• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 40 ( 1 to 5 )

பூதனா மோக்ஷம்

தத3னு நந்த3 மமந்த3 சு’பா4ஸ்பதம்
ந்ருப புரீம் கரதா3ன க்ருதே க3தம் |
ஸமவலோக்ய ஜகா3த3 ப4வத்பிதா
விதி3த கம்ஸ ஸஹாய ஜனோத்3யம: ||(40 – 1)

அதன் பிறகு கம்சனுடைய சகாய பூதர்களின் பிரயத்தனத்தை அறிந்த வசுதேவர், கப்பம் கட்ட மதுராபுரிக்குச் சென்ற, அளவற்ற நற்குணங்களின் இருப்பிடமாகிய, உங்கள் தந்தை நந்த கோபனிடம் இங்ஙனம் உரைத்தார்.


அயி ஸகே தவ பா3லக ஜன்ம மாம்
ஸுக யதேத்3ய நிஜாத்மஜ ஜன்மவத் |
இதி ப4வத் பித்ருதாம் வ்ரஜநாயகே
ஸமதி4ரோப்ய ச’ச’ம்ஸ தமாதராத் ||(40 – 2 )

“தோழனே! உமக்குப் பிள்ளை பிறந்த செய்தி எனக்குப் பிள்ளை பிறந்ததைப் போலவே என்னை ஆனந்தப் படுத்துகின்றது இப்போது. ” வசுதேவர் தங்கள் பிதாவாக இருக்கும் தன்மையை நந்தகோபரிடம் ஆரோபணம் செய்து அந்த நண்பனை ஆதரவுடன் துதித்தார்.


இஹ ச ஸந்த்ய நிமித்த ச’தானி தே
கடகஸீம்னி ததோ லகு4 க3ம்யதாம் |
இதி ச தத்3வசஸா வ்ரஜநாயகோ
ப3வத3 பாயபி4யா த்ருத மாயயௌ ||(40 – 3)

“உமக்கு இவ்விடத்திலேயே அனேக அபசகுனங்கள் தோன்றுகின்றன. ஆகையால் கோகுலத்துக்கு விரைந்து செல்ல வேண்டும்!” என்கின்ற வசுதேவரின் சொற்களால் நந்தகோபன் தங்களுக்கு ஆபத்து உண்டாகும் என்றஞ்சி விரைந்து கோகுலம் வந்தார்.


அவஸரே கலுதத்ர ச காசன
வ்ரஜபதே மது4ராக்ருதிரங்க3னா |
தரல ஷட்பத3 லாலித குந்தலா
கபடபோதக தே நிகடம் க3தா || (40 – 4)

“ஹே கபட சிசுவே! அந்த சமயத்தில் சலிக்கின்ற வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும், மனோஹர உருவம் உடையவளும் ஆகிய ஒரு ஸ்த்ரீ கோகுலத்தில் தங்கள் அருகே வந்தாள் அல்லவா?


ஸபதி3 ஸா ஹ்ருதபா3லக சேதனா
நிசி’சரான் வயஜா கில பூதனா |
வ்ரஜ வதூ4ஷ்விஹ கேயமிதி க்ஷணம்
விம்ருஷதீஷு ப4வந்தமுபாத3தே3 ||(40 – 5)

உடனே குழந்தைகளின் பிராணனை அபஹரிப்பவளும், அரக்கர் குலத்தில் ஜனித்தவளும் ஆகிய அந்த பூதனையை, கோகுலத்தில் பார்த்த கோபஸ்திரீகள் “இவள் யார்?” என்று ஆலோசிக்கும் போதே அவள் தங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டாள் அல்லவா?
 
[h=1]“நாராயணா!”[/h]

“நாராயணா!” எனும் நாமத்தை
நாவாறச் சொன்னாலே போதும் ;
நன்மைகள் நம்மைச் சூழும், பல
வண்மைகள் நம்மை வந்தடையும் .

அந்தண குலத்தில் பிறந்து, குலத்தின்
அறங்களைக் கைவிட்டு வாழ்ந்தும்,
நாராயண நாம வைபவத்தாலேயே
நரகத்தைத் தவிர்த்தவன் கதை இது!

அந்தணன் அஜாமிளன் ஒரு நாள்
தந்தை சொற்படிக் கானகம் சென்றான்.
காமத்தின் வசப்பட்டவனாய், அங்கு ஒரு
காரிகையைக் கண்டு விரும்பினான்.

இழி குலத்தில் பிறந்தவள் அவள்;
இன்பம் அளிப்பதில் கைதேர்ந்தவள்;
குலம், ஆசாரம், கல்வி, தவம் கெடக்
கூடி வாழ்ந்தான், குடும்பம் பெருகிற்று.

கடைக் குட்டியின் பெயர் நாராயணன்;
கடைத்தேறவும் அதுவே உதவியது!
மரண காலத்தில் தன் முன் தோன்றிய
முரட்டுக் கிங்கரரைக் கண்டு அஞ்சினான்.

நடுங்கிய வண்ணம் நாவாற அழைத்தான்,
“நாராயணா!” என்று தன் செல்ல மகனை!
விஷ்ணு தூதர்கள் வந்தனர் விரைவிலே
யே;
விவாதம் துவங்கிற்று குழுக்களிடையே!

பாவங்களைப் பட்டியல் இட்டு
படித்துக் காட்டினர் யம கிங்கரர்;
பகவான் நாமத்தைச் சொன்னதுமே,
பாவம் தொலைந்தது என்றனர் தூதர்.

இறுதியில் வென்றனர் விஷ்ணு தூதர்கள்.
சடுதியில் நற்கதி அடைந்தான் அஜாமிளன்.
விண்ணப்பித்த கிங்கரரிடம் கூறினான் யமன்,
“விஷ்ணு பக்தரை இனி அணுக வேண்டாம்”.

நெருப்பு, சருகுகளை எரிப்பது போலும்,
மருந்து, நோய்களை அழிப்பது போலும்,
நாராயணனின் நாமம், நவின்றவர்களின்
நூறாயிரம் பாவங்களை அழித்துவிடும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 40 ( 6 to 10 )

பூதனா மோக்ஷம்
லலிதா பா4வ ஹ்ருதாத்மபி:
யுவதிபி: ப்ரதிரோத்4துமபாரிதா |
ஸ்தானமசௌ ப4வனாந்த நிஷேதுஷீ
ப்ரத3து3ஷீ ப4வதே கபடாத்மனே ||(40 – 6)


அந்த பூதனையின் மனோஹரமான சாத்விகபாவங்களாலும், அங்க அசைவுகளாலும் கவரப் பட்ட மனத்தை உடைய கோப ஸ்த்ரீக்களால் அவளைத் தடுக்க இயலவில்லை. அவள் வீட்டினுள் அமர்ந்து கபட ரூபியாகிய தங்களுக்கு முலைப்பால் கொடுத்தாள் அல்லவா?


ஸமதி3ருஹ்ய த்வத3ங்கமஷங்கித:
தவ மத2 பா3லக லோபன ரோஷித:|
மஹதிவாம்ரபலம் குச மண்ட3லம்
ப்ரதிசுசூஷித து3ர்விஷ தூ3ஷிதம் ||(40 – 7)

உடனே தாங்கள் பல குழந்தைகளை அவள் கொன்றதால் கோபம் அடைந்தவராக, அச்சம் என்பதே அற்றவராக, அவள் மடியில் ஏறி அமர்ந்தீர்.பெரிய மாம்பழத்தைப் போன்றதும் கடும் விஷத்தால் கெடுதியுற்றதுமான ஸ்தன மண்டலத்தை அடியோடு உறிஞ்சிக் குடித்தீர் அல்லவா?


அஸுபி4ரேவ ஸமம்த4யதி த்வயி
ஸ்தனமசௌ ஸ்தநிதோபம நிஸ்வனா |
நிரபதத்3 ப4வதா3யி நிஜம் வபு :
ப்ரதிக3தா ப்ரவிஸார்ய பு4ஜாவுபௌ4 ||(40 – 8)

தாங்கள் அவள் பிராணனோடு கூடவே அவள் முலைப் பால் குடிக்கும் போது, அந்தப் பூதனை இடிக்கு ஒப்பான குரலுடன், பயத்தை உண்டு பண்ணும் தன் நிஜ உருவத்தை அடைந்து இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு கீழே விழுந்தாள் அல்லவா?


ப4யத3 கோ4ஷண பீ4ஷண விக்3ரஹா
ஸ்ரவண த3ர்ச’ன மோஹித வல்லவே |
வ்ரஜபதே3 தது3ர: ஸ்தல கே2லனம்
நனு ப4வந்த மக்3ருஹ்ணத கோ3பிகா: ||(40 – 9)

பயம் தரும் குரலைக் கேட்டும், பயங்கர சரீரத்தைக் கண்டும் மயக்கம் அடைந்தனர் கோகுலவாசிகள். அவள் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த தங்களை கோபிகைகள் வந்து எடுத்தார்கள் அல்லவா?

பு4வன மங்க4ள நாமபி4ரேவ தே
யுவதிபி4ர் ப3ஹுதா4 க்ருத ரக்ஷணா |
தவமயி வாதநிகேதன நாத2 மாம்
அக3த3யன் குரு தாவக சேவகம் ||(40 – 10)

ஜகத் மங்கள ரூபியாகிய குருவாயூரப்பனே! பெண்கள் தங்கள் திரு நாமங்களைக் கொண்டே தங்களுக்குப் பல விதங்களிலும் ரக்ஷை செய்தது விந்தை அல்லவா? என்னை ரோகம் அற்றவனாகச் செய்து தங்களின் சேவகனாகச் செய்திட வேண்டும்.
 
தோற்றம், நோக்கம்



தோற்றமும் நோக்கமும் எதிர்மறை ஆகலாம்;
தோற்றங்கள் நம்மை முற்றிலும் ஏமாற்றலாம்.
நோக்கம் என்ன என்று அறியும் வரையில் நாம்
தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடக் கூடாது.

வேதனை இதுவே எவருமே அறியவில்லை,
பூதனை வந்தது கண்ணனை அழிக்க என்று!
மயக்கும் மனோகரப் பெண் போல வந்து
மாயக் கண்ணனைக் கொல்ல எண்ணினாள்.

வண்டுகள் மொய்க்கும் மலர்க் கூந்தல்;
வண்டுகளாகச் சுழலும் கரு விழிகள்;
பட்டு ஆடைகள் பலப்பல ஆபரணங்கள்;
தொட்டால் துவளும் மெல்லிய உடல்.

சொந்த பந்தம் போல வீட்டின் உள்ளே
வந்தவளைக் கண்டு மயங்கியவர்கள்,
சந்தேகிக்கவே இல்லை அவள் நோக்கத்தை;
சந்தித்த மகிழ்ச்சியில் தடுக்கவும் இல்லை!

கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டவள்
கண் மறைவாகச் சென்று அமர்ந்து,
தாய் போலப் பாலூட்டும் பாவனையில்,
பேய் போலக் கொடும் நஞ்சை ஊட்டினாள்!

பாவியின் நோக்கம் அறிந்த கண்ணன், அவள்
ஆவியையும் பாலுடன் சேர்த்துப் பருகவே,
ஆவி பிரியும் வேதனையில் அந்தப் பாவி
கூவிக் கூவித் தன் உயிரையும் துறந்தாள்.

துறவியின் உடையிலும் கொல்லும் வாள்
மறைந்து இருந்த கதையை மறந்திடோம்!
வெளித் தோற்றத்துக்கு மயங்கிவிடாமல்
உள்நோக்கத்தின் உண்மையை உணர்வோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 41 ( 1 to 5)

பூதனா தே3ஹ த3ஹனம்

வ்ரஜேச்’வர: சௌ’ரி வசோ நிச’ம்ய
ஸமாவ்ரஜன் நத்4வனி பீ4த சேதா: |
நிஷ்பிஷ்ட நிச்’சேஷ தரும் நிரீக்ஷ்ய
கஞ்சித் பதா3ர்த்த2ம் ச’ரணம் க3தஸ்த்வாம் ||(41 – 1)


வசுதேவர் கூறியதைக் கேட்டு நந்தகோபர் விரைந்து திரும்பி வரும்போது; வழியில் மரங்களை எல்லாம் பொடியாக்கிவிட்டு இன்னதென்று இனம் காண முடியாத ஒரு பெரிய வஸ்துவைக் கண்டார். பயந்து கொண்டு, தங்கள் ரக்ஷைக்காக பரபிரம்மா ஸ்வரூபியும் சித்பதத்தில் வசிப்பவனும் ஆகிய தங்களையே சரணமடைந்து வீட்டுக்கு அருகே வந்து தங்கள் அருகிலும் வந்தார் அல்லவா? (41-1)


நிச’ம்ய கோ3பி வசனா து3த3ந்தம்
ஸர்வேபி கோ3பா ப4ய விச்மயாந்தா4: |
தத் பாதிதம் கோர பிசா’ச தே3ஹம்
தே3ஹூர் விதூ3ரேத2 குட2ர க்ருத்தம் ||(41 – 2)

அதன் பிறகு கோப ஸ்த்ரீக்களின் வசனத்தால் நடந்த வற்றை அறிந்து கொண்ட கோபர்கள், பயத்தாலும் ஆச்சரியத்தாலும் பீடிக்கப் பட்டனர் . தாங்கள் வீழ்த்திய அந்த பயங்கரமான பூதனையின் உடலை மழுவால் வெட்டி வெகு தூரத்தில் கொண்டு சென்று எரித்தனர் அல்லவா? (41-2)


த்வத்பீத பூதஸ்தன தச்ச2ரீராத்
ஸமுச்சலன்னுச்சதரோ ஹி தூ4ம: |
சங்காமதா4தா3க3ரவ: கிமேஷ :கிம்
சந்த3னோ கௌ3ல்கு3ல வோத2வேதி || (41 – 3)


தங்களால் பானம் செய்யப் பட்டதுமே பரிசுத்தம் அடைந்த ஸ்தனங்களை உடைய அந்த பூதனையின் தேஹத்தில் இருந்து மிக உயரமாகக் கிளம்பிய புகை “இது அகிற்கட்டையின் புகையா, சந்தனந்தின் புகையா அல்லது குங்கிலியத்திலிருந்து வரும் புகையா” என்ற சந்தேஹத்தை உண்டு பண்ணிற்று அல்லவா? ( 41 – 3)


மத3ங்க ஸங்கச்ய ப2லம் ந தூ2ரே
க்ஷணேன தாவத்3 ப4வதமபி ஸ்யாத் |
இத்யுல்லபன் வல்லவதல்ல ஜேப்4ய:
ஸ்த்வம் பூதனா மாதநுதா2ஸ்ஸூக3ந்தீ4ம் || (41 – 4 )

என்னுடைய அங்க சங்கத்திற்கு (அங்கங்களின் சேர்க்கைக்கு) பலன் வெகு தூரமாகிய ஜன்மாந்தரத்தில் இல்லை. உங்களுக்கு சீக்கிரமே கிடைத்துவிடும். இதை கோப சிரேஷ்டர்களுக்குக் கூறுவதுபோல பரிசுத்தமான நாமங்கள் உடைய தாங்கள் பூதனையின் உடலைச் சுகந்தம் உடையதாகச் செய்தீர்கள் அல்லவா? ( 41 – 4)


சித்ரம் பிசா’ச்யா ந ஹத: குமார :
சித்ரம் புரைவாகதி2 சௌ’ரிணேத3ம் |
இதி ப்ரச’ம்ஸன் கில கோ3பலோகோ
ப4வந்த முகாலோக ரஸே ந்யமாங்க்ஷீத் ||(41 – 5)


பிசாசி ஆகிய பூதனையால் குழந்தை கொல்லப் படவில்லை! இது ஆச்சரியம்! வசுதேவர் இதை முதலிலேயே கூறினார். அதுவும் ஒரு ஆச்சரியம். இதைச் சொல்லிக் கொண்டே இடையர் குலத்தினர் தங்கள் திரு முகத்தைக் காணும் ஆனந்தத்தில் மூழ்கி விட்டார்கள் அல்லவா? ( 41 – 5)
 
[h=1]அபிமானம், அவமானம்[/h]

பிறந்தவுடன் இருக்காது தேக அபிமானம்!
பிறகு நாம் வளர வளர உடன் வளரும்
நான், எனது என்கின்ற எண்ணங்களும்,
என் தேகம் என்கின்ற அபிமானமும்.

அபிமானம் முற்றும் அழிந்தால் அன்றி
ஆத்மாவைச் சற்றும் அறிய முடியாது!
ஆத்மாவை நன்கு அறிந்தவன், தேக
அபிமானத்தை முற்றிலும் துறப்பான்.

களித்து விளையாடிக் களைத்த பின்னர்,
குளிக்கச் சென்ற கோகுலப் பெண்களின்,
அவிழ்த்து வைத்த ஆடைகளைத் திருடியே,
அழித்தான் அவர்களின் தேக அபிமானத்தை!

கரங்களைக் கூப்பிக் கும்பிட்டபடியே
கரை ஏறும்படிக் கண்ணன் பணித்ததும்,
கண்ணீர் மல்கக் கதறினார் பெண்கள்; பின்
கண நேரத்தில் தேக மயக்கம் ஒழிந்தனர்.

பரம ஹம்சர்களுக்குத் தெரியாது தமக்கு
பாரமான உடல் ஒன்று இருக்கிறது என்றே!
ஆத்மாவில் திளைத்து, இறையில் நிலைத்து,
உடலையும் அறியார்; உடையையும் அறியார்.

அபிமானம் உள்ளவர்களுக்கே ஏற்படும்
அவமானம் என்ற மன மயக்கம் ஒன்று.
அபிமானத்தைத் துறந்துவிட்டால் பிறகு
அவமானம் ஏது? அல்லது மானம்தான் ஏது?
 
த3ச’கம் 41 (6 to 10)

பூதனா தே3ஹ த3ஹனம்

தி3னே தி3னேSத2 ப்ரதிவ்ருத்3த4 லக்ஷ்மி :
அக்ஷீண மாங்க3ல்ய ச’தோ வ்ரஜோயம் |
ப4வன்நிவாஸா த3யி வாஸுதே3வ
ப்ரமோத3 ஸாந்த்3ர : பரிதோ விரேஜே ||(41 – 6)


அதன் பிறகு வாசுதேவனே! தங்கள் அங்கு வசித்ததால் அந்த கோகுலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஓங்கி வளர்ந்த ஐஸ்வர்யத்தை உடையதாகவும், என்றும் குன்றாத மங்கள காரியங்கள் நிறைந்ததாகவும், ஆனந்தம் மேலிட்டதாகவும் இருந்தது அல்லவா? ( 41 – 6)


க்3ருஹேஷு தே கோமல ரூபஹாஸ
மித2: கதா2 ஸங்குலிதா: கமன்ய : |
வ்ருத்தேஷு க்ருத்யேஷு ப4வன் நிரீக்ஷா
ஸமாக3தா: ப்ரத்யஹமத்ய நந்த3ன் ||(41 – 7 )


கோபிகைகள் தங்கள் தங்கள் வீடுகளில் உமது அழகான உருவத்தையும், மந்தஹாசத்தையும், பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். வீட்டு வேலைகள் முடிந்ததும் ஒவ்வவொரு நாளும் தங்களைக் காணவந்தனர். கண்டு மகிழ்ந்தனர். ( 41 – 7 )


அஹோ குமாரோ மயி த3த்த த்3ருஷ்டி:
ஸ்மிதம் க்ருதம் மாம் பிரதி வத்ஸகேன |
ஏஹ்யேஹி மா மித்யுபஸார்ய பாணீம்
த்வயீச’ கிம் கிம் ந க்ருதம் வதூ4பி4 : || (41 – 8 )

“ஆச்சரியம்!” “குழந்தை என்னைப் பார்த்தான்!” “குழந்தை என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான்.” “வா வா என்னிடம் வா!” என்று கைகளை நீட்டிய கோபிகள் தங்களுக்காக என்ன தான் செய்யவில்லை. (41 – 8 )


ப4வத்3 வபு ச்’பர்ச’ன கௌதுகேன
கராத் கரம் கோ3ப வதூ4 ஜனேன |
நீதஸ்த்வமாதாம்ர ஸரோஜா மாலா
வ்யாலம்பி3 லோலம்ப3 துலா மலாஸீ : ||(41 – 9)

தங்களின் திருமேனியை ஸ்பரிசிக்கும் குதூஹலத்தில் கோப ஸ்த்ரீக்களின் கையிலிருந்து கைக்கு மாறிய தாங்கள் சிவந்த தாமரைப் புஷ்ப மாலையில் உள்ள ஒரு கரிய வண்டினைப் போன்று காட்சி தந்தீர் அல்லவா ? (41 – 9)


நிபாயயந்தீ ஸ்தனமங்கக3ம் த்வாம்
விலோகயந்தீ வத3னம் ஹஸந்தீ |
தசா’ம் யசோ’தா3 கதமான்ன பே4ஜே ஸ
தாத்3ருஷ : பாஹி ஹரே க3தான் மாம் ||(41 – 10)

மடியில் அமர்த்திக் கொண்டும், ஸ்தனங்களைப் பருகச் செய்தும், தங்களின் திரு முகத்தைக் கண்டு சிரிக்கின்ற யசோதை எத்தகைய உத்தம நிலையை அடைந்தாள். ஹே கிருஷ்ணா! என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்று!
( 41-10)
 
[h=1]துருவ நட்சத்திரம்[/h]

மன்னன் உத்தான பாதனுக்கு
மனைவியர் இருந்தனர் இருவர்;
மிகவும் பிரியமானவள் சுருசி,
மிகுந்த கர்வம் கொண்டவள்.

ஆதரவை இழந்து விட்ட சுநீதியோ
அதிக இறை பக்தி கொண்டவள்.
மகன் துருவனையும் தன் போன்றே
மாதவன் பக்தனாக வளர்த்தாள்.

சுருசியின் மகன் உத்தமனே
மன்னனின் செல்லப் பிள்ளை;
சுநீதியின் மகன் துருவனோ என்றும்
மன்னனை நெருங்கவும் முடியாது.

மன்னன் மடியில் அமர விரும்பியவனை
மாற்றாந்தாய் தொல்லைகள் செய்யவே,
தாயின் சொற்படி இறை அருள் வேண்டி
ஏகினான் கானகம் பச்சிளம் பாலகன்.

முனி நாரதரிடம் உபதேசம் பெற்று
மது வனத்தில் துவங்கினான் தவம்.
அன்னம், ஆகாரம், நீர், காற்று, உறக்கம்
என்று படிப்படியாகக் குறைத்து விட்டான்.

ஐந்து வயது பாலகன் செய்து வந்த
ஐந்து மாதத் தவத்தின் சுவாலை
அனைத்து உலகங்களையும் வாட்ட,
அருள் செய்ய விரைந்தான் பெருமான்.

கண்ணுக்குள் இருந்த அழகிய உருவம்
காணமல் போய்விடவே துணுக்குற்றுக்
கண்களைத் திறந்த துருவன் கண்டது
கண் முன்னேயும் அதே உருவத்தை!

புளகம் அடைந்து பேச்சற்றுப்போன
துருவன் கன்னங்களை, மெல்லவே
புன் சிரிப்புடன் வருடினான் தன்
வெண் சங்கத்தால் நம் இறைவன்!

துருவன் தவத்தை மெச்சி, அவனைத்
துருவ நட்சத்திரமாக ஆக்கிவிட்டான்!
அன்று மட்டும் அல்ல, இன்றுவரையில்
அனைவருக்கும் வழி காட்டுவது துருவனே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 42 (1 to 5 )

ச’கட அஸுர நிக்3ரஹம்

கதா3பி ஜன்மதி3னே தவ ப்ரபோ4
நிமந்த்ரித ஞாதி வதூ4 மஹீ ஸுரா |
மஹனஸஸ்த்வாம் ஸவிதே4 நிதா4ய ஸா
மஹானஸாதௌ3 வவ்ருதே வ்ரஜேச்’வரி ||(42 – 1)


பிரபுவே! ஒரு முறை தங்களுடைய பிறந்த நாள் அன்று கோகுல நாயகியாகிய அந்த யசோதை பந்துக்களையும், பெண்களையும், அந்தணர்களையும் வீட்டுக்கு அழைத்தாள். ஒரு பெரிய வண்டியின் பக்கத்தில் தங்களைப் படுக்க வைத்துவிட்டு அடுக்களையில் வேலை செய்து கொண்டு இருந்தாள். ( 42 – 1)


ததோ ப4வத் த்ராண நியுக்த பாலக
ப்ரபீ4தி ஸம்க்ரந்த3ன சங்குலாரவை:|
விமிச்’ர மச்’ராவி ப4வத் சமீப :
பரிஸ்புடத்3தா3ரு சடச்சடாரவ:||(42 – 2)

அப்போது சட சட என்ற மரம் உடையும் பெரும் சப்தம் கேட்டது. தங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட கோகுலச் சிறுவர்களின் பயந்த குரல் எழுப்பிய ஆரவாரமும் உடன் கேட்டது. (42 – 2)


ததஸ்ததா3 கர்ணன ஸம்ப்3ரம ச்’ரம
ப்ரகம்பி வக்ஷோஜப4ரா வ்ரஜாங்க3னா:|
ப4வந்த மந்தர் த3த்3ருஷுஸ் ஸமந்ததோ
விநிஷ்பதத் தா3ருண தா3ருமத்3யக3ம்||(42 – 3)

அப்போது அந்த ஆரவாரத்தைக் கேட்டு பரபரப்புடன் ஓடி வந்ததால் உண்டான சிரமத்தால் அசைகின்ற ஸ்தனங்களை உடைய கோபஸ்திரீகள் நான்கு புறங்களிலும் பயங்கரமாக வீழ்ந்திருக்கும் மரங்களையும் அவற்றின் நடுவில் இருக்கும் தங்களையும் கண்டனர்.
(42 – 3)


சி’சோ’ரஹோ கிம் கிமபூ4தி3தி த்3ருதம்
ப்ரதா4வ்ய நந்த3: பசு’பாச்’ச பூ4ஸுரா: |
ப4வமந்த மலோக்ய யசோ’தா3 க்4ருதம்
ஸமாச்’வஸன்னச்’ரு ஜலார்த்ர லோசனா: ||(42 – 4)


“கஷ்டம்! குழந்தைக்கு என்ன நேர்ந்தது? என்ன நடந்தது?” என்று கேட்டுக் கொண்டே நந்தகோபனும், இடையர்களும், அந்தணர்களும் கண்ணும் கண்ணீருமாக ஓடிவந்து, யசோதையின் கைகளில் தங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்தனர். (42 – 4)


கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ
விச’ங்கடம் யச்சகடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி3ஹேதி தே ஸ்தி2தா:
ஸ்வநாஸிகாத3த்த கராஸ்த்வ தீ3க்ஷகா: ||(42 – 5)


“இது என்ன? இது என்ன? எங்கிருந்து உண்டானது? விசாலமான வண்டி உடைந்தது மிகவும் ஆச்சரியமே! இதற்கு இந்த இடத்தில ஒரு காரணமும் இல்லை!” என்று கூறி அவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயித்துத் தங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அல்லவா? ( 42 – 5 )
 
கஜேந்திரன் கதை



பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன்,
பாற்கடலில் பாம்பணையின் மீது
பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தன்;
பரமன் நினைவிலே திளைத்திருப்பவன்.

மலய பர்வதத்தில் ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்து இருந்தவன் உணரவில்லை,
குறுமுனி அகத்தியர் தன்னை நாடி
ஒரு விருந்தினராக வந்ததையே!

கண்டும் காணாதது போல இருந்ததைக்
கண்டதும் முனிவர் கொண்ட கோபத்தால்,
கஜேந்திரனாகச் சென்று பிறக்கும்படிக்
கண நேரத்தில் ஒரு சாபம் அளித்தார்.

மறு பிறவியிலும் மாறாத பக்தியும்,
இறை நினைவும் பெற்றிருந்த யானை,
பெரும் யானைக் கூட்டத்தின் அரசனாக,
பெரு வலிவுடைய கஜேந்திரனாக ஆயிற்று!

கந்தர்வன் ஹூ ஹூ, முனிவர் தேவலர்
கால்களை நீரில் மூழ்கிப் பற்றி இழுக்க,
கோபம் கொண்ட முனிவர் கொடுத்தார்
சாபம் ஒரு பெரிய முதலை ஆகும்படி!

இருவரின் சாப விமோசனமும் அன்று
இருந்ததோ ஒரே இறைவன் கையில்!
இருந்தான் பரந்தாமனும் தகுந்த நேரம்
வரும் வரையிலும் காத்துக் கொண்டு!

ஆனையின் காலை முதலை இழுக்க,
ஆயிரம் ஆண்டுகள் இழுபறி நிலைமை!
தன் முயற்சியில் தோல்வியுற்ற யானை
முன் ஜன்ம பக்தியை நினைவு கூர்ந்தது!

தாக்கும் முதலையிடம் இருந்து காக்க,
காக்கும் கடவுள் தாமரைக் கண்ணனைத்
தூக்கிய துதிக்கையில் பற்றிய மலருடன்
நோக்கி அழைத்தது “ஆதி மூலமே” என!

சடுதியில் ஏறினான் தன் கருடன் மீது;
கடுகி விரைந்தான் மடுவின் நீரிடம்;
விடுத்த சக்கரம் பறந்து சென்றது;
அடுத்த நொடியில் முதலை மடிந்தது!

அடைந்தான் ஹூ ஹூ தன் சுய உருவம்;
அடைந்தான் கஜேந்திரன் சாருப்ய முக்தி;
கிடைத்தது மனித குலத்துக்கு உறுதி ஒன்று,
கிடைக்கும் உறுதியாக இறை உதவி என்று!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 42 (6 to 11)

ச’கட அஸுர நிக்3ரஹம்

குமாரகஸ்யாஸ்ய பயோத4ரார்தி2ன:
ப்ரரோத3னே லோல பதாம்புஜாஹதம் |
மயா மயா த்3ருஷ்ட மனோ விபர்யகா3த்
இதீச’ தே பாலக பா3லகா ஜகு3: ||(42 – 6)

“பால் குடிக்க விரும்பிய இந்தக் குழந்தை அழுதது. அழும் போது அசைகின்ற தாமரை போன்ற காலினால் உதைக்கப்பட்ட வண்டி தலை கீழாக விழுந்ததை நான் பார்த்தேன்; நான் பார்த்தேன்!” என்று தங்களுக்குக் காவலாக இருந்த குழந்தைகள் சொன்னார்கள் அல்லவா? (42 – 6)


பி4யா ததா3 கிஞ்சித3ஜானதாமித3ம்
குமார காணா மதி து3ர்க4டம் வச: |
ப4வத் ப்ரபா4வா விது3ரை ரிதீரிதம்
மனாகி3வாச’ங்க்யத த்3ருஷ்ட பூதனை : ||(42 – 7)

அப்போது பயத்தினால் கூறும் இந்தச் சிறிய குழந்தைகளின் சொற்கள் பொருத்தம் அற்றவை என்றே எல்லோரும் எண்ணினார்கள். அவர்கள் தங்களின் மகிமையை அறியாதவர்கள். ஆனால் பூதனையின் கதியைக் கண்டிருந்த நந்தகோபன் முதலானவர்கள் சிறிது சந்தேகம் அடைந்தார்கள் அல்லவா?( 42 -7)


ப்ரவால தாம்ரம் கிமித3ம் பத3ம் க்ஷதம்
ஸரோஜ ரம்யௌ நு கரௌ விரேஜிதௌ |
இதி ப்ரஸர்பத் கருணா தரங்கி3தா:
த்வத3ங்க3 மாபச்’ப்ருஷுரங்க3னா ஜனா:||(42 – 8)


“பவழம் போன்று சிவந்த இந்தக் கால்கள் அடிபட்டனவா? தாமரை போல் இருக்கும் இரு கைகளும் புண்பட்டனவா?” என்று கருணை வெள்ளம் பெருகிய கோப ஸ்திரீகள் தங்கள் திருமேனியைத் தொட்டுத் தொட்டுத் தடவினார்கள் அல்லவா? ( 42 – 8 )


அயி ஸுதம் தே3ஹி ஜக3த்பதே: க்ருபா
தரங்க3 பாதாத்பரிபாதமத்3யமே |
இதி ஸ்ம ஸம்க்3ருஹ்ய பிதா த்வத3ங்க3கம்
முஹூர் முஹு :ச்’ளிஷ்யதி ஜாத கண்டக : ||( 42 – 9 )

ஏ கோபியே! ஜகதீசனுடைய கிருபா கடாக்ஷத்தால் ரக்ஷிக்கப்பட்ட என் குழந்தையை என்னிடம் கொடு.” தங்கள் தந்தை தங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ரோமாஞ்சனம் அடைந்து தங்களுடைய சிறிய சரீரத்தை அடிக்கடி ஆலிங்கனம் செய்துகொண்டார் அல்லவா? (42 – 9)


அனோநிலீன: கில ஹந்து மாக3த:
ஸுராரிரேவம் ப4வதா விஹிம்ஸித: |
ரஜோபி நோ த்3ருஷ்டமமுஷ்ய தத்கத2ம்
ஸ சு’த்த ஸத்வே த்வயி லீனவான் த்4ருவம் || (42 – 10)

வண்டியில் ஒளிந்து கொண்டு தங்களைக் கொல்ல வந்த அசுரன் தங்கல்ல இந்த விதத்தில் கொல்லப் பட்டான் அல்லவா? அந்த அசுரனின் பொடி கூட காணப் படவில்லை. (அந்த அசுரனின் ரஜோ குணம் காணப் படவில்லை). நிச்சயமாக அந்த அசுரன் சுத்த சத்துவ ஸ்வரூபியாகிய தங்களிடம் லயித்துவிட்டான். ( 42 – 10)


ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்3விஜாதி3பி4 :
விசே’ஷதோ லம்பி4த மங்க3லாசி’ஷா:|
வ்ரஜன் நிஜைர் பா3ல்யரசை விமோஹயன்
மருத்புராதீ4ச’ ருஜாம் ஜஹீஹி மே ||(42 – 11)

குருவாயூரப்பா! அதன்பின் அங்கு பிராமணர்கள் நன்கு பூஜிக்கப்பட்டார்கள். தங்களை அவர்கள் விசே ஷமாக மங்கள ஆசீர்வாதம் செய்தார்கள். தங்களுடைய பால்ய சேஷ்டைகளால் கோகுலத்தைக் குதூகலிக்கச் செய்த தாங்களே என் ரோகத்தைப் போக்கி அருள வேண்டும். ( 42 – 11)
 
[h=1]மூர்த்தி, கீர்த்தி[/h]

“மூர்த்தி சிறியது ஆனாலும் அவர்
கீர்த்தி மிகவும் பெரியது” என்பார்;
இந்தச் சொற்களின் விந்தைப் பொருளைச்
சிந்தையில் சேர்க்கும் வாமனன் கதை.

உலகம் மூன்றையும் வென்றதுடன்,
உவந்தவர் உவந்ததை அளிக்கவல்ல
பலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தை
பலி வாங்க வந்தவனே வாமனன்.

“பாரினில் இறங்கிய சனத்குமாரனோ?
சூரியனோ இவன்?” எனக் காண்பார் ஐயுற,
குறு வடிவு எடுத்துக்கொண்டு வந்த
திருமாலின் ஐந்தாவது அவதாரம்!

தன் காலடிகளால் அளக்கப்பட்ட
மூன்றடி மண் மட்டுமே தன் தேவை,
என்ற பாலகனிடம் பலி சொன்னான்,
“மூன்று உலகுமே கேள், நான் தருவேன்!”

“மூன்றடி மண் மனத் திருப்தி தராவிடில்,
மூன்று உலகமும் அதைத் தராது அன்றோ?
மூன்றடி மண்ணே எனக்குப் போதும்;
மூன்று உலகங்கள் வேண்டவே வேண்டாம்!”

மூன்று உலகங்களுக்கு அதிபதியானவன்,
மூன்று அடி மண் கொடுக்க இயலாதபடி,
வளர்ந்தான் வாமனன் வானளாவியபடி;
அளந்தான் ஈரடியால் ஈருலகங்களை!

மண்ணைத் தன் ஓரடியாலும், பின்னர்
விண்ணைத் தன் ஓரடியாலும் அளந்தவன்,
அடுத்த அடியை வைக்க இடம் கேட்டு,
கெடுத்தான் மகா பலியின் கர்வத்தை!

தன் தலையையே மூன்றாம் அடியைத்
தாங்க அளித்தான் தன் சொல் காக்க;
தயங்காமல் தன் அகந்தையை விட்டுத்
தந்ததால், பலிக்கு இன்று வரை ஓணம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 43 (1 to 5)

த்ருணாவர்த்த வத4ம்

த்வாமேகதா3 கு3ருமருத் புரநாத2 வோடு4ம்
கா3டா3திரூட4 க3ரிமாண மபாரயந்தி |
மாதா நிதா4ய ச’யனே கிமித3ம் ப 3தேதி
த்4யாயந்த்ய சேஷ்ட க்3ருஹேஷு நிவிஷ்ட ச’ங்கா ||(43 – 1)


குருவாயூரப்பா! கரிமா என்ற யோகா சித்தியை ஒரு நாள் நீங்கள் ஏற்று மிகவும் கனமாகிவிட்டீர்கள். தாய் யசோதை உங்கள் கனத்தைத் தாங்கமுடியாமல் கீழே இறக்கிப் படுக்கையில் விட்டு விட்டு தங்களை எண்ணிக் கவலை கொண்டவளாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ( 43 – 1)


தாவத்3 விதூ3ரம் உபகர்ணித கோ4ர கோ4ஷ
வ்யாஜ்ரும்பி4 பாம்ஸுபடலி பரி பூரிதாச’:|
வாத்யாவபு: ஸ கில தை3த்யவரஸ்த்ருணாவ
தார்க்2யோ ஜஹாரா ஜனமானஸ ஹாரிணீம் த்வாம் ||(43 – 2)

அப்போது வெகு தூரத்தில் பயங்கர சப்தத்துடன், உயரக் கிளம்பிய தூளிப் படலத்தால் திக்குகளை மறைத்துக் கொண்டு, சுழல் காற்றின் வடிவம் கொண்ட திருணாவர்த்தன் என்னும் பெயருடய அசுரன் ஜனங்களின் மனத்தைக் கவரும் தங்களை கவர்ந்து சென்று விட்டான் அல்லவா? (43 – 2)


உத்3தா3ம பாம்ஸு திமிராஹத த்3ருஷ்டிபாதே
த்3ரஷ்டும் கிமப்ய குச’லே பசு’பால லோகே |
ஹா பா3லகஸ்ய கிமிதி த்வது3பாந்த மாப்தா
மாதா ப3வந்தமவிலோக்ய ப்4ருச’ம் ருரோத3 ||(43 – 3 )


எல்லையற்ற புழுதிப் படலத்தால் கண்கள் மறைக்கப்பட்ட இடையர்கள், ஒன்றையும் காண முடியாமல் இருந்த போது, உங்களைக் காணாத யசோதை, “ஐயோ என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது ?” என்று கதறி உரக்கக் அழுதாள் அல்லவா? (43 – 3)


தாவத்ஸ வரோபி ச தீ3ன மூர்த்தி :
பா4வத்க பா4ர பரிதா4ரண லூன வேக3 : |
ஸங்கோச மாப தத3னு க்ஷத பாம்ஸு கோ4ஷே
கோ4ஷே வ்தாயாத ப4வஜ்ஜனனி நிநாத3 : ||(43 – 4)

அப்போது அந்த வலிய அசுரனும் உங்கள் பாரத்தைச் சுமக்க முடியாமல் வேகம் குன்றினான். பிறகு அசைவற்று நின்றுவிட்டான். அதன் பின் புழுதியும், சப்தமும் அடங்கிய கோகுலத்தில் தங்கள் தாயின் அழுகுரல் ஓசை பெருகியது அல்லவா? ( 43 – 4)


ரோதோ3ப கர்ணன வசா’து3பக3ம்ய கே3ஹம்
க்ரந்த3ஸ்து நந்த3முக கோ3ப குலேஷு தீ3ன : |
த்வாம் தா3னவஸ்த்வகி2ல முக்திகரம் முமுக்ஷு :
த்வய்ய ப்ரமுஞ்சதி பாபாத வியத் ப்ரதே3சா’த் ||(43 – 5 )


அழுகுரல் ஓசையைக் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்த நந்தன் முதலிய கோபர்களும் அழுது கொண்டு இருக்கும் போது, அந்த அசுரன் மிகவும் சோர்வடைந்து, எல்லோருக்கும் முக்தி அளிக்கும் தங்களை விட்டு விட விரும்பினான். ஆனால் தாங்கள் அவனை விடாததால் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்தான் அல்லவா?( 43 – 5)
 
[h=1]குறும்புக்காரன்[/h]

குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!

எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.

முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?

இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?

கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?

நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!

குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
.
 
த3ச’கம் 43 ( 6 to 10)

த்ருணாவர்த்த வத4ம்

ரோதா3குலஸ் தத3னு கோ3ப க3ணா ப3ஹிஷ்ட
பாஷாண ப்ருஷ்ட பு4வி தேஹமதி ஸ்த4விஷ்டம் |
ப்ரக்ஷைந்த ஹந்த நிபதந்த மமுஷ்ய வக்ஷஸி
அக்ஷிண மேவ ச ப4வந்தமலம் ஹஸந்தம் ||( 43 – 6 )


அதற்குப் பிறகு அழுது கொண்டு இருந்த இடையர்கள் வெளியில் பாறை மேல் விழுந்த மிகப் பெரிய சரீரத்தையும், அதன் மார்பில் சிறிதும் களைப்படையாமல் நன்றாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் தங்களைக் கண்டு அதிசயத்தில் மூழ்கினார்கள் அல்லவா?(43 – 6)


க்3ராவ ப்ரபாத பரிபிஷ்ட க3ரிஷ்ட தே3ஹே
ப்4ரஷ்டாசு து3ஷ்ட த3னுஜோபரி த்4ருஷ்ட ஹாஸம் |
ஆக்4னான மம்பு3ஜ கரேண ப4வந்த மேத்ய
கோ3பா த3து4ர்கி3ரிவரா திவ நீலரத்னம் ||(43 – 7)


பாறையின் மேல் விழுந்ததால் சிதைந்த பெருத்த சரீரத்திலிருந்து பிராணன் பிரிந்து போன துஷ்ட அசுரன் மேல் தாமரை போன்ற கையால் அடித்துக் கொண்டும், உரக்கச் சிரித்துக் கொண்டும் இருந்த தங்களை கோபர்களும், கோபிகைகளும் பெரிய மலையில் இருந்து ஒரு நீல நிற ரத்தினத்தை எடுப்பது போல எடுத்து வந்தார்கள் அல்லவா? (43 – 7)


ஏகைக மாசு’ பரிக்3ருஹ்ய நிகாமனந்த3
நந்தா3தி3 கோ3ப பரிரப்3த4 விசும்பி3தாங்க3ம் |
ஆதா3து காம பரிச’ங்கித கோ3பநாரீ
ஹஸ்தாம்பு3ஜ ப்ரபதிதம் ப்ரணுமோ ப4வந்தம் || ( 43 – 8)

மிகவும் சந்தோஷம் அடைந்த நந்தன் முதலிய கோபர்கள் ஒவ்வொருவராக சீக்கிரம் எடுத்து ஆலிங்கனம் செய்தும் முத்தமிட்டும் மகிழ்ந்தார்கள். தங்களை எடுத்துக் கொள்ள விரும்பிய கோபிகைகளின் தாமைரைப் பூ போன்ற கரங்களில் தாவி விழுந்த தங்களைத் துதிக்கின்றோம். ( 43 – 8)


பூ4யோபி கின்னு க்ருணும:ப்ரணதார்த்திஹாரீ
கோவிந்த3 ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந : |
இத்யாதி3 மாதர பித்ரு ப்ரமுகைஸ் ததா3னீம்
ஸம்ப்ரார்திதஸ் த்வத3வனாய விபோ4 த்வமேவ ||(43 – 9 )


“நாங்கள் என்ன செய்வோம்?தன்னை வணங்கிய அடியவர்களின் துயரங்களைப் போக்கும் மஹா விஷ்ணுவே ! எங்கள் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று அப்போது தாய், தந்தை முதலிய கோபர்கள் தங்களைக் காப்பதற்கு தங்களையே பிரார்த்தித்தார்கள் அல்லவா? (43 – 9)


வாதாத்மகம் த3னுஜ மேவமயி ப்ரதூ4ன்வன்
வாதோத்3ப4வான் மம க3தா3ன் கிமி நோ து3னோஷி |
கிம்வா கரோமி புனரப்யநிலாலயேசா’
நிச்’சே’ஷ ரோக ச’மனம் முஹூரர்த2யே த்வாம் ||(43 – 10)

பகவானே! வாத ரூபியான (சுழலக் காற்று ரூபியான) அசுரனை இவ்விதம் சம்ஹாரம் செய்த தாங்கள் வாதத்தினால் உண்டான எனது ரோகங்களை ஏன் நாசம் செய்வதில்லை? என்னால் வேறு என்ன தான் செய்ய முடியும்? ஹே குருவயூரப்பா! மீண்டும் மீண்டும் நான் மிச்சமில்லாத ரோக நிவாரணத்தையேத் தங்களிடம் வேண்டுகிறேன். ( 43 – 10)
 
உரலும், மரமும்



“கர்வம் தான் அழிவின் ஆரம்பம்” என்று
கற்றோர் மற்றோருக்கு கூறுவது உண்டு;
பதவி, பணம், இளமை ஒன்றானால்
பதவிசு என்பதையே அழித்துவிடும்!

குபேரனின் மகன் நளகூபரன்;
குபேர சம்பத்து குடும்பச் சொத்து!
மணிக்ரீவன் மாறா நட்புடையவன்;
மமதை தலைக்கேற இதுவே போதும்!

ஈஸ்வரனை நன்கு ஆராதித்து அந்த
ஈசன் கருணையால் பெற்ற பெருமை,
பணிவைத் தரவில்லை; துணிவையும்
பணத்தின் மமதையையும் அளித்தது.

கங்கை ஆற்று நீரில் பல அழகிய
மங்கைகளுடன் செய்தனர் ஜலக்ரீடை;
மிருகங்கள் போலவே, மதுவெறியில்
ஒரு வித ஆடையும் அணியாமலேயே!

வழியே நடந்து வந்த நாரதரைக் கண்டு,
பழிக்கு அஞ்சிய இளம் பெண்கள் மட்டும்
விரைந்து ஆடைகள் அணிந்து கொள்ள;
விறைத்து மரம் போல நின்றனர் ஆண்கள்.

மரம் போல அசையாமல் நின்றவர்களை,
மரமாகும்படிச் சபித்து விட்டார் நாரதர்!
கண்ணன் அருளால் மட்டுமே அவர்கள்
கண்கவர் உருவம் மீண்டும் பெற முடியும்!

வருத்தத்துடன் பூமிக்கு இறங்கியவர்
மருத மரங்களாகி நின்றனர் நெடுநாள்!
உரலில் கட்டப்பட்டு ஊர்ந்த கண்ணன்
உருவம் முன்போல அளித்துக் காத்தான்!

ஒளி மயமான உடலை அடைந்தவர்
ஒளி மயமான உலகம் மீண்டனர்.
களியாட்டங்களை விட்டு ஒழித்து
கனவான்களாக வாழலாயினர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
த3ச’கம் 44 ( 1 to 5 )

நாம கரணம்

கூ3ட4ம் வஸுதே3வ கி3ரா கர்த்தும் தே
நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரான் |
ஹ்ருத்3க3த ஹோரா தத்வே க3ர்க3 முனீஸ்
த்வத்3 க்3ருஹம் விபோ4 க3தவான் ||(44 – 1)


பிரபுவே! வசுதேவரின் வாக்கைக் கேட்டு; எந்தக் கிரியைகளும் அற்ற தங்களுக்கு நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரக் கிரியைகளை யாரும் அறியாமல் ரஹசியமாகச் செய்வதற்கு; ஜோதிட நூல்களின் தத்துவங்களை அறிந்த கர்க முனிவர் தங்கள் கிருஹத்திற்கு வந்தார் அல்லவா? (44 – 1)


நந்தோ3த2 நந்தி3தாத்மா வ்ருந்தி3ஷ்டம்
மானயன்னமும் யாமினாம் |
மந்த3ஸ்மிதார்த்3ர மூசே த்வத் ஸம்ஸ்காரான்
விதா4து முனிச் : ||(44 – 2)

அப்போது நந்தகோபன் சந்தோஷம் அடைந்தவராக, தபஸ்விகளில் சிறந்த அந்த கர்க முனிவரை வெகுமானித்துத் தங்களுக்குச் செய்ய வேண்டிய சமஸ்காரங்களைச் செய்யுமாறு முனிவரிடம் மந்தஹாசத்துடன் கேட்டுக் கொண்டார் அல்லவா? (44 – 2)


யது3வம்சா’ச்சார்யத்வாத் ஸுநிப்4ருத
மித3மார்ய கார்யமிதி கத2யன் |
க3ர்கோ3 நிர்க3த புலகச்’சக்ரே
தவ ஸாக்3ராஜசஸ்ய நாமானி ||(44 – 3 ​)


“ஐயா! நான் யது குலத்திற்கு குருவாக இருப்பதால் இது மிகவும் ரஹசியமாகச் செய்ய வேண்டியது” என்று சொல்லிக் கொண்டு கர்க முனிவர் புளகம் அடைந்தவராகத் தமையனுடன் கூடிய தங்களுக்கு நாமகரணம் செய்தார் அல்லவா? ( 44 – 3)


கத2மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர நாம்னோ
அனந்த நாம்னோ வா |
இதி நூனம் க3ர்க3 முனிச்’சக்ரே
தவ நாம ரஹஸி விபோ4 ||(44 – 4)

பிரபுவே! “ஆயிரம் பெயர்களை உடையவனுக்கு, அளவில்லாத பெயர்களை உடையவனுக்கு எவ்விதம் நாமகரணம் செய்வேன்?” என்று ஆலோசித்துத் தான் கர்க முனிவர் ரஹசியமாகத் தாங்களுக்கு நாமகரணம் செய்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். ( 44 – 4)


க்ருஷி தா3து ணகாரப்4யாம்
ஸத்தாநந்தாத்மதாம் கிலாபி4லபத் |
ஜக3த3க4கர்ஷித்வம் வா கத2யத்3ருஷி:
க்ருஷ்ண நாம தே வ்யதனோத் ||(44 – 5)


கர்க முனிவர், ‘க்ருஷி’ தாது ‘ண’ காரம் இவைகளைக் கொண்டு ‘சத்’, ‘ஆனந்தம்’ என்ற உருவத்துடன் இருக்கும் தன்மையை வெளிப்படுத்கின்ற அல்லது ஜனங்களின் பாவத்தை அபஹரிக்கும் தன்மையைக் கூறும் கிருஷ்ணன் என்ற பெயரைத் தங்களுக்கு இட்டார்.
( 44 – 5)
 
[h=1]நாம ஜபமே வழி[/h]

யுகங்கள் மாறும்போது உடன் மாறும்
யுக்தி, சக்தி, பக்தி, முக்தி ஆகியனவும்;
முக்தியின் மார்க்கமும் மாறி விடும்,
சக்திகள் யுகங்களில் மாறும்போது.

சத்திய யுகத்தில் இறை வழிபாடு
நித்தியம் அவர் செய்யும் தவமே!
வெண்ணிறமுடைய பிரம்மச்சாரியாய்
தண்ணருள் புரிந்தான் இறைவன் அப்போது!

ஆசாரம் நன்கு நிலவிய காலம் அது,
ஆயுளும் பல ஆயிரம் ஆண்டுகளாம்!
அமைதியும், அடக்கமும் நிரம்பியதாலே
அமைதியாகத் தவம் செய்ய இயலும்!

திரேதா யுகத்தில் இறை வழிபாடு
சிறந்த யாகம், யக்ஞங்கள் மூலம்,
சிவந்த நிறம் கொண்ட யக்ஞரூபியாக
சிறந்து விளங்கினான் இறைவன் அப்போது!

யாகம் செய்யவும் வசதிகள் வேண்டும்;
யாகம் செய்ய வல்ல பல பண்டிதர்களும்,
யாகம் செய்யும் அக்கறையும், உறுதியும்,
யாகப் பொருட்கள் எனப் பலவும் தேவை.

துவாபர யுகத்தில் இறை வழிபாடுகளோ
தந்திர சாஸ்திரங்கள் கூறும் மார்க்கம்.
நீலமேக சியாமள வர்ணனான இறைவன்
நின்றான் கைகளில் கதை, சக்கரம் ஏந்தி!

கலி யுகத்தில் நம் இறைவன் உருவம்
கரு நீல வர்ணமாக மாறிவிட்டது!
முக்தியடைய ஒரே வழி இங்கே நாம்
பக்தியுடன் செய்யும் நாம சங்கீர்த்தனம்!

கலியில் மனித ஆயுள் மிகக் குறைவு,
கலகங்கள் மலிந்து பெருகி விட்டதால்,
காணமுடியவில்லை அமைதியையும்,
கண்ணியத்தையும், ஆசாரத்தையும்!

படித்த பண்டிதர்கள் மிகவும் குறைவு;
பிடித்தவற்றை வாங்க வசதி குறைவு;
நம்பிக்கையோ நாணயமோ இல்லை;
நம்மால் செய்ய இயன்றது நாம ஜெபமே!

“பொருட்செலவு இல்லாதது, ஆகையால்
அருட்செல்வம் அளிக்க இயலாதது ஜபம்”
என மருண்டு மயங்கி நிற்க வேண்டாம்!
அனைத்தும் சமமே இறைவன் பார்வையில்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 44 (6 to 10)

நாம கரணம்

அன்யாம்ச்’ச நாம பே4தா3ன்
வ்யாகுர்வன் அக்3ரஜே ச ராமாதீ3ன் |
அதி மானுஷாபா4வம் ந்யகத3த்தவாம்
அப்ரகாச’யன் பித்ரே ||(44 – 6 )


அந்த கர்க முனிவர் வாசுதேவன் முதலிய மற்ற பெயர்களையும், தமையனுக்கு ராமன் முதலிய பெயர்களையும் அர்த்தத்துடன் விவரமாகக் கூறினார். தங்களை வெளிப்படுத்தாமலேயே தாங்கள் மனிதர்களைக் கடந்த பிரபாவம் உடையவர் என்பதைச் சொன்னாரல்லவா? ( 44 – 6)


ஸ்நிஹ்யதி யஸ்தவ புத்ரே
முஹ்யதி ந மாயிகை: புனச்’சோ’கை : |
த்3ருஹ்யதி யஸ்ஸ து நச்’யே தித்யவத3த்தே
மஹத்வ ம்ருஷிவர்யா: ||(44 -7)


எவன் தங்கள் புத்திரனிடத்தில் அன்பு செலுத்துகின்றானோ அவன் அதற்கு மேல் மறுபடியும் அஞ்ஞானத்தால் உண்டாகும் துக்கங்களால் மோஹம் அடைவதில்லை. எவன் துரோகத்தைச் செய்கின்றானோ அவன் நாசம் அடைவான் என்று அந்த முனி ச்ரேஷ்டர் தங்கள் மகிமையைச் சொன்னார். ( 44 – 7)


ஜேஷ்யதி ப3ஹுதர தை3த்யான்
நேஷ்யதி நிஜப3ந்து4லோகமமலபதம் |
ச்’ரோஷ்யதி ஸுவிமல கீர்த்தீரஸ்யேதி
ப4வத்3 விபூ4தி ம்ருஷி ரூசே ||(44 – 8)

அனேக அசுரர்களை இந்தக் குழந்தை ஜெயிப்பான். தனது பந்து ஜனங்களை பரபிரம்ம ஸ்வரூபத்தை அடைவிப்பான். இந்தக் குழந்தையின் மாசற்ற கீர்த்தியை ஜனங்கள் கேட்கப் போகின்றார்கள் என்றெல்லாம் தங்கள் மகிமைகளைச் சொன்னார் அல்லவா ? (44 – 8)


அமுனைவ ஸர்வ து3ர்க3ம் தாரிதாஸ்த2
க்ருதாஸ்த2 மத்ர திஷ்ட2த்4வம் |
ஹரி ரேவத்யனபி4லபன்னித்யாதி3
த்வாமவர்ணயத் ஸ முனி: ||(44 – 9)

அந்த முனிவர் தங்களைக் குறித்து இவன் மகாவிஷ்ணு தான் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் இந்தக் குழந்தையைக் கொண்டே எல்லா ஆபத்துக்களையும் தாண்டுவீர்கள். இந்தக் குழந்தையை ஆதரவுடன் நம்பி இருங்கள் என்ற எல்லாம் வர்ணித்தார் அல்லவா? (44 – 9 )


க3ர்கோ3த நிர்க3தேஸ்மின் நந்தி3த
நந்தா3தி3 நந்த்3யமானஸ்த்வம் |
மத்3க3த3 முத்3கத கருணோ
நிர்க3ம்ய ஸ்ரீ மருத்புராதீ4ச’ ||(44 – 10)


குருவாயூரப்பா! அந்த கர்கமுனி சென்ற பிறகு நந்தன் முதலியவர்கள் சந்தோஷத்துடன் தங்களைச் சீராட்டினார்கள். அப்படிப்பட்ட தாங்கள் கருணை உண்டானவராக என் அனைத்து வியாதிகளைப் போக்கிட வேண்டும். (44 – 10)
 
[h=1]ஒன்பது வித பக்தி[/h]

அன்பர் செய்யும் பக்தியின் வகைகள்
ஒன்பது ஆகும் என்பது பிரசித்தம்,
ஐம்பொறிகளையும், புலன்களையும்,
ஐயனை வழிபட அமைப்பதாலே!

இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

இறைவனின் பெருமைகளை வாயால்
இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சுக முனி பாடிய பாகவதக் கதையால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும்!

மனதுக்குள் இடையறாது இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு
நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு
ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;
பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்
பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி
எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;
கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,
நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்
அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

சரி நிகர் சமமாகத் தன்னை எண்ணிக்கொண்டு
இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”;
உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன்
கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்
தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்
அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/

 
த3ச’கம் 45 ( 1 to 5)

பா3ல லீலா

அயி ஸப3ல முராரே பாணி ஜானு ப்ரசாரை :
கிமபி ப4வனா பா4கா3ன் பூ4ஷயந்தௌ ப4வந்தௌ |
சலித சரண குஞ்சௌ மஞ்ஜூ மஞ்ஜீர சி’ஞ்ஜா
ச்’ரவண குதுக பா4ஜௌ சேரதுச்’சாரு வேகா3த் ||(45 – 1)


பலராமனோடு கூடிய முராரியே! நீங்கள் இருவரும் தவழ்ந்து செல்வதால் நந்த கோபனுடைய வீட்டின் எல்லா இடங்களையும் இந்த விதம் என்று சொல்ல முடியாதவாறு அலங்கரித்தீர்கள் அல்லவா? சலிப்பிக்கபட்ட பாதாரவிந்தங்களோடு, அழகிய சலங்கையின் இனிய ஓசையைக் கேட்க விரும்பி, இங்கும் அங்கும் வேகமாகவும் சஞ்சரித்தீர்கள் அல்லவா? (45 – 1)


ம்ருது3 ம்ருது3 விஹஸந்தா வுன்மிஷத்3 த3ந்த வந்தௌ
வத3ன பதித கேசௌ’ த்3ருச்’ய பா3தா3ப்3ஜ தே3சௌ’ |
பு4ஜ கலித கராந்த வ்யாலக3த் கங்கணாங்கௌ
மதிமஹரத முச்சை: பச்’யதாம் விஸ்வந்ரூணாம் ||(45 – 2 )


மிகவும் மெதுவாக சிரிக்கும்போது வெளியில் தெரியும் அழகிய பற்கள். திருமுகத்தில் தொங்கும் அழகிய மயிர்க் கற்றைகள் . வஜ்ரம், அங்குசம் இவற்றின் அடையாளங்கள் காணப்படும் அழகிய பாதங்கள். மேல்கைகளில் இருந்து நழுவி விழுந்து மணிக்கட்டுகளில் தங்கும் வளையல்கள் அங்கு ஏற்படுத்தும் அடையாளங்கள். இந்த விதமாக தாங்கள் காண்போர் மனத்தைக் கவர்ந்தீர்கள் அல்லவா? ( 45 – 2)


அனுஸரதி கௌதுக வ்யாகுலாக்ஷே
கிமபி க்ருத நிதா3னம் மா நௌ த்3ரவந்தௌ |
வலித வத3ன பத்3மம் ப்ருஷ்டதோ த3த்த த்3ருஷ்டி
கிமிவ ந வித3தா4தே கௌதுகம் வாஸுதேவ ||(45 – 3)

வசுதேவரின் புதல்வரே! கோகுலத்து ஜனங்கள் குதூகலத்தால் அசையும் கண்களுடன் உங்களைப் பின் தொடர்ந்து வரும்போது, அவ்யக்த மதுரமாகச் சிரித்துக் கொண்டு ஓடுவீர்கள். தாமரை முகங்களைப் பின்புறம் திருப்பிக் கொண்டு நீங்கள் பார்க்கும்போது அவர்கள் எந்த சந்தோஷத்தைத் தான் அடையவில்லை? ( 45 – 3)


த்3ருத க3திஷு பதந்தௌ உத்தி2தௌ லிப்தபங்கௌ
தி3வி முனிபி4ரபங்கை: ஸஸ்மிதம் வந்த்3யா மாநௌ |
த்3ருத மத2 ஜனனீப்4யாம் ஸானுகம்பம் க்3ருஹீதௌ
முஹுரபி பரிரப்தௌ4 த்3ராக்3 யுவாம் சும்பிதௌ ச ||(45 – 4)

வேகமாக ஓடும் போது கீழே விழுவீர்கள். அதனால் மேனியில் சேற்றைப் பூசிக் கொள்வீர்கள். பிறகு எழுவீர்கள். ஆகாயத்தில் களங்கமற்ற முனிவர்களால் வணங்கப்படும் நீங்கள் இருவரும் வேகமாக வரும்போது, தாய்மார்கள் உங்களைக் கருணையுடன் எடுத்து, அணைத்து, முத்தம் இடுவார்கள் அல்லவா? ( 45 – 4)


ஸ்னுத குசப4ரமங்கே தா4ரயந்தீ ப4வந்தம்
தரளமதி யசோ3தா3 ஸ்தன்யதா3 த4ன்யத4ன்யா |
கபட பசு’ப மத்3யே முக்3த4 ஹாஸாங்குரம் தே
த3ச’ன முகுல ஹ்ருத்3யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ ||(45 – 5)


சஞ்சலமான மனத்துடன், பால் பெருகும் குச பாரத்துடனும், தங்களை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு பால் தருகின்ற யசோதை மிகவும் பாக்கியசாலி. கபடமாக இடையார் வேடம் பூண்ட கண்ணா! பால் குடிக்கும்போது பூ அரும்பு போன்ற பற்கள் தெரியத் தங்கள் புன்முறுவல் செய்யும் போது, தங்கள் திருமுகத்தைப் பார்த்து யசோதை சந்தோஷம் அடைந்தாள் அல்லவா? ( 45 – 5)
 
[h=1]அனைத்தும் அவனே[/h]

அனைத்துப் பொருட்கள் மட்டுமின்றி
அனைத்து உயிர்களும் நம் இறைவனே;
ஆயினும் அவன் பெருமையைத் தெரிவிப்பன
அரிய பொருட்களாகின்ற அவன் தன்மையே.

அகர முதல எழுத்து என அறிவோம்; அதில்
அகரமாக உள்ளவன் அந்தக் கண்ணனே!
மந்திரங்களில் சிறந்த பிரணவத்திலும்
மறைந்து ஒளிர்பவன் அந்தக் கண்ணனே!

மனுச் சக்ரவர்த்தியாக அரசர்களுக்குள்ளும்,
முனிவர்களில் சிறந்த நாரதர், பிருகு ஆகவும்,
அசுரர்களில் சிறந்த பிரஹலாதனாகவும்,
பசுக்களில் சிறந்த காமதேனுவாகவும்,

பறவைகளில் சிறந்த கருடனாகவும்,
பாம்புகளில் சிறந்த அனந்தன் ஆகவும்,
நதிகளில் சிறந்த கங்கையாகவும்,
துதி செயும் அந்தணருள் பலியாகவும்,

அனைத்து யாகங்கள், யக்ஞங்களிலும்
அனைவரும் செய்ய வல்ல ஜபமாகவும்,
படை வீரரில் சிறந்த அர்ஜுனனாகவும்,
பக்தர்களில் சிறந்த உத்தவராகவும்,

புஜ பலசாலிகளின் நிஜ பலமாகவும்,
தேஜஸ்விகளின் நல்ல தேஜஸ் ஆகவும்,
காணும் இடமெல்லாம் அரிதாய் உள்ளவை
கண்ணனின் வடிவமே, அழகே, பலமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 45 ( 6 to 10)

பா3ல லீலா

தத3னு சரணசாரி தா3ரகைஸ் ஸாகமாரான்
நிலயததிஷு கே2லன் பா3ல சாபல்யசா’லி |
ப4வன சு’க பிடா3லான் வத்ஸகாம்ச்’சானுதா3வன்
கத2மபி க்ருத ஹாஸைர் கோ3பகை வாரிதோSபூ4: ||(45 – 6)


அதன் பின்னர் தாங்கள் நன்கு நடக்கத் தொடங்கினீர்கள். இடைப் பையன்களோடு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாலலீலைகள் செய்துகொண்டும், விளையாடிக் கொண்டும்; வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளையும், பூனைகளையும், கன்றுகளையும் பின்தொடர்ந்து செல்லும் போது சிரித்துக் கொண்டே அவர்கள் சிரமப்பட்டுத் தங்களைத் தடுத்தார்கள் அல்லவா?( 45 – 6)


ஹலத4ர ஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவச’ பதித நேத்ராஸ் தத்ர தத்ரைவ கோ3ப்ய: |
விக3லித க்3ருஹக்ருத்யா விஸ்ம்ருதா பத்ய ப்4ருத்யா:
முரஹர முஹுரத்யந்தாகுல நித்ய மாஸன் ||(45 – 7)

முரனைக் கொன்றவரே! பலராமனுடன் கூடித் தாங்கள் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம் கோப ஸ்திரீகள் சுவாதீனம் அற்றுப் பதிந்த கண்களை உடையவர்களாக; வீட்டு வேலைகளை உதாசீனம் செய்தவர்களாக; குழந்தைகளையும், வேலையாட்களையும் மறந்தவர்களாக; ஒவ்வொரு நாளும் வியாகூலம் அடைந்தார்கள் அல்லவா? ( 45 – 7 )


ப்ரதிநவ நவநீதம் கோ3பிகா தத்தமிச்சன்
கலபத3 முபகா3யன் கோமளம் க்வபி ந்ருத்யன் |
ஸத3ய யுவதி லோகைரர்பிதம் ஸர்பிரச்’னன்
க்வசன நவ விபக்வம் து3க்3த4மப்யா பிப3ஸ்த்வம் ||(45 – 8)

அவ்யக்த மதுரமான சப்தங்களுடன் தாங்கள் பாடிக்கொண்டும், சில சமயங்களில் ஆடிக் கொண்டும், கோபிகைகள் கொடுத்த புதுவெண்ணையை விரும்பி உண்டும்; கருணையுடன் கொடுத்த நெய்யைக் குடித்தும், புதிதாகக் காய்ச்சப் பட்ட பாலைக் குடித்தும் வந்தீர்கள் அல்லவா? ( 45 – 8)


மம கலு2 ப3லி கே3ஹே யாசனம் ஜாதமாஸ்தாம்
இஹ புன ரப3லானாமக்3ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி : கிம் தே3வ ஸந்த்யஜ்ய யாச்சாம்
த3தி4 க்ருத மஹரஸ்த்வம் சாருணா சோரணேன ||(45 – 9 )

“நான் மஹாபலியினுடைய (பலவானுடைய) க்ருஹத்தில் முன்பு பிச்சை எடுக்க நேர்ந்தது அல்லவா? அதனால் இப்போது இந்த இடத்தில் மறுபடியும் (பலமில்லாத) இந்தப் பெண்களிடம் அதைச் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா? அதனால் தாங்கள் யாசிப்பதை விட்டு விட்டு விசித்திரமாகத் தயிரையும், நெய்யையும் திருடினீர்களா? (45 – 9)


தவ த3தி4 க்4ருத மோஷே கோ4ஷ யோஷாஜனானாம்
அப4ஜத ஹ்ருதி3 ரோஷே நவகாச’ம் ந சோ’க: |
ஹ்ருத3ய மபி முஷித்வா ஹர்ஷ சிந்தௌ3 4 ந்யதா4ஸ்த்வம்
ஸ மம ச’மய ரோகான் வாத கே3ஹாதி4 நாதா 2 ||(45 – 10)

தாங்கள் செய்த தயிர் வெண்ணைத் திருட்டினால் கோபிகைகளின் மனங்களில் கோபம் இடம் பெறவில்லை. வருத்தமும் இடம் பெறவில்லை. தாங்கள் அவர்களுடைய மனங்களையும் களவாடி ஆனந்தக் கடலில் மூழ்கடித்தீர்கள் அல்லவா? அப்படிப்பட்ட குருவாயூரப்பனே! எனது ரோகங்களைத் தணித்து அருள வேண்டும்.(45-10)
 
சாபமும் ஒரு வரமே


கருமையும் அழகே, காந்தலும் ருசியே;
கருதி நோக்கினால் சாபமும் ஒரு வரமே!
சாபவிமோசனம் ஏற்படும் பொழுதே,
தாபங்கள் தீர்ந்து, உயர்வும் வரும்.

முனிகுமாரர் வைகுந்தம் செல்கையில்,
முரட்டுத்தனமாய் தடுத்து நிறுத்திய,
ஜெய, விஜயர்கள் அடைந்தனர் சாபம்,
ஜென்மங்கள் மூன்று உலகில் பிறக்கும்படி.

இரு அசுரர்களாகி கோபத்தைக் கழிக்க,
இரண்யாக்கன், இரண்யகசிபு என உலகில்,
தோன்றியதாலேயே நமக்கு கிடைத்தன,
தோன்றலின் வராக, நரசிம்ம அவதாரம்.

ராட்சதர்களாகி காமத்தைக் கழிக்க,
ராவணன், கும்பகர்ணன் என உலகில்,
தோன்றியதாலேயே நாம் அடைந்தோம்,
சான்றோன் ஆகிய ராமனின் அவதாரம்.

மனிதர்களாகித் தம் லோபத்தைக் கழித்த,
மதம் கொண்ட சிசுபாலன், தந்தவக்த்ரனை,
மாய்க்கப் பிறந்ததால் உலகம் பெற்றது,
மயக்கும் மாயக் கண்ணனின் அவதாரம்.

தன் அடியவர்களையே சாபத்தினால்,
தன் எதிரிகளாக் காண்பித்து, இறைவன்,
ஏற்படுத்தியதே இந்த விளையாட்டு,
ஏற்பட்டது உலகனைத்துக்கும் நன்மை!

அகத்தியர் சாபத்தால் பாண்டிய மன்னன்,
அழகிய களிறுகளின் அரசன் ஆனான்.
காலை இழுத்து, தேவலர் சாபத்தால்,
கந்தர்வன் ஹூ ஹூ முதலை ஆனான்.

இருவரையும் விடுவித்து, கந்தருவனுக்கு
இருந்த உருவமும், மன்னனுக்கு முக்தியும்,
இறைவன் கைவிடான் என்ற உறுதியை ,
இவ்வுலகினர்க்கும் கொடுத்தான் இறைவன்.

அருட் பிரசாதமான மாலையை தேவர்கள்,
அவமதித்து, சாபத்தால் ஒளி இழந்தனர்.
கிடைத்தன பாற்கடல் கடைந்திடும்போது ,
காமதேனு, கற்பகம், திருமகள், அமுது!

ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து ஆம்;
ஒருவரின் சாபம் பலரின் பரிசு ஆம்!
எது எப்படி நடந்தாலும் அது நன்மைக்கே,
என்று திடமாக நாமும் நம்பிடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top