[6]
’காவல்’ என்று முகப்பில் எழுதியிருந்த அந்த ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க, உதவிப் போலீஸ் கமிஷனர் ஜெயராமன் அன்றைய தினத்தில் இரண்டாவது முறையாக உள்ளே நுழைந்தார்.
நிலையம் திடீரென்று சுறுசுறுப்பாகி அலுவலர்கள் சூழ்ந்துகொள்ள, தொப்பியைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டிவிட்டு காலரைத் தளர்த்திக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.
"கட்சி ஆளுங்களோட அனாவசியமா வெச்சுக்காதீங்கய்யா! எனக்கு இதான் வேலையா? எங்க கலாட்டா நடந்தாலும் அங்க நிச்சயமா கட்சி ஆள் ரெண்டுபேர் இருக்கறது வழக்கமாய்டுத்து. புல்ஷிட் பாலிடிக்ஸ்!" என்றவர், எல்லோரையும் கலையுமாறு சைகை காட்டிவிட்டு, திடீரென்று, "சண்முகசுந்தரம், யார்ப்பா அது ரொம்ப நேரமா வாசல்ல நிக்கறது?" என்றார்.
ஹெட் கான்ஸ்டபிள் சண்முகசுந்தரம் முகத்தில் கலவரம் படர்ந்தது. ’மனுசன் களுகுக் கண்ல எதும்மே தப்பாதே?’ என்று மனதில் வார்த்தைகளை அசைபோடத் தொடங்கியவர் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "அந்தாள் ஒரு தொழு நோயாளிங்க சார். பேர் ஏழுமலையாம். பிளாட்பாரத்தில கையேந்திப் பிழைக்கிறவரு. நைட் போயஸ் கார்டன் டர்னிங்ல பிளாட்பாரத்தில குழந்தையோட தூங்கினாராம். காலைல குழந்தையைக் காணலியாம் சார். ரிப்போர்ட் எழுதிக்கிட்டங்க. நாளைக்கு இன்ஸ்பெக்ட்ர் டூட்டி ஜாயின்பண்ணதும் துப்புத் துலக்க ஆரம்பிச்சிடுவோங்க" என்றார்.
"ஏய்யா, இன்ஸ்பெக்டர் இல்லேன்னா ஸ்டேஷன இழுத்து மூடிடுவீங்களா, அ? காலைல எட்டு மணிலர்ந்து அந்தாள் இங்க தவம் கிடக்காரில்ல? இப்ப மணி என்ன? யார் உங்க டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர்?"
"ஶ்ரீதர் சார்ங்க."
"கெட் ஹிம் ஆன் த லைன்! கண்ணுசாமி, வெளில காத்துட்டிருக்கற அந்தாளக் கூட்டியா."
கான்ஸ்டபிள் கண்ணுசாமி, ’அட, அல்லார் பேரும் தெரிஞ்சு வெச்சுக்கிறாரு!’ என்று வியந்தபடி சென்றார்.
ஏழுமலை உள்ளே நுழைந்தபோது மெலிதான பயத்துடன் கான்ஸ்டபிள்கள் பிரிந்து வழிவிட, அவனை எதிரில் இருந்த பெஞ்ச்சில் அமருமாறு சைகை செய்துவிட்டு உதவி கமிஷனர் தொலைபேசி ரிஸீவரை வாங்கிக்கொண்டார்.
"ஶ்ரீதர், ஜெயராமன் ஹியர்... குட் ஆஃடர்நூன்! உங்களுக்கு ஒரு அர்ஜன்ட் அஸைன்மென்ட். கேஸ் அஃப் அ மிஸ்ஸிங் பேபி. பாஸிபிளி கிட்னாப்ட். ஃபாதர் இஸ் எ லெப்ரஸி பேஷன்ட். நாலுமணி நேரமா ஸ்டேஷன்ல வெயிட் பண்றாரு, நத்திங் இஸ் செட் இன் மோஷன்!... எஸ், உடனே வாங்க."
"வணக்கங்க", என்றான் ஏழுமலை.
"வணக்கம். உக்காரு. எப்பருந்து உன் குழந்தையைக் காணல?"
"போயஸ் தெரு மொகனைல பிளாட்டுபாரத்தில நானும் என் சம்சாரம், கொய்ந்தையும் படுத்திருந்தோங்க. பொதுவா நா நைட்டு சரியாத் தூங்கமாட்டேங்க. உடம்பு பூரா ஒருமாதிரி நமச்சல் எடுத்துக்கிட்டிருக்கும். நேத்து என்னமோ அசந்து தூங்கிட்டங்க. காலீல ஆறு மணிக்குத்தாங்க எந்திரிச்சேன். எய்ந்து உக்காந்தா திக்குன்னதுங்க. எம்மவ அமுதாவக் காணலீங்க", என்றவன் குரல் கரகரக்கத் தலையைக் குனிந்துகொண்டான்.
சண்முகசுந்தரம் அவன் வார்த்தைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டார்.
"குழந்தைக்கு என்ன வயசிருக்கும்?"
"மூணு முடியுதுங்க."
"குழந்தை பாக்க எப்படி இருக்கும்?"
"செவப்பா, அழகா இருக்குங்க, அது அம்மா மாதிரி. லெச்சுமி எனக்கு ரெண்டாந் தாரங்க. எங்களுக்கு சொந்த ஊரு பெரம்பலூர் பக்கத்தில வாலிகண்டபுரம்-ங்க. கல்யாணம் கட்டிகிட்ட பிற்பாடு ஊரை விட்டுப் புறப்ப்டங்க. எதும் படிக்காததால வேலை கிடைக்கல. எடையில எவனோ ஒரு கயவாளிப்பய என் சம்சாரத்துக்கு சினிமா சான்சு வாங்கிதரன்னு சொல்லி, கைலர்ந்த பணமெல்லாம் அவுட்டாயிருச்சிங்க. எதோ ரெண்டொரு படத்துல எக்ஸ்த்ராவா நடிக்க சான்சு கிடைச்சி, நானும் கூலிவேலை செஞ்சு பொழப்பு ஒருமாதிரியா ஓடிக்கிட்டு இருந்ததுங்க. த்திடீர்னு எப்படியோ எனக்கு இந்தத் தொயு நோயி புட்சு பொழப்ப நாறடிச்சிருச்சிங்க. இப்ப ஊர்ப்பக்கங்கூடத் தலை காட்ட முடியல. என்ன பாவம் பண்ணமோ இப்ப கொய்ந்தயும் பூட்ச்சுங்க!"
"எங்கய்யா உன் சம்சாரம்?"
"காலைல ரெண்டுபேரும் சேர்ந்துதாங்க இங்க வந்தம். ஒரு மணி நேரம் கழிச்சு என்ன இங்க பாத்துக்கச் சொல்லிட்டு, அது தெரிஞ்சவங்க கைல கொய்ந்தயப் பத்தி விசாரிக்க போயிருக்குங்க."
உதவி கமிஷனர் ஹெட் கான்ஸ்டபிளைப் பார்க்க அவர் தலையை பென்சிலின் பின்புறத்தால் சொறிந்துகொண்டார்.
"எவ்ளோ நாளா உனக்கு இந்த வியாதி இருக்கு?"
"ஒண்ணரை வருஷமாச்சுங்க. மொதல்ல புண்ணு கொஞ்சம் சாஸ்தியா இருந்து இப்ப பரவாயில்லீங்க."
"ஆஸ்பத்திருக்குப் போறதுண்டா?"
"முன்னேயெல்லாம் மாசம் ரெண்டு வாட்டி போய்க்கிட்டு இருந்தங்க. இப்ப நாலு மாசமா போவல."
"ஏன் போவல?"
"நெதம் ரெண்டு வேளை எதும் துன்றத்துக்கு சம்பாரிக்கிறதே நாய்ப் பொளப்பா இருக்குங்க. அங்க ஆசுபத்திரில எப்பப் பாத்தாலும் கியூங்க. பெரிய பேஜாருங்க."
உதவி கமிஷனர் தலையை இடவலமா ஆட்டியபடி, "கெட் மீ த ஸ்டேட் லெப்ராலஜிஸ்ட், டாக்டர் சுந்தரவதனம்", என்றார்.
வாசலில் ஜீப் வந்து நின்றது.
டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் முன்னால் இறங்கி வேகமாக உள்ளே நுழைந்து உதவி கமிஷனரை நோக்கி நடந்து சல்யூட் அடித்துத் தழைந்து நிற்க, பின்னால் காவல்துறை புகைப்பட நிபுணர், பேதாலஜிஸ்ட், ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட் முதலியோர் தொடர்ந்துவந்து அணிவகுத்து நின்றதும் உதவி கமிஷனர் எழுந்துகொண்டார்.
தொலைபேசி ஒலித்தது.
"டாக்டர் சுந்தரவதனம்? ஜெயராமன் ஹியர். ஹௌ ஆர் யு டாக்டர்?... ஃபைன்! ஒரு பேஷண்ட்ட பாக்கணும்... எஸ், அர்ஜன்ட் கேஸ்! (சிரித்து) யுவர் கேஸ் அஸ் வெல் அஸ் மை கேஸ்!...ஏழுமலைன்னு பேரு. அவரோட குழந்தையைக் காணலியாம். இன்வெஸ்டிகேஷன்ஸ் ஆரம்பிச்சுட்டோம். டு ஸ்டார்ட் வித், நீங்க ஒருதரம் பேஷன்டப் பாத்துருங்க. நாலு மணி வாக்குல டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர்கூட அனுப்பி வெக்கட்டுமா? நானும் முடிஞ்சா ஈவினிங் வரேன். தாங்க்யு!"
"வெல்கம், ஆல் அஃப் யு. நான் வேற ஒரு விஷயமா இங்க வந்தேன். ஶ்ரீதர், யு டேக் சார்ஜ் அஃப் திஸ் கேஸ். நா சொன்னேல்ல, ஏழுமலை? இந்தாள்தான். புவர் மேன்! நான் கிளம்பறேன், நேரமாறது, கமிஷனரைப் பார்க்கணும். [படிப்பதற்கு வசதியாக உ.க. தொடர்ந்த பேச்சு ஆங்கிலத்தில் தரப்படுகிறது.] You interrogate this man and his wife thoroughly. Take a group to the spot. Check everything: soil sample, fingerprints, possible fibres, hairs, tyre marks, footprints, even paint--ஒண்ணுவிடாம எல்லாம் பாத்துருங்க. தேவைப்பட்டா ஃபோட்டோவோட ப்ளாஸ்டர் காஸ்ட் போட்டுக்குங்க, பக்கா எவிடன்ஸா இருக்கும்.
"அப்புறம் சுத்தி இருக்கற கடைகள், அந்த காலேஜ், ட்ரைவ் இன் ஹோட்டல் எல்லாம் துப்புரவா விசாரிக்கச் சொல்லுங்க. You know all these routine only too well! I'm personally interested in this case. வாராவாரம் எனக்கு ரிப்போர்ட் அனுப்பிவிடுங்க. நாலுமணிக்கு இந்தாளை டாக்டர் சுந்தரவதனம்கிட்ட் அழைச்சிட்டுப் போகணும்."
"எஸ் சார்! ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்."
"கவலைப் படாதீய்யா, என்ன? உன் குழந்தையைக் கண்டுபிடிச்சிருவோம், சீக்கிரமே. இவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம விவரமா பதில் சொல்லணும், புரியுதா?" என்று அவன் தோளில் மெதுவாகத் தட்டியவர், ஞாபகம் வந்து வெடுக்கென்று கையை எடுத்துக்கொண்டார்.
"டாக்டர் ரவி, ஹாவ் எ ப்ரிலிம்னரி செக்கப் ஆஃப் திஸ் பேஷன்ட். இஃப் நெசஸ்ஸரி, இந்த இடத்தை டிஸ்இன்ஃபெக்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க."
*** *** ***