• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
ஹாஸ்யக் குறட்பாக்கள்: மணவாழ்வு அன்று

மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு. ... 11

மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது? ... 12

மாமியார் மெச்சிய மாட்டுப்பெண் உண்டோசொல்?
சாமியாலும் ஆகாத வொன்று. ... 13

கணவனவன் அம்மாக்கோண்(டு) ஆகிவிட்டால் அந்தோ
மனைவியின் வாழ்க்கை நரகு. ... 14

மாமனார் வாயில்லாப் பூச்சியாகி விட்டாலோ
மாமியார் ராச்சியம் தான். ... 15

பணமும் நகையும் படைத்தாயின் வாழ்க்கை
மணமகள் கைவசம் தான். ... 16

பற்றிடும் கொம்பு புளியமரக் கொம்பாயின்
வற்றாத செல்வத்தில் வாழ்வு. ... 17

கொண்டாட்டம் சம்பளம் வந்து ஒருவாரம்
திண்டாட்டம் மீதிவாரம் மூன்று. ... 18

கடனேதும் கிட்டாது போனால் உடனே
அடகுக்கு இல்லாள் நகை. ... 19

பட்டுப் புடவைக்கே வக்கில்லை வாழ்க்கையில்
கிட்டுவ தெங்கே நகை? ... 20

--ரமணி, 18/04/2013

*****
 
True , There were days where we could not have seen Television sets in houses, but now, there is no house, mall or any other places which doesn't use computer, NALLA TAMIZH KAVITHAIKU VAZHTHUKAL.
 
வங்கிக் குறட்பாக்கள்

வாடிக்கை யாளர்கள் வேடிக்கை வஸ்துவல்ல
பாடியாடப் பால்தரும் மாடு. ... 21

சங்கநிதி வேண்டாம் பதுமநிதி தேவையில்லை
வங்கியின் வைப்பே நிதி. ... 22

பற்றுக பற்றுள்ளார் பற்றினை அப்பற்றைப்
பற்றாது விட்டாலோ பாடு. ... 23

வங்கிக் கடன்தொகை வாராது போனாலோ
மங்குமே வங்கிப் புகழ். ... 24

உள்ளத்தில் மென்மை உதவாது தோழனே
கள்ளநோட் டாயிது காண். ... 25

அங்கொரு கண்ணுடன் இங்கொரு கண்ணுமே
வங்கியில் வேண்டுமே காண். ... 26

அகச்சுற்றுக் கேமரா ஆகாது மாற்று
புறச்சுற்றுக் காவலே மேல். ... 27

கணிணிமயம் ஆகியும் தாமத மாகிப்
பணியெல்லாம் ஊர்வது ஏன்? ... 28

கிளையில் அலுவலர் ஓர்குடும்பம் ஆயின்
விளையும் பயன்கள் பல. ... 29

தலைமையைப் போற்றித் தலைமையும் போற்ற
நிலைமையில் கேடு வராது. ... 30

--ரமணி, 18/04/2013

*****
 
27. உருத்திரன் மகிமை
(அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)


தரவு (எட்டடி)
உருத்திரரே உம்முடைய சினத்திற்கென் தலைதாழும்
உருத்திரரே உம்முடைய வில்லிற்கென் தலைதாழும்
கயிலைமலை உறைபவரே காப்பாற்றும் எம்குலத்தை
கயவர்கள் மீதெறியும் சரங்களைநீர் சாந்தமாக்கும்.
அனைத்துலகிற் கதிபதியே அமரர்கள் இறையம்சமே
வினைகளெனும் பிணிதீர்க்கும் வைத்தியரே பக்தர்களின்
குற்றங்கள் பொறுத்தருளி குணங்களைக்கொண் டாடும்நீர்
மற்றெல்லா வகைகளிலும் மலமறுத்து முக்திதாரும்.

தாழிசை
கருநீலக் கழுத்துடையார் கதிரவனாய் வெளிக்கிளம்பி
இருள்நீக்கி மருள்நீக்கி இனியவைகள் அருளட்டும்
சடைதரித்த ஒப்பற்ற சிவனாரின் அருளமுதில்
அடியார்கள் உளமகிழ்ந்து அருள்வோனைப் போற்றட்டும். ... 1

வணங்குகிறேன் பகவானை வியனுலக நாயகனை
குணக்குன்றாம் மகாதேவன் கண்முன்று உடையோனை
முப்புரங்கள் எரித்தவனை முத்தழல்கள் மறைத்தவனை
எப்பொழுதும் சிவமாகி எமனையே ஜெயித்தவனை. ... 2

பச்சிலைகள் கூந்தலாகப் பசுமரங்கள் வடிவமாக
இச்சககத்தில் பிராணிகளை இரட்சிக்கும் பெருமானே
உணவுகளின் அதிபதியே உலுத்தர்களை வதைப்பவனே
வணங்குகிறேன் உமதுருவை வரமளித்தே அருள்புரிவீர். ... 3

அம்போதரங்கம்
(நாற்சீரீரடி: பேரெண்: 2)


காண்பதெல்லாம் உமதுகண்ணாய்க் கண்ணாயிரம் படைத்தவரே
வேண்டுவதை அளித்தருளும் வித்தகனே வணங்குகிறேன். ... 1

புடைசூழும் சேனைகளைப் படைத்திருந்தும் முன்னின்று
அடியார்கள் நலங்காக்கும் விடையோனை வணங்குகிறேன். ... 2

(நாற்சீரோரடி: அளவெண்: 4)
சம்சார விருட்சத்தைச் சேதிக்கும் ஆயுதமே ... 1
அம்புகளால் பகைவர்கள் அவதியுறச் செய்பவரே ... 2
மங்கலத்தின் உறைவிடமே மரஞ்செடிகள் அதிபதியே ... 3
எங்களைநீர் இரட்சித்து ஏற்றமுறச் செயவேண்டும். ... 4

(முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
அமைச்சனும் வணிகனும் நீ ... 1
அழவைத்துக் காப்பவன் நீ ... 2
கள்வர்கள் தலைவனும் நீ ... 3
கொள்ளைகள் அடிப்பவன் நீ ... 4
உறங்குவோன் விழித்திருப்போன் நீ ... 5
உறைபவன் ஓடுபவன் நீ ... 6
அவையோரும் அவைத்தலையும் நீ ... 7
உமைதுர்க்கை உருவமும் நீ. ... 8

(இருசீர் ஓரடி: சிற்றெண்: 16)
வலியோன் நீ, மெலியோன் நீ, ... 1-2
குயவன் நீ, தச்சன் நீ, ... 3-4
கருமான் நீ, வேடன் நீ, ... 5-6
சிறியோன் நீ, பெரியோன் நீ, ... 7-8
மலைகள் நீ, அலைகள் நீ, ... 9-10
ஒலியும் நீ, எதிரொலியும் நீ, ... 11-12
நாதன் நீ, தூதன் நீ ... 13-14
வஸ்துகள் நீ, வாஸ்துவும் நீ, ... 15-16

தனிச்சொல்
என்வாங்கு

சுரிதகம் (நேரிசை ஆசிரியம்)
எல்லாம் நீயென எழுந்து நின்று
பல்லா யிரமுயிர் படைத்து அழிக்கும்
உருத்திர கணங்களின் உள்ளுறை நாயக!
விருத்திகள் யாவும் வேண்டுவ தளித்து
இம்மையும் மறுமையும் சிறக்க
உம்மையே நாடுவோம் அம்மை யப்பரே!

