சாவி எங்கே?
எங்கள் இனிய இல்லத்தின் பூட்டுக்களுக்கு
எங்களிடம் உள்ளன இரண்டு 'செட்' சாவிகள்.
ஒரு நாள் விடியலில் அறிந்தேன், அவற்றில்
ஒரு சாவிக் கொத்தைக் காணோம் என்பதை!
தேடலைத் துவக்கினேன், என்னவர் அறியாது!
தேடுவதை அறிந்தார், என் தவிப்பைப் பார்த்து!
கண்ணில் படும் வேலைகளில் ஈடுபடுவதால்,
பண்ண வேண்டிய வேலைகளை மறக்கிறேன்!
முன் தினம் பூட்டிய பின்பு, அதன் இடத்திலே
வந்து மாட்டியிருந்தால், வம்பே இருக்காதே!
எல்லா இடங்களையும் அலசி ஆராய்ந்த பின்,
என்னவர் கண்டார்; அது தையல் மெஷின் மீது!
என்னதான் செய்தேன் முன் தினம் என ஆராய,
என் தவறு புரிந்தது. இதோ, விவரிக்கின்றேன்!
முன் தினம் இரவு, எங்கள் வாசல் கதவுகளைச்
சென்று நான் பூட்டிவிட்டு வரும் பொழுதினில்,
ஒளிர்ந்தது மின் விளக்கு சுவாமி அறையிலே;
திறந்திருந்தது அந்த அறையின் ஜன்னல்கள்!
மின் விளக்கினை நிறுத்திய பின்னர், இரண்டு
ஜன்னல்களையும் மூட விழைந்து, சாவியை
இடக்கையில் பிடித்து, வலக்கையால் முயல,
இடக்குச் செய்தது ஜன்னல்; மூட வரவில்லை!
அருகிலே தையல் மெஷின் இருக்க, சாவியை
எளிதிலே எடுக்கலாமென, அதில் வைத்தேன்!
தொலைபேசி மணி அப்போது கிணு கிணுக்க,
அலைபாயும் நெஞ்சுடன் ஓடி எடுத்தேன்! என்
மாணவிக்கு சங்கீத வகுப்பின் நேரத்தைக் கூறி,
மாடிக் கதவுகள் மூடியுள்ளதா என்றும் பார்த்து,
ஆனந்தமாகச் சயனம் செய்யச் சென்றேன்; பின்
ஆனந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன் நான்!
இடக்கையால் ஒரு பொருளை நாம் வைத்தால்,
இடத்தை மறந்து அதைத் தேட வைத்திடுமாம்!
இதை ஒரு விளையாட்டுச் செய்தி என்றுதானே
இதுகாறும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்!
:lock1: