1#20c. மூன்று மகன்கள்
அம்பிகா, அம்பாலிகா மணந்து கொண்டனர்
அரசன் விசித்திர வீர்யனை விதி முறைப்படி.
அனுபவித்தனர் காம சுகத்தை ஆசை தீரும்படி,
ஆண்டுகள் ஒன்பது தம் நாட்டிலும், காட்டிலும்.
மரணம் அடைந்தான் மன்னன் க்ஷயரோகத்தில்.
சரணம் அடைந்தாள் சத்தியவதி காங்கேயனிடம்.
“மணந்து கொள்வாய் உன் தம்பியர் மனைவியரை.
மாறுவாய் மண்ணாள அரசனாக!” வற்புறுத்தினாள்.
பிரதிக்ஞையை நினைவூட்டினான் காங்கேயன்;
“பிறழ மாட்டேன் அதிலிருந்து!:” என்றான் தாயிடம்.
“நல்ல அந்தணனுடன் உறவாடச் செய்து அரசுக்கு
நல்ல வாரிசுகளை உற்பத்தி செய்யலாம்” என்றான்.
புத்திரர் வியாசரை நினைவு கூர்ந்தாள் அவள்.
சத்தியவதியின் முன் தோற்றினார் வியாசர்.
“விசித்திர வீர்யனின் மனைவியரோடு உறவாடி
வீரியத்துக்குத் தகுந்த மக்களை உருவாகுவாய்!”
அம்பிகையுடன் கூடி உறவாடினார் வியாசர்.
அந்தகனான ஒரு மகன் பிறந்தான் அவளுக்கு
அச்சத்தில் கண்களை இறுக மூடிக் கொண்ட
அம்பிகை ஈன்றாள் குருடனான ஒரு மகனை.
அம்பாலிகையுடன் உறவாடினார் வியாசர்;
வெண் குஷ்டத்தோடு பிறந்தான் ஒரு மகன்.
அச்சத்தினால் நிறம் வெளுத்துப் போனதால்
அம்பாலிகை ஈன்றாள் வெண்குஷ்ட மகனை.
தாதியுடன் கூடினார் வியாசர் – அரசி தன்
தாதியை தனக்குப் பதிலாக அனுப்பியதால்.
இன்பமாகக் கூடினாள் தாதி வியாசருடன்
இனிய மகன் விதுரன் பிறந்தான் அவளுக்கு
தோன்றினர் மூன்று மகன்கள் வியாசருக்கு
திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் என.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
https://devibhaagavatam.wordpress.com/