• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Om Ganesaaya nama:



#837. ஊர்த்துவரேதசு

திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
கருத்தழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியில் வெள்ளியும் சோராது எழுமே.


அறிவைத் திருத்தி அமைத்து, மனத்தைத் தூய்மைப் படுத்தி, கருத்தழகுடன் பரியங்க யோகம் செய்யும் போது. எந்தத் துன்பமும் இராது. உடலில் விந்து நீக்கமும் இராது. அதன் விளைவு என்ன? விந்துவைச் செலுத்தும் காம வாயு மேல் நோக்கிச் செயல்படும் ஊர்த்துவரேதசு வந்து அமையும்.


#838. உடல் உருகும்


எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே.


சுவாதிஷ்டானத்தில் உள்ள காமத்தீயை மேலே ஏற்றிப் புருவ மத்திக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தீயின் முன் வைத்த மெழுகைப் போல யோகியின் உடல் உருகிவிடும். புருவ மத்தியைத் தாண்டிச சென்று துவாசாந்தப் பெருவெளியையும் அங்குள்ள ஒளியையும் அறிந்தவரின் உடல் ஒருநாளும் கீழே விழாது. மெழுகு போல உருகிவிடும்.


#839. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது


வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளிமுறி ஆமே
தெளிவை அறிந்து, செழு நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.


வானத் தானத்தை அறிந்து கொண்டு, அங்கே விளங்கும் பொன்னிற ஒளியைக் காண அறிந்து கொண்டால் என்ன ஆகும்? உள்ளம் வேறுபடாமல் தெளிந்த ஞானம் கிடைக்கும். சிவன் அருளால் வானமும் அதன் நடுவில் ஒளியும் தெரியும். வேறு எதுவும் தெரியாது. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது.


#840. உடலில் உறையும் தெய்வங்கள்


மேல்ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர்எனின்,
மால்ஆம் திசைமுகன் மாநந்தி யாயவர்
நால்ஆம் நிலத்தின் நடுஆன அப்பொருள்
மேலாய் உரைத்தனர் மின் இடையாளுக்கே.


ஒருவருக்கு மேலாக ஒருவர் என்று நம் உடலில் விளங்கும் தெய்வங்கள் யார் யார்? திருமால், நான்முகன், உருத்திரன், பராசக்தி, பரமசிவம் என்னும் தெய்வங்கள் நம் உடலில் உறைகின்றனர். துரிய பூமியில் பராசக்தியை விட மேலே இருப்பான் சிவன்.
 
#841 to #844

#841. நெடுங்காலம் வாழ இயலும்

மின்இடை யாளு மின்னாளனும் கூட்டத்துப்
பொன்இடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னோடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேன்
மண் இடைப் பல்ஊழி வாழ்தலும் ஆமே.


மின்னல் போன்ற இடையை உடைய சக்தி தேவியையும், அவளை ஆளும் சிவனையும், அவர்கள் கூட்டத்தையும் பொன் ஒளி கொண்ட வானத்தில் நிலை பெறச் செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் தன் ஆன்மாவையும் காண அறிந்தவர் இந்த உலகில் நெடுங்காலம் வாழ இயலும்.


#842. ஆன்மாவே யாகப் பொருள்


வாங்கல் இருதலை வாங்கிலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.


காம வாயுவை உள்ளே இழுத்துச் சுக்கிலம் கெடுமாறு செய்தலையும், அவ்வாறு உள்ளே இழுத்த காம வாயுவை மேலே செலுத்தும் வழியினை அறிபவர் இல்லை. அத்தகைய மாற்றங்களைச் செய்ய அறிந்து கொண்டவர் தன்னையே சிவனிடம் ஹோமப் பொருளாக அர்ப்பணிப்பவர் ஆவார்.


#843. முடி கறுக்கும்!


உதம் அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து எ ன்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்தும் உளே பார் கடிந்தாளே
.

ஆன்மாவை இறைவனுக்கு ஓமப் பொருளாக்கி அதைச் ஸஹஸ்ர தலத்தில் பொருத்தினால், அப்போது தலை மயிர் கறுத்து விடும்.சக்தியும் அவனது இதம் அறிந்து செயல் புரிவாள். அவன் பக்குவத்தை அறிந்து கொண்டு, பிருத்விச் சக்கரத்தின் செயலை மாற்றி அருளுவாள் . மேலே சென்று விட்ட காம வாயு மீண்டும் கீழே சென்று விடாமல் தடுப்பாள்.


#844. அடியும் இல்லை! நுனியும் இல்லை!


பார் இல்லை, நீர் இல்லை, பங்கயம் ஒன்று உண்டு;
தார் இல்லை, வேர் இல்லை, தாமரை பூத்தது ;
ஊர் இல்லை, காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை, மேல்இல்லை, கேள்வியிற் பூவே.

ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. ஸஹஸ்ரதளம் என்று அதன் பெயர். அது சிதாகாசத்தில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை! இந்தத் தாமரை மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு அதற்கு மொட்டும் இல்லை, வேரும் இல்லை. அதில் ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்குக் குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இல்லை. நாதத்துக்குக் காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை. நுனியும் இல்லை!
 
Start by doing what is necessary, then do what's possible, and sudenly you are doing the impossible:
FRANSIS OF ASSISI

The best and the most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with heart
HELLEN KELLER
 
20. அமுரி தாரணை

அமுரி = வீர்யம்

வீர்யம் உடலில் தங்குவதற்குச் செய்ய வேண்டியவை

#845. வருந்தாமல் இருக்கும் வழி

உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்
கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும் ;
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடளிப் படாது உயிர் நாடலும் ஆமே


உடலுள் நீங்காது இருந்து உறுதியை அளிப்பது உணர்வு நீர் ஆகும். கடலின் அருகே ஒரு சிறு கிணறு தோண்டிவிட்டு அதன் நீரை ஏற்றம் இட்டு இறைக்கலாம். அதைப் போன்றே உடலில் கீழே செல்லும் உணர்வு நீரை வேறு வழியாக மேலே போகச் செய்யலாம். அப்படிச் செய்வதன் மூலம் உயிர் வருத்தம் அடையாமல் காப்பாற்றலாம்.

#845. விளக்கம்


உடலில் உள்ள அமுதமயமான வீரியத்தை வீணாக்கக் கூடாது. அதை ஓர் ஆக்கப் பொருளாக மாற்ற வேண்டும். உடலில் ஒளியை அமைத்து உடலுக்கு உறுதி தருவது அமுரி நீர். இல்லற வாழ்வில் உள்ளவர்கள் காம வாயு செயல் படும் போது சிவத் தியானம் செய்து போகத்தையே யோகமாக மாற்றி விடுவர். யோகியர் மூல பந்தனம் செய்து, குதத்தை நெருக்கிப் பிடித்து, சிவத்தியானம் செய்து, மூல வாயுவுடன் காம வாயுவைக் கலந்து, உடலுள் மேலே ஏற்றுவர்.



#846. பொன் போல் உடல் ஒளிரும்


தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன்றில்லை
வளியுறு மெட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.


தெளிந்த இந்த அமுரியை ஓராண்டு காலம் பருகி வந்தால் உடலில் ஒளியினைக் காண இயலும். கேடற்ற இந்த நீர் காற்றுடன் கலந்து உடலில் மேலே ஏறுவது. எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் மனம் கீழே நோக்குவதைத் துறந்து விடும். எப்போதும் மேலேயே நிற்கும். உடல் பொன் போல் ஒளிரும். மனம் எப்போதும் மகிழ்வுடன் இருக்கும்.


#847. தலை மயிர் கறுக்கும்


நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறு மிதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறு மிதற்கு மறுமயிராமே.

சிவ நீர் ஆகிய அமுரி கீழே உள்ள குறியை நெருக்கிப் பிழியும். அதனால் அது உடலில் நீடித்து நிற்கும். இதை விட நல்ல மருந்து வேறு ஒன்றும் இல்லை. மக்கள் இதன் நுட்பத்தை கண்டு கொண்டு அமுரியைத் தலையில் பாயச் செய்தால் வெளுத்த மயிர் மீண்டும் கறுக்கும் விந்தையினைக் காணலாம்.
 
#848 to #850

#848. பருவத்தே பருக வேண்டும்

கரையரு கே நின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீங்கி நுகர வல்லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே.


மதி இல்லாத மாந்தர்கள் சிறுநீர் குழாய்க்கு அருகில் உள்ள சுக்கிலத்தையும் கழித்து விட வேண்டும் என்பர். தகுந்த பருவத்தில் அமுரி நீரை அருந்த அறிந்து கொண்டவர்களுக்கு வெளுத்த மயிர் மீண்டும் கருக்கும். சுருங்கிய தோல் மாற்றம் அடையும். இங்ஙனம் அமுரி நீரை அமைத்துக் கொள்பவர்களுக்குக் கூற்றுவனால் அச்சம் இல்லை.


#849. உடல் மென்மையாகும்


அளக நன்னுத லாயோர் அதிசயம்
களவு காயங் கலந்தவிந் நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.


அழகிய கூந்தலை உடையவளே! ஒரு விந்தை உள்ளது. மறைவாக இந்த அமுரி நீர்
உடலில் மேலே சென்று சிரத்தை அடையும் போது மிளகு, நெல்லி, மஞ்சள், வேப்பம் பருப்பு இவற்றைக் கலந்து நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் மேன்மை அடையும். தலை மயிர் கறுப்பாக ஆகும்.


#850. அமுரியின் பெருமை


வீர மருந்துஎன்றும் விண்ணோர் மருந்து என்றும்
நாரி மருந்து என்றும் அந்தி அருள் செய்தான்,
ஆதி மருந்து என்று அறிவார் அகலிடம்
சோதி மருந்து இது, சொல்ல ஒண்ணாதே.


வீரியத்தால் உண்டாகும் மருந்து இது. எனவே வீர மருந்து என்பர். இது வான் வெளியில் ஒளி மயமாக ஆவதால் விண்ணவர் மருந்து என்பர். பெண் சம்பத்தால் அடையப்படுவதால் இது நாரீ மருந்து எனப்படும். இதுவே முதன்மையான மேலான மருந்து என்று யோகியர் அறிவர். பேரொளி மயமான இதைச் சாமானியமான மனிதர்களுக்குச் சொல்லக் கூடாது.
 
21. சந்திர யோகம்

21. சந்திர யோகம் : சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் இது

#851. உடலில் உள்ள சந்திரனின் நிலை

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்து காயமே.


சந்திர கலை பருவுடலில் இருந்து நுண்ணுடலுக்கு ஏறும். பிறகு நுண்ணுடலிலிருந்து பருவுடலுக்கு இறங்கும். இரண்டு பக்ஷங்களில் வளர்பிறையில் வளர்ந்தும், தேய் பிறையில் தேய்ந்தும் வரும் நிலவைப் போலவே இதுவும் அமையும். சந்திர கலையால் நுண்ணுடல் எத்தனை தூய்மை அடைகின்றதோ அதற்கேற்ப பருவுடலும் தூய்மை அடையும்.


#852. யோகியர் நன்கு அறிவர்.


ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர்ஐந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.


உடலுள் விளங்கும் சந்திரனுக்கும் பதினாறு கலைகள் உண்டு. உடலுள் விளங்கும் சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அக்கினிக்குப் பத்துக் கலைகளும் உள்ளன. இவை அனைத்தும் நடுநாடியாகிய சுழுமுனை வழியே இயங்குபவை என்பதை யோகியர் நன்கு அறிவர்.


#853. கதிரவனும், தீயும், நிறைமதியும்!


ஆறுஆறு அது ஆம்கலை ஆதித்தன், சந்திரன்
நாறா நலங்கினார், ஞாலம் கவர்கொளப்
பேறுஆம்; கலை முற்றும் பெறுங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும், மற்றங்கி கூடவே.


பன்னிரண்டு கலைகளை உடைய சூரியனைச் சந்திரனுடன் சேர்க்க அறிந்து கொண்டவர் உலகம் விரும்பும் பேறுகளை அடைவர். பதினாறு கலைகள் கொண்ட சந்திரனில் சூரியன் மட்டுமின்றி அக்கினியும் ஒடுங்கும்.
 
854. பிரணவம் அறுபத்து நான்கு கலைகளாகப் பரிமளிக்கும்.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பால் மதி,
ஒத்தநல் அங்கியது எட்டு எட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.


கதிரவனின் கலைகள் பன்னிரண்டு. பால் போன்ற நிலவின் கலைகள் பதினாறு. இவற்றுடன் அக்கினியின் கலைகள் இணையும் போது அறுபத்து நான்கு கலைகளாகப் பரிமளிக்கும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். தலைக்கு மேல் கலைகள் அறுபத்து நான்காக விளங்கும். அவையே பிரணவத்தின் கலைகள் ஆகும்.

#855. தொண்ணூற்றாறு கலைகள்


எட்டெட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டப் படுங்கதி ரோனுக்கும் சூழ்கலை
கட்டப்படும் ஈர் எட்டா மதிக்கலை
ஓட்ட படாஇவை யொன்றொடொன்றாகவே.

அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு. இவை கட்டப் படும் மூலாதாரத்தின் நாள்மீனுக்கு நான்கு கலைகள். மொத்தம் தொண்ணூற்றாறு கலைகள் கூடித் தொழில் புரியும்.


#856. மூலாதாரத்தில் தொண்ணூற்றாறு கலைகள் உள்ளன


எட்டெட்டும், ஈராறும், ஈரெட்டும், தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப
கட்டப்படும் தாரகைக் கதிர் நால்உள;
கட்டிட்ட தொண்ணூற்றோடு ஆறும் கலாதியே.

அக்கினி, கதிரவன், சந்திரனின் இவற்றின் கலைகள் முறையே அறுபத்து நான்கு, பன்னிரண்டு, பதினாறு என்பர். இவை சேர்ந்துள்ள மூலாதாரத்தில் உள்ள நட்சத்திரத்துக்கு உள்ளன நான்கு கலைகள். இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.
 
#857 to #859

#857. யோகியரின் சிவத்தியானம்

எல்லாக் கலையும் இடை, பிங்கலை, நடுச்
சொல்லா நடுநாடி ஊடே, தொடர் மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.


சந்திரன், சூரியன், அக்கினி இவற்றின் எல்லாக் கலைகளும் இடைகலை, பிங்கலை நடுநாடி இவற்றின் வழியே தொடர்பு உடையவை. இயல்பாகக் கீழே நோக்கும் இவற்றைத் தடுத்து, அவற்றை பார்வையை மாற்றிச் சிரசின் மேல் உள்ள சஹஸ்ரதளத்தில் பொருந்தி இருக்கும்படிச் செய்வர் சிவ யோகியர். அதனால் அவர்கள் எப்போதும் சிவத் தியானத்திலேயே பொருந்தி இருப்பர்.

#858. சந்திர மண்டலம் காணும்


அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை ஆகும் சசி பானு
வாங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவச் சக்ரம் ஆகும் தரணிக்கே
.

மூலாதாரத்தில் உள்ள அக்கினி, இடைகலை, பிங்கலைகளின் அசைவினால் ஒளிரும். சந்திரக் கலைகள், சூரியக் கலைகள் நாதத்தை எழுப்பிக் கொண்டு உடலில் மேலே செல்லும். அப்போது அவை நாள்மீன்களைப் போலத் ஒளியுடன் தோன்றுவதால் அங்கே சந்திர மண்டலம் போலக் காட்சி அளிக்கும்.

#859. பிரணவம் என்னும் பெருநெறி


தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு, அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெருநெறிதானே.


நிலம், நீர், ஒளி, வளி, வெளி, சூரியன், சந்திரன், அக்கினி, சீவ ஒளி என்னும் ஒன்பதும் பிரணவம் என்னும் பெருநெறியாகும்.
 
#860 to #862

#860. வளர்பிறை, தேய்பிறை வேறுபாடு.

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகைப் பூவில் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே.

தேய் பிறையில் சந்திரன் கீழ் முகமாகப் போகும். அப்போது மூலாதாரத்தில் ஒளி பிரகாசமாகும். வளர் பிறையில் சந்திரன் மேல் முகமாகப் போகும் போது மூலாதாரம் பிரகாசிக்காது. மூலாதாரத்தில் உள்ள ஒளியில் எல்லா யோனிகளும் இருக்கின்றனன. சீவனின் வடிவம் மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான ஒளியைப் பொறுத்து அமையும்.

தேய்பிறையில் மூலாதாரத்தின் சக்தி அதிகரிக்கும்
வளர்பிறையில் மூலாதாரத்தின் சக்தி குறையும்.
அப்போது சீவனின் மனம் மேல் நிலையை நாடும்.


#861. வளர்பிறை அறிந்தால் திருவடி சேரலாம்


முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைன்சிற் பெருத்துச் சிறித்திடும்
அப்பதி னைஞ்சு மறிய வல்லார்க்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.


சந்திரனின் கலைகள் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து முழுமை அடையும். அடுத்த பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து குறைந்து விடும். ‘அ ‘ என்ற எழுத்தால் குறிக்கப்படும் நிலவின் வளர்பிறையை நன்கு அறிந்தவர் செப்பரிய பெருமை வாய்ந்த சிவன் அடிகளைச் சேரவும்.

#862. பிரணவம் ஒளிரும்


அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால்; தாமம் ஐந்தும் ஐந்து ஆகிப்
பொங்கிய தாரகையாம் புலன் போக்கு அற,
திங்கள், கதிர், அங்கி சேர்கின்ற யோகமே.


மூலாதாரத்தில் உள்ள தீயை எழுப்ப வேண்டும். அது கதிரவன் மண்டலத்தைத் தாண்டி சந்திர மண்டலத்தை அடையும் போது ‘அ ‘ , ‘உ’ , ‘ம’ நாதம், விந்து என்ற ஐந்தும் கலந்த பிரணவம் விளங்கும். ஐம் புலன்கள் வழியே செல்லாமல் சந்திர, சூரிய, அக்கினி மண்டலங்கள் இணைகின்ற நல்ல யோகம் வாய்க்கும்.
 
#863. பிறப்பு இறப்பு என்னும் சக்கரம்

ஒன்றிய ஈரெண் கலையும் உடல்உற,
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்று அதில் வீழ்வார் திகைப்பு ஒழியாரே.

உடலில் சந்திரனின் பதினாறு கலைகளும் பொருந்தியுள்ளதை அறிகிலார் தாழ்ந்த அறிவு கொண்டவர். இந்த உண்மையை அறியாமல் அவர்கள் வாழ்வதால் கூற்றுவன் சினம் கொண்டு அவர்களுடைய ஆவியைப் பறிக்கின்றான். அவர்களும் அவன் விருப்பபடியே பிறப்பு இறப்பு என்னும் சுழலில் வீழ்கின்றனர். மயக்கத்திலிருந்து நீங்க மாட்டார்.

#864. பிரணவம் விளங்கும்


அங்கி மதிகூட ஆகுங் கதிரொளி
அங்கி கதிர்கூட வாகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே.


சந்திரன் ஆண் குறியில் பொருந்தி உள்ளான். கதிரவன் மணி பூரகத்தில் பொருந்தி உள்ளான். மூலாக்கினியுடன் சந்திரன் பிரமரந்திரத்தை நோக்கி மேலே செல்லும் போது கதிரவனின் ஒளியும் கிடைக்கும். இந்த மூன்று ஒளிகளும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் அப்போது பிரணவம் விளங்கும். அந்த நிலையே எல்லாமும் ஆகும்.


#865. நிலைத்த இன்பம் கிட்டும்


ஈராறு பெண்கலை யெண்ணிரெண் டாண்கலை
போராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தொன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்த மானந்த மானதே.


பன்னிரண்டு கலைகள் கொண்ட கதிரவன் ஒரு பெண். பதினாறு கலைகள் கொண்ட சந்திரன் ஒரு ஆண். இவர்கள் இருவரையும் வெளியில் செல்லாதவாறு பிடித்து நிறுத்தி முகத்துக்கு முன்னே தோன்றும் ஒளியில் கலக்கும்படிச் செய்தால் நிலைத்த திருவடி இன்பம் கிடைக்கும்
 
#866 to #868

#866. ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வளத்திட்ட்டுப்
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.


சிறந்த சந்திரனின் நோக்கு இடக் கண் நோக்கு. கதிரவனின் நோக்கு வலக் கண் நோக்கு. குரு அருளிய வழியில் இடக் கண் நோக்கினை வலக்கண் நோக்குடன் பொருத்தி அது முறை தவறாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உடல் கெடாது வாழலாம்.

#867. ஞானம் தோன்றும் முன் நாதம் கேட்கும்!


பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

சீவக் கலை உடலில் மேலே மேலே செல்லும் போது கதிரவனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் தீபஒளி போலத் தோன்றுவார்கள். சீவக் கலை ஸஹஸ்ரதளத்தை அடையும் போது தலையில் ஒரு நாதம் ஒலிக்கும். அந்த நாதத்தில் சிவ பெருமான் திகழ்வான். கதிரவனின் உதயத்துக்கு முன்பு சங்கொலி மக்களைத் தட்டி எழுப்புவது போன்றே ஞான சூரியன் உதிக்கும் முன்பு தலையில் இந்த நாதம் ஒலிக்கும்.

#868. ஈசன் வெளிப்படுவான்!


கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிர் அவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்டப்புறம் சென்று அடர்ப்ப,
எதிரவன் ஈசன் இடம் அது தானே.


காலத்தைக் கணிப்பதற்குச் சூரிய சந்திரர்களின் இயக்கம் பயன்படும். உடலில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் பொருந்தியுள்ள பிரணவ நிலையில் சிவ சக்தியர் விளங்குவர். அவர்கள் இருவரும் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். நாதத்துடன் கூடி உடலில் உள்ள அண்டத்தின் எல்லையான துவாதசாந்தத்துக்குச் செல்லும் போது ஈசன் அங்கே வெளிப்பட்டு நமக்கு எதிர்ப்படுவான்.
 
#869 to #871

#869. சிவ ஒளியும் சீவ ஒளியும்

உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.


மணிபூரகம் கதிரவனுக்கு உரியது. சுவாதிஷ்டானம் சந்திரனுக்கு உரியது. மணிபூரகத்தில் வெளிப்படும் ஒளியை அடைந்து பிரணவத்தின் உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதை யாரும் அவ்வாறு அறிவதில்லை. பிரணவத்தை அடைந்து, பிரணவத்தை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவ ஒளி சீவ ஒளிக்கு முன்பு தோன்றும்.

(சிவ ஒளியே சீவ ஒளிக்கு ஆதாரம் ஆவதால் அவை முறையே தந்தையாகவும் மகனாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன.)


#870. ரசவாதம் போலச் சிவம் வெளிப்படும்


ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே.


அறிவிலிகள் உண்மையத் தாமே உணரவல்லார் அல்லர். பிறர் அந்த உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் அவற்றை அறியார் அறிவிலார். திங்களின் முதல் கலையாகிய மேதாவை இறுதிக் கலையாகிய உன்மனியுடன் சேர்க்க அறிந்து கொண்டால் ரசவாதம் நிகழ்வது போல அங்கே சிவம் வெளிப்படும்.

#871. சிவன் நீங்கிச் செல்ல மாட்டான்


பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பது
தாங்கு கதிரையும் சோதித்து அனல் உறும்;
பாம்பும் மதியும் பகை தீர்ந்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.

குண்டலினி சக்தியாகிய பாம்பு திங்கட் கலையை வளர விடாது. குண்டலினி சுவாதிஷ்டானத்தில் பொருந்தி அங்கே விந்து நீக்கத்தைச் செய்து கொண்டிருக்கும். குண்டலினி மணிபூரகத்தில் உள்ள கதிரவனை அசைத்துக் அனல் வீசும்படிச் செய்யும். குண்டலினி மதியின் மீது கொண்ட பகைமையை நீங்கச் செய்ய வேண்டும். குண்டலியும் மதியும் பகைமை இன்றி சிரசின் மேல் இணைந்து இருந்தால் அப்போது அருள் கொண்ட சிவபெறுமான் அந்த யோகியை விட்டு ஒரு நாளும் அகன்று செல்ல மாட்டான்.

விளக்கம்
சிவனை தியானிப்பதால் குண்டலினி சக்தி உடலின் கீழேருந்து மேலே செல்லும். அதனால் திங்கட் கலை நன்கு வளரும். அதனால் வெப்பம் மிகுந்த கதிரவனும் தன் வெப்பத்தைத் தராமல் இருப்பான். மனம் சிவனிடம் பொருந்தி இருக்கும் போது குண்டலினிப் பாம்பு, கதிரவன், மதி என்ற மூன்றும் தலையில் நிலை பெறும். அவை தீங்கு செய்யும் ஆற்றலை இழந்து விடும்.
 
#872 to #874

#872. விழித்திருக்க வேண்டும்

அயின்றது வீழ்வு அளவும் துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழிதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியன் தரு பூரணை மேவும் சசியே


குண்டலினியுடன் மேலே சென்ற திங்கள் சிரசின் மீது நிற்கும் போது அதை உறங்காமல் கவனிக்கும். அதன் பின் கீழே இறங்கும் திங்கள், இறங்கிய போது உறங்கியும் நன்மையைத் தரும். ஒளியை மனத்தில் பொருந்தி இருக்கச் செய்தால் அப்போது முழுமையாகத் திங்கள் யோகியினிடம் பொருந்தும்.

#873. திங்கள் இறங்கியதும் யோகி உறங்கலாம்


சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி,
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்
சசிசரிக் கின்ற அளவு துயிலாமல்
சசிசரிப் பின்கட்டன் கண் துயில் கொண்டதே

திங்கள் தலையில் தோன்றும் அளவும் உறங்காமல் ஒரு யோகி தியானம் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் யோகி தியானம் செய்ய வேண்டும். தலையில் திங்கள் தோன்றிய பிறகே உணவை உட்கொள்ள வேண்டும். சந்திரன் தலையில் சஞ்சரிக்கும் வரையில் யோகி உறங்காமல் இருக்க வேண்டும். சந்திரன் கீழே இறங்கிய பின்பு யோகி உறங்கலாம்.

#874. தன்னொளி பெற்று விளங்குவர்.


ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வர் உலகினில்
தாழவல் லார்இச் சசிவன்ன ராமே.


