• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

..........
Trying to fix the picture of 'swiffer'....


வீடுகள் பொதுவாக மரத் தரையை உடையவை;
வீடுகள் சுத்தம் செய்யவும் பற்பல உபகரணங்கள்!

SWIFFER என்று தரை துடைப்பான்; அதன் பேப்பரை
SWIFFER அடியில் உள்ள பிளாஸ்டிக் அட்டையில்

சொருகி, நீண்ட கைப்பிடியைப் பிடித்து, நடந்தபடியே,
தடவித் தடவிச் சென்றால், தூசியெல்லாம் ஒட்டும்!

பேப்பரை தூக்கி எறிந்து, புதியதை மாட்டி விடலாம்.
பேப்பர் வீணடிக்க, இன்னொரு முறைதான் இதுவும்!

எளிதாக வேலை முடிவதால், நாம் யோசிப்பதில்லை;
புதிதாகப் 'பேப்பர் ரீபில்' வாங்குவதே இனி வேலை!

003%20SWIFFER.jpg


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 16

சப்வே ரயில் பயணம் மிக இனிமைதான் பாஸ்டனில்;
சப்வே தடங்கள் உள்ளன நான்கு வேறு நிறங்களில்.

நிறங்களில் சிவப்பு, ஆரஞ்சு, நீலம், பச்சை உள்ளது; சில
இடங்களில்தான் வேறு நிற ரயிலில் சென்று ஏறலாம்.

ரயில் செல்லும் பாதைகளை 'MAP' போட்டு வைத்து,
ரயில் பயணத்தை மிக எளிதாக்குகின்றார், நமக்கு!

015%20rail%20map.jpg


ஒரு டாலருக்கு டோக்கன் எடுத்து, நுழை வாயிலில்
ஒரு உண்டியல் போன்றதில் இட்டு உள்ளே சென்றால்,

ரயில் பயணம் வேண்டுமளவு செய்யலாம்; மீண்டும்
ரயில் நிலையம் நுழையத்தான் டிக்கட் எடுக்கணும்!

ஒரு நாள் ஆசை தீர மேலும் கீழும் போகவேண்டும்;
இது மனதில் தோன்றியதைச் சொல்லவேண்டும்!

நீண்ட தூர ரயில் பயணங்களும் அருமைதான், என்று
நீண்ட நாள் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டோம்.

முதல் ரயில் பயணம்; நாங்கள் சென்றது AQUARIUM;
முதல் அனுபவமே இனிமையாக அமைந்துவிட்டது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் அதன் பெயர் அறிவிப்பு;
ஒவ்வொரு கோச்சிலும் உள்ளது அறிவிப்புப் பலகை.

007aquarium%20bstn.jpg

(New England Aquarium, Boston)

டிக்கட் 'தலைக்கு' பதினாறு டாலர்; சின்ன சந்தேகம்:
டிக்கட் 'ரெட்டை மண்டை' X - க்கு எவ்வளவு ஆகும?!

:bounce:தொடரும்............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 17

AQUARIUM காண்பதுடன் சேர்த்து, இன்னும் ஐந்து வேறு
MUSEUM பார்க்க வேண்டுவோருக்கு, 36 டாலர் டிக்கட்!

எங்கள் இருவருக்கும் அதுபோல டிக்கட் எடுத்த மகன்,
எங்கள் இருவரையும் அவையும் பார்க்கச் சொன்னான்.

நல்ல கூட்டம் AQUARIUM காண அன்று; பத்து நாளான
செல்லக் குழந்தையை, கழுத்தில் மாட்டி வந்தார் சிலர்!

குழந்தையை இடுப்பில் வைப்பது கிடையாது; பலவித
குழந்தை தூக்கும் உபகரணங்கள் அங்கே பாத்தோம்.

இரட்டை குழந்தைகளுக்கு, இரட்டைத் தள்ளுவண்டி;
அரட்டை அடித்தபடித் தள்ளிச் செல்வார் பெற்றோர்!

சின்ன ஒழக்குகளை வெளியே கொண்டு செல்லுவதை,
என்ன காரணத்தாலோ எல்லோரும் விரும்புகின்றார்.

குழந்தைகளைப் பாதுகாக்க பெரியவர் இல்லாதவரும்,
குழந்தைகளைத் தன்னுடனே அழைத்துச் செல்கிறார்.

இனிமேல், AQUARIUM தந்த அனுபவங்கள் எழுதுகிறேன்;
இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்கிறேன்!

BONE PHONE என்றது என்னவென்று பார்த்தால், நம்
BONE ஐ ஒலி கடத்த வைக்கும் அமைப்பாகும் அது.

நம் முழங்கைகளை BOARD இல் வைத்து, காதை மூட,
நம் காதில் வித விதமான மீன்களின் ஒலி கேட்கும்!

மிகப் பெரிய கண்ணடித் தொட்டி ஒன்றில், மீன்களும்,
மிகப் பெரிய கடல் அமையும், சுறாக்களும் சுழன்று,

வெவ்வேறு வேகங்களில் நீந்திப் போகின்றன; அவை
வெவ்வேறு உயரங்களில், நீருள் காணப்படுகின்றன.

020%20new%20england%20aquarium.jpg


தொடரும்................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 18

சுறாக்களைப் பற்றிய ஒரு அருமையான திரைப்படம்;
சுறாக்கள் இன்று கனவை நிச்சயமாக ஆக்கிரமிக்கும்!

ஒரு குழந்தை பயத்தால் வீல் வீலென்று அலறிவிட,
மறு வினாடி அதனுடன் வெளியே ஓடினாள், தாய்!

அருமையான பலவகை மீன்கள் தனித் தொட்டிகளில்;
பெருமையாக ஒரு ஆக்டோபஸ் கைகளை ஆட்டியது.

009fish.jpg


010.jpg


ஜெல்லி மீன்களில் அழகிய வடிவங்கள். குடை பிடித்து
துள்ளிச் செல்லுவதுபோல, அசைந்தசைந்து சென்றன.

மணல் தளமுள்ள நீர்த் தொட்டியில், ஒரு வகை மீன்
மணல் நிறத்திலே இருக்க, தேடிக் கண்டுபிடித்தோம்!

கண்களை மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வைத்து,
கண்களால் மயக்கியது, வேறோர் மீன் வகை அங்கு!

008penguins.jpg


கீழே உள்ள தளத்தில் பெங்குவின்கள் நீந்தி மகிழ்ந்தன;
பேழையில் அடையும் விஷப் பாம்புகளும், பெட்டிக்குள்!

டன் கணக்கில் கனக்கும் திமிங்கல எலும்புக்கூடு, கண்ட
உடன் உடலே வியர்த்து விட்டது, அந்த ஊர்க் குளிரிலும்!

மெத்தென்ற SOFT TOYS விற்பனையைப் பார்த்தால், நாம்
எத்தனை வயது என்றே மறந்து போய், துள்ள வைக்கும்.

சாவி கொடுத்தால் நடக்கும் பெங்குவின் பொம்மையை,
தாவி எடுத்து வாங்கினேன், குழந்தைக் குதூகலத்துடன்!

எப்போதும்போல் நிறையச் செய்தது, 'ஜன்னல் ஷாப்பிங்';
எப்போதும்போல நிறைத்தோம், 'பிலிம் ரோல்'களையும்!

மற்ற MUSEUM, மறுநாள் முதல் பார்க்கவேண்டும்; எனவே,
உற்ற நேரத்தில் இனிய இல்லம் வந்து சேர்ந்துவிட்டோம்!

தொடரும்................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 19

அன்று SKY VIEW OBSERVATORY, HARVARD MUSEUM காணலாம்
என்று தீர்மானித்து, மீண்டும் ரயில் பயணம் செய்தோம்.

வெற்றிகரமாக COPLEY SQUARE வந்து சேர்ந்தோம்; அங்கு
சுற்றிலும் ஐம்பதுக்கு மேல் மாடிகள் உள்ள கட்டிடங்கள்!

ஒரு நீல நிறக் கண்ணாடிக் கட்டிடத்தைக் கீழிருந்து நோக்க,
மறு வினாடி, நம் மீதே சரியுமோ எனப் பயம் தொற்றியது!

ஐம்பது மாடிக் கட்டிடம் SKY VIEW OBSERVATORY; LIFT -ல்
ஐம்பது மாடி ஏறுவதே பிரமிப்பாக இருந்தது! முதல்

முப்பத்தியாறு மாடிகளே அதிவேகத்தில் செல்ல, பின்னர்
பத்திக் கொள்ளும் வேகமாக, பாய்ந்து உச்சி அடைந்தது!

தொலைநோக்கி இல்லை; சாதாரணமாகப் பார்க்கவேண்டும்.
தொலைதூரத்து BOSTON நகரம் அழகாகப் பரிமளிக்கிறது!

வட்ட வடிவ தளத்தில், அந்த நகர் பற்றிய பல விவரங்கள்;
தொட்டவுடன், அந்தந்த விளையாட்டு ஒலிகள் கேட்குமாறு,

பல விளையாட்டுக்களின் பந்து மாதிரிகள் வைத்துள்ளார்கள்;
BASKET BALL, BASE BALL, FOOT BALL போன்றவை அவையாகும்.

சார்ல்ஸ் ஆறு அழகாய் ஓடுவதும், அதன் பாலத்தின் மீது பற்பல
கார்கள் செல்லுவதும், பாலத்தின் கீழே படகு வரிசைகளும்,

காணக் காண மனம் ஆனந்தித்துத் துள்ளியது! பல நிமிடங்கள்
காண முடியும் தூரம் வரை அந்த ஆற்றின் அழகை ரசித்தோம்.

016%20CharlesRiver2.jpg


பனிக் காலங்களில் ஆறு முழுதும் உறைந்து இறுகிவிடுமாம்;
பனிச் சறுக்கு காலணிகள் அணிந்து, அதில் சறுக்குவாராம்!

மேலும் வட்டப் பாதையில் சென்று, பல காட்சிகள் ரசித்தோம்.
மேலே போனதைவிட அதிவேகத்தில் LIFT கீழிறங்கி வந்தது!

தொடரும்...............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 20

ரயிலில் ஏறி HARVARD SQUARE வந்தோம். அப்போது
ரயிலில் மிகக் கூட்டம் இருந்ததால், நான் மட்டும்

இருக்கை ஒன்று காலியாக இருக்க, போய் ஜாலியாக
இருக்கையில் அமர்ந்து, பக்கத்தில் பார்த்தேன். ஆனால்

அடுத்திருந்தவர் முகம் காண முடியவில்லை; நாங்கள்
அடுத்த இரண்டாம் நிறுத்தத்தில் இறங்கவும் வேண்டும்.

இருண்ட நீண்ட தலைமுடி; ஜீன்ஸ் அணிந்துகொண்டு,
திரும்பி அமர்ந்து இருந்தது, அவ்வுருவம் அமைதியாக.

நான் நினைத்தேன் 'லேடி' என்று; கீழே இறங்கும்போது
தான் கண்டேன், அதன் முகத்தில் நீளமான தாடி ஒன்று!

பலவித சிகை அலங்காரங்களில், இளசுகள் திரிந்தன;
சிலவித பாத்தி கட்டிய தலைப் பின்னல்கள் இருந்தன!

முடியைப் பாத்தி கட்டியதுபோலவே வெட்டியும் விட்டு,
முடியில் வெவ்வேறு நிறங்கள் பூசிக்கொண்டிருந்தனர்!

சேவல் கொண்டை போல நடுவில் மட்டும் வளர்த்தி,
'ஷேவ்' செய்திருந்தனர், மீதித் தலைமுடியை எல்லாம்!

'ஜெல்' போட்டு நிமிர்த்திய அதைக் கண்டால், எனக்குச்
சொல்லத் தோன்றியது, 'ஒரு கிரேக்க வீரனோ?' என்று!

022%20HAIR%20STYLE.jpg


021%20HAIR%20STYLE.jpg


என்னதான் பலவித 'ஸ்டயில்'கள் இருந்தாலும், இங்கு
எந்தப் புதியவர் எதிரில் வந்தாலும், வாழ்த்துவார்கள்!

HAVE A NICE DAY என்றோ, GOOD DAY TO YOU என்றோ,
HAVE A GOOD ONE (!!) என்றோ கூறிப் புன்னகைப்பார்!

பொது இடங்களில், பாட்டு வாசிப்போர் பலர் உண்டு;
அது மட்டுமல்லாது, வித்தை காட்டுவோரும் உண்டு.

சில நபர்கள் தெருவில், I AM HOMELESS 'போர்டு' வைத்து,
சில இடங்களில், தொப்பியை நீட்டிக் காசு கேட்கின்றார்.

பாதி குடித்த 'ஜூஸ்' பாட்டிலை, கீழே வைத்தால் அந்த,
மீதியை எடுத்துக் குடிக்கவும், ஏழைகள் அங்குள்ளார்!

N.B: I did not venture to take snaps of the hair styles! Photo courtesy: Internet
:hippie:தொடரும்.............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 21

019%20HARVARD%20MUSEUM%20OF%20HISTORY.jpg


அருங்காட்சியகம் (HARVARD MUSEUM) மிகவும் பெரியது;
அருமையான பல விஷயங்களின் இருப்பிடம் அது!

ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க முடியும் இடம்;
அரை நாள் நேரத்தில், முடிந்தவரை சுற்றி வந்தோம்.

உயிரற்ற மிருகங்களின் தோல்களை நன்கு பதனிட்டு,
உயிருள்ள மிருகம்போல STUFF செய்து வைத்துள்ளார்.

025%20a-young-visitor-checks.jpg


எலி முதல் யானை வரை பற்பல மிருகங்கள் இருந்தன;
எலி அருகில் கண்டோம், முதுகில் கோடுள்ள அணில்கள்!

நான்கு கோடுகளும், பதிமூன்று கோடுகளும் கூட உள்ளன;
நன்கு பார்த்து வியந்தோம், ஆண்டவனின் சிருஷ்டியை!

'டைனோசார்' பற்றி முழு விவரங்களும் விளக்கி, அங்கே
'டைனோசாரின்' முட்டையின் மாதிரியும் வைத்துள்ளார்.

குட்டிக் குட்டி வண்டுகள் ஓரிடத்தில் இருக்க, அதிலொரு
குட்டி வண்டு, நம்ம பிள்ளையாரைப் போலத் தெரிந்தது!

018%20MUSEUM%20OF%20HISTORY.jpg


பெரிய ஒரு ஹால் முழுவதும், வித விதக் கற்கள்; அதில்
அரிய வைரம் முதல், பற்பல விலைமதிப்புள்ள வகைகள்.

பூமியில் விழுந்த எரிகற்களும் கூட இருந்தன, ஒருபுறம்;
பூமியில் கிடைக்கும் உலோகத் தாதுக்கள் பல, மறுபுறம்.

பல நிறக் கற்களும் அடுக்கி வைத்திருந்தனர்; 'பூமியின்
நிலத்தில், இத்தனை அதிசயங்களா?', என வியந்தோம்!

அழகிய ஒரு காட்சியகத்தில், தாவர வகைகள் இருந்தன;
அழகில் சிறந்த அவை, கண்ணாடியால் செய்தவையாம்!

இனிய நினைவுகளை மனதில் தேக்கிக்கொண்டு, உடனே
இனிய இல்லம் திரும்ப மீண்டும் ரயிலில் பயணித்தோம்!

NB: Pl. check the beetle in the bottom right corner (appeared to me like PiLLaiyAr !)

:happy:. . . தொடரும்..........
 
Harvard museum of History........

பூமியில் கிடைக்கும் உலோகத் தாதுக்கள் பல மறுபுறம்.

023mineral_specimens2.jpg

********************************************************

அழகிய ஒரு காட்சியகத்தில் தாவர வகைகள் இருந்தன.
அழகில் சிறந்த அவை கண்ணாடியால் செய்தவையாம்!

024%20my-favorite-glass-flower.jpg


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 22

அடுத்த SCIENCE MUSEUM போகத் தீர்மானம்; காலை
எடுத்த முடிவு, பத்து மணிச் சாப்பாடு! அது முடித்து,

நேரம் கடத்தாமல் அங்கு சென்று, சுற்றல் ஆரம்பம்;
நேரம் போவதே தெரியாதிருக்கப் பல விஷயங்கள்!

மாடல்கள் பல விதம் கணிதப் பிரிவில் இருக்க, ஒரு
மாடல், 'கார்ட்டூனில்' வருவதுபோல் மிகவும் பெரியது.

ஒரு பந்தை உருட்டி விட்டால், அது உருண்டு சென்று,
வேறொரு பந்தை தட்டி, அது கீழே ஜலதரங்கம் போல

ஒலி எழுப்பியபடி விழுந்து, மேலும் பல அசைவுகள்
ஒலி வகைகள் என, எங்களை மிகவும் அசத்தியது!

பெரிய ஒரு கண்ணாடி உருண்டையைத் தொட்டால்
அரிய இளஞ்சிவப்பு ரேகைகள் அதில் ஓடுகின்றன,

அது நாம் உடலில் இருக்கும் STATIC மின்சாரத்தால்!
எது கண்டாலும் அதிசயிக்கும் வகையில் உள்ளது.

இங்கும் HISTORY SECTION உள்ளது; அதில் உள்ளன
இங்கும், டைனோசார் முதல் சிறு வண்டு வரையில்.

குட்டிக் குட்டி பறவை வகைகள் அழகாய் அடுக்கிச்
சுட்டித் தனமாகப் பறப்பதுபோல் அமைத்துள்ளார்.

மாடியில் செயற்கையாக ஏற்படுத்தும் மின்னல் 'ஷோ'!
நொடியில் நடுங்க வைக்கும் ஒலி ஒளிப் பிரவாகம்!

கண்கள் ஒளியால் நிறைந்து கூசிட, கைகளோ, தாமே
தங்கள் காதுகளை மூடிட, பிரமித்தனர் அங்குள்ளோர்!

இனிய நினைவுகள் மீண்டும் எங்கள் மனதை நிறைக்க,
இனியும் நேரம் கடத்தாது, இனிய இல்லம் வந்தோம்.

:nod:. . தொடரும்...............

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 23

வெளியில் நாம் செல்லும்போது பற்பல புது விஷயங்கள்;
வெளியில் ரோட்டில் சாப்பிடாதே, என்போம் நாம். ஆனால்

இங்கு, வெளியில் பயணித்தபடி, நடந்தபடி உண்ணுவதை,
எங்கும் காணலாம்; வழி நெடுகிலும் சாப்பாட்டுக் கடைகள்.

இங்குதான் 'தூசி - தும்பு' இல்லாத சுத்தம் உள்ளதே! மேலும்
இங்கு ஈ, காக்கை என்ற பேச்சே கிடையாதது வினோதமே!

அலுவலகம் செல்லுவோரும் வழியிலேயே தன் முதல்
அலுவலாக, சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கிக் கொள்வார்.

குட்டி கிளாஸ் இல்லை, காபிக்கு நம்ம ஊரில் உள்ளதுபோல;
தொட்டி கிளாஸ்தான் கிடைக்கும், கொதிக்கும் படு சூட்டில்!

காபி கலக்குவதற்குள், எத்தனை கேள்விகள் கேட்பார்கள்!
காபிக்குச் சர்க்கரை, கிரீம், பால், EQUAL - எதெது வேண்டும்?

சென்னை கெட்டிக் காபி குடித்தவர்கள், இங்கே தருவதை,
'என்ன இது! ஒரே தண்ணிக் காபியாக உள்ளதே!' என்பார்கள்.

பொது இடங்களிலெல்லாம், சுத்தமான 'ரெஸ்ட் ரூம்' உண்டு;
பொதுவாக 'டிரை கிளீன்'தான்; ஆனால் 'வாஷ் பேசின்' உண்டு!

கழிவறைகள் சுத்தமாக்கப் பல பெண்கள் சுற்றுகிறார் அங்கு;
அழகழகாய் அவர்களைக் கண்டு, மனம் கொஞ்சம் வருந்தும்.

'டிராஷ்' தொட்டிகள் உள்ளன தெரு நெடுகிலும்; அங்கு வந்து
'டிராஷ்' எடுக்கும் ஆட்கள், என்ன 'ஸ்டயிலாக' இருக்கிறார்!

'கோட் சூட்' அணிந்தது போல, உடை நன்கு அணிந்துகொண்டு,
'ரோட்டில்' குப்பை எடுப்பது காண, வியப்பாகவே இருந்தது!

:lol: . . தொடரும் ............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 24

அடுத்த நாள் காலை, விரைவில் உணவு முடித்துவிட்டு,
அடுத்ததாக FINE ARTS MUSEUM பார்க்கப் பயணித்தோம்.

பழைமையான பற்பல வண்ண ஓவியங்கள் வரிசையில்;
புதுமையான MORDERN ART ஓவியங்களும் திகழ்ந்தன.

026boston-mfa592hs71910.jpg


027%20arts%20museum.jpg


ஆடை இல்லாத சில ஓவியங்களும் அங்கிருக்க, அவை
சோடை போகாது என்பதுபோல, ரசிக்கும் சில நபர்கள்!

ஒரு இடத்தில் பழைமையான பல சிற்பங்கள் இருந்தன;
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என்னால் ரசிக்க முடிந்தது!

028%20arts%20museum.jpg


நிறைய சிற்பங்கள் பின்னமாகி, பரிதாபமாக இருந்தன;
நிறைய நேரம் சுற்றாது, விரைவில் வீடு சேர்ந்தோம்!

என்னதான் பழமை பாராட்டும் குணத்தை வளர்த்தாலும்,
பின்னமான சிலைகளை, எத்தனை நேரம்தான் பார்ப்பது?

மறுநாள் NEW YORK சென்று வர முடிவு செய்திருந்தோம்;
சிறு பைகளில், எங்கள் உடைகளை எடுத்து வைத்தோம்.

காலையில் ரொட்டி 'டோஸ்ட்', காபி என எளிய உணவு;
காலை எட்டு மணி பஸ்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம்.

ஆறரை மணிக்கு பஸ் நிலையம் சேர்ந்ததால், ஓட்டுனர்
ஏழு மணி பஸ்ஸிலேயே எங்களை ஏறச் சொன்னார்!

நேரம் மிச்சமாகுமென அதில் ஏறி அமர்ந்தோம்; நல்ல
வேகம் பிடித்துச் சென்றது பஸ்; இருக்கைகள் மிக வசதி.

பெட்டிகள் வைக்க விமானத்தில் உள்ளதுபோல அமைப்பு.
பெட்டிகள் தலை மீது விழுமோ, என்ற பயமே கிடையாது.

குளிர் சாதனம் பொருத்தி இருந்ததால், பஸ்ஸின் உள்ளே
வெளிக் காற்று வரவில்லை; தலை முடி கலையவில்லை!

:nod:தொடரும்...........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 25

சரியான நேரத்தில் எங்களை அழைத்துச் சென்று, நல்ல
சுவையான சிற்றுண்டி என்னவரின் 'மருமகன்' தந்தான்.

தங்கை மகன்தான் அவன்; படிக்கும் மாணவன்; அவன்
தங்குவது PAYING GUEST ஆக செல்வி. JUNE இன் வீட்டில்.

செல்வி. JUNE அறிமுகம் கிடைத்தது அவனுக்கு சிறந்த
செல்வமே! அருமையான பெண்மணி என அறிந்தோம்.

மணம் ஆகாதவர்; மசாஜ் கலையில் மருத்துவர்; தன்
மகன் போலவே அவனைப் பாதுகாக்கின்றார்; அவரின்

காரை எங்கள் உபயோகத்திற்கு அளித்துவிட்டு, அவர்
காலை, தன் தங்கை வீடு சென்றார், செல்ல நாயுடன்!

எனக்கு நாயைக் கண்டால் பயம் என அறிந்திருந்தார்!
எனக்குக் காட்ட அங்கிருந்தது, ஒரு செல்லத் தவளை!

வெள்ளை நிறத்திலிருந்தது; அவரின் நல்ல PET டாம்;
கொள்ளைப் பிரியம் வைத்திருந்தார் அதன் மீது, அவர்!

அவரை நான் 'அமெரிக்க யசோதை' எனச் சொன்னேன்;
அவரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் சந்தித்தேன்!

ஆம்! எங்கள் மருமகன் திருமணத்திற்கு, அவர் பறந்து,
தாம் எண்பது வயது தாண்டியதை எண்ணாது, வந்தார்!

அன்பு செலுத்துவதே தம் வாழ்வின் குறிக்கோள் என்று
அங்கு கூடியிருந்த எல்லோரையும் வியக்க வைத்தார்!

NEW YORK நகரில் 'பார்க்கிங்' கடினமே; நாங்கள் சென்று
NEW JERSY யிலேயே உணவு முடித்துக் கொண்டோம்.

சுதந்திர தேவியின் தரிசனம் இல்லாத பயணமா? உடனே
சுதந்திர தேவி காண, படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம்.

விடுமுறை நாள்; கூட்டம் தாங்க முடியவில்லை! மீண்டும்
ஒருமுறை இங்கு வர இயலுமோ, இயலாதோ, தெரியாது!

ஒரு மணி நேரம் வரிசையில் நின்று, கடையாகச் சென்ற
ஒரு படகில் டிக்கட் கிடைக்க, 'தேவி' காணத் தயாரானோம்!

031%20BOAT.jpg


Photo courtesy: Internet

:wave:தொடரும்.............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 26

படகில் ஏறிப் பயணம் செய்தோம்; நல்ல குளிர் காற்று வீச,
உடலும் நடுங்கியது JACKET -டையும் மீறி! ஒரு சின்ன ஜோக்:

ஊருக்குப் புறப்படும்போது 'ஜாக்கெட் எடுத்துக்கோம்மா!' எனக்
கூறும் மகனிடம் நான் சொன்னேன்,' நாலு புடவைக்கு நாலு!'

பின்னர்தான் புரிந்தது, அவன் சொன்னது அவை அல்ல, என்று!
பின்னர் எடுத்தேன், எங்கள் இருவருக்கும் வேண்டிய இரண்டு!

சுதந்திர தேவி சிலை, பிரான்ஸ் நாட்டு மக்களின் அன்பளிப்பு;
சுதந்திரம் பிரகடனம் செய்யுமாறு கையில் தீப் பந்தம் உண்டு.

029%20LIBERTY%20LADY.jpg


முன்னூற்று ஐம்பது துண்டுகளாக வந்து, இங்கு உருவானது அது;
ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன், 1886 - ம் ஆண்டு நிறுவப்பட்டது.

2001 செப்டம்பர் ௧௧, தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், மக்கள்
2009 ஆம் ஆண்டுதான், சிலையின் உள்ளே போவதற்கு அனுமதி.

030%20SEPT%2011.jpg


நாங்கள் 2003 ஆண்டு சென்றபோது, கடைசிப் படகும் ஆனதால்,
எங்கள் படகு, தீவின் அருகே செல்ல மட்டுமே அன்று முடிந்தது!

நூற்றி ஐம்பத்தியொரு அடி உலோகச் சிலை; அச் சிலை நிற்பது,
நூற்றி ஐம்பத்தி ஐந்து அடி உயர மேடையின் மீது, பொறுமையாக.

ஒரு நிமிடம் மனத்தில் தோன்றி மறைந்த எண்ணம்தான் இது:
'ஒரு துணையும் இல்லாமல், தேவி ஏன் இப்படி நிற்கின்றாள்?'

படகு அருகில் போனதும், மக்களின் பெரும் ஆரவாரம் எழுந்தது;
மனது மகிழ்ந்து, ஜன்ம சாபல்யம் ஆனது போலவே இருந்தது!

தீவுக்குள் செல்ல அனுமதி இல்லாவிட்டாலும், எங்கள் படகு,
தீவின் மிக அருகில் சென்று, சில வினாடிகள் அங்கு நின்றது.

வெளிச்சம் வீசி, காமராக்கள் எல்லாம் படங்கள் சுட்டுத் தள்ள,
வெளிச்சம் குறைய, ஆதவன் ஓய்வுக்குச் செல்ல முயன்றான்.

நெடிது உயர்ந்த, பெரிய, அரிய சிலையைக் கண்டு, ஆனந்தித்து,
சிறிது நேரத்தில், தீவில் இறங்காமலேயே, திரும்பி வந்தோம்.

Photo courtesy: Internet

:dance:........தொடரும்.................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 27

ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு வீடு வந்து சேருவதற்குள்,
ஊரடங்கும் நேரம்; இரவு ஒரு மணியைத் தொட்டது.

தூக்கத்தை விடாது அடம்பிடித்தால், புது ஊரைச் சுற்றும்
ஏக்கத்தை எப்படிப் போக்கிக் கொள்ளுவதாம்? எனவே,

காலை விரைவில் எழுந்து தயாராகி, இரண்டு மணி நேர
சாலைப் பயணத்தின் பின்னர், நண்பன் வீடு சேர்ந்தோம்.

அமெரிக்க வாழ் இந்தியப் பிள்ளைகள், விருந்தினரை
அமர்க்களமாய் வரவேற்று, உணவு அளிக்கின்றார்கள்.

ஒரு சிற்றுண்டிக்காக, இந்தியாவில் எவரேனும், காரில்
இரண்டு மணி நேரம் செல்லுவாரா, என்பது சந்தேகமே!

இனிய விருந்தோம்பலில் திளைத்து, மனமும் மகிழ்ந்து,
மதிய உணவுக்கு, இன்னொரு நண்பன் வீடு சென்றோம்!

சாப்பிட்ட பின் வெற்றிலை, பாக்கு, ரவிக்கைத் துணியை,
கூப்பிட்டுக் கொடுத்ததும், நான் அசந்துதான் போனேன்!

கிடைத்த கொஞ்ச நேரத்திலே, 'டாலர் ஷாப்' சென்றோம்.
கிடைத்த நல்ல சில பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தோம்.

TAX நியூயார்க்கை விட, நியூஜெர்சியில் குறைவானதால்,
TAX மிச்சம் பிடிக்க, மருமகன் வேறு கடைக்கும் போனான்.

மறவாது எனக்கு, ஒரு பவுண்டு பாதாம் வாங்கித் தந்தவன்,
தவறாது எல்லோருக்குமே தான் தருவதாகச் சொன்னான்!

TIME SQUARE பார்க்கக் காரிலேயே சுற்றினோம்; கட்டிடங்கள்,
TIME போவதே தெரியாது, வானுயர நின்று, நம்மை அசத்தும்.

032%20TIME%20SQUARE.jpg


மின்னும் விளம்பரங்கள் பல மாறிமாறி வந்து, பார்ப்போரை
இன்னும் கொஞ்சம் அதிசயிக்க வைக்கும். ஓரிடத்தில் இறங்கி,

TULIPS அழகாக இருக்கும் என்று கூறி, இறக்கிவிட்டு, நாங்கள்
TULIPS கண்டு வரும்வரை, காரிலேயே சுற்றினான் மருமகன்.

மலர்ந்த பூக்களின் அழகு மனத்தைக் கொள்ளை கொள்ள, அங்கு
அடர்ந்த நீரூற்றின் திவலைகள் பறந்து, இன்னும் பரவசமூட்டின.

நியூயார்க் நகரின் சில பரிமாணங்கள் கண்டுவிட்டு, மீண்டும்
நியூயார்க் நகர பஸ் நிறுத்தத்திற்கு, மாலை வந்து சேர்ந்தோம்.

சில நிமிடங்களில், பேருந்து புறப்பட்டு, அலுங்காமல் செல்ல,
சில மணிகளில், மீண்டும் 'பாஸ்டன்' நகரத்தை அடைந்தோம்.

:car:தொடரும்................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 28

ரயில் ஏறி HARVARD SQUARE வந்து, அங்கிருந்து மீண்டும் பஸ்;
ரயில் நிலையத்தில் பெண்கள் பலர் கூச்சலிட்டபடியே நடக்க,

எப்படி இந்தப் புதுமைப் பெண்கள், பயமென்பதை அறியாமல்,
இப்படி இரவு வேளையில் சுற்ற முடிகிறது, என வியந்தேன்!

சுதந்திர தேவி சிலையுள்ள நாடல்லவா? அதுதான் இவ்வாறு
சுதந்திரமாக வலம் வந்து, எப்போதும் லூட்டி அடிக்கிறார்கள்!

பேருந்து ஏறி வீடு வந்து சேர, நள்ளிரவு நேரமே நெருங்கியது.
விருந்துச் சாப்பாடு மதியம் உண்டதால், பசி வாட்டவில்லை.

மறுநாள் வெளியில் செல்லும்போது, ஒரு புறம் உடல் சாய,
எதனால் என்று ஆராய, வலது செருப்பு சப்பையாகி இருக்க,

'இந்த ஊரில் நடந்து நடந்தே செருப்பு தேயுமோ?' என எண்ணி,
அந்த நிமிடம் முதல், நல்ல செருப்பு தேடத் தொடங்கினேன்!

பல இந்திய மாமிகள், சுதந்திரதேவி காணச் சென்ற படகில்,
பலமான ஷூக்களை அணிந்து, புடவை உடுத்தியிருந்தனர்.

புடவையுடன் 'ஷூ' அணிந்தால், கோமாளி போல இருப்பினும்,
அதையே போட்டேன், அடுத்த இருபது நாட்கள் வரையில். பின்

இரு அங்குல HEEL வைத்த கெட்டிக் காலணி கிடைக்க, அதை
இருபது டாலருக்கு வாங்கினேன்; இனி, நூறு மைல் நடக்கலாம்.

சாலைகள் 'கான்க்ரீட்'டில் அருமையாக அமைத்திருப்பதால்,
சாலையில் நடந்தால், இந்தியச் செருப்பு சீக்கிரமாகத் தேயும்!

இங்கு செய்யும் காலணிகள், கடின அடிப்பாகம் உடையவை;
இங்கு நடைப்பயிற்சிக்கு, அதுவும் முக்கியமான ஒரு தேவை!

தேய்ந்த என பழைய காலணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு,
தேய்க்க ஆரம்பித்தேன், என் கனமான புதிய காலணிகளை!

:cool:=:peace:தொடரும்.................
 
The digital camera was presented to me in 2004.

I could upload the pictures from my "digicam shots" in my write-up about our second visit to the US (2009)

Browsing the internet provides me the photoes needed now.

My sincere thanks to the modern technology! :typing:

Raji Ram
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 29

இரண்டு நாள் ஊர் சுற்றலுக்கு, அடுத்த இரண்டு நாள் ஓய்வு;
திறந்து FRIDGE ஐப் பார்த்ததால், ஏழைப் புலவர் வீடு போல!

ஒரு காய்கறி கிடையாது! மாலை வேளை விருந்துக்கு வர
ஒரு புதுமணத் தம்பதி ஒப்புக்கொண்டதால், உடனே கடை!

ஒரு வாரம் செலவாகும் பொருட்களை வாங்கக் கடைக்கு,
ஒரு முறை செல்வார், மகிழ்வுந்து உள்ள பசங்களெல்லாம்.

எங்களுக்கு 'நடராஜா சர்வீஸ்'! எனவே மூன்று நாட்களுக்கு
எங்களுக்குத் தேவையானவை வாங்கி வருவது வழக்கம்.

பத்து டாலருக்கு, தள்ளு வண்டி உள்ளது, சாமான் உருட்ட!
பத்து நாள் இந்தியா வர, என்று இருக்கும்போது தெரிந்தது!

'தூக்குத் தூக்கி'யாகவே மார்க்கெட்டிலிருந்து பைகள் பல,
தூக்கி வந்தே எங்களுக்கும் பழகிவிட்டது, சில நாட்களில்.

சமையல் தூள் கிளப்பிவிட்டு, காத்திருந்தோம் தம்பதிக்கு.
சமையல் புதிதாகப் பழகும் பெண்; மிக அதிகம் புகழந்தாள்.

மகிழ்வுந்து அக்கா மகனிடம் இருப்பது வசதி; மூவரையும்
மகிழ்வுடன் எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் சென்றான்.

இருவருக்கும் இரு மகன்கள் செலவு செய்து மகிழ்விக்க,
இருவருக்கும் வேறு என்னதான் வேண்டும், அனுபவிக்க!

படகு சவாரி செய்ய NEW HAMPSHIRE ஆவலுடன் சென்றால்,
படகுத் துறை மூடிக் கிடந்தது! GOOGLE தேடல் மறந்தோம்!

கடல் போலப் பெரிய அலைகள் கிடையாது; சிறு அலைகள்,
கடல் அலைகளின் குழந்தைகள் போலத் தோன்றின அங்கு!

இருந்த குட்டி 'பீச்'சில் கொஞ்ச நேரம் நடந்தோம்; அங்கு கீழே
கிடந்த கூழாங்கற்களை, குழந்தைபோலப் பொறுக்கினேன்!

தாங்க முடியாமல் சிரித்த மகன்கள், உடனே கடையில் தேடி,
தங்கள் பரிசாக 'கலர்' கூழாங்கற்கள் வாங்கிக் கொடுத்தனர்.

சிறிய பிளாஸ்டிக் ZIP LOCK பையில், நாம் வேண்டிய கற்கள்
நிறைய எடுத்துக் கொண்டால், அது மூன்று டாலர் விலை!

சின்னக் கற்கள் எனின், எண்ணிக்கை அதிகம் இருக்கும்; பல
வண்ணக் கற்களை எடுத்து, இரண்டு பைகளை நிறைத்தேன்!

:happy:...:car:தொடரும் ....................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 30

நாங்கள் அந்த ஊர் இந்தியச் சமையல் ருசி காண்பதற்கு,
எங்கள் மகன்கள், உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சாப்பாடு 'பில்' நாற்பது டாலர்கள் ஆயிற்று; ஆறு டாலர்கள்
சாப்பாடு பரிமாறிய சர்வருக்கு! ஆம், பதினைந்து சதவீதம்!

நாம் இந்தியாவில் இருநூறு ரூபாய்க்குச் சாப்பிட்டாலும்,
நாம் பெருமையாகத் தரும் 'TIPS' பத்து ரூபாய் தாண்டுமா?

இன்னும் ஒவ்வொரு செலவையும், ஐம்பதால் பெருக்கி
எண்ணும் வழக்கம், எங்களை விடாது அடம் பிடிக்கிறது!

'டாலர் ஷாப்'பைக் கண்டவுடன் தாவி குதித்துச் சென்றேன்!
டாலர் ஐந்துக்கு, மூன்று குளிர்க் கண்ணாடிகள் கிடைத்தன;

என் குட்டி மாணவர்களுக்கு, புத்தாண்டு தினம் கொடுக்கும்
என் வகைப் பரிசாக, பெருமையுடன் அதையும் வாங்கினேன்!

இந்த நாட்டிற்கு வரும் பசங்கள் பெரிய பணக்காரர்கள் என
இந்திய நாட்டில் எல்லோரும் எண்ணுவது வழக்கம். ஆனால்

முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் TAX போய்விடுகிறது;
முப்பது ஆண்டுகள் வீட்டிற்குப் பணம் கட்டவும் வேண்டும்.

வீட்டில் சமைத்து உண்டால்தான், சேமிக்க முடியும்; பலமுறை
வெளியில் உணவகம் சென்று உண்டால், செலவும் அதிகமே.

சாப்பிட 'SANDWICH', 'BURGER', 'BAGEL' போன்றவை எடுத்தால்
சாப்பிடும் செலவைக் குறைக்க முடியும் என அறிந்தோம்!

035%20VEG%20sandwich.jpg

036%20veggie_burger.jpg


'சீஸ்' சாப்பிட்டுப் பழகினால், அந்த உணவுகளுடன் சேர்த்து,
'சீஸ்' போட்ட PIZZA எளிதாகச் சாப்பிடலாம், வயிறு நிறைய!

திருமணம் ஆகாது, படிக்கும், வேலை செய்யும் பிள்ளைகள்,
ஒருவாறு சமாளித்து, பெற்றோருக்குப் பணம் அனுப்புகிறார்.

என் நண்பியின் மகன், படிக்கும் காலத்திலேயே, பலமுறை
தன் சேமிப்பில் பெற்றோருக்குப் பரிசுப் பணம் தருவான்!

இந்தியாவில் சம்பாதித்து, US இல் படிக்க வைக்க முடியாது;
இந்தியாவில் நன்கு செலவு செய்யலாம், US இல் சம்பாதித்து!

:nod:. . தொடரும்................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 31

சிக்கனம் பற்றி நான் 'ஓ அமெரிக்கா' வில் எழுதியதை,
இக்கணம் மீண்டும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்!

பணம் சேமிப்பது மிகக் கடினம் – இந்த நாட்டில்
மனம் திசை திருப்பப் பல்வேறு வசதிகள் உண்டு!

வார விடுமுறையில் வீட்டிலேயே இருப்போரைப்
பார்ப்பது மிக அரிது! எல்லோருக்கும் ” FUN ” வேண்டும்!

எங்கு நாம் சென்றாலும் பணச் செலவு மிக அதிகம்!
எந்த 'டிக்கட்' என்றாலும் பதினைந்துக்கும் மேலாகும்!

SKY DIVING போன்ற வீர விளையாட்டுக்கள் எல்லாம்,
SKY உயரச் செலவுதான்! ஒரு முறைக்கு நூறு 'டாலர்'!

வீட்டுக்கும் வாடகை மிக அதிகம்! அதனால், எல்லோரும்
வீடு வாங்கக் கடன் எடுத்து, அதை அடைக்க மேன்மேலும்

உழைத்து உழைத்து ஓடாகின்றார்!
களைத்துக் களைத்துப் போகின்றார்!

‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ – என்று
ஓதுவது வீண் பேச்சு! இங்கு CREDIT CARD தான் உயிர் மூச்சு!

வீட்டில் சமைத்தால் இங்கு செலவு குறைவென்று, நம்
நாட்டில் வீணான நம்பிக்கை மக்கள் எல்லோருக்கும்!

பால், தயிர், புதிய காய்கறி, பழங்களென்று
நல்ல சாப்பாடு, இங்கும் நல்ல செலவுதான்!

ஒரு முழ ரொட்டி, ஒரு 'டாலர்' – ஆனால்
இரு தக்காளி ஒரு 'டாலர்' – மேலும்

மூணு ஆப்பிள் ரெண்டு 'டாலர்' – மற்றும்
நாலு குடமிளகாய் நாலு 'டாலர்' ஆகும்!

பெட்டியில் காசு சேர வேண்டுமென எண்ணி,
ரொட்டியில் காலம் முழுதும் கழிக்க முடியுமா?

காலை எழுந்து நீராடிக் கடவுளை வணங்கிவிட்டு,
வேலைக்குப் போகுமுன் வீட்டிலே சாப்பிடுவது அரிது!

வழியிலே காபியும், வடைபோல 'பேகலும்' வாங்கி
வழியிலே சாப்பிடுவர்; நம்மவரும் அப்படித்தான்!

034%20BAGEL.jpg


:car: . . . தொடரும்..............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 32

'அம்மாக்கள் தினம்' மே மாதத்தில் வந்துவிட்டது; எனக்கு,
'அம்மா தினமே' இல்லை அது; 'சித்தி தினம்' ஆக ஆனது!

தித்திக்கும் நினைவுகளை எனக்குத் தந்தான், என்னைச்
'சித்தி, சித்தி' என அழைத்துச் சுற்றி வந்த, அக்கா மகன்!

வடை, பாயசத்துடன் அமர்க்களச் சாப்பாடு முடித்த பின்,
கடை வீதிக்கு என்னை அழைத்துச் சென்றான் அவன்.

மகன் எப்போதும் போல அலுவலக வேலையில் முழுக,
இவன் எனக்கு மிக உற்சாகமாக, ஊர் சுற்றிக் காட்டினான்!

குட்டிப் பரிசுப் பொருட்கள் சில வாங்கிக் கொண்டு, ஒரு
தொட்டிக் கிண்ணத்தில் சிறப்பு 'டீ' குடித்து, தெம்புடன்

இனிய இல்லம் திரும்பினோம்; வீட்டுச் சாவி இல்லை;
இனிய அழைப்பு மணியை அடிக்க, வழியும் கிடைத்தது!

பாதுகாப்புக் கருதி, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், மிக
பாதுகாப்பான முறை வைத்துள்ளார்! வீடுகளிலெல்லாம்,

TALK, LISTEN, DOOR என மூன்று பட்டனுண்டு, கதவினருகில்;
TALK பட்டன் அழுத்தி, யார் என விசாரித்துவிட்டு, உடனே

அடுத்த பட்டன் LISTEN ஐ அழுத்த, சொல்லும் பதில் கேட்கும்;
அடுத்த பட்டன் DOOR ஐ அழுத்தினால், முன் கதவு திறக்கும்.

அந்த முன் கதவு திறந்தால்தான், குடியிருப்பினுள் வரலாம்.
இந்த விஷயம் தெரிந்த பின்னும், ஒரு காமெடி செய்தேன்.

'போஸ்ட்' தரும் UPS ஊழியர், நான் 'யார்?' எனக் கேட்டதும்,
'போஸ்ட்' என்பதற்கு பதிலாக YOOPIYAAS என்று அலற, நான்

என்னவென்று புரியாமல், திருடன் என எண்ணி, முன் கதவை
என்னவர் என்ன சொல்லியும், திறக்கவே மறுத்துவிட்டேன்!

மறுநாள் வேறு யாரோ கதவு திறக்கும்போது உள்ளே வந்து,
மறுபடியும் எங்கள் கதவை 'டொக்'கி, ஒரு 'கவர்' கொடுத்து,

'நேற்று யாருமே கதவு திறக்கவில்லை!', எனப் புலம்பினார்;
நேற்று நான் பயந்த பயம், அவருக்கு எப்படிப் புரியும்? ஆனால்

எங்கள் விமானப் பயண 'டிக்கட்டு'கள் இருந்த அந்தக் கவரை
நாங்கள் வாங்காது பயந்தால், பயணம் எப்படிப் போவதாம்?

:lock1:தொடரும் ..............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 33

முதல் நீண்ட பயணத்திற்கு, விமானப் பயணம் இடையில்;
முதல் பாகம் 'ஹைவே' பயணமாகச் செல்ல விழைந்தோம்.

இந்த ஊர் விமான நிலையத்தில் வாடகைக் கார் எடுத்தால்,
எந்த ஊர் விமான நிலையத்திலும் விட்டுவிட முடியுமாம்.

நெடுஞ்சாலைப் பயணம் இனிக்கத்தான் செய்தது. ஆசை தீர
நெடுஞ்சாலையில் காரைச் செலுத்தி மகிழ்ந்தான், எம் மகன்.

காரின் மேற்பகுதியை நான் தொட்டவுடன், அடிப் பாகத்தில்
கார் டயரில் ஏதோ 'டர்ர்ர்ர்ர்' என சத்தம் கேட்க, பயந்தேன்.

தவறாக நான்தான் ஏதோ செய்தேன் என நினைக்க, மகனோ,
தவறாக ஓட்டுனர் தூங்காதிருக்க உள்ள அமைப்பு, என்றான்.

சாலை ஓரத்தில் கரகரப்பாக இருக்கும்; உறங்கிய ஓட்டுனர்
சாலை ஓரத்தில் வண்டி செலுத்தினால், டயர் ஓசை எழுப்பி,

எழுப்பிய ஓசையால் எழுப்பும் ஓட்டுனரை, தூங்க விடாமல்!
எழுந்த சந்தேகம் தீர, பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.

நெடுஞ்சாலைகள் பற்றிய என் கணிப்பு:

சாலைகள் பராமரிப்பு மிக உன்னதம் – இருபுறமும்
சோலைகள் போல ஓங்கி உயர்ந்த நெடு மரங்கள்!

நெடுஞ்சாலை இருபுறமும் நான்கு வழிப் பாதைகள்;
எதிர்வருவோர் எப்போதும் வருவதில்லை நம் பக்கம்!

அறிவிப்புப் பலகைகள் மிக நேர்த்தி! – பயணத்தால்
களைத்தவர் இளைப்பாற, EXIT கள்; உணவகங்கள்!

எல்லோருக்கும் தொலைதூரம் செல்வது பழகியதால்
பல்வேறு வசதிகள் செவ்வனே செய்துள்ளார்!

இரவுகளில் 'ஹைவேயில்' இனிய பயணங்கள்!
இருவழிப் பாதைகளில் ஓடும் பல வண்டிகளின்

வண்ண ஒளிகள் கொள்ளை கொள்ளும் நம் மனத்தை!
வண்ணம் இரண்டு ஒளிர்ந்து, எண்ணத்தில் நிலைக்கும்!

முன் செல்லும் விளக்கு ஒளிகள், மாணிக்க மாலை போல;
முன் வரும் விளக்கு ஒளிகள், வைரக்கல் மாலை போல;

வண்ணமாய்க் கண்களையே நிறைத்துவிடும் - இது,
திண்ணமாய்ச் சொல்லுவேன், புதிய அனுபவம்தான்!

033%20highway%20lights.jpg


:wave:. . . தொடரும்................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 34

வழி தேடுவதற்கு வண்டிகளில் GPS அதிகம் இல்லாத காலம்;
வழி வைத்திருந்தோம் GOOGLE MAP அச்சடித்த பேப்பரில்! அது

வீதியில் விலாசத்தில் எழுத்துப் பிழை இருந்ததால், வேறொரு
வீதியில் கொண்டுபோய் எங்களை நிறுத்தியது! தேடும் வீட்டின்

எண்ணே அங்கு காணாததால், செல் உலாப் பேசினோம்! பின்னர்
அண்ணன் மகன் வீட்டுக்கு அர்த்த ராத்திரி போய்ச் சேர்ந்தோம்!

003The%20huge%20house.jpg


எங்கு போனாலும் நம் தயிர் சாதத்திற்கு இணையே இல்லை!
அங்கு வைத்திருந்த தயிர் சாதத்தை 'ஒரு கை பார்த்தோம்'!

பத்து ஏக்கர் நிலப்பரப்பில் வீடு ஒரு புறம்; புல்வெளி மறு புறம்;
சொத்து அதிகரித்தால் வேலையும் அதிகரிக்குமே! இந்நாட்டில்,

தோட்டி முதல் தொண்டைமான் வரை எல்லாப் பணிகளையும்,
தோட்டப் புல் வெட்டுவதும், இல்லதரசனும், அரசியும் செய்வார்!

வேலைக்கு மெக்சிகன் நபர்கள் கிடைத்தாலும், மிகச் சிலர்தான்
வேலையாள், வாரத்தில் சில நாட்கள் வைத்துக்கொண்டுள்ளார்.

வீட்டின் அடித் தளத்தில் தொழிற்சாலை போல 'ஹீட்டர்' உண்டு;
வீட்டின் எல்லாக் குழாய்களிலும் வெந்நீர் வரவு தேவையாகும்.

குளிர் காலத்தில் வீடு முழுதும் ஹீட்டர் போடுவது மிகத் தேவை;
தளிர் விடும் செடிகளை மற்ற காலங்களில் பராமரித்தல் தேவை.

'கார்பெட்' அமைப்புப் பிடிக்காததால், அண்ணன் மகன், தானே
'கார்பெட்'களைப் களைந்துவிட்டு, மரத் தரை அமைத்திருந்தான்.

அனைத்துப் பொருட்களும் HOME DEPOT-வில் நன்கு கிடைப்பதால்,
தனித்துப் புதிய வேலை கற்றுச் செய்வதை, மிக விரும்புகின்றான்!

மாடிப் படிகள் முதல் எல்லா அறைகளும், அழகிய தரை அமைப்பு;
தேடித் தேடித் பொருட்கள் சேகரித்து, நன்றாகச் செய்திருந்தான்.

நல்ல ஓய்வு எடுத்தபின், மறுநாள் வாஷிங்டன் நகரைப் பார்க்கச்
செல்ல முடிவு செய்து, 'இனிய இரவு சொல்லி' உறங்கினோம்.

:sleep:
:car:. . . தொடரும்...............

Note: The photo of our nephew's house is a shot from my digital camera, in 2009 (II visit!)
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 35

காலை விரைவில் எழுந்து நீராடி, நல்ல சிற்றுண்டி உண்டு, நல்ல
சாலை வழியாக, உற்சாகமாக மூவரும் புறப்பட்டுச் சென்றோம்.

வாஷிங்டன் நகரம் சேர்ந்து, விரைவாக ஒரு சுற்றுச் சுற்றினோம்!
வாஷிங்டன் அழகு மிகு நகரம்; முதலில் WASHINGTON MONUMENT.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமைத்தது.
அமெரிக்காவின் உயர்ந்த கட்டிடங்களில், சிறந்தவைகளில் ஒன்று.

உயரம் ஐநூற்று ஐம்பத்தி ஐந்து அடிக்கும் கொஞ்சம் அதிகமாகும்;
உள்ளே 'எலிவேட்டரில்' சென்று, மேலிருந்து நகரைக் காணலாம்.

அனுமதி இலவசம் ஆனாலும், முன் அனுமதியும் தேவையாகும்.
அனுமதி முதலில் சென்று வேண்டுவோருக்கும் கிடைக்குமாம்.

அழகிய ஒரு குளத்தின் எதிராக அமைந்துள்ளதால், பிரதிபலிப்பு,
அழகாகக் குளத்திலும் தெரிகின்றது, நம் தாஜ் மகாலைப் போல.

035%20WASHINGTON%20MONUMENT%20AND%20POOL.jpg


இந்தக் குளம் 2029 அடி நீளம், 167 அடி அகலத்தில் அமைந்துள்ளது;
இதன் நடுவில் ஆழம் 30 அங்குலம்; ஓரத்தில் 18 அங்குலம் உள்ளது.

புகைப்படக் கலைஞர்களை மிகவும் கவர்ந்த இடம் இது; ஏனெனில்
திகைப்பூட்டும் விதம், லிங்கனின் நினைவகமும் பிரதிபலிக்கிறது!

037%20reflecting-pool-washington-dc.jpg


அருகிலே லிங்கனின் நினைவகம் இருந்தாலும், உள்ளே செல்லாது,
அருகிலே சென்று, வெளிப்புறம் பார்த்தோம், நேரக் குறைவினால்!

பூங்காவைச் சுற்றி வந்து புகைப்படங்கள் எடுத்தபின், சென்றோம்
பாங்காக அமைந்துள்ள வெள்ளை மாளிகையை தரிசனம் செய்ய!

கிறிஸ்துமஸ் மரம் போன்ற மரங்கள் முன்னே இருந்தன; அவற்றில்
கிறிஸ்துமஸ் நேரம், வண்ண விளக்குகள் அலங்காரம் செய்வாராம்!

நிறைய சுற்றுலாப் பயணிகள் இடத்தை ஆக்கிரமித்தனர்; நாங்கள்
விரைவாகச்சுற்றிவிட்டு, SANDWICH உண்ண உணவகம் நாடினோம்.

:hungry:

தொடரும்..................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 36

அருங்காட்சியகங்களில் முதன்மையானது SMITHSONIAN ஆகும்;
அருமையான பல பகுதிகளாக, சிறப்புற அமைத்துள்ளார். அதில்

கலைப் பகுதியில் விரைவாக ஒரு சுற்றுச் சுற்றி ரசித்துவிட்டு,
களைப்படையும் வரை விஞ்ஞானப் பகுதியைப் பார்த்துவிட்டு,

பரிசுப் பொருட்கள் சிலவற்றை, எப்போதும்போல வாங்கிவிட்டு,
பரிசளிக்க WASHINGTON பெயரிட்ட சட்டைகள் சில வாங்கினோம்.

அற்ப ஆசைகளை அவ்வப்போது தீர்க்கச் சொல்லுவார் தந்தை;
சொற்பச் செலவிலேயே டைனோசார், விமான பொம்மைகள்!

நாசா தயாரித்த சிறந்த பேனா வாங்கினோம்; அதன் பெருமை
நாசா சொற்களில்,'இது விண்வெளியிலும் எழுதுகின்ற பேனா!'

'நீரின் உள்ளேயும், தலைகீழாயும், எண்ணை பட்ட பேப்பரிலும்,
நீரில் நனைத்த பேப்பரிலும், மிக அதிக வெப்ப நிலையிலும்,

விண்வெளியிலும் எழுதும் பேனா தேவை', எனக் கேட்டதும்,
விண்ணோரின் வரத்தால் வந்ததுபோல உள்ளது, இந்த பேனா!

வரம் தருவது போல, நீரிலும், நனைந்த பேப்பரிலும், மிகச் சூடு
வரும் இடத்திலும், தலைகீழாயும், எழுதும் 'ZERO GRAVITY PEN'!

புவியீர்ப்பு விசை இல்லாவிடின் மைப் பேனா எழுதாதாம்; இது
புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் எழுதுவது சிறப்புதானே!

040%20ANTI%20GRAVITY%20PEN.jpg


ரஷ்யா நாட்டினரிடம் இது பற்றிப் பெருமையாகக் கூறி, 'உங்கள்
ரஷ்ய விண்வெளி வீரர்கள் எழுத, என்ன கொடுத்தீர்கள்?' என்று

சின்னக் கேள்வி கேட்ட பொழுது, ரஷ்யர்கள் உரைத்தனராம், ஒரு
சின்னப் புன்னகையோடு,'நாங்கள் நல்ல பென்சில் கொடுத்தோம்!'

எங்கள் மகன் சொன்ன இந்த விஷயம் கேட்டு, எப்படி ரஷ்யர்கள்
தங்கள் சாதுரியத்தை வெளிப்படுத்துகிறார், என்று வியந்தேன்!

என்னவரின் தங்கை மகன் பட்டமளிப்பு விழா வரும்; அவனுக்கு,
எங்கள் வகையாக சிறப்புப் பேனாதான் அன்றைக்குப் பரிசாகும்!

மீண்டும் DELAWARE திரும்பினோம் இரவு நேரத்திற்குள்; மறுநாள்
வேண்டும் வரம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி கோவில் காண விழைந்தோம்.

:bounce: . . தொடரும்......................
 

Latest posts

Latest ads

Back
Top