• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#2830 to #2834

#2830. புனையில் அவனைப் பொதியலும் ஆகும்

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.


நினைத்த மாத்திரத்தில் உள்ளம் உருகும் மெழுகென நெகிழும்படிகிச் சிவனை வணங்கி; அவனைப் புகழ்ந்து போற்றி பாக்கள் புனைந்தால்; அவனை நம் உள்ளத்தில் வைத்து; அங்கிருந்து அகன்று செல்லாதபடி அன்பால் பொதிந்துவிட முடியும். எனக்கு அருள் காட்டிய நந்தி எம்பிரான் அவனை மறவாத வரம் தந்தான். எனக்கு அவன் மேல் தாளாத காதலும், மாளாத அன்பும், நீங்காத பற்றும் ஏற்படச் செய்தான்.


#2831. மயிர்க்கால் தொறும் பெருகும் ஆனந்தம் !


பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.


துரிய நிலையைக் கடந்து விட்ட சீவனுள் சிவன் அன்புடன் புகுந்து கொள்வான். பாலும், தேனும், பழ ரசமும், தூய அமுதத்தின் இன்சுவையும் கலந்த கலவை போன்ற இன்பத்தை சிவன் சீவனின் ஒவ்வொரு மயிர்க் காலிலும் தோன்றச் செய்து, சீவனுக்குப் பேரின்ப நிலையை அருள்வான்.


#2832. துவளற்ற சோதி தொடர்ந்து நிற்பான்

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே
.


தனிப் பெருந்தலைவன் ஆகிய சிவன் அழியாத இயல்பினை உடைய சீவனையும், அவன் பொருந்தி இருக்கும் அண்டகோசத்தையம், அதற்கும் அப்பால் நாதத் தத்துவத்தையும் கடந்து தனித்து நிற்பான். முத்துப் பற்களும், பவள இதழ்களும், பனி போன்ற குளிர்ந்த மொழியினையும் உடைய அழகிய இளம் மாதர்களின் உடல் கவர்ச்சியில் தளர்ச்சி அடையாத சோதியாகச் சிவன் தொடர்ந்து நிற்கின்றான்.


#2833. சத்தியம், ஞானம், ஆனந்தம்


மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே.


மெய்ஞானியின் இலக்கணம் இதுவே! அவன் முப்பத்தாறு தத்துவங்களையும் துறந்துவிட்டு வேண்டும். சீவனிடம் மலங்களால் ஏற்படுகின்ற விஷய வாசனைகளை நீக்கிவிட வேண்டும். தூய துரிய நிலையின் குற்றங்களைக் கடந்து செல்ல வேண்டும். பாசத் தளைகளால் கட்டப்பட்டுள்ள சீவனின் பெத்த நிலை மாற வேண்டும். சீவன் சிவத்தையே எதிர் நோக்கி இருக்க வேண்டும். சத்தியம், ஞானம், ஆனந்தம் இவற்றில் நன்கு பொருந்தி இருப்பவனே உண்மையான மெய்ஞானி!


#2834. சொரூபம் அது ஆமே

சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே.


சீவன் சிவ வடிவம் அடைந்து விட்டால் என்ன நிகழும்?

சீவன் சிவத்தை அடைந்து சிவமாக ஆகி விட்டால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் அகன்று விடும், பிரகிருதி மாயை, தூமாயை, தூவா மாயை என்ற மும் மாயைகளும் கெடும். பற்று அற்றுப் போய் விடும். துரியாதீதத்தில் சீவன் சிவனுடன் பொருந்திச் சிவவடிவம் அடைந்து சத்திய ஞானமும், ஆனந்தமும் அடையம்!
 
12. சொரூப உதயம்
சிவ சொரூபம் வெளிப்பட்டுச் சீவனுக்கு முத்தியை அளிப்பது

#2835. அரிய துரியத்து அணைந்து நின்றானே.

பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே.


சீரிய சிவகுரு தத்துவங்களைத் துறந்துவிட்ட சிறந்த சீவனுடன் வந்து பொருந்துவான். அந்தப் பிணைப்பு உறுதி அடையும் வண்ணம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பான். சீவனின் ஆன்மாவின் சொரூபத்தில் நிலைபெற்று நீங்காமல் இருக்கும் சிவன், சீவனை அதன் அரிய துரிய நிலையில் பொருந்தி விளங்குவான்.

#2836. வரைந்து வலம் செயுமாறு அறியேனே.

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.


சீவனை நிலைகுலையச் செய்பவை ஐம்பூதங்கள். நிலம், நீர் நிறைந்த கடல், அலைந்து திரிகின்ற காற்று, அனல், ஆகாசம் இவற்றில் நிறைந்திருக்கும் அதே சிவன் இவற்றைக் கடந்தும் நிற்கின்றான். மண்ணுலகு முதல் விண்ணுலகு வரை நீண்டு நிறைந்திருக்கும் இந்த இறைவனை நான் ஒரு சிறிய எல்லைக்கு உட்படுத்தி வணங்கும் முறையை அறிந்திலேன்.

#2837. புவனாதிபதி சிவனே ஆவான்

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.


இங்கனம் மண்ணுக்கும் விண்ணுக்கும் நீண்டு நிறைந்து இருக்கும் சோதியாகிய சிவனை அயன், திருமால், பிற தேவர்கள் வந்து “இறைவா!” என்று தாள் தொழுவர். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிவபெருமான் அவர்களிடம் சோதி வடிவாகப் பொருந்தி அவர்களை இயக்குகின்றான். அவர்களைக் கடந்து அனைத்து புவனங்களின் அதிபனாகவும் அவனே விளங்குகின்றான்.

#2838. அமரர்க்கு அதிபதியாகி நிற்பாரே.

சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.

சமயங்கள் நாம் வாழ வேண்டிய நல்ல நெறிமுறைகளை வரையறை செய்து அமைத்துத் தருகின்றன. ஆனால் அவற்றை அறிந்து கொள்ள முடியாதபடி குறிக்கிடுகின்றன மனிதனிடம் உள்ள எட்டுத் தீய குணங்கள். அவை முறையே காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், மண்ணாசை, பொன்னாசை என்பன. அவற்றால் விளைகின்ற தீமைகளை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றை விட்டு விலகிச் சிவனுடன் பொருந்துகின்ற மனிதன் தேவர்களுக்கும் தலைவன் ஆவான்.
 
#2839 to #2842

#2839. இறைநூல் இயம்புமே.

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவம்முத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.


நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மும் மூர்த்திகளில் ஒருவன் உருத்திரன். அவனே அம்மூவரில் இருந்து வேறுபட்டு நின்று அவர்களை இயக்கவும் செய்வான். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்பவை முத்துரியங்கள். இவற்றில் ஒருவனாக இருக்கும் சிவபெருமான் அவற்றில் இருந்து வேறுபட்டும் நிற்பான் என்று வேத ஆகமங்கள் உரை செய்யும்.

#2840. குருவன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.

உருவின்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவின்றி யேநின்று தான்கரு வாகும்
அருவின்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவின்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.


தனக்கு என்று ஓர் உருவம் இன்றி அனைவரின் வடிவங்களையும் தானும் எடுத்துக் கொள்பவன் சிவன். தனக்கு என்று ஒரு மூலம் இன்றியே அனைத்துக்கும் மூலம் ஆகுபவன் சிவன். அவன் அருவ நிலையையும் தாண்டி விளங்கும் பெருமான். சீவன் சிவனுடன் கூட வேண்டும் என்றால் அதற்கு உள்ள ஒரேவழி சிவனே குருவாக வெளிப்பட்டுச் சீவனுக்கு அருள் செய்யவேண்டும். அன்றேல் அது ஒரு போதும் நிகழாது!

#2841. உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே?

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.

சிவனது திருவருளை இடையறாது சிந்தனை செய்பவர் பெறும் பயன்கள் இவை:
அவர்கள் உள்ளத்தில் உள்ள இருள் கெடும்! அங்கு ஒளிமயமாக விளங்கும்.
அவர்கள் மரணத்தை வென்று ஊழி வரை வாழ்ந்த்திருப்பர்.
அவர்கள் தேவ உடல் பெற்று சிறப்பு அடைவர்.
உலகில் சிவனை இவ்வாறு சிந்தனை செய்பவர்கள் யார் உளர்?

#2842. பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.


நான் பரஞ்சோதியாகிய சிவனின் பேரொளிப் பிழம்பைக் கண்டேன்! அதனையே என் பற்றுக் கோடாகக் கொண்டேன். அந்தப் பரஞ்சோதி என்னுள் வந்து பொருந்தியது. பின்னர் நான் அந்த சோதியில் அடங்கி இருந்தேன். நான் அடங்க அடங்க அந்தச் சோதி நாத வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

 
#2843 to #2846

#2843. சொரூபக் குரவன் சுகோதயத்தானே.

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்துச்
சொரூபக்குரவன் சுகோதயத் தானே.


சொரூபம், ரூபம், குணம், தொன்மை பொருந்தி விளங்கும் அரிய நீலோத்பல மலர். அது போன்றே சீடனுக்கு நன்மை செய்து இன்பம் அளிக்கும் குரு சிவனும் ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற நான்கு சக்தியருடன் ஒன்றாகக் கலந்து நிற்பான்.


#2844. உள்ளொளி ஆகும்!


உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரம தாக
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.


சிவ சொரூபத்தைக் கண்ட சீவன் தன் பயனற்ற பேச்சு அறும், அரிய மோனத்தை மேற்கொள்ளும், மாறாத ஆனந்தம் அடையும். அந்தச் சீவன் அகண்ட சக்தியைக் கண்டதும் அதன் இச்சை, ஞானம், கிரியை என்பவை அகர, உகர, மகரத்துடன் பொருந்திப் பிரணவத்தின் ஒளியாகப் படர்ந்து நிற்கும்.


#2845. கள்வனைக் கண்டு கொண்டேன் !


தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.


சிரசில் உள்ள தாழ்வரையில் நின்று கொண்டு நான் சிவனைக் குறித்து ஓர் அரிய தவம் செய்தேன். அங்கு நான் அந்தக் கள்வனைக் கண்டு கொண்டேன். அவன் தன் கலைகளை மறைத்துக் கொண்டு சக்தியுடன் அங்கு நின்றிருந்தான். அந்த உள்ளம் கவர் கள்வனைக் கண்டதும் என் பொல்லாத பிறவிப்பிணி அகன்று சென்று விட்டது.


#2846. நானும் முதல்வன் எனலாமே!


ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நான்என லாமே.


அகத்தில் ஒளிந்திருக்கும் அரும்பொருள் ஆகிய சிவன், சீவனை ஆட்கொள்ளும் விதத்தை நான் அறிந்து கொண்டேன். அவனைச் சென்று அடையும் வழியினையும் நான் அறிந்து கொண்டேன். நான் இறுதியாகச் சென்று அடைய வேண்டிய இடம் அவன் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். எனக்கு வேறு பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை! நான் செல்ல வேண்டிய இடமும் வேறு எதுவும் இல்லை. நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய இடம் சிவனே என்று அறுதியிட்டு உறுதியாக கூறுவதில் இனி எந்தப் பிழையும் இல்லை.



 
13. ஊழ்
சீவனின் கருமங்களின் இருவினைப் பயன்கள் சீவனை வந்து அடைவது.


#2847 to #2852

#2847. தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.


கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்!


#2848. நான்முன்னம் செய்ததே நன்னில மானதே


தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே


சீவன்கள் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் அவரவர் செய்த வினைகளினால் மட்டுமே அமைகின்றன. இறைவன் சிவன் இவற்றைச் சீவன்களுக்காக முன்பே அமைத்து விடவில்லை. அந்தத் தலைவனை நான் நோக்கிய போது, நான் முன்னம் செய்த தவம் என்னைச் சென்னியின் வழியே செலுத்தி, எனக்கு உன்னதமான இடத்தைத் தந்தது.


#2849. நந்தியை என் உள்ளம் பிரியகில்லாவே.

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.


ஆற்றில் வந்து சேரும் நுண்மையான மணல் அந்த ஆற்றால் சுமக்கப்படுவதில்லை. பொங்கி வரும் ஆற்று வெள்ளம் மேடுகளைப் பள்ளங்கள் ஆக்கலாம். பள்ளங்களை மேடுகள் ஆக்கலாம். அது போன்றே ஒருவன் செய்த நல்வினைகள், தீவினைகள் இவற்றின் பயன்கள் அவனையே வந்து சேரும். நீறு அணிந்த இறைவன் சிவனையே நான் பெறும் பேறாகக் கருதி நான் அவனை விட்டு விலகாமல் இருப்பேன்.

#2850. நாதனை நாடுவன் நானே.


வான்நின்று இடிக்கில்என்? மாகடல் பொங்கில்என்?
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்?
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்?
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.


வானம் இடிந்து விழுந்தால் தான் என்ன? அலைகடல் பொங்கினால் தான் என்ன? காட்டுத்தீயினால் உடல் வெந்து அழிந்து போனால் தான் என்ன? சண்டமாருதம் பெரும் அழிவைப் ஏற்படுத்தினால் தான் என்ன? நான் அவற்றைச் சற்றும் பொருட்படுத்த மாட்டேன். நான் என் நாதனையே எப்போதும் வழுவாமல் நாடுவேன்.


#2851. ஞானத்து உழவினை நான் உழுவேனே


ஆனை துரக்கிலென்? அம்பூடு அறுக்கிலென்?
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்?
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே.


மதயானை என்னைத் துரத்தினால் தான் என்ன? கூரிய அம்பு என்னைத் துளைத்தால் தான் என்ன? காட்டுப் புலி என்னை சுற்றி வளைத்தால் தான் என்ன? ஞான பூமியில் ஞானத்தை தலைவன் ஆகிய எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதிலிருந்து நான் வழுவ மாட்டேன்.

#2852. பாடது நந்தி பரிசறி வார்க்கே


கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே.


சீவனுக்கு கிடைத்த உடல் கெட்டுவிட்டால் மற்றொரு நல்ல உடலை வழங்குவதற்கு இறைவன் இருக்கின்றான். அதிக மழை அதிக வறட்சி நிலவும் நாட்டை விட்டு விட்டு வேறு நாடு சென்று பிழைப்பர் மனிதர்கள். குடியேறிய வீடு பழுது பட்டால் வேறு வீட்டுக்கு குடியேறுவது போல சீவன் ஓர் உடலை விட்டுவிட்டு வேறு ஓர் உடலை எடுத்துக் கொள்ளும். சிவஞானம் பெற்றவர்கள் இதனை நன்கு அறிந்து கொள்வார்கள்.


 
14. சிவ தரிசனம்
சிவன் சீவனுக்குக் காட்சி தருவது!

#2853 to #2855

#2853. சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

சிவனையே எண்ணிக் கொண்டு இருப்பவருக்குச் சிந்தை வேறு, சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரின் உள்ளத்தின் உள்ளே சிவன் வெளிப்பட்டு அருள்வான். சிந்தையைத் தெளிவிக்கும் சிவ ஞானத்தால் சிந்தை தெளிந்தவர்களின் சிந்தையின் உள்ளே சிவன் இருப்பான்.

#2854. வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

சொற்களைக் கடந்தவன் சிவன்; மனத்தினைக் கடந்தவன் சிவன்; என்றும் மறைகள் உரைக்கும் மறை நாயகன் சிவன். அவன் அருளை நாடி அவனையே நோக்குங்கள். நீங்கள் நோக்கும் அந்தப் பொருள் மிகவும் நுண்மையானது. அதற்குப் போக்கும், வரவும் இல்லை; அழிவும், கேடும் இல்லை. இங்கனம் சிவனை ஆராய்ந்து தேடுபவர்களுக்கு அவனே தேடும் பொருளாவான்.

#2855. அரனாய் அருள் புரிந்தான்!

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற்ற ஒண்சுடர் தானாய்த்
தரனாய் தனதென ஆறுஅறிய வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.


பரனாகியவன் சிவன்; பராபரன் ஆகியவன் சிவன்; யாண்டும் பரவிய தன்மையைக் கடந்து சென்று பேரறிவும் பேராற்றலும் பொருந்தியவன் சிவன். மறைக்கப்படாத ஒளியுடன் சுடர் விடும் பரஞ்சோதி அவன். அரனே அனைத்துக்கும் ஆதாரம் ஆகநின்றாலும், அரன் னைத்து சீவர்களாலும் அறியப்படாதவனாகவும் இருக்கின்றான். அறிய ஒண்ணாத அரனாக இருந்தாலும், அரன் உயிர்களுக்கு அரணாக நின்று அருள் புரிகின்றான்.

 
15. சிவசொரூப தரிசனம்
சிவனின் இயல்புநிலை ஆகிய சத்து, சித்து, ஆனந்தம் என்னும் மூன்றையும் சீவன் தானும் உணருவது

#2856 to #2859

#2856. வேதமும் ஓதும் சொரூபி

ஓதும் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.


ஓதுகின்ற மயிர்க்கால்கள் தோறும் அமுது ஊறிடும்; இன்பம் பொங்கும்; உள்ளும் புறமும் இடையறாத ஆனந்தம் தோன்றும்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சொரூபங்களையும் கடந்த, மறைகள் ஓதும் சிவனின் சொரூபத்தின் மேன்மை இவை ஆகும்!

#2857. மலர் கந்தம் துன்னி நின்றான்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணரும் அவனே புலவி அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.


சீவர்களின் உணர்வும் சிவனே. அந்த உணர்வை வெளிப்படுத்தும் உயிரும் அவனே! உயிர்கள் புணரும்படிக் கலவி செய்விப்பவனும் சிவனே. அவைகள் மாறுபடுமாறு புலவி செய்விப்பவனும் அவனே! அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் சிவனை இத்தன்மையன் என்று வரையத்துக் கூற முடியாது. அவன் உடலில் ஆறு ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களின் நறுமணத்தால் பொருந்தி உள்ளான்.

#2858. மறையவன் மாதவன் சிவன்

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே.


ஆதாரத் தாமரைகளில் பொருந்தி இருக்கும் சிவனின் சன்னதியில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது சிவனே உங்கள் உள்ளக் கிடக்கைகளை அறிந்து கொண்டு நிறைவேற்றுவான். அவன் தேவ வடிவானவன். அரிய தவத்தினால் அறியப்படுபவன்; சீவனின் சென்னியில் நின்று கொண்டு அதன் சிந்தயைத் தெளிவிப்பவனும் சிவனே!

#2859. பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தி

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தேனே.

ஈசன் திருவருளால் விளங்கப் பெற்ற என் அகக்கண்களை நான் விழித்து நோக்கினேன். நோக்கியபோது என்னுள் நிலைபெற்ற சோதியும், ஒப்பற்ற தலைவனும் ஆகிய பொன்னார் மேனியன், புரிசடை உடைய சிவன் என்னிடம் வந்து பொருந்தினான். நான் அறிவு மயமானவன் என்று எனக்கு உணர்த்தினான்.

 
#2860 to #2863

#2860. உய்த்த துரியத்து உறுபே ரொளியே.

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே.


சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று வடிவங்களுடன் இருப்பவன் சிவன். தனிப்பொருளாகவும் இருப்பவன் சிவன். முக்குணங்களின் வசப்பட்ட சீவனிடம், சிவானந்தத்தைத் தரும் அவன் பேரொளி சென்று பொருந்தாது. சீவன் நிர்குணன் ஆகும் பொழுது தூய்மை அடையும். பிரம்ம துரியத்தில் விளங்கும். சீவனின் அந்த பிரம்ம துரியத்தில் சிவன் பேரொளியாகச் சுடர் விடுவான்.

#2861. ஆனந்தத்து அப்புறத்தானே.

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.


சிவன் வெறும் பரன் மட்டும் அல்லன்; சிவன் உயர்ந்த பராபரன் மட்டும் அல்லன்; சிவன் சீவனின் அறிவாற்றலால் அடையப்படுபவன் அல்லன்; சிவன் சீவனின் சென்னி மேல் விளங்கும் ஒளிமண்டலம் மட்டும் அல்லன்; சிவன் அனைத்தையும் தரிப்பவன் மட்டும் அல்லன்; இவைகளாக இருப்பவனும் சிவன் தான்! இவைகள் மட்டுமே அல்ல என்று இருப்பவனும் சிவன் தான்! இன்பத்தைத் தரும் அரன் மட்டும் அல்லன் சிவன். அவன் ஆனந்தத்துக்கு அப்பாற்பட்டவன்!

#2862. சுகானந்த போதரே.

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே.


முத்தியும், சித்தியும் தரவல்ல சிவஞானம் கைக் கூடியவர்கள் எல்லையில்லாத பக்தியில் பொருந்துவர்; அவர்கள் பரமாகும் தன்மை அடைவர்; அவர்கள் சக்தியில் நிலை பெற்றவுடன் அவர்களுடன் சிவன் பொருந்துவான். இத்தகையவர்கள் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து இருப்பர்.

#2863. உரைப்பது எவ்வாறே?

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.


சீவனின் துரியாதீதம் என்னும் நிலை சொற்களுக்கு அப்பாற்பட்ட பாழ்நிலை ஆகும். இந்த அரிய துரியாதீதத்தை சீவன் அடைந்தவுடன்; விரித்தலும் குவித்தலும் இல்லாத சீவனின் மனம் சிந்திக்கும் திறனை இழந்துவிடும். அப்போது அங்கு நினைப்போ மாறப்போ இராது. மனம் தத்துவங்களுடன் கொண்ட தொடர்பை இழந்து, தன் உருவம் அழிந்துவிட்ட அந்த நிலையைச் சொற்களால் கூறவும் இயலுமோ?
 
16. முத்திபேதம், கர்மநிர்வாணம்

16. முத்தி பேதம், கர்ம நிர்வாணம்

முத்தி பேதம் = முத்தி நிலைகளின் வகைகள்
கர்ம நிர்வாணம் = சீவன் தன் செயல் அறுதல்


#2864 & #2865

#2864. நிர்வாண நிலை பிறக்கும்

ஓதிய முத்தியடைவே உயிர்பரம்
பேதமில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.


மறைகள் கூறும் வீடுபேறு என்பது என்ன? சீவன் பரம் ஆகிச் சிவவடிவத்தில் இலயம் அடையும். அப்போது துரிய நிலையில் முறையே சீவன், பரம், சிவன் என்ற மூன்றும் நன்கு பொருந்தி விளங்கும். சீவ வடிவமாகிய பரம் சிவ வடிவத்துடன் பொருந்தும். அந்த நிலையில் குற்றமற்ற நிர்வாண நிலை பிறக்கும்.

#2865. பிதற்று ஒழிவர்!

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.


உலகப் பற்றுக்களைத் துறந்தவர்கள் பற்றி நிற்பது பரம்பொருளாகிய நம் சிவபெருமானை. கல்வி கற்றுத் தேர்ந்து அதன் முடிவாக சிவஞானத்தை அடைந்தவர் கருதுவது கண்ணுதலோன் ஆகிய சிவபெருமானை. உற்றம் சுற்றம் அற்றவர்கள் சுற்றி நிற்பது சோதியாகிய என் சிவபெருமானையே. அத்தகைய சிவ பெருமானை அடைந்து அவனுடன் பொருந்தியவர்கள் வீண் பிதற்றல் ஒழிந்து மோன நிலையை அடைவர்!
 
17. சூனிய சம்பாஷணை
ஞான மொழிகளை மறைவாக உரைத்தல்


#2866 to #2870

#2866. மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.


மனிதனின் உடல் ஒரு சூதாடும் பலகையைப் போன்றது. ஐம்பொறிகள் சூதாடும் கருவிகள் ஆகும். இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றும் அதன் கண்கள் ஆகும். விஷய சுகத்தை நாடும் சீவன் ஐம்பத்தொன்று எழுத்துக்களை உடைய ஆறு ஆதாரச் சக்கரங்களின் இருந்து கொண்டு செயல்படும். சூதாடும் கருவியாகிய உடலில் சூதாடுவதற்கு ஒரு சீவன் வேண்டும். உலகைப் பற்றிக் கொண்டு இருக்கின்ற சீவன் சிவத்தை உணராது. சிவனைப் பற்றிக் கொண்டு இருக்கின்ற
சீவன் உலகை அறியாது.

#2867. ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.


பரம்பொருளாகிய சிவத்தை அடைவிக்கும் தூய நெறி என்னும் பயிர் முளைக்காதபடி அங்கு ஆணவம், கன்மம், மாயை என்னும் களைச்செடிகள் மண்டிக் கிடந்தன. இந்தக் களைகளை அழித்துச் சிவம் என்ற பயிரை வளர்க்கும் வகை அறிந்தவர் எவரும் இல்லை. ஆணவம் முதலிய களைகளை அழித்துச் சிவம் என்னும் பயிரை வளர்ப்பவர்களிடம் என் உள்ளம் ஊறி அன்பைப் பெருக்குகின்றது.

#2868. கடல் ஏழுங் கண்டேனே.

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏறலு றேன்கடல் ஏழுங்கண் டேனே.


ஆறு ஆதாரங்களுக்கு கீழே அமைந்துள்ள மூலாதாரத்தில் நான்கு இதழ்கள் கொண்ட ஒரு நீண்ட பனைமரம் உள்ளது. பக்குவம் அடையாத சீவனில் இது அறியாமை என்ற இருள் முகமாக இருந்து தொழிற்படும். ஏறுவதற்கு அரிய சுழுமுனை என்ற ஏணியில் ஏறி நான் அந்தப் பனையின் உச்சியை அடைந்தேன். அங்கு உடலின் ஆதாரங்களாகிய ஏழு கமலங்கள் கூடி ஒன்றாக ஒளிவீசுவதைக் கண்டேன்.

#2869. பழுத்தது வாழைக் கனியே.

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே
.

ஞான சாதனை என்னும் கத்தரிச் செடியின் விதையை நான் விதைத்தேன். அதிலிருந்து வைராக்கியம் என்ற பாகற்கொடி முளைத்தது. தத்துவ ஆராய்ச்சி என்ற புழுதியைக் கிளறினேன். அதனால் சகசிரதளத்தில் ஓர் ஒளி மண்டலம் தோன்றியது. மனித உடலின் ஆதாரத் சக்கரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஐம்பத்தோரு எழுத்துக்களும் விடை பெற்றுச் சென்றான. கிடைப்பதற்கு அரிய உயர்ந்த சிவக் கனி எனக்கு கிடைத்தது.

#2870. மையணி கண்டன் மனம் பெறுமின்!

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.


ஐம் பெரும் பூதங்களின் கூட்டுறவின் பயனாக உண்டாகும் விதையில், சீவனின் ஆன்மாவை விளங்கச் செய்கின்ற விந்து மண்டலம் உள்ளது. ஆயினும் இந்த விந்து மண்டலம் செயல்படுகின்ற முறையை அறிந்தவர் எவரும் இல்லை. மையணி கண்டனிடன் சீவன் மனம் பதித்தால், தன் ஆன்மாவை விளக்கும் ஒளி மண்டலத்தை அது உறுதியாகச் சென்று அடைய முடியும்.
 
#2871 to #2875

#2871. வெள்ளச் செய்யாகி விளைந்தது

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே
.


சுழுத்தி என்ற பயன் இல்லாத பள்ளமான நிலம் ஒன்று உள்ளது. கனவு, நனவு என்று சிவப்பயிர் விளையாத பாழ் நிலங்கள் இரண்டு உள்ளன. கள்ளனைப் போல மறைந்து இருக்கும் ஆன்மா தன்னைக் குறித்த உண்மைகளை அறியாமல் இந்த மூன்று பாழ் நிலங்களாகிய மூன்று அவத்தைகளில் உழன்றது. தன் உண்மை நிலையை அறிந்து கொண்டு, உள்ளம் என்ற நிலத்தைச் சீர்படுத்தி, சிவத் தொண்டு என்ற உழவினைச் செய்தால், வெள்ளமாகப் பாய்ந்து வருகின்ற சிவானந்தம் சீவனுக்கு முத்தி என்ற விளைச்சளைத் தரும்.


#2872. களர் உழுவாரே!


மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே.


இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்றும் உழுகின்ற ஏர்கள் ஆகும். இவை உழுகின்ற நிலம் முக்கோண வடிவில் உள்ள மூலாதாரம் என்ற நிலம். உழுது முடித்த பின்பு அவைகள் சுழுமுனையில் முதுகுத் தண்டு என்ற கயிற்றால் கட்டப் படும். ஞான சாதனை செய்கின்றவர்கள் நாக்குக்கு மேலே உள்ள பிரம்மப் புழையின் வழியே சிரசை அடைந்து அங்குள்ள சகசிரதளம் என்னும் வயலை உழ மாட்டார்கள். மூச்சுக்கு காற்றை அடக்கி ஹடயோகம் செய்து அவர்கள் விளைச்சலே இல்லாத நிலத்தில் வீணே பயிர் செய்கிறார்களே! இதனால் என்ன பயன் ?


#2873. கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள்


ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையோன் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.


உடலில் ஆதாரங்கள் என்ற ஏழு கிணறுகள் உள்ளன. அவற்றில் நீர் இறைப்பதற்கு இடைகலை, பிங்கலை என்ற இரண்டு ஏற்றங்கள் உள்ளன. மூத்தவன்(சந்திரகலை) கிணற்றில் இருந்து நீர் இறைக்கின்றான். இளையவன்(கதிரவக்கலை) அந்த நீரைப் பாய்ச்சுகின்றான். அந்த நீர் பாத்தி(அக்கினிக் கலை) வழியாக வயலுக்குப் (சகசிரதளத்துக்குப்) பாயாமல் (காம வேட்கைகளைத் தணிப்பதில்) வீணாகிறது. இது விலைமகள் வளர்த்த கோழி அவன் ஆசைநாயகனுக்கு உணவாக மாறி அழிந்து விடுவதைப் போன்றது.


#2874. பட்டிப் பசுவே வாய்த்ததே.


பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.


ஆன்ம தத்துவங்கள் என்ற இருபத்து நான்கு பசுக்கள் தம்மை நன்கு மேய்ப்பவர்கள் இல்லாமல் திரிகின்றன. இவை பால் தராத பட்டிப் பசுக்கள் ஆகும். வித்தியா தத்துவங்கள் என்னும் குட்டிப் பசுக்கள் ஏழும், சிவதத்துவங்கள் என்ற குட்டிப் பசுக்கள் ஐந்தும் நிரம்பப் பாலைத் தரக் கூடியவை. என்றாலும் ஆன்மாவாகிய பனவனுக்குப் பால் தராத பட்டிப் பசுக்கள் தாம் வந்து வாய்த்தன!


#2875. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே
.


பால் கறக்காத பசுக்கள் என்று இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள் உள்ளன. பால் ஊறும் சிவத்துவங்கள் என்ற ஐந்து பசுக்களும் உள்ளன. இவை தரும் பாலில் ஒரே ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. ஆனால் சீவன் இடைகலை, பிங்கலை என்ற காற்றுப் பசுக்களைக் கறந்து உண்ணும் போது, அவற்றிலிருந்து மாறுபட்ட பிற சுத்த தத்துவங்களாகிய பசுக்களை ஆன்மாவால் உணர்ந்து கொள்ள முடியாது.


 
#2876 to #2880

#2876. மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.


உயிரின் மனமண்டலத்தில், சென்னியில் உள்ள நிமிர்ந்த சகசிர தளத்தில், அரும்பு போலத் தோன்றிப் பின் செம்மையாக படர்ந்தது செம்மையான நாதம். மெய்ப்பொருள் ஆன சிவனைத் தனக்குள் நிலைபெறச் செய்த சீவன், சிவனைத் தனக்கு உரிமை ஆக்கிக் கொண்டது.

#2877. வெள்ளரி வித்து

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.


உடல் என்னும் வயலில், துன்பம் அளிக்கின்ற வினைப் பயன்கள் என்னும் பயிர் விளையும். இங்கு கீழ் முகமாகச் செல்லும் உயிர் மூச்சின் வழியை அடைக்க வேண்டும். அதை மேல் முகமாக்க வேண்டும். இதற்குச் சிவ தத்துவம் என்ற கறவை மாட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது சென்னி மேல் விளங்குகின்ற விந்து மண்டலம் சிவப் பயிரை விளைவிக்கின்ற வித்தாக மாறிவிடும்.

#2878. செந்நெல் அறுக்கின்ற வாறே.

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.


இடைகலை ஆகிய சந்திர கலையைத் தூண்டிவிட வேண்டும்; சிவ சிந்தனை என்ற எருவினைத் தூவி விட வேண்டும்; உணர்வு என்னும் விதையை அங்கு விதைக்க வேண்டும். இடைகலை, பிங்கலை என்ற இரு காளைகளைச் சேர்த்துக் கொண்டு உயிர் மூச்சின் கதியை மாற்ற வேண்டும்; தொண்டைச் சக்கரம் ஆகிய விசுத்தி என்னும் மிடாவில் ஞான சாதனை என்ற சோற்றைப் பதப்படுத்த வேண்டும். அதை மென்மையாக உண்ண வேண்டும். இடைகலை, பிங்கலை என்னும் இரு கிடாக்களைக் கொண்டு, உடல் என்னும் வயலில், சிவபதம் என்னும் செந்நெல்லை விளைவிக்கும் விதம் இதுவே.

#2879. விளைந்து கிடந்தது மேவு முக்காதமே

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.


சிவத்தை அடையும் வழியினை அறிந்து கொண்டவருக்குச் சிவம் நன்கு விளங்கும். அன்னாருக்கு விந்து மண்டலம் ஒரு காதத் தொலைவுக்குப் பெருகிக் கிடைக்கும். சிவத்தின் நினைவாகவே இருந்து, சிவத்தை அடைகின்ற நெறியினை அறிந்து கொண்டு, அதன் வழியே சிவத்தினை அடைபவருக்கு அது மும்மடங்கு ஆனந்தத்தைத் தரும்.

#2880. வளர் இளவஞ்சியின் மாய்தலும் ஆமே.

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருத்திலும் இல்லைக்
களர்உழு வார்கள் களரில் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.


அடயோகம் ஒரு களர் நிலம் போன்றது. அதில் இருந்து கொண்டு சாதனை என்ற உழவினைச் செய்கின்றவர்களின் உள்ளக் கிடக்கையை நாம் அறியவில்லை. “ஏன் களர் நிலத்தில் உழுது பயிர் செய்கின்றோம்?” என்று அவர்களும் சிந்தித்தது இல்லை. செய்யும் செயலைப் பற்றிய ஞானம் சிறிதும் இன்றி, இவ்வாறு வீண் சாதனையில் தன் காலத்தைக் கழிப்பவர்கள் களர் நிலத்தில் தோன்றி வளரும் இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி ஆகிய குண்டலினி சக்தியின் வயப்பட்டு காமத்துக்கு இரையாகி மாய்ந்து போவர்.
 
#2881 to #2885

#2881. இல்லத்து இனிதிருந்தானே

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.


சீவனுக்குள் உள்ள சிவனின் நாதத்தைச் சீவனுக்கு விளங்கவிடாமல் வஞ்சனை செய்து தடுப்பது காமவாயு என்னும் ஒரு சிறு நரி. அது தங்கும் இடம் விந்துப்பை என்னும் கொட்டில். அந்தக் கொட்டிலில் ஏற்றிய சிவ அக்கினியில் சீவன் தன் ஆசா பாசங்களை இட்டு எரிக்க வேண்டும். நாத உபாசனை செய்ய வேண்டும். அப்போது நன்மை தரும் ஒளி பெருகும். அங்கு சக்தி தேவி வந்து பதிவாள். அவளுடன் சிவனும் வந்து அந்த உள்ளத்தில் குடியேறுவான்.


#2882. அமிர்தம் பொழியவைத் தானே.


மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.


தலை என்னும் மலையின் மீது அங்குள்ள ஒளிக் கதிர்கள் கனமழையைப் போலப் பரவும்.
பிராணன் என்ற மான்கன்று உயரத் தாவித் சீவனின் தலையின் மத்தியில் சென்று மோதும்.
அங்கு ஊர்த்துவ சகசிரதளம் என்ற ஆயிரம் இதழ்த் தாமைர ஒரு குலை போலப் பழுத்து நிற்கும்.
அந்தக் குலையில் இருந்து செழித்த சிவக்கனி கீழே உதிர்ந்து விடும். உதிர்ந்த சிவக்கனி கொல்லன் உலையில் உருக்கிய இருப்பு போன்று ஒளிரும். அது சீவனின் மார்புப் பிரதேசத்துக்கு மேலே அமுதத்தைப் பொழியும்


#2883. பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே.


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.


ஆன்மா என்னும் பார்ப்பானின் வீட்டில், ஐம்பொறிகள் என்ற ஐந்து பசுக்கள் உள்ளன.
அவைகளை மேய்ப்பவர் என்று யாரும் இல்லை. அதனால் அவை வெறித்துத் திரிகின்றன.
அவைகளை மேய்ப்பதற்கு ஒருவர் இருந்து, அவற்றின் உலக இன்பம் என்ற வெறியும் அடங்கினால்
அப்போது அந்த ஐந்து பசுக்களும் அந்தப் பார்ப்பானுக்குப் பேரின்பம் என்ற பாலைச் சொரியும்.


#2884. காமம் அழிய ஞானம் ஒளிரும்


ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.


பஞ்சப் பிராணன் என்ற ஐந்து காட்டுப் பசுக்கள், 24 ஆன்ம தத்துவங்களுடன், புருடன் நீங்கலாக மற்ற 6 வித்தியா தத்துவங்கள் சேர்ந்த முப்பது சிங்கங்கள்; குற்றமற்ற பக்தி மார்க்கங்கள் ஒன்பது; இவை அனைத்தும் சீவனுக்கு உரியனவாக அடங்கி விட்டால் அந்த சீவனின் உள்ளத்தில் காமம் முதலிய குறைகள் வளர்ச்சி அடையா. இந்த முறையில் தம் காமத்தை அழிப்பவர் தம் ஞான ஒளியை வளர்ப்பார்.

விளக்கம்

பஞ்சப் பிராணன்கள் 5 :-
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்


ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு:-
பஞ்ச பூதங்கள் ( நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி)…………………………5
பஞ்ச தன்மாத்திரைகள் ( ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் )………….5
பஞ்ச ஞானேந்திரியங்கள் (கண், நாசி, நாவு, செவி, தோல்)…………..5
பஞ்ச கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாணி, பாதம், குய்யம், குதம்)…..5
அந்தக் கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் )………………….4


புருடன் நீங்கலாக வித்தியா தத்துவங்கள் ஆறு :-
1. காலம், 2. நியதி, 3. கலை, 4. வித்தை, 5. ராகம், 6, மாயம்


பக்தி மார்க்கங்கள் ஒன்பது :-
சிரவணம், கீர்த்தனை, ஸ்மரணம், சேவை, அர்ச்சனை, அடிமை, வந்தனம், சாக்கியம், ஆன்ம நிவேதனம்


#2885. மலராத பூவின் மணம்


எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே.


எழுதப் படாத மறைநூலில் ஒளிந்திருக்கும் பரம்பொருளைத் தெருளாத கன்னியாகிய குண்டலினி சக்தி சீவனின் சென்னியை அடைந்து எழுப்பினாள். அங்கு மலராத சகசிரதள மலரில் தேன் போன்றை ஆனந்தம் விளைந்தது. உடலுடன் பொருந்தி இருப்பதைத் துறந்து விட்ட ஆன்மா ஆகிய வண்டு அந்தத் தேனைப் பருகி இன்பத்தில் திளைத்தது.


 
#2886 to #2890

#2886. வேகின்ற கூரை!

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.


உடலில் இருந்து வெளியே செல்லும் அபான வாயுவும், உடலின் உள்ளே புகுகின்ற பிராணவாயுவும் ஒன்றாகக் கூடி இருக்கின்ற உடல் ஒரு நாவல் மரம் போன்றது. அது தருகின்ற நாவற் பழம் உலக இன்பம் என்னும் விஷய போகம். இதைச் சுவைக்கத் துடிப்பவர்கள் ஐம்பொறிகள் என்னும் ஐவர். உயிர் பிரிந்ததும் வெந்துவிடும் கூரை போன்ற மனித உடலில் இந்த ஐவரும் இங்கனம் மகிழ்ச்சியுடன் திளைக்கின்றனரே! என்ன இவற்றின் விந்தைச் செயற்பாடு!


#2887. மூங்கிலும், வேம்பும்!


மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.


சீவனின் உள்ளம் என்ற மூங்கில் முளையில் இருந்து வைராக்கியம் என்ற வேப்பமரம் வளர்ந்தது. அது முதுகுத்த தண்டு என்ற பனை மரத்தைச் சார்ந்து உள்ளது. அந்தப் பனை மரத்தின் கீழே குண்டலினி என்னும் பாம்பு சுருண்டு கிடக்கின்றது. சுருண்ட குண்டலினிப் பாம்பை எழுப்பிப் பனை மரத்தின் மேலே செலுத்தினால் சீவன் அமுதம் உண்டு மகிழலாம். அது நிகழாவிட்டால் வைராக்கியம் என்ற வேம்பு வெடித்து முற்றிலுமாக வீணாகிவிடும்.


#2888. ஐவர் அமர்ந்து நின்றாரே


பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈ ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.


தச நாடிகள் என்ற பத்துப் பருத்த புலிகளும்; ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், பஞ்சதன்மாத்திரைகள் என்ற பதினைந்து யானைகளும்; ஞானேந்திரியங்கள் என்று ஐந்து வித்தகர்களும், பத்து வாயுக்கள் என்னும் வினோதகர்ளும், முக்குணங்கள் என்ற மூவரும், மருத்துவர்கள் அறுவரும், பொருந்தி இருக்கும் மனித உடல் ஐந்து மாறுபட்ட நிலைகளில் அமையும்.


விளக்கம் :
1). பத்து நாடிகள்:
இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு

2). ஐம் பூதங்கள்:-
விண், மண், தீ, நீர், காற்று.

3). ஐந்து தன்மாத்திரைகள்:-
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

4). ஐந்து ஞானேந்திரியங்கள்:-
மெய், வாய், கண், மூக்கு, செவி,

5). பத்து வாயுக்கள் :-
பிராணன், அபானன், உதானன், சாமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்சயன்.

6). மருத்துவர் அறுவர்:-
கற்றல், பிதற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு.

7). ஆன்மாவின் ஐந்து நிலைகள்:-
நனவு, கனவு, சுழுத்தி, துரியம், துரியாதீதம்,


#2889. இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்


இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே.


மனித உடல் என்ற ஊர். அதில் உழவைச் செய்வது உசுவாசம், நிசுவாசம் என்ற இரண்டு எருதுகள். இந்த இரண்டு எருதுகளையும் செலுத்துபவன் சீவன் என்னும் ஒரே தொழும்பன். அந்தத் தொழும்பன் தன் நிலையை அறிந்து கொண்டு, இந்த இரண்டு கடாக்களையும் செயல்படாமல் நிறுத்தி விட்டால், அப்போது போக்கும் இன்றி, வரவும் இன்றி அந்த இரண்டு எருதுகளும் ஒரே எருதாக மாறிவிடும்.

#2890. நித்தம் பொருது நிரம்பநின் றாரே.


ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே.


விருப்பு, வெறுப்புக்களை அகற்றி மனம் என்ற நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். பக்தி என்ற வலையில் மனத்தைப் பொருத்த வேண்டும். பருத்தி போன்ற தூய வெண்ணிற ஒளியைத் தலையின் மேலே விளங்கச் செய்ய வேண்டும். அதுவே சீவனை முக்திக்கு அழைத்துச் செல்லும் ஏணியாகிவிடும். படைத்துக் காத்து அழிக்கும் மும் மூர்த்திகளின் பிடியில் உள்ள உடலையே தன் இடமாகக் கொண்டு சீவன் சாதனை செய்ய வேண்டும். அத்தகைய சீவர்கள் முழுமை பெற்று விளங்குவர்.


 
#2891 to #2896

#2891. கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.


உருவங்களும் அவற்றின் பொருளும்:-
கூகை = கோட்டான் = அறியாமை
பாம்பு = காமம்
கிளி = தர்மம்
பூஞை = பூனை = அதர்மம்
நாகணவாய்ப் பறவை = சிற்றறிவு
எலி = சீவன்
கோட்டான், பாம்பு, கிளி, பூனை, நாகணவாய்ப் பறவை இவை அனைத்தும் மனமண்டலத்தில் விரோத்ததுடன் வாழ்ந்து வருகின்றன. நாகணவாய்ப் பறவையைக் கோட்டான் அணுகும்போது அதைக் கண்ட எலி சத்தம் எழுப்பி நாகணவாய்ப் பறவையை எச்சரிக்கை செய்யும்.

#2892. புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.


குலைத்து நிற்கும் முக்குணங்களைக் கலக்கி விட்டால் வெள்ளெலி ஆகிய சீவன் நிலை பெற்று நிற்காமல் அந்த முக்குணங்களின் வயப்பட்டு நிற்கும். அந்தச் சீவன் குண்டலினியின் நெருப்பில் இருக்கும் பொழுது சீவனைப்பற்றி இருந்த முக்குணங்களும் ஓடி மறைந்து விடும். அங்ஙனம் இல்லை என்றால் முக்குணங்கள் அகலாமல் அங்கேயே இருக்கும். சீவனிடம் உடல் பற்று இருக்கும் வரையிலும் முக்குணங்களின் தாக்கமும் இருக்கும்.

#2893. மூடு புகாவிடின் மூவனை யாமே.

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.


அறியாமையில் அழுத்துகின்ற ஆன்மத் தத்துவங்களின் காட்டில் புகுந்துவிட்டவர் சிவபூமியைக் காண மாட்டார். அங்ஙனம் காண இயலாதபடி மறைத்து நிற்பவை ஐம்பொறிகளும், ஆறு மனமலங்களும் ஆகும். இந்த மறைப்பினை அகற்றி விட்டால் சீவன் சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம் என்ற மூன்றையும் காண இயலும்.

#2894. ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.


வண்ண ஆடைகள், நறுமணப் பொடிகள், மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட வாசனை எண்ணெய், கழுத்தில் காறை, இடையின் நாண், கையில் வளையல்கள் இவற்றால் அலங்கரிக்கப்பட்ட பெண்களைக் கண்டு மோகம் கொண்டவரின் நிலை என்ன ஆகும்? பாறையின் மீது வைக்கப்பட்ட ஆடை பறந்து செல்வதைப் போல இவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சியம் என்ற ஆறு குழிகளில் அழுந்தி விடுவர்.

#2895. அவர் ஊர் அறியோமே !

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே

துருத்தி போன்றது மனித உடல். அதன் தலை ஒரு மலை போன்றது. அந்த அறிவு வானத்தில் நிகழுகின்ற விருத்தியினைக் கண்காணிக்க, மூன்று வேளைகளிலும் ஞான சாதனை செய்பவர் அதனை நாடுவர். அவர்களை துன்புறுத்த மலை போன்ற தீவினைகள் ஒன்று கூடி வரும். அவற்றைத் தடுத்துப் பொடியாக்கும் பராசக்தி ஒருத்தி உள்ளாள். அந்த சக்தியின் துணை இன்றி அந்த சிவனது ஊரைச் சென்று அடைய முடியாது.
 
#2896 to #2900

#2896. இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.


அறம் என்ற கிளியும், பாவம் என்னும் பருந்தும் சேர்ந்து சீவனின் வாழ்வில் இன்பம், துன்பம் என்ற மேளங்களை மாற்றி மாற்றிக் கொட்டும். இன்பத்தில் தான் கொண்டிருந்த பற்றினையும், துன்பத்தில் தான் கொண்டிருந்த வெறுப்பினையும் துறந்து விட்ட சீவன், ஒரு திருந்தி விட்ட சீவன். இந்தச் சீவன் சிவனுடன் பொருந்தி இணையும். அதனால் அது வான்மயமான அற்புத உடலைப் பெறும். அதன் பின்பு அந்தச் சீவன் சிவானந்தத்தை அனுபவித்து அதில் திளைத்திருக்கும்.


#2897. பயன் எளிதாமே.


கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்?
சூடுஎரி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.


கூடுகின்ற பறவை இறையைக் கொத்தித் தன் இணைப் பறவைக்கு ஊட்டுவதைப் போன்று எளிதானதே மூலத் தீயில் நெய் சொரிந்து அதனைச் சூழ்ந்துள்ள இருளை போக்க அறிந்த சீவனுக்குச் சிவனை அடைவதும்!


#2898. குலை இல்லை கொய்யும் மலருண்டு


இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.


இலைகள் இல்லை, வண்டுகள் மொய்க்கவில்லை ஆயினும் அங்கு ஒரு மலர் உண்டு. தலையும் இல்லை, தாளுமில்லை ஆயினும் அதற்கு வேருண்டு. குலை இல்லை எனினும் கொய்யும் மலர் அங்கு உண்டு. தலை இல்லை மலர் சூட எனினும் தாழ்ந்த அந்தக் கிளை வாடாதே.


#2899. நக்கரை வாழ்த்திப் பயன் கொள்வார்


அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.


சகுணமாகிய கரையைக் கடந்து அக்கரையில் நிற்கும் நிர்குணப் பிரமம் ஆகிய ஆலமரத்தைக் காண்பவர், நிர்குணன் ஆகிய சிவபெருமானை வணங்கிப் பயன் அடைவர். மக்களில் சிறந்தவர்கள் ஆகிய அவர்கள் தாம் படும் ஐந்து விதத் துன்பங்களையும் துடைக்கும் நிர்குணப் பிரம்மத்தின் தாள் பணிந்து அதனால் சிறந்த பயன் அடைவர்.


#2900. கூப்பிட மீண்டு கூரை கொண்டார்


கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.


அனைவரும் விரும்பும் இல்லறம் என்ற நல்லறவழியில் அஞ்ஞானம் என்ற காடு இருகாத தூரம் நீண்டுள்ளது. அந்தக் காட்டின் வழியே செல்பவரைக் கட்டிப் போடுவதற்கு அங்கு ஐம்புலன்கள் என்ற கள்வர் உள்ளனர். சிவ ஒளி என்ற வெள்ளை வீரன் அந்தக் கள்வர்களை ஒலி எழுப்பி விரட்டி விட்டான். அப்போது சீவன் பத்திரமாகத் தலைமேல் உள்ள சகசிரதளத்தைச் சென்று அடைந்தது.



 
#2901 to #2906

#2901. எட்டிப் பழத்துக்கு இளைக்கின்றவாறே.

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.


இல்லறம் என்னும் கடலில் அறிவு, அறியாமை ஆகிய கொட்டியும், ஆம்பலுலும் பூத்து நிற்கின்றன. உலகில் வலம் வரும் நாம, ரூப பேதங்கள் வெட்டியையும், வேம்பையும் போலப் பொல்லாத சுவை தருவன. மனிதன் அவற்றைத துறந்துவிட்டு சத்து, சித்து, ஆனந்தம் என்னும் வாழைக்கனி, கற்கண்டு, தேன் இவற்றைக் கலந்துண்ண வேண்டும். இதை விடுத்து எட்டியைப் போலக் கசக்கும் உலக விஷயங்களை நாடுபவர்கள் கெடுதல் அடைவர்.

#2902. சக்தியின் அருளால் சீவன் இன்பம் அடையும்

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.


ஆண் வண்டும், பெண் வண்டும் போல இணையாக வண்ணக் குடையின் கீழ் அமர்ந்துள்ளனர் சிவனும் சக்தியும். பாசத் தளைப்பட்டுப் பரிதவிக்கும் சீவன், சக்தியின் கருணையால் கிடைக்கும் அமிர்தத்தைப் பருகுகின்றது. அதில் சீவன் இன்பம் பெறுகின்றது.

#2903. கொல்லையில் மேயும் பசுக்கள்

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது

கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.

கொல்லை புறத்தில் ஆசாபாசங்கள் வசப்பட்டு மேய்கின்ற ஆன்மாக்களாகிய பசுக்களை என்ன செய்ய வேண்டும்? அவைகளைக் கொல்லையின் எல்லையைக் கடக்கச் செய்ய வேண்டும். இறைவன் அடிகளை நோக்கிச் செலுத்த வேண்டும். அவைகளைத் திருத்தி நல்வழிப் படுத்த வேண்டும். இங்கனம் செய்யாத வரையில் அவைகளின் எண்ணங்கள் கொல்லைப்புறத்தில் தங்களின் ஆசாபாசங்களுடனேயே இருந்து கொண்டு வளைய வரும்.

#2904. சிவக்கனியை அடையலாம்

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.


வலக்கண் என்ற அகன்ற இடத்தில் கதிரவக் கலை என்கின்ற அழகிய செந்தாமரை மலர்ந்தது. இடக்கண் என்ற நீர் நிலையில் சந்திரகலை என்னும் கருங்குவளை மலர்ந்தது. மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியே மேலெழுந்துவரும் அக்கினிக் கலையுடன் இந்த கதிரவக் கலை, சந்திர கலை இரண்டையும் இணைக்க வல்லவருக்குச் சிவக்கனி என்ற அரிய, பெரிய, இனிய கனி கிடைக்கும்.

#2905. மனை புகலாமே!

ஆறு பறவைகள் ஐந்தகத்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.


ஐம்பூதங்களால் ஆன உடலில் ஆறு பறவைகள் உள்ளன. அவையே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சரியம். இவைகள் தலையின் மீது உள்ள நூறு நாடிகள் என்னும் நூறு பறவைகளால் உண்ணப் படுகின்றன. ஆயினும் சீவன் உடலின் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்து சென்று விட்டால் உறுதியாகச் சிவன் உறையும் மனையில் புகுந்துவிடலாம்.
 
#2906 to #2910

#2906. ஒட்டனஞ் செய்தால் ஒளி உண்டாகும்

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே

சீவன் குடைதல் போன்ற செயல்களைச் செய்து இன்பத்தில் திளைப்பது பெண்ணின் யோனி என்ற குளத்தில். அதில் சீவனுக்கு இன்பம் ஊற்றெடுத்துச் சுரக்கும். சீவன் தன் வீரியத்தை வெளியே விடாமல் தடுப்பதற்கு அதைச் சுழுமுனையில் கட்டி உடலினுள் நிலை பெறச் செய்ய வேண்டும். இதைச் செய்பவருக்கு உடலில் ஒளி உண்டாகும்.

#2907. அது ஆலயம் ஆகும்!

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.


உலகைச் சுற்றியுள்ளன ஏழு கடல்கள்; மேன்மை வாய்ந்த எட்டு மலைகள்; தீ, நீர், காற்று, நிலம் என்ற அனைத்தையும் தங்கி நிற்பது வானம் என்ற உண்மைத் தன்மையை அறிந்து கொண்டவர் நீண்ட காலம் வாழ விரும்பினால் அந்த வானமே அவருக்கு இருப்பிடமாகிய ஆலயமாகும்.

#2908. மனமும், பொறிகளும்

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.

ஆலிங்கனம் செய்து அகம் சூடேற, ஆண் பெண் உறவாடிக்கருப்பையினுள் கருவை உருவாக்கினர். பின்னர் அவர்கள் காமச் செயலைக் கைவிட்டனர். கரு உருவாகிக் காமம் கழிந்த பின்பு, பொறிகள் கொண்டிருந்த மயக்கம் தீர்ந்தது. பொறிகளின் வழியே சென்று கொண்டு இருந்த மனம், மீண்டும் பொறிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தான் அவற்றுக்கு முன்பாக நின்றது!

#2909. ஈசன் அருளிய இட்டம் வலிது!

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

திருமணச் சடங்குகளில் முக்கியமான இரண்டு மேளமும், தாலியும் ஆகும். இந்த இரண்டைக் காட்டிலும் வலியது களவு வழி அன்பாகிய பாரை என்பர். இந்த மூன்றிலும் வலியது எது என்று அறிவீரா? இறைவன் அருளால் உண்டாகும் அன்பே இந்த மூன்றைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது.

#2910. உருவம் பொன்னாமே!

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் பொன்னாமே.


மீனைக் கண்டவர்கள் நேரம் போவதை அறியாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் உலகில் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிவம் என்னும் முயலைப் பெற விரும்புபவர்கள் சரியை நெறி, கிரியை நெறி, ஞான நெறி என்ற மூன்றில் ஒன்றைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக ஞானம் அடைந்து உய்வர். வீண் விதண்டாவாதம் செய்பவன் சிவத்தை அடைய முடியாது. மறைகளின் மெய்ப்பொருளாகிய சிவத்தைக் கண்டு கொண்டவர் மேனி தூய பொன் போலாகிவிடும்!
 
#2911 to #2915

#2911. நாரை போலல்ல நாதனார்!

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

உள்ளம் என்ற குளத்தில் ஆசை என்னும் கோரைப் புற்கள் மண்டிக் கிடந்தன. பாசம் என்னும் ஆரையும் அதில் நீண்டு நிறைந்து இருந்தது. ஆரையும், கோரையும் நிரம்பி இருக்கும் குளத்தில் மீன்பிடிக்கும் நாரை போன்றவன் அல்ல நம் நாதன்! அவன் சலனம் அற்ற, தெளிந்த நீர் நிலை போன்ற, தூய உள்ளத்தில் சீவன் என்னும் மீனை பிடிப்பவன் ஆவான்.

#2912. ஒல்லை கடந்து ஊர் புகலாம்

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.

கொல்லை முக்காதம் பரந்து கிடக்கின்றது. காடு அரைக்காதம் பரவிக் கிடக்கின்றது. எல்லைகள் மயங்கி கிடக்கின்றன இந்த இரண்டும்.! எல்லை மயங்காது இயங்க வல்லவர் மட்டுமே இங்கு ஒல்லையைக் கடந்து தான் செல்ல வேண்டிய ஊரைச் சென்று அடையலாம்.

#2913. வளர் சடையான் வழுவாது போவான்.

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே.

அகண்ட சிவத்தை அடைவிக்கும் உழவு என்பது சீவன் செய்யும் தவம் ஆகும். அந்தத் தவத்தால் சீவனின் உள்ளம் ஒருமை அடையும். எண்ணங்கள் என்னும் மழை அங்கு பெய்யாது. சிவ பூமிக்குரிய சக்தி பொருந்தும். மலபரிபாகம் உண்டாகும். வினைகள் தம் போகத்தைத் தாரா. அங்கு வளரும் ஒளிக் கதிர்களை உடைய சிவன் வந்து பொருந்தி விளங்குவான்.

#2914. பொதுங்கிய ஐவர்

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்கனி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.


சீவன் எந்தத் தொழிலும் செய்யாமல் இருந்தாலும் கதிரவனின் இயக்கம் பன்னிரண்டு ராசிகளிலும் பொருந்தி இருக்கும். ஆனால் சீவன் தன் உடலைக் கடந்து விடும் பொழுது திங்கள் மண்டலத்தில் ஒளி பெருகும். சிவக்கனி தேன் கசிவது போன்ற இன்பத்தைத் தரும். அப்போது தன்னை வருத்தி வந்த ஐம்பொறிகள் செயல்படாதவாறு சீவன் அவற்றை அடக்கி ஆள்வான்.

#2915. ஆலிப்பழம் போல் அளிக்கும் அப்பு

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.


பிரணவம் என்பது ஒரு தோணி. சீவன் அதில் ஏறிக்கொண்டு அறிவு வானம் என்னும் கடலில் செல்லும். அது செய்யும் வணிகம் தன்னிடம் இருக்கும் இருளை விடுவதும் அதற்குப் பதிலாக ஒளியைப் பெறுவதும் ஆகும். அது விரும்புவது தான் விருத்தியை அடைவது மட்டுமே. அப்போது மாயா காரியம் ஆகியவற்றைச் சீவன் விட்டு விடுவான். குளிர்ந்த சந்திர மண்டலம் தரும் ஒளி தேனைச் சிந்தும் கனியைப் போல இனிக்கும். சீவன் அந்த ஒளி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து இருப்பான்.
 
#2916 to #2920

#2916. நடுவு நின்றாரே!

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே

சத்துவம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களால் அமைக்கப்பட்டுள்ள ஓர் ஆற்றில் நனவு, கனவு, சுழுத்தி என்ற மூன்று வாழைகள் உள்ளன. செந்நிறம் கொண்ட அக்கினி மண்டலத்தின் காரணமாக விளையும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அங்கு நிறைந்திருந்தன. சிவபெருமானின் மீது அன்புகொண்டவர்கள் இவற்றிலிருந்து விலகி வாழ்பவர். மெய்போலப் பொய்பேசும் அழகிய கன்னியரிடம் காமச் சுவை என்ற மணம் மிகுந்த மலரை விருப்பி அனுபவித்தாலும், இவர்கள் மனம் மட்டும் சுழுமுனையைப் பற்றியே நிற்கும். ஒரு போதும் அதை விட்டு அகலாது.

#2917. வலம்புரி வாய்த்தது!

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.

ஆத்தி மரம் போன்ற சீவனின் முதுகுத் தண்டுக்கு அடியாக இருப்பது கீழேயுள்ள மூலாதாரம். முடியாக இருப்பது சிரசு. அதன் உச்சியில் மூங்கிலின் முக்கண்கள் போல மூன்று கலைகள் அமைந்துள்ளன. அவை முறையே கதிரவக் கலை, திங்கள் கலை, அக்கினிக் கலை ஆகும். சாதகனின் பயிற்சியால் வளர்ச்சி அடைந்து இவை மூன்றும் ஒன்றாகிவிடும். அப்போது கொடி, படை போலச் சீவனுக்குத் துன்பம் தருகின்ற ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் அழிந்து போகும். அங்கு வலம்புரிச் சங்கத்தின் நாதம் ஒலிக்கும்.

#2918. பன்றி, பாம்பு, பசு, வானரம்

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.

#2919. கட்டு வீட்டாருக்கு அன்றிக் காண ஒண்ணாது!

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.

சீவனின் தலையில் சகசிரதளத் தாமரை மொட்டு ஒன்று உள்ளது. பாசத்தில் இருந்து விடுபட்ட சீவன், அந்த ஆயிரம் இதழ்த் தாமரை மொட்டு மேல் நோக்கி விரிவதைக் காண இயலும். உடல் பற்றினைத் துறந்து விட்டுத் தத்துவங்களின் கூட்டமாகிய உடல் கெடும்படிச் செய்து, அதனை ஒளியாகக் கண்டு, தம் உள்ளத்தில் குடியேறிய பற்றுக்களை அறவே துறந்தவர்களால் மட்டுமே அந்த ஆயிரம் இதழ்த் தாமரை விரிவதைக் காண இயலும்.

#2920. நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே.

சீவனின் சென்னியில் உள்ள சகசிரதளம் என்னும் நிலத்தில் நீர் பாயாமல் சீவனின் உணர்வு பாயும். ஞான சாதனை செய்பவருக்கு இந்த நிலம் மரகத்தைப் பச்சை நிறத்தில் இருக்கும். இதைக் கண்டு அறிந்தது கொள்ள வல்லவர் எவரும் இலர். மிகுந்த மழையினால் பெருகும் நீர் போலச் சீவனின் உணர்வினால் பெருகும் இந்த நீர், ஐம்பொறிகளின் வசப்பட்ட மனம் என்ற திடர் நிலத்தில் பொருந்தி இருக்காது! அங்கு தங்காது.
 
#2921 to #2925

#2921. நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே


இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும். இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும். அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன், பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.


#2922. வாழையும் சூரையும் வன்துண்டம் செய்மின்!


வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.


சீவனின் இருவினைப் பயன்களாகிய வாழையைப் போன்ற இன்பமும், சூரயைப் போன்ற துன்பமும் தாமே வலிந்து வந்து சீவனைச் சேரும். “இன்பத்தை விடவும் துன்பம் வலியது!” என்று உரைப்பர்.
“இன்பம், துன்பம் என்ற இரண்டும் சீவன் கொண்டுள்ள உடல் பற்றினால் விளைகின்றவை!” என்ற உண்மையைச் சீவன் புரிந்து கொள்ள வேண்டும். அவை இரண்டையும் சமமாக எண்ணிக் கொண்டு அவற்றைக் களைய வேண்டும். நிலையான சிவத்தைப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.


#2923. புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறை
யாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.


சுவாதிட்டானம் என்ற நிலத்தைச் சீவன் என்ற வேடன் தோண்டுவான். அங்கு உப்புநீர்க் கடலில் சென்று வீரியம் என்னும் கொழுத்த மீனைக் கொண்டு வருவான். அந்த மீனை நழுவ விட்டு விடாமல் நன்கு பாதுகாத்து வாருங்கள். அப்போது எவர் வேண்டினாலும், அவருக்குக் குறைவில்லாத சிவம் என்ற செல்வம் கிடைக்கும். அந்த சீவனும் மெல்ல மெல்லப் பக்குவப் பட்டுத் தானே சிவம் ஆகி விடுவான்.


#2924. விளிப்பது ஓர் சங்குண்டு


தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்துகொள் வார்க்கே


அசைவுகளே அனைத்து சிருஷ்டியின் அடிப்படை ஆகும். அந்த அசைவு உணர்வில் சீவனின் உடல் வளர்ச்சி அடையும். சீவன் சிவனை அழைக்கும் சங்கின் நாதம் அங்கு இருக்கும். அந்த ஓசையின் மூலம் சிவனை அடைவது சீவனுக்கு இன்பம் தரும்.
“சீவன் சிவனை நடுவதால் சந்திரனுக்கும், சூரியனுக்கும், சுழுமுனையில் இடம் கிடைக்கும்!” என்ற உண்மையை ஆராய்ச்சி செய்பவர் அறிவார்.


#2925. படை கண்டு மீண்டது பத்தி வழியில்!


குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே


சித்தம் என்னும் கோவில் எருமை, உடல் என்னும் குடையை விட்டுவிட்டு, நாதசம்மியம் என்பதை நோக்கிச் சென்றது. பாதி வழியில் உலக விஷயங்கள் என்ற படையினை எண்ணியபோது அது மீண்டும் உடலையே வந்து அடைந்தது. ஆன்மா என்னும் எஜமானன் புத்தி என்னும் மந்திரியின் உதவியுடன் உண்மையை உணர்ந்த பின்பு ஒன்பது துவாரங்களின் வழியே மனம் செல்வது நின்றுவிடும்.



 
#2926 to #2930

#2926. பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

சீவனின் உலகில் இருந்து வெளிப்படும் சந்திர கலையினாலும், உடலின் உள்ளே புகுகுன்ற கதிரவக் கலையாலும் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் செயல்படத் தொடங்கும். உடலைச் செலுத்தும் பாகன் ஆகிய சீவன்; குண்டலினி சக்தி, சந்திரகலை, மற்றும் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி என்ற நான்கு கலைகளையும் நன்கு அறிந்து கொண்டு செயல் புரிந்தால் மேன்மை அடைவான். அன்றேல் சீவன் பன்றியைப் போல இழிந்த நிலையை அடைவான்.

#2927. தூசி மறவன் துணை வழி எய்துமின்!

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

சீவனின் சித்தம் என்ற நீர் நிலையில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்று ஆறு பகைவர்கள் பாசி போலப் படர்ந்துள்ளன. பாசத்தில் தளைப்பட்ட சீவன் என்னும் கொக்கு, அந்த நீர் நிலையில் நின்று கொண்டு, விஷய இன்பம் என்ற இரையைத் தேடி உண்கின்றது. ஆனால் ஒளி மயமான கொடியினை உடைய வீரன் சிவனின் துணை கிடைத்தவுடன், சீவனை இருளாகப் பீடித்து இருந்த பாசம் அழிந்து ஒழிந்து விடும்.

#2928. மணங்கொள்வன் ஈசனே.

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.


குடத்தைப் போல உள்ளது மனிதனின் சிரசு. அந்தத் தலை உடலின் மலை போன்றது. அந்த மலையில் மேல் நோக்கியுள்ள சகசிரதளம் என்ற கொம்பு ஒன்று உண்டு. சீவனின் உணர்வு என்னும் பிராணன் அந்த சகசிரதளத்தில் சென்று மோதும். அப்போது சிவானந்தம் என்னும் மலரில் சிவம் என்னும் வண்டு சென்று பொருந்தி நாதத்தை எழுப்பும். அந்த நாதம் சிவனைச் சீவனுடன் உறவு கொள்ளச் செய்யும். சீவனுடைய உணர்வு உலகியலில் இருந்து விலகி சகசிரதளத்தை நோக்கிச் சென்றால், ஈசன் தானே வெளிப்பட்டு அருள் புரிவான்!

#2929. வீணையும் தண்டும்

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.


வீணையின் இசையையும், குழலின் இசையையும் கலந்து ஒலிக்கச் செய்பவன் சிவன். அவன் சீவனைக் கேவல நிலையில் இருக்கும் கும்பகத்தை அடைவித்தான். சீவன் செய்கின்ற வாணிகம் எதுவென்றால் தன்னையே சிவனுக்கு கொடுப்பதும் அதற்கு மாற்றாக சிவனையே தான் கொள்வதுமாகும். எனவே சீவனின் உரிமை சிவனின் உரிமை ஆகிவிடும்!

#2930. ஆய்ந்து அறிவார் எவர்?

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே


சிவானந்தம் என்னும் திகட்டாத தேனை வாங்கியும், அதற்குப் பிரதியாகத் தன்னையே கொடுத்தும், சிவனுடன் சீவன் நிகழ்த்தும் வாணிபம் செய்யும் தன்மை அறிந்தவர் துரிய பூமியைச் சென்று அடைந்தவர் மட்டுமே. அனுபவத்தால் மட்டும் இது அறியப்படுவது அன்றி ஆராய்ச்சியால் அறியப்படுவது அன்று! திங்கள் மண்டலத்தை அடைந்தவர் அறிவர் ‘அறியாமை என்னும் இருளே சீவனின் உண்மையான வடிவம்’ என்னும் உண்மையை. அந்தத் திங்கள் மண்டலத்தில் தங்கி இருப்பவர்கள் உண்மையிலேயே இந்த பூமியைத் துறந்தவர் ஆவர்.




 
#2931 to #2935

#2931. போது புலர்ந்து பொன்னிறம் கொண்டது!

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே.


சீவனின் சகசிர தளத் தாமரை மலர் நன்கு விளக்கம் அடைந்தது. அது அழகிய பொன்னிறத்துடன் விளங்கியது. புன்னைப் பூவின் மகரந்தம் போன்ற அதன் அணுக்கள் இரு மருங்கிலும் ஒதுங்கி நின்றன. குற்றமற்ற சிவன் இயங்கிகின்ற இடம் இதுவே ஆகும். காதல் வயப்பட்ட சீவனும், அது காதலிக்கும் சிவனும் இணையுமிடம் இதுவே.

#2932. ஐந்து உண்ணலாம்!

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைதொறும்
மீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே.

ஆன்மாவுடன் பொருந்தியுள்ள தத்துவங்கள் தத்தம் விருப்பம் போலச் செயல்படும். சீவனின் உடலில் ஆசைத் தீயை மூட்டி விடும். சிவன் அவற்றை அச்சுறுத்தி அவற்றுக்கு வசப்படாமல் சீவன், அழிவற்ற இடத்துக்குச் செல்லும் வழியைக் காட்ட வேண்டும். அப்போது சீவன் தன்னைப் பிடித்திருக்கும் ஐந்து கோசங்களில் இருந்து விடுபட்டு அவற்றைக் கடந்து செய்ய முடியும்.

#2933. காட்டிக் கொடுத்தவர் கை விட்டவாறே!

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.


சாதனை செய்யும் பொழுது நிட்டை கைவராமல் போகலாம்! அல்லது எளிதாகக் கலைந்து போய்விடலாம். அதற்காகச் சீவன் மீண்டும் புறத்தே சென்று சரியை கிரியை முதலியற்றைச் செய்வதால் என்ன பயன் விளையும்? முதல்வனை முன்னிட்டு நிட்டை கூடுவதற்கு உபதேசம் செய்தவர் குருநாதர். ஆயினும் நிட்டையைச் சாதிப்பது மாணவனின் கடமை.

#2934. புலர்வதில்லை பொழுது!

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.


நாட்காலையில் கதிரவனின் ஒளி உண்டானதும் பறவைகள் சிலம்பும். அது போலவே, உடலில் ஞான ஒளி தோன்றியவுடன் சிவ தத்துவங்கள் என்னும் பறவைகள் ஓசை எழுப்பும். அந்த ஒளி தோன்றும் போது சிற்சக்தி சீவனின் தலையில் வந்து பொருந்துவாள். சிற்சக்தியுடன் சீவன் பரபோகத்தில் திளைத்துவிடும். எப்போதுமே ஒளியுடன் விளங்கும் சீவனுக்குப் பொழுது விடியல் என்று எதுவும் இராது.

#2935. ஆணி கலங்கில் சீவன் சிவமககும்!

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே.

சீவன் அறிவாகாயப் பெருவெளி என்னும் துறையைச் சென்று சேர வேண்டும்! இதற்கு உதவி செய்வது பிரணவம் என்னும் தோணி. அந்தப் பிரணவ ஒலி தோன்றாத வரையில் சீவன்; நான்முகன், திருமால். உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவரின் ஆளுமையில் அடங்கி இருக்கும். தன்னையே தந்து சிவனைப் பெற்றுக் கொள்ளும் வாணிபம் செய்வதற்கு அறிவு ஆகாய பெருவெளிக்குச் செல்லும் சீவன், தன் உடல் பற்றினைத் துறந்து விட்டால், அப்போதே சிவத்துடன் பொருந்தித் தானும் சிவம் ஆகிவிடலாம்.
 
18. மோன சமாதி

18. மோன சமாதி
சகச நிட்டை எனப்படும் இது சீவன் மௌனத்தில் ஒடுங்குவது ஆகும்.
சீவன் பிரணவ யோகத்தால் இந்த நிலையை அடைய முடியும்.



#2936 to #2941

#2936. மோன சமாதி

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.


நின்றார், இருந்தார், கிடந்தார் என்பதோ; ஆதனம், காலம், திக்கு என்பனவும் மோன சமாதி செய்கின்ற பிரணவ யோகிக்குக் கிடையாது. சித்தம் அடங்க நாதாந்த நிலையில் நிலைத்து இருப்பதே மோன சமாதி ஆகும். சீவனின் சென்னியின் மேலே உள்ள அறிவாகாயப் பெருவெளியில் சிவம் இருக்கின்றது. சீவன் நாத வழியில் சென்று நாதாந்தத்தை அடைய வேண்டும்.

#2937. குரு நந்தி கூட்டினால் யோகம் கைக்கூடும்

காட்டும் குறியும் கடந்த அக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்?
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.


காணப்படும் குறிகளையும், அடையாளங்களையும் தாண்டி நிற்பவன் சிவன். அந்தப் பெருமானைப் பற்றி நூல்களில் எழுதி வைப்பதால் மட்டும் என்ன பயன் விளையும்? சிவகுரு தன் அருள் காட்டி ஞானத்தை வழங்கினால் மட்டுமே சீவன் ஞானம் பெற முடியும். வெறும் எட்டுப் படிப்பு மட்டும் படிப்பது, ஆட்டின் கழுத்தில் இருக்கும் அதர் போலச் சிறிதும் பயனற்றது ஆகும்.

#2938. உணர்வுடையார் உணர்ந்து காண்பார்!

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.


சிவ உணர்வு நிரம்பியவர்களுக்குத் தாம் இருக்கும் இடத்தில் இருந்தே உலக நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். அவர்கள் எது நேர்ந்தாலும் கவலையோ, துன்பமோ அடைய மாட்டார்கள். சிவ உணர்வை நிரம்பப் பெற்ற குருநாதர் மாணவனுக்கு அதை உணர்த்த இருக்கும் போது, மாணவன் தானே தன் அனுபவத்தால் சிவத்தைக் காணும் பேறு பெறுவான்.

#2939. உறக்கமின்மை போகத்தில் உறங்குவான்

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.


மௌன யோகி தனக்கு இந்த உலகம் புலப்படாதவாறு அமைந்து இருப்பான். அவன் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய தேவை இல்லாதவன். பிறருக்கும் அருளும் வல்லமை படைத்தவன். அனைத்துச் சிறப்புகளும் பொருந்தியவன். சிவ சக்தியருடன் தானும் பொருந்தி இருப்பவன். அதனால் தன்னை நன்கு அறிந்து கொண்டவனாகவும், இந்த உலகை அறியாதவனாகவும் இருப்பான் ஒரு மௌன யோகி.

#2940. விரிவும் குவிவும் விழுங்கியும் உமிழ்ந்தும்

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே


துரியங்கள் மூன்று. அவை சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்பர். இந்த மூன்றையும் கடந்து விளங்கும் ஒரு பேரொளி. அரிதாகிய துரிய நிலைக்கு மேலேயுள்ள இந்த மூன்று நிலைகளிலும் சாதகன் பொருந்தியும், விரிந்தும், குவிந்தும், விழுங்கியும், உமிழ்ந்தும், சொற்களைக் கடந்த அற்புதமான அனுபவங்களைப் பெறுகின்றான்.

#2941. என் மனம் புகுந்த மருவிலி

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே.


சிவனின் தன்மைகள் என்ன என்று அறிவீர்களா? சிவன் மாயையின் காரியமாகிய உருவம் என்று ஒன்றும் இல்லாதவன்; சிவன் ஊனால் ஆகிய உடல் என்று ஒன்றும் இல்லாதவன்;சிவன் எந்தக் குற்றமோ, குறையோ இல்லாதவன்; சிவன் சக்தி தேவியையே தன் உடல் ஆகக் கொண்டவன்; சிவன் தீமைகள் எதுவும் செய்யாதவன்; சிவன் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன், ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் தலைவன் ஆனவன். தனக்கு ஒப்பர் என்று எவருமில்லாதவன்; பூதப் படைகளை உடையவன்; தான் எல்லாவற்றுக்கும் ஆதாராம் ஆகுபவன். ஆனால் தனக்கு என்று ஆதாரம் எதுவும் இல்லாதவன். இத்தனை பெருமைகள் வாய்ந்த சிவன் என் உள்ளத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்துள்ளான்.
 
Last edited:
#2942 to #2947

#2942. அண்டங் கடந்த அளவிலாத ஆனந்தம்

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே


தான் எடுத்துள்ள உடலில் உறைகின்ற சிவனைக் கண்டறிந்தவர் இல்லை. எட்டுத் திசைகளிலும் உள்ள மனிதர்கள், “எல்லா இடங்களும் உள்ளான் சிவன்!” என்று ஏத்தித் தொழுவர். அண்டங்களைக் கடந்ததும், அளவில்லாத ஆனந்தம் ஆனதும் ஆகிய சிவனந்தத்தைத் தொண்டர்கள் அனுபவிக்கும் முறையினை நாம் அறியோம்!


#2943. கற்பனை இன்றிக் கலந்து நின்றான்

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே
.


சிவன் ஒன்பது வித பேதங்களை உடைய தற்பரன் மட்டும் அல்ல. அவன் அருவுருவமான சதாசிவன் மட்டும் அல்ல. அவன் வெறும் அருவம் மட்டும் அல்ல. அவன் வெறும் உருவத்துடன் கூடியவன் மட்டுமல்லன். அற்புதம் போலத் தோன்றும் கற்பனையான காம இன்பத்தைப் போல் அல்லாமல், சிவன் சீவனின் ஆன்மாவில் உண்மையிலேயே பொருந்திப் பேரின்பத்தை அளிக்கின்றான்.


#2944. அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்


முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.


முகத்தில் பொருந்தியுள்ள புறக்கண்களால் புறவுலகில் உள்ள பொருட்களைக் கண்டு மகிழ்கின்றவர் முழு மூடர். அறிவுக் கண்ணைக் கொண்டு அக உணர்வை வளர்ப்பதே உண்மையில் சிவானந்தம் எனப்படும். மகள் தன் தாயிடம் அவள் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைக் கூறுமாறு கேட்டால் தாயினால் கூற முடியாது. அது போன்றே சிவானந்தத்தை அனுபவித்த குருநாதரிடம் மாணவன் அதைப் பற்றிக் கேட்டாலும் குருவினால் அதைக் குறித்துக் கூறமுடியாது! ஏனெனில் அந்த இன்பம் சொற்களுக்கு அப்பாற்பட்டது.


#2945. உப்பும் அப்பும் போலக் கலப்பர்!


அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.


உப்பை நீரில் இட்டுக் கரைத்தால், உப்பு நீருடன் இரண்டறக் கலந்து விடும். அது போலவே சிவன் சீவனுடன் பொருந்தும் பொழுது அதனுடன் இரண்டறக் கலந்து விடுவான். பரன் என்னும் சீவனும் பராபரம் என்னும் சிவனும் இருவேறு பொருட்களாக இருக்க மாட்டார். ‘தத் த்வம் அசி’ என்ற மகாவாக்கியத்தில் ‘அசி’ பதம் அழிந்தவுடன், ‘தத்’என்ற சிவன் ‘த்வம்’ என்ற சீவனைத் தன்னைப் போன்ற உயர்ந்த பொருளாக மாற்றி விடும்.


#2946. கண்டார்க்கு அழகு காஞ்சிரத்தின் பழம்


கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.


காண்பதற்கு எட்டிப்பழம் மிகவும் அழகாக இருக்கும்! ஆனால் அது தின்பருக்குக் கசப்பைத் தரும். உலக வாழ்வும் அது போலவே காண்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும், அனுபவித்தவருக்குக் கசப்பை அளிப்பதாகவும் இருக்கும். ஓர் இளம் பெண் வயதால் பக்குவம் அடைந்து மடந்தை ஆகிறாள். அது போன்றே உலக வாழ்வில் கசப்புற்ற சீவன் பக்குவம் அடைந்தவுடன், சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்பான். சீவனும் சிவன் தரும் சிவானந்தத்தில் இன்பம் பெறும்.

#2947. உந்தியினுள்ளே உதித்தெழும் சோதி


நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.


தத்துவக் கூட்டங்களின் நடுவே இருந்த சீவனிடம் சிவன் விளக்கம் பெற்றுத் திகழ்ந்தான். அவன் நன்கு விளக்கம் பெற்று விட்டதால் அவனை அடைவதற்குச் செய்கின்ற சமாதிப் பயிற்சி தேவை அற்றது ஆனது. ஒளிர்கின்ற சிவக் கதிரவன் என் உந்தியில் உள்ள மணிபூரகத்தில் இருந்து உதித்து மேலே எழுந்தான். எந்தன் புத்தியினால் நான் அவனைப் புணர்ந்து நின்றேன்.


 

Latest ads

Back
Top