ஊழிக்காலம் வரையில் பிரியாதிருப்பர் யோகியர். இவர்கள் நாழிகையைக் கொண்டு காலனின் காலத்தையே அளந்து விடுவர். ஐந்தொழில்களை ஆற்றும் ஊழி முதல்வனான சதாசிவனின் நிலையைப் பெறுவர். ஆணவம் என்பதே சிறிதும் இல்லாமல், சிவனை ஆதாரமாகக் கொண்டு, அமுத மயமான கதிர் ஒளியுடன், தண்ணொளியாகிய தன்னொளி பெற்று இவர்கள் திகழ்வார்கள்.
 
#875 to #877

#875. அமுதத்தைப் பருகுவர்.

தண்மதி பானுச்சிச் சரி பூமியே சென்று,
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு,
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்த பின்
தண்மதி வீழ்வள வில்கணம் இன்றே.

குளிர்ந்த திங்களும், கதிரவனும் உச்சி வழியில் சென்று தலையில் ஸஹஸ்ரதளத்தை அடைந்தால், யோகி மண்ணுலகத்தோர் மதிக்கும் வண்ணம் முக்காலங்களையும் உணர முடியும். முழுத் திங்களையும் காண முடியும். அப்போது அதிலிருந்து விளையும் குறைவில்லாத அமுதம்.

#876. யோகியர் அறிவர்.


வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து ஏழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை ஆர் அறிவாரே.


கதிரவனின் ஆறு கலைகள் மேடம், ரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் வளரும், சந்திரனின் ஆறு கலைகள் அகரம். உகரம், மகரம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதினி குறையும். மூச்சு தொண்டைக்குகே கீழே எட்டு விரற்கடை ஓடுவதையும் தொண்டைக்கு மேலேயும் குறையாமல் நான்கு விரற்கடை ஓடுவதையும் அறிய வல்லவர் யார்?

#877. திங்கட் கலை பூரணமாகும்


ஆம் முயிர்த்தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி; எங்கும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையின்; கட்டுண்ணும் மூலத்தில்
ஓம் மதியத்துள் விட்டு, உரை உணர்வாலே.


விந்து கழியும் வழியே உயிர் தேயும் வழியாகும். யோகியருக்கு காமத் தொடர்பு இராது. அதனால் விந்து நீக்கமும் இராது. யோகியின் விந்து மூலாதாரத்தில் கட்டுப் பட்டு விடும். யோகி தன் உணர்வை பிரணவம் விளங்கும் மதி மண்டலத்தில் செலுத்த வேண்டும். அப்போது திங்கட் கலை பூரணம் அடையும்.
 
#878. பௌர்ணமி நாள் போலாகும்

வேறுஉறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூறுஉற நான்கும் தொடர்ந்து அற வேநிற்கும்
ஈறு இல் இனன் கலை ஈரைந் தொடேமதித்
தாறுள், கலியுள் அகல் உவா ஆமே.

சிரசின் வலப் பக்கத்தில் மேடராசி முதல் கன்னி ராசி வரை விளங்கும் கதிரவனின் கலைகள் ஆறு. இவற்றுடன் மூலாதாரத்தில் உள்ள அக்கினிக் கலைகள் நான்கும் கலந்தே விளங்கும். கதிரவன், அக்கினியின் பத்துக் கலைகளுடன் திங்கள் விளங்கும் துலா ராசி முதல் மீன ராசி வரை உள்ள ஆறு கலைகளும் அறிவில் பொருந்தும் போது அந்தத் திங்கள் பௌர்ணமி நாலின் முழு நிலவாக விளங்கும்.

#879. நுண்ணுடல் பருவுடல் ஒக்க நிற்க வேண்டும்


உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசும் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.


உணர்வுகளால் ஆன விந்து சுரோணிதத்துடன் உறவு கொண்டால் கதிரவன் மிகுந்த ஒளி வீசுவான். கதிரவனின் ஆற்றல் குறைந்து இருந்தால் புணர்ச்சியில் வெளிப்படும் விந்து தலையின் மீது ஒளியாக விளங்கும். யோகியின் நுண்ணுடல், பருவுடல் ஒளிமயமான இந்த உணர்வு இவை மூன்றும் ஒத்து நின்றால் அவை மூன்றுமே அழியா.

#880. ஐம்புலன் கட்டுண்ணும்


விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவிக்
கடா விடா ஐம்புலனும் கட்டுண்ணும்; வீடு
படாதன இன்பம் பருகார் அமுதே.


வெளியே செல்லாமல் கட்டுப் படுத்தப்பட்ட மனம் காற்றுடன் சென்று இடப் பக்க மூளையில் பொருந்தி விடும். யாவற்றுக்கும் காரணமான் சிவபெருமானின் சங்கொலியைக் கேட்டு ஐம் புலன்களும் தம் ஆசைகளைத் துறந்து நிற்கும். அங்கனம் அவை பிரணவத்தால் கட்டப் படும் போதே ஒரு யோகி இன்பமயமான அமுதத்தை அருந்த முடியும். அன்றேல் முடியாது.
 
#881 to #883

#881. அழிவே இல்லை

அமுதப் புனல் வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக் குள்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண்டு ஓட்டித் தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை, நற்கலை, நாள் இல்லை தானே.

சந்திர மண்டலத்தின் ஒளி வெள்ளம் பிடரிக் கண்ணிருந்து பாயும். ஸஹஸ்ரதளத்தில் குமிழ் போல உயர்ந்து நிற்கும் அதன் கரணிகையில் சிவம், சக்தி, நாதம், விந்து, சீவன் என்ற ஐந்தையும் ஒன்று படுத்த வேண்டும். மூலாதாரத் தீயைச் சுழுமுனையில் செலுத்த வேண்டும். இதைச் செய்ய வல்லவருக்கு என்றும் அழிவே இல்லை.

#882. மூச்சின் இயக்கம்


உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர் சமாதி யமர்ந்து தீரா நலங்
கண் ஆட்றோடே சென்று கால் வழி மாறுமே.


அமுதம் என்னும் அனுபவிக்கக் கூடிய ஊறலைத் திறக்க வேண்டும். பிரபஞ்சத்தின் கலப்பினால் மாற்றம் அடையாது விளங்கும் கதிரவன் சந்திரன் பொருந்திய ஸஹஸ்ர தளத்தை அடைய வேண்டும். அங்கே தெளிந்த நீரினுள் இருப்பது போன்ற ஒரு உணர்வு நிலவும். அங்கே சமாதியில் நிலைக்க வேண்டும். முடிவில்லாத இன்பத்தை விளைவிக்கும் சிவன் உணர்த்தும் வழியில் இருந்து கொண்டு மூச்சின் இயக்கத்தை மாற்ற முடியும்.

#883. இன்பம் பொங்கும் எங்கும்


மாறு மதியும தித்திரு மாறின்றித்
தாறு படா மற்றண் டோடே தலைப் படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாவின்பம் பார்மிசைப் பொங்குமே.

கீழ் நோக்குதல் இல்லாத சந்திர கலையை என்றும் மாறுபடாமல் போற்றுங்கள். சுழுமுனை வழியே ஸஹஸ்ரதளத்தை அடைந்தால் உடல் அழியாது. செய்யும் யோகம் கைக் கூடும். எங்குமின்பம் பொங்கும்.

இத்துடன் மூன்றாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
Today i.e 12 Jan 2016 is the Birthday of Swami Vivekananda and sharing a quote from him :"Our first duty is not to hate ourselves, because to advance we must have faith in ourselves first and then in God. Those who have no faith in themselves can never have faith in God."- Swami Vivekananda .
 
Today i.e 12 Jan 2016 is the Birthday of Swami Vivekananda and sharing a quote from him :"Our first duty is not to hate ourselves, because to advance we must have faith in ourselves first and then in God. Those who have no faith in themselves can never have faith in God."- Swami Vivekananda .

Conversely can I safely state that,

'He/she who has unshakable faith in God

will also have faith in himself/ herself'.
Thank you sir for the apt and timely quote! :yo:
 
நான்காம் தந்திரம்




1. அசபை

உச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங்கும் மந்திரம் அசபை.

பிரணவம் என்பதும் இதுவேயாகும்.

மந்திரம் என்பதும் இதுவேயாகும்.

இது ஓம் என்னும் ஓரெழுத்துச் சொல்லாகும்.

மனத்திலேயே உணரத் தகுந்தது பிரணவம்.

அனைத்து மந்திரங்களுக்கும் ஆதாரமாக நிற்பது.
 
#884 to #887

#884. பிரணவத்தைப் போற்றுவீர்

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி;
சாற்றுகின் றேன் அறையோ சிவயோ கத்தை;
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

நான் போற்றுகின்றேன் புகழ்ந்து பேசப்படும் ஞானத்தைப் பற்றி. தெளிவடைகின்றேன் மனத்தில் உலகத்தின் நாயகன் சிவன் திருவடிகளே நமக்குத் துணையாகும் என்று. அந்தச் சேவடிகளை அடையும் சிவ யோகநெறியைக் கூறுகின்றேன். அந்த சிவபெருமானுடைய ஓரெழுத்து மந்திரமான பிரணவத்தை நான் ஓதுகின்றேன்.


#885. யாவும் பிரணவமே!


ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி,

ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவர் ஆய்,
மூஎழுத்தாலே முளைக்கின்ற ஜோதியை
மா எழுத்தாலே மயக்கம் உற்றதே.

ஓம் என்ற ஓரெழுத்தில் ‘அ’ என்பது முதல் பகுதி. இது சிவன் உலகம் எங்கும் பரவிப் பல உயிர்களாக இருப்பதைக் குறிக்கும். ‘உ’ என்பது இரண்டாம் பகுதி. இது சீவனின் உடலினுள் சிவசக்தியர் பரவியுள்ளதைக் குறிக்கும். மூன்றாம் பகுதியாகிய ‘ம்’ என்பது மாயையைக் குறிக்கும். இதுவே ஒளிரும் சிவனை சீவனிடமிருந்து மறைத்து அதற்கு மயக்கத்தைத் தருவது.

விளக்கம்:
அ = சிவம், உ = சக்தி, ம் = மாயை எனலாம்.


மற்றொரு விளக்கம்
அகரம் = விழிப்பு நிலை = சாக்கிரம்
உகரம் = சொப்பன நிலை = கனவு நிலை
மகரம் = சுழுத்தி நிலை = மயக்கமான நித்திரை நிலை

#866. வலப்பக்கம் அம்பலம் ஆகும்.


தேவ ருறைகின்ற சிற்றம் பலமென்றும்

தேவ ருறைகின்ற சிதம்பர மென்றும்
தேவ ருறைகின்ற திருவம் பலமென்றும்
தேவ ருறைகின்ற தென்பொது வாமே.

சிரசில் வலது புருவத்துக்கு மேல் உள்ள வலப் பக்கத்தைத் தேவர்கள் உறையும் சிற்றம்பலம் என்றும், வானவர் உறையும் சிதம்பரம் என்றும், விண்ணவர் உறையும் அம்பலம் என்றும் கூறுவார்கள். சிற்றம்பலம் என்பது சிதாகாய ஒளியுடைய மண்டலம் ஆகும். சிதம்பரம் என்பது அறிவு விளங்குகின்ற ஆகாயம் ஆகும். திருவம்பலம் என்பது ஒரு அழகிய அம்பலம் ஆகும். சீவனின் உடலில் இதுவே சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.

#887. கூத்தம்பலம்


ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்

ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அத்தாண்டவம்
ஆமே சங்காரத்து அருந்தாண்ட வங்களே.

பொன்னம்பலத்தில் அற்புதத் தாண்டவமும், ஆனந்தத் தாண்டவமும் நிகழும். அனவரதத் தாண்டவமும் அங்கேயே நடக்கும். பிரளயத் தாண்டவமும் அங்கேயே நடக்கும். சங்காரத் தாண்டவமும் அங்கேயே நடக்கும்.

அற்புதத் தாண்டவம் = உயிர்களின் படைப்பை நிகழ்த்தும் செயல்.

ஆனந்தத் தாண்டவம் = உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் செயல்.

அனவரதத் தாண்டவம் = உயிர்களின் இயக்கத்துக்குக் காரணமான செயல்

பிரளய தாண்டவம் = உயிர்களுக்கு உறக்கத்தைத் தந்து ஓய்வைத் தரும் செயல்.

சங்காரத் தாண்டவம் = உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் செயல்.
 
#888 to #891

#888. பொன்னம்பலக் கூத்து

தாண்டவம் ஆன தனிஎழுத்து ஓர் எழுத்து;

தாண்டவம் ஆனது அனுக்கிரகத் தொழில்;
தாண்டவக் கூத்து தனி நின்ற தற்பரம்;
தாண்டவக் கூத்து தமனியம் தானே.

பிரணவம் என்னும் ஒப்பற்ற ஓரெழுத்தே திருக்கூத்து ஆகும். அருள் புரிவதற்கென்றே நிகழும் இயல்புடையது அந்தக் கூத்து. எல்லாவற்றுக்கும் மேலான சிவ தற்பர நிலையே அந்தக் கூத்து. இது பொன்னம்பலத்தில் நிகழும் அற்புதக் கூத்து.

#889. யாவற்றுக்கும் ஆதாரம் இதுவே


தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்

தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந்தானே.

இதுவே ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பு ஆகும். எக்காலத்துக்கும் அழிவில்லாத ஒன்றினைப் போல எங்கும் நிறைந்திருக்கும் உண்மைப் பொருள் இதுவே ஆகும். அகார, உகாரமான பிரணவத்தின் உறுப்புக்கள் இதுவே ஆகும். தன் ஒளியைத் தந்து அனைத்துத் தத்துவங்களை இயக்கும். ஆயினும் இதற்கு வேறொரு ஆதாரம் தேவை இல்லை, தனக்குத் தானே ஆதாரமாக நிற்கும்.

#890. வேறு வேறு நிலைகள்


தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்

தராதல வெப்பு ‘நமசிவாய’ வாம்
தராதலம் சொல்லின் தான் ‘வா சிய’ ஆகும்.
தராதலம் யோகம் தயாவாசி ஆமே.

மூலாதாரத்தில் எழுந்தருளிய சிவன் அக்கினி மண்டலத்தில் ‘நமசிவாய’ என்ற பெயரால் விளங்குவான். மேலே திகழ்கும் ஒளி மண்டலத்தில் இதுவே “வாசிய’ என்று மாறிவிடும். அதற்கும் மேலே உள்ள சஹாஸ்ரதல்தில் இது ‘யவாசி’ என்று மாறிவிடும்.
விளக்கம்

‘ந’ , ‘ம’ என்ற எழுத்துக்கள் குறிப்பது நான்முகன், திருமால் இவர்களைத்
தலைவர்களாக் கொண்ட ஸ்வாதிஷ்டன, மணிபூரகச் சக்கரங்கள்.

சக்தியையும், சிவத்தையும் உணர்த்தும் எழுத்துக்கள் ‘வா’, ‘சி’.

ஆன்மாவை உணர்த்தும் எழுத்து ‘ய’.

#891. பேரின்பம் வாய்க்கும்

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்;

ஆமே பரங்கள் அறியா இடம் என;
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே.

நான்முகனும், திருமாலும் சீவனின் அறிவு, உணர்வு, பக்குவம் இவற்றைப் பொறுத்துப் பாசத்தையும், பாச நீக்கத்தையும் அமைக்கின்றனர். ‘ய’ என்னும் ஆன்மா சிவத்தை அடையும் போது தத்துவங்களை உணராது. கூத்தை நடத்தியவன் கூத்தை ஒழித்துவிட்டு உயர்ந்த அறிவு பெற்றுவிடுவான். அதனால் சித்தி கிடைக்கும். அதனால் பேரின்பம் விளையும். சிற்பரமாகிய சிவத்தில் கலக்கும் உயிரும் பரமாகிவிடும்.
 

Latest ads

Back
Top