மனித வாழ்வு!
இறைவன் படைப்பு விசித்திரமாய் உண்டு!
இதோ ஒரு கதை சொல்லுகின்றேன் நன்கு!
படைப்புத் தொழில் தொடங்கிய இறைவன்,
படைத்தான் நல்ல பசு மாட்டை; அதனிடம்,
'உயர்வான நிலையில் போற்றப் படுவாய்;
துயர் இருக்கும் ஆனாலும், உன் வாழ்வில்!
உணவாகப் பால் கொடுத்து, சுற்றத்தோரை
கனிவோடு காப்பாய்; உன் ஆயுள் அறுபது!'
'அறுபது ஆண்டுகள் செய்யேன் இப்பணி;
இருபது போதும்; மீதியைத் தருகின்றேன்!'
என்று சொல்லிய பசு, அப்படியே செய்தது!
நன்று என்ற இறைவனின் அடுத்த படைப்பு,
துள்ளித் திரியும் குரங்கு. அதனிடம் இறை,
'துள்ளித் திரிந்து வேடிக்கை காட்டி, நீயும்
சுற்றி உள்ளோரை மகிழ வைப்பாய்! நான்
சற்று யோசித்துத் தருகிறேன், உன் ஆயுள்
இருபது ஆண்டுகள் ஆகும்!' என்று உரைக்க,
'இருபது ஆண்டுகள் இது போல முடியாது!
பத்து ஆண்டுகளே போதும் எனக்கு!', என்று
பத்து ஆண்டுகள் ஆயுளைப் பெற, அடுத்தது,
காவல் பணி செய்யும் நாயைப் படைத்தான்!
'காவல் பணியை நீ செய்வாய்; வெளி ஆள்
எவர் வந்தாலும், குரைத்து விரட்டிடுவாய்!
தவறாது பெறுவாய், முப்பதாண்டு ஆயுள்!'
இப்படி இறைவன் சொல்ல, பயந்துபோனது!
'எப்படி அத்தனை ஆண்டுகளும் இருப்பேன்?
பத்து ஆண்டுகள் திருப்பி எடுங்கள்; நானும்
காத்து வருவேன், இருபது ஆண்டுகள்', என
இறைவன் சிரித்து, அவ்வாறே அருளிய பின்,
நிறைவான மனிதனைப் படைத்துவிட்டான்!
'மதி நுட்பம் உள்ள உனக்கு ஆனந்த வாழ்வே!
விதி வசத்தால், வாழ்வு இருபது ஆண்டுகளே!'
என்று உரைக்க, நொந்துபோன மனத்துடன்,
'நன்று சொன்னாய், இறைவா! இந்த வாழ்வு
எனக்குப் போதாது! மற்ற மூன்றும் தந்ததை,
எனக்குச் சேர்த்துவிடுவாயா?', என மனிதன்
கெஞ்ச, 'அவ்வாறே ஆகட்டும்!', என்ற அவன்,
கொஞ்சம் சிரித்தான்; மனிதனும் வியந்தான்!
அதன் பின் புரிந்துவிட்டது, சிரிப்பின் பொருள்!
இவன் வாழ்வில், முதல் இருபது ஆண்டுகளே
ஆனந்தம்; கொண்டாட்டம்; பின் திண்டாட்டம்!
ஆலாய்ப் பறந்து, திரிந்து, நாற்பது ஆண்டுகள்,
பேணினான், தன் குடும்பம் உண்டு மகிழ; பின்
பேணினான், பேரக் குழந்தைகளை, குரங்காக
மாறிக் குதித்து, அவர்களை மகிழ்வித்து! பின்
ஏறி வாசலில் அமர்ந்துகொண்டு, நாய்போல,
குரைத்துக் கொண்டே, வாழ்வைக் கழித்தான்;
இறைவனின் திருவிளையாடலை அறிந்தான்!
:angel: . . . :decision: