Raji Ram
Active member
இறைவனிடம் ஒர் உரையாடல்!
நாளை உலகில் பிறப்போம் என அறிந்து, அந்
நாளை எண்ணிப் பயந்து போனது, குழந்தை!
இறைவனிடம் பேசினால்தான் தன்னுடைய
குறைகளைப் போக்கும் வழி கிடைக்கும் என,
தன் ஐயங்கள் ஒவ்வொன்றாக அவனிடமே
தான் கேட்க ஆரம்பித்தது! 'உலகில் பிறந்தால்
சின்னஞ் சிறு உருவில் இருப்பேனே! அப்போது
சின்னத் துயரும் வராது எவர் காப்பார்?' என்று
கேட்க, இறைவன் உரைத்தான், 'தேவைகளைக்
கேட்காமலே செய்ய ஒரு தேவதை இருப்பாள்!'.
இன்னும் சந்தேகங்கள் மனதில் அலை மோத,
இன்னும் தனது உரையாடலைத் தொடர்ந்தது!
'நடக்கவும் முடியாத நிலைமையே இருக்குமே?'
'நடக்கும் வரை, தேவதை அன்புடன் தூக்குவாள்!'
'மற்றவர் பேசும் மொழியே எனக்குப் புரியாதே!'
'கற்றுக் கொடுப்பாள், பல மொழிகளை உனக்கு!'
'உன்னுடன் பேச என்னால் முடியாதே, இறைவா!'
'என்னை அணுகும் வழிகளை அவள் கற்பிப்பாள்!
என்னைப் போற்றும் தோத்திரங்களைச் சொல்லி,
என்னை அடைய வழிகள் அறிந்திடச் செய்வாள்!'
'அப்படி ஒரு தேவதை இருந்தால் நலமே; ஆனால்,
எப்படி அவளை நானே அடையாளம் காண்பது?'
'கவலையை விடுவாய்! உனை ஈன்ற அன்னையே
கவலைகள் தீர்த்துக் காத்திடும் தேவதை ஆவாள்!'
:angel: . . . :hug: