ரமணியின் கவியரங்கக் கவிதைகள்
எனக்குப் பிடித்த...
சந்தவசந்தக் கவியரங்கம் 40.
தலைப்பு: ’எனக்குப் பிடித்த...’
தலைவர்: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
பங்கேற்பு: ரமணி
(
https://groups.google.com/forum/
#!topic/santhavasantham/SHouXdA6RN8%5B176-200-false%5D)
மேற்கோள்
கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?...
--மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் 27 மாலை வர்ணனை 149
கடவுள் வாழ்த்து
ஆனை வதனமும் அங்குசமும் மோதகமும்
பானை யுதரமும் ஐங்கரமும் - மோனம்
குவியநின்று சொற்கள் குதிரவைத்(து) ஆர்ந்தே
கவிதையெழ வேண்டு வனே.
அரங்கத் தலைவர்
கல்லணையின் மடைதிறந்த காவிரியின் வெள்ளம்போல்
சொல்லாறு பாயமனச் சோலையெலாம் குயில்கூவக்
கல்லாரும் கற்றாரும் கவியாற்றில் ஆடச்செயும்
சொல்லாளர் இராமமூர்த்தி தொன்றமிழின் செல்வரன்றோ?
இலக்கியமும் உலகியலும் தெய்வதமும் சரிசமமாய்ப்
புலமையுடன் விதந்தோதிப் புகழ்சேர்க்கும் சொல்லாற்றல்
கலன்கலனாய் உரைததும்பக் கவிமலரச் சொற்பொழியும்
தலைவருக்கென் சிரம்தாழ்வேன் தழைக்கட்டும் தமிழோசை!
அவையடக்கம்
பாடறிவேன் படிப்பறியேன் பழம்பனுவல் கற்றறியேன்
ஏடுகளில் கவிதைகளை எழுதுமார்வம் ஒன்றுடையேன்
பாடுமுதற் கவியரங்கப் படைப்பிலெதும் நலிவுகளின்
கோடுகளைக் களைந்திடவே உதவிசெய்ய வேண்டுவனே.
எனக்குப் பிடித்த...
(நாலடி, எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா)
எனக்குமிகப் பிடித்ததுவாய் எதுவென்றே அலசியதில்
மனிதனுடன் இயற்கையுடன் மனமுறையும் இறைவனுடன்
தினந்தோறும் உறவாடித் திளைத்துவரும் பொழுதுகளில்
மனதினிலே பதிவாகி மகிழ்வூட்டும் ஓர்கணமே. ... 1
இயற்கையோடு மனிதனோடு இறைவனுமே கணமொன்றே
இயல்பினாலோ உருவினாலோ செயலினாலோ மனம்நிறைவர்
வயலூறும் சகதியென வளமிடையே குறையுறவே
அயலாகிப் போவதன்றோ அனைத்துருவும் பலகணத்தே! ... 2
கணமொன்றில் அறிஞராவர் கணமொன்றில் வறிஞராவர்
கணமொன்றில் நட்பாகும் கணமொன்றில் அயலாகும்
கணமொன்றில் உறவாகும் கணமொன்றில் பிரிவாகும்
குணமூன்றின் ஆளுகையிற் குன்றுகளும் குறையுறுமே! ... 3
கணமொன்றே இயற்கையதன் அழகெல்லாம் மனதினிலே
கணமொன்றே இறையதுமே அமர்வதெலாம் மனதினிலே
கணமொன்றே நிலைத்ததுவாய்க் கைப்பற்றும் மனதினிலே
கணமொன்றே காரணமாம் கருக்கொளவே சிதைவுறவே. ... 4
கணத்தையேநான் நேசித்தேன் காதலித்தேன் சேகரித்தேன்
அணத்திடுமே அதுவொன்றே அகமகிழ்வின் முன்னிலையாய்
கணம்சென்றால் எதும்மாறும் அகம்புறத்தின் வாழ்வினிலே
கணங்களைநான் நேசித்தே மனக்கோட்டம் எதிர்கொள்வேன். ... 5
[அணத்தல்=மேலோங்குதல்]
மாலைநேரம். பானல்வீழும் ஆனைக்கா சாலையோரம்.
சாலியேனல் தலைவருடித் தாலாட்டும் மலயக்கால்.
சோலைப்புள் காதிழியும். சோதிக்கோக் கண்வழியும்.
கோலங்கள் காவிரியில் குடதிசையின் வானத்தே.
சாலச்சேர் வண்ணங்கள் சந்தியிலே வான்கலக்கும்
காலடியில் பாலம்கீழ்க் காவிரியும் எதிரொளிக்கும்.
காலவீழ்வில் கண்ணிரண்டும் கலைவண்ணம் படம்பிடிக்கும்.
ஓலமனம் உள்வீழ உறைகணமாய் நிலைபெறுமே. ... 6
[ஏனல்=கதிர்; மலயக்கால்=தென்றல்; சோதிக்கோ=சூரியனின் கிரணம்]
இளங்கல்வி பயில்நாட்கள். இணைநின்றார் தோழியரே!
விளையாட்டில் கற்றறிந்த வித்தைகளில் வீட்டினிலே!
களைபொங்கும் முகங்களுடன் காதலித்த கன்றுகளாய்!
தெளிநீரார் ஓடைமேவும் சிற்றலையாய்க் கூடலூடல்!
வளிவெளியில் சுருள்புகையாய் மணம்பரப்பும் ஊதுவத்தி
உளங்களிலே எளிதார்ந்தே உறவாடி உரிமைகொள்ளும்!
வளர்மேனி பூரித்தே வளமாரத் தோழமையும்
தளர்ந்தேகி மனத்துள்ளே தளைப்படுமே சித்திரமாய்! ... 7
அஞ்சுரூபாய்த் தாள்மடித்தே வால்மேலாய்த் தெருவினிலே!
துஞ்சுமதைக் கொள்வரெவர்? தூண்மேல்தன் முது
கிட்டுச்
சஞ்சலனாய்த் திண்ணையிலே அமர்தோழன் உயர்பள்ளி!
வஞ்சமிலா வேடிக்கை வாயயரா மென்பேச்சு!
கஞ்சுகத்தில் நூதனமாம் கார்க்கேசம் ’க்ரூகட்’டாம்!
பிஞ்சுமுகம் கருவிழியும் பின்னாளில் மாறிடினும்
நெஞ்சினிலே என்னாளும் நிற்பதுவாய் அக்கணமே! ... 8
[வால்=வெண்மை: ரூபாய் நோட்டின் வெண்பகுதி]
மற்றபல நண்பருமே வற்றாத கணத்துளிகள்!
பொற்றமிழில்
சுந்தரமாய்ப் போட்டிகளில் எனைவென்று
கற்பனையில் நான்படைத்த கதைத்திருத்தம் செய்தவனும்
உற்றதேர்வைப் ப
ராமுகமாய் ஓர்தாளில் முடித்தவனும்
கற்றறிந்தே
ரமணீயக் கதையெழுதும் வதிலையனும்
கற்றதெலாம்
தாசனாகக் கருத்துடனே பயின்றவனும்
தற்செயலாய்த் தொலைபேசித் தக்கவைத்த தோழமையில்
இற்றைநாள் அக்கணங்கள் மீளவுளம் இனித்திடுமே. ... 9
[வதிலையன் = வதிலையூரில் வசித்தவன்]
கல்லூரி நாள்முதலா அலுவலகத் தோய்வுவரை
நல்லுளமாய் இன்முகமாய் நற்செயலாய்ச் சிந்தனையாய்
மல்குபல கணப்புதையல் மனதினிலே எனக்கெனவே!
எல்லாமே பொன்மணியாய் மேவியுளம் களித்திடினும்
வல்லோரின் விமர்சனமும் வாழ்த்துரையும் என்னெழுத்தைச்
சொல்லசைவில் பொருளிசைவில் சேர்வளங்கள் கொளச்செய்த
தல்லிசந்த வசந்தப்பாத் தளமிதிலே சேர்ந்தநாளே ... [தல்லி=தாய்]
கல்விகேள்வித் தருகண்ட கணமெனவே மிகவிரும்பும்! ... 10
இக்கணத்தை விஞ்சுவதாய் இன்னுமொரு கணமுண்டே!
விக்கிமனம் நெகிழ்ந்திடவே விழிக்கடையில் நீர்சோரும்
அக்கணத்தின் தரிசனத்தில் கவிதையுண்டு கதைகளுண்டு
பக்கமுறும் மனிதருண்டு பார்கலையாய்க் காட்சியுண்டு
நெக்குருகும் சிலிர்ப்பினிலே இறையுருவின் ஆட்சியுண்டு
சொக்குமிசைப் பாடலுண்டு சுந்தரமாய் எதுவுமுண்டு
சிக்கனமாய் மனக்குகையின் திறவுகோலாய் வழிகாட்டும்
அக்கணமே மிகப்பிடித்த கணமென்றே சொல்வேனே! ... 11
என்னைநானும் அறிவதற்கே இவையெல்லாம் முன்னுரையோ?
பொன்மனத்தில் பூரணத்தின் பொலிவினைநான் விழைவதிலே
கொன்னக்கோல் போடுதற்குக் கூழ்நாவும் குழைவதுபோல்
என்னையேநான் நேசித்தல் எல்லாமும் ஆவதுவோ? ... 12
--ரமணி, 04-14/04/2014, கலி.01/01/5115
--இறுதித் திருத்தம்: 09/05/2014
*****