--ரமணி, 05/06/2013

*****
 
29. செய்திக் கவிதைகள்:
இந்தியத் தந்தி சேவைக்கு இறுதி நாள் 15 Jul 2013


[160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி’ சேவைக்கு மூடு விழா: தினமணி 13 Jun 2013]

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கட்டுக் கடகட வென்று கடிதிலே
விட்டொலித்துச் சென்றுசேர்ந்து வீடுகளில் சேதிசொன்ன
தந்தியின் சேவைக்(கு) அடுத்தமாத மத்தியில்
அந்திமக் காலமென இந்திய அஞ்சலகம்
நூற்றைம் பதுவருடம் ஆற்றிய சேவையின்
ஊற்றை அடைத்திடச் செய்தது தீர்மானம்.
கம்பியில்லாத் தந்திச் செயல்பா(டு) உயர்வதில்
கம்பிசெலும் தந்திகளின் அஞ்சல் அறுவது
என்றேனும் நேரத்தான் வேண்டுவ(து) என்றாலும்
அன்போ(டு) அளிப்போம் விடை.

--ரமணி, 26/06/2013

தந்தியின் குரல்கேட்க இங்கே சொடுக்கவும்:
Telegram Sound Effects | Download Sound FX of Telegram Sounds

*****
 
30. பயணக் கவிதைகள்

பேரூர் பட்டீஸ்வரக் கோவிலில் அரிய காட்சிகள்
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

1. அன்னாசி காலடியில் ஆர்த்திருக்கப் பேரூரில்
சன்னமாகத் தன்துதிக்கை யால்துழாவி - சின்னதான
வன்னப் பசுஞ்சிகை வெட்டியே உண்டிடும்
கன்னப் பொறியின் களிறு.


[ஆர்த்தல்=நிறைதல்; வன்னம்=நிறம்; பசுஞ்சிகை=பசுமை இலைக் கொண்டை; கன்னப்பொறி=கோவில்]

2. கூரையிலே ஆவுடையார்க் கூத்தனாக நின்றுநம்மைத்
தேரைபோல் பார்ப்பான் திசையெங்கும் - ஆரகனாய்க்
காரைகள் நீக்கிக் கனலினை மேடுறுத்தும்
பேரூர்ப் பரமேச் வரன்.


[ஆரகன்=அழிப்போன், கள்வன், கபடன்]

*****
 
மாலைக் காட்சிகள்: ஹைக்கூ பாணியில் வெண்பா

வெண்கதிர் செங்கதிராய் வீழும். மிகநீளும்.
கண்வழியும். காதொலிக்கும் பண்ணோசை. - விண்ணகரம்.
தண்ணெனத் தென்காற்று. விண்வெளியில் வண்ணங்கள்.
மண்ணில் மனிதனின் மாசு.

மஞ்சுகள் சித்திர வண்ணங்கள். மௌனநிழல்
சஞ்சரிக்கும். குன்றிழியும் செஞ்சோதி. - துஞ்சிடும்.
குஞ்சரம் காணும் குழந்தைகள். கோவில்முன்
குஞ்சுகள் பின்னே குருகு.

--ரமணி, 09/07/2013

*****
 
உத்திப் பாக்கள்: ஒருவிகற்ப நேரிசை வெண்பா
ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்


சொல்லொன்று கேட்டொருவர் சீர்மிக்க வாழ்வடைந்தார்
சொல்லொன்று கேட்டொருவர் செத்துவீழ்ந்தார் -- சொல்லிய
சொல்லொன்று கேட்டொருவர் முக்தியும் பெற்றதுண்டு
சொல்லொன்று சொல்லவேண்டும் அன்பு.

ஒருநாள் மகிழ்ச்சி ஒருநாள் துயரம்
ஒருநாள் இழவென ஓடும் - திருநாள்
ஒருநாள் வெருவு ஒருநாள் துணிபு
ஒருநாள் எனவுயிர் வாழ்வு.

ஒருநாள் சிரிப்பு ஒருநாள் சிலிர்ப்பு
ஒருநாள் சினமுடன் ஓய்வாள் - திருநாள்
ஒருநாள் வசவு ஒருநாள் நெருக்கம்
ஒருநாள் எனமனையாள் வாழ்வு.

*****

ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

அஞ்சிட வேண்டுவதை அஞ்சும் மனமுடன்
அஞ்சு புலன்களும் அஞ்சிநின்று - அஞ்செழுத்தை
அஞ்சாமல் துஞ்சாமல் நெஞ்சி லிருத்தினால்
அஞ்சுடன் ஆறும் மனம்.

கண்ணுறும் துன்பங்கள் கண்ணோட்டம் ஆற்றிடக்
கண்போல் பிறர்நலன் காண்போரை(க்) - கண்ணிமைபோல்
கண்ணுதல் ஈசனே கண்ணருளிக் காத்திடக்
கண்கூடாய் நீங்குமேகண் கட்டு.

கண்ணுதல் ஈசனை நண்ணுதல் நன்மைதரும்
எண்ணுதல் பூசனை திண்மைதரும் - உண்ணுதல்
பண்ணுதல் அண்ணுதல் பற்பலவும் கைவந்தால்
ஒண்ணுதல் தேவிநம் மோடு.

நம் சென்னை பாஷையில் இன்னொன்று:

இன்னா விளைத்தார்க்கு இன்னா விளைந்தாலும்
இன்மையில் செய்திடும் இன்னாவே - தன்மையென்றேன்.
இன்னாநான் செய்யணும்? இன்னாநீ சொல்றது?
இன்னாதான் மண்டையோஎன் றான்!

*****
 
உத்திப் பாக்கள்: நேரிசை வெண்பா
ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்

குழந்தை மிழற்றல் இனிமை; இனிமை
வழக்குத் தமிழ்மொழி வார்த்தை; - அழகான
கண்கள் இனிமை; இனிமை பழங்காலப்
பண்கள்; இனிமையிவ் வாழ்வு!

ஒருசொல் ஒருசொல் ஒருசொல் பெறவே
ஒருநாள் பலநாள் உவந்தேன் - ஒருநாஅள் ... ... (அல்லது ஒருதினம்)
காலையின் அஞ்சலில் காற்றென வந்தது
வேலை யெனவொரு சொல்!

ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

தண்ணொளி வெண்ணொளி தண்ணில வின்னொளி
கண்ணொளி சிந்தும் கனவுகள் - திண்ணையில்
சோலையின் சித்திரம் தீட்டும் நிலவொளி
மூலையில் மாயும் வயிறு.

கல்லாமை இன்னாமை சொல்லாமை ஏலாமை
ஒல்லாமை பேசாமை ஒன்றாமை - அல்லாமை
பொல்லாமை நோலாமை பேணாமை யென்றெல்லாம்
பல்லாமை வாழும்நம் நாடு.

[சொல்லாமை=ஆற்றாமை; ஏலாமை=பொருந்தாமை;
ஒல்லாமை=இயலாமை/அவாவினமை; அல்லாமை=மேலும்;
பொல்லாமை=தீது/குற்றம்; நோலாமை=செய்த பாவத்துக்கு வருந்தாமை]

*****
 
ஒரு பா ஒரு பஃது (அந்தாதி மாலை)
அருகிடும் வானுயிர் வாழ்வு


காப்பு
செயற்கையின் போக்கினில் செம்மை அழியும்
இயற்கை உயிர்வகை யேத்தி - இயற்றும்
ஒருமுதற் பாடல் உரைப்பதை யேற்கக்
கரிமுகப் பிள்ளைநீ காப்பு.

அவையடக்கம்
கற்றறிந்தோர் சொற்களிலே சற்றேனும் கற்றதில்
பெற்ற மகிழ்ச்சியில் உற்றபா - விற்பன்னர்
இச்சிறு யாப்பினை ஏற்றிதைச் செப்பனிட
இச்சிறுவன் வேண்டுவா னின்று.

நூல்
புறநகர்ப் பாக்கம் புதுமனை யாக்கம்!
மறத்தில் இயற்கை மறையும் - விறைத்திடும்
தானெனும் எண்ணம் தருக்கள் அழிப்பதால்
ஆனந்த வாழ்வின் அழிவு. ... 1

அழியுமே வானுயிர் ஆக்கமும் பண்ணும்
பழிபடர் மானிடர் பாழில் - விழிமுன்னே
விந்தைகள் காண்பது விண்ணில் அருகியே
கிந்தும்நம் சிந்தை கிளைத்து. ... 2

கிளைவளர் வேம்பினில் கீழ்வரும் ஓசை
துளைத்துச் செவிகளில் தோயும் - திளைக்கும்
குருவித் திரள்கள் துருவும் புரளும்
பருமரம் ஏறும் பறந்து. ... 3

பறந்தும் துரத்தியும் பார்க்கும் குருவி
குறைந்து வருதல் குழப்பம் - உறத்திடும்
நுண்கதிர்க் கூண்டு நுவல்வகை நுண்ணலை
நண்ணும் குருவி நலிவு. ... 4

நலிந்தெழும் ஊதா நிறத்தில்மீன் கொத்தி
அலிமரக் கட்டை அமரும் - வலிந்தும்
உரத்தும் செவிகள் உறுத்திடக் கத்தும்.
கரண்டும் அணிற்கண் கடுகு! ... 5

கடுகன்ன மேனியில் காதுறு சீழ்க்கை
விடுக்கும்தேன் சிட்டு விடாநின் - றொடுங்கியே
பூவினம் தேடிப் புகுந்துதேன் உண்ணுமே.
கோவினம் காலிடைக் கொக்கு. ... 6

கொக்குகள் மாடுகால் கொத்தியே பூச்சிகள்
சிக்கல் விடுவித்துச் சீராக்கும் - பக்கலில்
சேற்றை அளைந்து சிறுமீன் விழுங்கிடும்.
தென்றல் கலைத்தலை தெங்கு. ... 7

தெங்கு நிலத்திடைத் தேங்கும் மழைநீரில்
கங்கில் குருகினக் காணாண்கள் - கங்குல்
குழுமிடும் உன்னும்கால் ஓடி; குரலோ
குழந்தை மிழற்றும் குரல்! ... 8

குரல்கள் ஒலிகள் குறைந்திடும் வண்ணம்
விரல்வழி யோங்கிடும் வீழ்வு - மரங்களும் ... ... (விரல்வழி=digital)
மண்வாழும் விண்வாழும் மாக்களும் புட்களும்
கண்ணிமைப் போதில் கழிப்பு. ... 9

கழிப்பில் அறிவியல் கண்டிடும் மாண்பில்
அழியும் இயற்கையின் ஆட்சி - விழியில்
செவிட்டில் அறைந்திடும் செப்படி வித்தை!
தவிட்டில் நமக்குத் தகவு. ... 10

--ரமணி, 21/07/2013

*****
 
Last edited:
நகைச்சுவை வெண்பாக்கள்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய்
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்க்கித் திக்க்கிப் பேசு!

*****
 
உண்பொருள் வெண்பா மாலை - 1
ஒரு பா ஒரு பஃது

(இன்னிசை வெண்பா அந்தாதி)

காப்பு
காஞ்சி முனிநீ கருணை உரையாற்றிப்
பூஞ்சை யடியார்க்குப் புத்துயிர் தந்தாற்போல்
என்வாழ்வில் ஆன்மீகம் ஏற்றுநான் முன்னேற
உன்னருள் தாநீ யுவந்து.

அவையடக்கம்
பெரியவர் சொற்களைப் பேணித் தொகுத்தே
அரியார் கணபதி அண்ணா எழுதிய
நூல்களை நான்கொஞ்சம் நோக்கியே செய்ததைப்
பாலென ஏற்பீர் பரிந்து.

சாதம்
சத்துள்ள தாலது சாதம் எனப்படும்
சத்தான வர்களே சாதுக்கள் என்றாற்போல்
சாப்பாட்டில் முக்கிய சத்துத் தருகிற
காப்பீடே சாதமெனும் காப்பு. 1

காப்பெனச் சொன்னாலும் கற்றவர் வேடிக்கை
யாப்பெனச் சொல்வ தியாது? பிரசாதம்
ஆவது பூசைப் படைப்பெனில் சாதமென
ஆவதோ நாமுண்ணும் ஆக்கு. 2

பாயசம்
ஆக்கும் உணவினில் ஆக்கம் பெறநின்று
நாக்கில் மனதினில் நானென்று தித்திக்கும்
பாயசமே வெல்லமும் பாலும் அரிசியும்
வேயவெந் துண்ணும் உணவு. 3

உணவாக்கும் பாயசம் உள்ளே இறுகக்
கணத்தில் உருவாகும் சர்க்கரைப் பொங்கல்
திருமால் அடியார் திருக்கண் ணமுதாம்
திருக்கன்னல் வேய்ந்த அமுது. 4

சாம்பார்-ரசம்-மோர்
அமுதென மூவன்னம் ஆக்குவோம் ஆங்கு
தமதென முக்குணம் தங்குமே! காய்கறித்
தானொன்று தாளிக்கும் சாம்பார் தமோகுணம்
தானெனத் தங்குமது தான். 5

தானற்ற தெள்ளிய சாறாகிக் கையேந்தி
வானோக்கி உட்கொண்டு வாழ்த்தும் ரஸத்துள்ளே
மானிடர் வாழ்வில் மகிழும் ரஜோகுணம்
ஊனின் இயக்க ஓர்ப்பு. 6

ஓர்ப்பாம் ரஸத்தை உவகையில் வைணவர்
ஆர்ப்பில் அழைப்பது சாத்தமுது நாமத்தில்
சாற்றமுது என்பதே சாத்தமு தானது.
சாற்றமுது பின்னேமோர் உப்பு. 7

உப்பிட்ட மோர்சாதம் உண்போம் இறுதியில்
உப்புமோர் சாதத்தின் உள்வெண்மை சத்குணம்
பாயாசம் உண்டபின் பல்நலன் பேணிடக்
காயாத மோர்சாதக் காப்பு. 8

தாம்பூலம்
காப்பாக உண்ணுவோம் காய்கறிகள் மத்தியில்
சாப்பாட் டிறுதியில் தாம்பூலம் மெல்லுவோம்
வெற்றிலைபின் சுண்ணாம்பு வேய்ந்துதூள் பாக்குண்ணும்
சிற்றின்ப மாம்வெற் றிலை. 9

வெற்றிலை யென்றபேர் ஏனென்று கேட்டாலோ
மற்ற செடிகொடி பூகாய் கனியாகும்
சிற்றிலைக் கீரையைச் சேர்ப்போம் சமைத்தபின்
வெற்(று)இலைக்கோ நேர்வர வேற்பு. 10

நூற்சிறப்பு
உணவின் உருவே உயிரின் உறைகள்
உணவாகும் உண்ணுதல் உன்னுதல் யாவும்
உணவின் மகத்துவம் உள்ளியே உய்வோம்
மணமுடன் வாழ்வோம் மகிழ்ந்து.

--ரமணி, 24/07/2013

*****
 
Last edited:
உண்பொருள் வெண்பா மாலை - 2
ஒரு பா ஒரு பஃது

(இன்னிசை வெண்பா அந்தாதி)

காப்பு
நானிலம் நல்வாழ நாளும் தவம்செய்து
மாநிலங்கள் கால்நடந்து மக்கள் குறைதீர்த்து
தெய்வமாய் நின்றிடும் தேவரீர் காஞ்சிமுனி!
உய்விக்க வேண்டும் குரு.

அவையடக்கம்
உணவின் மகத்துவம் கூறிய பின்னர்
மணமிகு சிற்றுண்டி மாட்சிமை மேய்வோமா?
அண்ணா கணபதி பண்ணிய செய்தியென்
வெண்பாவில் ஏற்பீர் விழைந்து.

இட்டிலி
இட்டதும் அஃதே இலையில் மறைந்திடும்
இட்டு இலியாக இட்டிலியென் றாரொருவர்
வாக்குச் சமர்த்தராய் வார்த்தைகள் சொன்னதன்
நோக்குவோம் உண்மை நுவன்று. 1

நுவன்றால் வெளிவரும் உண்மை இதுதான்
எவரேனும் மாண்டால் இடுகாடு செல்வர்
இடுதங்கம் என்றால் நெருப்பிடும் தங்கம்
இடுமருந்து பண்ணுமே ஈர்ப்பு! 2

ஈர்த்திடும் இட்டிலி இட்டபடி வேகுமே
பேர்க்கும் வரையில்நாம் பேசா தமருவோம்
இட்டலி யென்பதே பேச்சு வழக்கினில்
இட்டிலி யானதே இன்று. 3

இடியாப்பம்
இன்றும் இடியாப்பம் செய்வ(து) இடுதலில்;
நன்மை தரும்பண்டம் ஆப்பமே, அப்பமல்ல;
ஆப்பம் எனச்சொன்னால் ஆவியில் வேகுதல்
ஆபம் வடமொழி நீர். 4

உப்புமா
நீருண்ணும் உப்புமா ஏனிந்தப் பேராகும்?
ஓர்வகையில் சொல்லுவார் உப்பினால் அப்பெயர்;
உப்பிட்டே செய்கிறோம் தோசைவடை இட்டிலி
உப்புமாவில் கொஞ்சமே உப்பு! 5

உப்புமா அன்றிதுவே உப்புமா! வாணலியில்
உப்புமே நீருண்ட உப்புமா வின்ரவை!
நெய்சோற் றரிசியும் நீருண்டால் உப்புமே
நொய்யுப்பு மாவோ விரைந்து. 6

அப்பம்-வடை
விரைத்திடும் அப்பமே வீங்கிப் பழுக்கும்!
உரைத்திடும் பேரினில் உள்ளதே ஆபூபம்
ஆபூப்யம் மாவாகும் அப்பம் பணியாரம்
ஆபூபம் ஆகும் வடை! 7

வடநாடு தந்ததால் ஆகும் வடையென்(று)
இடம்கண்டு சொன்னவர் ஈங்கொரு வித்தகர்
மாஷம் உளுந்தாக ஆபூபம் அப்பமாம்
மாஷாஅ பூபம் வடை. 8

அப்பளம்
வடைவந்தால் அப்பளம் வாளா விருக்கும்?
இடையில் நொறுக்கியே தின்ன இனியதாம்
அப்பளாம் என்பது அப்பளம் என்றசொல்
அப்பம்போல் அப்பள வட்டு. 9

வட்டைக் குழவியால் அப்பளித்துப் பூசியே
வட்டமான அப்பளக் கட்டுகள் செய்து
பலவகை அப்பளம் பார்த்துச் சுவைத்து
நலமென உண்டிடும் நாக்கு! 10

நூற்சிறப்பு
சிற்றுண்டி தந்திடும் சிற்றின்பம் நாவிலே
சற்றே அளவுடன் ஏற்றால் செரித்திடும்
நாவினைக் கட்டாது நாடினால் நம்முள்ளே
பாவாது தந்திடும் பாடு!

--ரமணி, 26/07/2013

ஆதாரம்:
ரா.கணபதி எழுதிய புத்தகம்
’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’
பதிப்பு: திவ்ய வித்யா ட்ரஸ்ட், சென்னை

*****
 
வசன ரூபக வெண்பா: வட்டார வகுப்பு வழக்கில்

அந்தணர்
என்னவோய் சொன்னதெலாம் ஏறிச்சா உம்தலைல?
என்னசொன்னீர்? ஞாபகம் எங்கயோ! - மின்னநீர்
சொன்னதும் இப்பநீர் சொல்வதும் ஒண்ணுமே
என்தலைல ஏறலயே ஓய்!

ஏன்னா? எதிர்த்தாத்து சீமாச்சு வந்திருந்தார்...
ஏன்தான் உயிரை எடுக்கறானோ? - பேன்-னா
பெருமாள்னு சொல்ற பிரகிருதி யாச்சே?
வருமான்னு கேட்டார் அவர்!

செட்டியார்
அப்பச்சி உள்ளயா ஆச்சி? எதுக்காக?
இப்பத்தான் போனாக எங்கயோ! - அப்பத்தா?
என்னவோ உள்ளாற பேசிட் டிருக்காக...
என்ன விசயம் கதிரு?

பழனியப்பன் வள்ளி பகட்டுக்கல் யாணம்
விழாபோல கூட்டம்நீ பாத்தே? - அழகப்பா,
அத்தான்நான் போகாம? ஆறுநாள் தங்கினேன்.
அத்தனையும் முத்தையா சொத்து.

சென்னைத் தமிழ்
காலீல போணியே சாவு கிராக்கிபா!
வேலீல பச்சோந்தி கீறமாரி! - சோலியப்
பாக்கலாம்னு இஸ்தா கலாய்க்கறான் சோமாரி!
சாக்கடப் பன்னிமாரி கப்பு!

திருநெல்வேலி தமிழ்
வல்லம் கிராமம் வருதியளோ அண்ணாச்சி?
இல்லமா இங்கனயே நிக்கேன்நான் - சொல்லுதேன்
கேளுநீ, சேக்காளி சோலி இருக்கில்ல
ஏளிநீ பையக் கிளம்பு!

[வருதியளோ=வருகிறீர்களா; நிக்கேன்=இருக்கேன்; சொல்லுதேன்=சொல்கிறேன்;
சேக்காளி=நண்பன்; சோலி=வேலை; ஏளி=ஏ பிள்ளை]

கொங்குத் தமிழ்
தண்ணியச் சேந்தி தலைலநல்லா ஊத்துடா
இண்டம் பிடிச்ச பெருக்கானே! - தண்ணிவார்த்து
சாப்டுபோட்டு இக்கட்ல அந்திக்குத் தங்கிக்க!
கூப்டுட்டு வர்றேன் மளார்னு.

[சேந்தி=இறைத்து; இண்டம்பிடிச்சவன்=கஞ்சன்; பெருக்கான்=பெருச்சாளி;
தண்ணிவார்த்து=குளித்துவிட்டு; இக்கட்டு=இந்த இடம்; அந்தி=இரவு; மளார்னு=விரைவாக]

மதுரைத் தமிழ்
அக்கப்போர் பண்ணாமப் பையக் கெளம்பிநீ
பக்கத்தூர் போய்ட்டுவா பஸ்புடிச்சு - எக்காளம்
பண்ணினே, குண்டக்க மண்டக்க பேசினே,
கொண்டுபோடு வேன்மவ னே!

[அக்கப்போர்=தகராறு; பைய=மெதுவாக; குண்டக்க மண்டக்க=விதண்டாவாதம்; கோண்டுபோடுதல்=கொன்றுபோடுதல்]

--ரமணி 29/07/2013

Ref:
http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழின்_வட்டார_வழக்குகள்

*****
 
புள்ளின வழிபாடு

நாகாக்காப் பேராசை மாந்தரிடை நானுழல்வேன்
காவாக்கால் நீயென்னைக் கார்த்திகேயா ஆறுமுகா!
காண்பதெல்லாம் ஓயாமல் காயாமல் கொள்வாழ்வில்
மாண்பேது மால்மருகா கா!

குருவிடம் கற்பர் குருவோ குறுணை!
உருவை விரும்பித் துருவும் திரள்கள்
அரளும் புரளும் சளசள வாழ்வில்
கரையேற்று வேள்முரு கா!

கொக்கரித்துக் கொத்தியே முட்டை பலவிக்கி
எக்காள மாந்தர்க் கிறையாகி - நெக்குண்டு
மீண்டும் பிறந்தால் மனிதருணாப் புள்ளென
ஈண்டு அருள்முருக வேள்!

இதுபோல் அனபர்கள் மற்ற பறவைகள் குறித்து எழுதலாமே!

*****
 
Last edited:
புள்ளின வழிபாடு

அன்புறாது பண்புறாது எல்லோரும் இன்புறாது
தன்மையாய் வன்மையும் இன்மையும் பெற்று
எனக்கும் உனக்கும் கணக்கும் வழக்கும்
எனவாழும் மாந்தர் விரல்கொடுக்க எத்தனைநாள்
வானில் சிறகடித்து வாழ்வேன் படபடத்து?
நானோ மனிதரின் ஆன்மாக் குறியீடு?
நானோ அவர்காணா சாந்தியின் சின்னமென?
ஏனுனக் கென்குரல் என்முரல் கேட்டிலை?
வான்புகழ் சக்தியெனைக் கா!

--ரமணி, 06/08/2013

*****
 
சஹதர்மிணி
(குறளடிச் சமனிலைச் சிந்து)

அகமுடை யாளே - பெரும்
. அன்புடைப் பெண்ணே
முகமெழி லாளே - நல்
. மொழியுரைப் பெண்ணே
பகலிர வாகப் - பணி
. யாற்றிடு வாயே.
இகமதி லுன்னை - நான்
. பெற்றதென் பேறே. 1

சமமெனும் பாவம் - நீ
. காட்டுவ தெங்ஙன்
விமர்சனம் வீணாய் - நீ
. செய்வது மில்லை
தமதெனும் எண்ணம் - நீ
. தாங்குவ தில்லை
மமதையென் றுனக்கு - ஒன்றும்
. அதிகமு மில்லை. 2

பற்றுகள் யாவும் - மிகப்
. பற்றிய தில்லை
சுற்றமுண் டுனக்கு - எனில்
. சுற்றமொன் றில்லை
மற்றவர் நட்பும் - நீ
. சற்றெனக் கொள்வாய்
உற்றதுன் வாழ்வை - நீ
. உவகையில் வாழ்வாய். 3

பொழுதுகள் போகும் - உனக்குப்
. பொழுதுகள் போதா
தொழுவது என்றும் - நீ
. பொழுதினிற் செய்வாய்
அழுவது உண்டு - எனில்
. அரற்றுவ தில்லை
நழுவிடும் கணத்தில் - நீ
. நன்மையே விழைவாய். 4

கருத்தொரு மித்தும் - நம்
. கருத்தினை மறுத்தும்
குறைகளைக் குறைத்தும் - நாம்
. நிறைகணே சித்தும்
வருடங்கள் ஓட்டில் - நாம்
. வாழ்வது கற்றோம்
இருமனம் ஒன்றாய் - நம்
. திருமண வாழ்வு. 5

வருமினி வாழ்வில் - நம்
. மரமது வளர
ஒருமக னுக்கே - வதுவை
. உற்றதின் பின்னவர்
திருமண வாழ்வில் - நாம்
. இனியன செய்தே
உரியது பேணி - வரும்
. உறவுகள் வளர்ப்போம். 6

வருமினி வாழ்வில் - நம்முள்
. ஒருவரே இருத்தல்
வருமொரு நாளே - என்று
. வருவதை யறிந்து
விருப்புடன் வாழ்வோம் - நாம்
. இருப்பது போற்றி
பெருவகைக் கனவு - ஏதும்
. வருவது தவிர்த்து. 7

உணவுகள் செய்வோம் - நமக்
. கேற்பதை உண்போம்
பிணக்குகள் உண்டு - நம்முள்
. இணக்கமும் உண்டு
கணக்குகள் இல்லை - என்று
. பணத்தினை வென்றோம்
மணக்குள நாதன் - நம்மைக்
. காத்தரு ளட்டும்! 8

--ரமணி 15/08/2013, கலி.30/04/5114

*****
 
வேலனின் கோலம்

(அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
மா மா காய் மா மா காய் நிரல்)

பாலும் தேனும் வேண்டேன்நான்
. மௌனம் கிட்ட வேண்டுவனே
வேலன் பார்வை பட்டாலே
. வேண்டும் மாற்றம் வாராதோ?
வேலன் பார்வை படுவதற்கே
. மேலும் கீழும் பார்க்கின்றேன்
ஆலை உள்ளம் கட்டுண்டால்
. ஐயன் பார்வை வருமென்றார்.

ஆலை உள்ளம் கட்டுண்ண
. ஆன மட்டும் முயன்றேனே
வேலை ஓய்வு பெற்றிடினும்
. வேறோர் பக்கம் உளம்செலுதே
வேலை வேண்டி வழிபட்டால்
. ஏறும் பேய்கள் இறங்கிவிடும்
கோலம் போடும் மனத்துள்ளே
. வேலால் கோலம் போட்டுவிடு!

வேலால் கோலம் போட்டாலே
. வேண்டும் நேர்மை வந்துவிடும்
காலைக் கையை அசைக்காது
. காணும் கோலம் அமர்ந்தேபார்
ஏலம் போடும் மனத்துள்ளே
. ஏதும் எண்ணம் தொடராதே
ஓலம் தன்னால் அடங்கிவிடும்
. ஓசை யெல்லாம் ஓமாகும்.

--ரமணி, 18/08/2013, கலி.02/05/5114

*****
 
அறுசீர் விருத்தப் பயிற்சி 2
(விளம் மா தேமா விளம் மா தேமா நிரல்)


அத்தனுக்கு அரங்கம் அமைப்போம்!

வடவரை கடைந்த நஞ்சை
. மகிழ்வுடன் பருகிக் காத்த
நடமிடும் நீல கண்டன்
. நம்முளம் வந்து ஆட
உடமைகள் குன்றச் செய்து
. மடமைகள் மங்கச் செய்து
கடமைகள் முடித்து விட்டுக்
. காத்திருப் போமே இங்கு.

யாதொரு வழியு மின்றேல்
. நாமுளம் வருந்த வேண்டாம்
மாதொரு பாகன் நம்முள்
. வரவழி செய்தால் போதும்
பாதமே பணிந்து நின்று
. பன்மைகள் குறைத்து விட்டால்
வேதனை தீர்த்து வைத்தே
. வேண்டிய நன்மை செய்வான்.

வான்வரும் கதிரும் அத்தன்
. கானுறை உயிர்கள் சம்பு
தேன்தரும் மலர்க பாலி
. நெருஞ்சியும் முள்ளும் பித்தன்
ஊன்தரும் உணவும் ஈசன்
. உயிரிலாப் பொருளும் தாணு
நானிதை அறியா தின்னும்
. நாட்களைக் கழித்தல் ஏனோ?

--ரமணி, 19/08/2013, கலி.03/05/5114

*****
 
திருத்திணை நாயகன் பஞ்சகம்

அறுசீர் விருத்தம்
(விளம் விளம் மா விளம் விளம் மா)


விருந்துணத் தாமுணும் இணையர்க்
. கிரங்கியே விருந்தென நின்று
இருகரம் உழுகலம் ஓட்ட
. திணைவிளை செய்தபின் உண்டாய்
உருவினைக் காட்டியே இணையர்
. உய்வுற முத்தியும் தந்தாய்
வருவினை வல்வினை யாவும்
. திருத்திணை யீசனாற் போமே! ... 1.

சுந்தரர் உன்புகழ் பாட
. வந்தருள் லிங்கமாய் நின்றாய்
தம்பிரான் காலடி மாலும்
. சங்கினை ஊதியே நிற்க
அம்புஜம் மேலமர் அயனும்
. மத்தளம் தட்டியே ஆட
எம்பிரான் ஆடிடும் ஆட்டம்
. நம்புதற் கரியவோர் காட்சி! ... 2.

கருவரை சுற்றிடும் சுவரில்
. தாமரை ஆசனத் தமர்ந்து
திருவருள் கூட்டிடும் அரிய
. தென்றிசைக் கடவுள் காட்சி
உருத்திர னுடனுறை யன்னை
. ஒப்பிலா நாயகி யாவாள்
வருபவர் மூழ்கியே பாவம்
. உருவற ஜாம்புவின் தடாகம். ... 3.

உழவனாய் அருளிய சிவனின்
. உழுபடை இறைகலம் இங்கே
வழுவறப் பங்குனி மாதம்
. வழுத்திடும் ஆதவன் ஒளியே
உழுதொழில் சிறப்பினில் உணவு
. ஓங்கிட வேண்டுவர் இங்கே
பொழுதெலாம் இன்னிசை பயில்வோர்
. பூசைகள் செய்வதும் இங்கே. ... 4.

சிவன்கொழுந் தீசராய் அருளும்
. திருத்திணை திருத்தலம் சென்றே
உவந்திடும் கலையெலாம் ஓங்க
. உணவுகள் விளைச்சலிற் பெருக
பவவினை வருவினை மாளப்
. பலவிதப் பண்களில் போற்றித்
தவமுடன் தானமும் சிறந்து
. தரணியில் தழைத்திடக் கேட்போம். ... 5.

--ரமணி, 26/08/2013, கலி.10/05/5114

மேல்விவரம்:
Shivakozhundhu Easwarar Temple : Shivakozhundhu Easwarar Temple Details | Shivakozhundhu Easwarar- Theerthanagiri | Tamilnadu Temple | ???????????????????
http://koyil.siththan.com/archives/category/சிவ-ஆலயங்கள்

*****
 
ஒரே ஈற்றடிக்குப் பலவித நோக்கில் முதலடி வருமாறு எழுதிய குறட்பாக்கள். நீங்களும் முயன்று பாருங்களேன்?

1. எங்கனம் பெய்யும் மழை?

அங்கணண் போற்றாது இங்கவன் தோழனாக
எங்ஙனம் பெய்யும் மழை? ... 1.
[அங்கணன்=கடவுள், சிவன், திருமால்]

எங்கும் பிறன்மனைப் பேறுகள் ஒப்பிடுவான்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 2.

அங்குமிங்கும் வானத்தில் ஐயோடைட் தூவினாலும்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 3.

தங்காத இல்லாள் தகாத பொருட்செல்வம்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 4.

வங்கப் புயற்சின்னம் எங்கோ நகர்ந்திட
எங்ஙனம் பெய்யும் மழை? ... 5.

பொங்கும மங்கல மெங்கணும் தங்கிட
எங்ஙனம் பெய்யும் மழை? ... 6.

பங்குச்சந் தைப்பொரு ளாதாரம் கோலோச்ச
எங்ஙனம் பெய்யும் மழை? ... 7.

அங்கண் விசும்பெலாம் ஆலகால நஞ்சாக
எங்ஙனம் பெய்யும் மழை? ... 8.

சிங்கங்கள் மாளச் சிறுநரி யாட்சியில்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 9.

சங்கினை ஊதுவாய் சண்முகன் மாமனே
எங்ஙனம் பெய்யும் மழை? ... 10.

--ரமணி, 30/08/2013, கலி.14/05/5114

*****
 
Last edited:
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

60. பிள்ளையார் போற்றுவோம்
(அறுசீர் விருத்தம்: காய் மா விளம் காய் காய் காய்)

ஆனைமுகம் பார்த்தால் தடையெலாம் .. காலடியில் மூஞ்சூறாய் ஓடிவிடும்
பானைவயின் பார்த்தால் பகையெலாம் .. ஆதவன்முன் பனியெனவே ஓடிவிடும்
கானமதைக் கேட்டால் பிள்ளையார் .. காதுகளில் தேனருவி வந்துவிழும்
நானவனை இன்றே போற்றுவேன் .. பானகமும் மோதகமும் முன்வைத்தே.

மாணவரின் கல்வி யோங்குமே .. காணவரின் பிள்ளையாரின் உருவினையே
கோணலெலாம் மாறிச் சீர்ப்படும் .. கோலவிழிக் கோமகனை வழிபடவே
சாணேறில் மீண்டும் சறுக்கிடும் .. சாதனைகள் கொடிமரமாய் உயர்ந்திடுமே
நாணமுறும் மாதர் வாழ்வினில் .. நாலுவகைப் பேறுகளும் கூடிடுமே.

கணபதியை நாளும் போற்றுவோம் .. காலமெலாம் கவலையின்றி வாழ்வோமே
குணநலன்கள் யாவும் சேருமே .. கூப்பிட்டுத் துதிசெய்து பாடிடவே
கணப்பொழுதில் நீங்கும் தடையெலாம் .. கணபதியே சுற்றமெனக் கொண்டாலே
வணங்கிடுவோம் சென்னி நிலம்பட .. மணமெல்லாம் வாழ்வினிலே பெற்றிடவே.

--ரமணி, 09/09/2013, கலி.24/05/5114
--(பிள்ளையார் சதுர்த்தி தினம்)

*****
 
44. ஒன்றெனும் பரம்பொருள் உயிர்ப்பு
(அறுசீர் விருத்தம்: மா மா விளம் மா மா விளம்)

அணுவுக் குள்ளே உறைவதே
. அண்டம் எங்கும் நிறைவது
நுணுகிக் கண்டால் ஒளிர்ந்திடும்
. உண்மை யதுவே தெரிந்திடும்
கணுவும் தசையும் ஆவதும்
. காலம் கடந்தே இருப்பதும்
குணமில் உயிர்ப்பாய் இயங்கிடும்
. மூலம் அதுவாம் பரம்பொருள்.

ஒன்றாய் இலங்கும் பரம்பொருள்
. தன்னை அறிய விழைந்திடும்
தன்னை அறியும் தவத்திலே
. மன்னும் ஒலியை மேலிடும்
மன்னும் ஓங்கா ரவொலியே
. மனதில் பொருளை விதைத்திடும்
ஒன்று பலவாய் ஆகிடும்
. ஒன்றே பலவென மயங்கிடும்.

பலவாய்த் தோன்றும் உயிரெலாம்
. அலையும் ஒன்றைக் காணவே
அலையும் ஒன்றே இதுவென
. அறியா மாயை மருளிலே
சிலையும் உருவும் வழிபடும்
. வினைகள் செய்தே வீழ்ந்தெழும்
நிலையை அறியா மனத்துளே
. நிற்கும் ஒன்றோ நகைத்திடும்.

--ரமணி, 19/08/2013, கலி.03/05/5114

*****
 
61. ஆதி சங்கரர் அருளிய ’மஹாகணேச பஞ்சரத்னம்’
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு


(அறுசீர் விருத்தம்: புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம்)
[முதாக ராத்த மோதகம் .. சதாவி முக்தி சாதகம்]

[மூலத்தில் உள்ளது போலவே சீர்கள் ஒன்றிலும் நான்கிலும்
முதலசையில் அழுத்தம் கொடுத்துப் படிக்க வேண்டும்.]

களித்-துக் கையில் மோதகம் .. அளிக்-கும் முத்தி சாதனை
துளித்-த திங்கள் சூடிடும் .. உல-கம் ஆடிக்(1) காத்திடும்
தளத்-தில் யாரும் நேரிலம் .. களி-ற்ற ரக்கன் மாய்த்திடும்
விளிக்-கத் தீமை யாற்றிடும் .. விநா-ய கன்நான் போற்றுவேன்! ... 1

இறைஞ்-சி டார்க்கே அச்சமா .. யெழுச்-சி பானு சோதியாய்
இறைஞ்-சும் தேவர் தானவர் .. இறை-யின் கேடு நீக்கியே
இறை-வன் தேவர் செல்வமா .. யிப-மு கக்க ணேசனாய்(2)
இறை-ம கேசன் போற்றுவே .. னிறை-ப ரன்நி ரந்தரன்! ... 2

அனைத்-து ஞால இன்பமா .. யரக்-கர் மாய்த்த ஆனையாய்
கனத்-த துத்தச்(3) செம்மலாய்க் .. கஜ-மு கன்நி ரந்தமாய்
கனி-வு ளோன்பொ றுப்பவன் .. மகிழ்ச்-சி கீர்த்தி யத்துடன்
இனி-ய உள்ளம் ஏத்துவோர்க் .. கிறை-யின் சோதி வாழ்த்துவேன். ... 3

வறி-யோ ரின்னல் நீக்கிடும் .. பழ-மைச் சொற்கள் தாங்கிடும்(4)
புர-ம ழீத்த(5) லைச்சனாம் .. சுரர்-ப கையை நீக்கிடும்
பிர-ள யத்தி லச்சமாம் .. விட-வ ரத்தைப் பூண்டிடும்
பெரு-கு மத்தக் கன்னமாம் .. கிழ-மை வேழம் போற்றுவேன். ... 4

வரை-யில் காந்தி தந்தமாம் .. யம-னுக் கேய மன்மகன்(6)
உரை-யை விஞ்சும் ரூபமாம் .. துமித்-த ழிக்கும் ஊறுகள்(7)
இரு-த யத்துள் யோகியர் .. இனி-தி ருக்கும் என்றுமே
ஒரு-வன் ஏக தந்தனை .. யுளத்-தில் வைப்பேன் என்றுமே. ... 5

பலன்மொழி
மகா-க ணேச ரத்தினம் .. பரா-ய ணம்செய் நாளுமே
வகை-யில் காலைப் போதினில் .. கணே-ச ரின்நி னைவுடன்
தகைக்-கும் வாதை தோஷமில் .. மக-னும் கல்விச் செல்வமும்
உகைத்-த ஆயு ளெண்தனம்(8) .. உறுத்-தி டும்வி ரைவிலே.

இவ்வாறு ஶ்ரீ சங்கர பகவத் பாதர் செய்த
ஶ்ரீ கணேச பஞ்சரத்தினம் முடிவுறுமே.
தமிழாக்கம்: ரமணி, 12/09/2013, கலி.27/05/5114

ஒலிக்கோப்பு:
ஆதி சங்கரரின் மஹாகணேச பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தைக் கேட்க:
மாரேபள்ளி நாக வெங்கட சாஸ்திரி பாடியது
»»Vedamantram - Get Free MP3s of Veda Mantras

எம்.எஸ்., உமா மோகன் குழுவினர் பாடியது:
http://www.fullsongs.net/search/mp3/1/maha-ganesha-pancharatnam.html

சமஸ்கிருத மூலம்:
http://sanskrit.gde.to/all_pdf/ganesha5.pdf

குறிப்பு:
1. ’உலகம் ஆடிக் காத்திடும்’ -- உலகினைக் காப்பது ஒரு லீலையாக.
2. ’இப முகம்’ -- யானை முகம்.
3. ’துத்தம்’ -- வயிறு.
4. ’பழமைச் சொற்கள் தாங்கிடும்’ -- வேதம் மற்றும் புராதனத் துதிகளின் சொற்கள்.
5. ’புரமழீத் தலைச்சனாம்’ -- புரமழீ என்பது நீட்டல் விகாரமாகச் சிவனைக் குறிப்பது;
தலைச்சன் -- மூத்த பிள்ளை.
6. ’யமனுக்கே யமன்’ -- மார்க்கண்டேயனைக் காக்க சிவன் யமனை அழித்து மீண்டும் உயிர்ப்பித்ததால்.
7. ’துமித்து’ -- துண்டித்து, அறுத்து.
8. ’உகைத்த’ -- உயர்ந்தெழும்; ’எண்தனம்’ -- அட்ட ஐஸ்வரியம், எட்டு வகைச் செல்வங்கள்.

*****
 
62. கரிமுகன் மீதொரு குறட்பஃது

இன்னல் களிற்றிரு நேத்திரம் நோக்கியே
இன்னல் களிற்றிருப் பேன். ... 1

கரித்தலையு ருத்தே அமர்ந்திருக்கும் தேவா
கரித்தலையு ருத்தே அருள். ... 2

கன்னங் கருவுரு வானை வழிபடில்
கன்னங் கருவுருவா காது. ... 3

கன்னங் கருவுரு வானை வழிபடில்
கன்னங் கருவுருவா கும். ... 4

குஞ்சரம் நெஞ்சக முற்றால் உருவாகும்
குஞ்சரம் நெஞ்சக மின்று. ... 5

துதிக்கையைத் தூக்கியே துன்பம் துமிப்பான்
துதிக்கையைத் தூக்கியே மேல். ... 6

தும்பிக்கை பற்றுவது மோதகம்நாம் பற்றுவோம்
தும்பிக்கை பற்றுவது போல். ... 7

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடு முகந்த தனைத்து. ... 8

பின்னல் விளைத்தே இடையூறு நீக்குவோனே
பின்னல் விளைத்தே யிரங்கு. ... 9

மோதகம் கன்னல் உகப்போன் வழிபடில்
மோதகம் கன்னல் சுனை. ... 10

*****

பதம் பிரித்து, விளக்கம்:

இன்னல் களிற்றிரு நேத்திரம் நோக்கியே
இன்னல் களிற்றிருப் பேன். ... 1
[இன்னல் = இனிய, நல்ல; துன்பம்]

கரித்தலை உருத்தே அமர்ந்திருக்கும் தேவா
கரித்தலை உருத்தே அருள். ... 2
[கரித்தலை = யானையின் தலை; வெறுப்பு, குற்றம் குறை கூறுதல்
உருத்து = உருவெடுத்து; சினந்து அழித்து]

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகாது. ... 3
[கன்னங் கருவுரு = கன்னங்கரிய உருவ; கன்னம் = களவு;
கருவுரு = கருவாக உருவாதல் ]

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ... 4
[கன்னம் = பெருமை]

குஞ்சரம் நெஞ்சகம் உற்றால் உருவாகும்
குஞ்சரம் நெஞ்சகம் இன்று. ... 5
[குஞ்சரம் = ஆனை; உச்சிதம், மேன்மை]

துதிக்கையைத் தூக்கியே துன்பம் துமிப்பான்
துதிக்கையைத் தூக்கியே மேல். ... 6
[துமிப்பான் = துண்டித்து நீக்குவான்]

தும்பிக்கை பற்றுவது மோதகம்நாம் பற்றுவோம்
தும்பிக்கை பற்றுவது போல். ... 7
[தும்பிக்கை = ஆனையின் கை; தட்டாரப்பூச்சியின் உணர்விழை]

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்த தனைத்து(ம்). ... 8
[பகடு = ஆண் யானை; பெருமை, வலிமை]

பின்னல் விளைத்தே இடையூறு நீக்குவோனே
பின்னல் விளைத்தே இரங்கு. ... 9
[பின்னல் = சிக்கல்; பின்னர் நல்லது]

மோதகம் கன்னல் உகப்போன் வழிபடில்
மோதகம் கன்னல் சுனை. ... 10
[மோதகம் = கொழுக்கட்டை; (அலை) மோதும் உள்ளம்]

*****
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top