• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
பிரதோஷப் பாடல்
கடலி லெழுவிடம் நத்தியே...


(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)

தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான

கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.

மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!

பதம் பிரித்து:

கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.

[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]

மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!

[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]

--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
மானிடர்க்குத் தேர்த் திருவிழா!

(வெண்பா)

காஞ்சிவரு வாய்த்துறை ஆய்வர்நான் வந்ததுவோர்
ஆஞ்ஞை அறநி லயத்துறை ஆணையர்
ஆட்சியர் நண்பர் அருமுனி காஞ்சிமகான்
காட்சியருள் கொள்ளவிழை வாம். ... 1

பெரியவர்முன் பத்தைந்து பேராய மர்ந்தோம்
அருமுனி யும்தன் அகமலர்ந் தேசிறு
கோவிற் றிருப்பணி கொள்வது பற்றியே
நாவழுத்தும் சொல்லுரைத் தார். ... 2

சட்டென்றோர் கேள்வி தவமுனி கேட்டாரே
கட்டுகள் உள்ள அவனியில் தோன்றிக்
கருவில் திருவுற்ற மானிடர்மூ வர்த்தேர்த்
திருவிழாக் கொள்வர் எவர்? ... 3

மானிடர்க்குத் தேரா மயங்கினோம் மூளையை
ஆனமட்டும் தோண்டியும் காணவில்லை யேவிடை!
புன்னகை பூத்தந்தப் புங்கவர் சொல்லுற்றார்
நன்று விடைசொல்வேன் நான். ... 4

திருவில்லி புத்தூரில் தேர்-ஆண்டா ளுக்கே
பெரும்புதூர்ரா மானுசர் பெற்றார் ஒருதேர்
பெருந்துறை வாதவூர பெற்றதேர் என்றார்
ஒருகுழந் தைசிரிப் போடு. ... 5

[வாதவூரர் = மாணிக்கவாசகர்]

--ரமணி, 25/07/2014, கலி.09/04/5115

கட்டுரை:
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ இரண்டாம் தொகுதி
பக்.208-210, அன்பர் ’இராசு’வின் அனுபவம்

The three great devotees who receive a car procession (????) | Kanchi Periva Forum

*****
 
ஜகத்குரு தரிசனம்
’படிப்பிலே மக்குன்னு நெனச்சியோ?’

(வெண்பா)

உதவி:
Did you think that Periva was not so good at studies? | Kanchi Periva Forum
PerivaSchool.webp

அருந்தவ மாமுனி காஞ்சி மகானின்
அரிதெனும் பள்ளிப் பருவப் பதிவொன்றை
ஆனந் தவிகடன் ஆன்மீகப் பேனாவாய்
ஆனபர ணீதரன்பெற் றார். ... 1

பரணீதரன் சொல்வார்:

ஆர்கா டுமிஷன் அமெரிக்கப் பள்ளியைநான்
ஆர்வத்து டன்-அணுகிக் காஞ்சிமுனி கற்ற
பழைய பதிவுகள் பற்றியே தேடித்
துழவியே தட்டினேன் தூசு. ... 2

திண்டிவனம் ஊரில் சிறந்தவப் பள்ளியில்
கண்டேன் ஒரேவொரு காகிதம் அஃதோர்
வருகைப் பதிவேட்டின் மக்கிய பக்கம்
இருந்ததே அன்னாரின் பேர்! ... 3

சுவாமிநா தன்பேர் சுவாசம் நிறுத்த
அவாவுடன் பள்ளி அனுமதி பெற்றந்த
ஆயிரத்துத் தொள்ளாயி ரத்திநா லாம்-ஆண்டின்
பாயிரம் பெற்றுவந்தேன் நான். ... 4

பெரியவர் ஃபாரம் இரண்டில் படித்த
வருகை அறிவித்த மக்கிய தாளுடன்
ஆந்திர தேசப் பயணத்தில் ஏகிய
காஞ்சிமுனி யைக்கண்டேன் நான். ... 5

நள்ளிரவு, பௌர்ணமி; ஞானியவர் மேனாவில்;
பள்ளி விவரப் பதிவேடு பற்றிநான்
சொன்னபடி கூடவே ஓடினேன் மேனாவும்
நின்றதுசற் றுத்தொலை வில். ... 6

உடன்வந்தோர் ஆகாரம் கொள்ள அனுப்பி
அட-இது எப்படிவுன் கையில் கிடைத்ததென்றார்
கைமின் விளக்கொளியில் கண்ணாடி வில்லையில்
கைமுன் னுளதாள்பார்த் தார். ...

முகம்மலர உள்ளத்தில் முன்னோக்கிப் பத்தாம்
அகவையின் நாட்களில் ஆழ்ந்தார் ஒருகணம்
தன்னுடன் கற்ற சகாக்கள் எவரெவெர்
இன்றில்லை மற்றவர் எந்தவூர் என்றுசொல்லி
என்னிடமோர் கேள்விகேட் டார். ... 8

என்பேர் கடைசியில் இத்தாளில் வந்ததால்
என்ன நெனச்சே? பெரியவா மக்குன்னா?
இல்லை பெரியவா பேரேன் கடைசியிலென்
றல்லல் மனம்கொண் டது. ... 9

பூர்வா சிரமத்தில் ஸ்கூல்-இன்ஸ்பெக் டர்தந்தை
ஊர்-ஊராய் மாற்றல் உறுதியாய்; செப்டம்பர்
மாதமவர் திண்டிவனம் வந்ததால் பள்ளியில்
பாதியில் சேர்ந்தேன்நான் ஆதலால் என்பேர்
கடைசியில் என்றார் குரு. ... 10

--ரமணி, 31/07/2014, கலி.15/04/5115

*****
 
பிரதோஷப் பாடல்
வையம் உய்ய அருள்வானே!


