#2735 to #2738
#2735. போதல், புகுதல் இல்லை!
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.
யானையை அடக்குவதற்கு ஒரு சிறிய அங்குசம் போதுமானது. சீவனின் அறிவில் தோம் தீம் என்ற தாளத்துக்கு ஏற்பச் சிவன் சுழுமுனையில் நடனம் புரிவான். அப்போது சீவனின் மனம் வெளியே செல்வதை விட்டு விட்டு அங்குசத்திற்கு அடங்கிய யானையைப் போல அடங்கிவிடும்.
#2736. ஞானத்துள் ஆடி முடிக்கும் நாதன்
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.
சீவன்களின் அறியாமையைப் போக்க விரும்பிய சிவன் நடனம் ஆடினான். சீவன்களின் அறியாமை நீங்கிச் சீவர்கள் அறிவு பெற்ற பின்பு, உயிர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடினான். மூன்று நாடிகளும் பொருந்தும் சுழுமுனையில் நின்று ஆடினான். எல்லையற்ற சிவஞானத்தில் நின்று ஆடினான். சிவன் எனக்குள் புகுந்து என் உயிர் அறிவைக் கெடுத்து அருள் செய்தான்.
#2737. தொல் நடனம் ஆடுவான்
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே
சிவன் நடனம் செய்யும் இடங்கள்:
பிராமி, வைணவி, ரௌத்திரி, காளி, மனோன்மனி என்னும் சக்திகள் ஐவர்;
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற ஐந்து சிவபேதங்கள்;
மூர்த்திகள் எண்மர் லயம் அடையும் எட்டு இடங்கள்; அணிமா முதலிய எட்டுச் சித்திகளின் நிலைகள்; சிவ பாதங்களின் எட்டு நிலைகள்; சுத்தி கர்மங்கள் எட்டு என்ற இவற்றுள் சிவன் நடனம் புரிகின்றான்.
#2738. நந்தி அடிக்கீழ் அடங்குமே.
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.
சிவபிரானின் திருவடிகளுக்குக் கீழே அடங்கி இருப்பவை இவை:-
1. மேகங்கள் ஏழு:
ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம்
2. கடல்கள் ஏழு:-
உப்புக்கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், தூய நீர்க்கடல்
3. தீவுகள் ஏழு:-
நாவலந்தீவு, இறலித் தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத் தீவு, இளவந்தீவு, தெங்கத் தீவு, புட்கரத் தீவு
4. உயிரினங்கள் ஏழு:-
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
5. சிவ பேதங்கள் ஏழு:-
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், நாதம், விந்து
6. ஏழு நாக்குக்களை உடைய அக்கினி.
7. சாந்திகள் ஏழு:-
ஐந்து இந்திரியங்கள் + மனம் + புத்தி