Sri Maha Periyava Vakku
ஆத்மா- நம் வாழ்க்கை-கடவுள்(ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.)
ஆத்மா என்பது நம்முள் இருக்கும் ஒரு வாழ்க்கைச் சுடர்.
கடவுள் என்பவர் இந்த விளக்கை ஏற்றி வைக்கும் பெரும் சுடர்.
கடவுள் என்பவர் வாழ்க்கைக்குப் பொருளும்,உருவமும் கொடுக்கும் மகாசக்தி.
ஆத்மா, நம்முள்ளேயே இருக்கிறது. ஆனால் இருட்டு வரும்போதுதான் நாம் விளக்கையும், அதன் சுடரையும் தேடுகிறோம்.
அதேபோல வாழ்க்கையில் தெளிவும், விடிவும் தேவைப்படும் வேளையில்தான் நாமும் ஆத்மாவின் சுடரை நாடுகிறோம்.
கடவுள் என்பவர் இந்த விளக்கை ஏற்றி வைக்கும் பெரும் சுடர்.
அந்தப் பெரும் சுடரின் ஒருசிறு பகுதியாகவே நம்முடைய ஆத்மா ஒளி தருகிறது.
ஆக நம்முள் இருக்கும் சிறுசக்திக்கு மூலாதாரமானது அந்தப் பெரும் சக்தி.
நம்முடைய ஆத்மா ஒரு பல்பு என்றால், கடவுள் அதற்கு ஒளியைத் தரும் பெரிய மின்உற்பத்தி நிலையம்.
இரண்டுக்கும் இணைப்பு இருப்பது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது.
ஆனால் விளக்கு எரியாவிட்டால் "பவர் இல்லை" என்று சொல்லுவதைப் போல, நம்முடைய ஆத்மாவின் சக்தியை உணராதவரையில் கடவுள் இருப்பதாக நாமும் உணரமாட்டோம்.
இன்னோர் உதாரணம் - பெரிய வான்வெளி இருக்கிறது.
அதில் காற்று நிறைந்திருக்கிறது.
அதில் ஒரு சிறு வீட்டை பூமியில் கட்டுகிறோம்.
அதன் அளவுக்குள் மின் விசிறியைப் பொருத்துகிறோம்.
அறையின் ஜன்னல்களை மூடிவிட்டு காற்று இல்லை என்று எண்ணிக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் அறைக்குள்ளும் காற்று இருக்கிறது.
மின்விசிறியைப் போட்டதும் அது காற்றின் அசைவைத் தூண்டுகிறது.
காற்று இருப்பதை உணருகிறோம்.
அதேபோலக் கடவுள் விரிந்த வான்மண்டலத்தில் பரவி இருக்கும் காற்றைப் போன்றவர்.
நம்முள்ளும் அவர் இருக்கிறார்.
ஆனால் அதை நாம் பக்தி உணர்வால் ஆத்மாவைத் தூண்டித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் என்ற அகந்தை இருக்கும்வரை இது புரியாது.
அறையின் கதவுகளும், ஜன்னல்களும் சாத்தப்பட்டிருக்கும் வரை, காற்று இருப்பதை உணரமாட்டோம்.
கதவும், ஜன்னல்களும் திறக்கின்றன.
நான் என்ற அகந்தை அகலுகிறது.
நாமும் தெய்வீக உணர்வை நாடிப் புறப்படுகிறோம்.
வீட்டின் சுவர்கள் உடைகின்றன.
அறை மீண்டும் வான்மண்டலமாகி விடுகிறது.
பிறகு அறைக்குள் இருக்கும் காற்றும் வெளியே உள்ள வான் மண்டலமும் ஒன்றே.
உலக பந்தங்களுக்குள், உணர்ச்சி வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் ஆன்மா, உடலை உதறி எறிந்துவிட்டுப் புறப்படுகிறது.
அதன்பின் அதுவும் கடவுளின் வியாபகமும் ஒன்றே.
கடவுளைச் சரணடைவோம்
Source: Hari Krishnamurthy