(திருப்புகழ்ப் பாடல்கள் 660. ’கள்ள முள்ள வல்ல வல்லி’
661. ’தொய்யில் செய்யில் நொய்யர் கையர்’ இவற்றின் சந்தம்)

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ... தனதான

தைய லையன் மெய்யி லுய்யச்
. சையங் கொள்ளு ... மருளாள
னையங் கொள்ள வில்ல முள்ளி
. யல்லல் கொள்ளு ... மடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்ய னல்லற் களைவோனாய்
மையற் றள்ளி ஐயந் தெள்ளி
. வைய முய்ய வருள்வானே!

வெள்க டல்மி சைதி ரள்மை
. வெய்து யிர்விண் ணவர்காத்தே
வெள்வி டைமி சைநி லையம்
. மெய்யன் பர்தம் முயிரார்வர்
உள்ளங் கொள்ளுங் கள்ளந் தள்ள
. உய்வ னல்லன் எனவேயிக்
குள்ள னுய்வை யுள்ளி வெய்த
. உள்ளன் வள்ள லருள்வாயே!

பதம் பிரித்து:

தையல் ஐயன் மெய்யில் உய்யச்
. சையம் கொள்ளும் ... அருளாளன்
ஐயம் கொள்ள இல்லம் உள்ளி
. அல்லல் கொள்ளும் ... அடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்யன் அல்லல் களைவோனாய்
மையல் தள்ளி ஐயம் தெள்ளி
. வையம் உய்ய அருள்வானே!

[சையம் = மலை; ஐயம் = பிச்சை;
மெய்யில் வெள்ளி = மேனியில் வெண்ணீறு;
உவ்வி வெள்ளம் = தலையில் (கங்கை) வெள்ளம்;
வெய்யன் = விருப்பமுள்ளோன், தீக்கடவுள், சூரியன்]

வெள்கடல் மிசை திரள் மை
. வெய்துயிர் விண்ணவர் காத்தே
வெள்விடை மிசை நிலையம்
. மெய்யன்பர் தம் உயிர்-ஆர்வர்
உள்ளம் கொள்ளும் கள்ளம் தள்ள
. உய்வன் அல்லன் எனவே-இக்
குள்ளன் உய்வை உள்ளி எய்த
. உள்ளன் வள்ளல் அருள்வாயே!

[வெள்-கடல் = வெள்ளிய கடல், இங்கு பாற்கடல்;
மை = இருள், களங்கம், இங்கு ஆலகால விடம்;
வெய்துயிர்த்தல் = வெம்மையால், துன்பத்தால் மூச்சுவிட்டு உயிர்த்தல்;
வெள்-விடை = வெண்ணிற எருது; நிலையம் = கூத்து, ஆடல்;
உள்ளன் = உள்ளிருப்பவன், உற்றவன்]

--ரமணி, 06-08/08/2014, கலி.23/04/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
கணிதத்தில் சீவனும் பரமனும்!


(இதன் மூலத்தை அவசியம் படிக்கவும்:
Periva's exposition on Mathematical formulae! | Kanchi Periva Forum)

(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா)


அத்வைதம் என்றாலும் துவைதமென் றாலுமவை
. சார்ந்தவி சிஷ்டாத்து வைதமென் றாலும்
தத்துவம் ஒன்றேதான்: சீவனின் இலக்கென்றே
. ஆவது பரமன்தான் என்றிவை சொல்லும்;
எத்தகு சூழ்நிலையில் சீவனின் இருப்பென்றும்
. எவ்வழி உய்வென்றும் சொல்வது மாறும்;
முத்தியின் வழிசொல்லும் தத்துவம் மூவகையின்
. ஒப்புமை கணிதத்தால் அறிந்திட லாமே. ... 1

சங்கரர் அத்துவைத வழியினில் பரமாத்மன்
. சதுரமாம் சீவாத்மன் அதனொரு பக்கம்!
இங்கிதம் என்னவெனில் சதுரமும் சுற்றளவில்
. சீவனாம் பக்கத்தின் நான்மடங் கென்றே.
சங்கையாம் நான்கென்றால் கூறுறா எண்ணாகும்
. சமுசயம் இல்லாத இணைப்பிது வாமே
இங்ஙனம் சமன்பாட்டில் சீவனும் பரமனாகி
. இணைந்தியல் நிலையென்று நிச்சயம் உண்டே! ... 2

[இங்கிதம் = குறிப்பு, கருத்து, இனிமை;
சங்கை = எண்; கூறுறா எண் = rational number;
சமுசயம் = சந்தேகம்; சமன்பாடு = equation]

மத்துவர் துவைதவழி யில்லிது கடுமையாகும்
. வட்டமும் வட்டத்தின் விட்டமும் என்றே
ஒத்ததோர் நிலையினிலே சீவனும் ஆத்துமனும்!
. சுற்றள வில்வட்டம் எத்தனை விட்டம்?
இத்தகு சமன்பாட்டில் ’பை’யெனும் மாறிலியே
. இரண்டையும் தொடர்புறுத்தும் கூறுறும் எண்ணாய்;
எத்தனை முயன்றாலும் ’பை’யதன் விகிதத்தை
. எண்ணுதல் முற்றுப்பெ றாதென வாகும். ... 3

[’பை’=mathematical pi; மாறிலி = constant]

எங்ஙனம் வட்டத்தின் சுற்றினை விட்டமொன்று
. நெருங்கவே முடியாத நிலையென் றாமோ
அங்ஙனம் சீவாத்மன் எத்தனை சாதனைகள்
. ஆற்றியும் பரமாத்மன் என்பதா காதாம்
எங்ஙனம் ஐன்ஸ்டயினின் தேற்றமும் ’பை’கொண்டே
. இப்பிர பஞ்சத்தில் அனிச்சயம் சொலுமோ
அங்ஙனம் பேதமுறும் சீவனும் ஆத்துமனும்
. சடமெனும் பொருட்களுடன் சீவனும் தாமே. ... 4

கருவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா

உடையவர் விசிஷ்டாத்து வைதமாம் பரமாத்மன்
. உருவிலே வட்டம்போல் தோன்றிடும் சதுரம்!
விடையென இவ்வழியில் துவைதமும் அத்வைதமும்
. இணைத்தொரு வழியினையே முத்தியாய்ச் சொல்லும்!
நடுவென இருமுனையின் சராசரி யெடுப்பதுபோல்,
. அரிசுடாட் டில்’கோல்டன் மீன்’-தனைப் போல!
நடைமுறை நெறியெனவே நாரணன் நெறியிதுவே
. ஆகுமாம் நம்மிடையே பலவடி யார்க்கே! ... 5

பரமனே நீயென்றோர் சீவனி டம்சொன்னால்
. வருவதோ மிதப்பென்றே ஆகவாய்ப் புண்டு
பரமனாய் நீயென்றும் ஆவது இலையென்றால்
. வருவதோ விரக்தியென ஆகலாம்! எனவே
பரம்பொருள் குழப்பவட்டம் அவித்தையே உள்ளவரை
. பரம்பொருள் தெளிசதுரம் ஞானம துவந்தால்
உருவினில் பலபெயர்கள் வெளியிலே! பேருந்தின்
. உள்வரின் நடத்துனர்க்கோ அனைவரும் ’டிக்கெட்’! ... 6

--ரமணி, 10/08/2014, கலி.25/04/5115

*****
 
பிரதோஷத் துதி
கயிலையில் மேவிடும் பரமே!

(எழுசீர் விருத்தம்: கருவிளம் மா விளம் மா கருவிளம் விளம் மா)

ஒளிநிழற் புணர்வில் உலகுறும் உருவம்
. உருவினிற் புகுந்ததை மீட்டும்
வளியதன் ஒலியே வாக்குறும் மனமாம்
. மனமதன் இயக்கமென் றுயிரில்
ஒளிசிவம் உயிரின் இயல்பெனும் இருப்பாம்
. இருப்பிது அறிவினிற் கலந்தே
உளம்பர வியுமே உணர்வினில் அறியா
. துளைவிதே அகல்வதென் னாளோ?

இடபமி வர்ந்தே இடப்பதம் உயர்த்தி
. இகபரம் அகலவே முத்தித்
தடமதிற் செல்லும் தகவினைக் கொள்ளத்
. தகுந்ததோர் வழியினைக் கூட்டும்
நடமதன் பண்ணோ டொலியுட னிசையும்
. நலமது மனதினில் வந்தே
கடையனாம் எனக்கும் அருள்செய வேண்டும்
. கயிலையில் மேவிடும் பரமே.

--ரமணி, 22/08/2014, கலி.06/05/5115

*****
 
கவி காளமேகத்தை ஒருமுறை புலவர்கள் ’செருப்பில் தொடங்கி விளக்குமாற்றில்’ முடியும்படியோர்
வெண்பா பாடக் கேட்டபோது காளமேகம் ஆசுகவியாகப் பாடிய பாடல்:

(?????????? ?????????????! - Dinamani - Tamil Daily News)

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்ட்ட்ன் பொழிந்ததிருத்ஜ் தாமரைமேல் வீற்றிருக்கும்
வணே விளக்குமா றே!

காலணிக்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் கீழ்க்கண்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டன:
செருப்பு, அடியுறை, அடையல், அரணம், தொடுதோல், வடிம்பு.

இவற்றை முதலில் அமைத்து விளக்குமாற்றில் முடியும்படி அடியேன் சிவன் மீது இயற்றிய
ஓர் வெண்பாப் பதிகம் கீழே.

பாதரட்சை விளக்குமாற்றுப் பதிகம்

செருப்புடைத்து நின்றாளும் சிந்தை யகல
நெருப்புடன் நீருடன் நின்றே - பொருப்புறை
வானைப் பணிநெறியே மாயையில் மாயுமுளத்
தானை விளக்குமா று. ... 5

அடியுறை உள்ளத் தழுக்கெலாம் நீங்கி
அடியுறைத் தூளென வாழும் - அடியவர்
அத்தனைப் போற்றும் அறவழி யாகுமே
முத்தி விளக்குமா று. ... 6

அடையல் உரிவை அரையில் அணிந்தே
படையல் புரத்தல் பறித்தல் - நடனத்
தலையில் அனைத்தும் அழியத்தான் நிற்கும்
நிலையம் விளக்குமா றோ? ... 7

[அடையல் = செருப்பு; நிலையம் = இலக்கு, கூத்து நிலைகொள்ளுமிடம்]

அரணம் அடிபுதைத்தே ஆடிட அண்டம்
மரணத் தடிபட்டே மாறப் - பரமன்
நெறியே உலகின் நிலையாமை பற்றி
அறியும் விளக்குமா றாம். ... 8

[அரணம், அரண் = செருப்பு]

தொடுதோல் உரிவை உடுக்கையாம் மேனி
அடியார்க் கமுதுறும் காட்சி - விடையோன்
கழலணை வில்வரும் காப்பதே உய்வின்
வழியை விளக்குமா று. ... 9

[தொடுதோல் = செருப்பு, சிவன் அடித்துக் கொன்ற யானை]

வடிம்புறும் தோலென வாழ்ந்தே பணிசெய்
அடியாரைச் சோதிக்கும் அத்தன் - கடுமையின்
பின்னுள நன்மையின் பெற்றியை எவ்வுளந்தான்
என்னென் றுவிளக்கு மாறு. ... 10

--ரமணி, 21/08/2014

*****
 
பிள்ளையார் சதுர்த்தித் துதி

ஒருகோட் டிருசெவியர் முக்கணர் நால்வாய்
இருள்நீக்கும் ஐங்கரற் கிந்நாள் அறுசுவை
அன்னமிட்டேன் ஏழ்பிறப்பின் அல்லல் அகலவே!
இன்சுவை மோதகம் எண்வகைச் சீர்தந்தே
ஒன்பதின் ஆட்சியில் உள்ளுறை நன்மையாகிப்
பத்துத் திசையின் பருமை தகர்ந்துவரும்
முத்தி அருள்வதெந்நா ளோ?

--ரமணி, 29/08/2014

*****
 
இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.

ஈச்சனாரி கணேச்வரன் துதி
(குறும்பா)

கோயில்:
Vinayagar Temple : Vinayagar Vinayagar Temple Details | Vinayagar- Eachanari | Tamilnadu Temple | ????????

காப்பு
ஈச்சனாரிக் கோவிலில் இன்முகம் காட்டியே
வீச்சருள் செய்யும் விநாயக! என்பாட்டில்
ஓச்ச மகன்றே ஒளியுடன் நான்பாடும் ... [ஓச்சம் = குற்றம் குறை]
தேர்ச்சியைத் தந்தருள்வா யே.

துதி
ஈச்சனாரி கோவிலிலுறை இறைமகனே
வாச்சியமாய் இத்தலமுன் உறையகமேன்? ... (வாச்சியம் = வெளிப்படையானது)
. கட்டிவைத்தே கூட்டிவர
. பட்டீச்வரம் வேட்டலின்றி
ஈச்சம்பழம் வேட்டாயுன் நிறையெனவோ!? ... 1

நாள்மீனாய் இருபத்தேழ் நள்ளுதலில்
கோளெனவே அலங்காரம் கொள்முதலோ?
. நெடுவினிலே ஐந்தடியாய்
. இடையினிலே மூன்றடியாய்
ஆளெனவே ஆளுகின்ற அள்ளமுதே! ... 2

சிதறுதேங்காய் கொழுக்கட்டைச் சுண்டலுடன்
உதவிநாடி வழிபட்டோம் கண்டவுடன்
. சந்தனமும் பன்னீரும்
. வந்தனையில் முன்னீடாம்
இதமளிப்பாய் வினையெல்லாம் விண்டிடவே! ... 3

கல்விகேள்வி தொழில்மேன்மை தருவாயே
நல்லதெல்லாம் தங்கிடவே அருள்வாயே
. பாதவிணை பற்றிடவே
. வேதனைகள் அற்றிடுமே
வல்லமையெம் சாதனையில் உருவாமே! ... 4

அனுதினமும் ஆடகத்தேர் தரிசனமே
கனவெல்லாம் நனவறுமுன் கரிசனமே
. ஆனைமுகன் துதியுறவே
. ஞானம்வரும் கதியுறவே
இனியெமக் கெல்லாமே சரிசமமே! ... 5

--ரமணி, 12/09/2014, கலி.27/05/5115

*****
 
21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

arugampiLLaiyAr.webp

ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****
 
பிரதோஷத் துதி: ஒரு துளி இன்பமே!
(ஆசிரியத் தாழிசை)

அந்தியில் எண்ணம் அறுந்தே நின்னுருமேல்
வந்துறும் அபிடேக வண்ணம் கண்டபின்
சிந்தனை மீண்டும் சிறுமையைத் தேடுதே! ... 1

பாலவர் உன்புகழ் பாடக் கேட்டும்
நாவலந் தன்னில் நானதைப் பாடியும்
பாவமே மீண்டும் படியுதே ஏனோ? ... 2

என்மனம் கட்டிநான் ஏத்தியோர் பாடல்
உன்மேல் புனைந்தும் உண்மை யிதுவென்(று)
இன்னும் உணர்வினில் இறங்கிலை யீசனே! ... 3

செக்கினைச் சுற்றும் எருதென நானும்
மக்கிடும் உலகின் மாயையைச் சுற்றுவதில்
பக்குவம் என்றுறும் பரமனே என்வாழ்வில்? ... 4

பரமன் கழலிணை பற்றிநான் கேட்பதெல்லாம்
வருநாள் வறிதாகும் வாழ்விலுன் இறைமையின்
ஒருமை யுணர்வின் ஒருதுளி இன்பமே! ... 5

--ரமணி, 21/09/2014, கலி.05/06/5115

*****
 
பிரதோஷத் துதி: ஆவியிலே நிணர்ந்தருளே!
(குறும்பா)

மூங்கிலன்ன தோளுடைய அன்னையவள்
பாங்குடனே பக்கமுறும் முன்னவனே
. பாற்கடலின் நஞ்சழுத்தும்
. நாற்கரத்தான் அஞ்செழுத்தும்
வாங்கிடுமே வாணாளின் வின்னமதே. ,,, 1

[வாங்குதல் = தீர்த்தல், அழித்தல்; வின்னம் = சிதைவு, வேறுபாடு]

மானாடும் மழுவாடும் மங்கையாடும்
வானாடும் மதியாடும் கங்கையாடும்
. மேனியிலே தோலாட
. ஞானமதே மேலாடக்
கானாடும் காலாடச் சங்கையோடும்! ,,, 2

[சங்கை = ஐயம், அச்சம், பகை]

சுந்தரனாம் அந்தரனாம் அந்தமிலி
சொந்தமென வந்துறுவான் சொந்தமிலி
. அந்தியிலே விந்தையுற
. அந்தணரின் சந்தமுற
எந்தையென வந்தருள்வான் சிந்தையிலே. ,,, 3

நாலடியார் போற்றுகின்ற நாதனவன்
ஆலமர்ந்தே ஞானம்தரும் வேதனவன்
. அண்ணலவன் பண்ணதிர
. எண்ணமெலாம் மண்ணுதிரும்
காலடியில் தீர்ந்துவிடும் வேதனையே. ,,, 4

இத்தனையும் உளமுற்றும் உணர்ந்திலனே
சித்தமுறும் இன்பமெலாம் உலர்ந்தனவே
. துன்பமெலாம் துச்சமாக
. அன்பொன்றே மிச்சமாக
நத்தியென்றன் ஆவியிலே நிணர்ந்தருளே. ,,, 5

[நிணர்தல் = செறிதல்; ’எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைக். நாட்.109)
Tamil Dictionary).
இம்மை வாழ்வின் அறுசுவைகளிலும் நவரசங்களிலும் மனம் மொழி மெய்யினால் திளைத்துத்
தன்னியல்பை மறந்து தாபத்தில் தவிக்கும் என் ஆன்மாவிலே மரநிழல் போல் நிணர்ந்து
கலந்து அருள்செய்க.]

--ரமணி, 06/10/2014, கலி.20/06/5115

*****
 
’பாகற்றேன்’ மடக்கு
(கலிவிருத்தம்)

பாகற்றேன் என்றேன் பரிகசித்தார் பாவலர்
பாகற்றேன் உள்ளதும் பாடல் எனக்கேட்டார்
பாகற்றேன் சர்க்கரைப் பையுளுக் கென்றேன்நான்
பாகற்றேன் எல்லாம் பரமனுரு என்றாரே.

முதலடி: பாகற்றேன் = பாகல் + தேன்; பா + கற்றேன்
இரண்டாமடி: பாகற்றேன் = பாகு + அற்று + ஏன்
மூன்றாமடி: பாகற்றேன் = பாகல் + தேன்; பையுள் = நோய்
நான்காமடி: பாகற்றேன் = பா + கல் + தேன் = பாம்பு, கல், பெண்வண்டு

--ரமணி, 11/10/2014

*****
 
I enjoyed these pieces published in Mangaiyar Malar. These were written by the actor Crazy Mohan:

1.
ஊரைவிட்டோடலால் ஒன்றிக்கலத்தலால்
யாரிடமும் கூறாமல் ஏற்பதால்--பாரினில்
சாதலை வென்று சமாதியில் நிற்பதால்
தீதிலாக்காதல் துறவு.

2.
கமர்கட் கடலையுண்டை குச்சி ஐஸ் மூன்றும்
சமர்ப்பிப்பேன் நானுனக்கு என்றும் --அமர்ந்திட்டு
செங்கழுனீர்ப்பிள்ளையாரே சாப்பிட்டு திருப்தியாய்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

3.
வானகத்து தேவானை வாய்த்தும் விருத்தனாய்
மான் நிகர்த்த வள்ளி மடமயிலை--கானகத்தில்
வேலன் டைம்பாஸாய் வெகுவாக நேசிக்க
VALANTINE DAY யாச்சுதுவே.
 
கிரேசி மோகனின் இப்பாடல்கள் slapstick-ஆக இருந்தாலும் அவர் நற்றமிழில் மரபு வெண்பாக்கள்
எழுதும் திறம் படைத்தவர். உதாரணமாக,

அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்த‌
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட‌த்
தோழா கொடுத்திடு தோள்.

--கிரேசி மோகன்

ரமணி
 
கிரேசி மோகனின் இப்பாடல்கள் slapstick-ஆக இருந்தாலும் அவர் நற்றமிழில் மரபு வெண்பாக்கள்
எழுதும் திறம் படைத்தவர். உதாரணமாக,

அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்த‌
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட‌த்
தோழா கொடுத்திடு தோள்.

--கிரேசி மோகன்

ரமணி

இக்கவிதைகள் பழகுதமிழில் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. பாவகை என்பது ஒரு உத்திதான் என்று கொண்டு விஷயத்தைக்கொண்டு சேர்ப்பதை குறிக்கோளாக நினைத்து எழுதப்பட்டவை இவை என்பது புரிகிறது. கருத்து மனதை ஈர்த்து நிறுத்துவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் வண்ணக்கலவையும் என்று கூறாமல் கூறும் வெண்பாக்கள் இவை. எனவே எனக்கு பிடித்திருக்கிறது. எனவே பழகு தமிழ் நற்றமிழாகிறது. நன்று.
 
ஜகத்குரு தரிசனம்
24. ’நிறுத்திவிடு காமாட்சி!’
(அறுசீர் விருத்தம்: கருவிளம் மா காய் ... விளம் மா காய்)

உதவி:
??????? .... ??????! ???????? ????????????! ????????????? | Kanchi Periva Forum

திருவிசை நல்லூர் ஊரினிலே
. திருமுனி தந்தார் தரிசனமே
இருவிழி யற்ற பெண்ணொருத்தி
. இன்முகம் காணக் காத்திருந்தாள்
திரிபுர சுந்தரி வழிபாட்டில்
. தேர்ந்தவள் தங்க உண்ணச்செய்
தரிசனம் தருகுவன் அங்குவந்தே
. சங்கரர் சொன்னார் அடியரிடம்.

அடியவர் தானே தயாரித்த
. அரிசியா லான உப்மாவைப்
படையலாய்க் கொண்ட பெண்மணியும்
. பார்வையை மூடித் தியானிக்கக்
கிடைத்தத வள்கரம் ஶ்ரீசக்ரம்!
. இதையடுத் தேதோ செய்திடவே
கிடைத்தசக் கரமும் மறைந்ததுவே!
. சீடரும் கண்டே அதிசயித்தார்.

விளக்குகள் மெலிதாய் ஒளிர்ந்திடவே
. வினவிவினள் முனிவர் தரிசனத்தில்
விளக்குவீர் எனக்கேன் சகஸ்ராரம்
. விளங்கிடும் ஜோதி தெரியவில்லை?
உளத்தினை மூடிச் சிறுநேரம்
. ஒருமையில் தியானம் செய்யென்றார்
விளக்குகள் யாவும் அணையென்றார்
. விழிகளை மங்கையும் மூடிடவே.

அடுத்தவோர் நிமிடப் பொழுதினிலே
. அலறினாள் பெண்மணி தாளாதே!
கிடைத்தது ஜோதி தரிசனமே
. நிறுத்திதை போதும் காமாட்சி!
உடன்விளக் கெல்லாம் ஏற்றென்றார்
. புறவொளி யில்பெண் அமைதியுற்றாள்
சடுதியில் முனியும் சென்றுவிட்டார்
. அடியவர்க் கொன்றும் புரியவில்லை!

நடந்ததைக் கேட்ட அடியரிடம்
. நங்கையும் சொன்னாள் இங்ஙனமே
முடியுறும் ஜோதி தரிசனத்தை
. முனிவரும் எனக்குத் தந்தனரே
உடையவ ராயவர் காமாட்சி
. உருவினில் தந்த ஜோதியினை
இடிவரும் மின்னல் போல்நானும்
. இரண்டுநி மிடமே கண்ணுறலாம்!

அன்னைகா மாட்சி ஜோதியினை
. அதற்குமேல் காணத் தாங்காதே!
என்மனம் தாளா தேநானும்
. நிறுத்திடச் சொல்லி அலறினனே!
என்னவோர் பேறென அடியவரும்
. இந்நிலை வியந்தே துணுக்குற்றார்
மன்பதை போற்றும் மாமுனியே
. மன்றினில் ஆடும் இறையன்றோ?

--ரமணி, 26/10/2014, கலி.09/07/5115

*****
 
பால விநாயகர் கோவில், வடபழனி
Temple : Temple Details | - | Tamilnadu Temple | ??? ????????
(குறும்பா)

காப்பு
அரச மரத்தில் ஐங்கரவுன் ரூபம்
இருபதின் ஒன்றென இன்று வளர்ந்தே
வலம்வரும் கோவில் வடப ழனியின்
நலம்பாடக் கேட்டேன் அருள்.

பதிகம்
வடபழனி அருகினிலோர் அரசமரம்
குடையெனவே நிழல்தந்தே பரிசுதரும்!
. ஆனைமுகன் அடிமரத்தில்
. மோனமுக வடிவுறுத்தே
விடையருள வீற்றிருக்கும் தரிசனமே! ... 1

அரசமரம் அதிகாலை வலம்வரவே!
உருவமதே கணபதியாய் நலம்தரவே
. சூழ்வினைகள் அற்றிடவே
. நாள்முழுதும் சுற்றுவரே
கரிமுகனை வேண்டுவரே நலம்வரவே! ... 2

ஆதிவாரம் ராகுகால நாழிகையில் ... [ஆதிவாரம் = ஞாயிற்றுக் கிழமை]
வேதனைகள் இல்லாதே வாழவென
. இருமூன்று எலுமிச்சை
. இருகையில் தருவித்தே
சாதனையாய்ச் சுற்றுவரே வேழவனை. ... 3

கருவறையில் பாலனுரு நாயகராம்
அரசுருவில் இருபத்தொன் றாயவராம்
. இருபுறமும் கண்ணாடி
. முருகனுரு முன்னாலே
அறுமுகமும் ஒருநூறாய் ஆவதுவாம்! ... 4

முப்பதாண்டு முன்னாலே காவலென
இப்பகுதி மக்களிடைக் கோவிலென
. குடியரசு நாளினிலே
. வடிவுறுத்தார் தாளுறவே
எப்பொழுதும் அருள்சுரக்கும் வாவியென. ... 5

அரசமரம் குடையாக ஆனைமுகம்
அருள்செய்ய மேவியதோர் மோனமுகம்
. ஆலயத்தை விரிவாக்கிக்
. கோலமெலாம் உருவாக்க
மரம்வெட்ட எண்ணியதே தீனமனம்! ... 6

சிலைசெய்யச் சிரமங்கள் வந்ததுவே
கலையாளும் சிற்பியரும் நொந்தனரே!
. மரமேனும் வெட்டிடவே
. மரமனதில் பட்டிடவே
நிலைமரமும் இறையுருவைத் தந்ததுவே! ... 7

கோடரியைப் பிடித்தகரம் கும்பிடவே
ஆடலெனப் பலவுருவ ரும்பியதே
. பதினாறாய் வளர்ந்ததுவே
. அதியைந்தும் கிளர்ந்ததுவே ... [அதியைந்து = மேலும் ஐந்து]
ஈடிலாத அற்புதமாய் நம்பிடவே! ... 8

சேண்பாக்கம் ஆலயத்தில் காஞ்சிமுனி
காண்முகமாய்ப் பதினாறாய் வாஞ்சையுற
. அருமுனியின் திருவுருவும்
. பெருமையென நிறுவினரே
ஈண்டுறையும் இறைமகனின் ஆஞ்ஞையென. ... 9

பிள்ளையாரின் பிள்ளையென வாழ்வுறவே
கொள்ளுமனத் துன்பமெலாம் பாழ்படுமே
. வேழமுகன் தரிசனத்தில்
. தோழமையின் கரிசனமே
தள்ளுவது எளிதாகும் ஊழ்வினையே! ... 10

--ரமணி, 10/11/2014, கலி.24/07/5115
(சங்கடஹர சதுர்த்தி தினம்)

*****
 
சந்தவசந்தக் கவியரங்கம் 41.
தலைப்பு: ’நான் எங்கேபோய்க்கொண்டிருக்கிறேன்’
தலைவர்: கவியோகி வேதம்
பங்கேற்பு: ரமணி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/kPqhhnn7w60[276-300-false]

கடவுள் வாழ்த்து

தொந்திக் கணபதிக்கென் தோப்புக் கரணங்கள்!
சிந்தையில் வந்தெனக்குச் சீர்தந்தே - சந்தவ
சந்தக் கவியரங்கம் தந்த பொருளுக்குச்
சிந்துவகைப் பாட்டெழுதச் செய்.

தலைவர் வாழ்த்து

அத்தாழ நல்லூரின் அட்வகேட் என்றொரு
வித்தகர் பட்டம்! விருது பலபெற்றும்
சத்தமில் லாதொரு சாதனை மேற்கொண்டு
நித்தமும் தன்னை நிமலனின் சேவைக்கென்
றர்ப்பணித்தே மற்றவரின் ஆன்மாவை மேம்படுத்தும்
கற்பகத் தாரு கவியோகிப் பன்முகத்தீர்!
தற்சிரம் தாழ்வேன் தழைந்து.

அவைப் பெருமை

சந்தவசந் தம்மென்னும் குழுவிது - செய்த
. சாதனைக்கோர் ஈடிணையா யேதுள?
வந்தகவி மரபினிலே விழுமியர் - இவர்
. வைத்தகவி யாவையுமே மாதுளை!

அவையடக்கம்

கவிதாவைக் காதலிக்கும் யோகிநீர் - இங்குக்
. காவலராய்க் கோலோச்சும் மேடையில்
சவிதாமுன் சிறுமீனா யாகுமென் - பாடல்
. சவலையெனில் முழுமையெனக் கொள்ளுவீர்!

’நான் எங்கேபோய்க்கொண்டிருக்கிறேன்’
(முச்சீர் சமநிலைச் சிந்து)

காலைமுதல் நாள்முழுதும் கணினியே - என்றன்
. காதலியாய் மீட்டிவிரல் வாழ்வனே
வேலையெனப் போகையிலே காரிலே - மடி
. மீதமரும் காரிகையாய்ச் சூழ்வளே! ... 1

மின்சாரக் காற்றுதரும் மென்குளிர் - என்றன்
. மேனியிலே நாளெல்லாம் மேவுமே
என்னோயும் தாக்காமல் மென்றளிர் - என்று
. என்மேனி பேணுவதில் சேமமே. ... 2

வாதுமையல் வாவினைநான் நாடியே - நாவில்
. வண்டலுறும் தீஞ்சுவையைப் பேணுவேன்
மாதுமையாள் பாகனிங்ஙன் நாடிலேன் - என்று
. மனதினிலே மூலையொன்றில் நாணுவேன்! ... 3

காய்பொதிப ரோட்டாச்சன் னாவினை - வாங்கிக்
. காரசாரம் வாயூற உண்ணுவேன்!
வாய்புதையப் பிட்சாவென் நாவிலே - தலை
. வானோக்க லிம்காவைப் பருகுவேன்! ... 4

வகைவகையாய் அன்னமெனும் சித்திரம் - என்றன்
. வட்டிலிலே அறுசுவையில் நித்தியம்!
இகபரத்தைப் பற்றியிலை சித்தமே - இதை
. இடித்துமன மூலையொன்று குத்துமே! ... 5

கண்ணெதிரே மானுடத்தின் வண்ணமே - செய்திக்
. காட்சிகளின் விறுவிறுப்பே பாசுரம்!
எண்ணமெலாம் ஐம்புலனை எண்ணுமே - இதை
. ஏசிமன மூலையொன்று பேசுமே! ... 6

தெரிவதெலாம் தெய்வநெறிப் புத்தகம் - ஆயின்
. தேடுவதோ தொக்காவின் நீள்படம்!
எரிகதிரின் காலையின்னும் எத்தனை? - எண்ணிலேன்
. ஏனென்றே மூலையொன்று காழ்ப்புறும்! ... 7

[தொக்கா = தொலைக்காட்சி என்ற சொல்லின் சுருக்கம்]

கோவிலிலே கோலவிழி மாதரும் - எழில்
. கூட்டிவரும் காட்சிவிழி முன்படும்!
ஏவுமனம் கடைக்கண்ணால் நாதரும் - காண்பதை
. எள்ளுதலும் செய்துமிகப் புண்படும்! ... 8

வாழ்வினிலே பொருள்தன்னை நாடினேன் - வந்த
. வளந்தன்னில் வசதியெலாம் கூட்டினேன்
வாழ்வதனின் பொருளென்ன நாடிலேன் - இன்னும்
. வங்கமெலாம் வெள்ளியென வேட்பனே! ... 9

[வங்கம் = தகரம், ஈயம்]

செந்தமிழில் சந்தமெலாம் எண்ணியே - வந்த
. சீரசையச் சிந்தையுறும் வேள்வியே!
வெந்ததென்ன வாழ்ந்ததென்ன எண்ணிலேன் - இங்கு
. வேரெனவே நிற்குமொரு கேள்வியே! ... 10

விழியசைவில் கொள்ளுமுகம் ஒன்றுதான் - பிறர்
. விழிகளிலே காணுமுகம் ஒன்றுதான்
விழிதூங்கக் கொள்ளுவதோ பன்முகம் - இதில்
. இலவுகாத்த கிளியென்றே என்முகம்! ... 11

ஆற்றொருகால் சேற்றொருகால் வாழ்விது - ஆயின்
. அன்பொன்றே பின்னுறுமேல் தாழ்வெது?
நேற்றின்று நாளையெனும் வெள்ளமே - அதில்
. நீந்துவதே சாதனையாய்க் கொள்ளுவேன். ... 12

எங்கேபோய்க் கொண்டிருக்கி றேன்நான் - என்று
. தொங்கலாக உள்ளதும்-ஓர் இன்பமே!
சங்கமெலாம் சத்சங்க மேதான் - ஈற்றில்
. தங்குவது பற்றியச்சம் இல்லையே! ... 13

--ரமணி, 01/11/2014, கலி.15/07/5115

*****
 
நண்பரே,

ம் ஹூம் எத்தனை முயன்றும் பலனில்லை. அந்தக் "காய்பொதி பரோட்டாச்சன்னா....." என்னைப் படுத்துகிறது. அது என்ன காய்பொதி? என்ன பொருளில் அந்தப்ப்ரயோகம் வருகிறது? குறிப்பாக என்ன காய்?

"மைபொதி விளக்கேயென்ன மனதினுள் கறுப்புவைத்து........." நினைவுக்கு வர, அதோடு இதையும் சேர்த்துப்பார்த்தேன். என்றாலும் இந்த மரமண்டைக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்குங்களேன்.
 
அது வேறொன்றுமில்லை, stuffed parotta என்பதன் தமிழாக்கமாக்கும்!

ரமணி
 
பிரதோஷ நாயகன் கும்மி

வானவர் தானவர் பாற்கடல் ஆர்த்தெழு
. வாசுகி நஞ்சினால் அச்சமுறக்
கானகம் ஆடிடும் கண்ணுத லற்புதன்
. கண்ட மிருத்தியே காத்தருள
வானகம் எங்கணும் சூரியப் பட்டொளி
. வானவில் வண்ணம்நி றைபொழுதில்
தேனனின் ஆடலைச் சேமிசைக் காணுவோர் ... [சேமிசை = எருதின் மீது]
. திண்ணிய ராகவே கும்மியடி! ... 1

அஞ்செழுத் தோதையும் ஆரணத் தோதையும் ... [ஓதை = பேரொலி, ஆரவாரம்]
. அம்பல வாணணின் பண்ணொலியும்
விஞ்சியே விண்ணுற மஞ்சனம் ஆடிடும்
. வேடனின் லிங்கத்தில் நீர்ப்பொழிவே!
நெஞ்சழக் கண்களில் நீர்வரும் போதினில்
. நித்திய வேதனை நீக்கிடும்தாள்
தஞ்ச மடைந்தவர் காத்திட வேகரத்
. தாளமும் ஆர்த்திடக் கும்மியடி! ... 2

எங்கணும் இன்பமே எங்கணும் சாந்தியே
. ஏனோ எனதுளம் ஏங்கிடுதே
கங்காளன் தாளிணைக் காப்பினை நானொரு
. கண்ணிலன் போலவே பற்றிவிட்டேன்
பங்கயம் பூப்பது சேறெனி னும்மனம்
. பாழுறும் சேற்றினில் பூத்திடுமோ?
தங்கிடும் நாளினில் தாண்டவன் என்னுளம்
. தங்கியே ஆட்கொளக் கும்மியடி! ... 3

--ரமணி, 19/11/2014, கலி.03/08/5115

*****
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top