்படுத்தவும் உழைப்பவன், நல்ல இல்லத்தரசன். இல்லத்தரசிகளுக்கும் இவ்வாறு ஆளும் திறமை இருக்க

வேண்டும். அப்படி இருந்தால், வீடு நலம் பெறும். எல்லா வீடுகளும் நலம் பெற்றால், நாடே நலம் பெறும் அன்றோ?

:first:


 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 304

துன்பங்கள் ...


தம் குடும்பத்தைக் காத்து, உயரச் செய்திட, ஒருவர்
தம் வாழ்வில் பற்பல துயரங்களை அடைந்திடுவார்.

துன்பத்துக்கே கொள்கலமாக இருப்பதைப் போலவே,
துன்பங்களின் இருப்பிடமாக அவரும் வாழ்ந்திடுவார்.

'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு', எனக் கேட்கின்றார் அவர்.

குடும்பத்தில் வரும் துயரங்களே இப்படி வருத்தினால்,
இடும்பைகள் எத்தனை எதிர்கொள்வான், ஓர் அரசன்?

வல்லமையான ஒருவன், வரும் துன்பங்கள் துடைக்க
இல்லாது போய்விட்டால், அந்தக் குடியை, எதிர் வரும்

துன்பங்கள் வென்று வீழ்த்திவிடும், என்ற உண்மையை,
தன் குறட்பா ஒன்றில் வலியுறுத்துகின்றார், வள்ளுவர்.

'இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி', என்பது அந்தக் குறட்பா.

துன்பங்கள் தாங்கும் சக்தியை நாம் வளர்த்திடுவோம்;
துன்பங்கள் தாங்கி, நம் குடியை உயர்த்த முனைவோம்!

:cheer2:
 
வல்லமை வளர்ப்போம்!

வல்லவராக இருப்போர்தான் வீட்டையும் நாட்டையும் மேம்படுத்த முடியும் என்பதை வள்ளுவம் உரைக்கிறது.

துன்பம் இல்லாத வாழ்க்கை கிடைப்பது மிக அரிது! எந்தத் துன்பம் வந்தாலும், அதை எதிர்கொண்டு, வெல்லும்

ஆற்றலை நாம் வளர்க்க வேண்டும். அப்போது, நாம் மட்டும் உயராது, நம் சுற்றத்தையே உயர்த்த முடியும்.

:ballchain: . . . :peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 305

'
உண்டி முதற்றே உலகு', என்று நாம் அறிவோம்; இந்த

உணவைத் தர, உழவுத் தொழிலே இன்றியமையாதது!

உழவின் சிறப்பை உலகம் அறியுமாறு, குறட்பாக்களை
எழுதியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை, தமது நூலிலே!

உழவுத் தொழிலின் சிறப்பை அறிந்துகொள்ள, அது ஓர்
உழலும் வேலைதான் என அறிவிக்கின்றார், முதலிலே!

தொழில்கள் பல செய்து உலகம் சுழன்றாலும், உழவுத்
தொழிலின் பின்னேதான் சுற்றிட வேண்டும்; அதனால்

உழலும் வேலையான உழவுத் தொழில் கடினமாயினும்,
சுழலும் உலகிலே, அதுவே தலையாய பணியும் ஆகும்!

'சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை', என்பது குறள்.

பல்வேறு தொழில்களைப் புரிவோரின் பசிப் பிணியை,
நல்ல விதமாகப் போக்கி, தாங்குவது உழவுத் தொழில்.

எனவே உலகத்தாருக்கு ஓர் அச்சாணிபோல இருப்பது
உழவுத் தொழில், என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

'உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து', என்கின்றார்.

உழவின் சிறப்பை அறிந்து, அந்தத் தொழிலைப் போற்றி,
உலகில் உழவரின் பெருமைகளை நிலை நாட்டுவோம்!

:cheer2:
 

பாரதி பாடினார்...

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்', என்று

உழவின் பெருமையைக் காட்டும் விதமாக, மற்ற எல்லாத்
தொழிலின் முன்னே அதனை வைக்கின்றார், பாரதியார்!

:first: . . . :thumb:
 
பெயர்ப் பொருத்தம்...

tower.jpg


இந்தியாவில் உயரக் கட்டிடம் கட்ட, ஓர்
இந்தியர் விழைந்து, கட்டிடமும் கட்டிட,

வானை நோக்கி நேரே செல்லமால், அது
தானே சாய்ந்து சரிந்து நிற்க, நம் நாட்டின்

பற்பல விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு,
சற்றும் அதை சரியாக்க முடியாது போக,

வெளிநாட்டினரை அழைத்தால், உடனே
துளியும் தாமதமின்றிச் செய்வார் என்று,

சீன நாட்டின் தலைசிறந்தவரை அழைக்க,
சீனர் பாடுபட்டும், வேலை முடியாது போக,

'சாஞ்சிகிசே' என்று அதற்கு இனிய பெயர்,
சாய்ந்ததால், வைத்துச் சென்றுவிட்டார்!

போனால் போகட்டும்! ஜப்பான் நாட்டிலே
போனால், விற்பன்னர் கிடைப்பார் என்று,

ஜப்பானியர் ஒருவரை அழைக்க, முயன்ற
ஜப்பானியர் தோல்வியைத் தழுவிய பின்,

நிற்குமோ, நிற்காதோ அது என்று பயந்து,
'நிகுமோ-நிகாதோ' எனப் பெயர் இட்டார்!

குறை இருந்தாலும், பல ஆண்டுகள் அது
இறைவன் தயவால், நிற்க வேண்டுவோம்!


:pray:


 
பாராட்டுக்கு நன்றி, ஸ்ரீ! முன்பு எழுதிய பக்கங்களையும் படியுங்கள்.... :ranger:
 
கண்டிப்பாக. மேலும் மேலும் படிக்க ஆர்வம் மிகுதியாக எழுகிறது. தொடர்ந்த்து படிக்க முயல்கிறேன்.
-- நன்றி.
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 306

உழவின் உயர்வு ...


உழவுத் தொழிலின் உயர்வினைக் காட்ட, இன்னும்
எழுதுகின்றார் திருவள்ளுவர், சில குறட்பாக்களை.

உழுது உண்டு வாழ்பவரே உயர்ந்தவர்; அவர்களைத்
தொழுது உண்டு மற்றவர், உழவர் பின் சென்றிடுவர்.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்', என்பது குறட்பா.

அரசரின் குடை நிழலிலே குடிமக்கள் வாழ்ந்திடுவார்;
அரசர் பலரின் குடை, உழவர் குடை நிழலில் இருக்கும்!

உயர்ந்த பல அரசர்களையும், தனக்குக் கீழே வைப்பது,
உயர்ந்த உழவுத் தொழிலின் சிறப்பெனக் கூறுகின்றார்.

'பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்', என்பது அவர் வாக்கு.

இரவாமல் வாழ்க்கை நடத்தித் தம்மிடம் கையேந்தி
வருவோருக்கும், மறைக்காது உணவிடுவர் உழவர்.

'இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்', என்கின்றார்.

அரசாட்சியினும் உயர்ந்த உழவைப் போற்றுவோம்;
இரவாமல் வாழும் வாழ்வை, உழவரிடம் கற்போம்!
 

வள்ளுவம் அறிவீரோ?


இரு புலவர் பெருமக்கள், பட்டிமண்டபத்தில்

திருவள்ளுவரை மேற்கோள் காட்டுகிறவர்.

சின்னப் பணத் தட்டுப்பாடில் ஒருவர் இருக்க,
எண்ணத்தில் வந்தார் இரண்டாவது புலவர்.

அவரை அணுக, அவரும் அன்புடன் உதவிட,
அவரை மறந்தார் முதலாமவர், அதன் பின்!

நாட்கள் பல சென்றுவிட, உதவிய புலவர்,
'நாங்கள் வள்ளுவத்தில் ஊறியவர்கள்; ஒரு

அழகிய குறளில் அவர் உரைத்துள்ளார், நாம்
பழகிய எவரிடமும் நன்றி மறக்கக் கூடாது!

"நன்றி மறப்பது நன்றன்று" என்று கூறினாரே!
நன்றி மறந்தீரோ நீர்?' எனக் கேட்க, கூறினார்,

தாங்கள் முழுக் குறளைப் படிக்கவில்லையோ?
தாங்கள் நன்றல்லது அன்றே மறப்பதே நன்று!'


இவர்கள் எடுத்துக்கொண்ட குறள்:


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. குறள் எண் - 108


 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 307

உழவு இல்லையேல்...

உலகைத் துறந்தோம் எனச் சொல்லி, சுகம் இன்றி
உலவும் துறவிகளும், உண்ண உணவு வேண்டுமே!

உழவுத் தொழில் இல்லையேல், உணவு வருமோ?
உழவின் சிறப்பை, இவ்வாறு விளக்குகிறார் அவர்.

உழவர் தம் பணிகளை உதறிவிட்டால், விழைவதை
உதறினோம் எனும் துறவிகளுக்கும் வாழ்வில்லை!

'உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை', என்பது எச்சரிக்கை.

உழும் நிலத்தை எவ்வாறு பதப்படுத்த வேண்டும் என
அழகாக உரைக்கிறார் வள்ளுவர், ஒரு குறட்பாவில்.

சூரியனின் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, இந்த
சீரிய இருவரிகள் அமைந்துள்ளது, ஒரு விந்தைதான்.

நான்கில் ஒரு பங்கு ஆகும் அளவு புழுதி காய்ந்தால்,
நன்கு வளரும் பயிர்; பிடி உரமும் தேவையில்லை!

ஒரு பலம் புழுதி காற்பலம் ஆகுமளவு உணக்குவதை,
ஒரு நல்ல வழியாக, உலகிற்கு அறிவுறுத்துகின்றார்.

'தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்', என்பதே அறிவுரை.

பசுமைப் புரட்சிக்கு இயன்ற உதவிகள் செய்வோம்;
பசுமையான உலகினைக் குறையின்றிக் காப்போம்!

:popcorn:
 

சில தூய தமிழ்ச் சொற்கள் தமிழர் உபயோகத்திலிருந்து மறைந்துவிட்டன. அவற்றில் ஒன்று 'உணக்குதல்'.

மலையாள நாட்டில் வாழும் தமிழர், இந்தச் சொல்லை உபயோகிப்பர்! 'மாவை உணக்க வேண்டும்';

'ஈரத் துணி உணங்கவில்லை', என்பது போலச் சொல்லக் கேட்டுள்ளேன்! . :blah:

Kunjuppu Sir can give a feed back, please! :typing:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 308

பூமித் தாய்...

ஏர் உழுவதைவிட உரம் இடுதலும், களை எடுத்த பின்,
நீர் விடுவதைவிடப் பயிரின் பாதுகாப்பும் மிக நல்லது.

'ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு', என்பது குறள்.

பூமியைத் தாயாக வணங்குவோம் நாம்; வள்ளுவர்
பூமியை ஒரு பெண்ணாக வர்ணிக்கின்றார். ஒருவன்

தன் நிலத்தை தினம் சென்று பார்த்து, நன்கு கவனித்து,
அதன் தேவைகளைப் பாராது இருப்பானாயின், நிலம்

அவன் மனைவி, அவனிடம் சினந்தால் ஊடுவதுபோல,
அவனை வெறுத்து ஒதுக்கிவிடும், என உரைக்கின்றார்.

'செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்', என்று எச்சரிக்கை!

தம்மிடம் பொருளே இல்லை என்று சொல்லி, எதுவும்
தம்மால் இயலாததுபோல இருப்போரைக் கண்டால்,

நிலம் என்னும் நல்ல பெண் நகைப்பாள்; ஏனெனில்,
நிலம் வளம் தர இருந்தும், சோம்பித் திரிகின்றதால்.

'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்', என்பது குறள்.

நிலம் வளம் தரவே இருக்கிறது, என்பதை அறிவோம்;
நில வளத்தை மேம்படுத்தி, பசிப் பிணி போக்குவோம்!

:hungry:
 
வள்ளுவர் அறிவாரா?

விளை நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும், அடுக்கு மாடிகள்

கட்டக் கொடுப்பார்கள் என்ற தம் எதிர்காலத்தை வள்ளுவர் அறிவாரா?

இல்லை என்று இருப்பவர், எந்த நிலத்தில் போய்ப் பயிர் செய்ய முடியும்? :ballchain:
 
மாவை உணக்க வேண்டும்';
Dear Raji Madam, In Kerala the proper Malayalam speaking people also use this word... in different slang... and people like us who speak Malayalam mix Tamil(Palakkadan Tamil) use the exact word as you have written. This is my opinion with in my knowledge limitation.. Like as you have mentioned, Kunjuppu Sir can give you more on this. Love Anandi
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 309

இன்மையின் கொடுமை...

இல்லை என்று சோம்பலுடன் இருப்போரைக் கண்டு,
நல்ல நிலமகள் நகைப்பாள் எனக் கூறிய வள்ளுவரே,

இன்மையின் கொடுமையை உலகினருக்குக் காட்டிட,
இன்மையைப் பற்றிய ஓர் அதிகாரமே அமைகின்றார்!

இன்மையைவிட மிகவும் துன்பமானது எது என்றால்,
இன்மையைவிட இன்மையே துன்பமானது என்கிறார்.

'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது'. இது அவருடைய முடிவு!

கொடுமையான இன்மை என்ற பாவி, இம்மை இன்பம்,
மறுமை இன்பம் இரண்டையுமே, இல்லாது செய்திடும்.

'இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்', என்கின்றார்.

வறுமை காரணமாகத் தோன்றும் பேராசை, குலத்தின்
பெருமை மட்டுமன்றி, அதன் புகழையும் கெடுத்துவிடும்.

இன்மையின் துன்பத்தை அனுபவிப்பவரைக் கண்டால்,
இம்மையில் புண்ணியம் சேர்க்க, உதவி செய்திடுவோம்!

:grouphug:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 309
..................
இன்மையின் துன்பத்தை அனுபவிப்பவரைக் கண்டால்,
இம்மையில் புண்ணியம் சேர்க்க, உதவி செய்திடுவோம்!

உயர்வான திரையிசை வரிகள்!

திரை இசையில் பல பாடல்கள்

நிறைவான பொருள் தருபவை,

இன்மையின் கொடுமையைவிட,
இருப்போரே இல்லை என்பது

எத்துணை கொடுமை எனக் கூற,
சத்தான இந்த வரிகள் உண்டு.

'இல்லையென்போர் இருக்கையிலே,
இருக்கிறவர் இல்லையென்பார்!'

:hungry: . . :ballchain: . . :popcorn:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 310

இன்மை தரும் இழிவு!

கனி இருக்கக் காயைக் கவர்வது போன்ற செயலை,
இனிய குணம் இருப்பவரும், இன்மையால் செய்வர்!

நல்ல குடியில் பிறந்தவர்களின் சொற்கள் என்றும்
நல்ல சொற்களாகவே இருப்பது வழக்கம். ஆனால்,

இன்மை என்ற துன்பம் தாக்கிவிட்டால், அவர்களும்
இழிவான சொற்களைப் பேசும் சோர்வை அடைவர்.

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்', என எச்சரிக்கை!

இல்லாமை என்ற துன்பம் ஆரம்பம் ஆகிவிட்டால்,
பல்வேறு துன்பங்களும் அதைத் தொடர்ந்து வரும்.

பொறாமை வரும்; பேராசை வரும்; கோபம் வரும்;
இயலாமை தோன்றும்; இழி சொற்கள் வெளிப்படும்.

'நல்குரவு என்னும் இடும்பையில் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்', என்பது குறட்பா.

துன்பங்கள் தரும் இன்மையை, இல்லாது செய்வோம்;
இன்பங்கள் பெருகிட, உழைத்து வாழ்ந்து, உயர்வோம்!

:first: . . :peace:
 

அறவழி போய்விடும்...


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்

இழுக்காது இயன்றது அறம்'. இது குறளின் குரலாகும்.

பொறாமையே மற்ற தீய குணங்களின் முன்னோடி!
பொறாமை வந்தால், பேராசை தோன்றும்; பேராசை

தோன்றி, வேண்டியது கிடைக்காவிட்டால், கோபமும்
தோன்றி, கோபத்தால் இன்னாச்சொல் வெளிப்படும்!

இல்லாமை இருந்தால், பொறாமைப்பட வாய்ப்புண்டு!
இல்லாமை, மற்ற தீய குணங்களைக் கொடுத்துவிடும்!

:hungry: . . :mad2: . . :argue:
 
ஏன் வரவே இல்லை?

பெண் பார்க்கச் சென்று, அவளைப் பிடித்து,

தன் திருமணம் முடித்த ஒருவன், அதன் பின்

அவள் கோபக்காரி என்று அறிந்துகொண்டு,
அவள் போக்கில் வாழப் பழகிக்கொண்டான்!

ஒரு நாள் வெளியே செல்ல, அசரீரி ஒன்று,
'ஒரு நிமிடம் நில்!', என்று எச்சரிக்க, அவன்

நின்றதும், பெரிய மரம் ஒன்று எதிரில் சரிய,
அன்றவன் எண்ணத்தில் வந்தான், இறைவன்!

இன்னொரு நாள், அதேபோல அசரீரி ஒன்று,
இன்னொரு முறை அதேபோலவே சொல்ல,

இந்த முறை விழுந்தது, பெரிய பாறாங்கல்!
இந்த முறை அவனது ஆச்சரியமும் அதிகம்!

ஆண்டவனை நினைத்துப் படுத்தவன், அந்த
ஆண்டவன் கனவில் வர, கேள்வி கேட்டான்!

'அசரீரிக் குரல் யாருடையது, ஆண்டவனே?'
'அசரீரிக் குரல் என்னுடையதே, பக்தா! உன்

வாழ்வைக் காப்பாற்ற, நானே எச்சரித்தேன்!'
வாழ்வு தரும் இறைவன், இவ்வாறு சொல்ல,

கேட்டான், 'பெண் பார்க்கச் சென்ற பொழுது,
கேட்ட இந்த அசரீரி, ஏன் வரவே இல்லை?'

:tape:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 311

இன்மையால் வரும் சிறுமை...

'ஏழை சொல் அம்பலம் ஏறாது', என்பதை அறிவோம்;
ஏழை ஒருவனின் நிலையை, வள்ளுவர் கூறுகின்றார்.

அரிய பல நூல்களைக் கற்று ஆராய்ந்து சொன்னாலும்,
வறிய ஒருவனின் சொற்கள் எடுபடாமலே போய்விடும்.

'நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்', என்பது ஓர் எச்சரிக்கை!

வறுமை வந்தால், அறநெறியில் வாழ்வைச் செலுத்தும்
பொறுமை போய்விடலாம்; அவ்வாறு அறநெறி விலகி

ஒருவன் வாழ்ந்தால், அவனை ஈன்ற தாய் கூட, பிறன்
ஒருவனைப் பார்ப்பது போலவே, அவனைப் பார்ப்பாள்!

'அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்', என்கிறார்.

எத்தனை குற்றம் புரிந்தாலும், ஈன்ற தாய் மட்டும்தான்,
அத்தனையும் மறந்து, மாறாத அன்பு காட்ட விழைவாள்.

அந்த குணமுள்ள தாயையும் மாற வைக்கும், நல்குரவு;
இந்த விஷயம் அறிந்து, இன்மை இல்லாது செய்வோம்!

:help: . . . :ballchain:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 312

இன்மையால் வரும் பயம்...

இல்லாமை என்ற கொடுமை வந்தால் ஒருவனுக்கு
எல்லாமே போனது போன்ற மன நிலை உருவாகும்.

நேற்றுக் கொல்வது போல வந்த இல்லாமை, மீண்டும்
இன்றும் வந்துவிடுமோ என இல்லாதவன் அஞ்சுவான்!

'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு', என்பது குறள்.

நெருப்பினுள் தூங்குவது கூட முடியலாம்; ஆனால்
பொருள் இல்லாதவர் கணமும் கண்ணயர முடியாது!

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது', என்கின்றார்.

ஒழுக்கமில்லாத வாழ்வால் வறுமை அடைந்தவர்,
முழுமையாகத் தம்மைத் துறக்காது உயிர் வாழ்தல்,

உப்பிற்கும் கஞ்சிக்கும் வந்த எமனேதான் என்கிறார்,
ஒப்புமை இல்லாத திருக்குறளை நமக்கு அளித்தவர்!

''துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று', இது குறள்.

பயனேதும் இல்லா வாழ்வு தரும் இன்மை இல்லாது,
அயராது உழைத்து, வளம் பெருக்கி உயர்ந்திடுவோம்!

:high5: . . . :first:
 

Latest posts

Latest ads

Back
Top