சத்திய தேவதை!
முன்னொரு காலத்தில், ஒரு சிறந்த அரசன்,
நன்னெறி தவறாது ஆட்சி செய்து வந்தான்.
எல்லா ஐஸ்வர்யங்களும் மக்கள் பெற்றிட,
நல்ல நீதி தவறாது, தர்மங்கள் பல செய்து,
சத்தியம் தவறாத மன்னனாக வாழ்ந்தான்.
நித்தியம் செல்லும் இரவு உலாவில், அவன்
சிறந்த அலங்காரியாக ஒரு பெண், தன் நாடு
துறந்து போவதைக் கண்டு, அருகில் சென்று,
'நாடு விட்டுத் தனியே செல்லுகின்ற உனக்கு,
வீடு வரை துணையாக வந்திடத் தேவையா?'
என்று கேட்க, 'நான் ஐஸ்வர்ய தேவதையே;
இன்று உனது நாட்டை விட்டுச் செல்கிறேன்!
இங்கேயே பல காலமாக இருந்து சலித்தது!'
எங்காவது சில காலம் போகிறேன்!' என்றிட,
மன்னன் மனம் வருந்தி, அவளை விட்டுவிட,
இன்னும் ஒரு நங்கை அவ்வழியே வந்துவிட,
அவளை யாரென்று மன்னன் சென்று வினவ,
அவள், தான் நீதி தேவதை என்றும், அவளும்
பல காலம் அவன் நாட்டில் தங்கிவிட்டதால்,
சில காலம் வேறு நாடு செல்வதைச் சொல்ல,
வழி விட்ட மன்னன், இன்னும் ஒரு தேவதை
வழியிலே வருவது கண்டு, அவளை வினவ,
அவள் தர்ம தேவதை என்றும், நாட்டிலிருந்து
அவள் போக விரும்புவதையும் அறிய, அங்கு
கடைசியாக எளிமைக் கோலத்தில் தேவதை
விடை பெற எதிர்ப்பட, அறிந்தான் மன்னனும்
சத்திய தேவதை அவளென! அவள் தாள் பற்றி,
நித்தியம் தன்னுடன் இருக்க வேண்டும் என்று
மனம் உருகி வேண்டிட, மன்னன் மனம் மகிழ,
மனம் இரங்கி, அந் நாட்டிலே அவள் தங்கிவிட,
மற்ற மூன்று தேவதைகளும் பார்த்து, தாமும்
சற்றும் தாமதிக்காது திரும்பி வந்து, 'சத்தியம்
இருக்கும் இடத்தில்தான் நாங்கள் மூவருமே
இருக்க முடியும்!' என, மன்னன் மகிழ்ந்தான்!
சத்தியம் இருந்தால், ஐஸ்வர்யம், நீதி, தர்மம்
நித்தியம் நம்மோடு இருக்குமென அறிவோம்!
:angel: