அன்புடையீர்!
வெகுநாட்களாக இந்தத் துதியைத் தமிழில் முயலும் ஆர்வமிருந்ததில்
கணபதி அருளால் இன்று அது நிறைவேறியது.
அறிஞர்களும் அன்பர்களும் கருத்துரைக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
ரமணி
*****
5. தெய்வ தரிசனம்: ஸங்கடநாசன கணேச ஸ்தோத்திரம்
(நாரதமுனி அருளிச்செய்த மூலத்தின் தமிழாக்கம்)
(குறும்பா)
தலைசாய்த்தே முதல்வணங்க வானவனே
மலைமகளின் மகனாம்வி நாயகனே
. . பத்தருளம் கொண்டவனை
. . நித்தியமும் அண்டிடுவோம்
நிலையாயுள் விழைபொருளும் ஈபவனே. ... 1
முதற்பேரே வளைதுதிக்கை யன்னாக
அதற்கடுத்து ஒருகோடன் என்றாக
. . மூன்றாவது கறைபழுவாய்த் ... [கறைபழு = கரும்பழுப்பு]
. . தோன்றுகின்ற கருவிழியன்
அதன்பின்னே ஆனைமுகன் என்றாகும். ... 2
பகடுவயி னென்பதுவே ஐந்தாம்பேர்
பகடுடல னென்பதுவே ஆறாம்பேர்
. . ஊறுகளை வேரறுக்கும்
. . ஊறழிமன் ஆறடுத்தே ...
புகைவண்ணன் என்பதுவே எட்டாம்பேர். ... 3
[பகடு = பெருமை, பரப்பு, வலைமை; வயின் = வயிறு;
ஊறு = இடையூறு; மன் = மன்னன்]
ஒன்பதாகும் பேரெனவே பிறைநுதலோன்
ஒன்பதின்பின் பத்தெனவே குறைகளைவோன்
. . கணக்குழுமம் அதிபதியாம்
. . கணபதிபேர் பதினொன்றாம்
பன்னிரண்டாம் பேராகும் கறையடிவாய். ... 4
[கறையடி = (உரல் போன்ற அடியுடைய) யானை]
பன்னிரண்டு பெயர்களுடன் முச்சந்தியில்
நன்முறையில் துதிப்போர்க்கே இச்சந்தகம்
. . இடையூறு பயமின்றி
. . இடையில்லா நயமென்றே
உன்னுவதும் உவப்பதுமே நிச்சந்தகும். ... 5
[முச்சந்தி = காலை, உச்சி, மாலை என்னும் மூன்று பொழுதுகள்;
இச்சந்தகம் = இந்த மகிழ்ச்சி; நிச்சம் = நிச்சயம்]
அறிவிழைவோர் பெற்றிடுவார் அறிவெல்லாம்
வெறுக்கையெனில் உறும்செல்வச் செறிவெல்லாம்
. . புத்திரனை விழைந்திடிலோ
. . அத்திறமும் தழைந்திடுமே
பிறவன்றி முத்திவேண்டிற் பரமெல்லாம். ... 6
[அறி = அறிவு; வெறுக்கை = செல்வம்; அத்திறம் = அத்தகைய மேன்மை, குலம்;
பரமெல்லாம் = எல்லாவற்றிலும் மேலான பரம் என்னும் முக்தி]
கணபதியின் துதியிதுவே ஆறுமாதம்
உணவெனவே கொண்டிடவே ஊறுபோகும்
. . ஒருவருடம் வேண்டிடினே
. . விரும்புவதே ஆண்டுவரும்
திணமாக வேதுமையக் கூறேகும். ... 7
[திணமாக = திண்ணியமாக; ஏதும்-ஐயக்கூறு = எதேனும் ஐயத் தன்மை]
எவரொருவர் இத்துதியை எழுத்தாலே
சிவம்விழையும் எட்டுபேர்க்கே அளித்தாலே ... [சிவம் = மங்களம், நன்மை]
. . நீக்கமற நிறைந்திருக்கும்
. . ஆக்கம்வர அறிந்திருப்பர்
சிவமைந்தன் கணபதியின் அருளாலே. ... 8
--ரமணி, 18/02/2014, கலி.06/11/5114
குறிப்பு:
மூல ஸ்தோத்திரம் குறிக்கும் பன்னிரண்டு கணபதி பெயர்களும் தமிழாக்கமும் (முறையே):
01. வக்ரதுண்ட: = வளைதுதிக்கையன்
02. ஏகதந்த: = ஒருகோடன்
03. கிருஶ்ணபிங்காக்ஷ: = கரும்பழுவிழியன்
04. கஜவக்த்ர: = ஆனைமுகன்
05. லம்போதர: = பகடுவயினன்
06. விகட: = பகடுடலன்
07. விக்னராஜா = ஊறழிமன்
08. தூம்ரவர்ண: = புகைவண்ணன்
09. பாலசந்த்ர: = பிறைநுதலோன்
10. விநாயக: = குறைகளைவோன்
11. கணபதி = கணபதி
12. கஜானன: = கறையடிவாய்
ஸமஸ்கிருத மூலம்:
http://www.greenmesg.org/mantras_slokas/sri_ganesha-sankata_nashak_stotra.php
Practical Sanskrit: shrI-gaNesha-stotram - ??????? ????? ????
*****