நான் கற்ற பாடம்!
அனுதினம் நமக்கு கற்றுத் தரும் புதுப் பாடம்,
அனுபவம் எனும் ஒரு நிலையான ஆசிரியன்!
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு பூஜைக்காக,
நாங்கள் பிள்ளைகளுடன் சென்றோம், ஊருக்கு.
நல்ல விதம் பூஜை முடித்த பின்பு, கோவிலில்
நல்ல தரிசனம் பெறத் தயாராகின்ற நேரத்தில்,
பெரிய மழை பிடித்துக் கொள்ள, உடுத்த எடுத்த
எளிய ஜரிகை இட்ட சேலை வேண்டாம் என்று,
என் பையின் பக்கவாட்டு 'ஜிப்'பில் இட்டு மூடி,
என் சாதாரணப் புடவையை உடுத்திச் சென்று,
தரிசனம் முடித்து, வேகமாய் உணவை உண்டு,
சரியான நேரத்தில், ரயில் ஏறி வந்துவிட்டோம்.
அம்மன் கோவில் ஒன்றில், அம்மனுக்கு உடுத்தி,
அம்மன் பிரசாதமாக எனக்கு வந்த புடவை அது!
ஜாலியாக ஊர் வந்து, பெரிய ஜிப்பைத் திறக்க, அது
காலியாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தேன்! ஒரு
'விளக்கு பழுது பார்க்கும் பணியாளன் வந்தானே!
கிளப்பிக் கொண்டு போனானோ புடவையை', என
சஞ்சலப்பட்டு, அந்தப் புடவையை நான் உடுத்தக்
கொஞ்சமும் யோகம் இல்லையே என்று எண்ணி,
சில நிமிடம் சுவாமியை அலங்கரித்த புடவையை,
சில நாட்கள் சென்றதும், மறந்தும் போய்விட்டேன்!
நான்கு ஆண்டுகளுக்குப் பின், அதே பையை எடுத்து,
நன்கு உடைகளை அடுக்கி வைக்கும்போது, சின்ன
உடைகளை நடுவிலே வைக்காது, பக்கவாட்டிலே
அவைகளை வைக்க, ஜிப்பைத் திறக்க, ஆச்சரியம்!
காணமல் போனதென்று நான் எண்ணிய புடவை,
கண்ணில் படுகின்றது, இன்ப அதிர்ச்சி நான் பெற!
இரு புறமும் பெரிய ஜிப்பும், அதில் ஒரு பெரிதுடன்
சிறு ஜிப்பும் உள்ளன; நான் அந்தப் பக்கம் இருக்கும்
சிறிய ஜிப்பை மட்டுமே சோதனை செய்துவிட்டு,
பெரிய ஜிப்பைத் திறக்காமலேயே விட்டுள்ளேன்!
மனம் மிக வருந்தினேன், அந்தப் பணியாளனை
மனத்திலே கள்வனாக எண்ணிய காரணத்தால்!
அவனிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்;
அவனுக்குக் கேட்காவிட்டாலும், எனக்கு ஆறுதல்!
எந்தப் பையையும் பாதுகாப்பாக வைக்கும்போது,
அந்தப் பையைக் கவனமாகக் காலி செய்துவிட்டு,
எல்லாப் பொருட்களையும் எடுக்க வேண்டும், என
நல்ல பாடத்தை நான் கற்றேன், இந்தப் பயணத்தில்!
அன்புடன் யாரேனும் நமக்குப் பரிசு அளித்தால், அது
என்றும் நம்முடனே இருக்கும் என்றும் அறிந்தேன்!
:thumb: