அடாது மழை பெய்தாலும்...
முன்பதிவு நான்கு மாதங்கள் முன்னே என்று
முன்பதிவு நாட்களை மாற்றிய பின்பு, வந்தது
என்றுமே இட நெருக்கடி ரயில்களில்! இதனால்,
என்றுமே நீண்ட பயணம் பேருந்தில் செல்லாத
எத்தனையோ பேர்களுக்குப் பேருந்துப் பயணம்!
அத்தனை பேருந்துகளிலும் கடைசி நொடியிலும்
எளிதாக இருக்கைகள் கிடைக்குமே! இந்த முறை
தனியாக நான் பயணித்தேன் இரவுப் பேருந்தில்.
இரு நாட்கள் மட்டும் ஊரில் என்பதால், எனக்காக
ஒரு சிறு கைப்பயை மட்டுமே வைத்திருந்தேன்!
துள்ளுந்துகள் வீதியில் வரவில்லை! கொஞ்சம்
செல்லலாம் நடந்தே என எண்ணியபடி, நாங்கள்
இனிய இல்லத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில்,
கனிவுடன் காலிறங்கிக் கன மழை கொட்டியது!
அடிக்கும் காற்றில் குடையே மடிந்து போய்விட,
அடிக்கும் பெரு மழை உடையை நனைத்துவிட,
கொட்டும் மழையிலே நனைந்தோம், துள்ளுந்து
கிட்டும் என்ற நம்பிக்கையுடன்! ஒன்று வந்தது!
சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஓடிட, நிலவுப்
பாதைகளின் பள்ளங்கள் சேற்று நீரில் மறைந்திட,
எதிர் வரும் வாகனங்கள் வீதி நீரை இறைத்திட,
சதிராடும் இயற்கையின் பெருமழை தொடர்ந்திட,
ஒரு வழியாகப் பேருந்து நிலையத்தை அடைந்து,
ஒரு இடமும் உடை மாற்ற இல்லாது போனதால்,
ஒரு கட்டணக் கழிப்பிடத்தில் உடையைப் பிழிந்து,
மறுபடியும் அதையே அணிந்து, பேருந்தின் உள்ளே
எனது உச்சி முதல் பாதம் வரையில் ஈரப்பதத்துடன்,
எனது இருக்கையில் சென்று அமர்ந்து, குளிர் காற்று
வரும் இரு சிறு குழாய்களை மூடி, பயணம் செய்ய
வரும் நபர்களுக்கு வைத்த கம்பளியால், நடுங்கும்
என் உடலை வெப்பமாக்க முயன்று, பையிலிருந்த
சின்னக் கற்பூர வில்லைகளைப் பொடித்துப் போட்டு,
கொசுக்களுடன், ஈர உடை வாடையையும் விரட்டி,
சொகுசுப் பேருந்தில் பயணம் தொடங்கினேன்! என்
சக்தி வினாயகரின் அருள், ஜுரம் வராது காத்ததால்,
சக்தி அதிகம் விரயமாகாமல், பயணம் முடித்தேன்!
:dance: