இதுதான் காதலா?
உயிரியல் பூங்காவுக்குச் சென்றால், காணலாம்
உயிரினும் மேலாகக் காதலிக்கும் ஜோடிகளை!
எத்தனை வகைகளில் திரிகின்றனர், அவர்கள்!
எத்தனை பள்ளி செல்லும் பதின் பருவத்தினர்!
குடும்பத்தோடு வந்தவர் மிகச் சிலர்; பள்ளியில்
குடும்ப உறுப்பினர் போலக் கூடும் குழந்தைகள்
வரிசைகளில் அழகாக வந்திட, கூட்டமாக வந்து
வரிசைப் பற்கள் தெரிய, அட்டகாசச் சிரிப்போடு
சுற்றிய கல்லூரிப் பெண்கள்; அவர்களின் பின்னே
சுற்றிய இளவட்டப் பையன்கள் என்று பல் வேறு
விதமான உலகப் பிரஜைகள் கண்களில் பட்டனர்.
விதவிதமான காதல் ஜோடிகள் மிகவும் அதிகம்!
கொள்ளைப் பூவைத் தலையிலே சூட்டி மகிழ்ந்து,
கள்ளப் பார்வையுடன் காதலனின் கை கோர்த்து,
மெல்ல உலா வரும் பதின் பருவத்தினர்; கல்லூரி
செல்ல விருப்பம் இன்றி, ஏதோ காரணம் சொல்லி
விடுப்பு எடுத்து, காதலன் தோளின் மேல் சாய்ந்து,
அடுத்தடுத்துக் கடி ஜோக்குகள் சொல்லிச் சிரித்து,
நேரம் 'கொல்ல' வருகிற இளம் ஜோடிகள்; காதல்
நேரம் போதவே இல்லை என்பதுபோல, கழுத்தில்
புதிய மஞ்சள் கயிறு தெரிய, பளபளக்கும் பலவிதப்
புதிய நகைகள் கழுத்திலும், காதிலும் மின்ன, தன்
சீர் வரிசையிலே கிடைத்த மைனர் செயினை, நம்
பார்வையில் படுமாறு காட்டிச் செல்லுகிற துணை
நெருங்கி வருவதால், நாணச் சிரிப்புடன், அவனை
நெருக்கமாக அணைத்து நடக்கும் சில ஜோடிகள்!
படிக்கும் பருவத்தில் காதல் வலையிலே விழுந்து,
படிப்பை விணாகச் செய்து, தம் காதல் தோற்றால்,
அம்பிகாபதி - அமராவதி ஜோடி போலப் பாவித்து,
நம்பிய பெற்றோரையும் ஏமாற்றி, உயிர் துறந்து,
வாழ்வைக் கெடுத்துக்கொள்ளும் இதுதான் காதலா?
வாழும் நல் வழிகளை இளைஞர் கற்பது எப்போது?
:noidea: