[h=2]
மரணம் இல்லாப் பெருவாழ்வு[/h]
எழுதியவர் திருமதி உமா பாலசுப்பிரமணியன்
'ஷண்முக கவசம்' ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்தது.
மாகத்தை முட்டி வரும் நெடுங்கூற்றன் என் முன்னே வந்தால்
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் சுத்த நித்த முத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரி புராந்தகனைத் த்ரியம்பகனை
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே - [ கந்தர் அலங்காரம்- 80]
உடலினின்றும் உயிர் பிரியும் அந்த நிலையை 'மரணம்' என்று கூறுகிறோம். உலகத்தில் வாழும் எல்லா உயிர்களும் ஒரு காலத்தில் மரணமடைவது உறுதி. அந்த உடலிலிருந்து உயிரைத் தனியாகப் பிரித்து, உயிர் வேறு, உடலம் வேறு என்று செய்யும் செயலில் ஒருவன் ஈடுபட்டிருக்கிறான். அவனை நாம் எமன் என உருவகப் படுத்தி இருக்கிறோம். அவனுக்குப் பல பெயர்கள் இருப்பினும், கூற்றுவன் எனக் கூறுவது மிக்கப் பொருத்தமாக இருக்கும். உலகில் வாழும் ஒருவரின் உடலையும், உயிரையும் கூறு போட்டுத் தனித் தனியே பிரித்து எடுத்து விடுகிறான்.
உலகில் நாம் இளமையாக இருக்கும்பொழுது, பிற்காலத்தில் நம் ஆவிக்கு மோசம் வரும் என்று எண்ணாது, முருகனின் அருள் பதங்களைச் சேவியாது, அடியார் கூட்டத்தில் சேர்ந்து அவன் நாமங்களைச் சொல்லாது மாயையினால் ஆசை மிகுந்து, பல வகையான தகாத செயல்களைப் புரிந்து, வினைகளை மிகுதிப் படுத்திக் கொள்கிறோம். அதனால் ஏற்படுவது பிணி.
"உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எனை உன்னில் ஒன்றா
விதித்து ஆண்டு அருள்தரும் காலமுண்டோ? வெற்பு நட்டு உரக --
பதி தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டு உழல
மதித்தான் திருமருகா மயில் ஏறிய மாணிக்கமே!"
(கந்தர் அலங்காரம் -39)
முருகனின் அருள் பெற்ற அருணகிரிநாதர் அங்கலாய்க்கிறார் ---
மந்தர மலையை மத்தாக நட்டு, பாம்பரசனாகிய வாசுகி என்னும் கயிற்றை இழுத்து நின்று, ஆகாசம் பம்பரம் போன்ற நிலையை அடைந்து சுழலப் பாற்கடலைக் கடைந்த திருமாலின் அழகிய மருகனே! உலகத்தில் மீண்டும் மீண்டும் தோன்றுவதையும், மறைவதையும் தீர்த்து என்னை உனக்குள் ஒருவனாக நினைத்து ஆண்டு கொண்டு, அருள் செய்யும் காலம் எப்போது உண்டாகும்? ம்யில் மேல் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போன்றவனே!
அங்ஙனம் நாம் உலகத்தில் உதித்து உழலாமல் இருக்க வேண்டுமென்றால் நமக்குத் துணை இறைவன்தான் என நம்பி, அவனுடைய புகழை நாளும் ஓத வேண்டும்.அப்படி ஓதினால் தானே நல்ல தன்மைகளும், நன்மைகளும் அமைந்துவிடும்.
'மரணப் ப்ரமாதம் நமக்கு இல்லையாம்' என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் கூறுகிறார். தமிழில் ப்ரமாதம் என்று ஒருவர் கூறினால் சிறப்பாக இருக்கிறது என்று பொருள்படும். இந்த பாட்டு ப்ரமாதமாக இருக்கிறது என்றால் சிறந்த முறையில் இருக்கிறது என்று பொருள். ஆனால் இந்தப் பொருளில் அருணகிரிநாதர் கூறியிருக்க முடியாது. சமஸ்கிருதத்தில் ப்ரமாதம் என்றால் தவறு என்ற பொருளில் வரும். மரணம் என்ற அந்த பயம் (தவறு) நமக்கு இல்லை என்ற அர்த்தத்தில் கூறுகிறார். ஏன்? ஏனென்றால் வாய்த்த கிரணக்கலாபியும், வேலும் உண்டே, அது நம்மைக் காக்கும் என்கிறார். கிண்கிணி முகுள சரணத்தை உடையவன், இந்திரன் மனைவியான மங்கல்யதந்து ரக்ஷாபரணனாக இருந்தான். சசிதேவி கழுத்தில் கட்டிய நூல் அறுபடாமல் இருக்க வேண்டுமென்று தன் கையில் கங்கணம் கட்டிக்கொண்டான் என்ற பொருள் தொனிக்க
மரணப் ப்ரமாதம் நமக்கு இல்லையாம், என்று வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலும் உண்டே! கிண்கிணி முகுள
சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா
பரண க்ருபாகர! ஞானாகர! சுர பாஸ்கரனே! (கந் அல -22)
இதே பொருளில் மற்றொரு திருப்புகழ் பாடலில்
................................. வெள்ளி மலையெனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டும்
நூல் வாங்கி டாதுஅன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு
நெஞ்சே! என்று கூறுவதையும் நோக்க வேண்டும்.
சசியின் தாலி காத்தவன் நமக்கும் வேலி போல் இருந்து யமன் வரும் பொழுது நம்மைக் காப்பான்.
இறைவன் திருவருளைப் பெற்ற பெரியவர்கள் இறக்கின்றனர். மற்றவர்களும் இறக்கின்றனர். அவரவர்க்கு அமைந்த காலத்தில் உயிர் உடலினின்றும் பிரிவது உறுதியாயினும் , இரண்டு வகையினர் திறத்திலும் உடம்பை விட்டு உயிர் பிரிவதில் வேறுபாடு ஒன்றுமில்லை.ஆனால் எந்த இடத்திற்குப் போகிறது என்பதில்தான் வேறுபாடு உள்ளது. இறைவன் திருவருளைப் பெற்ற பெரியோர்கள் இறைவன் திருவடியாகிய பேரின்ப வீட்டை அடைகிறார்கள். மற்றவர்கள் சொர்க்க நரக வாழ்வைப் பெற்று மீண்டும் பிறக்கிறார்கள். பிறவி எனும் சிறையினின்றும் விடுபட்டு பேரின்ப வீட்டை அடைபவர்கள் அருளாளர்கள். ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்குப் போகும் நிலையில் மற்றவர்கள் உள்ளனர். இரு தரத்தினரும் சிறையினின்று விடுபட்டாலும் சென்று சேரும் இடத்தினால் வேறாக இருக்கிறார்கள். அருளாளர்கள் மரணம் அடையாது பரிபூரணம் அடைகிறார்கள். அதனால் மற்றவர்கள் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ , இறைவன் தியானத்தில் மனத்தைச் செலுத்தி அவனை நினைவுறுத்தும் செயல்களில் ஈடுபடுதல் நலமாகும். அருணகிரிநாதரும்
சாகாது எனையே சரணங்களிலே கா கா -- என முருகனிடம் கந்தர் அனுபூதியில் முறையிட்டிருக்கிறார்
சரி நரகத்தில் சென்று என்ன என்ன அனுபவிக்க வேண்டும் என்று யாருக்குத் தெரியும்?
அருணகிரிநாதர் அனேக திருப்புகழில் நரகத்தைப் பற்றிச் சொன்னாலும் , ஒரு திருப்புகழினூடே என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம் ---
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச்சையொழித் ததவச் சரியைக் க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படுச்செய்ப் பதியிற் பரமக் குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புறவெற் புறைசற் குமரப் பெருமாளே.
சொற் பிரிவு
புவனத்து ஒரு பொற் தொடி சிற்று உதரக்
கருவில் பவம் உற்று விதிப்படியில்
புணர் துக்க சுகப் பயில் உற்று மரித்திடில்
ஆவி புரிஅட்டகம் இட்டு அது கட்டி இறுக்கு
அடி குத்து என அச்சம் விளைத்து அலற
புரள் வித்து வருத்தி மணல் சொரிவித்து அனல் ஊடே
தவனப் படவிட்டு உயிர் செக்கில் அரைத்து
அணி பற்கள் உதிர்த்து எரிப்பு உருவைத்
தழுவப் பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து
அயில்வித்து முரித்து நெரித்து உளையத்
தளை இட்டு வருத்தும் யம ப்ரகரத் துயர் தீராய்
பவனத்தை ஒடுக்கும் மனக் கவலைப்
ப்ரமை அற்று ஐ வகைப் புலனில் கடிதில்
படர் இச்சை ஒழித்த தவச் சரியை க்ரியை யோகர்
பரி பக்குவர் நிட்டை நிவிர்த்தியினில்
பரி சுத்தர் விரத்தர் கருத்ததனில்
பரவப் படு செய்ப்பதியில் பரமக் குருநாதா
சிவன் உத்தமன் நித்த உருத்திரன்
முக்கணன் நக்கன் மழுக்கரன் உக்ர ரணத்
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற் குணன் நிற்குணன் ஆதி
செக வித்தன் நிசப்பொருள் சிற்பரன்
அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தடத்
த்ரிசிரப் புர வெற்புறை சற் குமரப் பெருமாளே.
பதவுரை
புவனத்து ஒரு பொன் தொடி = இப்புவியில் ஒரு அழகிய மாதின்
சிற்று உதரக் கருவில் பவம் அற்று = சிறு வயிற்றின் கருப்பையில் உருவெடுத்து [பத்து மாதம் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து]
விதிப் படியில் புணர் துக்க சுகப் பயில் உற்று மரித்திடில் = முன் செய்த கருமங்களின் வினையே இறைவன் ஆணையால் விதியாக வந்து தருகின்ற துன்ப இன்பங்களை
நுகர்ந்து ப்ராப்த வினை முடிந்த பின் இறந்து
ஆவி புரி அட்டகம் இட்டு = உடலில் இருந்து பிரிந்த ஆவியை சூக்கும சரீரத்தில் புகுத்தி (ஐந்து தன் மாத்திரைகள் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டு தத்துவங்கள்
கூடியது புரி அட்டகம்.
அது கட்டி = அந்த சூக்கும உடலை யம தூதர்கள் பாசக் கயிற்றால் கட்டி,
இறுக்கு அடி குத்து என அச்சம் விளைத்து = அழுத்திக்கட்டு, அடி, குத்து என பயத்தை விளைவிக்கும் சொற்களைக் கூறி (செய்த பாவங்களைக் கூறி வசவு சொற்களைப் பேசுவார்கள் - மயலது பொலாத வம்பன் வரகுடையனாகும் என்று வசைகளுடனே தொடர்வார்கள். - திருப்புகழ்- வருபவர்கள்
அலற புரள் வித்து = அழ அழ புரட்டி எடுத்து,
வருத்தி = துன்பத்தைக் கொடுத்து,
மணற் சொரிவித்து = ஊரார் கோயில் சொத்தை திருடியவர்கள் வாயில் சுடு மணலை போட்டு
(தமியேற் சொம் கூசாது பறித்த துட்டர்கள், தேவர்கள் சொங்கள் கவர்ந்த துட்டர்கள் வாதை எமன் வருத்திடு குழி விழுவாரே-- திருப்புகழ் -- தோழமை)
அனல் ஊடே தவனப் பட விட்டு = சூலத்தில் குத்தி நெருப்பில் காய்ச்சி தாகம் எடுக்கும்படி சூடேற்றி,
உயிர் செக்கில் அரைத்து = சூக்கும உடலை செக்கில் எள் அரைப்பது போல் அரைத்து
அணி பற்கள் உதிர்த்து = ஆடு மாடுகளைக் கொன்று அவற்றின் எலும்புகளை கடித்துச் சாப்பிட்ட பற்களை உலக்கையால் இடித்துக் கீழே விழச் செய்து,
எரி செப்பு உருவைத் தழுவப் பணி = அயலாளைப் புணர்ந்த பாவத்திற்காக அந்த உருவத்தைச் செம்பில் செய்து காய்ச்சி அதை அணைக்கச் செய்து
முட்களில் கட்டி இசித்திட = முள் புதர்களில் உருளச் செய்து
வாய் கண் சலனப்பட எற்றி = பொய் சாட்சி சொன்ன வாயையும், அயலான் மனைவியை கெட்ட நோக்கத்தோடு பார்த்த கண்களையும் கலங்கும்படி மோதி,
இறைச்சி அறுத்து அயில்வித்து = மற்ற உயிர்களின் உடலை உண்ட பாவத்திற்காக தன்னுடைய தேகத்தையே அறுத்து உண்ணச் செய்து,
முறித்து நெரித்து உளைய = எலும்பை முறித்து நொருக்கி வேதனை அடையும்படி செய்து,
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் = விலங்கு பூட்டி துன்பம் கொடுக்கும் எம தண்டனையாகிய துன்பத்தை நீக்கி அருள வேண்டும்.
பவனத்தை ஒடுக்கும் மனக்கவலைப் ப்ரமை அற்று = ஹட யோக வழியில் ப்ராணாயாமம் செய்து மூச்சை உள்ளே இழுத்து அடக்கி அதனால் பலன் காணாமல் பிறகு மருட்சியும் கவலையும் அடைவதை நீக்கி (கவலைப்படும் யோகக் கற்பனை - திருப்புகழ் - கறைபடும்)
ஐ வகை புலனில் = சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை எனும் ஐந்து வகையான புலன்களில்,
கடிதில் படர் இச்சை ஒழித்த தவச் சரியை க்ரியை யோகர் = வேகமாகப் பற்றும் ஆசையை நீக்கி தவம் நிறைந்த புற வழிபாடு, அக வழிபாடு, வழிபடும் தெய்வத்துடன் ஒன்றுபடச் செய்யும் வழிகளில் முயற்சித்தல் செய்யும் யோகியர்
பரிபக்குவர் = ஞான முயற்சியினால் எங்கும் பரம் பொருளைக் காண்பவர்,
நிட்டைநிவிர்த்தியினில் பரிசுத்தர் = ஏக சித்த தியானத்தில் ஓவியம் போல் சமாதியில் நிலைத்து உலக விவகாரங்களில் இருந்து கழன்று நிற்கும் சுத்த ஞானிகள்,
விரத்தர் கருத்ததனில் பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா = பந்த பாசங்களை விலக்கியோர் ஆகியோரின் உள்ளத்தில் வைத்துப் போற்றப் படுகின்ற குருநாதனே (அல்லது)
செய்ப் பதியில் பரம குருநாதா = வயலூரில் விளங்கும் சிவகுருநாதன்
சிவன் உத்தமன் = மேலான சிவன்
நித்தன் ருத்திரன் முக்கணன் நக்கன் மழுக்கரன் = அழிவில்லாத ருத்ர மூர்த்தி, த்ரியம்பகன், திகம்பரன், மழுவைப் பிடித்திருப்பவன்,
உக்ர ரணத் த்ரிபுரத்தை எரித்தருள் சிற்குணன் = உக்ரமாகப் போர் செய்து திரிபுரத்தை (மும்மலத்தை) எரித்த ஞான குணத்தன்,
நிற்குணன் ஆதி = ஸ்படிகம் போல் எந்த குணத்தையும் சாராத ஆதி மூர்த்தி,
செக வித்தன் = உலகு உண்டாவதற்கு வித்தானவன்
நிசப் பொருள் சிற்பரன் = ஒரே மெய்ப்பொருள், அறிவிற்கு எட்டாதவன்,
அற்புதன் ஒப்பிலி உற்பவ = அற்புதமான மேனியர், (ஆச்சரியமான திருவிளையாடல்களைப் புரிபவர்) சமானமற்றவனாகிய ஈசனிடத்தில் இருந்து ( தனக்குவமை இல்லாதவனிடமிருந்து) தோன்றியவனே,
பத்ம தடத் த்ரிசிரப்புர வெற்பு உறை சற் குமரப் பெருமாளே = தாமரைத் தடாகம் நிறைந்த சிராமலை மேல் வீற்றிருக்கும் மேன்மை மிக்க குமாரப் பெருமாளே.
இறைவனை வழிபடுவதற்காக அமைந்த இந்த சரீரத்தை உபயோகப் படுத்தியும் முருகா எனும் நாமங்களைச் சொல்லியும் அவன் அருளைப் பெற்று நரகமா? அல்லது மரணமில்லாப் பெருவாழ்வா? எனச் சிந்தித்துச் செயல்பட்டு, இவ்வுலகத்தில் இயங்குவோமாக! அதற்கு முருகன் துணை செய்யட்டும்.