ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்
சூரிய தேவன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கிச் சரியாகத் திருப்பி ஓட்ட ஆரம்பிக்கும் நாளை "ரத ஸப்தமி' என்பார்கள். இந்நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ஏன்?
மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார்.
இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.
காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. ""ஸ்வாமி... நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?'' என்று வினவினார்.
"நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?'' என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார். உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவகிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.
இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவகிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது.
ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவகிரகங்கள்... தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டணை உண்டே. அதனால் ""காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை'' என்றார் பிரம்மா.
அந்த தண்டனையைக் கேட்டு அலறிய நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.
பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.
"திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்'' என்றார் அகத்தியர். நவகிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, ""அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்'' என்றார் அவர்.
அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை.
ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவகிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.
ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, "அர்க்க பத்ரம்' என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று "அர்க்க பத்ர ஸ்நானம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
"ஸப்த ஸப்த ப்ரியே தேவி
ஸப்த லோக ப்ரதீயிகே
ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய''
என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ "திவாக்ராய நம: இதமர்க்யம்'' என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.
பீஷ்மத் தர்ப்பண நாள்: ரதஸப்தமியை ஒட்டி வரும் ஒரு விசேஷ நாள் பீஷ்மத் தர்ப்பண நாள். நல்ல விஷய ஞானம் உள்ள பெரியோர்கள் இன்றும் பீஷ்மருக்கு அன்று அர்க்ய பூஜை செய்வார்கள். அர்க்யம் என்றால் என்னவோ ஏதோ என்று குழம்ப வேண்டாம்.
நேராக நிமிர்ந்து இரு கைகளிலும் நீரை ஏந்தி நின்று, "பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி (3 முறை)'' என்று ஓதியபடி இணைந்த கரங்களைச் சற்றுத் தாழ்த்திச் சாய்த்து விரல் நுணிகளின் வழியே பூமியில், நீரை விடுதல்தான் அர்க்யம் என்பது. கிருஷ்ண பரமாத்மாவிடம் பீஷ்மர் சகலத்தையும் ஒப்புவித்து சரணாகதி அடைந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சி.
பீஷ்மர் எவரும் எளிதில் பெற முடியாத "இச்சா மிருத்யு' என்ற வரத்தைப் பெற்றவர். இது, தான் விருப்பப்படும்போது மட்டுமே உடலை விட்டு உயிரைப் பிரித்துக்கொள்ளும் அபூர்வ யோக சக்தி. அதாவது தான் விரும்பும்போது தன் உடலில் இருந்து பஞ்ச பூத சக்திகளைப் பிரித்துப் பூஜ்யம் என்ற ஒன்றுமேயில்லாத பிரபஞ்ச சூனியத்தால் ஐக்கியமாவது. இது மரணங்களில் எந்த வகையிலும் பேரிட்டுச் சொல்ல முடியாத அபூர்வமான ஆன்மிக சக்தியால் உடலை விட்டு உயிரைக் களைவது. இத்தகைய பெரும் பேறு பெற்றவர்களைத்தான் "பூஜ்ய ஸ்ரீ' என்று அடைமொழியிட்டு அழைப்பர்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடி உத்தராயண புண்ய கால வருகைக்காக உயிரைப் பிடித்தபடி கிடக்கிறார்." இந்த நிலையில்கூட பகவானின் விஸ்வரூப தரிசனம் இன்னும் கிட்டவில்லையே, அதற்கான தகுதி நம்மிடம் இல்லையோ'' என்றெல்லாம் மனம் குழம்பி கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ண பரமாத்மாவுக்கு பீஷ்மர் நிலை புரியாதா என்ன?
அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்த அகஸ்தியருடன் உரையாடுவது போல பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நிலையிலும் பீஷ்மரிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்கும் ஆசை கிருஷ்ணனுக்கு உதித்தது.
பீஷ்மருக்கு அனுக்கிரகம் புரிந்து ஆட்கொள்வது என்பது எப்போதோ முடிவான விஷயம். இருந்தாலும் கிருஷ்ணன் அந்தக் கடைசி நேரத்திலும் ஒரு சின்ன நாடகமாடினார். அகஸ்தியரிடம் கண்களை காட்ட அகஸ்தியர் பீஷ்மரிடம், ""நீங்கள் அனைத்தையும் கண்ண பரமாத்மாவிடம் அர்ப்பணித்து விட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் அந்த "இச்சா மிருத்யு' என்ற வரம். பகவானிடம் அர்ப்பணிக்கப்படாமல் இருக்கிறதே'' என்கிறார்.
பீஷ்மர் இதைக் கேட்டு விக்கித்துப் போய் விடுகிறார். ஆமாம்... அது ஒன்று இன்னும் அவரிடம் இருக்கிறதே...அதை பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமோ, ஞானமோ, எதுவுமே தன்னிடம் இல்லையே என்று கிருஷ்ணனிடம் கதறுகிறார்.
அதை எப்படி அர்ப்பணிப்பது என்பது அகஸ்திய மாமுனிகளுக்கு நன்கு தெரியும் என்று கிருஷ்ணர் சொல்ல, பீஷ்மர் அகஸ்தியரை வேண்டினார்.
அவர் கூறியபடி பிரம்மாவைத் துதித்து கிருஷ்ணருக்குப் பாத பூஜை செய்தார். அவர் பாதங்களைத் தாங்கியிருந்த மரப்பீடத்தை நெஞ்சில் ஒரு தாமரை பூவை வைத்து அதன் மீது நிறுத்தினார். பீடத்தை வைத்து அகஸ்தியர் கூறிய மந்திரங்களைப் பய பக்தியுடன் ஓதுகிறார் பீஷ்மர். பீஷ்மரின் அன்னையான கங்கா மாதாவும் அப்போது எழுந்தருளி ஆகாச கங்கை நீரை புரோட்சிக்கிறார். அப்போது, "இச்சா மிருத்யு' என்ற வரத்தின் ஒளி பீஷ்மரின் இதயத்திலிருந்து வெளியே கிளம்பி கிருஷ்ண பரமாத்மாவையும் கங்கா மாதாவையும் வலம் வந்து பிரபஞ்ச வெளியில் மறைகிறது. சகலத்தையும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்த பீஷ்மரின் இந்த பரிபூரண சரணாகதி நினைவாக பீஷ்மருக்கு அர்க்யம் கொடுக்கும் வழக்கம் வந்தது.
எவரும், மது, மாது, புகை போன்ற தீய பழக்கங்களில் சிக்காமல் நல்ல ஒழுக்கத்துடன் வாழ இந்த பீஷ்ம தர்ப்ணா அர்க்ய பூஜை தோன்றாத் துணையாய், ஒரு காப்பு அரணாய் செயல்படும் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.
http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/01/30/