கடல் கடந்த முதல் அனுபவம் ..... 3
விமானத்தில் ஹீட்டர் உள்ளதால் பிழைத்தேன்! அந்த
விமான நிலையத்தில் தண்ணீர் இல்லாத 'டாய்லெட்'!
'டிரை கிளீன்' இப்போதிருந்தே பழகவேண்டுமே! ஏழு
அரை (மூணரை!) மாதங்களுக்கு, இதே தொடருமே!
ஓசி கேட்கும் பழக்கம் நம்மவர்களை விடாது போல!
ஓசி கேட்டார் ஒரு மாமி பவுடரும், பொட்டும்! வேறு
ஒரு மாமி என் சோப்பையும் கேட்க, அங்கே இருந்த
ஒரு சோப்பு திரவக் குடுவையைக் காட்டி, நகர்ந்தேன்!
செக்யூரிட்டி செக் வந்தது; என் பையைத் தனியே எடுத்த
செக்யூரிட்டி நபர், ஒரு கோலால் அதைத் தட்டி, அதைத்
திறக்குமாறு விரட்டினார்! பரிசாகத் தர, நான் வாங்கிய
சிறப்பு வெள்ளிக் காசுகள், என்னை மாட்டி விட்டன!
நீல நிறத்தில் அவை மின்ன, அந்த ஆள் எனை முறைக்க,
நீளமான ஜிப்பைத் திறந்து பையைக் கவிழ்த்துவிட்டேன்!
ஒன்றும் தவறாகக் கிடைக்காது, வெறுப்புப் பார்வையுடன்,
ஒன்றும் சொல்லாது, சைகையால் போகச் சொன்னார்!
'உள்ளாடை முதல் எல்லாத்தையும் கொட்டிவிட்டீரே! இப்ப
உள்ளே யார் அழகாக அடுக்குவார்களாம்?' எனக் கேளாது,
தப்பித்தோம் பிழைத்தோம் என எல்லாவற்றையும் அடுக்கி,
தப்பி ஓடினேன்! மறு விமானத்தில் என்னவருடன் ஏறினேன்!
இந்த முறை இரண்டு பேர் அமரும் இருக்கை கிடைத்ததால்,
சொந்த வண்டி போலவே, சௌகரியம் எனக்கு இருந்தது!
என்ன அதிசயம்! FRANKFURT ல் ஊத்தப்பமும் கிச்சிடியுமா?
சின்ன டிபன் என்றாலும், மிகவும் ருசிதான்! ஜூஸ் வந்தது!
'BUN' (?) ஒன்று தந்தனர் BOSTON நெருங்கும்போது, அந்த
'BUN' னை நாய் கூடத் தின்னாது! தங்கவேலு காமெடிதான்
மெய்யாக நினைவு வந்தது! 'முகத்துக்கு மாவு, கண்ணுக்கு
மையி, ஒதட்டுக்குச் சாயம்', என அடுக்கி விட்டு, அதன் பின்
'இந்தா ரொட்டி' என அவர் கொடுக்க, 'இதக் கொண்டுபோயி
நாயிக்குப் போடு', என அவர் காதலி கிண்டலாய்ச் சொல்ல,
'அங்கே இருந்துதானே கொண்டு வந்தேன்' என்பாரே, அதுதான்!
எங்கே சத்தமாகச் சிரிப்பேனோ என்று, சிரிப்பை அடக்கினேன்!
:lol:.. தொடரும்............