Raji Ram
Active member
செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 11
மதுரையை நோக்கிச் சீருந்து செல்லும் நேரத்தில்,
எதிரே வந்தாள் அர்ச்சகர் மனைவி, கைப்பையுடன்.
பேருந்துக்காகக் காத்திருந்த அவளை எங்களுடனே
சீருந்திலே மதுரைக்கு வந்திட அழைக்க, மகிழ்ந்தாள்.
இப்போது வசதியுடன் வாழ்வதாகச் சொன்ன அவள்
எப்போதாவது தம் இனிய இல்லம் வர அழைத்தாள்!
பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்துவதால், இப்போது,
பெட்டிகளைத் தூக்கும் கூலிகளுக்கு வேலை குறைவு!
பிரசாத லட்டுக்களால் நிரப்பிய பெட்டியை, எளிதாக
பிறரது உதவியை எதிர்பாராது உருட்டிச் சென்றோம்!
கற்பூர நாயகி போல எப்பொழுதுமே வைத்திருப்பேன்
கற்பூரப் பாக்கட் ஒன்றைக் கைப் பையிலே, அடியேன்!
எப்போது, எங்கு வந்து தாக்கும் கொசுப்படை என்பதே
எப்போதும் இருக்கும் ஒரு ராணுவ ரகசியம் போலவே!
சிறு கல்லை வைத்து அடிப்பது போல வந்து தாக்கின
பெரு வடிவக் கொசுக்கள், மதுரை ரயில் நிலையத்தில்!
நான்கு கற்பூர வில்லைகளைப் பொடித்துத் தூவியதும்,
இங்கு நம்மைத் துரத்துகிறார் என அறிந்தன கொசுக்கள்!
ரயில் நடைமேடை அருகில் வந்து நின்றவுடன், நாங்கள்
அதில் ஏறி, எங்கள் 'பெர்த்'களைத் தேடி அமர்ந்து, டிக்கட்
பரிசோதகர் வந்து கூடுதல் கட்டணம் பெற்றதும், படுத்து,
சரியான தூக்கமில்லாது, சிங்காரச் சென்னை வந்தோம்!
இறைவன் அருளால், இனிய இல்லத்தை மறந்து, மனம்
நிறைந்த இரு நாட்கள், இனிதே இனி நினைவில் நிற்கும்!
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் ray2: