படி மாவு தானம்.
பாரதப் போர் முடிந்த பின்னர்,
பார் புகழும் அசுவமேத யாகம்
நிகழ்த்தினான், பாண்டவர்களுள்
நிகரற்ற அரசருக்கு அரசன் தருமன்.
“இது போன்ற யாகத்தை யாருமே
இதுவரை கண்டதில்லை”, என்று
ஒருவர் விடாமல் புகழும் போது,
ஒரு சிரிப்பொலி கேட்டது அங்கே!
பாதி உடல் ஸ்வர்ணமயமான,
கீரிப் பிள்ளையே அங்கே சிரித்தது!
என்ன ஏது என்று அனைவருமே
பின் வாங்கித் திகைத்து நிற்கையில்,
“இதுவெல்லாம் ஒரு யாகம் என
இவ்வளவு புகழ்கின்றீர்களே!
ஒரு படி மாவு தானத்துக்கு
சரி சமமாகுமோ இந்த யாகம்?
ஊஞ்ச விருத்தி அந்தணர் ஒருவர்,
ஊரில் வாழ்ந்து வந்தார், தன்னுடைய
மனைவி, மகன், மருமகளுடன்,
மனத்தை உருக்கும் எளிய வாழ்க்கை.
பொறுக்கி வந்த தானியங்களைப்
பொடி செய்து நான்கு பங்காக்கி,
ஆறாவது காலத்தில் செய்வார்கள்,
ஒரு வேளை போஜனம் மட்டுமே.
ஒன்றும் கிடைக்காத நாட்களில்,
மறுநாள் வரை உபவாசம்தான்.
ஒரு நாள் ஒரு படி மாவைப் பங்கிட்டு,
ஒரு பொழுது உண்ண அமர்கையில்,
வந்தார் ஏழை அந்தணர் ஒருவர்,
வாடிய முகத்துடன், பசியுடனும்;
தன் பங்கை மனமுவந்து அவருக்குத்
தந்தார் ஊஞ்ச விருத்தி அந்தணர்.
பசி தீராததனால், பின்னர் அவர்தம்
பத்தினியும், மகனும், மருமகளும்,
தத்தம் பங்கு மாவையும் உவந்து
தத்தம் செய்ய, அவர் பசி தீர்ந்தது.
எந்தச் சிறந்த அசுவமேத யாகமும்,
எந்தச் சிறந்த ராஜ சூய யாகமும்,
ஈடு இல்லையே இந்த தானத்துக்கு!
பூமாரி பொழிந்தது, உடனே அங்கே!
சிதறிய மாவில் புரண்டதால், நான்
சிறந்த பொன்னிறம் அடைந்தேன்!
மறு பாதியையும் பொன்னிறமாக்க,
மாறி மாறி அலைகின்றேன் நான்!
பொன்னிறம் அடையவில்லை, என்
பொன்னுடலின் மறு பாதி, இங்கே!”
சொல்லி விட்டு விரைந்து மறைந்தது,
வில்லில் இருந்து விடுபட்ட அம்பெனவே!
தானம் என்பது பொருட்கள் அல்ல;
தானம் என்பது நம் மனோ பாவமே.
உவந்து அளிக்கும் கரியும், வைரமே!
கசந்து அளிக்கும் வைரமும், கரியே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.