• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

'' ஒற்றுமையான குடும்பமும், பாடகி அந்தஸ்தும் கிடைக்க,
ஒற்றுமையாகக் குடும்பம் முயன்றால் மட்டுமே முடியும்!''
உண்மை மொழியை இங்கு எதார்த்தமாய் சொல்லி விட்டீர்
நன்றி.
சிவஷன்முகம்.
அனுபவம் பேசுகிறது! :director:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 64

இங்கும் உள்ளது அழகான வெங்கடேஸ்வரா கோவில்;
இங்கும் ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், சுவாமி ஐயப்பன்,

வள்ளி, தெய்வானை சமேதர் முருகன் என சன்னதிகள்,
அள்ளும் அழகுடன் திகழத் தென்னிந்திய முறையிலும்,

பட்டபிஷேக ராமர், ராதா க்ருஷ்ணா, மாருதி சன்னதிகள்,
பட்டால் அலங்கரித்து, வட இந்திய முறையிலும் உள்ளன.

சாஸ்திரிகள் பஞ்சகச்சம் கட்டி, கால்களில் SOCKS போட்டு,
சாஸ்திரப்படி பூஜைகள் செய்து, நம்மை அசத்துகின்றார்!

மூடிய உண்டியல்கள் பல அங்கு வைத்திருந்தாலும், அங்கு
'வேண்டிய' காசுகளை, சுவாமி அருகிலேயே போடுகின்றார்.

மறுநாள் காலை; நியூயார்க் செல்லும் வழி; இந்தியக் கடை;
ஒரு மாதம் தேவையானவற்றை, கடையில் வாங்கினோம்.

ஒரு பவுண்டு பாதாம், பாஸ்டனில் ஐந்து டாலர்கள் ஆகும்;
நாலு பவுண்டு பாதாம், ஒன்பது டாலர்களே நியூஜெர்சியில்!

கார்டு தேய்க்காமல் இந்நாட்டில் ஷாப்பிங் இல்லை; நாம்
கார்டு தேய்க்கலாம், காரில் பெட்ரோல் போட்டுக் கொள்ள!

பணியாள் பொதுவாக பெட்ரோல் போட இல்லாவிடினும்,
பணியாள் இருந்தார், ஒரு நியூஜெர்சி 'பெட்ரோல் பங்க்'கில்!

:car:தொடரும்..................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 65

பிரபலமான வல்லப விநாயகர் கோவில், நியூயார்க்;
பிரமாதமாகத் தென்னிந்தியக் கலை மிளிரும் அங்கு!

ஆறு அடிக்கு மேல் உயர்ந்து இருக்கும் விநாயக மூர்த்தி;
அருமையான அலங்காரம்; கண்கள் கொட்ட மறந்தன!

விநாயக சதுர்த்தியன்று, பக்ஷணங்களாலேயே அழகாக,
விநாயக மூர்த்திக்கு அலங்காரம் செய்வது சிறப்பாகும்!

தேவிகள் காமாக்ஷி, பார்வதி, துர்க்கை சன்னதிகளில்
தேவிகளின் உருவழகு, எங்கள் கண்களை நிறைத்தன.

பெண் மருத்துவர் ஒருவரின் முழு முயற்சியால், அங்கு
பொன்னான இக்கோவில் அழகுற எழுந்துள்ளது, என்றார்!

ஞாயிற்றுக் கிழமைகளில், இனிய பஜனை நடத்துகின்றார்;
ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்புச் சாப்பாடும் கிடைக்கும்!

இடியாப்பம், மசால் தோசை, பிசிபேளாபாத், பகளாபாத்,
இட்லி, உப்புமா எனப் பலவகை உணவுகள் சூடாக உண்டு.

வரிசையில் நின்று, நமக்கு வேண்டியவை சொன்னால்,
வரிசைப்படி டோக்கன் கொடுத்துவிடுகின்றார், நமக்கு.

கேட்டவை தயாரானதும், எண்ணை அறிவித்து - நாம்
கேட்டவை, பாக்கெட்களில் சிந்தாமல் கொடுக்கின்றார்!

தென்னிந்தியர்கள் ஏன் பார்த்தாலும் சிரிப்பதில்லை?
என்னதான் முயன்றாலும், பார்க்காது செல்கின்றார்?

'இன்று ஒரு மாமியைப் பார்த்துச் சிரித்தே தீரணும்!'
என்று எண்ணியபடி, பார்வையைச் சுழல விட்டேன்!

:spy:தொடரும் ...............

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 66

'ஏதேனும் தென்னிந்திய உடை புடவை தெரிகிறதா?
ஏதாவது தென்னாட்டு முகம் தெரிகிறதா?' எனத் தேட,

அதோ! ஒரு டேபிளில் புடவை அணிந்த ஒரு மாமி!
ஏதோ என் அதிருஷ்டம் என நோக்க, தெரிந்த முகம்!

'தெலுங்கோ? விசாகப்பட்டணத்தில் பார்த்தவளோ?' என
தெலுங்கில் 'மாடலாட' ஆரம்பிக்க, அவளோ 'திரு திரு'!

அட! என் மாணவியின் அம்மா! சென்னைவாசியேதான்!
அட! நான் இவளிடம் 'மாடலாடி' பயம் ஏற்படுத்தினேனே!

பின் என்ன? அரட்டைக் கச்சேரிதான். சில ஆண்டுகள்
பின் நோக்கி, மனதில் 'மலரும் நினைவுகள்' வந்தன.

முன்பு ஒருமுறை, இதே மாமியுடன் வேறொரு சந்திப்பு;
அன்புச் சிரிப்புடன், பட்டுப் புடவையில், அருகில் வந்தாள்!

என்னவரின் நண்பர் மகனுக்குத் திருமணம்; 'நீங்கள்
என்ன உறவு மாப்பிள்ளைக்கு?', என்று நான் கேட்க,

'கல்யாணப் பெண் எங்கள் இரண்டாம் மகள்' என்றாள்!
'கல்யாணத்திற்கு அழைக்க மறந்தேன்!' என வழிந்தாள்!

என் மாணவி பற்றி நிறையக் கூறி, அகம் மகிழ்ந்த பின்,
தன் குடும்பத்துடன், தன் வீட்டிற்குத் திரும்பிவிட்டாள்.

மாலை நேர நெரிசல் மிகவும் கொடுமை நியூயார்க்கில்;
வேலை நேரம் முடிந்து, வீடு திரும்பும் மனிதர் கூட்டம்.

பொறுமையை சோதிக்கும் ஆமை வேகத்தில் ஊர்திகள்;
பொறுமையின் சிகரம் என் அப்பா கூடத் தாளமாட்டார்!

அவர் பெயருடையவன் அக்கா மகன்; அதனால்தானோ,
அவரைவிட அதிகப் பொறுமை காத்தான், சிரித்தவாறே?

:car::car::car: . . . :peace:
தொடரும் ..............

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 67

நண்பர் மகளின் வீடு, பாஸ்டன் வரும் வழியிலே;
நண்பகலிலிருந்து அழைத்தபடி இருந்தாள், அவள்.

மாலை ஆறு மணிக்கு அவளைச் சந்திக்க எண்ணி,
மேலும் மூன்று மணி கடந்ததும், அங்கு சென்றோம்!

வேகமாக இரவு உணவுடன் பேச்சுக் கச்சேரி - இரவு
மோசமாக நெரிசல் இல்லை; ஒரு மணிக்கு பாஸ்டன்!

எங்கள் அடுக்ககத்தில் உள்ளது ஒரு நீச்சல் குளம்;
தங்கள் கோடையை அனுபவிக்க, பலர் வருவார்கள்.

தினமும் ஒரு தாத்தா பாட்டி ஜோடி வந்து அமரும்;
தினமும் இரு பேரக்குட்டிகள், கும்மாளம் அடிக்கும்!

கதை எழுதியபடியே, ஜன்னல் வழியே பார்ப்பேன்;
கதை பேசியபடியே, குழந்தைகளும் குதூகலிக்கும்!

தங்க நிறத்தில் அம்மா மின்ன, இரு குழந்தைகளும்,
தங்கள் அப்பா போல, கார்மேக நிறத்தில் இருக்கும்!

'ஆப்ரிக்கஅமெரிக்கர்' எனத் தங்களை வகைப்படுத்தும்,
ஆப்ரிக்கர் பலருக்கு, அமெரிக்க மனைவிகளே உள்ளார்!

'உடை மாற்றுவதுபோல் தம் துணை மாற்றுவார்', என
எடை போட்டதுபோல, அமெரிக்கரைச் சிலர் பழிப்பார்!

இனிய இல்வாழ்க்கை வாழ்ந்து, நல்ல வாரிசுகள் பெற்று,
இனிதே வாழ்கின்ற அமெரிக்கர்கள் ஏராளமாய் உண்டு!

:grouphug: . . :tea: . . :thumb:தொடரும் .......................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 68

எந்த வேலையும் தாழ்வில்லை அமெரிக்காவில்; தம்
சொந்தத் தொழிலாக CATERING செய்கின்றார் I.I.T.ans!

ஆம்! நான்கு I I T என்ஜினீயர்கள் சேர்ந்துகொண்டு,
தாம் அதை ஆரம்பித்துச் செழிக்கின்றனர், இங்கு!

நினைத்த வேலை கிடைக்காவிடில், வேறு ஏதும்
நினைத்து, நேர்த்தியாகச் செய்யவும் முடியுமே!

மனதைத் தேற்றிக்கொள்ள வந்தது இந்த எண்ணம்;
மனதில் நிழலாடியது, 'வறுமையின் நிறம் சிவப்பு!'

அந்த ஜூன் பதினான்கு காலையில் ஆரம்பித்தேன்,
இந்த 'மிஸ்ர கவிதை' நடையில் என் எழுத்துக்களை!

அமெரிக்க வாழ்க்கை பற்றி வந்தன, எண்ண அலைகள்;
'ஓ அமெரிக்கா!' வை அந்த அதிகாலையில் வடித்தேன்!

வேலை பற்றி நான் வடித்த சில வரிகள்:

எந்த வேலையும் தாழ்வில்லை இங்கு;
அந்த விஷயம் மிகவும் நல்லதுதான்!

தானே 'டிக்கட்' கொடுத்து, தானே 'பஸ்' துடைத்து,
தானே அதை ஓட்டி, தானே 'ட்ராஷ்' எடுக்கும்

'பஸ்' ஓட்டுனர்?….. இல்லையில்லை!
'பஸ் பாதுகாப்பாளர்' கண்டு அதிசயித்தேன்!

‘அண்ணே! அண்ணே!’ என்று நம்ம ஊரில்
பின்னே சென்று, பணிவுடன் உதவி,

'டீ' யும், கூடவே அடியும் வாங்கும் அந்தக்
'கிளீனர்' வாண்டுகள் இங்கே கிடையாது!

பாம்பாட்டி நாடென்று நம் நாட்டைக் கூறுவோர் – இங்கு
பாடும் ‘நடுத்தெரு நாயகர்’ பற்றி ஏன் சொல்வதில்லை?

‘பணமில்லையேல் பாட்டில்லை’ – என அறிவிப்பு வைத்துப்
பணம் சேர்க்கப் பொது இடத்தில் பாடுவோர் பலருண்டு!

தெருவில் வித்தை காட்டுவோரும் இங்கு உண்டு!
ஒரு நாளில் பல டாலர் நோட்டுக்கள் தேறுமாமே?

:juggle: . . :target:தொடரும் ....................


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 69

அப்பாக்கள் தினம் ஜூன் 15, 2003. அன்று சமையலில்,
அப்பாவுக்குப் பிடித்த உருண்டைக் குழம்பு, 'ஸ்பெஷல்'!

'இந்த ஊர் மிக்ஸி கெட்டியாக அரைக்காதோ?', என்ற
அந்த எண்ணத்தை, அன்று எங்கள் மிக்ஸி மாற்றியது!

'ஐஸ்' உடைக்கும் வேகத்தை வைத்து அரைத்தால்,
'நைஸ்' வடை மாவும்கூட, நன்கு தயாராகின்றதே!

சோயா தயிர் செய்யவும் அறிந்துகொண்டேன்; இந்த
சோயா தயிரைத்தானே, அக்கா மகன்கள் உண்பார்!

பாலுக்கு பதில் சோயாப் பால் இருந்தாலும், ஆவின்
பாலின் ருசி அதில் இல்லை, என்றே தோன்றியது!

இனிப்புப் பண்டம் செய்வது கடினம், 'வீகன்'களுக்கு!
இனிப்புக்கள் செய்ய, நெய் வேண்டுமே! ஆனாலும்,

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலம் நன்கு பொடித்து,
'மாலாடு' பிடித்தேன், சோயாப் பாலையே தெளித்து!

முனைவர் பட்டம் பெற்றவர்கள், அக்கா மகன்கள்.
முனைந்து எங்களைக் காண வந்தான், பெரிய மகன்!

மிதிவண்டி ஓட்டி விழுந்ததில், கால் எலும்பு முறிவு;
வலியை மதிக்காது, சிகாகோவிலிருந்து வந்தான்!

விமான நிலையத்தில் வரவேற்றோம்; அவனுக்கு
அடர்ந்த தலை முடி; HAIR CUT க்குச் செல்லவில்லை!

கட்டைக்கள் உதவியுடன் நடந்தவனைப் பார்த்துக்
கண்கள் எனக்குப் பனித்தன; அவனோ சிரித்தான்!

சின்னவன் வார விடுமுறையில், படகுத் துறையில்,
சின்னதாகப் பயணம் செல்ல விழைய, இசைந்தோம்!

எங்கள் மகனுடன் அவர்கள் இருவரும் சேர்ந்துவிட,
எங்கள் எண்ணிக்கை அன்று ஐந்து ஆக உயர்ந்தது!

:grouphug: . . . :happy: . தொடரும் .................


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 70

அழகிய சார்லஸ் ஆறு; அமைதியான நீரோட்டம்;
அழகிய ஓர் இளைஞன், சரியான துடுப்பு கொடுத்து,

உயிர் காக்கும் பாதுக்காப்பு 'ஜாக்கெட்' அணிவதற்கு.
உயர் வகையில் எல்லோருக்கும் கொடுத்தான்.

சூப்பர் அளவுக்கு எல்லோரும் ஊதிவிட, மெதுவாக,
சூப்பர் அனுபவம் பெற, இரு படகுகளில் ஏறினோம்!

ஒரு படகில் மூவர்; இன்னொரு படகில் மற்ற இருவர்;
சிறு போட்டி வைத்து, ஒரே திசையிலே சென்றோம்!

துடுப்பைப் போட்டு, படகு நகர்ந்ததும், எங்களுக்குள்,
துடுப்பைப் பிடிக்கப் போட்டி போட்டுக்கொண்டோம்!

அதிவேக மோட்டார் படகு ஒன்று விரைந்து செல்ல,
அதிவேக அலைகள் எழுந்து, இரு படகுகளும் ஆட,

எனக்கு மட்டும் நீச்சல் தெரியாதென நான் நடுங்க,
எனக்கு தைரியம் சொல்ல மகன்கள் முனைந்தனர்!

இரு படகுகளிலும் காமராவைப் பரிமாறிக்கொண்டு,
இருவர் புகைப் படக் கலைஞர்களாக மாறினோம்!

ஒரு மணி நேரம் மிதந்து, மகிழ்ந்து, சிரித்து, களித்து,
மறுபடியும் கரை சேர முனைந்து, அதில் வென்றோம்!

இனிய நினைவுகள் மனத்தை நிறைக்க, மீண்டும்
இனிய எங்கள் இல்லம் திரும்பக் காரில் ஏறினோம்!

:car: . தொடரும் ..................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 71

'பட்டாத்தான் புத்தி வரும் பாப்பானுக்கு', என்பார்கள்;
பட்டாலும் புத்தி வரவில்லை எனக்கு! சொல்கிறேன்!

என்னவர் மறு முறை நியூயார்க் நகர் செல்ல விழைய,
என்னவர் பசி தீர்க்க, 'சான்ட்விச்' விரைவாய்ச் செய்ய,

'டோஸ்டரில்' போடாது, தோசைக் கல்லிலே வைத்து,
'ரோஸ்ட்' ஆவதற்கு விட்டு, பெட்டி அடுக்கச் சென்றேன்!

மீண்டும் அதே 'உய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்'; பய அலைகள்;
மீண்டும் FIRE BRIGADE! ஆனால், இந்த முறை இருவர்!

ஆபீசர் தன் நீலக் கண்ணால் நோட்டமிட்டவாறே வர,
'ஆபீசரை நான் சமாளிக்கிறேன்', என எம் மகன் வந்து,

'சாரி' கூறி, 'இதை எப்படி நிறுத்துவது, சார்!' என வினவ,
'சாரி! அது எங்கள் வேலையே!' என்றார், நீலக்கண்ணர்!

'இனிமேல் அடுப்பை ஏற்றிவிட்டு எங்கும், எப்போதும்,
தனியே செல்லக் கூடாது!' எடுத்தேன், சாணக்கிய சபதம்!

மட்டிப்பால், ஆசைக்குக் கூட ஏற்றவே கூடாது என்று,
மட்டிப்பால் பாக்கெட்டை, பெட்டியில் இட்டேன், அன்று!

இன்னும் இருவார விடுமுறைகள்தான் உள்ளன, இங்கு;
எண்ணும் 'நயாகரா' தரிசனம் கிடைக்குமா, எங்களுக்கு?

இந்த PROJECT முடித்தால், மகன் விடுவான் பெருமூச்சு!
அந்த ஒரு வாரக் கடைசி, நயாகரா செல்வதற்கு ஆச்சு!

வீட்டுத் தோட்ட மாங்காய் திடீரென நினைவு வந்தது;
வீட்டு நினைவே என்னை HOME SICK ஆக்கிவிட்டது!

:sick: . . . :nod:தொடரும் ......................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 72

மிகவும் எதிர்பார்த்த ஜூலை நான்காம் தேதி! நான்
மிகவும் பார்க்க விழைந்த FIRE WORKS காண, நாங்கள்

இரவு பத்து மணிக்கு, சப்வே ரயில் ஏறி, அந்த இனிய
இரவில், M I T கல்லூரி அருகில் இறங்கிவிட்டோம்!

பத்தரை மணிக்கு, சார்லஸ் ஆற்றங்கரை அருகில்,
இத்தரை புகழும், பாஸ்டன் வாணவேடிக்கை துவங்க,

இசைக்கு ஏற்றபடி வெடிகள் எழும்பி இருக்க, அந்த
இசையை மீறி, சில வெடிகளால் பூமியே அதிர,

அரிய பூ மழை போல வானம் முழுவதும் கொட்ட,
பெரிய வாணம் சிதறும்போது, நம்மை பயமுறுத்த,

மணி மாலைகள் போல சில, வானம் முழுதும் பரவ,
இனிய விசிலுடன் பல, புழுக்கள்போல நெளிந்து விழ,

மஞ்சள் நிறத் தீப் பூக்கள், நீலம், பச்சை, ஊதா என
எஞ்சிய நிறங்களிலும் மாறி மாறி அசத்திவிட்டன.

பாடும் SHREK பட நாயகியுடன், உச்ச ஸ்தாயியில்
பாடும் குருவி வெடித்து, மூன்று முட்டைகள் வரும்.

அன்று அந்த இசைக்கு, வாணம் ஒன்று மேலே சென்று,
மூன்று முட்டைகள் வடிவம் வானில் தெரிந்தவுடன்,

கூடியிருந்த மக்கள் வெள்ளம், பெரிதாய் ஆர்ப்பரித்தது;
கோடி இன்பம் பெற்றதுபோல, கரகோஷம் நிறைத்தது!

எத்தனை கூட்டம் இருந்தாலும், ஒருவரை ஒருவர்
எத்தனை நெருங்கினாலும், இடிப்பதே இல்லை!

நால்வர் சென்று சென்னை பஸ்ஸில் ஏற, இடித்தே
செல்வர், காலி இருக்கைகள் பல கண்ட பின்னும்!

:bump2::bump2: . . . தொடரும்........................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 73

மறுநாள் காலை நயாகரா பயணம் ஊர்ஜிதம்! அன்று
இரவில் வாடகைக் கார் எடுத்து வந்தான், எம் மகன்.

எதிர்பார்த்த தரிசனம் ஆறாம் தேதியில் கிடைக்கும்!
எதிர்பார்க்கும் எனக்கும், எழுத விஷயம் இருக்கும்!

முதல் முறை DONUT கடையில் வாங்கி வந்தோம் ;
அதன் ருசி மிகவும் அருமை என அன்று அறிந்தோம்!

விடியல் நேரமே புறப்பட்டோம்; திடீரென செல்லும்
வழியில் போக்குவரத்து நத்தை வேகமாக ஆனது!

இரு கார்கள் மோதி, மிக மோசமான விபத்து ஒன்று;
ஓரக் கண்களால் பார்த்தும், பயம் நிறைந்தது, அன்று!

நூறு மைல் வேகத்தில், வண்டிகள் பற்பல பறப்பதால்,
ஒரு நொடி கவனம் சிதறினாலும், பெரும் விபத்தே!

ELK களும் மான்களும் திடீரென குறுக்கே குதிக்கும்!
ELK மோதியதால், ஒரு நண்பரின் கார் ஆனது சேதம்!

ஆனாலும் அதிவேகத்தில் பறக்கின்றோம் - அப்படிப்
போனாலும், ஆண்டவன் காப்பான் என்ற நம்பிக்கை!

மாலை ஐந்து மணிக்கு, நீர்வீழ்ச்சியின் அருகில் - இந்த
நாளை, எத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்துள்ளேன்!

:target: தொடரும் ....................


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 74

நயாகரா பற்றிய என் எண்ண அலைகள்...........

வியக்க வைக்கும் நயாகரா!

பெயரே வந்து தூண்டிவிடும் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி;
உயரே இருந்து கொட்டும் நயாகரா நீர் வீழ்ச்சி!

உலகிலுள்ள அனைவருமே காண விழையும் அரும் காட்சி;
உணர்ந்திடுவோம் கண்டவுடன் இயற்கை அன்னையின் மாட்சி!

அன்று முதல் இன்றுவரை மேலைநாட்டின் பெருமையாகும்;
மூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து கொட்டுவது அருமையாகும்!

ஆரம்பத்தில் RAPID RIVER எனப் பெருகி ஓடும்;
ஆயிரத்து நூற்று ஐம்பதடி அகலக் கொந்தளிப்பாகும்! – அது

அடித்து வந்த பெருமரங்கள் அதனிடையில் காணும்போது,
நொடிப்பொழுது நம் இதயம் துடிக்கவே மறந்துவிடும்!

ஆற்றுக்கு இணையான சாலையில் எதிர்பார்ப்புடன் செல்கின்றோம்!
நூற்றுக் கணக்கான ஜனக்கூட்டம் உடன் வரக் காண்கின்றோம்!

நெருங்கி வரும் பேரிரைச்சல் கேட்கிறது என்றாலும்,
அருங்காட்சி விரிகிறது நாம் எதிர்பாராத் தருணத்தில்!

அமெரிக்கப் பகுதியில் கற்பாறைகளில் மோதி விழும்;
விவரிக்க வார்த்தை இல்லை! காண்போரை அயர வைக்கும்!

083%20maid%20of%20the%20mist%20ride.jpg


இருநூறு அடி ஆழத்திற்குக் கொட்டும் வெள்ளப் பிரவாகம்!
இரு கண்கள் போதாது! கண்டவுடன் வரும் உற்சாகம்!

பாசம் கூட நீருக்கடியில் உயர்ந்த மரகதமாய் மின்னுகிறது!
பச்சை வண்ணப் பெருக்கெடுப்பாய் மனம் அதை எண்ணுகிறது!

இரண்டாம் பகுதி BRIDAL VEIL என அழைக்கப்படுகிறது!
இரண்டாம் கருத்திற்கு இடமில்லை; பெயர் கச்சிதமாய் இருக்கிறது!

வெண்மையான அடர்ந்த துணி மணமகளைத் தொடர்வதுபோல்
வெண்மையான அடர்ந்த நீரும் நிலமகளைத் தொடுகிறது!

082%20american-niagara-falls-bridal-veil.jpg


:cheer2: . . தொடரும்................

 
அன்று முதல் இன்றுவரை மேலைநாட்டின் பெருமையாகும்;
மூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து கொட்டுவது அருமையாகும்!

084Panoramic_View_of_Niagara_Falls.jpg


Photo courtesy: Internet
 
raji,

in 1985 when my parents visited the niagara, mom stood watching the water for 2 hours. at that time there was drought in chennai, and mom just felt the joy of seeing so much water flow.

btw, i am enjoying your american travelogue.

but america, like india is a land of peoples. with peoples comes problems, issues, unpleasantness etc. did you not experience any such thing at all?

the first impressions are always good. but underneath it, we are all humans and any human society has its warts. i presume you stayed for a few months. did you not find anything defective in the usa?

thank you.
 
.................

but america, like india is a land of peoples. with peoples comes problems, issues, unpleasantness etc. did you not experience any such thing at all?
.............................
i presume you stayed for a few months. did you not find anything defective in the usa?

thank you.
Dear Sir,

I am copy pasting a few paragraphs from my write up ஓ! அமெரிக்கா!( another thread started by me), in this thread too!

But please read all the pages of ஓ! அமெரிக்கா!, when you find time! You will get the information you need !!

Meanwhile, I should accept that I am projecting the good things that I experienced, more! :angel:?

Regards,
Raji Ram
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 75

Horse shoe வடிவத்தில் மூன்றாம் பகுதி இருக்கிறது;
Horse shoe falls எனப் பெயர் பெறுகிறது.

079%20horse%20shoe%20falls115058-bigthumbnail.jpg


இருநூறடி இறங்கவேண்டும், படகுத்துறை அடைவதற்கு;
இரும்பால் அமைத்த 'லிப்ட்' உண்டு அழைத்துச் செல்வதற்கு.

Maid of the mist எனப் படகுப் பயணத்தை அழைக்கிறார்!
Maid of the mist – ன் சோகக் கதை பின்னர் அறிந்தோம்!

நீல வண்ணத்தில் மழைக் 'கோட்டு' அளித்து, பின்னர்
நீர்வீழ்ச்சிகளைக் காண அழைத்துச் செல்கின்றார்!

080%20maid%20of%20the%20mistniagara_falls_tours_sc88.jpg


படகு புறப்பட்டவுடன் மக்களின் பெரிய ஆரவாரம்;
இடதுபுறம் தெரிகிறது வானவில்லின் வண்ண ஜாலம்!

கண்ணிமைக்க மறக்கிறது! ஏன்? சுவாசம் கூட நிற்கிறது!
எண்ணிலடங்கா நீர்த்துளிகள் வண்ணமயமாய்த் தெரிகிறது!

வானவில் ஒன்று தோன்றி நம்முடனே வருகிறது! – மறுகணமே
வானவில்லின் பிரதிபலிப்பும் பளீரென்று வளைகிறது!

இரட்டை வானவில்லும், நீர்வீழ்ச்சியின் அதிர்வுகளும்,
இரட்டிப்பு மகிழ்வளிக்கும், ஒலி-ஒளி பிரம்மாண்டங்களாய்!

அமெரிக்கப் பகுதிகளைத் தாண்டியதும் கண்ணெதிரே
அமர்க்களமாய் வருகிறது, கனடா நாட்டுப் பிரவாகம்!

ருத்திரனின் தாண்டவம் இப்படித்தான் இருக்குமோ?
இந்திரனின் ஆயுதம் இப்படித்தான் இடிக்குமோ?

ஆண்டவனின் விஸ்வரூபம் இப்படித்தான் இருக்குமோ?
கண்டவர்க்கு ரூபத்தை ஒளி வெள்ளம் மறைக்குமோ?

:clap2:தொடரும் ..............

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 76

நீர்வீழ்ச்சியை மறைத்து நிற்கும் நீர்த்துளிகளின் மோதல்கள்;
நீர் வீழ்ந்து நாம் நனைந்து, சிரிப்பலையின் மோதல்கள்!

ஒரு கணம் எனக்கு நீந்தத் தெரியாதென நினைத்து,
மறு கணம் வேண்டினேன், இஷ்ட தெய்வத்தை நினைத்து!

பத்து நிமிடப் பயணம்தான்! நினைத்தாலே சிலிர்த்துவிடும்;
சித்து விளையாட்டுப்போல, சிந்தைதனில் நிறைந்துவிடும்!

ஆற்றங்கரை சேர்ந்து, மேலே ஏறி வந்த பின்,
ஆற்றின் மறுபக்கம் பாலம் வழிச் சென்றிடலாம்!

அங்கும் பூமியைத் துளைத்து, வேறு 'லிப்ட்' அமைத்துள்ளார்;
அந்தப் பயணத்தை 'CAVE OF THE WIND" என அழைக்கின்றார்!

மழைக் 'கோட்' மட்டுமின்றி வழுக்காத மிதியடிகள் தந்து,
அழைத்துச் செல்லுகிறார் வழிகாட்டி, மரப் படிகள் மீது!

‘BRIDAL VEIL’ நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் செல்கின்றோம்;
வீல், வீல் – என்று குழந்தைகள் அலறக் கேட்கின்றோம்!

ஆகாய கங்கை இப்படித்தான் ஆர்ப்பரித்து வந்ததோ?
ஆகாயம் நோக்கிய கணம், இந்த எண்ண அலை மோதியது!

சூறாவளி மேடையொன்று தனியாகத் தெரிகிறது;
தீபாவளிச் சரவெடிகள் வைத்ததுபோல் அதிர்வு அங்கு!

வியந்த பலர் அதில் ஏறி நிற்க விழைந்தனர்;
பயந்த சிலர் அதில் ஏறாமலே திரும்பினர்!

கொட்டும் அருவியின் துளியளவு தெறிப்பதே – யாரோ
தட்டும் உணர்வைத் தருவது விந்தையான அனுபவமே!

:bump2: . . . தொடரும் .........................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 77

இயற்கையில் அமைந்த அந்த வெள்ளப் பெருக்கெடுப்பிற்கு,
செயற்கையாய் இரவில் எத்தனை வண்ணம் சேர்க்கின்றார்!

வண்ண விளக்குகள் பலவற்றின் ஒளி பாய்ச்சி – அங்கு
வண்ண நீர்ப் பிரவாகம் கண்டு வியக்க வைக்கின்றார்!

தூரிகையால் தீட்டியதுபோல, தூரத்திலிருந்து பார்த்தால்;
பேரிகைபோல் முழங்கிவிடும், அருகிலே சென்றுவிட்டால்!

கண் நோக்கிய இடமெல்லாம், வண்ண ஒளிக் கலவைகள்;
விண் நோக்கி எழும் ஒளிர் வண்ண நீர்த் திவலைகள்!

MAID OF THE MIST பற்றி…….

நன்றி காட்டும் நாளாக THANKS GIVING நாள் ஒன்று;
தொன்று தொட்டு வந்த கதை, இந்த நாளைப் பற்றி உண்டு!

விசித்திரமாய் ஓர் இனத்தில் தொடர்ந்து வந்த வழக்கம் ஒன்று;
சித்திரம்போல் அழகு நங்கையை, நீர்வீழ்ச்சியில் தள்ளுவதென்று!

இறைவனுக்கு நன்றி காட்ட, கொடும் நரபலி கொடுத்தனர்;
தலைவனுக்கு வந்தது சோதனை, அழகு மகள் வடிவத்தில்!

தன் மகளைத் தேர்ந்தெடுத்து, பலி கொடுத்து, மனமுடைந்து,
தன் உயிரும் மாய்த்துக் கொண்டான், நீரில் பாய்ந்து, வீழ்ந்து!

மனம் உடைந்த தலைவன போட்ட 'ஓ' வென்ற ஓலம்தான்,
தினம் கேட்கும் நயாகராவின் ஓசையென்று கூறுகின்றார்!

சோகக்கதை கேட்டு மனம் கசந்த எமக்கு – அந்தச்
சோகம் மாறிவிட 'ஜோக்' ஒன்று கிடைத்தது.

'எட்டுக் ‘கன்கார்டு’ விமானங்கள் மிக அருகில் சென்றாலும்,
எட்டாது அந்த ஒலி, நீர்வீழ்ச்சி ஓசையால்', என்ற வழிகாட்டி,

'இங்கு பெண்கள் அனைவரும் ஒரு வினாடி மௌனம் காத்தால்,
நன்கு கேட்டு விடும், நீர்வீழ்ச்சியின் ஓசை', என்றாராம்!

:plane::blabla::blabla::blabla:தொடரும் ..............

 
வண்ண விளக்குகள் பலவற்றின் ஒளி பாய்ச்சி – அங்கு

வண்ண நீர்ப் பிரவாகம் கண்டு வியக்க வைக்கின்றார்!

தூரிகையால் தீட்டியதுபோல, தூரத்திலிருந்து பார்த்தால்


81%20niagara-lights.jpg


80%20illumination-niagara.jpg


82%20american-niagara-night.jpg


:cheer2: தொடரும் ..............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 78

ஹரியானாக்காரர் தன் போட்டோ எடுக்கச் சொல்லி,
அரிதான நீர்வீழ்ச்சி, மகன் எடுத்த படத்தில் தெரிய,

வாயெல்லாம் பல்லாக, நன்றி உரைத்தார்; மேலும்
நீயெல்லாம் உதவுவதே மிக மகிழ்ச்சிதான், என்றார்!

ஒரு மணிக்கு ஒரு வட்டம் சுழலும் உணவகம் - அது
ஒரு உயரக் கட்டிடத்தின் 51 - 52 - ஆம் மாடிகளாகும்.

கனடா நாட்டின் மிகவும் அழகிய கட்டிடமான அதில்,
கனடா நாடு செல்வோர் ஏறவும் மிகவும் விரும்புவர்.

சிறந்த இரு நாட்டு நீர்வீழ்ச்சிகளை, நன்கு காணுமாறு
அமைந்த கண்ணாடி ஜன்னல்கள், சுற்றிலும் உண்டு!

பெரிய ஹைட்ரஜன் பலூன் உள்ளது, அமெரிக்கப் பக்கம்;
பெரிய கயிற்றில் இணைத்து, மிக உயரம் செல்கின்றது!

இருபது டாலர் கட்டணம் என்பதால், அதன் அருகினில்,
இருபது பேர்கள்கூட வரிசையில் காண முடியவில்லை!

இரவு மீண்டும், வண்ண விளக்கு ஒளியில், நல்ல தரிசனம்;
பெருகும் நீர்த்திவலைகளின் அழகை, வருணிப்பது கடினம்!

வண்ணமய நயாகரா கண்டு, மகிழ்ந்து மனம் நிறைந்த நல்-
லெண்ணங்களுடன், நல்லிரவு கூறி, உறங்கச் சென்றோம்!

மறுநாள், 25 சென்ட்களுக்கு, இரு நிமிடங்கள் நீர்வீழ்ச்சியை
அருமையாய் பைனாக்குலர் வழியும் கண்டு ரசித்தோம்!

அருகிலே WAX MUSEUM உள்ளது; பலர் அந்த மியூசியத்தின்
அருகிலே கூடச் செல்ல விழையாது, அகன்று சென்றனர்!

மதர் தெரேசா, இளவரசி டயானா, லிங்கன், மார்க் ட்வைன்
மாதிரி பிரபலங்களின் மாதிரிகள், மெழுகு பொம்மைகளாக!

உறைந்து போன நயாகராவின் மாதிரியும், அங்கு உள்ளது;
உறைந்து போன ஐஸ் மீது, மக்கள் கூட்டம் அலைபாய்கிறது!

:car:தொடரும் ...............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 79

ஆறடி விட்டமுள்ள ஒரு ரப்பர் பந்தில், ஒரு மனிதர்,
ஆற்றில் சென்று, நீர்வீழ்ச்சியில் விழுந்து பிழைத்தார்!

அவருடைய உடையும், பந்தின் மாதிரியும் எடுத்து,
அவருடைய நினைவாக அங்கு வைத்துள்ளனர்.

மூன்று அங்குல விட்டமுள்ள கயிறு ஒன்றை எடுத்து,
முன்பு நீர்வீழ்ச்சியின் குறுக்கில் கட்டிவிட்டு, தைரிய

வீரர் ஒருவர் சென்றாராம், கயிற்றின் மேல் நடந்து;
சூரர் ஒருவரைத் தன் முதுகின் மீது சுமந்துகொண்டு!

அந்தக் காட்சியைப் படமாக வரைந்து வைத்துள்ளார்;
அந்தக் கயிற்றின் துண்டுகளைக்கூட வைத்துள்ளார்!

படங்களாய் MAID OF THE MIST கதை வரைந்துள்ளார்;
மனங்கள் கலங்கின, அவற்றையெல்லாம் கண்டு!

வெளியே வரும் வழியிலே, வளைந்த கண்ணாடிகள்;
எளிதாய் எம் மனதை மாற்றி, சிரிக்கவும் வைத்தன!

ஒரு கோணத்தில், நம் கை பத்து அடி நீளமாய் இருக்க,
மறு கோணத்தில், நம் அகலம் பத்து அடிகளாய் இருக்க,

முகமும், உடலும் அஷ்ட கோணலாகி, நெளிந்துவிட,
அகமும், முகமும் மலர்ந்து, சிரித்து மகிழ்ந்தோம்!

KEEP SMILING என்று கண்ணாடி மேல் எழுதியிருக்கும்;
எப்படிப்பட்ட சிடுமூஞ்சியும்கூடக் கட்டாயம் சிரிக்கும்!

நல்ல பல நினைவுகள் மனதை நிறைக்க - எங்கள் இனிய
இல்லம் திரும்பினோம், அன்று நள்ளிரவு வேளைக்குள்!

:biggrin1:..:biggrin1: தொடரும் ......................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 80

பாட்டுக்கள் சில கிடாரில் இசைத்து, அவற்றை
கேட்டு ரசிக்க, அன்னையிடம் கொடுக்க ஆசை!

புதிய முயற்சி எது செய்ய முனைந்தாலும், தன்
இனிய ஆசிகளை அவர் அள்ளி வழங்குவார்.

ஏகாந்தமாக ஒரு நாள் கிடைத்தால் மட்டுமே,
ஆனந்தமாக ஒலிப்பதிவு செய்யவும் இயலும்!

அந்த நேரம் வந்தது பத்தாம் தேதி; என்னவரின்
சொந்த வேலை; மீண்டும் சென்றார் நியூயார்க்!

அதிகாலை எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து,
புதிய இசை வடிவை ஒலிப்பதிவு செய்யலானேன்.

ஒரு மணிநேர ஒலிநாடா ஒன்றைத் தயார் செய்ய,
இரு மடங்குக்கு மேல், நேரம் அதிகம் ஆகிவிட்டது.

தொடர்ந்து சில நாள் வாசிக்கவில்லை; நழுவல்கள்;
தொடர்ந்து சில மணி நேரங்கள், 'எடிட்' செய்தேன்.

மாலையில் தயார், என் இசைப் பதிவு, அன்னைக்கு!
மாலையில் மகன்கள் கேட்டு ரசித்தனர், அன்றைக்கு.

இசை ஆர்வமுள்ள அக்கா மகன், தானும் உடனே
இசை பயில, இசைக் கருவி வேண்டும் என்றான்!

இந்த வார விடுமுறையில், என்னுடனே ஷாப்பிங்;
சொந்தமாய் இசைக் கருவி வாங்கும் எதிர்பார்ப்பு!

:music:..:bounce: தொடரும் .....................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 81

கிடாரும், மாண்டலினும் நிறைந்த ஒரு பெரிய கடை;
கிடார் வாங்கச் சொல்லி என்னுடைய ஆலோசனை.

விஷயம் இதுதான்; மாண்டலின் கம்பிகள் இறுக்கம்!
அதிசய இசையை, ஸ்ரீனிவாஸ் எப்படி அளிக்கிறாரோ?

கம்பி மீது விரல்களை வைத்துவிட்டாலே, வலிக்கிறது!
கம்பிகள் இரண்டிரண்டாக; மொத்தம் எட்டு உள்ளன.

ஆறு கம்பிகள் உள்ள மாண்டலின், விலை மிக அதிகம்;
வேறு கடையை நாடினோம்; இங்குள்ள ஆள் 'சிடுமூஞ்சி'!

சிரித்த முகத்துடன், குழறும் கொஞ்சல் ஆங்கிலத்தில்,
குறித்த விலைகளைக் கூறினாள், அந்தக் கடைப் பெண்!

இரண்டு மூன்று கிடார்களை அவள் எடுத்துக் காட்டினாள்;
இரண்டு நிமிடங்கள் இசைத்ததில், ஒன்று தேர்வானது.

நிறைந்த மனத்துடன் அந்த கிடாரை வாங்கிக் கொண்டு,
விரைந்து திரும்பி வந்தோம் எம் இனிய இல்லத்திற்கு!

அன்று மாலை கடையில் ஒரு அனுபவம் கிடைத்தது;
இன்று நினைத்தாலும், சிரிப்பு அடங்காது வருகிறது!

மாத்திரைகளை உடைக்க இயலாத அன்னை கேட்டார்,
மாத்திரை உடைக்க வேண்டி, குட்டி உபகரணம் ஒன்று!

மூன்று மாதம் கண்ணில் படாத அந்தச் சின்னக் குட்டி,
அன்றுதான் 'பார்மசி' பிரிவில், எம் கண்களில் பட்டது!

இத்தனை நாள் நான் விசாரித்தது, ஒரு TABLET CUTTER';
இத்தனை நாள் தெரியாத அதன் பெயர், 'PILL SPLITTER'!


:lol:...:lol:தொடரும் ...................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 82

PILL SPLITTER மூன்று வகைகள் இருக்க, அதில் ஒன்றை
BILL போட நாங்கள் எடுத்துக்கொண்டு சென்றோம்!

3.29 விலையுள்ள அதை சுயசேவைப் பிரிவில் வைக்க,
3.99 என விலை அச்சடித்த காகிதம் வந்து விழுந்தது!

விளையாட்டாகச் சென்று, விலை வித்தியாசம் சொல்ல,
விளையாட்டில்லை கடைக்காரருக்கு! அதிகாரி வந்தார்.

வித்தியாசக் காசைக் கேட்க, "TAKE IT FREE, MA'M"என்று,
மொத்தப் பணத்தையும் தந்தார்; "STORE POLICY" என்றார்!

இரண்டு நாட்கள் சென்றன; மீண்டும் அதே கடையிலே,
சிறந்த நண்பர் ஒருவருக்கும் PILL SPLITTER வாங்கணும்!

இந்த முறையும் தொகை 3.99! இன்றும் அதே அதிகாரி!
இந்த முறையும் முழுத் தொகையையும் தந்துவிட்டார்!

'இதேபோல முன் ஒரு லேடி கேட்டார்', என்று கூறினார்,
அதே 'லேடி' நான்தான் என்று அறியாமலே, என்னிடம்!

இந்த ஒரு விஷயம் மிக அதிசயமாகப் பட்டது, எனக்கு!
அந்த விலையை, இரண்டு நாட்கள் திருத்தவில்லையே!

வரவுதான் எனக்கு! பல கடைகளுக்குப் நான் சென்றதில்,
செலவு இல்லாது இரு PILL SPLITTERகள் வந்தன, ஓசியில்!

'கண்ணா! இன்னும் இரண்டு PILL SPLITTER இருக்கே!' என்று
கண்ணடித்துச் சிரித்த என்னைத் தள்ளிச் சென்றான், மகன்!

:bump2: . . . :angel: தொடரும் ..........................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 81
...........
விஷயம் இதுதான்; மாண்டலின் கம்பிகள் இறுக்கம்!
அதிசய இசையை, ஸ்ரீனிவாஸ் எப்படி அளிக்கிறாரோ?

கம்பி மீது விரல்களை வைத்துவிட்டாலே, வலிக்கிறது!
கம்பிகள் இரண்டிரண்டாக; மொத்தம் எட்டு உள்ளன.

Eight strings:

087%20-%208%20stringed%20mandolin.jpg


ஆறு கம்பிகள் உள்ள மாண்டலின், விலை மிக அதிகம்;

Six strings:

088%20-%206%20stringed%20mandolin.jpg


Srinivas gives the wonderful music by his six stringed madolin
 

Latest posts

Latest ads

Back
Top