திருமலையில் ஒரு சிறப்பு தரிசனம்!
இறையருளும் குருவருளும் கூடியதால் வந்தமைந்த
நிறைவான எங்கள் சுற்றத்தார் வீட்டுத் திருமணம்.
திருப்பதியில் நடப்பதால் எங்களில் ஒரு சிலர் மட்டும்
திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் உதவியுடன்,
விரும்பும் குல தெய்வத்தைத் தரிசிக்க ஏற்பாடு நடக்க,
'கரும்பு தின்னக் கூலியா?' என விரைந்தோம் மனம் துடிக்க!
'நீராட நேரமில்லையே! காலைக் குளியலே போதுமே!' என
வாதாடும் மனத்துடன் உடன்பாடு செய்து கொண்டு,
பேருந்துப் பயணம் குலுக்கியும், அலுங்காதிருந்த உடையிலே
சீருந்தில் ஏறினோம் ஏழுமலையானைக் கண்டு களிக்க!
அம்புபோலப் பறந்தது வண்டி; மாலை ஆறுமணிக்குத் திருமலை.
தெம்பு தரும் A C அறையில் கொஞ்சம் ஓய்வு மிகவும் திருப்தி!
சுத்தமான அந்த அறையில் உடனிருந்த குளியலறை;
சத்தம் போடாமல் சிலர் உறங்க, மற்றவர் அமர்ந்திருக்க,
மேலை நாட்டு வகையில் அமைந்த அதிவேகச் சுடுநீரில்,
காலை நன்கு காட்டியதும், பறந்தது பயணக் களைப்பு!
சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு மன மகிழ்ச்சி பொங்க,
பெருமானைக் காண ஆவலுடன் புறப்பட்டோம் அனைவரும்.
கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓய்வு, என்று படிப் படியாக,
நெஞ்சம் கவர் வேங்கடத்தான் திசை நோக்கி நடந்தோம்.
பொற்கூரை கண்டதும், மலையப்பன் நெஞ்சில் நிழலாட,
சொற்கள் தேட முடியுமா அவன்தன் புகழ் பாட?
இரண்டு மணி நேரம் மெதுவாக நகர்ந்து, நகர்ந்து சென்று,
திரண்டு வரும் கூட்டம் குறையச் சன்னதி அருகே நின்றோம்!
எத்தனை அழகு மிளிரும் சங்கு போன்ற வடிவ 'கிரில்'கள்!
இத்தனை நாட்கள் கண்களில் படாதிருந்த வடிவங்கள்!
'தயவு செய்து உள்ளே வாருங்கள்' என அழைப்பால் மகிழ,
தயை புரியும் ஐயனைக் காண விரைந்தோம், மனம் நெகிழ!
அடிமேல் அடி வைத்து, வைகுண்ட வாசல் உள்ளே செல்ல,
வடிவழகாய் மேற்புறம் உள்ளன தசாவதார உருவங்கள்!
மேற்புறம் நோக்கினால், பத்துத் தங்கத் திருமேனிகள்;
உட்புறம் நோக்கினால், வேங்கடத்தானின் திருமேனி!
தங்க மயமாய் எல்லாம் ஒளி வெள்ளத்தால் தகதகக்க,
பொங்கி வரும் பரவசத்தால் உள்ளமெலாம் படபடக்க,
இன்றுவரை கேட்காத PLEASE MADAM என்ற சொற்கள்,
இன்று ஒருபோல எல்லாப் பணியாளரும் உரைக்க,
'கலி நாளுக்கிரங்கிக் கல்லிலே இறங்கி' அருள் தர நிற்கும்
கலி தீர்க்கும் பெருமானின் அருகில் மெதுவாகச் சென்றோம்!
காலில் கஞ்சி கொட்டியதுபோல் விரட்டப்படும் நாட்களில்,
நேரில் நிற்கும் கணப் பொழுதில் என்னதான் காண முடியும்?
திருமேனி முழுதும் கண்டு மகிழ மனம் விழையும்;
திரு முகம் தாண்டிக் கண்கள் கீழே செல்ல மறுக்கும்!
கன்னக் கதுப்புகள் அருகில் கண்டதும் வேறு எந்த
எண்ணம் ஏதுமில்லாது மனம் அதில் லயித்தது.
அருமையான வண்ண மாலைகளில் அவன் ஒளிர்ந்தாலும்,
கருமையான திருமேனியே மிக உயர்வாகத் தெரிந்தது!
கிடைத்த அந்த அரிய வாய்ப்பைக் கொஞ்சமும் நழுவ விடாது,
கிடைத்த மணித் துளிகளில் முழு அழகு கண்டோம் விடாது!
மனம் நிறையத் திருமலையான் தரிசனம் கிடைத்தது.
மனம் முழுதும் அவனின் திரு உருவமும் பதிந்தது!
வெளிப் பிரகாரத்தில் சிறியதாக அமைந்த ஒரு சன்னதியில்
ஒளி நிறைந்த முகத்தினனாம் மணி வண்ணனை ஈன்றவள்!
பிரகாரம் சுற்றி வந்ததும், ஒரு மண்டபத்தில் அமர்த்தி,
பிரசாதம் எமக்குத் தர வேண்டிப் பண்டிதர்கள் நின்றார்கள்!
எதிர் நிற்கின்ற பண்டிதர் வேத கோஷ ஆசீர்வாதத்துடன்,
எதிர்பாரா நிகழ்வாகப் பொன்னாடைகள் போர்த்திவிட,
ஒவ்வொருவருக்கும் அபிஷேக தீர்த்தமும், சந்தனமும்,
வெவ்வேறு பைகளில் பத்து 'சீர்' லட்டுவுடன் கிடைக்க,
'என்றுமில்லாத் திருநாள்தான் இன்று', என மனம் உரைக்க,
அன்று கிடைத்த பாக்கியத்தை என்னவென்று உரைக்க?
இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் பெறும் பெரும் பேறு
விந்தையாய் எமக்கும் அன்று கிடைத்தும் பெரும் பேறு!
குறையின்றி வாழ்வளிக்கும் குணக் குன்றைக் கண்டு,
நிறைவான மனத்துடன் ஆனந்தித்தோம் அன்று!
:first: . . . :dance: