(இறுதிப் பகுதி)
லிபர்டியில் மாட்னி ஷோ பார்த்துவிட்டு அவன் களைப்புடன் விட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் பத்திரிகைகளைப் புரட்டியபோது சுஜாதா குமுதத்தில் விடைபெற்றுக்கொண்டு சாவியில் அறிமுகமாகி விகடனில் தொடந்துகொண்டிருந்தார், இதயத்தில் வரவிருந்தார். மேசையில் மணியன் மாத இதழில் போஸ் கொடுத்துக்கொண்டு காத்திருந்தார். பக்கத்தில் கையடக்கமான ஃபோட்டோ ஸ்டான்டில் கீதா!
---உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இருந்தாலும் தயவுபண்ணி தெனம் ஸ்வாமி விளக்க மட்டும் ஏத்தி வைங்கோ! முடிஞ்சா ரெண்டு ஊதுவத்தியும் கொளுத்தி வைங்கோ, கொசு வராது.
---ரைட், செய்யறேன்.
---டெய்லி காலைல முடிஞ்சா ஏதாவது டிஃபன் பண்ணி சாப்பிடுங்கோ. காஃபிக்கு ப்ரூ வாங்கி சமையலறை ஷெல்ஃப்ல வெச்சிருக்கேன். மூணு வேளையும் ஓட்டல்ல சாப்ட்டா உடம்புக்கு ஒத்துக்காது. நைட்ல வேணும்னா சாதம் மட்டும் வடிச்சு தயிர்விட்டுப் பிசைஞ்சு ஜெயா பிக்கிள்ஸ் தொட்டுண்டு சாப்பிடுங்கோ. உங்களுக்குத்தான் பிடிக்குமே? வேலைக்காரி வந்தா அப்பப்ப ஏதாவது தேய்க்கப்போட்டுத் தண்ணிகொண்டுவரச் சொல்லுங்கோ. பால் தேவையான அளவு வாங்கிக்கோங்கோ. தெனமும் ராத்திரி குடியுங்கோ.
---எல்லாம் நா பாத்துக்கறேன் கீதா. நீ நிம்மதியாப் போய்ட்டு வா. ஒரு ’சேஞ்ஜ்’ வேணும்னுதானே ஊருக்குப்போற? அப்புறம் வீட்டப் பத்தி என்ன கவலை?
---உங்க இஷ்டம். ஸ்வாமி விளக்க ஏத்தறதுமட்டும் மறந்துதாதீங்கோ. புதுத் தீப்பட்டி வாங்கணும். ட்ரெய்ன் கிளம்பிடுத்து, நாவரேன்உடம்பஜாக்ரதயாப்பாத்துக்கோங்கோஅடிக்கடிப்ராட்வேஹோட்டல்போகவேண்டாம்நான்போய்லெட்டர்...-நிங்களும்...
மூச்சுவிடாமல் ஒலித்த கீதாவின் வார்த்தைகள் ’டாப்ளர் எஃபெக்ட்’டில் காற்றில் கரைந்துவிட, அவள் முகமும் விடைகூறும் விரல்களும் கண்களில் தேய்ந்து மறைந்து மெல்லச் சுருங்கும் புகைவண்டித்தொடரின் நீளச் சிவப்புக்கோட்டில் கலந்துவிட, அவனுக்கு கீதா ஊருக்குப்போய் அது அடுத்த சனிக்கிழமை என்று உறைத்தது.
இன்னுமா லெட்டர் போடறா? என்று அனிச்சையாக எழுந்த கேள்விக்கு நாக்கைக் கடித்துக்கொண்டான்.
இரண்டு நாட்கள் முன்னரே வந்திருந்த அவள் கடிதத்தை செஸ் டோர்னமென்ட் மும்முரத்தில் அவன் பிரிக்க ஒத்திப்போட்டு மறந்து எங்கோ வைத்துவிட்டதை மனம் இடித்துக்காட்ட,
லெட்டரைத் தேட முனந்து முதலில் ஸ்வாமி அலமாரி கண்ணில்பட, அவன் மனதில் தன்னைத்தானே கடிந்துகொண்டு, கைகால் அலம்பிவிட்டுப் பரிவுடன் விளக்கை எடுத்தபோது,
திரியில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டுத் திரி தயார்செய்து எண்ணெய்யைத்தேடி ஊற்றி, ஊதுவத்தியைத் தயாராக வைத்துக்கொண்டு தீப்பெட்டியை எடுத்தபோது,
’கீதா புதுத்தீப்பட்டி வாங்கவேணும் என்று சொன்னாள்போலிருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தபோது,
நல்ல வேளை, ஒரு குச்சி இருந்தது. பற்றவைத்தபோது ரெகுலேட்டர் இல்லத ஃபேன் காற்றில் கோபித்துக்கொண்டு அணைந்துபோயிற்று!
சலிப்புடன் அவன் அந்த ஒரு வாரத்தில் முதல் முறையாக சமையலறைக் கதவை ஓசையுடன் திறந்துகொண்டு நுழைந்தபோது அடையாளமே தெரியவில்லை.
’ஸிங்க்’கில் பாத்திரங்கள் வெளியில் உலர்ந்து விளிம்பில் வரண்டு அழுக்கு நீரை ஏந்தி தீட்சண்ய நெடிவீசக் கரப்பான் பூச்சிகள் தைரியம் பெற்றிருந்தன, விளக்கொளியில் மீசையை அசைத்தன. பல்லிகள் இரண்டு சுவர்களில் காத்திருந்தன. பாச்சைகள் அன்புடன் தாவின. அலமாரியில் தயிர் செத்திருந்தது. ஜீனி டப்பாவைச் சுற்றி எறும்புகள் அணிவகுப்பு செய்துகொண்டிருக்க, ஒரு சிலந்தி மூலையில் நிதானமாக வலை பின்னிக்கொண்டிருந்தது. நூடன் ஸ்டவ் அருகில் மண்ணெண்ணெய் பாட்டிலின்மேல் ஃபனல் ரேடார் அன்டென்னாபோல் சாய்ந்திருக்க, அதன்மேல் இருந்த தீப்பெட்டியும் காலி. டைனிங் டேபிள்மேல் பார்த்தபோது ஊறுகாய்க் கிண்ணத்தைக் காளான்கள் ஆக்கிரமித்திருந்தன.
எரிச்சலுடன் சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியபோது கீதாவைத் திட்ட மனம் வரவில்லை.
’என்ன, நாளைக்கு ஸண்டேதானே? எல்லாத்தையும் ஒழுங்குபடுத்திட்டாப் போறது’ என்று நினைத்துக்கொண்டு கால்களை எட்டிப்போட்டபோது எதிரில் வந்த காரின் விளக்கொளியில் கையில் நேரம் தெரியப் பசித்தது.
தாஜில் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் கடைகள் மூடும்வரை அரட்டையடித்துவிட்டு, அவசரமாக சோப்பும், ஷாம்புவும், ஷேவிங் கிரீமும் வாங்கிக்கொண்டு, தீப்பெட்டியை அறவே மறந்து ஒரு மீட்டா பான் போட்டுக்கொண்டு, வீட்டில் வந்து அப்பாடா என்று படுக்கையை உதறிப் போட்டதுபோதுதான் கவனித்தான், வரிவரியாகத் தரையில் புழுதிபடிந்து ஸஹாரா பாலைவனத்தை நினைவூட்டியது. ’மனைவி இல்லாத வீடு பாலைவனம்’ என்று எங்கோ படித்தது மனதில் நெருடத் தூங்கிப்போனான்.
கனவுகளில் அவன் மூச்சுவாங்க ஸஹாரா பாலைவனத்தில் நடந்துகொண்டிருந்தான். தூரத்தே புகைவண்டியில் கீதா கையசைத்தாள். கொஞ்ச தூரம் நடந்து நட்டநடுவில் ஈச்சமர நிழலில் டீப்பாயை இழுத்துப் போட்டுக்கொண்டு கீதாவுடன் செஸ் விளையாடித் தோற்றுப்போனான். களைப்பின் மிகுதியால் தொண்டை வறண்டு கீழேசரிய, எகிப்தியத் தடியன் ஒருவன் சாட்டியால் விசிறக் குப்புறப்புரண்டு கையில் மரக்கலயமேந்தி ’தண்ணீர்!’ என்று கெஞ்சியபோது விழித்துக்கொண்டான்.
மாலை சாப்பிட்ட வெஜிடபிள் பிரியாணியின் மசாலா ஏப்பங்கள் விளைவித்த அவசர தாகத்தில் அடுக்களைக்கு விரைந்தபோது குடங்களில் நீர் கருத்துப் புழுதி படிந்திருந்தது. கிணற்று நீரே தேவலாம் என்று ஸிங்க் குழாயைத் திருகியபோது பெருமூச்சுவிட்டு ’அஹ்...’ என்றது. கீதா தினமும் எங்கிருந்து தண்ணீர் கொண்டுவருகிறாள் என்று தெரியவில்லை.
திடீரென்று நினைவுக்கு வந்து அவன் மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி சுவரோரம் இருந்த அன்டர்கிரவுன்ட் குழாயைக் கண்டுபிடித்து ஓசையுடன் சுற்றிலும் உள்ள மரப் பலகைகளை அப்புறப் படுத்தியபோது நாய் குரைத்தது. தொடர்ந்து விளக்கெரிய, "எவரூ?" என்ற கட்டைக்குரல் கேட்டு நிமிர்ந்தபோது குழாயின் நுனியில் தங்கியிருந்த கொஞ்சநஞ்ச நீரும் கைகளில் வழிந்து சிந்திவிடப் பரிதாபமாக விழித்து,
"நீலு... நீலு காவலண்டி." (நீர்... நீர் வேணும் அய்யா)
"எவரய்யா மீரு?" (யாரய்யா நீர்?)
"நேனு, வாசு. வாசு தெர்லேதா மீக்கு? பயண உன்னேனு காதா? மன அம்மாயி ஊருக்கு எல்லாரு. இன்ட்டில நீலு லேது. அந்துக் கோசரம்..." (நான் வாசு. வாசு தெரியாதா உமக்கு? மேல இருக்கேன் இல்லையா? என் மனைவி ஊருக்குப் பொய்விட்டாள். வீட்டில் தண்ணீர் இல்லை. அதுக்காகத்தான்...)
"ஓ வாசு காரு? கொஞ்சம் ஆகண்டி இப்புடே ஒஸ்தானு." (ஓ வாசு சாரா? கொஞ்சம் இருங்கள், இதோ வருகிறேன்.)
அவர் ஒரு செம்பு நிறைய நீர் கொண்டுவந்துதரப் பருகி ஜன்ம சாபல்யமடைந்தான்.
*** *** ***
மறுநாள் விடிந்தபோது விழித்துக்கொண்டு மெல்ல எழுந்து காலண்டரில் தேதி கிழித்தபோது பொட்டில் அடித்ததுபோல் திடுக்கிட்டான்.
’கேர்: கீதா’ஸ் ப்ர்த் டே’ என்று அவன் பால்பாயின்டால் எழுதியிருந்த காலண்டர்தாள் அவனைப் பார்த்து முறுவலிக்க, பிரிக்காமல் எறிந்த கீதாவின் கடிதம் மனதில் உறுத்த, அதை அவள் அலமாரியில் எறிந்தது உதயமாகப் பரபரவென்று துணிகளை விலக்கித் தேடி ’தட்ஸ் இட்’ என்று எடுத்தபோது கீதாவின் டயரி கீழே விழுந்தது.
அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?
கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.
ஜனவரி 5, சனி.
அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?
ஜனவரி 6, ஞாயிறு.
வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.
ஜனவரி 12 சனி.
இன்று செஸ் டோர்னமென்ட் பார்க்கும்போது கொஞ்சம் என் பாண்டித்தியத்தைக் காட்டினேன். அசந்துவிட்டார்! எனக்கும் செஸ் நன்றாகவே தெரியும், ஆனால் பொறுமையில்லை. முயற்சி செய்துதான் பார்ப்போமே?
ஜனவரி 18 வெள்ளி.
நேற்றைய சண்டையின் உக்கிரத்தில் பிரிந்து நாளை ஊருக்குப் போகிறேன். என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்? நான் ’ப்ளெய்ன் கர்ல்’தான், ஆனால் பாசத்துடன்தானே இருக்கிறேன்? நல்லவேளை, கொஞ்சம் அழகாக இருக்கிறேனோ பிழைத்தேன். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம்தான்.
அழகும், பாசமும் உள்ள பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க வேண்டும்? அவள் சாதரணமானவளாக இருந்தால் பொறுத்துக்கொள்ளக் கூடாதா என்ன?
இவ்வளவு தூரம் நுண்கலைகளை ரசிப்பவர் ஒரு பெண்ணின் சாதாரண உணர்வுகளையும், இயல்புகளையும் புரிந்துகொள்ள மறுப்பது ஏன்? He is overly affectionate. In the wrong way.
கடிதத்தில் கீதா மேலும் மாறியிருந்தாள்.
கீதாவின் பிறந்தநாள் ஞாபகம்வர, அங்கிலத் தேதிதானே என்று ஆறுதலடைந்து, காலண்டரில் கார்த்திகை நட்சத்திரம் சரியாக அடுத்த ஞாயிறு வருவதும், தொடர்ந்து அவர்களுடைய முதல் திருமண அனிவர்சரி வருவதும் கண்டறிந்து, அவன் பல்கூடத் தேய்க்காமல் உட்கார்ந்து அவளுக்கு விவரமாகக் கடிதம் எழுதினான்...
செகந்திராபாத் ஸ்டேஷனில் அவன் அவளை வரவேற்கப் பாசத்துடன் காத்திருந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது.
*** *** ***